சர்வதேச காஃபி தினம் இன்று, வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 29, 2017. சர்வதேச காஃபி தின கொண்டாட்டங்கள் அக்டோபர் 01, 2017 வரை தொடரும். சர்வதேச காஃபி அமைப்பு (International Coffee Organization (ICO) மற்றும் உலக நாடுகளில் உள்ள காஃபி சங்கங்கள் (Coffee Associations) எல்லாம் சேர்ந்து மூன்றாம் ஆண்டிற்கான சர்வதேச காஃபி தினத்தைக் கொண்டாடுகிறார்கள். உங்களுக்குப் பிடித்தமான காஃபி என்ற இந்த பானத்தைக் கொண்டாடவும் ஊக்குவிக்கவும் ஒரு வாய்ப்பு. சர்வதேச காஃபி அமைப்பு முதன் முறையாக அக் டோபர் 1, 2015 தேதியை மிலான் நகரில் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த நாள் நியாயமான காஃபி வர்த்தகத்தை ஊக்குவிக்கவும் காஃபி விவசாயிகளின் துயரங்கள் பற்றி விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றது. சர்வதேச காஃபி அமைப்பு ஐக்கிய நாடுகள் சபை United Nations (UN) ஆதரவுடன் லண்டனில் 1963 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது என்பது உபரி தகவல்.
காஃபி நாகரீமடைந்த மனிதர்களுக்கு மிகவும் பிடித்தமான பானம் – தாமஸ் ஜெஃபர்சன்
காஃபிக்கொட்டை, காஃபிச் செடியின் பெர்ரி பழத்திலிருந்து கிடைக்கிறது. காஃபியா (Coffea) என்ற தாவர இனத்தைச் (genus) சேர்ந்தது. இரண்டு காஃபி சிற்றினங்கள் (species) வணிக ரீதியாகப் புகழ் பெற்றவை: காஃபியா கேனெபொரா (Coffea canephora) (நம்ம ரோபஸ்ட்டா காஃபி கொட்டைதான்) மற்றும் காஃபியா அராபிகா (Coffea arabica).
காஃபி ஒரு பானம் மட்டுமல்ல! இது உலகின் இன்றியமையாத விற்பனைப்பொருள்! உலகில் மிக அதிகமாக விற்பனையாகும் சரக்குகளில் இதுவுமொன்று. பெட்ரோலுக்கு அடுத்தபடியாக கருதப்படும் முக்கிய விற்பனைப்பொருள். வளர்ந்துவரும் நாடுகளில் காஃபி வர்த்தகம் அந்த நாடுகளின் பொருளாதார ஸ்திரத் தன்மையை அளவிட உதவுகிறது. இந்த நாட்டின் காஃபி சங்கங்கள் வலிமை வாய்ந்தவை. காஃபி விவசாயிகளுடன் பின்னிப்பிணைந்தவை இவை.
கொஞ்சம் காஃபி
காஃபி தயாரிப்பது ஒரு கலை. இது ஒரு மொழி என்று கூட சொல்லலாம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் மனிதன் சிறந்த காஃபியை நோக்கிப் பயணம் செய்கிறான். இன்று உலகின் பல நாடுகளில் தயாரிக்கப்படும் பிரபல காஃபி வகைகள் இவை: எஸ்ப்ரசோ (Espresso), எஸ்ப்ரசோ மாச்சியாடோ (Espresso Macchiato), காப்பசீனோ (Cappuccino), காபி லட்டே (Cafe Latte), மோக்கசினோ (Mocha chino), அமெரிக்கானோ (America-no), ஐரிஷ் காபி (Irish coffee), டர்கிஷ் காபி (Turkish coffee), வெள்ளை காபி (White coffee).
