ஹோவர்ட் கார்டனரின் பல்திறன் கொள்கை குழந்தைகளின் திறமையை கண்டறிய உதவுமா?

‘சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் ஸ்கூல் பிரின்ஸ்பால் பேசறேன்.. உங்ககிட்ட ஒரு ரெண்டு நிமிஷம் பேசலாமா?’

‘என்ன விஷயம் மேடம்? எங்க மொபைல் நம்பர் எப்படி கண்டு பிடிச்சீங்க? இது குழந்தையின் அம்மா.

‘கார்ப்பரேஷன்ல பாப்பா பேரு, டேட் ஆஃப் பர்த், மொபைல் போன் நம்பர் எல்லாம் கிடைச்சது. உங்க பாப்பாவுக்கு எங்க ஸ்கூல் ப்ரி கே.ஜி ல அட்மிஷன் தரலாம்னு முடிவு பண்ணிருக்கோம்!’

‘இந்த அக்டோபர் 24 அன்னிக்குத்தான் ரெண்டு வயசு பூர்த்தியாகுது. இப்பவே சேர்க்கலாமா’?

‘விஜய தசமி அன்னிக்கு அட்மிஷன் நடக்குது. நெல்லுல அட்சராப்பியாசம் எல்லாம் உண்டு.’

‘அப்படியா?’

‘விஜய தசமி அன்னிக்கு சேர்த்தா ஃ பீஸ்ல கன்செஷன் தர்றோம்!’

‘ஃபீஸ் எவ்வளவு?

பிரின்சிபால் சொன்ன டியூஷன் ஃபீஸ், யூனிஃபார்ம் ஃபீஸ், பஸ் ஃபீஸ் மற்ற ஃபீஸ் எல்லாம் கேட்டு அம்மாவுக்கு மயக்கம் வந்தது.

நல்ல பள்ளியில் ப்ரி.கே.ஜி, எல்.கி.ஜி,யில் அட்மிஷன் கிடைக்க வேண்டுமே என்று இரண்டரை, மூன்றரை வயதுள்ள குழந்தைகளின் பெற்றோர்கள்படும் குழப்பம், கவலை, பயம் எல்லாம் வார்த்தைகளில் விவரிக்க இயலாது. இரண்டு வயதானால் ப்ரி.கே.ஜி அட்மிஷன் பற்றித்தான் பேச்சாயிருக்கும். உங்கள் பாப்பாவை எந்த பிளே ஸ்கூலில் சேர்க்கப்போகிறீர்கள்? இங்கே இவ்வளவு டொனேஷன், அங்கே டொனேஷன் இல்ல ஆனா ஃபீஸ் அதிகம். ஜனவரியிலேயே ஃபார்ம் தராங்க.. பெரிய கியூ… முதல் நாள் இரவே துண்டுபோட்டு இடம்பிடித்த கதையெல்லாம் பிரசித்தம்.

அடுத்து பள்ளிக்கூடம் செல்ல பிள்ளைகள் தயாராகி விடுவார்கள். வருஷா வருஷம் புதுசா என்னென்ன ஃபீஸ் கட்டணுமோ’ என்பது பெற்றோரின் கவலையாக இருக்கிறது. நல்ல மார்க் வாங்கவேண்டும் என்பதற்காக குழந்தைகளால் தாங்க முடியாத அளவு சுமை ஏற்றப்படுகிறது. பள்ளிகளிலேயே நடத்தப்படும் டியூஷன் கிளாஸ்கள்; எக்ஸ்டராகரிக்குலர் ஆக்டிவிட்டீஸ் டான்ஸ், கராத்தே, நீச்சல், யோகா, ஜிம்னாஸ்டிக்ஸ்; பள்ளி ஆண்டு விழா ஃபேன்ஸி டிரெஸ்; ஸ்போர்ட்ஸ் டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் கோச்சிங் என்று கலந்துகட்டி குழந்தைகளை அலைக்கழிக்கிறோம்.

