திருப்பதி திருமலை ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை, செப்டம்பர் 23 ஆம் தேதியன்று கருடக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. மீன லக்னத்தில் பிரம்மோற்சவம் கொடி ஏற்றப்படுவது வழக்கம் (துவாஜாரோகணம்). இந்த பிரம்மோற்சவ கொடி ஏற்றமே சகல தேவதைகளையும், அஷ்டதிக் பாலகர்களான பூத, பேரேதா, யக்சா, ராக்ஷச, கந்தர்வ குணத்திற்கு இதன் மூலம் அழைப்பு விடுக்கப்படுகிறது. இந்த அழைப்பை ஏற்று முப்பத்து முக்கோடி தேவதைகள் வந்து சுவாமிக்கு நடைபெறும் பிரம்மோற்சவத்தை காண்பதாக ஐதீகம். புரட்டாசி திருவோணம் ஸ்ரீவெங்கடேசப் பெருமாளின் பிறந்த நட்சத்திரமாக தொன்று தொட்டு கருதப்பட்டு வருகிறது. இந்தத் திருவோணத் தினத்துக்கு முன்பாக ஒன்பது நாட்கள் நடைபெறும் மிகப்பெரிய பிரம்மோற்சவ விழாவின்போது தினந்தோறும் உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமி தேவியர் சமேதராய் அலங்கரிக்கப்பட்ட 16 வாகனங்களில் நான்கு மாட வீதிகளிலும் வீதியுலா வருவார். திருமலையில் ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு பிறப்பு கடவுளான ‘பிரம்மன்’ தானே முன்னின்று இவ்விழாவை நடத்தி வைத்தார். எனவே பிரம்மனால் நடத்தப்பட்ட உற்சவம், பிரம்மோற்சவம் என்று அழைக்கப்படுகிறது.
தினசரி ஊர்வல நிகழ்வுகள் கீழ்க்கண்ட பட்டியலில் தரப்பட்டுள்ளது.
தேதி | காலை | மாலை | இரவு |
23 செப்டம்பர் 2017 | கொடியேற்றம் | பெரிய சேஷவாகனம் | |
24 செப்டம்பர் 2017 | சிறிய சேஷவாகனம் | அன்னப்பறவை | |
25 செப்டம்பர் 2017 | சிம்ம வாகனம் | முத்துப்பந்தல் | |
26 செப்டம்பர் 2017 | கல்ப விருட்ச வாகனம் | சர்வபூபாள வாகனம் | |
27 செப்டம்பர் 2017 | மோகினி அவதாரம் | கருடசேவை | |
28 செப்டம்பர் 2017 | அனுமந்த வாகனம் | தங்கரதம் | யானைவாகனம் |
29 செப்டம்பர் 2017 | சூரியபிரபை | சந்திரபிரபை | |
30 செப்டம்பர் 2017 | தேரோட்டம் | குதிரை வாகனம் | |
01 அக்டோபர் 2017 | தீர்த்தவாரி | கொடியிறக்கம் | தங்கப்பல்லக்கு |
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை செப்டம்பர் 27-ம் தேதியன்றும், தேரோட்டம் 30-ம் தேதியன்றும் நடைபெறவிருக்கின்றன. கருடசேவையன்று பக்தர்கள் மிக அதிக அளவில் திருமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக 3,000 பேருந்துகள் இயக்கப்படுகிறது. விழாக்காலம் முழுதும் 24 மணிநேரமும் மலைப் பாதை திறந்திருக்கும். இந்த ஆண்டு பிரம்மோற்சவ சேவையின்போது புதிதாக வடிவமைக்கப்பட்ட சர்வ பூபாலவாகனம் வீதி உலா வரும். 8.89 கிலோ தங்கம், 355 கிலோ செம்பு மற்றும் 650 கிலோ மரம் என சுமார் 1020 எடையில் சுமார் எட்டுக்கோடி ரூபாய் செலவில் சர்வ பூபாலவாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.
திருமலை ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தின் போது ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மங்கலப்பொருட்கள் தமிழ் நாட்டின் சார்பில் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம்.. முதலாவது, ஸ்ரீவில்லிபுத்தார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலை, கிளி, வஸ்திரம். இவற்றை சூடிக்கொண்டுதான் ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரண்டாவது, 150 ஆண்டுகளுக்கும் மேலாக, ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் கருடசேவைக்காக திருமலை ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டுத் திருக்குடைகள் சென்னையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படுகின்றது. திருக்குடை ஊர்வலமானது 26ஆம் தேதி திருமலை செல்கிறது. அங்கு மாடவீதி வலம் வந்து வஸ்திரம் மற்றும் மங்களப் பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் முறையாக சமர்ப்பணம் செய்யப்படுகிறது.இது குறித்து ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி அறிக்கை விரிவான ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருமலையில் பக்தர்கள் கூட்டம் எப்போதும் அலைமோதும். இந்த வாரம் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கூட்டம் நிரம்பி வழிகிறது. திருமலா திருப்பதி தேவஸ்தானம் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்ட அனைத்து ஆர்ஜித சேவைகள், வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் முன்னுரிமை தரிசனங்கள் ஆகிய அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கட்டண தரிசனம் அனைத்தையும் ரத்து செய்துவிட்டபடியால் பக்தர்கள் சர்வதரிசனம் என்ற இலவச தரிசனத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். சர்வதரிசனத்திற்கான 32 அறைகளும் நிரம்பியது மட்டுமல்ல ஓர் அறையில் 500 பக்தர்கள் வரையிலும் கூட தங்க வைக்கப்படுகின்றனர். சர்வதரிசன வரிசை நான்கு கி.மீ. அளவுக்கு நீளமாக உள்ளதாம்.
நகைகள் திருட்டு, உடைமைகள் திருட்டு, குழந்தைகள் கடத்தல் உள்ளிட்டவை நடக்காமல் தடுக்க கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதனை கண்காணிக்க கூடுதல் டி.வி.க்கள் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி மற்றும் திருமலை முழுவதும் வண்ண விளக்கு அலங்கார வளைவுகளால், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரம்மோற்சவம் புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தில் அக்டோபர் 1ஆம் தேதி கோயிலுக்கு அருகே இருக்கும் சுவாமி புஷ்கரணியில்சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது.