ஹாய்…. ஹலோ இங்கே பாருங்க…
நான் தான் உங்க மூளை பேசறேன். என்ன திகைச்சுப் போய்ட்டீங்களா? உங்களுக்கு என்னை நல்லாத் தெரியும்னு நினைக்கிறீங்க இல்லையா? ஆனால் உங்களுக்கு என்னைப்பற்றிய முழுத் தகவல்களும் தெரியாது… அதுதானே உண்மை. மடிப்பு மடிப்பான வெளிப்பகுதி அடர்த்தியான சாம்பல் நிறத்திலும் கூழான உட்பகுதி வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறத்திலும் அமைந்துள்ள என்னை (உங்கள் மூளையை) நீங்கள் பார்த்திருக்க முடியாது. அதற்கு வாய்ப்பேயில்லை. உம்ம்ம் நான் உங்க தலை கபாலத்துக்குள்ளே பத்திரமாக இருக்கேன்.
![]() |
ந்யூரான்கள் அடர்த்தியான வளர்ச்சி |
பிறந்த குழந்தையின் எடை சுமார் 0.375 கிராம் (நாலில் ஒரு பங்கு) இருக்கலாம். குழந்தை தாயின் கருவறையில் இருக்கும்போதே இதன் நுண்ணறிவுக்குத் தளம் அமைக்கப்படுகிறது.
குழந்தையின் மூளையில் 2 வயதிற்குள் மிக அதிக அளவில் ந்யூரான் செல்கள் பெருகுகின்றன. பிறகு அவை குறைய ஆரம்பித்து விடுகின்றன. 18 வயதில் மனிதனின் மூளை வளர்வதை நிறுத்திக் கொள்கிறது. என்னுடைய இந்தப் பரிணாம வளர்ச்சி இன்று நேற்று நிகழவில்லை. சுமார் 50 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நானும் என் பாகங்களும் படிப்படியாக வளர்ந்து கொண்டும் இருக்கிறோம். பரிணாம வளர்ச்சி என்று குறிப்பிடுவது பருமனோ அல்லது எடையோ அல்ல; செறிவான அல்லது அடர்த்தியான வளர்ச்சி.
ஹிப்போகிரேட்ஸ் என்ற கிரேக்க ஞானி மற்றும் மருத்துவர் ஓரளவுக்கு என்னுடைய இயக்கத்தை ஓரளவுக்கு சரியாகவே புரிந்து கொண்டார் எனலாம். உங்கள் மூளை மட்டுமே உங்களின் சிரிப்பு, அழுகை, ஆனந்தம், துக்கம், சுகம், வலி, வேதனை, கண்ணீர் ஆகிய எல்லாவருக்குமே உங்கள் மூளை மட்டுமே காரணம் என்ற கருத்தைத் தெரிவித்தார். நான் பல நூற்றாண்டுகளாகவே ஞானிகளையும் விஞ்ஞானிகளையும் கவர்ந்திழுத்து வருகிறேன். பல நூற்றாண்டுகளாக நீங்கள் என்னைத் தெரிந்து கொண்டதைவிட இந்தப் பத்தாண்டுகளில் நரம்பியல் விஞ்ஞானிகள் அதிகம் தெரிந்து கொண்டுள்ளார்கள்.
உலக அதியசங்களை என்னோடு ஒப்பிட்டீர்கள் என்றால் அவற்றுக்கு எல்லாம் முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும். உண்மையில் நான்தான் உங்கள் லைப் பார்ட்னர். கருவறை முதல் கல்லறை வரை உங்களை ஒரு நொடி நேரம் கூட பிரியாமல் இருக்கிறேன். நூறு மில்லியன் நரம்புத் திசுக்களை உள்ளடக்கிய தகவல் மற்றும் கட்டளைகள் பரிமாற்றம், என்னுடைய நிகழ்நிலை (real-time) செயலாக்கங்கள் (processing) மைய நரம்பு மண்டலத்தில் (central nervous system) இடையறாது நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. நான் ஒரு விநாடி செயலாற்றத் தவறினாலோ அல்லது இரத்த ஓட்டம் தடைப்பட்டாலோ பல விரும்பத் தகாத விளைவுகள் ஏற்பட்டு நரம்பியல் மருத்துவர் உங்களை சோதிக்க ஆரம்பித்துவிடுவார்.
