உங்கள் குழந்தையைத் தெரிந்துகொள்ளுங்கள் 5

நமது மூளையைப் பற்றிய பல அறிவியல் கண்டுபிடிப்புகள் நமக்கு மிகுந்த ஆச்சர்யத்தைத் தருகின்றன. கிறிஸ்து பிறப்பிற்கு முன்பு கிரேக்க இலத்தீனிய தத்துவ ஞானிகள் பலவாறான யூகங்களை வெளிப்படுத்தினார்கள். கி.பி. ஆறு மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளில் மூளைபற்றிய ஆய்வுகள் மந்த கதியில் நடந்தன. பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஆய்வுகள் துரித கதியில் நிகழ்ந்தன. இருபதாம் நூற்றாண்டு நவீன மருத்துவம் கம்ப்யூட்டர் நுட்பங்களை உள்ளடக்கிய பலகருவிகளைப் பயன்படுத்தி வாழும் மூளையின் செயல்பாடுகள் கண்டறியப்பட்டன.    மேலை நாடுகளில் பல ஆராய்சி நிறுவனங்களில் , பல்கலைக்கழகங்களில், ஆய்வுத் திட்டங்களில்  நடைபெற்ற மூளை ஆராய்சியில் பல சிக்கலான கேள்விகளுக்கு விடை கிடைத்துள்ளன.  இப்பதிவில் நமது மூளையைப்பற்றி கடந்த காலத்தில் மேற்கொண்ட சுவையான ஆய்வுகள் பற்றிக் காண்போமா?

நரம்பியல் அறிவியல் (Neuro science), உளவியல் (Psychology), கற்பிக்கும் கலை (pedagogy): காலவரிசை / மைல்கல் நிகழ்வுகள்
mbe-science-as-a-multidisciplinary-field

Source: Interpretation of Tokuhama-Espinosa’s transdisciplinary fieldby Nakagawa, (2008), redrawn by Bramwell 2010.

menssanamonogr_2011_9_1_6_77412_f9

MSM Mens Sana Monographs

‘தேவையற்ற சதைப் பிண்டம்’ இது  Braegen ‘பிரேன்’ என்ற லத்தீன் சொல்லின் பொருள். உங்களுக்கு தெரிந்த (‘brain’) பிரைன் ஆங்கில வார்த்தையின் வேர்ச்சொல் பிரேன் என்ற லத்தீன் வார்த்தையாகும். லத்தீனியர்கள்  மூளையை தேவையற்ற சதைப்பிண்டம் என்று நம்பி வந்துள்ளனர். சீன மொழியில் கூட மூளை என்ற வார்தைக்கினையான சீனச்சொல் இல்லை.  
அரிஸ்டாட்டில்

கி.மு. 350 வரலாற்றுக்கு முந்திய காலத்தில்  கிரேக்க சிந்தனையாளர்கள் உயிர் மற்றும் ஆன்மா பற்றி நிறைய சிந்தித்தார்கள்.  கிரேக்க  தத்துவங்களின் அடிப்படையில் ஆன்மா உருவமற்ற ஒன்று என்றும் அது அழிவில்லாதது என்றும் விளக்கினார்கள். கிரேக்கர்கள் உயிருடன் இருப்பதை ஆன்மாவுடன் இருப்பதாக நம்பினார்கள். கி.மு. 350இல் அரிஸ்டாட்டில் ஆன்மாவின் இயல்புகள் (டி அனிமா) (Latin, De anima) என்ற தலைப்பில் உயிர் மற்றும் ஆன்மா பற்றி  ஒரு தனிப் புத்தகமே எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தை அரிஸ்டாட்டில் எவ்வாறு தொடங்குகிறார் தெரியுமா?  ”உலகில் இதுவரை கேட்கப் பட்ட கேள்விகளிலேயே மிகவும் கடினமானது உயிர்/ஆன்மா என்றால் என்ன என்ற கேள்விதான்” என்று தொடங்குகிறார். என்றாலும் உடல் இல்லாமல் ஆன்மாவால் இயங்க முடியும் என்று பிளாட்டோ தெரிவித்த கருத்தை அரிஸ்டாட்டில் ஏற்கவில்லை. எனவே உளவியலின் முதல் நூல் அரிஸ்டாட்டிலால் எழுதப்பட்ட De Anima  ‘ஆன்மாவின் இயல்பு’ என்பதாகும்.    

