உங்கள் குழந்தையைத் தெரிந்துகொள்ளுங்கள் – 2

கலீல் ஜிப்ரான்

கலீல் ஜிப்ரான் (1883 – 1931) லெபனானில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய கவிஞர் மற்றும் ஓவியர்.  ஆங்கிலத்திலும் அரபி மொழியிலும் பல கவிதைகள் மற்றும் உரைநடைகளை எழுதிய இவர் லெபனானின் மிகச் சிறந்த கவிஞராக இன்றும் அறியப்படுபவர்.  1923 ஆம் ஆண்டில் இவர் எழுதிய ‘தீர்க்கதரிசி’  (தி ப்ராஃபெட்) (The Prophet) என்ற தத்துவக் கவிதை உலகப் புகழ் பெற்றது.

குழந்தைகள் குறித்து கலீல் ஜிப்ரான் எழுதிய கவிதையில் இருந்து சில வரிகள்…
உங்கள் குழந்தைகள்
உங்களுடையவர்கள் அல்லர்
அவர்களே வாழ்வும், வாழ்வின் அர்த்தங்களும் ஆவர்.
அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்களேயன்றி
உங்களிடமிருந்து அல்ல
உங்களுடன் இருந்தாலும் அவர்கள்
உங்களுக்கு உரியவர்களல்லர்.
அவர்களுக்கு உங்கள் அன்பைத் தரலாம்; …
எண்ணங்களை அல்ல.
அவர்களுக்கென்று  சுய சிந்தனைகள் உண்டு.
அவர்களுடைய உடல்களை
நீங்கள் சிறைப் படுத்தலாம்;
ஆன்மாக்களை அல்ல.
கனவிலும் நீங்கள் நுழைய முடியாத
எதிர்காலக் கூட்டில்
அவர்களது ஆன்மாக்கள் வசிக்கின்றன.
நீங்கள் அவர்களாக முயலலாம் ;
அவர்களை  உங்களைப்போல
உருவாக்க முயலாதீர்கள்.
வாழ்க்கை பின்னோக்கிச் செல்வதோ,
நேற்றுடன் தங்கிப் போவதோ இல்லை.
உயிர் கொண்ட அம்புகளாய்
உங்கள் குழந்தைகளும்,
விரைந்து செலுத்தும் வில்லாய்
நீங்களும் இருக்கிறீர்கள்.
வில்லாளியானவர்,
முடிவில்லாத பாதையின்  இலக்கை நோக்கி
தன்னுடைய அம்புகள்
துரிதமாகவும் , தூரமாகவும்    செல்லும் வண்ணம்
உங்களை  வளைக்கிறார்.
அவர் கைகளில் உங்களின் வளைவு
மகிழ்வுக்கு உரியதாக இருக்கட்டும்.
ஏனெனில்,
பறக்கும் அம்புகளை மட்டுமல்ல………..
நிலைத்து நிற்கும் வில்லையும் அவர் நேசிக்கிறார்.

Youtube
உங்கள் குழந்தைகள் உங்களுடையவை அல்ல கலீல் ஜிப்ரான் – Deres barn er ikke deres barn – by Rooban Sivarajah

பெற்றோர்களும் ஆசிரியர்களும் நம் கல்வி முறையும் சமூகமும் நம் குழந்தைகளுக்குச்  சிறிதும் பயன்தராதபல அடையாளங்களை நம் குழந்தைகள் மீது திணித்திருக்கிறார்கள்.  அன்றாட வாழ்கையில் நாம் கற்ற தற்புகழ்ச்சிகள், பொய்யுரைகள், வஞ்சப்புகழ்ச்சிகள், தந்திரங்கள், கபடயுக்திகள் எல்லாம் நம் குழந்தைக்குத் தேவை தானாவென்று சிந்தியுங்கள். 

