தீபாவளி மலர்கள்; தொலைக்காட்சி எல்லாவற்றிலும் டயபடிஸ், ஆஸ்த்மா, மூட்டுவலி இம்மூன்றுக்கும் தான் மிக அதிகமான, அற்புத சிகிச்சைகளின் விளம்பரங்களைப் பார்க்கிறேன். இவைகளைப் பற்றி எனக்குத் தனிப்பட்ட கருத்துக்கள் உண்டு. லட்சக்கணக்கான சக நோயாளிகளுக்கு உதவும் விதத்தில் நான் எழுத விரும்புவது டயபடிஸ் பற்றி…

(எழுதிய வருடம்: 25.10.1988)
உலகத்தில் டயபடிஸ்காரர்கள் எத்தனை பேர் ?
பதினேழரை கோடி. இன்னும் ஐந்து வருஷத்தில் இருபத்துநாலு கோடியாகப் போகிறது! இந்தியாவில்? போன வியாழக்கிழமை கணக்கிட்டபடி, நாலு கோடி இந்தியர்கள் டயபடிஸ்காரர்கள். அது 2010க்குள் பதினொன்றரைக் கோடியாகப் போகிறதாம்! உலகின் டயபடிஸ் தலைநகரம் இந்தியாதான் என்கிற சந்தேகத்துக்குரிய பெருமை நமக்கு உண்டு.
(ஜூனியர் விகடன் 2003)
டயபடிஸ் ஒரு நோய் அல்ல. ஒரு குறை. கையில்லை. கால் இல்லை என்பது போல் இன்சுலின் இல்லை. அதை செயற்கையாக வெளியிலிருந்து கொடுக்கிறோம். அவ்வளவுதான் அலோபதியின் ஆதார சிகிச்சை முறை. அதைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். இது ரொம்ப நாளாக மாறவில்லை.
25-10-1988
எனக்கு டயபடிஸ் இருந்தால், உங்களால் கண்டுபிடிக்க முடியுமா ?
!சுலபம். போன தடவை பார்த்ததற்கு, இந்தத் தடவை கொஞ்சம் சுருங்கித் தெரிவீர்கள். காபிக்கு ஷுகர் போடலாமா என்று கேட்டால், சற்று தாமதித்துக் கொஞ்சம் போடலாம் என்பீர்கள். நொறுக்குத் தீனி கொண்டு வைத்தால், கறிவேப்பிலையைக் கூட விட்டு வைக்காமல் சாப்பிட்டு விடுவீர்கள். இனிப்பு ஏதாவது கொண்டு வந்தால், கண்கள் பிரகாசமடையும். கல்யாணச் சாப்பாட்டில் இலை ஆரம்ப நிலைக்கு வந்ததுபோல், சுத்தமாக அத்தனையும் சாப்பிடுவீர்கள். அடிக்கடி தண்ணீர் குடிப்பீர்கள். ராத்திரி ஒரு முறையாவது புலி துரத்துகிற மாதிரி பயங்கரக் கனவு கண்டு எழுந்திருப்பீர்கள். அரைமணிக்கு ஒரு முறையாவது மூத்திரம் போவீர்கள். மனைவி – கணவனுக்குத் தெரியாமல் சாக்லேட், மைசூர்பா சாப்பிடுவீர்கள். காலை அடிக்கடி காலால் சொரிந்து கொள்வீர்கள். கண்ணைப் பார்த்ததும் கண்டு பிடித்து விடலாம் முதன்முறையாக. வருடாந்திரச் செக்கப்பில் ரத்தப் பரிசோதனை பண்ணிப் பார்த்தால் தெரிந்துவிடும்.
(ஜூனியர் விகடன் 2003)
இன்சுலின் குறைவாக சுரப்பவர்களுக்கு அந்த சுரப்பு சக்தியை ஊக்குவிக்கக்கூடியவை, யுக்ளுகான், டயனில் போன்ற மாத்திரைகள். இன்சுலினை நேரடியாக வாயில் போட்டு முழுங்க முடியாது. வயிற்றில் போனவுடன் அங்குள்ள அமிலங்கள், அதை பாகம் பிரித்து செயலிழக்க வைத்துவிடும். அதனால்தான் ஊசி.
இன்சுலின் தயாரிப்பில் முன்னேற்றங்கள் வந்துள்ளன. முதலில் பன்றியின் உடலிலிருந்து ‘போர்சைன்’ வகை, இன்சுலின் எடுத்து வந்தார்கள். மனித இன்சுலினை சோதனைச் சாலையில் இன்சுலின் சிந்த்ஸிஸ்என்னும் ஜெனெட்டிக் இன்ஜினியரிங் முறைப்படி தயாரிக்கும் வித்தையைக் கற்றுக்கொண்டு விட்டார்கள். இது ஒரு முக்கியமான முன்னேற்றம்.
25-10-1988
ரத்தமா?
!ஆம். அதிகாலை வெறும் வயிற்றில் சென்றால், சுமார் இரண்டு இன்ச் ரத்தம் எடுத்துக் கொள்வார்கள்.Fasting, மயக்கம் போடவில்லையென்றால், சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து, மறுபடி ஒரு postprandial ரத்தச் சோதனை. ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் 100, 130க்குள் இருக்கிறதா தெரிந்து விடும்.
?இதற்கு மெஷின் இருக்கிறதாமே ?
!இருக்கிறது. க்ளூக்கா மீட்டர் என்று. ஆனால், முதல்முறை நல்ல லேப்பில் பரிசோதித்துக் கொள்வது நல்லது. க்ளூக்கா மீட்டர்கள் சில சமயம் குறைத்துக் காட்டும். சில சமயம் கூடுதலாக… ரத்தத்தில் சர்க்கரை அளவு சாதாரணமாக எத்தனை இருக்க வேண்டும்? இதென்ன கணக்கு… 100,130 என்று? முன்னது 100க்குக் குறைவாகவும் பின்னது 130க்குக் குறைவாகவும் இருந்தால் எல்லாம் நலம். 100 மில்லி லிட்டருக்கு இத்தனை மில்லி கிராம் என்று கணக்கு.
(ஜூனியர் விகடன் 2003)