தொடர்ந்து ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ வகுப்புகளில் குழந்தைகள் சேர்ந்து விட்டால் டென்சன் ஆவது பெரும்பாலும் பெற்றோர்களே. வீட்டில் டிவி கட், சினிமா கட், உறவினர் வீடுகளுக்கு செல்வது கட்… என்ன மார்க் வரும்? கட் ஆஃப் மார்க் எவ்வளவு? என்ன கோர்ஸ் படிக்கவேண்டும்? நீட் கோச்சிங் ஜட்ஜ்மென்ட் எப்படியிருக்கும்? இன்ஜியரிங் காலேஜ் கவுன்சிலிங்கில் எந்த காலேஜ் கிடக்கும்? இதுவெல்லாம் பெற்றோருக்கு அத்துப்படி. பி.எ ஃப் லோன், பேங்க் எஜுகேஷனல் லோன், பெர்சனல் லோன் என்று நாற்பது யோசனைகள்.

உங்கள் குழந்தை எந்தப் படிப்பைப் படித்தால் வாழ்க்கையில் வெற்றிபெறமுடியும்? இந்தகாலத்துப் பெற்றோர்கள் முன்வைக்கும் கேள்வி இது. போட்டிகள் எல்லாத் துறைகளிலும் பெருகி வருகின்றன. குறிப்பாக கல்வி துறையில் போட்டிகள் அதிகம். எனவே மிகச் சிறந்த கல்வியை தங்களுடைய குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய கட்டாயத்தில் பெற்றோர்கள் இருக்கிறார்கள். தான் அனுபவித்த இன்னல்களை தங்கள் குழந்தைகள் பெறக்கூடாது என்று கருதி மிகுந்த போராட்டத்திற்கிடையே அவர்களை படிக்க வைக்கிறார்கள்.

உயர்கல்வி இரண்டு வகை. ஒன்று பொதுக்கல்வி மற்றோன்று தொழிற்கல்வி. இன்றைய மாணவர்கள் உலகின் மாறிவரும் தேவைகள் மற்றும் முன்னேற்றங்களுக்கேற்ப பல்வேறு விதமான கோர்ஸ்கள் வருடந்தோறும் தொடங்கப்படுகின்றன. மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர், சார்ட்டட் அக்கவுண்டன்ட், விவசாயம், கால்நடை மருத்துவம், மேலாண்மை, துணைமருத்துவப் படிப்புகள், ஆசிரியப் படிப்புகள், கணிதம், புள்ளியியல், வணிகவியல், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், மொழிகள், கவின்கலை, நிகழ்த்துக்கலை, உணவியல், சுற்றுலா, தொல்லியல் ஆய்வு மற்றும் பல. ஐஏஎஸ் , ஐபிஎஸ், சர்வீஸ் கமிஷன் போன்ற போட்டித் தேர்வுகள். இவற்றை எப்படி தேர்ந்தெடுப்பது?

இதுபற்றி சத்குரு ஜக்கி வாசுதேவ் என்ன சொல்கிறார்?

