இந்தியாவில் மக்கள் ஒரே பண்டிகையை தங்கள் கலாச்சாரத்தின் அடிப்படையில் பல்வேறு விதமாகக் கொண்டாடுகிறார்கள். வண்ணமிகு நவராத்ரி விழா ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பெயரில் கொண்டாடப்படுகிறது. நவம் என்றால் ஒன்பது என்று பொருள்; இராத்திரி என்றால் இரவு. தென்னிந்தியாவில் ஒன்பது இரவுகளில் துர்கா, மகாலட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகிய முப்பெரும்தேவிகளுக்கு தலா மூன்று இரவுகளை ஒதுக்கி கொண்டாடுவது தென்னிந்திய மரபு. கர்நாடக மாநிலம் மைசூரில் நவராத்திரி ஒரு அரச குடும்பத்து விழாவாக 400 ஆண்டுகளுக்கு மேலாகக் கொண்டாடப்பட்டது. இன்று கர்நாடக மாநில அரசுமைசூர் அரச குடும்பத்துடன் இணைந்து நவராத்திரியை ஒரு அரச விழாவாகவே நடத்திக் காட்டுகின்றது. கிழக்கு இந்தியாவில் அமைந்துள்ள மேற்கு வங்கம், ஒடிசா, அசாம், பீகார் போன்ற மாநிலங்களில் நவராத்திரிக்கு துர்க்கா பூஜை என்று பெயர். டெல்லி பகுதிகளில் நவராத்திரிக்கு ராம்லீலா (இராவண வாதம் அல்லது இராமனின் வெற்றி) என்று பெயர் மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள மாநிலங்களான மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் இராஜஸ்தானின் சிலப்பகுதிகளில் நவராத்திரி, கற்பா-தண்டியா என்னும் நடன விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.
தென்னிந்தியா
காளையருக்கு ஓர் இரவு சிவராத்திரி கன்னியருக்கு ஒன்பது நாள் நவராத்திரி.
தென்னிந்தியாவில் முழுக்க முழுக்க இது மகளிரால் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் விழாவாகும். தேவி பாகவதத்தில் சொல்லப்பட்டுள்ளபடி மது-கைடப ஸம்ஹரத்தை நிகழ்த்திய துர்க்கைக்கு முதல் மூன்று நாட்கள் வழிபாடு; அடுத்த வழிபாடு மூன்று நாட்கள் மஹிஷாசுரனை மாய்த்த மகாலட்சுமிக்கு; இறுதி மூன்று நாட்கள் சும்ப-நிசும்பனை வதைத்த மகாசரஸ்வதிக்கு வழிப்பாடு.
தமிழ் நாடு
தமிழ் நாட்டில் புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை திதிக்கு அடுத்தநாள் வரும் பிரதமை திதியன்று நவராத்திரி விழவை கும்பபூஜையுடன் (கலச பூஜை) தொடங்குகிறார்கள். புரட்டாசி வளர்பிறை முதல் நாளில் தொடங்கி ஒன்பது நாட்கள் வரை நவராத்திரி விழா அனுஷ்டிக்கப்படுகிறது. தேவர்கள் இயற்றிய கடும் தவம் கண்டு, தேவி தன் சக்தி சேனையை நடத்திச் சென்று, சண்டாமுண்டன், ரக்த பீஜன், சும்ப-நிசும்பன், மகிஷாசுரன் போன்ற அசுரர்களை வதம் செய்த கதைகளின் தொகுப்பே “தேவி மகாத்மியம்.” இப்புராணத்தை நவராத்ரி இரவுகளில், பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, பாராயணம் செய்வது நலம்.
மகிஷாசுரன் என்னும் அரக்கனுடன் தேவி ஒன்பது நாட்கள் போர் புரிந்து வெற்றி வாகை சூடிய பத்தாம் நாள் விஜயதசமி – இது மற்றோரு கதை. விஜய் – என்றால் வெற்றி; தசமி என்றால் – பத்து (தசம் = பத்து). தீமையை அழித்து அறத்தை நிலைநாட்டிய பத்தாம்நாள் (தசமி திதி) இந்த விஜயதசமி தினம். விஜய தசமி அன்று குழந்தைகளை புதிதாக பள்ளியில் சேர்த்து வித்யாரம்பம் செய்வது மரபு. பாட்டு, நடனம், போன்ற கலைகளையும் மற்றும் பல வித்தைகளையும் தொடங்க உகந்த நாள் இது.
