கம்பர் இயற்றிய ஏரெழுபது: வேளாண் தொழிலின் சிறப்பு

கம்பர் கவிச்சிறப்பு தமிழிலக்கிய வரலாற்றில் தலை சிறந்ததாக அறிஞர்களால் போற்றப்படுகிறது. ஏர் எழுபது. ஏரெழுபது என்பது, வேளாண்மை தொழிலின் சிறப்புப் பற்றிக் கம்பர் எழுதிய நூலாகும். 

“அம் புவியில் மக்கள் அமுதம் அருந்த வைத்த கம்பர் கவியே கவி”  –  கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை
வேளாண்மை என்றாலே விவசாயம், என்றும் வேளாளர் என்றால் விவசாயி என்றும் பொருள்படுகின்ற நிலைமை கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றிவிட்டது. ஏர்க் கலப்பை, வேளாளர் சாதிக் குழுக்களின் அடையாளச் சின்னமாக ஏற்கப்பட்டு, பொதுப் பிரக்ஞையிலும் பதிந்துவிட்டது. சித்திரமேழிப் பெரியநாடு என்ற வேளாளர் தலைமையிலமைந்த சமூகவியல் – அரசியல் நிறுவனத்தின் எழுச்சி இந்தப் பின்னணியில் நோக்குதற்குரியது. கம்பர் எழுதியதாக நம்பப்படும் ‘ஏர் எழுபது’ வேளாண்மையை அடித்தளமாகக்கொண்ட வேளாளர் சாதிப் பெருமையைச் சிறப்பிக்கும் இலக்கியமே. அப்படியிருக்க, கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரையிலும் காருகவினை எனப்பட்ட நெசவுத் தொழில், வேளாளர் தொழில்களுள் ஒன்றாக நிகண்டுகளில் குறிப்பிடப்படுவதிலிருந்து, விவசாயத் தொழில்புரிவோர் மட்டுமின்றிச் சாலியர், கைக்கோளர் முதலிய சாதியினரும் வேளாளர்களாகவே கருதப்பட்டு வந்தனர் எனத் தெரிகிறது. சங்க இலக்கியங்களில் ஓரிரு இடங்களில் காணப்படுகிற, “ஆதரவற்ற பெண்டிர் தமது சுயமுயற்சியால் நூற்ற நூல்” (ஆளில் பெண்டிர் தாளில் தந்த நுணங்கு நூண் பனுவல் – நற்றிணை 335), “பருத்திப் பெண்டின் பனுவல்” (புறம். 125) போன்ற குறிப்புகளாலும், இலங்கை அரசி யக்ஷிகுவேணியே நெசவைக் கற்பித்தவள் எனக் குறிப்பிடும் இலங்கை வரலாற்றுத் தொன்மக் குறிப்பினாலும், நெசவாளர்களும் வேளாட்டியரின் மக்களாகவே கருதப்பட்டதில் உள்ள தர்க்கபூர்வ உண்மைமை உய்த்துணரலாம்.  

வேளாளர்களைக் ‘காராளர்’ என்ற பெயரால் நிகண்டுகள் குறிப்பிடுகின்றன.

கம்பர் தஞ்சை மாவட்டத்துத் திருவழுந்தூர் என்னும் ஊரில் பிறந்தவர். இதனைத் தனிப்பாடல் ஒன்று விவரிக்கிறது. கம்பர் என்ற பெயர் பற்றிப் பல்வேறு கதைகள் வழங்குகின்றன. கம்பர் உவச்சர் குலத்தில் (பூசாரிக் குலம்) பிறந்தமையால் பெற்ற பெயர் என்று கூறுவர். காளி கோயிலில் பூசை செய்யும் மரபினர் என்று உவச்சர்கள் சுட்டப்பெறுகின்றனர். கம்பர் குழந்தையாகக் காளி கோயில் கம்பத்தின் அருகே கிடந்தமையால் இப்பெயர் பெற்றார் என்பர். கம்பங் கொல்லையைக் காத்து வந்தமையால் கம்பர் என்று அழைக்கப்பட்டார் என்றும் கூறுவர். காஞ்சிபுரத்தில் உள்ள இறைவனாகிய ஏகம்பன் தேவாரப் பதிகங்களில் ‘கம்பன்’ என்றே சுட்டப்படுகிறான். அந்தப் பெயர் இவருக்கும் இடப்பட்டது என்பர்.  வடமொழியில் வான்மீகி எழுதிய இராமாயணத்தைக் கம்பர் தமிழில் இராமகாதையாக இயற்றினார். அவர்தம் நூல்களுள் இதுவே தலைசிறந்த நூல் ஆகும். இதுவன்றி வேறு சில நூல்களையும் எழுதியதாகக் கம்பர் பற்றிய கதைகள் கூறுகின்றன. கம்பர் உழவுத் தொழிலையும் உழவரையும் பாராட்டி எழுதிய நூல்கள் ஏர் எழுபது, திருக்கை வழக்கம் என்பன.

