தட்சிணாயனத்தின் கடைசி மாதம் மார்கழி. மார்கழி மாதத்தை தனூர் மாதம் என்றும் கூறுவார். சூரியன் இம்மாதத்தில் ஒன்பதாவது ராசியான தனூர் ராசிக்கு நகர்கிறது. இந்த மாதம் முழுவதும் சூரியோதயம் தனூர் ராசியிலேயே நிகழ்கிறது. மார்கழி மாதத்தில், பெண்கள் நோற்கும் விரதங்களில் முக்கியமானது மார்கழி நோன்பாகும். மார்கழி மாதத்தில் நோற்பதால் “மார்கழி நோன்பு” என்றும், கன்னிப்பெண்கள் (பாவை), “பாவை” அமைத்து நோற்கப்படுவதாலும் “பாவை நோன்பு” என்றும் அழைக்கப்பெறுகின்றது. மார்கழி நோன்பு நோற்கும் மரபு, சங்க காலம் முதலே தமிழரிடம் இருந்துவருகிறது என்பதற்கான சான்றுகள் பரிபாடல், நற்றிணை, ஐங்குறுநூறு, கலித்தொகை என்னும் சங்ககால நூல்களில் காணப்படுகின்றன.
பாவை நோன்பு நோற்பவர் விரும்பத்தக்க சிறந்த கணவனைப் பெறுவர் என்பது நம்பிக்கை. மணமாகாத பெண்கள் இந்த நோன்பு நோற்பர். சைவ வைணவ கன்னியர்கள் பொழுது புலர்வதற்கு முன் எழுந்து தமது தோழியர்களை அழைத்து ஆற்றங்கரை சென்று, சீதப் புனல்ஆடி அங்குள்ள மணலினால் “பாவை” போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி, அப்பாவையை தேவியாக ஆவகணம் செய்து பரமன் அடிபாடி பாடித் துதித்து பின் ஆலயம் சென்று வழிபட்டுகின்றனர். இவ்வாறு மகளிர் ஆடும் விளையாட்டு ‘வண்டல் அயர்தல்’ எனப்படும். வைணவ கன்னியர்கள் ஒருமாத காலம் பால் நெய் போன்ற உணவுப்பொருட்களைத் தவிர்த்து நாவை அடக்கி நோன்பிருந்து, தினமும் விடிகாலையில் ‘குள்ளக் குளிரக் குடைந்து நீராடி’, தங்களை மையிட்டு எழுதி அழகுபடுத்திக் கொள்ளாமல், கூந்தலில் மலரிட்டு முடியாமல், தீச்செயல் – தீச்சொற்களைத் தவிர்த்துக் கண்ணனையே வழிபட்டு நோன்பை முடிப்பர். மணிவாசகப் பெருமான் பாடியருளிய திருவெம்பாவையும், பூமாலை சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாகிய ஆண்டாள் பாடிக்கொடுத்த திருப்பாவையும் மார்கழி நோன்பை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டவையாகும்.
ஆண்டாள் மனிதர்கள் யாரையும் மணக்கமாட்டேன், பெருமாளையே மணப்பேன் என்று ஒரு குறிக்கோளை மேற்கொண்டாள். ஆயர்பாடி கோபியர்கள் கண்ணனை அடைய மேற்கொண்ட பாவை நோன்பை நோற்றாள். ஸ்ரீவில்லிப்புத்தூரில் கோவில் கொண்ட பெருமாளிடம் சென்று, அவருடைய முகத்தைப் பார்க்க வெட்கப்பட்டு, கையில் இருந்த பாஞ்சஜன்யம் என்னும் சங்கைப் பார்த்து மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் எனத் துவங்கி வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை என முடியும் முப்பது பாடல்கள் பாடினாள். அதுவே திருப்பாவை ஆயிற்று.