மனித மூளை பற்றி முதன் முதலில் ஆராய்ந்தவர் அரிஸ்டாட்டில். அவர் மூளை பற்றி கூறுகையில் ‘இதயம் செலுத்தும் இரத்தத்தை குளிர்விக்கும் வேலையையே மூளை செய்கிறது’ என்று நம்பினார்.    

கி.பி. முதலாம் நூற்றாண்டு அலெக்சான்றியன், கி.பி. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த மருத்துவர், ‘மனித எண்ணமானது இதயத்தை விட மூளையாலேயே கட்டுபடுத்தப்படுகிறது’ என்று நம்பினார்

கேலன் (Galen) (120-200 AD)
மருத்துவ அறிஞர்களின் வரிசையில் முன்னணி இடம் வகித்த கேலன் (Galen) என்ற கிரேக்க அறிஞர் மருத்துவ அறிவியல், உடற்கூறியல் (anatomy) ஆகிய துறைகளில் அரும்பணியாற்றியவர். மனிதக் குரங்குகள் மற்றும் சில விலங்குகளைத் தமது ஆய்வுக்கு உடற்கூறியல் ஆய்வில் ஈடுபட்ட முதல் ஆய்வாளர்.இவர் ‘எல்லா நரம்புகளும் மூளைக்குத் தண்டுவடம் (spinal cord) வழியே செய்திகளைத் தெரிவிக்கின்றன’ என்றார்.
லியானார்டோ டாவின்சி
கிறித்துவமத வழக்கப்படி இறந்த உடலைத் தோண்டுவதும், அதுபற்றி ஆய்வதும் கொடூர குற்றம் ஆகும். அப்படி தடையை மீறி செய்தால் மரண தண்டனை என்ற நடைமுறை பதினாறாம் நூற்றாண்டில் மேலை நாடுகளில் கடைபிடிக்கப்பட்ட காலத்தில், எடின்பரோ நகரில் லியானார்டோ டாவின்சி (1452 – 1519 A.D.) மனித உடல் பற்றி மிகவும் ரகசியமாக ஆராய்ந்து வந்தார். மத நெருக்கடிகளால் இவர் தனது ஆராய்ச்சியை தொடர  இயலவில்லை.  இரு திருடர்கள் உதவியால் ஒரு பிணத்தைத் திருடி மண்டையோட்டின் உட்பகுதியை பிளந்து பார்த்தபோது அவரது இடப்புற மூளை அனைத்தும் சிதைந்து காணப்பட்டது. பிணத்தின் பெயர், முகவரி, அவர் எந்த வியாதிக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்ற தகவல்களை ஒப்பிட்டபோது அவருக்கு வலப்புறப் பக்கவாத நோய் இருந்ததைக் கண்டு டாவின்சி வியப்படைந்தார். உலகில் மனித மூளையின் செயல்பாடு குறித்து மேற்கொள்ளப்பட்டு  வெளியான முதல் ஆய்வு இது. தொடர்ந்து உடலின் இயக்கத்திற்கும், மூளைக்கும் பெரும் தொடர்பு உள்ளது கண்டு மேலை நாட்டு மருத்துவர்கள் மூளையின் செயல்பாடு பற்றிய முழு ஆராய்ச்சியில்  இறங்கினர்.

1536 நிக்கொல மாஸ்ஸா (Nicolo Massa) என்பவர் ஸெரிப்ரோ ஸ்பைனல் திரவம் (cerebro spinal fluid) பற்றி விவரித்தார்.

1543 அன்றியாஸ் வெஸலியஸ் (Andreas Vesalius) என்பவர் பினியல் சுரப்பி (pineal gland) பற்றி விளக்கினார்

1573 கான்ஸ்டான்சோ வரோலியோ (Constanzo Varolio) என்பவர் போன்ஸ் (pons) என்னும் உறுப்புக்குப் பெயர் சூட்டினார். இவர் தான் மனித மூளையை முதன் முதலில் அதன் அடிப்பகுதியிலிருந்து வெட்டி எடுத்தவராவார்.