இந்தச் சூழலில் நாம் எல்லோரும் நம் குழந்தைகளை நம்மைப் போலவே நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்காக வாழ்க்கையை நாம் புரிந்து கொண்டவிதத்திலேயே நம் குழந்தைகளை வளர்க்க வேண்டிய முயற்சிகளை செய்கிறோம். ஆனால் கலீல் ஜிப்ரான்:

“”””நீங்கள் அவர்களைப் போல ஆவதற்கு உழையுங்கள்;
ஆனால் அவர்களை உங்களைபோல ஆக்கிவிடாதீர்கள்””

என்கிறார்.

நாம் ஒவ்வொருவருக்கும் நம் வாழ்வில் நிறைவேறாத பல ஆசைகள் மற்றும் கனவுகளிருக்கும். சிறப்பான உயர் கல்வி, கைநிறைய சம்பளம் கிடைக்கும் வேலை அல்லது பணம் கொழிக்கும் சுய தொழில், வசதியான குடும்பத்திலிருந்து அழகான திறமை மிகுந்த மனைவி, வீடு, வாசல், சமூக அந்தஸ்து என்று பல கனவுகள்.  வாழ்க்கையில் பலருக்கு  கனவுகள் நிறைவேறுவதேயில்லை. எனவே இது போன்ற பெற்றோர்கள் தங்கள் நிறைவேறாத விருப்பத்தைத் தங்கள் குழந்தைகள் மூலமாகவே நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கிறார்கள்.

முறைப்படுத்தப்பட்ட கல்வி அமைப்பு

முறைப்படுத்தப்பட்ட கல்வி அமைப்பு என்பது நம் குழந்தையின் விருப்பு வெறுப்புகளுக்கு எதிராக இருக்கிறது. எனவே நம் கல்வி முறை நம் குழந்தைகளுக்கு ஒருவிதமான தாழ்வு மனப்பான்மையையும் பயத்தை அறிமுகப்படுத்துகிறது. நாம் அவர்களிடம் வேண்டும் எதிர்பார்ப்புகள் அவர்களுக்கு மிகப்  பெரிய சுமையாக மாறுவிடுகிறது. 

குழந்தைகளை ஸ்பெஷலிஸ்ட் டாக்டர், முதன்மை நிர்வாக எஞ்சினியர் போன்ற பதவிகளை குறி வைத்து அதை அடைவதற்கு கல்வியை ஒரு மார்க்கமாக மாற்றிவிட்டார்கள். இன்று நம் சமூகத்தில் கற்றல் என்பது அதிக மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெறுதல் என்று மாறிவிட்டது. இன்றைய கல்வி என்பது ‘பணம் ஈட்டும் வாழ்க்கை பார்முலா,’ ‘பணம் சம்பாதிக்கும் தொழில் சூத்திரம்.’

நம் குழந்தைகளிடமிருந்து நாம்  கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.  உங்கள் குழந்தைகளோடு  உங்களை ஒப்பிட்டுப் பாருங்கள். உங்கள் குழந்தை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எந்தக் கவலையும்படாமல் உறங்குகிறது. விழித்திருக்கும் நேரத்தில் அதிகமாக விளையாட விரும்புகிறது. உங்களைப் பார்த்துச் சிரிக்கிறது. பசி வந்தால் அழுகிறது.   உங்கள் குழந்தைதான் என்றாலும் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதத்தில் மற்ற குழந்தைகளிடமிருந்து வேறுபடுகிறார்கள்.