பாவை நோன்பு ஆரம்பிக்கும் காலம், “மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்” என்று திருப்பாவை முதல் பாசுரத்திலேயே ஆண்டாள் சொல்கிறாள். மார்கழி மாதத்தின் மதி நிறைந்த நாளான திருவாதிரை நக்ஷத்திரத்தில் சந்திரன் பூரணம் அடையும் பௌர்ணமி நாள் ஆகும். திருவாதிரை ஒரு காலத்தில் சூரியராசியின் தொடக்கமாக இருந்ததாம். திருவெம்பாவை – திருப்பாவை தமிழ் நாட்டில் தோன்றிய காலத்தில் இந்த நோன்பு மார்கழித் திங்களிலேயே நடைபெற்றது.
பெரியாழ்வார் வடபெருங் கோயிலுடையானுக்கு வைத்த மாலையைத் தம் பெண் அணிந்தது பெருமானுக்கு உகந்தது அன்று என வருந்த, வடபெருங்கோயிலுடையான் கனவில் தோன்றி, “அம்மாலை தமக்கு உகந்தது என்றும் இனி, கோதை (சூடிக் கொடுத்த சுடர்க்கொடி) சூடிக் களைந்த மாலையே வேண்டும்” எனவும் பணித்தார். கோதை திருவரங்கன் மேல் காதல் கொண்டு அவனையே மணக்க விரும்பிய நிலையில் கோதையை அரங்கனுக்கு மணம் செய்து கொடுத்ததால் பெரியாழ்வார் திருமாலுக்கு மாமனாராகும் பெருமையும் பெற்றார்.
புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்;
வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று;
புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே,
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.
திருப்பாவை பதின்மூன்றாவது பாசுரத்தில் ‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’ என்ற ஒரு சொற்றொடார் வருகிறது. இந்த சொற்றொடரை வைத்துக்கொண்டு மகாவித்துவான் முகவை ராகவ ஐயங்கார் (1878-1960), ஆண்டாள் தமது திருப்பாவையின் பதின்மூன்றாம் பாசுரம் பாடி அருளிய நாளன்று நிலவிய வானவியல் அமைப்புகளை ஆழ்ந்து ஆராய்ந்து திருப்பாவையின் காலத்தை கி.பி. 885 அல்லது கி.பி. 886 என தோராயமாக நிர்ணயம் செய்துள்ளார். தமது ஆய்வு முடிவுகளை ‘ஆழ்வார்கள் கால நிலை‘ என்னும் நூலில் பதிவு செய்துள்ளார்.
அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன் வரும் ஒன்றரை மணி நேரம் (மூன்றே முக்கால் நாழிகை) பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சமயம் வானில் கிழக்கு திசையில் விடிவெள்ளி என்னும் வெள்ளிக் கிரகம் தோன்றும் காலம். அதிகாலை சுபகாரியங்களுக்கு செல்பவர்கள் வெள்ளி எதிரில் செல்லக்கூடாது என்பது கிராமங்களில் நிலவும் சகுன நம்பிக்கை ஆகும். பளிச்சென்று கிழக்கில் தோன்றித் தெரியும் விடிவெள்ளியை அடையாளம் காண்பது மிகவும் எளிது. வியாழன் என்னும் குரு கிரகம் மேற்கு வானில் மறைவது சாதாரணமாக நம் கண்களுக்கு சரியாகத் தெரியாது. வியாழன் தன் சுற்றுவட்டப் பாதையில் பூமியின் அருகில் வரும்போது மட்டும் நாம் இதைக் காணலாம்.
டாக்டர் இராசமாணிக்கானார் தம் ஆய்வில் வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிய அபூர்வ வானியல் நிகழ்வு நான்கு முறை நிகழ்ந்ததைக் கணக்கிட்டு கி.பி 600, கி.பி. 731, கி.பி. 885 மற்றும் கி.பி. 886 ஆகிய நான்கு ஆண்டுகளைக் குறிப்பிடுகிறார். கி.பி. 885 நவம்பர் 25 மற்றும் கி.பி. 886 டிசம்பர் 24 ஆகிய இரண்டு ஆண்டுகளில் வெள்ளியும் வியாழனும் எதிரெதிரே தோன்றி மறையும் நிகழ்வு துல்லியமாக நிகழ்ந்ததைக் குறிப்பிட்டுள்ளார்.