கொலு: நவராத்திரி என்றால் நம் நினைவுக்கு வருவது கொலு. ஏன் பொம்மைகளை வைத்து கொலு வைக்கப்படுகின்றது? பிரம்மா, விஷ்ணு, சிவனின் சக்திகள் ஒருங்கிணைந்து அக்னி பிழம்பாகி அதிலிருந்து தேவி வெளிவந்தாள். பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன், எமன் என்று அனைத்து தேவர்கள் மற்றும் தெய்வங்கள் எல்லாம் தங்கள் சக்திகளையும் ஆயுதங்களையும் தேவிக்கு அளித்ததனால் தங்கள் சக்திகளை இழந்து பொம்மைகளாக மாறி நின்றனர். எனவே கொலு என்றால் பொம்மை கொலு என்று பொருள். மும்மூர்த்திகளையும், முப்பெரும் தேவியரையும், தேவர்களையும் பொம்மைகளாக படிகளில் வரிசையாக அடுக்கி வைத்து வழிபடுதல் ஐதீகம்.
கொலுவின் தத்துவம் இது: ‘அகிலத்தில் இருக்கும் அத்தனை ஜீவராசிகளிலும் அம்பிகை பரவி இருக்கிறாள். அவள் கருணையினால் தான் அனைத்தும் உயிர் வாழ்கின்றன!’ இந்த அடிப்படையில் கொலு வைப்பதற்கு சில மரபுகள் உள்ளன.
ஐந்து, ஏழு அல்லது ஒன்பது என்ற ஒற்றைப்படை எண்ணிக்கையில் கொலுப்படிகளை அமைக்க வேண்டும். படிகளின் மேல் வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் துணியினைப் பரப்ப வேண்டும். முதல் படிக்கட்டில் கலசம் இடம் பெற வேண்டும். கலசத்தில் அம்பிகை உறைகிறாள். அம்பிகையை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அலங்காரம் செய்வது அவசியம். தினமும் சுண்டல், வடை, பொங்கல், பொறி, தேங்காய், இனிப்பு போன்ற நைவேத்தியங்களைப் படைக்கவேண்டும்.
கொலுவில் இடம்பெறும் பொம்மைகள் பரிணாம வளர்ச்சிப்படி அமைக்கவேண்டும். கீழிருந்து தொடங்க வேண்டும்.
- கீழ்ப்படி: ஓரறிவு ஜீவராசிகள். புல், பூண்டு, செடி, கொடி, மரங்கள், பூங்கா…
- இரண்டாம்படி: இரண்டறிவு ஜீவராசிகள். நத்தை,சங்கு,- மெள்ள ஊர்வன….
- மூன்றாம்படி: மூன்றறிவு ஜீவராசிகள். எறும்பு – தரையில் ஊர்வன…
- நான்காம்படி: நான்கறிவு ஜீவராசிகள். பறவை, நண்டு, வண்டு – பறப்பன…
- ஐந்தாம்படி: ஐந்தறிவு ஜீவராசிகள். பசு போன்ற விலங்கினங்கள்…
- ஆறாம்படி: ஆறறிவு மனிதன். பொம்மைகள்,செட்டியார், நம் நாட்டின் தலைவர்கள்.
- ஏழாம்படி: மகான்கள் ஆதிசங்கரர், இராமானுஜர், இராகவேந்திரர், விவேகானந்தர்…
- எட்டாம்படி: தெய்வம். தசாவதாரம் பொம்மைகள். மும்மூர்த்திகள்.
- மேல்படி: பூரண கும்பம் அம்பிகையின் திரு உருவம். கொலு பீடத்தில் விநாயகப் பெருமானையும் அமைக்கலாம்.