1586 ஏ பிக்கோலோமினி என்பவர் கார்டெக்ஸ் மற்றும் வொய்ட் மேட்டர் (வெள்ளை வஸ்து) ஆகிய இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டறிந்தார்.

1649 ரெனி டெஸ்கார்ட்டிஸ் (Rene Descartes)  என்பவர் பினால் சுரப்பி (pineal gland) உடல் மற்றும் உள்ளத்தின் கட்டுப்பாட்டு மையம் (control center) என்றார்

1664 தாமஸ் வில்லிஸ், கிறிஸ்டோபர் ரென் படங்களுடன்,  ஸெரிப்ரி அனாட்டமி என்ற நூலை வெளியிட்டார். மூளையின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை விளக்கிய புத்தகம் இது.

1681 தாமஸ் வில்லிஸ் ந்யூராலாஜி (நரம்பியல்) என்ற சொல்லாக்கத்தை முதலில் பயன்படுத்தினார்

1749 டேவிட் ஹார்ட்லி (David Hartley) என்பவர் சைக்காலஜி (psychology) என்ற சொல்லாக்கத்தை தாம் எழுதிய Observations of Man என்ற ஆங்கில நூலில் முதலில் பயன்படுத்தினார்.

சைகாலஜி என்ற வார்த்தைக்கு சரியான மொழிபெயர்ப்பு என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? மனிதனின் ஆன்மா அல்லது ஆவியின் இயல்பு மற்றும் செயல்பாடுகள் பற்றி விளக்கும் அறிவியல் என்பதாகும். எனவே உளவியல் என்பது ஆன்மாவின் பண்புகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்யும் பிரிவாகவே முதலில் தோன்றியது.  ஆதிமனிதன் தன் உடலுக்குள் ஆன்மா என்னும் உருவமற்ற ஸ்தூலப்பொருள் இருப்பதாக நம்பினான். இந்த ஆன்மாதான் மனித உடலை இயக்குகின்றது என்ற முடிவில் திடமாயிருந்தான்.

1760 அர்னி சார்லஸ் லாரி (Arne-Charles Lorry) என்பவர் ஸெரிபெல்லதில் (cerebellum) ஏற்படும் சேதம் (damage) மோட்டார் (இயக்கும் சக்தி) ஒருங்கிணைப்பைப் (motor coordination) பாதிக்கும். என்பதை செயல்விளக்கம் செய்தார்.

1786 உளவியல் என்பது ஆன்மா பற்றியது அல்ல என்றும் இது  மனது பற்றியது என்றும் கூறியவர் இம்மானுவேல் கான்ட் Immanuel Kant (1724-1804) என்ற ஜெர்மானிய தத்துவ மேதை ஆவார்.

1791 லூகி கால்வானி (1737 – 1798 A.D.) என்னும் இத்தாலிய விஞ்ஞானி போலக்னா பல்கலைக்கழகத்தில் தவளையைப்  பயன்படுத்தி சோதனைகளை மேற்கொண்டார். தவளையின் கால்களை கூறிய கத்தியால் வெட்டியபோது விலங்குகளின் நரம்புகளிலும் தசைகளிலும் மின்சார தூண்டல்கள் இருக்கிறது என்று கண்டார்.

1808 பிரான்ஸ் ஜோசஃப் கால்  (1758 -1828 A.D.) என்ற ஜெர்மன் நரம்பு உடற்கூறியலாளர் மற்றும் அமைப்பியலாளார் (phrenologist) குறிப்பிட்ட மூளைப் பகுதிகள் குறிப்பிட்ட செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகின்றன என்று கண்டறிந்தார். க்ரே மேட்டர் என்னும் சாம்பல் வஸ்து ந்யூரான்களாலும் வொய்ட் மேட்டர் என்னும் வெள்ளை வஸ்து நரம்பு இழைகள் என்னும் ஆக்ஸான்ககளாலும் அமைந்துள்ளன என்றும் கண்டறிந்தார்.