நான் உங்களுக்காக இடையறாது செய்துவரும் எண்ணற்ற பணிகளைப் போல எந்தக் கம்ப்யூட்டராலும் செய்துவிட முடியாது. எனினும் நான் உங்கள் உடம்பின் ஒரு பாகம் என்றாலும் உங்கள் உடம்பிலிருந்து வேறுபட்டவன். நான் தான் உங்கள் ஆளுமை (Personality), தனித்தன்மை, குணநலன், உங்கள் எதிர்வினைகள் (reactions), உங்கள் மனத்தின் கொள் திறம் (mental capacity). உங்கள் பழக்கங்கள் (habits), படைப்பாற்றல் (creativity), கனவுகள் (dreams), மனவெழுச்சிகள் (emotions), உங்கள் மொத்த உடலியல் (physiology), ஒவ்வொரு துளி அனுபவங்கள் (experience), நீங்கள் உங்கள் வாழ்வில் பெறும் தகவல்கள் (information) எல்லாவற்றையும் நானே இயக்குகிறேன். சுமார் 70,000 எண்ணங்கள் (thoughts) தினமும் என்னுள் முகிழ்க்கின்றன .
நீங்கள் உங்கள் தசைகளை இயக்கி நிற்க, நடக்க முயல்வதாகவும், தோலால் தொடுவுணர்ச்சி, உஷ்ணம், வெயில், குளிர் போன்ற வெப்பநிலை வேறுபாடுகளை உணர்வதாகவும், கண்களால் மட்டுமே பார்ப்பதாகவும், காதுகளால் மட்டுமே கேட்பதாகவும், நாக்கால் மட்டுமே அறுசுவைகளை உணர்வதாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இவற்றை எல்லாம் நீங்களா செய்கிறீர்கள்? இல்லவே இல்லை. இந்தச் செயல்கள் எல்லாம் என்னிடமிருந்து பிறப்பிக்கப்படும் கட்டளைகளால் மட்டுமே நடக்கின்றன.
![]() |
குண்டலினி சக்தி |
- நீங்கள் நிற்பது, நடப்பது, ஓடுவது, தில்லானா நடனமாடுவது, தனுராசனம், மச்சாசனம், மயூராசனம் போன்ற கஷ்டமான ஆசனங்கள் செய்வது; ப்ரஸ்ட் ஸ்ட்ரோக் நீச்சல், பட்டர் ஃப்ளை நீச்சல், பேக் ஸ்ட்ரோக் நீச்சல் அடிப்பது; கிரிக்கெட்டில் ஹூக் ஷாட் மூலம் சிக்சர் அடிப்பது போன்ற ஒருங்கிணைத்த தசை இயக்கத் திறன்கள் (motor skills) நான் (சிறுமூளை) இடும் கட்டளைகள் மோட்டார் நரம்புகள் (motor neural networks) மூலம் நிகழ்கின்றன. மோட்டார் ந்யூரான்கள் தசை நார்களைக் கட்டுப்படுத்தும் திறன் பெறுகின்றன;
- தோல் (பல்வேறு இழையப் படலங்களினால் ஆனது) உணரும் தொடுவுணர்வுத் திறன்; சூடு, குளிர்ச்சி, சுரம் மற்றும் குளிரினால் ஏற்படும் நடுக்கம் வெப்பநிலையை நான் இடும் கட்டளைகள் மூலம் கட்டுப்படுத்தும் திறன் பெறுகின்றீர்கள்;
- நாக்கு உணரும் இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகள் நான் இடும் கட்டளைகள் மூலம் உணரும் திறன் பெறுகின்றீர்கள்;