வீடுதோறும் ஒன்பது நாட்களும் திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது. பெண்கள் விழா என்பதால் சுமங்கலிகளும், கன்னிப்பெண்களும், சிறுமிகளும் கூடிக் கொண்டாடுகிறார்கள். ரங்கோலி கோலம், பூச்சரம், தீபவிளக்குகள், ஒன்பது இரவுகளில் ஒன்பது சுண்டல் வகைகள் நைவேத்யம், ஆடல் பாடல் எல்லாம் உண்டு. குழந்தைகளை கண்ணனாகவும் ராதையாகவும் அலங்கரித்து மகிழ்வதும் உண்டு. தாம்பூலம் மற்றும் பரிசுப் பொருட்கள் விருந்தினர்களுக்கு வழங்கப்படுவதுமுண்டு.
சென்னை நகரின் பிரபல கோவில்களில் பெரிய அளவில் கொலு வைப்பதுண்டு: 1. கபாலீஸ்வரர் கோவில், மைலாப்பூர், 2. பார்த்தசாரதி கோவில், திருவல்லிக்கேணி, 3. மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர், 4. அஷ்டலக்ஷ்மி கோவில், பெசன்ட் நகர், 5. வடபழனி ஆண்டவர் கோவில், வடபழனி, 6. கருமாரியம்மன் கோவில், திருவேற்காடு, 7. அனந்தபத்மநாபசுவாமி கோவில், அடையார். ஒவ்வொரு வருடமும் கொலு தீம் வேறு வேறாகும்: புராணக்கதைகள், நடப்பு செய்திகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பல.
-
Golu
கொலு பொம்மைகள்: கொண்டப்பள்ளி களிமண் பொம்மைகள், சென்னபட்டனா மரப்பாச்சி பொம்மைகள், காகிதக் கூழ் பொம்மைகள், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பொம்மைகள், நெய்வேலி பீங்கான் பொம்மைகள் என எல்லா வெரைட்டி பொம்மைகளும் மைலாப்பூர் மாடவீதிகளில் குவிக்கப்பட்டிருக்கும்.
பல்வேறு நிகழ்ச்சி நிரல்கள்: உபன்யாசம், பஜனை, வாய்ப்பட்டு, கோலாட்டம், பரதம் என எல்லாம் உண்டு. சென்னையில் சில நிகழ்ச்சி நிரல்கள்: பாரதீய வித்யா பவன் இசைவிழா, மைலாப்பூர், கார்த்திக் பைன் ஆர்ட்ஸ், ஆர்.ஏ புரம், பொம்மலாட்டம் தக்ஷிண சித்ரா, முட்டுக்காடு, தண்டியா மற்றும் கற்பா நடனம், எக்ஸ்பிரஸ் அவின்யு, குஜராத் கலாச்சார சங்கம், தர்மபிரகாஷ் சௌகார்பேட்டை மற்றும் வெங்கட்நாராயண ரோட் பகுதிகளிலும் தண்டியா ரஸ் நடனங்கள் நடைபெறும், காலிபரி கோவில், மேற்கு மாம்பலம் துர்க்கா பூஜை கொண்டாட்டங்கள், தென் சென்னை கலாச்சார சங்கம் பெசன்ட் நகர் துர்க்கா பூஜை பந்தல் கொண்டாட்டங்கள், பெங்கால் அசோசியேசன், தி.நகர்., துர்க்கா பூஜை பந்தல் கொண்டாட்டங்கள், தக்ஷினி சொசைட்டி, அண்ணாநகர் துர்க்கா பூஜை பந்தல் கொண்டாட்டங்கள்
மைசூர் தசரா
மைசூர் தசரா திருவிழா (நவராத்திரி) உலகப்புகழ் பெற்றது. மைசூர் அரசர்கள் ஆட்சியில் தசரா எனப்படும் நவராத்திரி விழா பத்து நாட்கள் மிகச் சிறப்பாக பெற்றது. இப்போதும் இந்தப்பாரம்பரிய திருவிழா அதிகம் பொலிவிழக்கவில்லை. நடப்பு 2017 ஆண்டிற்கான மைசூர் தசரா திருவிழா, 408-வது ஆண்டு திருவிழாவாக, மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் 2017 செப்டம்பர் 21 ஆம் தேதி காலை 8.45 மணிக்கு சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. மைசூர் மகாராஜா யதுவீர் கிருஷ்ணதத்த உடையார் அரச இருக்கையில் அமர்ந்து தர்பாரில் ஈடுபடுவதுண்டு. பத்து நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் கர்நாடக மாநிலத்தின் கலாச்சாரத்தை காட்டும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் உண்டு. பத்தாம்நாள் விஜயதசமியன்று நடைபெறும் “ஜம்புசவாரி” எனப்படும் யானைகளின் அணிவகுப்பும், இவற்றின் சாகசங்கள் கொண்ட விளையாட்டுக்களும் புகழ்மிக்கவை.
