திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் திருவீதியுலாவான கருட சேவை 27 செப்டம்பர் 2017 புதன் கிழமை அன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கி நள்ளிரவு ஒரு மணிக்கு வரை வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் மூன்று லட்சம் பக்தர்கள் கருட சேவை கண்டு மகிழ்ந்தார்கள். திருமலை திருப்பதி தேவஸ்தானம் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. கருட சேவை தரிசனத்திற்காக பக்தர்கள் மதியம் இரண்டு மணிக்கே நான்கு மாட வீதிகளில் அமைந்துள்ள காலரிகளில் இடம்பிடித்து காத்திருந்தார்கள். தொடக்கத்தில் பக்தர்களை மாட வீதியில் அனுமதிக்க மறுத்ததால் சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கருடன்
தத்புருஷாய வித்மஹே
ஸீபர்ண பக்ஷாய தீமஹீ
தன்னோ கருட ப்ரசோதயாத்.– கருட காயத்திரி
பறவை இனங்களின் அரசன் என்று அறியப்படும் ‘கருடன்’ என்பதற்கு ‘பெரிய சுமையைத் தங்குவார்’ என்று பொருள். கருடனின் தந்தை காசிபர், தாய் வினதை. கருடன் ஆடி சுக்லபஞ்சமி நன்னாளில் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர். சூரியனின் தேர்ப்பாகனான அருணன் இவர் தம்பி. காசிபர் – கத்ரு தம்பதியர் குழந்தைகளான நாகர்கள் கருடனை எதிர்த்தவர்கள்.
பெருமாளை விட்டு பிரியாமல் இருக்க வேண்டும் என்று கருடனின் வேண்டுகோளை ஏற்று பெருமாள் தன் வாகனமாகவும், கொடியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். ஸ்தோத்திர ரத்தினத்தில் ஆளவந்தார் கூறியுள்ளபடி கருடன் பெருமாளுக்கு வாகனம் மட்டுமல்ல கொடி, சகா, ஆசனம், மேல் கட்டி வஸ்திரம், விசிறி, அடிமை எனப் பலவிதமாகவும் இருப்பவர். வைணவர்களால் பெரியாதிருவடி என்று போற்றப்படுவர். ஆழ்வார்கள் கருடனை கொற்றப்புள், தெய்வப்புள், காய்சினப்புள், ஓடும்புள் என்று போற்றித் தம் பாசுரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.
கருடனின் சேவை கண்டு வியந்த ஆண்டாள் ஸ்ரீ வில்லிபுத்தூரில் கருடனை தன்னுடைய சிம்மாசனத்தில் இடம்பெறச் செய்தாள். எனவே வில்லிபுத்தூரில், வடபத்ரசாயி, ஆண்டாள், கருடன் என்று மூவரும் ஒரே சிம்மாசனத்தில் காட்சி தருகிறார்கள். கருநாடக சங்கீதத்தில், கருடனுக்கென்று ‘கருடத்வனி’ என்ற பெயரில் ஒரு தனி ராகமுண்டு! வைணவ சம்பிரதாயப்படி பெருமாளை சேவிக்கும் முன்பு கருடனை சேவிப்பது மரபு.
விஷ்ணு சீனிவாசனாக திருமலையில் அவதரித்த பொழுது, அவர் வைகுண்டத்தில் இருந்ததைப் போல திருமலையில் இருக்க ஆசை கொண்டார். கருடன் இதனை தெரிந்து கொண்டு, வைகுண்டத்தில் இருக்கும் ஏழு மலையையும் பெயர்த்து எடுத்து திருப்பதியில் கொண்டு சேர்த்தார். வைகுண்டத்தில் இருந்த எட்டு விமானங்களில் ஒன்றான கிரீடாசலத்தையும் சுவாமி புஷ்கரணி・என்னும் திருக்குளத்தையும் கருடனே கொண்டு வந்ததாக புராணங்கள் சொல்கின்றன. சீனிவாசனாக சேவை சாதிக்கும் பெருமாள் தன் விருப்பத்தை நிறைவேற்றிய கருடனை தன் வாகனமாக ஏற்றுக் கொண்டார்.
‘வேம்’ என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு ‘வேங்கட மலை’ என்று பெயர். வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி பெருமாளை வணங்கின. ‘கருடமலை’ என்று பெயர். வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்ததால் ‘வேத மலை’ என்று பெயர். கருடன் வேதங்களின் பிரதிநிதி. பெருமாள் வேதங்களின் பொருளாவார். திருமலை கருட சேவையில் பக்தர்கள் மூன்று வேதங்களை வணங்கிய பெருமையை அடையலாம்.
கருட சேவையின் பொழுது தமிழ்நாட்டின் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் சன்னிதியில் இருந்து கொண்டுவரப்படும் துளசி மாலை மூலவருக்கு அணிவிக்கப்படும். பின்பு உற்சவரான மலையப்பசுவாமி கருடசேவை திருவீதியுலாவின் பொழுது அணிந்து கொண்டார். தூளசி மாலையுடன் மூல விக்ரக மூர்த்தியான ஏழுமலையான் ஸ்ரீ வெங்கடேஸ்வரசுவாமி அணிந்திருக்கும் பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தங்க சங்கிலி, மகர கண்டி, லட்சுமி ஹாரம் போன்ற நகைகளை கருட சேவையின் போது மட்டும். ஆண்டுக்கு ஒரே ஒரு முறை, உற்சவ மூர்த்தியான மலையப்ப சாமி அணிந்து சேவை சாதித்தார். இந்த நகைகள் மூலவரை விட்டு என்றுமே பிரியாது இருப்பவை ஆகும்.
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், திருநாங்கூர், கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய வைணவத்தலங்களில் கருட சேவை நடைபெறுகிறது. திருமலை பிரம்மோற்சவத்தில் கருட சேவை ஐந்தாம் நாள் வருகிறது. திருநாங்கூரில் (நாகப்பட்டினம் மாவட்டம்) தை அமாவாசைக்கு மறுநாள் இரவு 11 கருட வாகன சேவை நடைபெறும். கும்பகோணத்தில் சித்திரை மாதம் வளர்பிறை அட்சய திருதியன்று காலையில் 12 வைணவ கோயில்களைச் சேர்ந்த உற்சவர்கள் கருட வாகனத்தில் ஒரே இடத்தில் எழுந்தருளுகின்றனர். தஞ்சாவூரில் வைகாசி, ஆனி மாதம் காலையில் கருட சேவையன்று 24 வைணவக் கோயில்களைச் சேர்ந்த உற்சவ மூர்த்திகள் எழுந்தருளுகின்றனர்.