மூன்றடுக்குத் தரையமைப்புடன் கூடிய அதிரணசண்ட பல்லவேஸ்வரம் மண்டபம் முகப்பு, மண்டபம் மற்றும் கருவறை என்று பிரித்து அமைக்கப்பட்டுள்ளது. முகப்பில், சதுரம், கட்டு, சதுரம் என்று அமைந்த இரண்டு முழுத் தூண்களையும், இரண்டு அறைதூண்களையும், வளைமுக போதிகைகளையும், உத்திரம், வாஜனம், வாலபி, கபோதம், பூமிதேசம் போன்ற பிரஸ்தார உறுப்புகளையும் பெற்றுள்ளது. கபோதத்திற்கு மேலே சிறு சிறு குழிகள் பந்தல் போடுவதற்காக வெட்டப்பட்டுள்ளன போல் தெரிகிறது. கருவறையின் நடுவில் அமைத்த குழியில் (socket) 16 பட்டைகளுடன் அமைத்த இலிங்கமொன்று பொருதப்பட்டுள்ளது. கருவறைப் பின் சுவற்றில் சோமாஸ்கந்தர் சிற்பத்தொகுதி புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது கருவறையின் வாயில் முன்பு இரண்டு துவாரபாலகர்களின் சிற்பங்கள் பக்கத்திற்கொன்றாகக் காணப்படுகின்றன. அதிரணசண்ட பல்லவேஸ்வர க்ருஹத்தில் நுழைவாயிலின் முகப்பிலிருந்து அரைத்தூண்களையொட்டி வெளிப்புறம் நோக்கி சரியும் மண்டபத்தின் இடது மற்றும் வலது புற பக்கச் சுவர்களில் இரண்டு கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இடது புறம் 16 வரிகளுடனும் 6 செய்யுட்களுடனும் கூடிய நாகரிக் கல்வெட்டும் வலப்புறம் 17 வரிகளுடனும் 7 செய்யுட்களுடனும் கூடிய பல்லவ கிரந்தக் கல்வெட்டும் அமைந்துள்ளன.
இக்கல்வெட்டுக்களில் காணப்படுவது சிறு சிறு வேறுபாடுகளுடன் கூடிய ஒரே சம்ஸ்கிருத சுலோகமாகும். ஆனால் இரண்டு வெவ்வேறு வரி வடிவங்களில் (எழுத்துகளில்) பொறிக்கப்பட்டுள்ளது. பல்லவ கிரந்தக் கல்வெட்டில் இடம்பெறும் 7 செய்யுள்களுள் முதலிரண்டு செய்யுள்கள் அப்படியே மாமல்லபுரம் தர்மராஜ மண்டபத்திலும், கணேச இரதத்திலும் அமைந்துள்ள கல்வெட்டுக்களில் முறையே 8 மற்றும் 9 ஆம் செய்யுள்களாகவும், நான்காம் செய்யுள் அதே வரிசையில் நான்காம் செய்யுளாகவும் இடம்பெறுகின்றன. பல்லவ மன்னன் இராஜசிம்ஹன் ஐந்தாம் செய்யுளில் ஐந்தாம் செய்யுளில்:
‘இப்பூவுலகை ஆள்பவர்களின் தலைவராகிய அதிரணசண்ட (Athiranchandah), இக்கோவிலை அதிரணசண்டேஸ்வரருக்கு (Athiranachandeshvara) கட்டுவித்தார். இங்கு பசுபதி (Pashupathi) மலைமகளான (GiriTanaya) பார்வதியுடனும், குகனாகிய ஸ்கந்தனுடனும் (Skanda) (முருகன்), கணங்கள் (gana) சூழ தங்கி மகிழ்வாராக. இதன் சமஸ்கிருதப் பகுதி திரு.ஆர். கோபுவின் Athiranchanda Surprise – Babington’s Gift ப்ளாக் போஸ்ட்டிலிருந்து அப்படியே தரப்பட்டுள்ளது:
இக்கல்வெட்டுச் செய்யுள்களில் இராஜசிம்ஹன், ‘அத்யந்தகாம’ (Atyantakama), ‘ஸ்ரீநிதி’ (Srinidhi), ‘ஸ்ரீபரா’ (Sribhara), ‘காமராஜா’ (Kamaraja), ‘தனஞ்சய’ (Dhananjaya) மற்றும் ‘சங்க்ரம்தீர’ (Samgram-dhira) போன்ற விருதுப் பெயர்களால் (பிருடா) குறிக்கப்படுகின்றான். இவ்விருதுப் பெயர்களில் அத்யந்தகாம என்ற விருதுப்பெயர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அத்யந்தகாம என்றால் ‘முடிவில்லாத மன எழுச்சி உடையவன்” என்று