துர்கா பூஜா: கிழக்கிந்திய (மேற்கு வங்கம், ஒடிசா, அசாம், பீகார்) மாநிலங்கள்
ஒவ்வொரு வருடமும் (செட்பம்பரில்) சரத் (இலையுதிர் ) காலத்தில் அசுவினி மாதத்தின் சுக்லபட்ச பிரதமையில் தொடங்கி நவமி வரை நடைபெறும் துர்கா பூஜை, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெங்காலிகளுக்கு மிக மிக முக்கியமான பண்டிகை ஆகும். மேற்கு வங்கம், ஒடிசா, அசாம், பீகார் மாநிலங்களில் இவ்விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. துர்கா அன்னை எனும் துர்கா தேவியை வழிபடும் பண்டிகை துர்கோத்சவம் ஆகும். சரத் காலத்தில் கொண்டாடப்படுவதால் சரத் உத்சவம் என்றும் அழைப்பதுண்டு. தேவி பட்சம் என்று அறியப்படும் சுக்லபட்சத்தில் இவ்விழா பிரதமை திதியில் துவங்கி பௌர்ணமி திதியன்று லட்சுமி பூஜையுடன் நிறைவுறும். மகிஷாசுரவதம் இந்த விழாவின் சிறப்பு அம்சம். பூஜையையொட்டி கொல்கத்தாவில் நூற்றுக்கணக்கான பந்தல்கள் அமைத்து கொண்டாடப்படும் சமுதாய நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றது. துர்கா பூஜையில் கலந்துகொள்ள உலகம் முழுவதிலும் வாழும் பெங்காலிகள் கொல்கத்தா வருவது வழக்கம். கர்நாடகம் , தமிழ் நாடு ,ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மற்ற மாநிலங்களில் வாழும் மேற்கு வங்க மக்கள் இவ்விழாவினை கொண்டாடுவர்.
ராம்லீலா
அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கும் ராம்லீலா டெல்லியில் நடைபெறும் ஒரு நவராத்திரி திருவிழாவாகும். நிறைந்த பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட ராம்லீலா விழா, தசரா அன்று இராமபிரானின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் நடத்தப்படுகின்றது. இராமபிரான் அரக்கர்கோன் இராவணனை வென்று வாகை சூடிய நாள் இது. இந்த நாளில் ஆள் உயரமுள்ள இராவணன், மேகநாதன் மற்றும் கும்பகர்ணனின் பொம்மைகள், அனைவரும் மகிழும் வகையில், தகனம் செய்யப்படுகின்றன. இந்நிகழ்ச்சியில் பங்கு கொள்ள ஏராளமான மக்கள் டெல்லியை நோக்கி வருகிறார்கள்.
இராமபிரானுக்கு அரக்கர்கோன் இராவணனை சம்ஹாரம் செய்யும் பூரண வலிமையை கொடுக்கும் ‘ஸ்ரீ பஞ்ச தசாக்ஷரி’ என்ற ஸ்ரீ வித்யா மகா மந்திரம் வலது காதிலே உபதேசிக்கப்பட்டது. இதனால் “இராமபிரான் தேவியின் பக்தனாக மாறிப் புரட்டாசி மாதம் சுக்ல பக்ஷ பிரதமை முதல் நவமி முடிய ஒளியான ஒன்பது நாட்களிலும் இரவில் நியம நிஷ்டையுடன் பூஜை செய்தமையால் சிறந்த நவராத்ரியாக ஒளிர்விட்டது. இராமனும் அன்னையை வழிபட்டு தசக்ரீவனை சம்ஹாரம் செய்தார்.”
