உச்ச நீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கைகள் வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கிய கருப்புப்பணத்தை மீட்டு வருமா?

picture courtesy: nripulse.com
கருப்புப் பணம் என்றால் என்ன? அரசு இயங்க வரிப்பணம் அவசியம். இந்திய அரசு மக்களிடம் இருந்து வாங்கிய வரிப்பணத்தில் இயங்குகிறது. கருப்புப் பணம் (Black Money) என்பது இந்தியாவில் கருப்புச் சந்தைகளில் (Black Market) சட்டவிரோதமாகச் சம்பாதித்த பணம். இதற்கான வருமான வரி (Income Tax) மற்றும் இதர வரிகள் இதுவரை கட்டப்படவில்லை என்றால் அது கணக்கில் வராத பணம். இவ்வாறு வரியே கட்டாத பணத்தை, கருப்பு பணம் என்று சொல்கிறோம். எந்தெந்த தொழில் செய்ய அனுமதி இல்லையோ, அதாவது தடை செய்யப்பட்ட தொழிலைச் செய்து சம்பாதித்த பணமும் கருப்பு பணமாகிறது.
வரி கட்டாமலும், முறைகேடாகவும் சம்பாதித்த கருப்புப் பணத்தை இந்தியாவில் வைத்திருந்தால் மாட்டிக்கொள்வோம் என்பதால் இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் வைப்புத் தொகையாக (deposits) வைத்துள்ளார்கள்.
அது சரி! இந்தியர்கள் வெளிநாட்டில் உள்ள வங்கிகளில் ஏன் வைப்புத் தொகையாக வைக்கிறார்கள்?  வெளிநாடுகளில் குறிப்பாக சுவிட்சர்லாந்து நாட்டுக்கு என்று ஒரு கொள்கை உள்ளது. இங்கு வரியே கட்டாத கருப்புப் பணத்தைக் கூட வைப்புத் தொகையாக வைத்திருந்தாலும், இவர்களின் பெயர் மற்றும் வங்கிக் கணக்கு விபரங்களை வெளியிடாமல் இரகசியமாகவே வைத்திருப்பார்கள். எனவே சுவிட்சர்லாந்து கருப்புப் பணத்தைப் பதுக்க பாதுகாப்பான நாடு  என்று உலக அளவில் உள்ள வரி ஏய்ப்பவர்கள் நம்புகிறார்கள்.
சிங்கப்பூருக்கும் சுவிட்சர்லாந்துக்குமிடையே ஒரு சுவாரசியமான போட்டி.. சுவிட்சர்லாந்து ஒரு கட்டத்தில் யாரெல்லாம் அவர்கள் வங்கிகளில் பணம் வைத்துள்ளார்கள் என்ற ரகசியத்தை சொல்ல முன் வந்தது. உடனே சிங்கப்பூர் அறிவித்தது என்ன தெரியுமா?  சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் பணம் போடாதீர்கள், இவர்கள் உங்கள் கணக்கு விபரங்களை வெளியிட்டு விடுவார்கள். எங்களது நாட்டில் உள்ள வங்கிகளில் பணத்தைப் போடுங்கள். நாங்கள் பணம் போட்டவர்களின் கணக்கு விபரங்களை வெளியிட மாட்டோம் என்று 100 சதவிகித உத்தரவாதம் தருகிறோம் – இது போன்ற விளம்பர வார்த்தைகள்.
இது போல வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்திய நாட்டின் மொத்தக் கருப்புப் பணம் எவ்வளவு என்று துல்லியமாகத் தெரியவில்லை. ஒரு அறிக்கை (report) சுவிட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்திய நாட்டின் கருப்புப் பணம் 1.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் (US Dollars) என்கிறது. சுவிஸ் பேங்கர்ஸ் அசோசியேசன் (Swiss Banker’s Association) உள்ளிட்ட மற்ற அறிக்கைகள் இதுவரை சொல்லப்பட்ட தொகைகள் எல்லாம் தவறு என்றும் புனைந்துரைக்கப்பட்டது என்றும் சொன்னதோடு மட்டுமின்றி எல்லா சுவிஸ் வங்கிகளிலும் இந்தியக் குடிமக்கள் வைத்துள்ள தொகை சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (US Dollars) என்றும் சொல்கின்றன.
கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், சி.பி.ஐ டைரக்டர் (C.B.I Director) வெளிநாட்டு வங்கிகளில் இந்தியக் குடிமக்கள் முறைகேடாக வைத்துள்ள பணம் 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (US Dollars) என்றார். கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய அரசு பாராளுமன்றத்தில் இதைத் தெளிவுபடுத்தியது. அதாவது சி.பி.ஐ டைரக்டர் சொன்ன 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (US Dollars) கருப்புப் பணம் என்பது கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு  உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court) தெரிவித்த மதிப்பீடு ஆகும்.