1844 ராபர்ட் ரிமார்க் என்பவர் ஆறடுக்கு கார்ட்டெக்ஸ் (6 layered cortex) பற்றி விளக்கம் கொடுத்தார்

1853 வில்லியம் பெஞ்சமின் கார்பெண்டர் (William Benjamin Carpenter) என்பவர் தலாமஸ் (thalamus) என்ற உணர்ச்சி மண்டல முடிச்சு (sensory ganglion) நனவு நிலையின் அமைவிடம் (seat of consciousness) என்று விளக்கினார்.

1861 பால் ப்ரோகா (Paul Broca) (1824 – 1880) என்ற பிரெஞ்சு மருத்துவர் மனிதனின்முன் மூளையின் இடது பக்க மடல் (left frontal lobe) மொழி மேம்பாட்டில் ( language development) மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்று கண்டறிந்தார்.

1874 கார்ல் வெர்நிக்கி (Carl Wernicke) (1848 – 1905)) என்ற ஜெர்மானிய மருத்துவர் மனிதனின்முன் மூளையில் (frontal lobe) குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் சேதம் (damage) மொழியினைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் பேசும் திறன்களைப் பாதிக்கிறது என்று விவரித்தார்.

1879 வில்ஹெம் ஊண்ட் (Wilhelm Wundt) (1832-1920) என்ற ஜெர்மானிய உளவியல் அறிஞர் தத்துவம் (philosophy), உடற்கூறியலிலிருந்து (biology) உளவியலை (psychology) தனியே பிரித்து அதன் கோட்பாடுகளை (theories) சிறப்பாக நிறுவினார். கட்டமைப்பியல் (Structuralism or the analysis of the basic elements that constitute the mind) குறித்த இவருடைய முதல் கோட்பாடு சிறப்புடையது. நடத்தையியலில் (behaviorism)) பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். இவைதான் இன்றளவும் உளவியல் மருத்துவ சிகிச்சையில் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஜெர்மனியில் முதல் உளவியல் பரிசோதனைக் கூடத்தை (first formal laboratory of Psychology) நிறுவியவரும் இவரே. இவர் சோதனை உளவியலின் தந்தை (“father of experimental psychology”) என்று போற்றப்படுகிறார். 

1891 பேராசிரியர் வில்ஹெம் ஃவான் வால்டேயர் ஹார்ட்ஸ் (1836 – 1921 A.D.) என்னும் உடற்கூறியல் மற்றும் திசுவியலாளர் குரோமோசோம் என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தினார்.  ந்யூரான் என்ற வார்த்தையும் முதன்முதலில் இவரால் பயன்படுத்தப்பட்டது.

1896 – 1900 உளவியல் என்பது மனிதனின் நனவற்ற நிலையே (உள்மனம்) (unconscious mind) எனக் கூறியவர் – சிக்மண்ட் பிராய்டு (Sigmund Freud – 1856 – 1939) என்ற ஆஸ்திரிய உளநோய் மருத்துவர்.  சிக்மன்ட் பிராய்டின் முக்கிய கண்டுபிடிப்பு ‘இயக்க உளவியல்’ ( Dynamic Psychology) ஆகும். உளப்பகுப்புக் கொள்கை என்பது நனவற்ற மனதில் ஒரு மனிதனால் அறிய இயலாத பல மனவெழுச்சிகளும், எண்ணங்களும்,  சிக்கல்களும், நோக்கங்களுமே உள்ளன. இந்த உணர்வுகள், முன்னால் நனவு மனநிலையிலிருந்து பின்பு நனவிலி மனதுக்குள் நசுக்கப்பட்டவையாகும். நனவிலி மனத்துள்ளே காணப்படும் ஊக்கிகளை சிக்மண்ட் ப்ராய்ட்  பாலுணர்ச்சியுடன்  தொடர்புபடுத்தியுள்ளார்.

1897 இவான் பெட்ரோவிக் பாவ்லவ் – – Ivan Petrovich Pavlov (1849 – 1936) என்ற ருஷ்ய உளவியல் அறிஞர் ‘சிறப்பு ஒருமைப்படுத்துதல்’ (classical conditioning), ‘ஊக்கப்படுத்துதல்’ (transmarginal inhibition). ‘நடத்தை மாறுபாடுகளை சரி செய்தல்’ (behavior modification) போன்ற கொள்கைகளை வகுத்தமைக்காகப் போற்றப்படுகிறார்.  1904 ஆண்டில் மருத்துவத்திற்கான நோபல் பரிசினை இவர் பெற்றார்.

