கள்ளழகர் கோயில், அழகர் கோயில்

மதுரை நகரைச் சுற்றி இயற்கை எழில் நிறைந்த இடங்கள் என்று அழகர்கோயில், புல்லூத்து, நாகதீர்த்தம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். படிக்கும் காலத்தில் அழகர்கோயிலுக்கு நான் அடிக்கடி சென்று வந்ததுண்டு. காலையில் பஸ் பிடித்து அழகர்கோயிலுக்குச் சென்று கோயில், மலை எல்லாம் சுற்றிவிட்டு மாலையில் வீடு திரும்பியதுண்டு. அப்போது அவ்வளவு கூட்டம் இல்லை; மரங்களடர்ந்த காடுகள், எங்கும் பசுமையான சூழல். ஓங்கி உயர்ந்த கோபுரம், அழகிய சிற்பங்கள் நிறைந்த மண்டபத்தூண்கள், இன்றும் அழகுறக் காட்சியளிக்கும் ஓவியங்கள், பதினெட்டாம்படிக்கருப்புக்கு பயபக்தியுடன் நேர்த்திக்கடன் செலுத்தும் கிராமத்து மனிதர்கள், திவ்யதேச பெருமாளை சேவிக்கும் வைணவர்கள், ஜில்லென்று தண்ணீருடன் நூபுரகங்கை தீர்த்தத் தொட்டி, மாதவி மண்டபத்தின் ராக்காயி அம்மன், சலலக்கும் சிலம்பாறு, வேல்வணக்கத்தில் தொடங்கிய பழமுதிர்ச்சோலை முருக வழிபாடு இவை எல்லாம் அழகர்கோயிலின் சிறப்பு அம்சங்கள். சங்க இலக்கியங்கள் இக்கோயில் பற்றிக் குறிப்பிடுகின்றன. ஆறு ஆழ்வார்கள் பெருமாளை சுந்தரத் தமிழில் பாடியுள்ளார்கள். இந்த பதிவு அழகர்கோயிலைப் பற்றி.

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம். அழகர்கோயில் பின் கோடு 625301 சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் வரலாற்று சிறப்புமிக்க கிராமம். இத்தலம் திருமாலிருஞ்சோலை, மாலிருங்குன்றம், இருங்குன்றம், சோலை மலை,   தென்திருப்பதி உத்யான சைலம், வனகிரி, விருஷபாத்திரி அல்லது இடபகரி என்ற பெயர்களையும் கொண்டுள்ளது. அழகர்மலை என்ற குன்றம் கிழக்கு மேற்காக 18 கி.மீ நீளமும் 320 மீட்டர் உயரமும் கொண்டது. இம்மலையிலிருந்து நான்கு புறமும் பல சிறிய மலைகள பிரிந்து செல்கின்றன. அழகர்மலையின் தெற்குப்புற அடிவாரத்தில் தான் கள்ளழகர் கோயில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 9.33°N அட்சரேகை : (லாட்டிட்யூட்) 78.03°E தீர்க்கரேகை : (லான்ஜிட்யூட்) ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 300 மீட்டர் (984 அடி) உயரத்தில் இருக்கின்றது. இவ்வூர் அமைவிடம் மதுரையிலிருந்து 21 கி.மீ தொலைவு ; மேலூரிலிருந்து 16 கி.மீ தொலைவு; நத்தத்திலிருந்து 56 கி.மீ தொலைவு; திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திலிருந்து 119 கி.மீ; சென்னையிலிருந்து 365 கி.மீ. தொலைவு.

t_500_695

கள்ளழகர் திருக்கோயில் PC: தினமலர்

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 93 வது திவ்ய தேசம். கள்ளழகர் திருக்கோயில் என்னும் அழகர்கோயில், மலையின் அடிவாரத்தில் உள்ள, கோட்டைக்குள் அமைந்துள்ளது. கோவிலைச் சுற்றி உள்கோட்டை எனப்படும் இரணியன் கோட்டையும் மற்றும் வெளிக்கோட்டை எனப்படும், அழகாபுரிக் கோட்டையும் அமைந்துள்ளன. ஆழ்வார்களின் காலத்திற்கு பிறகு கோட்டைகள் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. அழகாபுரிக் கோட்டை எனப்படும் வெளிக்கோட்டை கி.பி. 14 – ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை அரசாண்ட வானாதிராயர்களால் கட்டப்பட்டது.