சரி… உலகத்திலேயே காஸ்ட்லியான காபி எது? லூவா காபி (Kopi Luwak), இந்தோனேசியாவில் தயாரிக்கப்படுகிறது. எப்படி தயாரிக்கப்படுகிறது? இங்கே பார்க்கலாம்
தமிழ்நாட்டில் காஃபி என்பது லைஃப்லைன். காலையில் ஃபில்ட்டர் காஃபி இல்லையென்றால் பைத்தியமே பிடித்துவிடும். அந்தளவுக்கு மக்கள் காஃபிக்கு அடிமைகள். “மிகச்சிறந்த ஃபில்டர் காஃபியை இனிமேல்தான் குடிக்கவேண்டும்” என்று என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்லுவதுண்டு.
‘கும்பகோணம் டிகிரி (ஃபில்டர்) காஃபி’ கடைகளை இன்று ஹைவேக்களில் பரவலாகக் காண்கிறோம். பெரிய பித்தளை காஃபி ஃபில்டரில் டிகாக்க்ஷன் மற்றும் வாயகன்ற பாத்திரத்தில் கொதிக்கும் பால். பித்தளை டபாரா டம்ளரில் நுரை பொங்க கொடுப்பார்கள். சுற்றி கார் பார்க்கிங்.
கும்பகோணம் டிகிரி ஃபில்டர் காஃபி வரலாறு சுவையானது.
‘கும்பகோணம் டிகிரி ஃபில்டர் காஃபியின்’ வரலாறு 1960 களில் கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்குப் பக்கத்தில் மொட்டைக்கோபுர வாசலில் இருந்த ‘லெட்சுமி விலாஸ் காபி கிளப்பிலிருந்து’ தொடங்குகிறது. கடையின் உரிமையாளர் காஃபி தயாரிப்பவர் எல்லாம் ஒருவரே. அவர்தான் பஞ்சாமி அய்யர். சொட்டு தண்ணீர் கூட சேர்க்கமால் காய்ச்சிய பாலில் அப்போதைக்கப்போது வறுத்து அரைத்த காஃபி பவுடரில் ஒரேயொரு முறை மட்டுமே டிகாக்ஷன் எடுத்து மணக்க மணக்க காஃபி கலந்து தருவது பஞ்சாமி அய்யரின் ட்ரேட் சீக்ரெட் . கும்பகோணத்தில் இவரின் விசிறிகள் பெரிய மிராசுதாரர்களாம். சங்கீத வித்வான்கள் கும்பகோணம் வந்தால் இங்கு காஃபி குடிக்காமல் போனதில்லையாம். வேறு இடங்களில் கச்சேரிக்கு போனபோது ‘கும்பகோணம் காஃபி மாதிரி வராது’ என்று சிலாகிக்க அதுவே சிறந்த ஃபில்டர் காஃபியின் அடையாளமாகப் போய்விட்டது.
கொஞ்சம் வரலாறு
காஃபிச் செடியின் பூர்வீகம் ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள எத்தியோப்பியா. தென் எத்தியோப்பியாவில் காஃவா (Kaffa, கா’வ்’வா) என்னுமிடத்தில் முதலில் கண்டு பிடிக்கப்பட்டதாம். அரபு மொழியில் கஹ்வா (qahwa) என்றால் காஃபி செடி என்று பொருள். காஃபி பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் 1000 A.D. ஆண்டலிருந்தே கிடைக்கின்றன. 12 ஆம் நூற்றாண்டுகளில் எத்தியோப்பியாவிருந்து எகிப்து மற்றும் எமன் நாடுகளுக்குப் பரவியது.
இந்தியாவில் காஃபி பரவியது எப்போது? 17ஆம் நூற்றாண்டில் காஃபி பரவியது. பாபா புதான் என்ற சிக்மங்களூர்க்காரர் புனித மெக்காவிற்குப் புனித யாத்திரை சென்றுவிட்டு திரும்புகையில் கொஞ்சம் காஃபி விதைகளையும் கொண்டுவந்து தன் தோட்டத்தில் பயிரிட்டார். காஃபி இந்தியாவிற்குள் புகுந்தது இப்படித்தான்.
காஃபி தினத்தை கொண்டாடுங்கள்…
உங்களுடைய காஃபி தினம் நல்ல காஃபியுடன் தொடங்கவும் தொடரவும் வாழ்த்துக்கள்.