கம்பன் கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். சரஸ்வதி அந்தாதியும் ஏரெழுபதும் 15 அல்லது 16ஆம் நூற்றாண்டுக்கு உரியனவாகத்தான் இருக்க இயலும். பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து சரஸ்வதி படிமம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவது குறித்த பழைய நம்பிக்கை, அரச குலத்தவர் அல்லாத வேளாண் மரபு ஆட்சியாளர்கள் கம்பனைத் தமது குருவாகக் கொள்ளுதல் (எடுத்துக்காட்டாகக் கொங்கு வேளாளர்கள் கம்பனுக்கு மாத்து அளித்து அடிமை புகுந்தமை, கம்பனை ஆதரித்த தொண்டை மண்டல வேளாளரான சடையப்ப வள்ளல் குறித்த பழங்கதைகள் போன்றவை) முதலான நிகழ்வுகள் சரஸ்வதி அந்தாதியும், ஏரெழுபதும் கம்பனால் இயற்றப்பட்டவை என்ற ஒரு தோற்றம் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்திருக்கக்கூடும்.

வாழ்த்துகளுடன்,- எஸ். இராமச்சந்திரன், ஆய்வாளர். http://www.jeyamohan.in/35773

வேளாண் குடிகள்தம் சிறப்பு

ஆழித்தேவர் கடலானார் அல்லாத்தேவர் அம்பலத்தார்
ஊழித்தேவர் தாங்கூடி உலகங் காக்க வல்லாரோ
வாழித்தேவர் திருமக்கள் வையம் புரக்கும் பெருக்காளர்
மேழித்தொவர் பெருமைக்கு வேறே தேவர் கூறேனே

வேளாளர் சிறப்பு
 
தொழுங்குலத்திற் பிறந்தாலென் சுடர்முடிமன் னவராகி
எழுங்குலத்திற் பிறந்தாலென் இவர்க்குப்பின் வணிகரெனுஞங
செழுங்குலத்திற் பிறந்தாலென் சிறப்புடைய ரானாலென்
உழுங்குலத்திற் பிறந்தாரே உலகுய்யப் பிறந்தாரே

வேளாளர் புகழ் புலமையின் பெரிது

அழுங்குழவிக் கன்புடைய தாயேபோ லனைத்துயிர்க்கும்
எழுங்கருணைப் பெருக்காளர் எளியரோ யாம்புகழ
உழுங்கெழுவிற் கருவீறி யுலகமுதற் கருவாகச்
செழுங்கமலத் தயனிவரைச் செய்துலகஞ் செய்வானேல்

வேளாண் குலத்திற்கு நிகரில்லை
 
வேதியர்தம் உயர்குலமும் விறல்வேந்தர் பெருங்குலமும்
நீதிவளம் படைத்துடைய நிதிவண்கர் தம்குலமுஞ்
சாதிவளம் படைத்துடைய தாயனைய காராளர்
கோதில்குலந் தனக்குநிக ருண்டாகிற் கூறீரே

உழவின் சிறப்பு
 

அலகிலா மறைவிளங்கும் அந்தணரா குதிவிளங்கும்
பலகலையாந் தொகைவிளங்கும் பாவலர்தம் பாவிளங்கும்
மலர்குலாந் திருவிளங்கும் மழைவிளங்கும் மனுவிளங்கும்
உலகெலாம் ஒளிவிளங்கும் உழவருழும் உழவாலே

வேளாளர் பெறும் பேற்றின் சிறப்பு
 
அரியா தனத்தின் மேலிருந்தே யம்பொற் குடைக்கீ ழரசியற்றும்
பெரியார் பக்கல் பெறும்பேறும் பேறேயல்ல பெருக்காளர்
சொரியா நிற்பச் சிலர் முகந்து தூற்றா நிற்பச் சிலரளந்து
புரியா நிற்பப் பெரும்பேறுக் கதுநே ரொக்கப் போதாதே