- கண்கள் 500 விதமாக ஒளிகளை பிரித்தறியும் சக்தி படைத்தது. கண்கள் உணரும், ஒளியுடன் கணப்பொழுதில் படம் பிடித்த பொருட்களின், கருப்பு வெள்ளை மற்றும் வண்ண முப்பரிமாணப் படிமங்களை (binocular vision) நான் இடும் கட்டளைகள் மூலம் காட்சிப்படுத்தும் திறன் பெறுகின்றீர்கள்;
- காதின் செவிப்பறை மற்றும் சிற்றெலும்புகள் உணரும் ஒலி: ‘எந்தரோ மஹாநுபாபு(…லு) அந்தரிகி வந்தநமு’ என்ற தியாகராஜரின் தெலுங்குக் கீர்த்தனை என்று வைத்துக் கொள்ளலாமா? இக்கீர்த்தனையைப் பாடும்போது கேட்டு ஸ்ரீ ராகம் என்றும் ஆதி தாளம் என்று நான் இடும் கட்டளைகள் மூலம் புரிந்துகொண்டு அடையாளம் காணும் திறன் பெறுகின்றீர்கள்;
- முதுகில் உள்ள தண்டுவடத்தின் வழியே “இடகலை“, “பிங்கலை“, “சுழுமுனை” என்ற மூன்று நாடிகளின் வழியே பிராண வாயு இயங்குகிறது. நான் இடும் கட்டளைகள் மூலம் யோகப்பயிற்சி மேற்கொண்டு குண்டலினி சக்தியை / ப்ராண சக்தியை இந்த மூன்று நாடிகளின் வழியே கீழ் மூலாதாரம் தொடங்கி ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா (சக்கரம்), சகஸ்ரஹாரம் முடிய யோகசக்தியால் தூண்டிவிட்டு மேலெழுப்பும்போது தோன்றும் சுகமான மின் அதிர்வுகள் மூலம் தோன்றும் கிளர்ச்சிகளை நான் இடும் கட்டளைகள் மூலம் உணரும் திறன் பெறுகின்றீர்கள். முதுகுத் தண்டுவடத்தில் தோன்றும் மின் அதிர்வு தூண்டல்கள் என் (மூளையின்) செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.
நீங்கள் தூங்கும்போதுகூட நான் உங்கள் உடலியக்கத்தை போதுமான அளவு சமன் செய்து இயக்குகிறேன். இதயத்துடிப்பு, சுவாச இடைவெளி போன்றவை குறைகின்றன.
என்னுடைய ஒவ்வொரு பாகமும் தனித் தனியே வேலை செய்கிறது. இதயத்துடிப்பு, சுவாசம், ஜீரணம் போன்ற சுயேட்சை (இச்சையில்லாமல் இயங்கும்) (autonomic nervous system (ANS) நிகழ்வுகளை இயக்க ஒரு பகுதி, கைகால்கள் போன்ற அங்க அவயங்களை இயக்க மற்றொரு பகுதி, பார்வைக்கு வேறோரு பகுதி, கேட்பதற்கு ஒரு குறிப்பிட்ட பகுதி, முகர்வதற்கு ஒரு தனிப்பகுதி, சுவைகளை உணர, பேச்சினைக் கையாள என்று தனிதனி பகுதிகள். இந்தப் பகுதிகளில் செயல் இழப்பு ஏற்பட்டால் உங்கள் உடம்பில் குறிப்பிட்ட பகுதிகளைப் பாதிக்கிறது. நான் என்னுடைய கடமைகளைச் செய்யமுடியாது போனால் உங்கள் இயக்கங்கள் நின்றுபோகும்.
நீங்கள் நோய்வாய்ப்பட்டால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; பசி, தாகம் போன்ற உங்கள் உடல் தேவைகளையும் சொல்கிறேன்; உங்களுடைய இனக்கவர்ச்சி, ரொமான்ஸ், செக்ஸ் உந்துதல் போன்ற எல்லாவற்றையும் நானே சமாளிக்கிறேன்.