alagarkoil-temple-and-shrine-977443441

அழகர்கோயில் மொட்டைக்கோபுரம் PC: INSPIROCK

புஷ்கரணி என்னும் திருக்குளம்:- நூபுரகங்கை மற்றும் சிலம்பாறு ஆகிய இரண்டும் ஆகும். நூபுரகங்கையின் மூலம் தெரியவில்லை. இது கோமுகி வாயிலிருந்து விழுவதைக் காணலாம். இந்த நீர் மாதவி மண்டபத்தை அடைந்து அங்கிருக்கும் பெரிய தொட்டியை நிறைக்கிறது. நிரம்பி வழியும் நூபுரகங்கை அழகர்மலை வழியாக மலையடிவாரத்தை அடைகின்றது. மலையில் தவழும் அந்த ஆறு தேனாறு என்றழைக்கப்படுகிறது. இந்த நீர் மிகவும் சுவை மிக்கது. தலவிருட்சம் ஜோதிவிருட்சம் மற்றும் சந்தன மரம்.

மண்டபங்கள்

இக்கோவிலுடன் மொத்தம் 11 மண்டபங்கள் இணைந்துள்ளன: 1.தேர் மண்டபம் (Car mandapam), வெளிக்கோட்டைப் பகுதியில் உள்ளது; 2.யானை வாகன மண்டபம் (Elephant vehicle mandapam) இரணிய வாசலுக்கு இடப்புறம் உள்ளது; 3.பதினாறுகால் மண்டபம் என்னும் ஆண்டாள் மண்டபம் Sixteen pillared mandapam (Aandal mandapam). சித்திரை திருவிழாவில் ஆண்டாள் இம்மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.; 4.கொண்டப்ப நாயக்கர் மண்டபம் (Kondappa Naicker mandapam). ஆண்டாள் மண்டபத்திற்கு வடப்புறத்தில் உள்ளது; 5.திருக்கல்யாண மண்டபம் (Thirukkalyana mandapam). எதிராசன் திருமுற்றத்தின் நடுவில் உள்ளது.; 6. கோடைத்திருநாள் மண்டபம் (Kodaithirunal mandapam); 7.பொன்வேய்ந்த பெருமாள் மண்டபம் (Ponveintha Perumal mandapam – Constructed by Sundara Pandyan); 8.ஆரியன் மண்டபம் என்னும் படியேற்ற மண்டபம் (Aryan mandapam or Padiyetra mandapam); 9.மகாமண்டபம் என்னும் அலங்காரமண்டபம் (Maha mandapam or Alangara mandapam); 10.வசந்த மண்டபம் (Vasantha mandapam); 11.மாதவி மண்டபம் (நூபுரகங்கை ராக்காயி அம்மன் கோவில்) (Madhavi mandapam (Noopura Gangai – Rakkaayee Amman Temple).

alagarkoil-temple-and

அழகர்கோயில் கல்யாண மண்டபம் PC: Trip Advisor

இக்கோவிலின் இராஜகோபுரம் திருமலை நாயக்கரால் தொடங்கப்பட்டு முற்றுப்பெறாத நிலையிலுள்ளது. உருக்குலைந்த நிலையிலும் இராஜகோபுரத்தின் சிற்ப வேலைப்பாடுகள் கலையழகுடன் திகழ்கின்றன. உட் கோட்டையின் தெற்கு வாசலுக்கு இரணியம் வாசல் என்று பெயர். இக்கோவிலின் கோபுரம் பெரியது. யானை வாகன மண்டபத்திற்கு வடக்கில் அமைந்துள்ள கோபுரத்தின் இரட்டைக்கதவுகள் எப்பொழுதும் அடைக்கப்பட்டிருக்கும். இக்கதவு தான் பதினெட்டாம் படிக் கருப்புசாமியாக வழிப்படப்படுகிறது. இக் கருப்புசாமியே கள்ளழகர் மற்றும் அழகர் மலையின் காவல் தெய்வமாகும். கோபுர வாசலில் காணப்படும் கல்வெட்டுக்கள் பல. விஜயநகர அரசர் கிருஷ்னதேவராயர் கல்வெட்டு மூலம் சில தகவல்களை அறியலாம். கொண்டப்பநாயக்கர் மண்டபத்திற்கு வடமேற்கில் வண்டிவாசல் எனப்படும் வாசல் உள்ளது.  இதற்கு அருகில் சற்று மேற்கு திசையில் எதிராசன் திருமுற்றம் உள்ளது. திருக்கல்யாணமண்டபத்தில் பங்குனி உத்திர திருவிழாவின் நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். இம்மண்டபத்தில் உள்ள கல் தூண்களில் நரசிம்மர் அவதாரம், கிருஷ்ணன், கருடன், மன்மதன், ரதி, திரிவிக்கிரமன் அவதாரம், இலக்குமி வராகமூர்த்தி ஆகிய புடைப்புச்சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. இவை விஜயநகர அரசர்கள் மற்றும் நாயக்கர் காலங்களில் நடந்த திருப்பணிகளாகும். எதிராசன் திருமுற்றத்தில் பல மடங்கள் வைணவம் வளர்த்தன. இராமானுஜர் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட திருமாலிருஞ்சோலை ஜூயர் மடம் சிறந்து விளங்கியது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை இம்மடத்தில் பல ஜீயர்கள் வைணவத் தொண்டாற்றியுள்ளார்கள். வசந்த மண்டபத்தில் அழகிய ஒவியங்கள் இராமாயணம் மற்றும் மகாபாரதம் நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கின்றன.

முதலில் நாம் நுழையும் வாசலுக்கு தொண்டமான் கோபுர வாயில் என்று பெயர். மூலவர் சன்னதிக்கு செல்லும் முன்பு சுந்தரபாண்டியன் மண்டபம், சூரியன் மண்டபம். முனையத்தரையர் மண்டபம் போன்ற மண்டபங்களைக் காணலாம்.

மூலவர்

kalazhagar

மூலவர் ஸ்ரீ பரமஸ்வாமி

மூலவர் ஸ்ரீ பரமஸ்வாமி நின்ற திருக்கோலத்தில் கல்யாண சுந்தரவல்லி தயார் வலப்புறத்திலும் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் இடப்புறத்திலும் புடைசூழ சேவை சாதிக்கிறார். மூலவரின் கருவறை மீது எழுப்பப்பட்டுள்ள சோமசந்த விமானம் வட்ட வடிவமானது. தூங்கானை (கஜப்ருஷ்ட) விமான அமைப்பு இக்கோவிலின் சிறப்பாகும். அதிஷ்டானம் முதல் பிரஸ்தாரம் வரை கல்லால் அமைக்கப்பட்டது. இதற்கு மேல் பொன்வேய்ந்த சிகரம், ஸ்தூபி ஆகிய எல்லாம் சுதையால் அமைக்கப்பட்டுள்ளது. விமானத்தைச் சுற்றி திருச்சுற்று மண்டபம் அமைந்துள்ளது. மூலவரின் வேறு பெயர்கள் கள்ளழகர், மாலங்காரர், மாலிருஞ்சோலை நம்பி என்பனவாகும்.

