காவிரி மகா புஷ்கர விழா, 144 ஆண்டுக்குப் பின், காவிரி நதியின் கரையோரப் பகுதிகளில் கடந்த 2017 செப்டம்பர்12ஆம் தேதி அன்று தொடங்கியது. செப்டம்பர் 24 ஆம் தேதி வரை இவ்விழா ஆதி புஷ்காரமாக நடைபெறுகின்றது. மீண்டும் 2017 செப்டம்பர் 25 அன்று தொடங்கி 2017 அக்டோபர் 7 வரை அந்திம புஷ்கரமாகவும் கொண்டப்படுகிறது.
பன்னிரெண்டு புஷ்கர நதிகள்
இந்தியாவில் மொத்தம் பன்னிரெண்டு புஷ்கர நதிகள் உள்ளன. அவை 1.கங்கை, 2.நர்மதை, 3.சரஸ்வதி, 4.யமுனை, 5.கோதாவரி, 6.கிருஷ்ணா, 7.காவிரி, 8.தாமிரபரணி, 9.சிந்து, 10.துங்கபத்திரா, 11.பிரம்மபுத்ரா, 12.பிரணீதாகாவிரி நதி என்பனவாகும். காவிரி நதி இந்தியாவில் உள்ள 12 புஷ்கர நதிகளில் ஒன்றாகும். குருபகவான் எந்த இராசியில் எந்த நதியில் பிரவேசிக்கிறாரோ அந்த இராசிக்குரிய நதியில் புஷ்கரம் நடப்பது வழக்கம்.
புராணக் கதை
புஷ்கர விழாவுக்குப் பின்னால் ஒரு புராணக் கதை உள்ளது1
புஷ்கரம் என்பது பிரம்மனின் கமண்டலத்தில் இருக்கும் புனித நீர். குரு கோள்களில் நன்மை பயக்கும் கோள் ஆவார். உலக மக்கள் நீராடிப் புண்ணியம் அடைவதற்காக அந்த புனித நீரைப் பெற விரும்பினார் குரு. படைப்புக் கடவுள் பிரம்மனை நோக்கி குரு தவமியற்ற, தவ வலிமை கண்ட பிரம்மன் குருவின் முன் தோன்றி “வேண்டும் வரம் யாது?” என்று வினவினார். குரு பிரம்மனிடம், ”எனக்கு தங்களுடைய புஷ்கரம் தான் வேண்டும்” என்று கோரினார். பிரம்மனும் தன் வசமுள்ள புஷ்காரத்தை குருவுக்கு பேருவகையுடன் தர முன் வந்தார். புஷ்காரம் பிரம்மனை விட்டுப் பிரிய மறுத்துவிட்டது. பிரம்மன் குருவுக்கும் புஷ்கரத்திற்கும் ஒரு இணக்கமான உடன்படிக்கையை உண்டாக்கினார். இந்த உடன்படிக்கையின்படி புஷ்கரம் மேஷ ராசி முதல் மீன ராசி வரை 12 ராசிகளிலும் அந்தந்த ராசிக்கு உகந்த புண்ணிய நதிகளில் உறைவது என்று முடிவானது. இதன்படி புஷ்கரம்:
1. மேஷம் ராசியில் (கங்கை நதியிலும்), 2. ரிஷபம் ராசியில் (நர்மதை நதியிலும்), 3.மிதுனம் ராசியில் (சரஸ்வதி நதியிலும்), 4. கடகம் ராசியில் (யமுனை நதியிலும்), 5. சிம்மம் ராசியில் (கோதாவரி நதியிலும்), 6. கன்னி ராசியின் போது (கிருஷ்ணா நதியிலும்), 7. துலாம் ராசியில் (காவிரி நதியில்) ..8. விருச்சிக ராசியில் (தாமிரபரணி ஆற்றிலும்), 9. தனுசு ராசியின் போது (சிந்து நதியிலும்),10. மகரம் ராசியில் (துங்கபத்திரா ஆற்றிலும்), 11. கும்பம் ராசியில் (பிரம்ம(புத்ரா) நதியிலும்), 12. மீனம் ராசியில் (பிரணீதா ஆற்றிலும்) புஷ்காரம் உறைவதாக ஐதீகம்.
