ஆனந்தகுமார் பீகார் மாநிலம் பாட்னாவில் வசித்து வரும் ஒரு சிறந்த கணிதப் பேராசிரியர். சென்ற 2002 ஆம் ஆண்டு முதல் ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வுக்குப் (Joint Entrance Examination (JEE) பயிற்றுவிக்கும் நோக்கில் ஒரு பயிற்சி மையம் ஒன்றை பாட்னாவில் துவக்கினார். இராமனுஜம் ஸ்கூல் ஆப் மேதமாட்டிக்ஸ் (Ramanujan School of Mathematics), இது மையத்தின் பெயர். இதில் என்ன சுவாரஸ்யம் உள்ளது? என்று கேட்பீர்கள் என்று தெரியும். பயிற்சிக்காக இவர் தேர்தெடுத்தது, நலிவுற்ற குடும்பப் பின்னணி கொண்ட 30 மாணவர்களை மட்டுமே.
இவர்கள் சமூகத்தின் மிகவும் பின்தங்கிய, பொருளாதார வசதியற்ற குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். ஆனால் படிப்பில் மிகுந்த ஆர்வமும், புத்திசாலித்தனமும், திறனும் மிக்கவர்கள். பயிற்சிக்காக தேர்வு பெற்றவர்களுக்கு கல்விக்கட்டணம் என்று எதுவும் கிடையாது. தங்குமிடம் மற்றும் உணவு இலவசம்.
ஐ.ஐ.டி ஜே.இ.இ. (IIT, JEE) என்னும் இந்த நுழைவுத்தேர்வு மிகவும் கடினமானது. ஆண்டு தோறும் சுமார் பன்னிரெண்டு லட்சம் மாணவர்களுக்கு மேல் இத்தேர்வை எழுதினாலும், வெறும் 2.5 சதவிகிதம் மாணவர்கள் மட்டுமே தேர்வாகி பி.டெக் ஐ.ஐ.டி வகுப்பில் சேருகிறார்கள். ஐ.ஐ.டி ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு பயிற்சிக்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்தும் தேர்வாகாத செல்வந்தர் வீட்டுப்பிள்ளைகள் ஏராளம். ஆனால் தினக்கூலிகளாக பாட்டனாவில் வாழ்ந்துவரும் குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு இந்த பயிற்சி என்பது வெறும் கனவு தானே!
இது போன்ற மாணவர்களின் கனவை நனவாக்க அக்கரை எடுத்துக்கொள்பவர்கள் வெகு சிலர் மட்டும்தான். ஆனந்தகுமார் இந்த வெகுசிலரில் ஒருவர். இவர் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களிலிருந்து 30 மாணவர்களை மட்டும் தகுதி அடிப்படையில் கவனமாகத் தேர்வு செய்து, மிகச்சிறந்த பயிற்சி அளிப்பதோடு, இவர்களுக்கு உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளையும் ஏற்படுத்தி தந்துள்ளர். இதற்கான முழுச்செலவையும் தனி ஒரு ஆளாக ஏற்றுள்ளார். இந்த மாணவர்கள் இவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் 2002 ஆண்டு முதல் ஒரு ஆண்டுக்கு 30 பேர் வீதம் பயிற்சி பெற்று ஐ.ஐ.டி ஜே.இ.இ. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாத இம்மாணவர்கள் வாழ்வில் இவர் ஏற்படுத்தியது மிகப்பெரிய திருப்புமுனை எனலாம். தனி ஒரு மனிதனாக எல்லாச்செலவுகளையும் ஏற்றுக் கொண்டு இவர் பிற்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வெற்றி பெறச்செய்வதே என்பது ஒரு தனி மனித சாதனை எனலாம்.
சூப்பர் 30 அரும்பும் ஏழை திறனாளிகளின் உயர்கல்வியை கட்டமைக்கிறது என்றால், அதற்கு வலுவான காரணம் உள்ளது. சூப்பர் 30யில் தேர்வான மாணவர்களின் பெற்றோர்களோ தினக்கூலிகள், நடைபாதைகளில் கடை போடுபவர்கள், ரிக் ஷாக்காரர்கள், வீட்டுவேலைக்காரர்கள், சலவைசெய்வோர் மற்றும் காவலாளிகள். ஐ.ஐ.டி என்றால் என்னவென்றே தெரியாதவர்கள்.
ஆனந்தகுமார் கூட இது போன்ற ஒரு மிகவும் நலிவுற்ற குடும்பத்திலிருந்து வந்தவர்தான். இவர் தந்தை பீகார் மாநிலத்தில் உள்ள தபால் நிலைய ஊழியர். அனந்த்குமார் சிறு வயதிலிருந்தே கணக்கில் புலி; கணிதத்தால் ஈர்க்கப்பட்டு சிறந்த கணித மாணவராக வரவேண்டும் என்று கனவு கண்டவர் இவர். இளைமைப் பருவத்திலேயே தன்னிடமுள்ள கணிதப் பெருந்திறமையை வெளிப்படுத்தியவர். 1992 இல் இவர் நிறுவிய “இராமானுஜம் கணிதப்பள்ளி” என்ற கணிதக் கழகம் (Mathematics Club) இவருடைய கணித ஆர்வத்தைக் காட்டியது. தேவி பிரசாத் வர்மா, இவர் பயின்ற பாட்னா சயின்ஸ் காலேஜின் கணிதத் துறைத்தலைவர். வர்மா இவருடைய வழிகாட்டி மற்றும் குரு. குருவின் வழியில் கணித ஆர்வலர்களுக்கு ஒரு இலவச பயிற்சித் திட்டத்தைத் துவக்கினார். சில மாதங்கள் கழித்து ஆனந்த் பல கணிதச் சிக்களுக்கு விடை கண்டது மட்டுமல்ல இது பற்றி தேசிய மற்றும் அயலக பருவ இதழ்களில் கட்டுரைகளும் எழுதினார்.
1994 ஆம் ஆண்டு இவருடைய பேராசியர்கள் இவருக்கு கேம்ப்ரிட்ஜ் யுனிவர்சிட்டி சென்று மேல்படிப்பினைத் தொடர வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தார்கள். ஆனால் வெளிநாடு சென்று படிக்கும் அளவுக்கு இவரிடம் சிறிதும் வசதியில்லை. அரசாங்கம், அரசியல்வாதிகள், பணக்காரர்கள் என்று பலரிடமும் உதவி கேட்டு அலைந்தார். இறுதியில் பண வசதியில்லாததால் கேம்ப்ரிட்ஜ் வாய்ப்பு கைநழுவிப்போனது. இந்த நேரத்தில் இவர் தந்தை இறந்து போனார். கேம்ப்ரிட்ஜ் கனவு பலிக்கவில்லை, தந்தையும் இறந்துவிடவே தன் தாய் ஜெயந்தி தேவிக்குத் துணையாக அப்பளம் தயாரித்து விற்பதில் உதவி செய்தார். ஒரு அறையை வாடகைக்கு எடுத்து இராமானுஜம் பயிற்சி மையம் தொடங்கி பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பணக்கார வீட்டு மாணவர்களுக்கு கணக்குப் பாடம் நடத்தி வந்தார். இதற்காகக் கட்டணமும் பெற்றுக்கொண்டார். காலை நாலு மணிக்கு இவர் டியூஷன் வகுப்புகள் தொடங்கும். இரவு 11 மணி வரை டியூஷன் மற்றும் வகுப்புகள்.
ஒரு சமயம் ஒரு கூலித்தொழிலாளியின் மகன் இவரிடம் வந்து ஐ.ஐ.டி ஜே.இ.இ நுழைவுத்தேர்வு எழுத ஆசை உள்ளது ஆனால் பயிற்சிக்கட்டணம் தர வசதியில்லை என்று சொல்லியுள்ளார். அன்று இவர் மனதில் உதித்தது தான் சூப்பர் 30 ஐ.ஐ.டி ஜே.இ.இ பயிற்சி திட்டம்.
கடுமையான தேர்வு முறைகள் மூலம் (காண்க தேர்வுமுறை பற்றிய FAQ வடிகட்டப்பட்டு 30 மாணவர்கள் தேர்வானார்கள்.டியூஷன் மூலம் கிடைக்கும் வருமானம் மூலம் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை சூப்பர் 30 திட்டத்திற்காக ஒதுக்கினார். இவரின் தாயார் ஜெயந்தி தேவி மாணவர்களுக்கு உணவு தயாரித்தார். வயலின் கலைஞரான இவர் சகோதரர் பிரணவ், மும்பாயிலிருந்து பாட்னா திரும்பி, “சூப்பர் 30”யின் நிர்வாகப் பொறுப்பேற்றார். இவருடைய பழைய மாணவர்கள் பொருளுதவி செய்தார்கள்.