history_front

மூலவர் சோமசந்த விமானம் PC: TNHRCE

உற்சவர் சுந்தரராஜர். உற்சவர் மூலவர் ஆகிய இருவரும் பஞ்ச ஆயுதங்களான சங்கு, சக்கரம் (மூலவர் பிரயோக சக்கரம்), வாள், கோதண்டம் (வில்) மற்றும் கதையுடன் காட்சி தருகிறார்கள். உற்சவர் திருமேனி அபரஞ்சிதம் என்ற தூய தங்கத்தால் செய்யப்பட்டதாக நம்பப்படுகின்றது. திருமஞ்சனம் நூபுரகங்கை நீரால் செய்யப்படுகின்றது. வேறு நீர் பயன்படுத்தினால் உற்சவர் மேனி கருத்து விடுகின்றது. ஸ்ரீ சுந்தர பாஹு ஸ்ரீ ஸ்ரீனிவாசர் போன்ற நித்ய உற்சவர் திருமேனிகள் சுத்தமான வெள்ளியால் செய்யப்பட்டுள்ளன. யமதர்மன் பெருமாளை சேவிக்க தினமும் இரவில் வந்து செல்வதாக ஐதீகம்.

தயார் சன்னதி

தயார் கல்யாண சுந்தரவல்லி என்ற ஸ்ரீதேவி தனிக்கோயிலில் குடிகொண்டுள்ளதால் தனிக்கோவில் தாயார் என்று பெயர். கல்யாண சுந்தரவல்லி தாயாரின் சன்னதி கலைநயத்துடன் உள்ளது. இங்கு மஞ்சள் பிரசாதமாக வழங்கப்படுகின்றது.

பரிவார தேவதைகள்

முதல் பிரகாரத்தில் சுதர்சனர் (சக்ரத்தாழ்வார்), யோக நரசிம்மர், ஸ்ரீ ஆண்டாள், கருப்பசாமி ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது. கருப்புச்சாமி சன்னதியில் உள்ள விமானம் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது. ஜ்வால நரசிம்மர் சன்னதி முதல் பிரகாரத்தில் மூலவர் சன்னதிக்கு நேர் பின்னால் அமைந்துள்ளது. இவர் உக்ர நரசிம்மர் ஆவார். இவர் உக்கிரம் தணிக்க தினமும் நூபுர கங்கை நீர், தயிர், வெண்நெய், தேன் போன்றவற்றால் திருமஞ்சனம் நடைபெறுகிறது . இவருடைய சன்னதிக்கு மேல் உள்ள அடிக்கூரை திறந்து வைக்கப்பட்டுள்ளதால் இவர் உக்கிரம் தனியும் என்பது நம்பிக்கை. வெளிப் பிரகாரத்தில் தும்பிக்கை ஆழ்வார் மற்றும் சேனைமுதலியார் சன்னதிகள் உள்ளன. இந்த தளத்தின் ஷேத்ரபாலகர் வைரவர் ஆவார்.

ஆழ்வார்கள் மங்களாசாசனம்

இக்கோயில் பூதத்தாழ்வார் (3 பாசுரங்கள்), பேயாழ்வார் (1 பாசுரம்), நம்மாழ்வார் (36 பாசுரங்கள்), பெரியாழ்வார் (24 பாசுரங்கள்), ஆண்டாள் (11 பாசுரங்கள்), திருமங்கையாழ்வார் (33 பாசுரங்கள்), ஆகிய ஆறு ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று. மணவாளமாமுனிகள், உடையவர் இராமானுஜர், கூரத்தாழ்வார் போன்றோரும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும்பரந் திட்டனவால்
மந்தரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ் சாறுகொண்ட
சுந்தரத் தோளுடையான் சுழலையினின் றுய்துங்கொலோ
பெரியாழ்வார் திருமொழி 587

திருப்பணிகள்

பல பாண்டிய மன்னர்கள் அழகர்கோயிலுக்கு பல்வேறு திருப்பணிகளை செய்துள்ளனர். ஜடாவர்ம பாண்டியன் (1251-1270) அழகர்கோயில் மூலவர் சன்னதி மேல் உள்ள சோமசந்த விமானத்திற்கு தங்க முலாம் பூசிய தகடுகளை பதித்தார். அதன் பிறகு தங்க விமானம் புதுப்பிக்கப்படவில்லை. 800 ஆண்டுகளுக்கு பிறகு 2007இல் அழகர்கோயில் மூலவர் தங்க விமானம் முற்றிலும் பிரிக்கப்பட்டு முலாம் பூசப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ஐந்து கோடி ரூபாயாகும்.  2011இல் நடந்த கும்பாபிஷேகத்திற்காக கோயில் பிரகாரங்கள், மண்டபங்கள், மேற்கூரை அனைத்தும் புதுப்பிக்கப்பட்டுள்ளன . கோபுரங்கள், சன்னதிகள் வர்ணம் பூசப்பட்டுள்ளன.

