அக்கினேனி நாகார்ஜுனாவின் தெலுங்கு திரைப்படம் ‘ஓம் நமோ வெங்கடேசாய‘, பிரம்மாண்ட நாயகன் என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்படுகின்றது. ஹாதிராம் பாவாஜி கடவுளைத் தேடி வட இந்தியாவிலிருந்து வந்தவர். வேங்கடவனே தெய்வமென குடில் அமைத்து திருமலையில் தங்கிவிட்டார். ஓம் நமோ வெங்கடேசாய இந்த பக்தரின் சுயசரிதை.
சென்ற 2017 பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி தெலுங்கில் வெளிவந்து வெற்றி பெற்ற இப்படத்தில் அக்கினேனி நாகார்ஜுனா, அனுஷ்கா ஷெட்டி, பிரயக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதி பாபு, சௌரப் ராஜ் ஜெயின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.ராகவேந்திரராவ் இயக்கி 144 நிமிடங்கள் ஓடும் படம் இது. எம்.எம்.கீரவாணி இசை அமைக்க கோபால் ரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.மகேஷ் ரெட்டி, ஏ,எம்.ஆர். சாய் கிருபா எண்டர்டெயின்மெண்ட் என்ற பேனரில் தயாரித்துள்ளார்.
ஹாதிராம் பாவாஜி வடஇந்தியாவில் பிறந்தவர். கோவில்கள் தோறும் கடவுளைத்தேடி அலைந்தார். கடைசியில் திருப்பதி-திருமலைக்கு வந்தார். வெங்கடேசப்பெருமாளின் தரிசனம் கிடைத்தது. தான் தேடிய தெய்வம் வெங்கடேச பெருமாள் என்று உணர்ந்ததும் திருமலையிலேயே ஒரு சிறு குடிலை அமைத்துக் கொண்டு தாங்கினார். சதாசர்வகாலமும் பெருமாள் சிந்தனைதான். இவருடைய வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவம்தான் ஓம் நமோ வெங்கடேசாய திரைப்படத்தின் கதை. இந்தக் கதை பெருமாளுக்கும் அவர்தம் பக்தனுக்குமிடையில் ஏற்பட்ட பக்தி உணர்வு பற்றியது.

ஹாதிராம் பாவாஜி பெருமாளுடன் தாயம் விளையாடுகிறார் படம் உதவி விகடன்
ஹாதிராம் பாவாஜியின் மடம் திருமலை கோவிலுக்கு வலது பக்கம் உள்ள மேட்டில் அமைந்திருக்கிறது. இந்த மடம் ஒரு காலத்தில் மிக முக்கியமான பங்காற்றியிருக்கிறது. திருமலை திருப்பதி உற்சவங்கள் எல்லாம் பாவாஜி மடத்தின் மேற்பார்வையிலேயே நடைபெற்றன.
இயக்குனர் கே.இராகவேந்திர ராவ் மற்றும் சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா வெற்றிக் கூட்டணியில் உருவான தெலுங்கு மற்றும் இந்திப் படங்கள் இவை: அக்னி புத்துருடு (Agni Puthrudu – 1987 – Telugu); ஜானகி ராமுடு (Janaki Raamudu – 1988 – Telugu); அஹாரி போராட்டம் (Aakhari Poratam 1988 – Telugu) சூப்பர் ஹிட்; அக்னி (Agni 1989 – Telugu); ஷிவ தாதா (Shiva Dada 1991 – Hindi); காரண புல்லோடு (Gharana Bhullodu 1995 – Telugu); அன்னமய்யா (Annamayya 1997 – Telugu) சூப்பர் ஹிட்; திருப்பதி ஸ்ரீ பாலாஜி (Tirupati Shree Balaji 2006 – Hindi); ஸ்ரீ இராமதாசு (Sri Ramadasu 2006 – Telugu) மற்றும் ஷீர்டி சாய் (Shirdi Sai 2012 – Telugu). இந்த இணை புராணப்படங்கள் எடுப்பதில் தங்களை சிறப்பாக நிரூபித்துள்ளனர்..
ஓம் நமோ வெங்கடேசாய என்ற படத்தின் மூலம் மீண்டும் இதனை நிரூபித்துள்ளார். அநேகமாக இப்படம் நாகார்ஜுனாவின் சிறந்த நடிப்பிற்கு எடுத்துக்காட்டு எனலாம். வெங்கடேஸ்வரப் பெருமாளின் பக்தராக இவர் உருகி நடிக்கும் நடிப்பு உங்களை மெய்மறக்கச் செய்துவிடும். பெருமாளை காண விரும்பும் பக்தனாக இவர் காட்டும் முகபாவம் மூலமாக தன் ரசிகர்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச்சென்று விடுகிறார். கிளைமாக்சில் இவர் நடிப்பு உங்களை மெய்சிலிர்க்க வைக்கும்.
இப்படத்தில் பல தகவல்களை நாம் தெரிந்து கொள்ள முடியும். திருமலை எவ்வாறு தோன்றியது? விமானத்துக்கு ஆனந்த நிலையம் என்ற பெயர் என் சூட்டப்பட்டது? வேங்கடம் என்ற வார்த்தைக்கு என்ன பொருள்? திருமலையில் எப்படி வணங்க வேண்டும்? என்று பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.