1897 சார்லஸ் ஷெரிங்க்டன் (1857 – 1952) என்னும் ஆங்கிலேய மருத்துவர் ‘ந்யூரானின் செயல்பாடுகளைக்’ கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றார். ந்யூரான் மற்றும் சிநாப்ஸ் என்ற சொற்களை முதன்முதலில் பயன்படுத்தினார்.

1906 அலாய்ஸ் அல்ஸீமியர் (1864 – 1915) என்னும் ஜெர்மானிய உளவியல் மற்றும் நரம்பு நோயியல் மருத்துவர்  டிமென்ஷியா என்னும் முதுமை மறதி நோயின் நோய்குறியாய்வு நிலைகளைக் (pathological conditions) கண்டறிந்தார். இந்த நோய் இவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

1910 முழுமைக்காட்சிக் கோட்பாடு (‘whole form’ approach) அல்லது கெஸ்டால்ட்  கொள்கை. கேஸ்டால்ட் என்பது  ஒரு ஜெர்மன் சொல் (Berlin School of experimental psychology) உளவியல் அறிஞர் பெயர் அல்ல. மனித நடத்தையின் உண்மை இயல்புகளை அறிய வேண்டுமாயின் , அதனைச் சிறு சிறு  கூறுகளாகப் பகுத்து ஆராயாமல், அந்த நடத்தையை  முழுமையாக உற்று நோக்கி ஆய்வு செய்யும் முறையே  முழுமைக்காட்சிக் கோட்பாடு ஆகும்.

1910 மாக்ஸ் வெர்தீமியர் (Max Wertheimer) (1880 – 1943) செக்கொலோவாக்கிய உளவியலறிஞர். பிராங்க்பர்ட்டில் வுல்ப்காங் கோலார் (Wolfgang Kohler) மற்றும் குர்ட் கோப்க்கா (Kurt Koffka) ஆகியோருடன் இணைந்து கெஸ்டால்ட் என்ற கொள்கையை நிறுவினார்.

1913 உளவியல் என்பது மன அறிவியல் (Science of Mind) அல்ல என்றும் இது “நனவு நிலை” (consciousness) பற்றியது என்றும்  வலியுறுத்தியவர் அமெரிக்க உளவியல் ஞானியும் நடத்தையியல் துறையின்  (psychological school of behaviorism)  பிதாமகருமான ஜான் பி. வாட்சன்  (John  Broadus. Watson)      (1878 – 1958) ஆவார். “உளவியல்: ஒரு நடத்தையியலாளரின் பார்வை,” (“Psychology as the Behaviorist Views It”- sometimes called “The Behaviorist Manifesto”) என்ற கட்டுரையை 1913இல் வெளியிட்டார். மனிதனது வெளிப்படையான, புறத்திலிருந்து பிறரால் பார்த்து ஆராயக்கூடிய நடத்தைக் கோலங்களே நடத்தைக் கொள்கையின் அடிப்படை. மனித நடத்தையின் அடிப்படையாய் அமைவன மறிவினை போன்ற இயற்கையான தூண்டல் – துலங்கல் தொடர்புகள் தான். நாளடைவில் இத்தொடர்புகள்  கற்றல்   காரணமாக பல்வேறு சிக்கலான மாறுதல்களையடைந்து முதிர்ச்சி பெற்ற மனிதனிடம் காணப்படும் பலதரப்பட்ட நடத்தைக் கோலங்களாகப்  பரிணமிக்கின்றன. ‘மனம்,’ ‘உள்ளம்,’ ‘நனவு நிலை’ போன்ற பரிசோதனைக்கு உட்படுத்த இயலாத உளவியல் கொள்கைகளில் நடத்தைக் கொள்கையினருக்கு நம்பிக்கையில்லை.