சூரியன் தனூர் ராசியிலும், சந்திரன் ரிஷபம் மற்றும் மிதுனம் ராசிகள் இணையும் புள்ளியிலும் நிலை கொண்டிருந்துள்ளன (intersecting cusp). வெள்ளி என்னும் வீனஸ் கிரகம் விருச்சகம் (மூலம் நான்காம் பாதம்) மற்றும் தனூர் (பூராடம் முதல் பாதம்) ராசிகள் இணையும் புள்ளியிலும் (intersecting cusp), வியாழன் என்னும் குரு கிரகம் 180 டிகிரி நேரெதிரே ரிஷப ராசியில் மிருகஷீரிஷம் இரண்டாம் பாதத்திலும் நிலைகொண்டிருந்துள்ளன.
பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் (கி.பி. 765 – 815) நெடுஞ்சடையன் என்ற அடைமொழியினையும் சடையவர்மன் என்ற பட்டத்தினையும் பெற்றவன். இவன் தீவிர வைணவனாவான்; கச்சிவாய் பேரூர் என்னும் இடத்தில் வைணவக் கோவில் ஒன்றை எழுப்புவித்துள்ளான்.
மதுரை குருவிக்காரன் சாலை அருகே வைகையாற்றில் / வைகைக் கரையில் 1961ல் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு, தற்போது மதுரை மீனாட்சி கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில், பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது இந்திய தொல்லியல் துறையைச் சேர்ந்த கே.ஜி.கிருஷ்ணன் என்பவரால் தொகுக்கப்பட்டுள்ளது (எபிகிராபிகா இன்டிகா வால்யும் 38 பார்ட் 1, 1969, pp. 27 – 32). திரு.கே.ஜி.கிருஷ்ணன் கல்வெட்டின் 8 ஆம் வரியைப் படித்த போது ‘கோ சேந்தன் மற்றைம்பது’ என்று படித்துள்ளார். திரு.கிருஷ்ணன் பல சுவையான தகவல்களை முன் வைத்து இந்தக் கல்வெட்டை 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அரசாண்ட பாண்டிய மன்னன் சேந்தன் காலத்தது என்று முடிவு செய்கிறார்.
டாக்டர்.இரா.நாகசுவாமி அவர்களும் இக்கல்வெட்டைப் படித்தபோது ‘கோ சேந்தன் மாறனைம்பது’ (கோ சேந்தன் மாறன் ஐம்பது) என்று படித்துள்ளார். அதாவது கோ சேந்தன் மாறனின் ஐம்பதாவது ஆட்சியாண்டு என்று பொருள் கொள்கிறார்.
கோ நெடுமாறன் மற்றும் ஸ்ரீ வல்லபன் என்னும் விருதுப் (பட்டப்) பெயர்களை ஒருங்கே பெற்ற பாண்டியன் யார் என்ற கேள்விக்கு டாக்டர். இரா.நாகசுவாமி பொருத்தமான ஆதாரங்களுடன் விடையளிக்கிறார். பெரிய சின்னம்மனூர் மற்றும் தளவாய்புறம் செப்பேடுகள் பராந்தகன் நெடுஞ்சடையனை ஸ்ரீ வல்லபன் (அபிஷேகநாமா) என்று குறிப்பிடுகின்றன. ஆனால் கோ மாறன் என்ற பட்டப் பெயர் இருந்ததற்கான கல்வெட்டு ஆதாரங்கள் இல்லை என்கிறார் நாகசுவாமி. எருக்கங்குடி (சாத்தூர், இராமநாதபுரம்) கல்வெட்டு ஒன்று கோ நெடுமாறன் மற்றும் ஸ்ரீ வல்லபன் என்னும் இரண்டு பட்டங்கள் தாங்கிய பாண்டியன் முதலாம் பராந்தக வரகுனன் மகன் ஸ்ரீ மாறன் ஸ்ரீ வல்லபன் (கி.பி. 815 – 862) என்று முடிவு செய்ய உதவுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இவன் மாறவர்மன், ஏகவீரன், பரசக்கர கோலாகலன், அபனிபசேகரன் ஆகிய சிறப்புப் பெயர்களையும் பெற்றவனாவான். புதுக்கோட்டை சித்தன்னவாசலில் அமையப்பெற்றிருக்கும் குகைக்கோயிலில் “பார்முழுதாண்ட பஞ்சவர் குலமுதல் ஆர்கெழுவைவேல் அவனிபசேகரன்-சீர்கெழு செங்கோல் சீவல்லவன்” என இவன் கல்வெட்டு கூறுகிறது. இவனது படை குண்ணூர், சிங்களம், விழிஞம் ஆகிய ஊர்களிலும் போர் செய்து வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் பாண்டிய அரசர்கள் ஆட்சி செய்த ஆட்சியாண்டுகள் பற்றிய தெளிவு கிடைக்கின்றது. பாண்டியன் சேந்தன் மாறன் குறைந்த பட்சம் ஐம்பது ஆண்டுகள் ஆட்சிபுரிந்துள்ளான். இவனே பாண்டிக்கோவையின் பாட்டுடைத் தலைவன்ஆவான்.