“உங்கள் வீட்டிற்கு ஒரு குழந்தை வரும்பொழுது, அது, நீங்கள் ஆசிரியர் ஆகும் நேரம் அல்ல, நீங்கள் கற்றுக்கொள்வதற்கான நேரம். ஏனென்றால், உங்களையும் உங்கள் குழந்தையையும் பார்த்தால், இதில் யார் அதிகமான ஆனந்தத்துடன் இருக்கிறார்கள்? உங்கள் குழந்தைதான், இல்லையா? எனவே அவனிடமிருந்து நீங்கள் வாழ்க்கையை கற்றுக்கொள்வதற்கான நேரம் இது. உங்களிடமிருந்து அவன் கற்றுக்கொள்வதற்கான நேரம் அல்ல. நீங்கள் உங்கள் குழந்தைக்குக் கற்றுத்தரக்கூடிய ஒரே விஷயம், பிழைத்தலுக்கான சில உபாயங்கள் – வாழ்க்கை நெருக்கடிகளில் இருந்து எப்படி தப்பிப்பது, எப்படி ஓரளவுக்கு பணம் சம்பாதிப்பது போன்றவைதான். ஆனால் உயிரோட்டமாய் வாழ்வது என்று வரும்போது, அதை ஒரு குழந்தை உங்களைவிட அனுபவபூர்வமாக அறிந்திருக்கிறது. நல்லபடியாக வளர்ப்பது என்றால், என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதையெல்லாம் குழந்தைகளுக்கு கற்றுத் தருவதல்ல; நீங்கள் செய்ய வேண்டியது ஒரு நல்ல சூழலை அவர்களுக்கு உருவாக்கித் தருவது மட்டுமே. உங்களுடைய தோட்டத்தை வளர்ப்பதற்கு தினம்தினம் நீங்கள் அங்கே சென்று உட்கார்ந்துகொண்டு இன்னும் மலரே வராத செடியிலிருந்து மலர்களையோ அல்லது பழங்களையோ பறித்தெடுக்க முயற்சிப்பது கிடையாது. தோட்டத்திற்குத் தேவையான சூழலை மட்டுமே உருவாக்குகிறீர்கள், அப்போது மலர்களும், பழங்களும் தானாக வருகின்றன. எனவே நீங்கள் சூழலை மட்டும் நன்கு பராமரித்தாலே குழந்தை நன்றாக வளர்கிறது. உங்களால் செய்யக்கூடியது அதுதான், அது மட்டுமல்ல செய்யப்பட வேண்டியதும் அதுதான்.” – சத்குரு ஜக்கி வாசுதேவ். நல்ல பெற்றோராக இருக்க விருப்பமா… இதைப் படியுங்கள்!

பெற்றோர்கள் அவர்கள் வாழ்கையில் செய்ய நினைத்தது, செய்ய முடியாமல் போனது எல்லாம் அவர்கள் குழந்தைகள் செய்ய வேண்டும் என்று எதிர் பார்ப்பது நியாயமில்லை. பெற்றோர்கள் தங்கள் கருத்துக்களை குழந்தைகள் மீது திணிக்காமல் இருப்பதே நல்லது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான திறமை எங்காவது ஒளிந்து இருக்குமே தவிர திறமை இல்லாத குழந்தைகள் இல்லவே இல்லை. குழந்தைகள் மேற்கொள்ளும் எந்தவொரு செயலும் அவர்களுக்குப் மிகவும் பிடித்ததாகவே இருக்கும். பெற்றோருக்கு இந்த செயல்கள் பிடிக்காமல் போகலாம். சில குழந்தைகளுக்கு ஓவியம் வரைவது பிடிக்கும்; சிலருக்கு சினிமா பாட்டு அல்லது கர்நாடக இசை விருப்பம்; ஒரு சிலர் நடனமாடிக்கொண்டேயிருப்பார்கள்; வேறு சிலருக்கு நன்றாகப் பேச வரும்; குறிப்பிட்ட சிலர் எந்த சிக்கலான உபகரணங்களையும் கழட்டி மாட்டி விடுவார்கள்; பலருக்கு விளையாட்டு பிடிக்கும், வேகமாக ஓடுவது, குறிபார்த்து அடித்தல், உடல்பலம் கொண்டு ஆடும் விளையாட்டுக்கள் என்று பல உண்டு. எனவே குழந்தைகளுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது என குழந்தைகளின் செயல்பாடுகளை வைத்தே கண்டு பிடிக்கலாம். மாறாக வகுப்பில் சக மாணவன் நீச்சல் கற்றுக்கொண்டால் நம் குழந்தையையும் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்காக யோசிக்காமலிருத்தல் நல்லது. குழந்தைகளை அவர்கள் போக்கிலேயே செல்லவிடுவது அவர்களுக்கு நல்லது. சிறு வயதிலிருந்தே சின்ன சின்ன முடிவுகளை தேர்ந்தெடுக்கப் பழக்குங்கள். தங்கள் வாழ்க்கையை என்னமாதிரி வாழ விரும்புகிறார்களோ அது போலவே வாழ்வதற்கு பெற்றோர்கள் உதவினால் அதுவே அவர்கள் ஆரோக்கியமாக வளர வழிவகுக்கும்.