1913 கார்ல் குஸ்டாவ் யுங் (1875 – 1961) என்ற சுவிஸ் உளவியல் நிபுணர் மற்றும் மனநல மருத்துவர்.பகுப்பாய்வு உளவியலை (analytic psychology) நிறுவினார். இவர் அயல்வய நோக்கினர் (extravert) மற்றும் அகமுக நோக்கினர் (introvert) போன்ற ஆளுமைத் தன்மைகளையும், மூலப்பிரதி (archetypes), கூட்டு மயக்கம் (collective unconsciousness) போன்ற கொள்கைகளையும்  முன்மொழிந்தது மட்டுமின்றி பேணிக் காக்கவும் செய்தார்.

1932 உளவியல் என்பது மனிதனின் நடத்தை, நடத்தையின் காரணங்கள், நிபந்தனைகள் ஆகியவற்றைப் பற்றிப் படிப்பதாகும் எனக் கூறியவர் – வில்லியம் மக்டூகல் (William McDougall) (1871 – 1938).  மனிதனின் செயல்கள் அனைத்தும் ஒரு இலக்கினை நோக்கிச் செயல்படுகிறது என்று கூறும் கொள்கை – ஹார்மிக் உளவியல் கொள்கை. (Hormic psychology).

1932 ஜீன் பியாஜெட்  (Jean Piaget 1896-1980) என்ற ஸ்விஸ் நாட்டு உளவியல் நிபுணர் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியானது பல நிலைகளில் நிகழ்கிறது என்று கருதினார். படிப்படியான இந்த வளர்ச்சி நிலைகளையும் அதற்கேயுரித்தான நடத்தை மாற்றங்களையும் குறிப்பிட்ட   நான்கு  நிலைகளாக்கி தந்திருக்கிறார்:

1. புலன் இயக்க நிலை (Sensory motor stage) (பிறப்பு முதல் 24 மாதம் வரை)
2. செயலுக்கு முற்பட்டநிலை (Pre-operational stage) (2 வருடம் முதல் 7 வருடம் வரை)
3. புலனீடான செயல் நிலை (Concrete operational stage) (7 வருடம் முதல் 12 வருடம் வரை)
4. முறையான செயல் நிலை (Formal operational stage) (12 வருடம் முதல் 18 வருடம் வரை)

பியாஜெட்டின் இந்தப் பாகுபாடு குழந்தையின் அறிதிறன் வளர்ச்சி மற்றும் புறச்சூழல் ஆகியவற்றை மட்டும்தான் தீவிரமாக கணக்கில் எடுத்துக் கொள்கிறது.

1947 மார்க் ரோஸன்வ்ச் (Mark R. Rosenzweig) (1922 – 2009) என்ற பெர்க்லி நகரைச் சேர்ந்த விஞ்ஞானி ஏணிகள், சக்கரங்கள் போன்ற பொம்மைகளை எலிகளின் சுற்றுப்புறத்தில் வைத்து அறுபதுகளில் ஆராய்ந்த போது  இவற்றின் மூளையில் ஏற்பட்ட பற்பல மாற்றங்களைக் கண்டறிந்தார்.   நல்ல சுற்றுப்புறத்தில் வாழும் எலிகள் நல்ல மூளை வளர்ச்சி அடைந்ததை சாதாரண சுற்றுப்புறத்தில் வளர்ந்த எலிகளுடன் ஒப்பிட்டு நிறுவினார்.

1948 பி.எஃப்.ஸ்கின்னர் என்கிற அமெரிக்க நடத்தையியல் உளவியல் வல்லுநர் 1948ஆம் ஆண்டு நடத்திய வரலாற்றுப் புகழ் மிக்க ஆய்வின் மூலம் புறாக்களுக்கு மூடப்பழக்கங்கள் இருப்பதாகக் காட்டினார்.

1949 டொனால்ட் ஹெப் (1904 – 1985) என்ற கனடாவின் உளவியலாளர் உள்ளம் (mind) மற்றும் மூளையைத் (brain) தொடர்புபடுத்தி கல்வி முறைமைகளை (educational methods) ஆராய்ந்தார். ஹெப்பியன் கற்றல் விதிகள் (Hebbian synapse), ஹெப்பியன் சினாப்ஸ் போன்றவை இவர் பெயரால் பிரபலம் அடைந்தன.