நன்மங்கல வாழ்த்து

பார்வாழி நான்மறைநூற் பருணிதரா குதிவாழி
கார்வாழி வளவர்பிரான் காவேரி நதிவாழி
பேர்வாழி பெருக்காளர் பெருஞ்செல்வக் கிளைவாழி
ஏர்வாழி யிசைவாழி யெழுபத்தொன் பதுநாடே

நன்றி: ஏரெழுபது & திருக்கை வழக்கம் ஆசிரியர், கம்பர்: மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்பு திட்டம்

“உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கிறது; அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது; உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர் எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர்; உழவு செய்து அதனால் கிடைத்ததை உண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர்; மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே!” என்று உழவின் பெருமையையும் மேன்மையையும் திருவள்ளுவப் பேராசான் போற்றிக் கூறியிருக்கிறார்.

ஆனால் அதற்கு ஒரு படி மேலே சென்று உலக மக்கள் அனைவருக்கும் முதுகெலும்பாக இருக்கும் உழவுத் தொழிலின் தனிச்சிறப்பை இரு நூல்களின் வாயிலாக எடுத்துக் கூறியுள்ளார் கவிச்சக்ரவர்த்தி கம்பர்.

கம்பர் என்று கூறினாலே “கம்பராமாயணம்” ஒன்றுதானே அனைவருக்கும் நினைவுக்கு வருகிறது. ஆனால் அவர் எழுதிய ஒன்பது நூல்களுள், வேளாளர் மரபைப் போற்றி, பொருளாதாரத்தைப் புகழ்ந்துரைக்கும் அதியற்புதமான இரு நூல்கள்தான்;

 • “ஏர் எழுபது” மற்றும்
 • “திருக்கை வழக்கம்”

கம்பர் பாடியதாகக் கருதப்படும் “ஏர் எழுபது”, வேளாளர் தம் சிறப்பையும், உழவுத் தொழிலின் மாண்பையும் கூறுகிறது.

மற்றது, 59 கண்ணிகளைக் கொண்டு, வெண்டளையால் வந்த கலிவெண்பாவால் பாடப்பட்ட “திருக்கை வழக்கம்” என்ற நூல், வேளாண் பெருமக்களின் கொடை குணத்தைச் சிறப்பிக்கிறது. திருக்குறள் வழிநின்று பாராட்டி, ஏர்த்தொழில் பற்றிய நுட்பமான செய்திகளை விரித்துரைக்கிறது. “ஏர் எழுபதை”ப் பாடியதையொட்டி “திருக்கை வழக்கத்தை”யும் கம்பர் பாடியதாகக் கூறுவர்.

இந்நூல்கள் தோன்றியதற்கான சூழல், படித்து இன்புறத்தக்கது. கம்பர், குலோத்துங்கன் அரசவையில் வீற்றிருந்தபோது ஒருநாள், குலோத்துங்கன் சப்தமிட்டுச் சிரித்துவிட்டான். இதைக் கண்ட கம்பர், “அரசே! எதனால் இப்படிச் சிரித்தீர்கள்? காரணத்தைச் சொன்னால் உங்கள் மகிழ்ச்சியில் நாங்களும் பங்கு பெறலாமே?” என்றார்.

“கம்பரே, நீரும் எமது பிரஜைகளும் எனக்கு அடிமைகள்தானே என்று நினைத்துச் சிரித்தேன்” என்று குலோத்துங்கன் கூறியவுடன் கம்பருக்கு கடும் சினம் எழுந்தது.

“என்ன சொன்னீர்? நானும் உமது அடிமை என்றா கருதுகிறீர்? இது ஒப்பாது.

அரசே! நீவிர் புவிச்சக்ரவர்த்தி, நானோ கவிச்சக்ரவர்த்தி. உமக்கு நான் அடிமையாகேன்?”  என்று கூறி அவையை விட்டு கிளம்ப முயன்றார்.

உடனே குலோத்துங்கன், “கம்பரே! நீவீர் கவிச்சக்ரவர்த்தியாய்த் திகழ்வது எனது சமஸ்தானத்தில்தான். மற்ற தேசத்தில் உமக்கு இத்தகைய பெருமை கிடைக்காது” என்று கூறியதும் கம்பர் மனம் பொறுக்காதவராய்,

“கொல்லிமலைத் தேன்சொரியும் கொற்றவா
நீ முனிந்தால் இல்லையோ எங்கட்கிடம்?”