கடந்த 2011 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சுவிஸ் வங்கிகளில் உள்ள கருப்புப் பணம் அளவில் மிகப்பெரியது என்று சுவிஸ் பேங்கர்ஸ் அசோசியேஷன் அலுவலர்கள் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. தொடர்ந்து சுவிஸ் பேங்கர்ஸ் அசோசியேஷன் (Swiss Bankers Association) மற்றும் சுவிட்சர்லாந்து சென்ட்ரல் பேங்‌க் (Central Bank of Switzerland) போன்ற அமைப்புகள் இவற்றை மறுத்தன. ஊடகங்களும் (media) எதிர் அணியினரும் (opposition parties) கட்டிய கட்டுக்கதை என்று சுவிஸ் பேங்கர்ஸ் அசோசியேஷனின் ஜேம்ஸ் நெல்சன் (James Nelson) கூறினார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இந்திய அரசு இரட்டை வரிவிதிப்பைத் தவிர்க்கும் ஒப்பந்தத்தைத் (Avoidance of Double Taxation Agreement) திருத்தி சுவிஸ் வங்கிகளில் உள்ள கருப்புப் பணத்தை விசாரிக்க வகை செய்தது. திருத்தம் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைமுறைக்கு வந்தது. இந்த முயற்சி சுவிஸ் வங்கி கருப்புப் பணம் பற்றி விசாரிக்கவும் அதன் சாத்தியக் கூறுகளைக் கண்டறியவும் வகை செய்தது.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஹெச்.எஸ்.பி.ஸி (H.S.B.C) வங்கியில் 782 இந்தியர்கள் கணக்கு வைத்துள்ள விபரங்கள் இந்திய அரசுக்குத் தெரிய வந்தது. எனினும் கடந்த 2011 டிசம்பரில் இந்திய நிதி அமைச்சகம் இந்த இந்தியர்களின் தனியுரிமைகளை (privacy) காரணம் காட்டி பட்டியல் விபரங்களை வெளியிட மறுத்துவிட்டது. பட்டியலில் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களின் (Member of Parliament) பெயர்கள் எதுவுமில்லை என்றும் சூசகமாக அறிவித்துவிட்டது. எதிர்க்கட்சியான பி.ஜே.பி யின் வேண்டுகோளை ஏற்று ஹெச்.எஸ்.பி.ஸி பற்றி ஒரு வெள்ளை அறிக்கை (White Paper) வெளியிட இந்திய அரசு ஒப்புக் கொண்டது. கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை சுவிஸ் தேசிய வங்கி (Swiss National Bank) மதிப்பீட்டின்படி 2010 ஆண்டு முடிய இந்தியக் குடிமக்கள் சுவிஸ் வங்கிகளில் வைத்துள்ள பணம் 1.95 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் CHF (92.95 பில்லியன் இந்திய ரூபாய்கள் அல்லது 2.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) என்றது. சுவிஸ் வெளியுறவு துறை அமைச்சகமும் இதை உறுதி செய்தது.
பிரபல வழக்கறிஞரும் முன்னாள் சட்ட அமைச்சருமான இராம் ஜெத்மலானி வேறு சிலருடன் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு (Writ Petition) தாக்கல் செய்தார். (எண்: 176 ஆண்டு 2009). 1. சுவிஸ் வங்கிகளில் இந்திய குடிமக்கள் முறைகேடாக வைத்துள்ள பணத்தை மீட்டுக் கொண்டு வருவது; 2. அரசு நடைமுறைகளைப் பலப்படுத்துவதன் மூலம் மீண்டும் கருப்புப் பணம் உருவாவதைத் தடுக்க வகை செய்வது பற்றி உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டல்களைக் (directions) கோரினார்.
காங்கிரஸ்  தலைமையிலான, முந்தைய ஐ.மு., கூட்டணி அரசில், அந்த வழக்கு, பல முட்டுக்கட்டைகளை சந்தித்தது. இந்நிலையில், ‘வெளிநாட்டில் பணத்தை பதுக்கியுள்ள, இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்டு கொண்டு வருவோம்; கருப்புப் பண முதலைகளை அம்பலப்படுத்துவோம்’ என, லோக்சபா தேர்தலின் போது, பி.ஜே.பி அறிவித்தது.