குழந்தைப் பருவத்தைக் கடந்து வந்த நாம் சிரிப்பையே தொலைத்து விட்டோம். விளையாட்டு என்பது மறந்தே போய்விட்டது. நீங்கள் உங்கள் குழந்தையை நல்லவிதமாக வளர்க்க ஆசைப்படுகிறீர்கள் அல்லவா? ஆம் எனில் குழந்தைகளுக்கேற்ப பெற்றோர் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
குழந்தையோடு குழந்தையாய் மாறிவிட்டால் நம் குழந்தையிடமிருந்து நாம் நிறையக் கற்றுக் கொள்ளலாம் அல்லவா?  எனவே உங்கள் குழந்தைகளை கூர்ந்து கவனியுங்கள். அதன் விருப்பு வெறுப்புகள் என்னென்ன… அதன் வளர்ச்சிக்கான  தேவைகள் என்னென்ன… அதற்கு நீங்கள் எவ்வாறு உதவ முடியும். இப்படி எவ்வாறெல்லாம் நீங்கள் மாற்றிக்கொள்ளலாம் என்று தீவிரமாக சிந்திக்கத் தொடங்கி விட்டீர்கள் என்றால் உங்கள் குழந்தையின்  வளர்ச்சியில் பங்குபெறத்  தொடங்கிவிட்டீர்கள் என்று  எடுத்துக்கொள்ளலாம்.

குழந்தைகள்  விளையாடவே  விரும்புகிறார்கள்

உங்கள் அன்பையும் அரவணைப்பையும் நல்கி ஒரு அர்த்தமுள்ள உறவை வளர்த்துக்கொள்வதுதான்  நீங்கள் உங்கள் குழந்தைக்குச் செய்ய வேண்டிய கடமை.  அவர்கள் உங்களுடன் எந்த இடைவெளியும் இல்லாமல் எளிதாக அணுகி சுதந்திரமாகப் பழகும் விதத்தில்  இணக்கமான நல்லுறவை குழந்தைகளோடு வளர்த்துக்கொள்ளுங்கள்.

 பெற்றோர் தங்கள் விருப்பத்தை குழந்தைகளிடம் திணிக்க கூடாது என்கிறார் கவிஞர் ஜிப்ரான். குழந்தைகள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே அவர்களை ஏற்றுக்கொள்வது தான் பெற்றோர்கள் செலுத்தும் உண்மையான அன்பாகும்.  தன்  குழந்தைகளிடம் உளமார அன்பு செலுத்தும் பெற்றோர் யாரும் தாங்கள் சொல்வதைத்தான்  தங்கள் குழந்தைகள்   கேட்டுப் பின்பற்ற வேண்டும் என்ற கருத்துத் திணிப்பினைச் செய்ய மாட்டார்கள். கருத்துச் சுதந்திரம், சுயமாகச் சிந்தித்துச் செயல்படும் உரிமை தரும் குடும்பங்களில் அன்புக்குப் பஞ்சமேயிராது.

உங்கள் குழந்தை உங்கள் குடும்பத்தில் யாரைப் போலவும் அடையாளப்படுத்திக் கொள்ளாமல் வளர்வதற்கு தகுந்த சூழலையும் வாய்ப்புகளையும் உருவாக்கித் தரவேண்டியது என்பது குழந்தை வளர்ப்பில் நல்ல குறிக்கோளாகும். 

பெற்றோர் தம் குழந்தைகளிடம் உருவாக்க வேண்டிய மற்றோரு பண்பு தம்மைச் சார்ந்திராத தன்மை. குழந்தைகள் வளர, வளர அவர்கள் தம் சொந்தக் காலிலேயே நிற்கும் மன வலிமையையும், திறனையும் பெற்றோர் ஊட்டி வளர்க்க வேண்டும். அவர்களுடுடைய  சுய சிந்தனைகள் மற்றும் விருப்பங்களுக்கேற்ப பெற்றோர் செயல்படுவதன் மூலம் அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க முடியும்.

கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்படவேண்டிய அவசியமெல்லாம் ஒருவன் தன் வாழ்நாளில் முழு சுதந்திரத்தோடு வாழ்வதற்குத் தகுதிபடுத்துவது என்பதேயாகும். அல்லது உலகில் நல்வாழ்க்கை வாழத் தகுதியுடையவனாக்குவது என்பதாகும். – தந்தை பெரியார்.

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in குழந்தைகள், பெற்றோர்கள். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.