என்று கூறிக் கொண்டே அணிகலன்களைக் கழற்றிவைத்துவிட்டு வெளியேற நினைத்தார்.

இதைக்கண்ட அரசன், மேலும் பல கடினமான வார்த்தைகளைக் கூறியதைக் கேட்ட கம்பர், “மன்னவனும் நீயோ? வளநாடும் உனதோ?” என்ற பாடலைப் பாடி, அவையைவிட்டு வெளியேறினார்.

அவ்வாறு அவையைவிட்டு வெளியேறிய கம்பர், நீண்ட தூரம் நடந்த களைப்பு. அப்போது அவர் பார்வையில் பட்டது அக்காட்சி. தூரத்தில் பழையது கரைத்த மோரை எடுத்து வந்த மனைவி உழுது கொண்டிருந்த உழவனுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தாள். தாகம், பசி மேலீட்டால் கம்பர் தானும் அங்கு சென்று கையை நீட்டினார். இதைக் கண்ட வேளாளன் வழிப்போக்கனான கம்பருக்கு அந்த மோர்க் குவளையைத் தந்து பசியாறச்செய்தான். மோர் பருகி வயிறு நிரம்பியதும் இந்தக் வேளாளனுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன் என்று கூறி, தன்னால் இயலக்கூடிய கைம்மாறு ஒன்றுதான் உண்டு. அதுதான் கவி. என நினைத்தவர் உடனே,

“செட்டிமக்கள் வாசல் வழி செல்லோமே செக்காரர்
பொட்டி மக்கள் வாசல் வழி போகோமே,
முட்டிபுகும் பார்ப்பார் அகத்தை எட்டிப்பாரோமே
எந்நாளும் காப்பாரே வேளாளர் காண்!”

என்ற கவியொன்றை அப்போதைக்குப் பாடிவிட்டுத் தம் பயணத்தைத் தொடர்ந்தார்.

தனது பசியையும், தாகத்தையும் தீர்த்த வகையை நினைத்தும், தான் குடிக்கப்போன மோரைக் குடிக்காமல் கை நீட்டியவுடன் தனக்கு அப்படியே தந்த அன்பான வேளாளனின் கையின் மகத்துவத்தையும் எண்ணி எண்ணி மனமுருகினார் கம்பர்.

உடனே அவருக்கு ஏற்பட்ட உணர்ச்சி பெருக்கின் வெளிப்பாட்டின் படைப்புதான் “ஏர் எழுபது” என்ற வேளாளர் புகழ்ச்சி நூலாகும். உழவன் மற்றும் உழவுத் தொழிலின் மேன்மையை இதன் மூலம் உலகறியச் செய்து தனது நன்றியைத் தெரிவித்துவிட்டார் கம்பர்.

தவறாமல் மழை பெய்ய நாட்டில் நல்லொழுக்கம் மிக்க வேளாளரது ஏர் நடக்குமாயின் நாட்டில் இயலிசை, நாடகம் நடக்கும். பல்வேறு சிறப்புகள் நடக்கும், படை பலம் குன்றாது, தர்மம் தவறாமல் நடக்கும், உலகில் உயிர்கள் தோன்றும், பசி மக்களை நலிவிக்காது என்று ஏர் நடத்தற் சிறப்பைப் போற்றுவது மட்டுமல்லாமல், காராளர்தம் தொழிற் சிறப்பை மிக அழகாக எடுத்தோதுகிறார். ஏர்த் தொழில் முடி மன்னருக்கும், அருமறை அந்தணருக்கும் மன்னர் பின்னோராம் வணிகருக்கும் உதவவல்ல உயர்வுடையது என்பதே ஏர் எழுபது நூல் முழுவதும் பேசப்படுகிறது.

“கார் நடக்கும் படி நடக்கும் காராளர் தம்முடைய
ஏர் நடக்கும் எனில் புகழ்சால் இயலிசை நாடகம் நடக்கும்
சீர் நடக்கும் திறம் நடக்கும் திருவறத்தின் செயல்நடக்கும்
பார் நடக்கும் படை நடக்கும்; பசி நடக்க மாட்டாதே!” (19)

என்று பாடுகிறார்.