பலவிதங்களில் நான் சரியாக தெரிந்து கொள்ள முடியாத தீவு (island) போன்றவன். நீரால் சூழப்பட்ட இத்தீவில் கரைகள் (shores) மட்டுமே சற்று தெரிகிறது. பல்கலைக் கழகங்களிலும் (universities), ஆய்வகங்களிலும் (laboratories), சிறப்புத் திட்டங்களிலும் (projects) விஞ்ஞானிகள் என்னுடைய பல இயக்கங்களை, செயல்முறைகளை CAT (Computer Axial Tomography or X-ray computed tomography) மற்றும் MRI (Magnetic Resonance Imaging) / fMRI (functional Magnetic Resonance Imaging) போன்ற மேம்பட்ட நவீன நரம்பியல் மருத்துவ அளவீட்டு ஸ்கேன் கருவிகள் மூலம் நிகழ்நேர (real-time) வரைபடமாக (mapping) வரைந்து பல வியத்தகு தகவல்களை பெற்று ஆராய்ந்து வருகிறார்கள்.
![]() |
ஹ்யூமன் கனேக்டோம் திட்டம் மூளை மேப்பிங் |
மூளை பற்றிய நிகழ்நேர வரைபட விஞ்ஞானிகள் (real-time mapping scientist) முதன்மை செயல்பாட்டுப் பகுதிகள் (primary processing organs / regions) என்று சிலவற்றை தோராயமாக அடையாளம் கண்டுகொண்டுள்ளார்கள்: பார்வைத் திறன் பின் மூளைப் பகுதிகளிலும், கேட்கும் திறன் பக்க வாட்டில் நடு மூளைப் பகுதிகளிலும், இன்ப மையம் (pleasure center) லிம்பிக் அமைப்பிலும் (limbic system) இனம் கண்டுகொள்ளப் பட்டுள்ளன.
![]() |
‘தி ஹ்யூமன் ஜீனோம் ப்ராஜெக்ட்’ |
உங்கள் உடலில் ஒவ்வொரு அங்கமும் எப்படி உருவாகிறது என்பது உங்களுடைய உயிரணுவில் செய்தியாக பொறித்து வைக்கப்பட்டுள்ளது. குரோமோசோம் என்னும் மிக நீண்ட கூட்டணுவின் கட்டமைப்பில் அந்த ரகசியம் குறியீடாகப் பொறித்து வைக்கப்பட்டுள்ளது. இதை விஞ்ஞானிகள் ஓரளக்குப் படித்து விட்டார்கள். இது ஒரு சிறு தொடக்கம் தான்.
இதனால் என்ன பயன். பயன்கள் பல. உங்களுக்கு நோய்கள் வராமல் தடுப்பது முதல் பயன். என்றாலும் உங்களைப் பற்றி, உங்கள் நோய் பற்றி பி.பி., சுகர், ஹார்ட் அட்டாக் எல்லாம், உங்கள் குழந்தையின் செக்ஸ் பற்றி, உங்கள் மரணம் பற்றியெல்லாம் முன்பே தெரிந்துவிட்டால் வாழ்க்கையில் சுவாரசியம் இருக்குமா? தவிர நம் ஸ்பெஷலிஸ்டுகளுக்கு வருமானம் கேள்விக் குறியாகிவிடும் அல்லவா?
நான் உங்கள் நரம்பு மண்டலத்தின் மையமாவேன். ஸ்பைனல் கார்டு என்னும் முதுகுத்தண்டின் தொடர்ச்சியாக நான் அமைந்துள்ளேன். ஒரு நடுத்தர காலிபிளவர் அளவில் வெறும் 1.5 கிலோகிராம் எடையுள்ள என்னை (நல்ல அறிவாற்றல் மிகுந்த மேதையின் மூளை எடை 2.2 கிலோகிராம்) விந்தை நிறைந்த அற்புதமான உறுப்பு என்று புகழ்ந்து தள்ளுகிறீர்கள்.