பொருள். காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள காஞ்சி கைலாசநாதர் கோவில் என்ற ‘இராஜசிம்மேசுவரத்தில் இராசிம்மரின் பிறப்பைப்பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு “உக்ரதண்டனிடமிருந்து கடமை உணர்வு மிக்க ஸ்ரீஅத்யந்தகாமன் பிறந்தார்” என்று உள்ளது. இதிலிருந்து இராஜசிம்ஹர் தம் பெயரை அத்யந்தகாமன் என்றே அறிவித்திருப்பது புலனாகிறது. மேலும் மாமல்லபுரத்தின் அத்யந்தகாம பல்லவேசுவர க்ருஹத்திலும் “ரணஜயன் என்ற பெயரால் புகழடைந்தவரான அரசர் அத்யந்தகாமன் இந்த சிவன் கோயிலைச் செய்வித்தார்” என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதிலிருந்து இராஜசிம்மர் அத்யந்தகாமன் மற்றும் ரணஜயன் ஆகிய இரு முக்கிய விருதுப் பெயர்களைக் கொண்டு அழைக்கப்பட்டதை நாம் அறிந்துகொள்ளலாம்.’
![]() |
நன்றி: திரு. பத்ரி சேஷாத்ரி |
![]() |
பாபிங்க்டன் பக்கம். நன்றி: திரு.ஆர். கோபு |
கேப்டன் எம்.டபிள்யூ. கார் தொகுத்த புத்தகத்தில் கர்னல் காலின் மெக்கன்ஸி (Colonel Colin Mackenzie) (1754 – 1821), (ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இராணுவ அதிகாரி. இந்திய கிழக்கிந்திய கம்பெனியில் முதன்மைப் பிரதம நில அளவை (Surveyor General of India) ஆய்வாளராகப் பதவி வகித்தவர் மற்றும் கீழ்த்திசை சுவடித் தொகுப்பில் ஈடுபாடுடையவர் மற்றும் ஆவணவியல் அறிஞர்) தொகுத்த மாமல்லபுர வரைபடம் ஒன்றும் காரின் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மெக்கன்ஸியின் வரைபடம் அதிரணசண்ட மண்டபத்தில் மூன்று இடங்களில் கல்வெட்டுகள் இருப்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றது . தற்போது காணப்படும் இரண்டு கல்வெட்டுக்களும் வரைபடத்தில் சுட்டிக்கட்டப்படுகின்றன இது தவிர மூன்றாவதாக பேசப்படும் கல்வெட்டு அதிரணசண்ட மண்டபத்தில் மற்ற இரண்டு கல்வெட்டுகளுக்கும் நடுவில் இருப்பதாகக் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் இந்த மூன்றாவது என்னவாயிற்று என்று ஊகிக்க முடியவில்லை.
![]() |
மெக்கன்ஸியின் வரைபடம். நன்றி: திரு.ஆர். கோபு |
கேப்டன் எம்.டபிள்யூ. கார் தொகுப்பில் புனித ஜார்ஜ் கோட்டையின் காவற்படை தேவாலய போதகர் மறைத்திரு (ரெவரெண்ட்). ஜார்ஜ் மாஹோன் எழுதிய கட்டுரை ஒன்றும் (Guide to Sculptures Excavations and Other Remarkable Objects at Mamallaipur generally known to Europeans as the ‘Seven Pagodas’ by the Late Lieutenant John Braddock of Madras Establishment with additional notes by Rev William Taylor and supplementary information by Walter Elliot compiled by Rev George Mahon AM, Garrison Chaplain, Fort St George.) இடம்பெற்றுள்ளது. இக்கட்டுரையில் அதிரணசண்ட மண்டபம், சாளுவன்குப்பத்துக்கும் – மாமல்லபுரத்துக்கும் இடையே இரண்டு சோழர் கால தமிழ்க் கல்வெட்டுகள் இருப்பதாக ரெவரெண்ட். ஜார்ஜ் மாஹோன் குறிப்பிட்டிருக்கிறார்.