தொடங்குங்கால் துன்பமாய் இன்பம் பயக்கும்
மடம் கொன்று அறிவு அகற்றும் கல்வி – குமரகுருபரர்

(கல்வியை ஒருவன் கற்கத் தொடங்கும் போது சிறிது துன்பமாகத்தான் இருக்கும். ஆனால் கற்கத் தொடங்கிவிட்டால் அதுவே இன்பமாக மாறும்)

ஹோவர்டு கார்டனர்

நம் குழந்தைகள் எல்லா விஷயத்திலும் புத்திசாலிகளாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்கிறார் டாக்டர் ஹோவர்டு கார்டனர் (Dr.Howard Gardner) என்ற அமெரிக்க காக்னிட்டிவ் சைக்காலஜிஸ்ட். அமெரிக்காவில் பென்சில்வேனியா நகரைச் சேர்ந்த ஹோவர்டு கார்டனரை ‘பல்திறன் கொள்கை’ (Multiple Intelligence) என்ற உளவியல் கொள்கை மூலம் பலருக்கு நன்றாக தெரியும். முதலில் Frames of Mind (1983) என்ற கட்டுரையில் ஏழு திறன்களை உலகுக்கு அறிவித்தார். பின்னாளில் இக்கோட்பாடு நீட்டிக்கப்பட்டு Intelligence Reframed (1999) என்ற கட்டுரையில் மாற்றியமைக்கப்பட்டது. கார்டனரின் பல்திறன் கோட்பாடு ஆசிரியர்களையும் (teachers) , பள்ளியின் தலைவர்களையும் (school leaders), சிறப்பு கல்வியாளர்களையும் (special educators) கவர்ந்தது. குழந்தைகளும், பருவ வயதினரும் பலவழிகளில் நுண்ணறிவாளனாய் இருக்க முடியும் என்று இவர்கள் புரிந்து கொண்டார்கள்.

Frames of Mind என்ற கட்டுரையில் ஐக்யூ டெஸ்ட் (IQ Test) எனப்படும் நுண்ணறிவு எண்ணை (intelligence quotient) பயன்படுத்தி ஒற்றை மாதிரி (unitary models) சார்ந்த அறிவார்ந்த திறமைகளை (intellectual ability) மட்டுமே அளவிட முடியும் என்பதால் அவற்றை நிராகரித்தார். புரியும்படி சொல்கிறேன். ஐ.கியூ. டெஸ்ட் எனப்படும் அளவிடல் முறையைப் பயன்படுத்தி குழந்தைகளின் ஒன்றிரண்டு அறிவை மட்டுமே சோதிக்க முடியும். இந்த ஐ.கியூ டெஸ்டை வைத்து ஒரு குழந்தையின் நுண்ணறிவினை துல்லியமாக மதிப்பிட முடியாது என்பது இவர் வாதம்.

ஐ.கியூ. டெஸ்ட்டுக்குப் பதிலாக கார்டனர் விவரித்தது சற்று சிக்கலான கொள்கையாகும். மனித அறிவுத்திறன் (human intelligence) என்பது தன்னாளுகைக்கு உட்பட்ட, ஒன்றிற்கொன்று தொடர்புடைய, அறிவுசார்ந்த கொள்திறன்களாகும் (relatively autonomous intellectual capacities). இவற்றின் எண்ணிக்கை எட்டு அல்லது அதற்கு மேல்.

