ஜெயலலிதா விடுதலைக்காக மதுரையை ஸ்தம்பிக்க வைத்த காவடி திருவிழா

அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் போன்றவர்களை பல நகரின் பொது இடங்களில் சர்வசாதாரணமாகப் பார்க்க முடிகிறது. மாநிலத்தின் ஏதாவது ஒரு பகுதியில் தினந்தோறும் அம்மாவுக்காக கட்அவுட்டுகள், வால்போஸ்டர்கள், கட்சிக்கொடிகள், ஒலிபெருக்கிகள், கொடிகளுடன் இங்கும் அங்கும் அலையும் தொண்டர்கள் நிறைந்த வாகனங்கள், பாதுகாப்புக்காக போலீஸ் கூட்டம், டிராபிக் ஜாம் எல்லாம் சகஜமாகிவிட்டது. வெள்ளை வேட்டிகள் ஆங்காங்கே உண்ணாவிரதப் போராட்டப் பந்தல்களில் அமர்ந்தபடி முழங்குகிறார்கள்.

தமிழகத்தின் பல்வேறு திருக்கோயில்களில் பல லட்சக்கணக்கானோர்களால் பிரார்த்தனையும், சிறப்பு வழிபாடும் நடைபெற்று வருகிறது.  லட்சக்கணக்கான பொதுமக்களும் போராட்டம், மனிதச்சங்கிலி, உண்ணாவிரதம், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முடி காணிக்கை அளித்து சிறப்பு வழிபாடுவதாக செய்தித்தாள்களில் தினமும் செய்திகள் வருகின்றன.

கும்மிடிப்பூண்டி அடுத்த அரியத்துறையில் உள்ள ஆயிரம் ஆண்டு பழமையான அருள்மிகு மரகதவள்ளி சமேத வரமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா மற்றும் சிறுபான்மை துறை அமைச்சர் எஸ்.அப்துல்ரஹீம் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க-வினர் அம்மா விடுதலை பெறக் கோரி சிறப்பு யாகம் நடத்தினர்.

மக்கள் அனுபவிக்கும் இன்னல்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் இவர்கள் அன்றாடம் நடத்தி வரும் பல போராட்டங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை நாள்தோறும் ஸ்தம்பிக்கும் அவலம் தொடர்கதையாகி வரவே, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பற்றி எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்பினரும் குரல் எழுப்ப ஆரம்பித்ததையடுத்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இனி போராட்டங்கள் நடத்த வேண்டாமென்று அறிவித்தார். ‘போராட்டம் கூடாது, அமைதி காப்பதே அம்மாவுக்கு செலுத்தும் உண்மையான அன்பு’ என்றார்.

இதற்குப் பிறகும் மக்களிடம் இவர்களது செல்வாக்கை காட்டுவதற்காகவும், முக்கியமாக பெங்களூருவில் சிறையிலிருக்கும் ஜெயலலிதா,  இவர்களுடைய விசுவாசத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் அ.தி.மு.க. அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் பல நூதனமான நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறார்கள்.

அமைச்சர் செல்லூர் ராஜு நடத்திய ‘காவடி திருவிழா’ இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தார் போன்றது என்று மீடியாக்கள் சொல்கின்றன. இவர் நடத்திய நூதனத் திருவிழாவில் பால்குடம், வேல்குத்துத்தல், பறவை காவடி என்று பல அய்ட்டம்களை ஒருங்கிணைத்து மக்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளார் என்கிறார்கள். மதுரை சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள வைகையாற்றில் பல நூறு பெண்களை வாகனங்களில் ஏற்றி வந்து, ஒரு சில்வர் குடம், பாக்கெட் பால், தேங்காய் எல்லாம் கொடுத்து பால்காவடி ஊர்வலம் நடத்தியதுடன்  ஆளுக்கு நூறு ரூபாயும் கொடுத்தாராம்.. மொட்டை போட்டால் (மக்களுக்குத்தான்) 500 ரூபாய், வேல் குத்திக் கொள்பவர்களுக்கு 2000 ரூபாய், பறவை காவடி எடுத்தால் 10000 ரூபாய் என்று ரேட் போட்டு பணம் கொடுத்தார்களாம்.

மதுரை சிம்மக்கல் தொடங்கி மேலமாசி வீதி வரை உள்ள கடைவீதிகளையும் சாலைகளையும் அடைத்து ஸ்தம்பிக்கச் செய்துவிட்டாராம். பல பெண்களுக்கு பால் குடங்கள் கிடைக்கவில்லையாம். இவர்கள் அமைச்சரை வேண்டியமட்டும் அர்ச்சனை செய்தார்களாம். இன்னும் சில பெண்களோ ஊர்வலத்தில் கலந்துகொள்ளாமல் குறுக்கு வழியில் எஸ்கேப்பாகிவிட்டார்களாம். வணிகர்களோ ‘தீபாவளி வியாபாரம் போச்சு’ என்று புலம்புகிறார்களாம்.

  1. செல்லூர் ராஜு நடத்திய ‘செட்டப்’ பால்குடம், காவடி.. ஸ்தம்பித்த மதுரை.. திட்டித் தீர்த்த மக்கள்! Posted by: Sudha. One India Tamil Sunday, October 12, 2014
  2. ஜெயலலிதா விடுதலைக்காக அமைச்சர் நடத்திய காவடி திருவிழா! விகடன் செய்திகள் 12/10/2014

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in அரசியல், தமிழ்நாடு, மதுரை and tagged , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.