திரு.ஆர். கோபு, ஜார்ஜ் மாஹோன் குறிப்பிட்ட இடத்தில் சென்று மேற்கொண்ட தேடல் முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவ்விடத்தில் இந்தியத் தொல்லியல் துறையின் குறிப்புக்கல் (marker stone) ஒன்று நடப்பட்டிருந்தது மட்டும் தெரிந்தது. குறிப்புக்கல் அருகில் ஒரு பெரிய பாறை உள்ளது. ஆனால் ஜார்ஜ் மாஹோன் குறிப்பிட்ட இரண்டு சோழர் கால தமிழ்க் கல்வெட்டுகளை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை.
![]() |
தொல்லியல் துறையின் குறிப்புக்கல் |
இது பற்றி டாக்டர். ஆர். நாகசுவாமி அவர்கள் தம் தமிழ் ஆர்ட்ஸ் அகாடமி என்ற அமைப்பின் மூலம் தன் இல்லத்தில் ஒரு சொற்பொழிவினை 06 மே 2015 ஆம் நாளன்று மாலை நேரத்தில் வழங்கினார். திரு. ஆர்.கோபு அவர்களை பாபிங்க்டன் மற்றும் மாஹோன் ஆகியோரின் கட்டுரைகளைப் பற்றி ஒரு முன்னுரை வழங்கினார். ஆர். நாகசுவாமி அவர்களின் ‘மாமல்லபுரத்தில் அமைந்துள்ள குடைவரைகள், ஒற்றைக்கல் இரதங்கள், கட்டுமானக் கோவில்கள் யாவும் இராஜசிம்ஹனால் கட்டப்பட்டவையே ‘ என்ற கருத்து இவ்வாய்வுகளின் மூலம் வலுப்பெறுகிறது. மேலும் எதிர்காலத்தில் பாபிங்க்டன் மற்றும் மாஹோன் ஆகியோர் குறிப்பிட்ட கல்வெட்டுக்களைப் பற்றிய அகழ்வாய்வுகள் மிகவும் அவசியமாகிறது. தொல்லியல் துறையினர் பிற்காலங்களில் இப்பகுதிகளில் மேற்கொள்ளும் அகழ்வாய்வுகளிலிருந்து விடை கிடைக்கக்கூடும் என்று நம்புவோம்.
நன்றி: தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை, சென்னை. தமிழ் ஆர்ட்ஸ் அகாடமி, சென்னை. டாக்டர். ஆர் . நாகசுவாமி, பேரா. எஸ் . சுவாமிநாதன், திரு.பத்ரி சேஷாத்ரி, திரு. ஆர். கோபு மற்றும் உறுப்பினர்கள்.
Reference:
- Babington, Benjamin Guy. An Account of the Sculptures and Inscriptions at Mahamalaipur; illustrated by Plates.(Internet Archive). Read July 12, 1828
- Carr, Mark William. The Seven Pagodas on the Coromandel Coast, Descriptive and Historical Papers. (1869)
- Carr, Mark William. Descriptive and Historical Papers Relating to the Seven Pagodas on the Coromandel Coast (1869). Kissinger Publishing. 978-1120188328. 310 pages. Amazon
- Gopu, R. Athiranchanda Surprise – Babington’s Gift. Ajivaka Lynnist Wallacian. Blog. 09 May 2015
- Mahon, George. Guide to Sculptures Excavations and Other Remarkable Objects at Mamallaipur generally known to Europeans as the ‘Seven Pagodas’ by the Late Lieutenant John Braddock of Madras Establishment with additional notes by Rev William Taylor and supplementary information by Walter Elliot compiled by Rev George Mahon AM, Garrison Chaplain, Fort St George. (Google Books)
- New transcript confirms Rajasimha built. Times of India May 17, 2015 http://timesofindia.indiatimes.com/city/chennai/New-transcript-confirms-Rajasimha-built-Mahabs/articleshow/47316555.cms.
- பத்ரி சேஷாத்ரி. அதிரணசண்ட மண்டபத்தின் மூன்றாவது கல்வெட்டு. May 07, 2015.
New Light on Mamallapuram Dr. Nagaswami by G.Vijayan
This fact was already disclosed by Dr. KALAIKOVAN, இராஜமாணிக்கனார் ஆய்வு மையம், திருச்சிராப்பள்ளி.
LikeLike