1950 எரிக் எரிக்சன் (Erik Erikson) (1902-1994) என்ற ஜெர்மனி உளவியல் அறிஞர் (developmental psychologist) உளவியல் மேம்பாட்டின் பல்வேறு நிலைகள் (theory on psycho-social development of human beings) குறித்த ஆய்வினை மேற்கொண்டார். இனம் காணலில் உள்ள பிரச்சினை குறித்து ஆய்வினை மேற்கொண்டார்.

1954 ஆப்ரஹாம் மாஸ்லோ (Abraham Maslow) (1908 – 1970) என்ற அமெரிக்க உளவியலாளர் தேவை படியமைப்பு கோட்பாடு (Maslow’s hierarchy of needs) என்னும் ஐந்து படிகள் கொண்ட உளவியல் சார் கோட்பாட்டை அறிமுகப்படுத்தினார்.  தனது கொள்கையை ஒரு பிரமிட் படமாக மாஸ்லோ வரைந்தார்.

1957 ப்ரெண்டா மில்னர் கனடாவின் நரம்பியல் உளவியலாளர். இவருடைய ஹெச்.எம் என்ற நோயாளி ஒரு அறுவை சிகிச்சைக்குப் பின் குறுகிய கால நினைவாற்றலை நீண்ட கால நினைவாற்றலாக மாற்றுவதற்குச் சிரமப்பட்டாராம். இவர் இது பற்றி மேற்கொண்ட ஆய்வில் மனித மூளை பல நினைவாக அமைப்புகளைக் கொண்டுள்ளது என்றும் இவை மோட்டார் திறன் மற்றும் மொழி போன்ற பலதரப்பட்ட செயல்பாடுகளைக் கண்காணிக்கின்றன என்பதை செயல்விளக்கம் மூலம் நிறுவினார்.

1970s பாசிட்றான் எமிசன் டோமோக்ராஃபி (Positron Emision Tomography (PET) மூளையின் செயல்பாடுகளைப் படம்வரையும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது.

1983 ஹோவர்டு கார்ட்னர்  என்னும் அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் மற்றும் மேம்பாட்டு உளவிலாளர் மற்றும் கல்வியாளர் தான் 1983ல் எழுதிய, ‘பிரேம்ஸ் ஆப் மைண்ட்: தி தியரி ஆப் மல்டிபிள் இன்டெலிஜென்சஸ்’ என்ற புத்தகத்தில், மனிதனின் அறிவு ஏழு வகையானது என்ற கொள்கையை  முன்வைத்தார். பின்னர், அவரே அதை மேலும் மேலும் பிரித்து ஆராய்ந்து இறுதியாக வந்த, ‘பிரேம்ஸ் ஆப் மைண்ட்’ பதிப்பில், ஒன்பது வகை அறிவுகள் இருப்பதாக வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார்.  ‘இந்த ஒன்பது வகை அறிவுகள், திறன்கள், எல்லா மனிதர்களுக்குள்ளும் உண்டு. சிலருக்கு அதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் இருக்கலாம். எனவே ஒருவருக்கு இன்னது தான் வரும்; இன்னது வராது என்று கட்டம் கட்டுவதற்காக, யாரும் தன் வரையறையை பயன்படுத்தக் கூடாது’ என்பது தான் வைத்த வேண்டுகோள்.

1986 ஆர்.பி என்னும் நோயாளி மூலம் மனித நினைவகத்துக்கு (human memory) ஹிப்போகாம்பாஸின் (Hippocampus) முக்கியத்துவம் நிறுவப்பட்டது.

1990 செகி ஒகாவா மற்றும் சகாக்கள் மேக்னடிக் ரெசோனன்ஸ் இமேஜிங் (காந்த ஒத்ததிர்வு படமெடுத்தல்) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார்கள்.

Reference:

  1. Why Mind, Brain, and Education Science is the “New” Brain-Based Education. Tracey Tokuhama-Espinosa. In John Hopkins School of Education.

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in உளவியல், கற்பிக்கும் கலை, நரம்பியல், மருத்துவம் and tagged , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.