புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம் புதுக்கோட்டை நகரின் திருக்கோகர்ணம் பகுதியில் அமைந்துள்ளது. 1910 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மன்னர்களால் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியம் 107 வருடங்களாக பல காட்சிக்கூடங்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. தொல்லியல், நாணயவியல், விலங்கியல், இயற்கை அறிவியல், சிற்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த ஏராளமான தொல்பொருட்கள் இங்கே காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்திற்கு அடுத்தபடி, தமிழ் நாட்டின் இரண்டாம் இடத்திலுள்ள அரசு அருங்காட்சியகம் இது. இந்த பல்நோக்கு அருங்காட்சியகம் 1910 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழக அரசின் தொல்லியல் துறையின் கீழ் இயங்கும் இவ்வருங்காட்சியகம் ஒரு காப்பாட்சியர் பொறுப்பிலுள்ளது.
புதுக்கோட்டை சமஸ்தானம்
புதுக்கோட்டை சமஸ்தானம் தொண்டைமான் மன்னர் பரம்பரையால் (Thondaiman dynasty) 17 ஆம் நூற்றாண்டு முதல் இந்திய சுதந்திரம் அடையும் காலம் வரை ஆளப்பட்ட சுதேச அரசு (Princely state) ஆகும். சுதேச அரசாகும் முன்பு புதுக்கோட்டை, இராமநாதபுரம் சமஸ்தானத்தின் சேதுபதி ஆட்சியின் ஒரு பகுதியாக இருந்தது. இராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த திருமயத்தின் ஆளுநராக புதுக்கோட்டையைச்சேர்ந்த ரகுநாத தொண்டைமான் இருந்து வந்தார். இந்த ரகுநாத தொண்டைமான் இராமநாதபுரம் சமஸ்தானத்தின் மன்னர் கிழவன் சேதுபதியின் சகோதரி கதலி நாச்சியாரை மணந்த காரணத்தால் புதுக்கோட்டைப் பகுதியை சுதந்திர சமஸ்தானமாக பிரகடணம் செய்து தொண்டைமானுக்கு அளித்தார்.
இந்நகரில் உள்ள பழைய அரண்மனை ஒன்று இந்நாள் தமிழ் நாடு அரசின் அலுவலமாக செயல்படுகின்றது. இந்த அரண்மனை, வரலாற்றாசிரியர்கள், மானுடவியலாளர்கள், தொல்பொருள் ஆய்வாளர்கள் மற்றும் கலைக் காதலர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து சேகரிக்கப்பட்ட பல கற்திட்டைகள் (dolmens). கல்வட்டங்கள் (stone circles) மற்றும் பல பெருங்கற்கால இடுகாடுகள் (megalithic burials) எல்லாம் இந்த மாவட்டத்தின் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட (prehistoric) தொன்மையைப் பறைசாற்றுகின்றன. இந்த நிலப்பகுதிகள் சங்க இலக்கியங்களில் வருணிக்கப்பட்டுள்ளன.
அருங்காட்சியகத்தின் காட்சிப்பொருட் பிரிவுகள்
இந்த அருங்காட்சியகத்தில் தொன்மை சிறப்புமிக்க பல சேகரிப்புகள் சித்தன்னவாசல், குடுமியான்மலை, நார்த்தாமலை, திருமயம் கோட்டை, மற்றும் இலுப்பைக்குடி அய்யனார் கோவில் போன்ற இடங்களிலிருந்து பெறப்பட்டவை.
கலை மற்றும் தொழில்துறை (Arts and Industries) பிரிவு: உள்ளூர் கலை மற்றும் தொழில்துறை தொல்பொருட்கள். இசைக்கருவிகள், கூத்து கலைப்பொருட்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இயற்கை வரலாற்று (Natural History) பிரிவு: உலர் தாவரங்கள் மற்றும் மூலிகைப்பொருட்கள் உள்ளன.
இனப்பண்பாட்டியல் (Ethnology) பிரிவு: தேர்ந்தெடுத்த போர்க்கருவிகள் (arms) , கவசங்கள் (armour) மற்றும் தொல் தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள், முதுமக்கள் பானைகள், சுடுமண் படிமங்கள், மாந்த உடல் மாதிரிகள், கல் வகைகள், தொல்லுயிரிப் படிமங்கள், கனிமங்கள் எல்லாம் இக்காட்சிக் கூடத்தில் இடம்பெற்றுள்ளன
நாணயவியல் (Numismatics): நேர்த்தியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய நாணயங்களின் தொகுப்பு இங்கு காணக்கிடைக்கிறது.
தொல்லியல் (Archaeology): புதுக்கோட்டை சமஸ்தானத்தின் பிரசித்தி பெற்ற பண்டைய நினைவுச் சின்னங்கள், கல்வெட்டுக்கள், செப்பேடுகள், மிக அபூர்வமான கல் சிற்பங்கள். மற்றும் உலோகப் படிமங்கள், கலைப்பொருட்கள், எல்லாம் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கலைக் காட்சிக் கூடம் – ஓவியங்கள் பிரிவு: இங்குள்ள கலைக் காட்சிக் கூடத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஓவியங்களைக் காணலாம்.
விலங்கியல் பிரிவு: பதப்படுத்தப்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் எல்லாம் இங்கு காணக்கிடைக்கின்றன.
குறிப்புதவு நூலகம் (Reference Library): பனையோலைகள் மற்றும் அருங்காட்சியக வெளியீடுகள்.

புதுக்கோட்டை தர்பார். ராஜா ரவிவர்மா ஆயில் பெயின்டிங். படம் உதவி சைபர் கேரளா
அண்மைக் காலத்தில் அருங்காட்சியகம் பெருமளவில் தொல்பொருட்களைச் சேர்த்துள்ளது. எனவே இங்கு உங்கள் நேரம் பயனுள்ள வழியில் செலவாகும்.
வேலை நேரம்: இந்த அருங்காட்சியகம் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமை, இரண்டாம் சனிக்கிழமை, மற்றும் தேசிய விடுமுறை தினங்களில் இந்த அருங்காட்சியகம் மூடப்பட்டிருக்கும்.
குறிப்புநூற்பட்டி
- புதுக்கோட்டை அருங்காட்சியகம் தமிழ் விக்கிபீடியா
- 103-year-old Pudukottai Museum gets facelift R. Rajaram The Hindu July 16, 2013
பிங்குபாக்: புதுக்கோட்டை மாவட்ட வரலாறு, தொல்லியல் நினைவுச் சின்னங்கள் மற்றும் சுற்றுலா | அகரம்