காவிரி புஷ்கரம்
காவிரி புஷ்கரம், பன்னிரெண்டு ஆண்டுக்கு ஒரு முறை அதாவது குரு பகவான் கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு பிரவேசிக்கும் சமயம் கொண்டாடப்படுகின்றது. திருக்கணித பஞ்சாங்கப்படி 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 02 ஆம் தேதியன்று நடைபெற்ற குருப்பெயர்ச்சியின் போது குருபகவான் கன்னி இராசியிலிருந்து துலா இராசிக்கு பெயரும் சமயம் வரும் புஷ்காரம் காவிரி மகா புஷ்காரம் என்றழைக்கப்படுகின்றது. 144 வருடங்களுக்கு ஒரு முறை மகா புஷ்காரம் கொண்டாப்படுகிறது. கடந்த காவிரி மகா புஷ்காரம் 1873 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது என்கிறார்கள். காவிரி மகா புஷ்கரம் இனி 2161ஆம் ஆண்டில் கொண்டாடப்படுமாம். ஒருவர் தம் வாழ்நாளில் ஒரு மகா புஷ்காரத்தில் மட்டுமே காவிரியில் புனித நீராட முடியும். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் காவிரி புஷ்காரம் அடுத்த 2029 ஆண்டில் கொண்டாடப்படும். வரும் ஆண்டில் குரு விருச்சிக இராசிக்கு பெயர்ச்சி அடையும்போது விருச்சிக ராசிக்குரிய தாமிரபரணியில் புஷ்கர விழா நடைபெற இருக்கிறது.
துலா மாதத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான பாரதத்தில் ஓடும் நதி தேவதைகள் அனைத்தும் காவிரியில் நீராடி, தங்களிடம் மானிடர்கள் கரைத்துச் சென்ற பாபக்கறைகளைப் போக்கிக் கொள்கின்றது என்று காவிரி மகாத்மியம் என்னும் நூல் கூறுகிறது.
காவிரி புஷ்கரம் நடைபெறும் படித்துறைகள்
கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் காவிரி புஷ்கரம் நடைபெறும் படித்துறைகள் இவை:–
- தலைக்காவேரி (Talakaveri) – (கர்நாடகா)
- பாகமண்டலா ( Bhagamandala) – (கர்நாடகா)
- குஷால் நகர் (Kushalnagar) – (கர்நாடகா)
- ஸ்ரீரங்கப்பட்டினம் (Srirangapatna) – (கர்நாடகா)
- கிருஷ்ணராஜ் சாகர் அணை (Krishna Raj Sagar Dam) – (கர்நாடகா)
- மாண்டியா (Mandya) – (கர்நாடகா)
- ஷிவனசமுத்திரா (Shivanasamudra) – (கர்நாடகா)
- பன்னூர் (Bannur) – (கர்நாடகா)
- திருமாக்குடல் நரசிபுரா (Tirumakudal Narasipura) – (கர்நாடகா)
- தலக்காடு (Talakadu) – (கர்நாடகா)
- முடுகுத்தூர் (Mudukuthore) – (கர்நாடகா)
- கனகபுர் (Kanakapur) – (கர்நாடகா)
- மேட்டூர் (Mettur) – (தமிழ்நாடு)
- பவானி (Bhavani) – (தமிழ்நாடு)
- பள்ளிப்பாளையம்- ஈரோடு (Pallipalayam-Erode) – (தமிழ்நாடு)
- கொடுமுடி (Kodumudi) – (தமிழ்நாடு)
- பரமத்தி வேலூர் (Paramati Velur)- (தமிழ்நாடு)
- ஸ்ரீரங்கம் -திருச்சிராப்பள்ளி (Srirangam Tiruchirappalli)- (தமிழ்நாடு)
- திருவையாறு (Thiruvaiyaru)- (தமிழ்நாடு)