சங்கஇலக்கியங்களில் அழகர்கோயில்

பரிபாடல்

இளம் பெரு வழுதியார் இயற்றிய பரிபாடலின் பதினைந்தாம் பாடல் 66 அடிகளைக் கொண்டுள்ளது. இப்பாடலுக்கு இசை அமைத்தவர் மருத்துவன் நல்லச்சுதனார். அழகர்கோவில் எனும் திருமாலிருஞ்சோலை குன்றம் பற்றிப் பாடல் புகழ்கிறது. திருமாலின் பெருமையை ஓங்கி உயர்த்திச் சொல்கிறது.

கள்ளணி பசுந்துளவினவை, கருங்குன்றனையவை:
ஒள்ளொளியவை; ஒருகுழையவை ;
புள்ளனி பொலங் கொடியவை ;
வள்ளணி வளைநாஞ்சிலவை;
சலம்புரி தண்டேந்தினவை;
வலம்புரி வய நேமியவை ;
வரிசிலை வய அம்பினவை;
புகளிணர்சூழ் வட்டத்தவை ; புகர்வாளவை ;
எனவாங்கு, நலம்புரீஇ
அஞ்சீர் நாம வாய்மொழி
இதுவென உரைத்தலினெம் உள்ளமர்ந்து இசைத்திறை
இருங்குன்றத்து அடியுறை இயைகெனப்
பெரும்பெயர் இருவரைப் பரவுதுந் தொழுதே! (பரிபாடல் 54 – 66)

சிலப்பதிகாரம்

அவ் வழிப் படரீர் ஆயின், இடத்து,
செவ்வழிப் பண்ணின் சிறை வண்டு அரற்றும்
தடம் தாழ் வயலொடு தண் பூங் காவொடு
கடம் பல கிடந்த காடுடன் கழிந்து,
திருமால் குன்றத்துச் செல்குவிர் ஆயின்,
பெரு மால் கெடுக்கும் பிலம் உண்டு: ஆங்கு,
விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபின்
புண்ணியசரவணம், பவகாரணியோடு,
இட்டசித்தி, எனும் பெயர் போகி,
விட்டு நீங்கா விளங்கிய பொய்கை
முட்டாச் சிறப்பின் மூன்று உள: ஆங்கு,
புண்ணியசரவணம் பொருந்துவிர் ஆயின்,
விண்ணவர் கோமான் விழு நூல் எய்துவிர்;
பவகாரணி படிந்து ஆடுவிர் ஆயின்
பவ காரணத்தின் பழம் பிறப்பு எய்துவிர்;
இட்டசித்தி எய்துவிர் ஆயின்
இட்டசித்தி எய்துவிர் நீரே.

(சிலப்பதிகாரம் , மதுரைக் காண்டம். கடுகாண் காதை 87 – 104)

விளக்கம்: திருமாலிருஞ்சோலை வழி மருத நிலம் சார்ந்த பல பகுதிகளை உடையது. இவ்வழியில் செல்லும்போது புண்ணிய சரவணம், பவகாரணி, இட்டசித்தி என்னும் முன்று பொய்கைகளைக் காணலாம். இந்த பொய்கள்களில் ஒவ்வொன்றில் முழ்கினால் ஒவ்வொரு பலன் கிடைக்கும். அதன் பின்பு சிலம்பாறு தோன்றும். இந்த ஆற்றைத் தொடர்ந்து சென்றால் இயக்கமாது தோன்றுவாள். அவளின் கேள்விகளுக்கு பதில் அளித்த பின் திருமாலிருஞ்சோலையை அடையலாம். எட்டெழுத்து மந்திரத்தை உச்சரித்து திருமாலிடம் அடைக்கலம் பெறலாம் என்று இந்த வழி பற்றிய செய்திகள் அறிவிக்கப் படுகின்றன. இவற்றில் முன்று குளங்கள் பெயரில் ஒன்று கூட இன்று இல்லை. சிலம்பாறு என்ற பெயர் அழகர்கோயில் தீர்த்தங்களில் ஒன்றாகக் குறிக்கப்படுகிறது. தற்காலத்தில் நூபுர கங்கை என்று அழைக்கப்படும் தீர்த்தம் சிலப்பதிகாரத்தில் சிலம்பாறு என்று அழைக்கப்படுகிறது.