குஜராத் நவராத்திரி: கற்பா தண்டியா நடன ராத்திரி
இந்தியாவிலேயே குஜராத்தில்தான் நவராத்திரி தசரா கொண்டாட்டங்கள் அதிகம். பெண்கள் ஒன்பது தினங்களும் விரதமிருந்து கோவிலுக்கு சென்று துர்க்கையை உளமாற வணங்க வேண்டும். ராஸ் அல்லது தண்டியா ராஸ் (Ras or Dhandiya Ras) எனப்படும் கோலாட்டம், குஜராத் மற்றும் இராஜஸ்தான் மாநிலங்களில் ஆடப்படும் ஒரு கிராமிய நடனம், இந்நடனத்தை கர்பா என்னும் மற்றோரு கிராமிய நடனத்துடன் இணைத்து குஜராத் மாநிலங்களில் உள்ள நகரங்களிலும் மும்பாய் நகரிலும் பாரம்பரிய உடை அணிந்த பெண்களால் ஆடப்படுகின்றன.
ஆண்களும் பெண்களும் இணைந்து ஆடுவது தண்டியா ராஸ் நடனம் என்னும் கோலாட்டம். பெயிண்ட் செய்து அலங்கரிக்கப்பட்ட இரு மூங்கில் குச்சிகள் இவ்வாட்டத்தில் முக்கிய அம்சம். மாதா அம்பேவிற்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக இந்நடனம் ஆடப்படுகின்றது. தண்டியா ராஸ் நடனத்தின் போது பெண்கள் எம்ப்ராய்டரி செய்யப்பட தண்டியா காக்ரா சோலி என்னும் மூன்று உருப்படிகளுடன் உடையும் மற்றும் ஊதாநி என்ற முக்காடும் அணிகிறார்கள். ஜூம்கா என்னும் காது வளையம், நெக்லெஸ், பிந்தி, பாஜுபந்த், சூடா மற்றும் கங்கன் என்று பல அணிகலன்கள் அணிகிறார்கள். ஆண்கள் காஃபினி எனப்படும் பைஜாமா மற்றும் காக்ரா எனப்படும் குர்தா ,குட்டையான வட்டவடிவுடன் ஃபிரில்லுடன் கூடிய மேலாடை, அணிகிறார்கள்.
சமஸ்கிருதத்தில் கர்ப்பா என்றால் கருப்பை (வயிறு), தீப் என்றால் விளக்கு – வயிறு குலுங்க ஆடும் நடனம் இது. இந்த நடனத்தில், மையத்தில் விளக்கினை ஏற்றி, சுற்றி நின்று நடனமாடுவது வழக்கம். விளக்குக்குப் பதிலாக தேவி சக்தியின் படமும் இடம்பெறும். கர்பா நடனப்பெண்கள் காக்ரா என்னும் திறந்த பின் முதுகு காட்டும் காப்டுவுடன் அமைந்த சோளியையும் ஊதாநி என்ற முக்காட்டையும் மற்றும் பல வெள்ளி நகைகளையும் அணிகிறார்கள். ஆண்கள் கேடியும் சட்டை மற்றும் வஜானி என்னும் பேண்ட் மற்றும் பல வண்ண நிறத்துடன் அமைந்த உருமால் அணிகிறார்கள். ட்ரம், ஹார்மோனியம் மற்றும் நால் போன்ற பக்கவாத்யங்கள் உண்டு. இந்தியாவின் மேற்கு மாநிலங்களுக்கே உரிய அங்க அசைவுகளுடன் இந்நடனம் மைதானங்களிலும் தெருக்களிலும் ஆடப்படுகின்றன. குஜராத்தில் கர்பா நடன இரவுகள் (Garba Nights) பிரபலம். பல கிளப்புகள் மற்றும் சொசைட்டிகள் பொறுப்பேற்று நடத்துகிறார்கள் .நவராத்திரி முழுவதும் இந்த நடன கொண்டாட்டங்கள் தொடரும். கனடா, அமரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் வாழும் குஜராத்தி பேசும் மக்கள் அங்கு இந்நடனங்களை ஆடுவதுண்டு.