ஞானசம்பந்தர் (640-656 A.D.) (மாமல்ல I, பாண்டியன் அரிகேசரி நெடுமாறன் சம காலத்தவர்), அப்பர் (580-660 A.D.) (மஹேந்திரன், மாமல்ல மற்றும் பாண்டியன் அரிகேசரியின் சமகாலத்தவர்), பெரியாழ்வார் (800-885 A.D.) (பாண்டியன் ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லப சமகாலத்தவர்), நம்மாழ்வார் (745 to 780 A.D.) போன்றோர் வாழ்ந்த காலம் பற்றிய தெளிவு கிடைக்கின்றது.
- பருப்பதத்து கயல் பொறித்த பாண்டியர் குலபதி. (பெரியாழ்வார் திருமொழி 5-4-7)
- கொன்னவில் சுடர் வெல் கோன் நெடுமாறன் (பெரியாழ்வார் திருமொழி 4-2-7 )
- குறுகாத மன்னரை கூடு கலக்கி (பெரியாழ்வார் திருமொழி 4-2-8)
குருபம்பரை நூலிலும் பாண்டியன் ஸ்ரீ வல்லபன் பெரியாழ்வாரின் சமகாலத்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்டாள் திருப்பாவை பாடி அருளிய காலம்
வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிய அபூர்வ வானியல் நிகழ்வு கி.பி. 885 நவம்பர் 25 மற்றும் கி.பி. 886 டிசம்பர் 24 ஆகிய இரண்டு ஆண்டுகளில் வெள்ளியும் வியாழனும் எதிரெதிரே தோன்றி மறையும் நிகழ்வு துல்லியமாக நிகழ்ந்துள்ளபடியால் இந்த தேதிகளில் ஒன்று மட்டும் ஆண்டாள் பாடி அருளிய திருப்பாவை 13 ஆம் பாசுரம் பாடிய நாளாக இருக்க வாய்ப்புள்ளது.
- A New Pandya Record and the Dates of Nayanmars and Alvars. Nagasamy, R. Tamil Arts Academy. http://tamilartsacademy.com/articles/article08.xml
- Dating of Thirruppavai from paasurams 1, 3 & 4 http://jayasreesaranathan.blogspot.in/2008/12/dating-of-thirruppavai-from-paasurams-3.html
- Kings mentioned by Periyazhvar Non Random Thoughts. http://www.got-blogger.com/jayasreesaranathan/?p=1111
- 13 ஆவது நாள் – வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று https://groups.google.com/forum/#!topic/mintamil/MbUUgV2HAxc
- மார்கழி-13: ஆண்டாளும் அப்துல் கலாமும்! http://madhavipanthal.blogspot.in/2008/12/13.html
- செந்தில் குமார் பக்கங்கள் http://kpsendilkumar.wordpress.com/
வருக! வாழ்க! வளர்க!
LikeLike
தம்மை கவிதைக்கு பேர் அரசர்கள் என்று பீற்றிக்
கொள்வோர் இதை படித்தாவது உண்மையை தெரிந்து கொள்வார்கள் என நம்புவோம்.
மிகவும் ஆர்வத்தை அளித்த கட்டுரை .
LikeLike
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஐயா
LikeLike