திருமுருகாற்றுப்படை

நூபுரகங்கைக்குப் செல்லும் வழியில், முன்பு வேல் பொறித்த சிலை ஒன்றை மக்கள் வழிபட்டு வந்தனர். அதுவே பழமுதிர்சோலை மலையாகிய ஆறாவது படைவீடு ஆயிற்று.

”பலவுடன் வேறு பல்துகிலின் நுடங்கி அகில் சுமந்து….
இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர் சோலை மலைகிழவோனே”
(நக்கீரர். திருமுருகாற்றுப்படை 296-317)

திருப்புகழ்

‘ஆயிர முகங்கள் கொண்ட நூபுர மிரங்கு கங்கை
ஆறமர லந்தலம்பு துறைசேர…
சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற
சோலைமலை வந்துகந்த பெருமாளே…’
(அருணகிரிநாதர், திருப்புகழ்)

அழகர்கோயில் தொ பரசிவன். படையல், 2008. 399 பக்கங்கள்

இவருடைய முனைவர் பட்ட ஆய்வேடு புத்தகமாக வெளிவந்துள்ளது. முனைவர் பட்ட ஆய்வுக்காக சில ஆண்டு காலம் களப்பணி ஆற்றியுள்ள இவர் ‘அழகர்கோயிலை விரிவாக ஆராய்ந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த ஆலயம் கைமாறிச் சென்ற விதம் மற்றும் அதன் வளர்ச்சி குறித்து நுட்பமாக விவரித்துள்ளார். அழகர்கோயிலை சுற்றி உருவான நிலமானிய அமைப்பு, சாதிக்கட்டுமானம், திருவிழாக்களில் அடுக்கதிகாரம் வெளிப்படும் முறைகள் குறித்து பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளார். தமிழில் செவ்வியல்தன்மை கொண்ட முதல் வழிகாட்டி நூலாக ‘அழகர்கோயில்’ கருதப்படுகிறது.

திருவிழா

சித்திரைத் திருவிழா 10 நாட்கள். ஆடிப்பெருந்திருவிழா 13 நாட்கள். ஐப்பசி தலையருவி உற்சவம் 3 நாட்கள்.

அழகர்கோயில் செல்ல…

பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து 843 LSS, 844 EXP, 844 LSS எண் நகரப் பேருந்துகள் உள்ளன. பயண நேரம் 0.40 நிமிஷம். ஆட்டோ மற்றும் டாக்சி வசதி உண்டு. அருகிலுள்ள இரயில் நிலையம் மதுரை ஜங்சன். அருகிலுள்ள விமானநிலையம் மதுரை. விமான நிலையம்.

மதுரையிலுள்ள பிற திவ்ய தேசங்கள்: கூடலழகப்பெருமாள் கோயில், மதுரை. காளமேகப் பெருமாள் கோயில், திருமோகூர் (மதுரையிலிருந்து 12 கிமீ.),

குறிப்புநூற்பட்டி

  1. அருள்மிகு கள்ளழகர் கோயில்
  2. அழகர்கோயில் – தொ.பரமசிவன்
  3. அழகர் கோவில், மதுரை-புண்ணியம் தேடி
  4. Arulmiku Kallalakar Thirukoil, Alakarkoil
  5. Thirumaalirunsolai – Sri Kallazhagar Perumal Temple

 

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in கோவில், வரலாறு and tagged , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.