அதன்படி, மத்தியில், பி.ஜே.பி ஆட்சிக்கு வந்ததும், கறுப்புப் பண விவகாரம் குறித்து விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி எம்.பி.ஷா தலைமையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்.ஐ.டி) அமைத்தது. அந்தக் குழு, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளில் இருந்து, மத்திய அரசுக்கு கிடைத்த, 500 க்கும் மேற்பட்ட, கறுப்பு பண முதலீட்டாளர்கள் (முதலைகள்) பட்டியல், ஷா கமிட்டி வசம் ஒப்படைக்கப்பட்டது; அதன் அடிப்படையில், அந்த குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த வழக்கு, 28 அக்டோபர் 2014 தேதியன்று, தலைமை நீதிபதி தத்து தலைமையிலான பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்த போது, வெளிநாடுகளில் பணத்தை பதுக்கிய, மூன்று தொழிலதிபர்கள் உட்பட, எட்டு பேர் பட்டியலை, மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்த 10 பக்க பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
வெளிநாட்டு வங்கிகளில், பிரதீப் பர்மன், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த பங்குத் தரகர் பங்கஜ் சிமன்லால் லோடியா, கோவாவைச் சேர்ந்த டிம்ப்லோ சுரங்க நிறுவனம், அதன் இயக்குநர்கள் ராதா சதீஷ் டிம்ப்லோ, சேத்தன் எஸ் டிம்ப்லோ, ரோகன் எஸ் டிம்ப்லோ, அண்ணா சி டிம்ப்லோ, மல்லிகா ஆர் டிம்ப்லோ ஆகிய 8 பேர் கருப்புப் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.  இவர்களில், பர்மனின் பெயர், பிரான்ஸ் நாட்டு அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்டது. மற்ற 7 பேர் விவரம், பிற வெளிநாடுகளின் அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்டது.
அதே சமயம், ‘அனைவரின் பெயர்களை தெரிவிக்க முடியாத வகையில், அந்த நாடுகளுடன், இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தை, இந்திய அரசு மேற்கொண்டு உள்ளது’ என, மத்திய அரசு தெரிவித்தது. மத்திய அரசு சார்பில், அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி ஆஜரானார்.
:”இந்தியாவில், முறைகேடாக சம்பாதித்த பணத்தை, வெளிநாடுகளில் பதுக்கியுள்ள இந்தியர்கள் பட்டியலை, முழுமையாக வெளியிடுவதில், உங்களுக்கு என்ன சிரமம் உள்ளது; அவர்களை காப்பாற்ற, நீங்கள் ஏன் முயற்சிக்கிறீர்கள்…” என, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த, உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதி தத்து, ”முழு பட்டியலையும், 29 அக்டோபர் 2014 தேதியன்று காலை, கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்,” என, அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
அட்டர்னி ஜெனரலிடம், தலைமை நீதிபதி தத்து, கண்டிப்பாக பிறப்பித்த உத்தரவின் முக்கிய அம்சங்களாவன: “எது எப்படி இருந்தாலும், எங்களுக்கு பரவாயில்லை. வெளிநாடுகளில் கறுப்புப் பணத்தை பதுக்கிய, இந்தியர்கள் அனைவரின் பெயர், விவரம் அடங்கிய முழு பட்டியல், எங்களுக்கு கிடைக்க வேண்டும்; 29 அக்டோபர் 2014 தேதியன்று காலை, அந்த பட்டியலை, மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும். இந்த விவகாரத்தை நாங்கள் சும்மா விடப் போவதில்லை. இதுகுறித்த, எங்களின் முந்தைய உத்தரவில், ஒரு வார்த்தையைக் கூட, நாங்கள் மாற்றப் போவதில்லை. எங்களின் முந்தைய உத்தரவை, மாற்றமில்லாமல், அப்படியே ஏற்றுக் கொள்வதாக, முன் ஒப்புக்கொண்ட இந்த அரசு, இப்போது மாற்றம் கோருவதை ஏற்க முடியாது. நீங்கள் எதையும் செய்ய வேண்டாம்; அந்த பட்டியலை மட்டும், எங்களிடம் தாருங்கள்; நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்; எப்படி விசாரணை நடத்த வேண்டும் என்பதை, கவனித்துக் கொள்கிறோம். நீங்கள் ஏன், அந்த கறுப்புப் பண முதலைகளை பாதுகாக்கும் வகையில் செயல்படுகிறீர்கள்… மக்களுக்கு நன்மையான இந்த விவகாரத்தில், நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்; சி.பி.ஐ., அல்லது சிறப்பு விசாரணைக் குழுவை வைத்து, நாங்கள் விசாரணை நடத்திக் கொள்கிறோம். முந்தைய மன்மோகன் சிங் அரசும், இப்படித் தான் செயல்பட்டது; இந்த அரசும், அப்படித் தான் உள்ளது. இந்த விவகாரத்தை, மத்திய அரசு கையாண்டால், இந்த ஜென்மத்தில் உண்மை வெளியே வராது”. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்ற  உத்தரவு குறித்து, மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜெட்லியிடம் கேட்ட போது, ”அந்த பட்டியல், கடந்த ஜூனில் சிறப்பு விசாரணை குழுவிடம் ஒப்படைத்து விட்டோம். அதை சுப்ரீம் கோர்ட்டில், 29 அக்டோபர் 2014 தேதியன்று காலை சமர்ப்பிப்பதில், எந்த சிரமும் இல்லை. யாரையும் காப்பாற்ற நாங்கள் முயற்சிக்கவில்லை; எந்த அமைப்பை கொண்டு வேண்டுமானாலும் விசாரிக்க, கோர்ட் உத்தரவிடலாம்; எங்களுக்கு ஆட்சேபனை இல்லை,” என்றார்.
உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று 29 அக்டோபர் 2014  தேதியன்று காலை முதல் கட்டமாக வெளிநாடுகளில் வங்கிக்கணக்கு வைத்து பணம் பதுக்கியோரின் பட்டியல் தாக்கல்  செய்யப்பட்டது. 627 பேர் அடங்கிய இந்த பட்டியல் சீலிடப்பட்ட உரையில் தலைமை நீதிபதியிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் முகுல் ரோத்தகி இந்த பட்டியலை தாக்கல் செய்தார்.
‘இதில் 327 பேர் மீதான கணக்கு பற்றி விசாரணை முடிந்து விட்டது. இன்னும் 300 பேர் கணக்கு பற்றி விசாரணை நடத்த வேண்டி உள்ளது. இதற்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை கால அவகாசம் வழங்க வேண்டும்’ என்ற மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று பட்டியலில் உள்ள பெயர்களை வெளியிட உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த பட்டியல், கறுப்பு பணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு விசாரணை குழுவிடம் ஒப்படைக்கப்படும் என்றும், குழுவின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் முன்னிலையில் மட்டுமே பட்டியல் திறக்கப்படவேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், வரும் நவம்பர் மாத மத்தியில் விசாரணை தொடர்பான நிலை அறிக்கையை (status report) தாக்கல் செய்யும்படி, விசாரணைக் குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 2000 ஆண்டு அன்னிய செலவாணி தடுப்பு சட்டத்திற்கு (ஃபாரின் எக்ஸேஞ்ச் ரெகுலேசன் ஆக்ட் (Foreign Exchange Regulation Act FERA) பதிலாக அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (ஃபாரின் எக்ஸேஞ்ச் மேனேஜ்மெண்ட் ஆக்ட் (Foreign Exchange Management Act FEMA) அமுல்படுத்தப்பட்டது. எஃப்.இ.எம்.ஏ (FEMA) இல் உள்ள விதிகளின்படி வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்துக் கொள்வது சட்டப்படி குற்றம் அல்ல. புதிய சட்டத்தின் மூலம் கிரிமினல் குற்றமானது (criminal offence) சமூக விதிமீறல் (civil contravention) என்று மாறுகின்றது. எனவே எஃப்.இ.எம்.ஏ வை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க இயலாது. மாறாக வருமான வரிச்சட்டங்கள் (income tax acts) மூலமாகவே வருமான வரி விதி மீறல்களுக்கான  (violation of IT) நடவடிக்கைகளை எடுக்க இயலும். ஒளிவு மறைவில்லாது வரி செலுத்திய பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் வைப்பது குற்றமல்ல. வரி ஏய்ப்பவர்களுக்கான தண்டனை கூடுதல் வருமான வரிவிதிப்பு, கூடுதல் வட்டி, அபராதம் மற்றும் வருமான வரிச்சட்டத்திற்குட்பட்ட நடவடிக்கைகள் மட்டுமே.
உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி நடவடிக்கைகள் மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதும் நீதித்துறையின் மீதும் சற்று நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கும். நான் சொல்வது சரிதானே. 
மேற்கோள்கள்
  1. Black money case: List of 627 foreign account holders given to SC. rediff.com. 
  2. Black money: Supreme Court orders Centre to reveal all names by tomorrow. The Times of India. Retrieved 28 October 2014.
  3. Dabur’s Pradip Burman among 3 named for holding black money accounts abroad. The Times of India. Retrieved 27 October 2014.
  4. Indian Black Money. Wikipedia 
  5. Nanjappa, Vicky (31 March 2009). Swiss black money can take India to the top. Rediff.com
  6. White Paper on Black Money. Ministry of Finance, Government of India. 2012.

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in இந்திய அரசு, சட்டம். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.