என்னுடைய இயக்கங்கள் யாவும் ‘மின் வேதியியல்’ (electro Chemical) அடிப்படையில் அமைந்துள்ளன. அனைத்துத் தகவல்களும் மின் சமிக்கைகளாக (Electric signals) மாற்றப்பட்டு நியூரான்கள் மூலம் கடத்தப்படுகிறது. நியூரான்களில் டென்ட்ரைட் (Dendrite) என்னும் பகுதி தகவலைப் பெறும் உள்ளீட்டு (Input) உறுப்பாகும். ஆக்ஸான் (Axon) என்னும் வால் பகுதி, தகவலை வெளியே கடத்தும் வெளியீட்டு (Output) உறுப்பாகும். மொத்த Axons ஆக்ஸான்களையும் (Axons) இணைத்தீர்கள் என்றால் அதன் நீளம் 4.9 மில்லியன் கி.மீட்டர் இருக்கும் என்று ஒரு கணக்கு சொல்கிறது. இது சுமாராக பூமிக்கும் நிலவுக்கும் உள்ள தூரத்தைப் போல் பத்து மடங்கு இருக்குமாம்.
என்னுடைய முக்கிய வேலைகள் மூன்று எனலாம். என் மூலம்:
1. செய்திகளை சமிக்கைகள் வடிவில் மைய நரம்பு மண்டலத்திற்கும் உடலின் பிற புலன்கள் (sensory) சார்ந்த / இயக்கும் சக்தி (motor) சார்ந்த பகுதிகளுக்கும் இடையில் பரிவர்த்தனைகள் செய்துகொள்ளப்படுகிறது.
2 கட்டளைகளை சமிக்கைகள் வடிவில் மைய நரம்பு மண்டலத்திற்கும் உடலின் பிற புலன்கள் (sensory) சார்ந்த / இயக்கும் சக்தி (motor) சார்ந்த பகுதிகளுக்கும் இடையில் பரிவர்த்தனைகள் செய்துகொள்ளப்படுகிறது.
3 செய்திகளை ஒருங்கிணைத்து பாதுகாத்து வைத்து தகவல் தொடர்பு (communication) சார்ந்த நுண்ணறிவுப் பணிகள் நடைபெற உதவுகிறது.
உங்கள் மூளையின் ஆற்றலில் வெறும் 2 சதவீதமே பயன்படுத்தினால் நீங்கள் சாமானிய மனிதர் தான் என்று ஆய்வு முடிவுகள் சொல்கின்றனவாம். உங்கள் மூளையின் ஆற்றலில் வெறும் 5 சதவீதமே பயன்படுத்தினால் உங்களை சமத்து என்று ஒப்புக்கொள்கிறார்கள். 7 சதவீத மூளை ஆற்றலை பயன்படுத்தினால் நீங்கள் ஒரு சாதாரண விஞ்ஞானி என்று கருதிக்கொள்ளலாம். விண்வெளி விஞ்ஞானிகள் 11 சதவீத மூளை ஆற்றலை பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் சொல்லுகின்றன. அது சரி உங்கள் மூளையின் முழு அளவு ஆற்றல் தான் என்ன? உங்களில் யாராவது முழு ஆற்றலையும் பயன்படுதினால்தானே சொல்ல முடியும்!
என் வேலைகளை இடையறாது செய்து வருகிறேன். உங்கள் ஒத்துழைப்பு எனக்கு மிகவும் தேவை:
வழக்கம் போல பல்லவி தான்:
- புகை பிடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் (மூளைக்கு மிக அதிகமாக); மதுப்பழக்கம் வீட்டுக்கும் நாட்டுக்கும் (மூளைக்கும் கூட) கேடு. விட்டுவிடலாமே.
- கோபம், கவலை, விரக்தி, பதட்டம், மனசோர்வு, மன இறுக்கம் (ஸ்ட்ரெஸ்) மன அழுத்தம் (டென்ஷன்), தாழ்வு மனப்பான்மை போன்ற மனக் கோளாறுகளுக்கு இடம் தராமல் எப்பொழுதும் ஆரோக்கியமான மனநிலையை அனுசரியுங்கள்.
- சரிவிகித உணவு அவசியம். வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், பி1 தயமின், பி3 நியாசின், பி6 பைரிடாக்சின், கோலின், வைட்டமின் டி, வைட்டமின் இ, கால்சியம், அயர்ன், அயோடின், மக்னீசியம், சோடியம் நிறைந்த காய்கறிகள், பழங்கள் நிறைந்த சத்தான உணவு உங்களுக்கு அவசியம் தானே.