- தஞ்சாவூர் (Thanjavur)- (தமிழ்நாடு)
- சுவாமிமலை (Swamimalai) – (தமிழ்நாடு)
- கும்பகோணம் (Kumbakonam)- (தமிழ்நாடு)
- மயிலாடுதுறை (Mayavaram) – (தமிழ்நாடு)
- மருதூர் அக்ரஹாரம் ( Marudur Agraharam)
- பூம்புகார் (Poompuhar) – (தமிழ்நாடு)
மயிலாடுதுறையில் அமைந்துள்ள துலாக்கட்டம், ஒரு புனித தீர்த்தமாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் இங்கு காவிரி தீர்த்தவாரி நடைபெறுகிறது. பக்தர்கள் இந்த விழாவின் புனிதநீராட ஏதுவாக மேட்டூர் அணையில் இருந்து 10,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. துலாக்கட்டத்தில் மகா புஷ்கர விழாவை முன்னிட்டு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கானோர் புனித நீராடி வருகின்றனர். மகா புஷ்கர விழாவின்போது காவிரியில் நீராடுவது ஜென்ம பாவங்களைப் போக்கும் என்பது ஐதீகம். காவிரி மகா புஷ்கர விழா ஸ்ரீரங்கத்தில் உள்ள அம்மா மண்டபத்திலும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மயிலாடுதுறையின் காவிரி நதி துலாக்கட்டத்தில் அப்படி என்ன சிறப்பு?
புராண காலத்தில் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தின் அருகே கன்ம மகரிஷியை மூன்று அழகான பெண்கள் வணங்கினர். கன்ம மகரிஷி அவர்களை நோக்கி “நீங்கள் யார்?” என்று கேட்டார். அவர்கள் புண்ணிய நதிகளான கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி என்று கூறினார். அவர்கள் மூன்று பேரும் கருத்துப்போய் கோரமாய் இருந்தனர். கன்ம மகரிஷி காரணம் யாது? என்று வினவ, மனிதர்கள் நதியில் கரைத்த பாவங்களே தங்களைக் கருமையாக ஆக்கி விட்டதாகக் கூறினார்கள். கன்ம ரிஷி சொன்ன பரிகாரம் இது: மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நீராடி பரிமள ரங்கநாதர் மற்றும் மாயூரநாதரை வணங்கினால் அவர்கள் பாவங்கள் நீங்கும் என்றார். ரிஷி சொன்னபடி அவர்கள் காவிரியில் நீராடி பாவவிமோசனம் அடைந்தனர்.
இதன் காரணமாகவே மயிலாடுதுறையின் காவிரி நதி துலாக்கட்டத்தில் துலாமாதத்தில் நீராடுதல் புண்ணியம் என்று கருது வலுப்பெற்றது. ஹோமம், திதி தர்ப்பணம், நீத்தார் கடன் செய்தல் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றது. பன்னிரெண்டு நாட்கள் புண்ணிய நீராடல் நடைபெற்றது. காவிரி மகா புஷ்கர விழாவை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை, துலாக்கட்டத்தில் காவிரி மகா புஷ்கரம் விழாவையொட்டி அங்கு காவிரித் தாய் சிலை நிறுவப்பட்டது.
இதனையடுத்து கடந்த 12ஆம் தேதி தொடங்கிய காவிரி மகா புஷ்கர விழா 2017 செப்டம்பர் 24 ஆம் தேதி யுடன் நிறைவடைகிறது. நிறைவு நாளான இன்று, விடையாற்றி உற்சவமும், துவஜா அவரோகணம் நடக்கிறது.