பல்திறன் அறிவு (Multiple Intelligence)

1.தர்க்கரீதியான மற்றும் கணித அறிவு (Logical-mathematical intelligence)

தர்க்கரீதியாக ஆழமாக யோசித்து பகுத்தாயும் அறிவு. புதிரான கணித சிக்கல்களுக்கு விடை காணும் திறன். ஆய்வு முடிவுகளை ஒப்பிட்டு சரி பார்க்கும் திறன். பக்கவாட்டு சிந்தனை. உதாரணம்: சர்.சி.வி.ராமன், கணித மேதை இராமானுஜம், செஸ் சேம்பியன் விசுவநாதன் ஆனந்த்.

2. இசை-சந்தம் சார்ந்த அறிவு (Musical-Rhythmic Intelligence)

இசை-சந்தம் சார்ந்த அறிவு இசையை ரசித்தல், பாடுதல், இசையமைத்தல், இசைக்கருவிகளை மீட்டுதல் போன்ற செயல்களுடன் தொடர்புடையது. ஒலி வடிவங்களை உணரும் அறிவு, இசையின் மூலம் வெளிப்படும் உணர்ச்சிகள் போன்றவற்றுடனும் தொடர்புடையது. இவர்கள் இசை மற்றும் ரிதம் போன்ற வடிவங்களிலேயே தகவல்களை தங்கள் மனதில் பதிய வைத்துக் கொள்கின்றனர். தாங்கள் கேட்கும் இசையின் இராகங்களைக் கண்டறிதல், விமரிசனம் செய்தல், இசைக்கலவை (fusion) வடிவங்களை ரசித்தல், சுற்றிலுமிருந்து கேட்கும் மணியோசை, சல சலக்கும் நீரோடை, ஆர்ப்பரிக்கும் அருவி, வண்டுகளின் ரீங்காரம், பறவைகளின் ஒலி போன்றவற்றையும் ரசிக்கும் திறன் (அறிவு) படைத்தவர்கள் இவர்கள். உதாரணம்: பாடகர்கள், பாகவதர்கள், உபன்யாசகர்கள், விசிலடிப்பவர்கள், இசைக்கருவியினை மீட்டுபவர்கள், இசையமைப்பாளர்கள், மற்றும் இசைக்கலவை செய்வோர்.

3.மொழி அறிவு (linguistic intelligence)

சொற்களையும் மொழியையும் திறமையாகக் கையாளும் புலமை. சொற்கள் மற்றும் மொழி வழியாக சிந்திக்கும் புலமை. பிறர் பேசுவதைக் கவனிக்கும் திறன், சிலேடையாக அல்லது நையாண்டியாக பதிலளிக்கும் திறன், சுவையாய் கதை சொல்லும் திறன், திரைக்கதை அமைக்கும் திறன், நகைச்சுவையாய் பேசும் திறன், வாய்மொழியை நினைவில் தேக்கும் திறன் என்று பல திறன்கள்.

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல். – திருக்குறள் சொல்வன்மை. 643

பன்மொழியறிஞர்கள், சொற்பிறப்பு மொழியறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், பேச்சாளர்கள் மற்றும் குறுக்கு எழுத்து போட்டியாளர்கள். உதாரணம்: மொழியறிஞர் தேவநேயப்பாவாணர், பன்மொழிப்புலவர் க.அப்பாதுரையார், மறைமலையடிகள், பாரதியார், பாரதிதாசன், எழுத்தாளர்கள் திரு.வி.க, கி.வ.ஜகந்நாதன், ரா.பி.சேதுப்பிள்ளை, சிங்காரவேலர், நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன், சுஜாதா, இயக்குனர்கள் பாக்கியராஜ், கே.பாலச்சந்தர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்றவர்கள்.

