திரு. செந்தீ நடராசன் எழுதி வெளியிட்டுள்ள ‘தொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம்’ என்ற நூல் ‘பழந்தமிழ் எழுத்து வடிவங்களான தமிழ் பிராமி, வட்டெழுத்து, கிரந்தம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் ஒரு தொடக்க நூல்.’ இந்த எழுத்துக்களின் ‘பரிமாணங்களை, வளர்ச்சிகளை’ இந்த நூல் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை. இப்பொருள் பற்றி தொல்லியல் அறிஞர்கள் எழுதிய சில நூல்களில் மேலதிகமாகத் தெரிந்து கொள்ளலாம்.
இந்நூல் ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று பகுதிகளில் முறையே தமிழி என்னும் தமிழ் பிரம்மி, வட்டெழுத்து மற்றும் கிரந்த வரி வடிவங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. நான்காம் பகுதி அளவைகள் – குறியீடுகள் பற்றி ஒரு பக்க பட்டியல் ஒன்று காட்டப்பட்டுள்ளது. முகத்தலளவை மற்றும் நிலஅளவை அலகுகள் (units) பட்டியலிடப்பட்டுள்ளன. ஐந்தாம் பகுதி தமிழ் எண்களின் (Tamil Numerals) வரிவடிவம் மற்றும் பரிணாம வளர்ச்சியினை விவரிக்கும் பட்டியல் ஒன்று காட்டப்பட்டுள்ளது. ஆறாம் பகுதி தமிழகக் கல்வெட்டு முதலிய ஆவணங்களில் வழங்கப்படும் ஆண்டுக்கணக்கு பற்றி சுருக்கமாக சொல்லப்பட்டுள்ளது.
தமிழி என்னும் தமிழ் பிரம்மி பற்றி ஒரு சுருக்கமான அறிமுகத்துடன் துவங்கும் முதற்பகுதியில் தமிழ் பிராமியின் உயிர் எழுத்துக்கள் (10), மெய்யெழுத்துக்கள் (18) மற்றும் உயிர்மெய் எழுத்ததுக்களின் (180) வரி வடிவங்கள் பெரிய எழுத்துருக்களில்(font) வரைந்து காட்டப்பட்டுள்ளன. பக்கத்திற்கு 12 வரி வடிவங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. தமிழ் மற்றும் ஆங்கில ஒலிக்குறிப்புகள் அந்தந்த கட்டங்களிலேயே இணைத்துக் காட்டப்பட்டுள்ளன. நினைவில் கொள்ள வேண்டிய குறிப்புகள் மற்றும் தொன்மை வாய்ந்த தமிழ் பிராமி கல்வெட்டுகள் உதாரணமாகக் காட்டப்பட்டுள்ளன. அசோகன் பிராமி வர்க்க எழுத்துக்களின் வரி வடிவங்கள் அடங்கிய பட்டியலும் தரப்பட்டுள்ளது. மொழி பயிற்சியில் சில அறிவுறுத்தல்கள் (instructions) உங்களுக்கு பயனளிக்கும்.
வட்டெழுத்து பற்றி ஒரு சுருக்கமான அறிமுகத்துடன் துவங்கும் இரண்டாம் பகுதியில் வட்டெழுத்தின் உயிர் எழுத்துக்கள் (11), மெய்யெழுத்துக்கள் (18) மற்றும் உயிர்மெய் எழுத்ததுக்களின் (191) வரி வடிவங்கள் பெரிய எழுத்துருக்களில் (fonts) வரைந்து காட்டப்பட்டுள்ளன. பக்கத்திற்கு 12 வரி வடிவங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. தமிழ் மற்றும் ஆங்கில ஒலிக்குறிப்புகள் அந்தந்த கட்டங்களிலேயே இணைத்துக் காட்டப்பட்டுள்ளன. குமரி மாவட்டம் , கேரளாவில் காணப்படும் ‘ற’ மற்றும் ‘ன’ குறித்த வட்டெழுத்துக்களின் வரிவடிவ வேறுபாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. மொழி பயிற்சியில் சில அறிவுறுத்தல்கள் (instructions) உங்களுக்கு பயனளிக்கும்.
கிரந்தம், அதன் வளர்ச்சி பற்றிய சுவையான விளக்கங்கள் மூன்றாம் பகுதியில் தரப்பட்டுள்ளது. கிரந்தத்தின் உயிர் எழுத்துக்கள் அஸஹ (16), அகரமேறிய மெய்யெழுத்துக்கள் – ஹலஹ (35) மற்றும் பிற உயிர்மெய்களின் (குறியீடுகளுடன்) வரி வடிவங்கள் பெரிய எழுத்துருக்களில் வரைந்து காட்டப்பட்டுள்ளன. தமிழ் மற்றும் ஆங்கில ஒலிக்குறிப்புகள் அந்தந்த கட்டங்களிலேயே இணைத்துக் காட்டப்பட்டுள்ளன. கூட்டெழுத்தில் கிரந்தம் எழுதுவதற்கான விதிமுறைகள் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளன. மொழி பயிற்சியில் சில அறிவுறுத்தல்கள் (instructions) உங்களுக்கு பயனளிக்கும்.
இந்நூலாசிரியர் செந்தீ நடராசன் அவர்கள் ஒரு சிறந்த கல்வெட்டு ஆய்வாளர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர். ‘தொல் தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம் கல்வெட்டுத் துறைக்கே சிறப்புச் செய்யும் நூல்.’ ‘பண்பாட்டுத் தளங்கள் வழியே’ இவரது மற்றோரு ஆய்வுக் கட்டுரை நூலாகும். அரசுப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர் நாகர்கோவிலில் வசிக்கிறார். இவருக்கு கல்வெட்டுத்துறை பற்றிய அறிமுகத்தையும் ஆர்வத்தையும் தூண்டிய திரு.தே.கோபால் அவர்களை நன்றியுடன் நினைவுகூர்கிறார்.
நூற்பட்டியல்
- புத்தகத் தலைப்பு: தொல்தமிழ் எழுத்துக்கள்: ஓர் அறிமுகம்
- ஆசிரியர்: செந்தீ நடராசன்
- பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
- ஆண்டு: 2013
- பதிப்பு: 1
- ISBN 8123424019, 9788123424019
- பக்கம்: 67 பக்கங்கள்
பார்க்க
சிற்பங்கள் தொன்மங்களைச் சித்திரிக்கின்றன: செந்தீ நடராசன் நேர்காணல். தமிழ் இந்து 16 மார்ச் 2015.