ஏர் உழுவதற்கான உழவுக் கருவிகள் மற்றும் உழவுத்தொழில் பற்றி எழுபது பாடல்கள் இந்நூலில் உள்ளடக்கமாக உள்ளன. இதில் ஏர் கருவியின் உறுப்புகளும், உழவுத் தொழிலும் வரிசைபட கூறப்பட்டுள்ளன. தமிழிலக்கியங்கள் என்றுமே நல்வழியைத்தான் கூறுகின்றன.

கம்பர் காலத்திலும் கலிகாலத்திலும் மட்டுமல்ல எக்காலத்துக்கும் சிறப்புற்று விளங்குவது உழவுத்தொழில் ஒன்றுதான். ஏர்த்தொழிலின் சிறப்பு கூறும் கம்பரது இவ்விரு நூல்களை இன்றளவும் பலர் அறியாததால்தான், குறிப்பாக வேளாளர் தம் பார்வைக்குப் போய்ச் சேராததால், விளைநிலங்கள் நல்ல விளைச்சளைப் பார்க்காமல் நல்ல விலைக்கு விற்கப்பட்டுக் கட்டடங்களாகிப் போகும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

“கம்பரால் இவ்வளவு சிறப்பித்துக் கூறப்படும், நாட்டின் உயிர் நாடியாக விளங்கும் உழவுத்தொழிலை மறந்துவிட்டு நாம் வேறெந்த தொழில் செய்து உயிர்வாழப் போகிறோம்” என்ற கேள்வி “விதை”யை, ஒவ்வொரு விளை நிலக்காரர்களும் தங்களது மனமென்னும் நிலத்தில் “விதை”த்தால்,

“உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்; பழுதுண்டு வேறோர் பணிக்கு” என்ற நல்வழி(12) பாடல் வரிகளை நினைத்து இறுமாந்து இருக்கலாமல்லவா?

இடைமருதூர் கி.மஞ்சுளா

நன்றி: தமிழ்மணி (தினமணி)

 

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in இலக்கியம் and tagged , , , . Bookmark the permalink.

4 Responses to கம்பர் இயற்றிய ஏரெழுபது: வேளாண் தொழிலின் சிறப்பு

 1. தீர்க்கசிபி சொல்கிறார்:

  கம்பரை ஆதரித்தவர் தாெண்டை மன்டல வேளாளர் அல்ல, அவர் காெங்கு வேளாளர், வள்ளல் சடையப்பகவுண்டர் ஆவார் அவர் எங்கள் குலத்தில் ஒன்றான சாத்தந்தை குலத்தை சேர்ந்தவர், மேலும் அவருக்காக கம்பர் எங்களுக்கு பாடிக்காெடுத்த மங்கள வாழ்த்து எங்கள் திருமணத்தில் இன்றும் பாடப்படுகிறது.

  Like

 2. தீர்க்கசிபி சொல்கிறார்:

  காராளர் என்பது வேளான் தாெழில் செய்யும் அனைத்து சாதியையும் குறிப்பதல்ல அது காெங்கு வேளாளரின் தனிப்பெயர்,மேலும் வேளான்மையை குலத்தாெழிலாக காெண்டவர்கள் மட்டுமே
  வேளாளர் ஆக அழைக்கப்பட்டனர்,நெசவு தாெழில் செய்யும் கைக்காேளர் ஒரு பாேதும் வேளாளர் ஆகவில்லை, அவர்கள் உடுத்த உடை காெடுப்பவர்கள் ஆதலால் அவர்களுக்கான மரியாதை குறைவின்றி இருந்தது, ஆனால் அவர்கள் வேளாளர்களாக அழைக்கப்பட்டதில்லை

  Like

 3. தீர்க்கசிபி சொல்கிறார்:

  ஐயா காராளர் என்பது எங்களை குறிக்கும் சாெல் என்பதும், கம்பரின் மங்கள வாழ்த்து எங்கள் திருமணத்தில் பாடப்படுவதுமே இதன் சாட்ச்சி, ஆயினும் தாம் ஆதாரம் கேட்பதில் காரனம் உள்ளதால் இதையும் சாெல்கிரேன், காெங்கு மண்டல சதகம் பாடியது வலசுந்தரக் கவி, அவரை பாடச்செய்தது அதே சடையப்ப வள்ளல் தான்

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.