4.உடல் சார்ந்த – உடலசைவுத் அறிவு (Bodily-kinesthetic intelligence)

உடலசைவு மற்றும் உடல் சார்ந்த அறிவுடையோர் தங்கள் இலக்கை அடைய உடல் இயக்கங்களைப் (bodily movements) பயன்படுத்தி துல்லியமாக சிந்திப்பவர்கள். இந்த அறிவு (திறன்) அறுவை சிகிச்சை நிபுணர்கள், தடகள வீரர்கள், கோமாளிகள் (mimes), நடன ஒருங்கிணைப்பாளர்கள் (choreographer), இயக்குனர்கள் (directors), யோகா ஆசிரியர்கள், உடற்பயிற்சியாளர்கள் (gymastics), கராத்தே வீரர்கள் போன்றோரிடம் மேலோங்கியிருக்கும். உதாரணம்: ப்ருஸ் லீ (karate), தீபா கர்மகர் (gymastics), மைம் மது (mimes), பிரபுதேவா (choreographers), ஆசனா ஆண்டியப்பன் (yoga teacher) போன்றோர்கள்.

5.காட்சி-இடம் சார்ந்த அறிவு (Visual – Spatial Intelligence)

காட்சி-இடம் சார்ந்த அறிவு என்பது பார்த்தல் மூலம் காட்சியை உள்வாங்கி மனதில் பதிய வைத்துக்கொள்ளும் நுண்ணறிவுத்திறன். காட்சி மூலம் புரிந்து கொண்டு சிந்திக்கும் திறன். தகவல்கள் இவர்கள் மனதில் பிம்பங்களாகவே பதிவாகின்றன. வரைபடங்கள், சார்ட்டுகள், ஸ்லைடு ஷோ, வீடியோ, கார்ட்டூன்கள் முப்பரிமாண விரியோக்கள், திரைப்படங்கள் போன்றவை தகவலை துல்லியமாக புரிந்து கொள்ள உதவுகின்றன. சுமார் 65 சதவிகிதம் பேர் காட்சி மூலம் கற்பவர்கள் (Visual learners) என்பது புள்ளிவிபரம். உதாரணம்: மாலுமி, சிற்பி, படம் வரைபவர், கண்டுபிடிப்பாளர், கட்டிடக்கலைஞர், உள் அலங்கரிப்பாளர், மெக்கானிக், பொறியாளர்.

6.பிறருடன் இணைந்து செயல்படும் அறிவு ( Interpersonal Intelligence)

பிறருடன் இணைந்து செயல்படும் அறிவு என்பது சமூகத்தொடர்பு மற்றும் மக்களைப்பற்றிய புரிதல் பற்றியது. மக்களின் நோக்கங்கள், உணர்வுகள், கண்ணோட்டங்கள் மற்றும் மனநிலை பற்றிய புரிதல்கள் மக்கள் தொடர்பு மேம்பட உதவும். உறவுகளைக் கையாளும் திறன், சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ளும் திறன், மோதல்களை (conflicts) கலந்துபேசி தவிர்க்கும் திறன் போன்ற திறன்கள் மக்கள் தொடர்பை மேம்படுத்த உதவும்.

இவர்களின் தனித்திறன்கள்: ஒரு விஷயத்தை அடுத்தவர் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் திறன் (இரட்டைக் கண்ணோட்டம்), கவனித்தல், பிறரின் எண்ண ஓட்டங்களையும் சிந்தனைகளை அறியும் திறன். கருத்துரை வழங்குதல், குழுக்களுடன் இணைந்து செயல்படுதல், மக்களின் மன நிலையை அறிதல், ஊக்கப்படுத்துதல், வார்த்தைகளுடனும் வார்த்தை இல்லாமலும் தகவல்பறிமாறுதல், நம்பிக்கையை உருவாக்குதல், அமைதியான வழியில் பிரச்சணைகளுக்கு தீர்வுகாணுதல், மக்களுடன் நேர்மறையான உறவு முறையைப் பேணுதல்.