மிகக்கடினமான பயிற்சியினை பெற்ற இந்த முதல் தொகுதி – 30 மாணவர்கள் ஐ.ஐ.டி ஜே.இ.இ 2003 தேர்வு எழுதி அதில் 18 மாணவர்கள் ஐ.ஐ.டி க்கு தேர்வானார்கள். அடுத்த ஆண்டில் 22 மாணவர்கள் ஐ.ஐ.டி யில்; 2005 இல் 26 மாணவர்கள்; 2006 மற்றும் 2007 இல் தலா 28 மாணவர்கள். 2008 ஆம் ஆண்டு முதல் ஒரு மாயஜாலம் நிகழ்ந்தது. 2008 ஆம் ஆண்டு தொடக்க முதல் தேர்வெழுதிய 30 மாணவர்களும் நூற்றுக்கு நூறு சதவிகிதம் வெற்றி பெற்றார்கள். கடந்த பதினைந்து ஆண்டுகளில் 396 மாணவர்களை ஐ.ஐ.டிக்கு அனுப்பி வைத்த பெருமை ஆனந்தகுமாரையே சாரும்.
பொறியியல் கல்வி திட்டத்தில் ஏதாவது பின்னடைவுகள் நிகழ்ந்தால், சமுதாயத்தில் நலிவுற்ற குடும்பத்து மாணவர்கள் எவ்வாறு பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்ற கோணத்தில் சிந்தித்து தனது கருத்துக்களை அரசிடம் முறையிட்டு வருகிறார். இது பற்றி டாக்டர். அப்துல் கலாம் மற்றும் டாகடர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்து தன் கருத்துக்களை வலியுறுத்தியுள்ளார்.
இவருடைய சூப்பர் 30 மாணவர் பயிற்சி மைய சேவையினைப் பாராட்டியுள்ளவர்கள் – உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு ஊடகங்கள், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் என்று பலர்.
இவருடைய சூப்பர் 30 பற்றிய டாக்குமெண்டரிகள் டிஸ்கவரி சேனல் மற்றும் ஜப்பானிய தொலைக்காட்சிகளில் இடம்பெற்றுள்ளன, நியூயார்க் டைம்ஸ், டைம் மேகஸின், நியூஸ் வீக் மேகஸின் மற்றும் பி.பி.சி. போன்ற வெளிநாட்டு ஊடகங்களில் சூப்பர் 30 யைப் பாராட்டிக் கட்டுரை வெளியிட்டுள்ளார்கள். முன்னாள் அமெரிக்கக் குடியரசுத்தலைவர் பாரக் ஒபாமா தனது பாராட்டை தூதர் மூலர் அனுப்பி சிறப்பித்ததுடன் பொருளுதவியும் அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். ஜப்பானிய பல்கலைக்கழகம் ஒன்று இவரது மாணவர்களுக்கு தங்கள் நாட்டில் மேற்படிப்பைத் தொடர உதவுவதாக செய்தியனுப்பியுள்ளது. அமெரிக்காவின் ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பான் நாட்டு டோக்கியோ பல்கலைக்கழகம் ஆகிய இரண்டிலிருந்தும் ஆனந்தகுமார் சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டுள்ளார். உலகின் சிறந்த ஆசிரியர் விருது, சிறந்த பள்ளிக்கான விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, லிம்கா புக் ஆப் ரெக்கார்டஸ் என்று எல்லா விருதுகளும் இவர் சேவையினப் பாராட்டி வழங்கப்பட்டுள்ளன. கோவை கற்பகம் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.
எதிர் காலத்தில் மாணவர் எண்ணிக்கையை 30 க்கு மேல் உயர்த்தும் திட்டம் உள்ளதாம். பல்வேறு தரப்பினரிடமிருந்து உதவிகள் வந்தாலும் தனது சொந்த உழைப்பையும் சொந்த வருமானத்தையும் நம்பியே இத்திட்டத்தை தொடர விரும்புகிறார் இவர். சூப்பர் 30 மாதிரியைப்பின் பற்றி பல பயிற்சிப் பள்ளிகள் தொடங்க ஆலோசனைகள் வழங்கி வருகிறார். பல பள்ளிகள் தங்கள் குறிக்கோள்களில் வெற்றி பெற்றுள்ளன. இவருடைய சூப்பர் 30 திட்டம் மென்மேலும் பல வெற்றிகளைக் குவிக்கவும் நலிவுற்ற மாணவர்கள் வாழ்வில் திருப்பு முனைகளை ஏற்படுத்தவும் நம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்.
யூட்யூப் வீடியோ