7.தன்னை அறியும் அறிவு (Intrapersonal Intelligence)

அறிவுறும் தன்னை அறியாது அயலை
அறிவது அறியாமை அன்றி – அறிவோ?
அறிவு அயற்கு ஆதாரம் தன்னை அறிய
அறிவு அறியாமை அறும் – திருமந்திரம்

தன்னை அறியும் அறிவு என்பது தனக்குள்ளே தொடர்பு கொள்ளுதல். இதனை சுய மதிப்பீடு அல்லது சுய அலசல் (பகுப்பாய்வு) எனலாம். இது ஒரு உள்ளுணர்வு பயிற்சி. இப்பயிற்சியின் மூலம் ஒருவர் தனது ஆசைகள், கனவுகள், இலக்கு, பலம் (strength), பலவீனம் (weakness), வாய்ப்புகள் (opportunities), பயமுறுத்தல்கள் (threats), தோல்விகள் (failure), பயம் (fear), போன்ற தனித்துவமான மனிதராக்கும் காரணிகளைப் புரிந்துகொள்கிறார். சுயமாக தன்னை ஊக்குவித்துக் கொள்வது மூலம் எதிர்மறையான காரணிகளுக்குத் தீர்வு காண முடியும். உதாரணம் : ஆராய்ச்சியாளர்கள், கொள்கைவாதிகள், தத்துவஞானிகள்.

இயற்கை சார்ந்த அறிவு (Naturalistic Intelligence)

இயற்கை சார்ந்த அறிவு என்பது வாழ்க்கையின் வடிவங்களை (living patterns) அறிவது. அறிவியல் நியதிகளை (scientific reasoning) அன்றாட வாழ்வில் உபயோகித்து (application) புரிந்துகொள்ளுதல். உதாரணம் விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள, விஞ்ஞானிகள்.

திறன்களின் அடிப்படையில் கல்வி

ஹோவர்டு கார்டனரின் பல்திறன் கொள்கை அடிப்படையில் எட்டு விதமான அறிவாளிகள் உண்டு. அதில் உங்கள் குழந்தை எந்த வகை அறிவுடையவர்?ஒன்றிரண்டு திறன்களில் மேம்பட்ட குழந்தைகளையே இன்றைய கல்வி முறை மார்க் அடிப்படையில் வரிசைப்படுத்துகின்றது. அவர்களுக்குள் புதைந்து கிடக்கும் மற்ற திறன்கள் கண்டறியப்படாமலேயே போய்விடுகின்றது.

எனவே குழந்தைகளின் திறமைகளை கண்டறிவதில் பெற்றோர்களும், ஆசிரியர்களும் பெரும்பங்கு வகிக்கிறார்கள். குழந்தைகளின் தனித்திறமைகளைக் கண்டறிந்து அதற்கு ஏற்ற படங்களையும் (subjects), படிப்பையும் (course), வாழ்க்கையையும் (career) அவர்கள் தேர்ந்தெடுக்க உதவ வேண்டும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல்திறன்கள் மற்றும் பயன்கள் குறித்து ஆலோசனை வழங்க தொழில் சார்ந்த ஆலோசகர்கள் தேவை. வரும் காலங்களில் இவர்கள் பணி இன்றியமையாதது. குழந்தைகள், அவர்களுக்குள் இருக்கும் திறன்கள் அடிப்படையிலேயே மதிப்பிடப்படவேண்டும். இது தான் ஆரோக்கியமான எதிர்காலம் அமைய ஏற்ற வழி.

குறிப்பு நூற்பட்டி

  1. குழந்தைகளின் திறமையை கண்டறியுங்கள். விகாஸ்பீடியா
  2. நல்ல பெற்றோராக இருக்க விருப்பமா… இதைப் படியுங்கள்!

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in அறிவுத்திறன், உளவியல், கற்பிக்கும் கலை, பெற்றோர்கள் and tagged , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.