திருவொற்றியூர் கோவில் கல்வெட்டுகள்: தேவதாசிகளின் வேலைநிறுத்தமும் தீர்வும்

வட சென்னை தொழிற்சாலைகள் நிறைந்த நகர்ப்பகுதி. வேலை நிறுத்தங்களுக்கு பெயர்போனது. இப்பகுதியில் முதன்முதலாக எப்போது வேலை நிறுத்தம் செய்யப்பட்டது தெரியுமா?

இன்றைய வடசென்னைப் பகுதியில் அமைந்துள்ள திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோவிலில் 650 வருடங்களுக்கு முன்பு ஆடல் பாடல் போன்ற கோவில் பணிகளைச் செய்துவந்த தேவதாசிகள் தங்கள் பணிகள் வரையறை (definition of duties) குறித்த பிணக்குகளுக்காக (disputes) வேலை நிறுத்தம் (strike) செய்தனர்! திருவொற்றியூர் அப்போது விஜயநகரப் பேரரசர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அப்போது கோவில்கள் வழிபாட்டுத்தலங்கள் மட்டுமல்ல! அங்கே அரசு கருவூலம் இயங்கியது. வேளாண்நிலங்கள் பற்றிய ஆவணக்காப்பகமும் இங்கு இருந்திருக்கின்றது. சுயாதிகாரம்பெற்ற சபையினரால் கோவில்கள் நிர்வாகிக்கப்பட்டன.

இசையும் நடனமும் இறைவனுக்கு அர்ப்பணிக்கும் சோடச உபசாரங்களில் அடங்கும். கோவிலில் இந்தப் பணிகளைச் செய்தவர்கள் தேவதாசிகள். இவர்கள் கோவிலுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட நடனப் பெண்கள். தேவதாசி முறை சோழர்கள் காலத்திலேயே நிறுவனமாக்கப்பட்டது (institutionalized). இவர்கள் கோயில்களின் சொத்து (temple property) என்று கருதப்பட்டார்கள். தொண்டைநாட்டில் பல கோவில்களில் தேவதாசி முறை இருந்துள்ளது. திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோவிலில் இவர்கள் அதிக அளவில் பணியாற்றியுள்ளனர். திருவொற்றியூரில் நடந்த இவர்களுடைய வேலை நிறுத்தம் பெண்ணடிமைத் தனத்தை எதிர்த்து எழுந்த முதல் போர்க்கொடி. மூன்று முறை இவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளார்கள்! கோவில் பணிகள் ஸ்தம்பித்தன. விஜயநகர அரசர் கம்பண்ண உடையாரே இதற்குத் தீர்வு காண அக்கறை எடுத்துக்கொண்டார் என்றால் பாருங்களேன்! இது பற்றி விரிவாக இப்பதிவில் காண்போமா?

திருவொற்றியூர்

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் வட்டத்தில் இருக்கும் சென்னை மாநகரத்திற்கு உட்பட்ட ஒரு நகர்ப்பகுதி திருவொற்றியூர் பின் கோடு 600019. இதன் அமைவிடம் 13.16°N 80.3°E ஆகும். இவ்வூர் சராசரியாக 0 மீட்டர் (0 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வூரின் மக்கள்தொகை 211,768 ஆகும். திருவொற்றியூரில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு மாநகரப் பேருந்து போக்குவரத்து உள்ளது. திருவொற்றியூர் இரயில் நிலையம் சென்னை கும்மிடிப்பூண்டி தடத்தில் உள்ளது.

இங்கு அமைந்துள்ள ஆதிபுரீசுவரர் கோவில் என்னும் படம்பக்கநாதர் கோயில் ஒரு தேவாரப்பாடல் பெற்ற பழைமையான சிவத்தலமாகும். இதனை வடிவுடையம்மன் கோவில் என்றும் குறிப்பிடுவதுண்டு. இக்கோயிலில் மூலவர் ஆதிபுரீசுவர், தாயார் திரிபுரசுந்தரி (வடிவுடையம்மன்). தலவிருட்சம் அத்தி மரமும், மகிழ மரமும் ஆகும். தீர்த்தம் பிரம்ம தீர்த்தமும், ஆதிசேட தீர்த்தமும் என இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. தேவார நால்வர் இக்கோவிலில் பதிகம் பாடியருளியுள்ளனர்.

திருவொற்றியூர் கோயிலில் மட்டும் 200 மேற்பட்ட கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவற்றில் பல தமிழ் வரிவடிவத்தில் உள்ளன. இவற்றுள் ஒரு கல்வெட்டு இக்கோயிலில் தேவதாசிகளின் வேலைகளுக்கான நிபந்தனைகள், சலுகைகள், பிரத்யோக உரிமைகள், பணி வரையறை    மற்றும் வாழ்க்கை நிலைமைகள் பற்றிப் பதிவு செய்துள்ளது.  அறுநூற்று ஐம்பது ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கல்வெட்டுகள் ஆதிபுரீஸ்வரர் கோயிலின் முதல் பிரகாரத்தில் தெற்குச்சுவரில் வெட்டப்பட்டுள்ளது. இது நமக்குச் சொல்லும் செய்தி ஆதிபுரீஸ்வரர் கோயிலின் மூன்று பிரிவுகளில் அடங்கும் தேவதாசி என்னும் கோயில் நடனப் பெண்மணிகள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட போராடினார்கள். இந்தப் போராட்டம் இவர்களுக்குப் பணிக்கப்பட்ட நடனம், பாட்டுப் பாடுதல் மற்றும் பிற பணிகளில் உண்டான பிணக்குகளின் அடைப்படையில் ஏற்பட்டது.

தேவதாசிகள்

இந்தக் கல்வெட்டு அதன் பொருள் பற்றிப் பார்ப்பதற்கு முன்பு கோயில் நடனப் பெண்கள் என்ற தேவதாசிகளைப் பற்றித் தெரிந்துகொள்வோமா? தென்னிந்திய குலங்களும் குடிகளும் நூலில் (1855) எட்கர் தர்ஸ்டன் தேவதாசிகள் (devadasis) அல்லது தாசிகள் (dasis) அல்லது ‘கடவுளின் எடுபிடி பெண்கள்’ (‘handmaidens of the god’) என்போர் கோயிலுடன் இணைக்கப்பட்ட நடனப் பெண்கள் என்று குறிப்பிடுகிறார். இவர்கள் நடனமாடுதல், பாடுதல் மற்றும் உலகின் மிகப்பழைய தொழிலைச் செய்து வாழ்ந்தார்கள்.(Devadāsis are dancing-girls attached to the Tamil temples, who subsist by dancing and music, and the practice of ‘the oldest profession in the world’. Castes and Tribes of Southern India, Volume 2, 1855, By Edgar Thurston).

சி.ஆர். டே என்ற அறிஞர் The music and musical instruments of southern India and the Deccan, by C. R. Day., (1891) என்ற ஆய்வு நூலில் ‘பெரியமேளம்’ மற்றும் ‘சின்னமேளம்’ என்ற இசைக்குழுக்களைப் பற்றி சொல்கிறார். பெரியமேளம் கோவிலில் இசையை முக்கிய அம்சமாகக் கொண்டது. இதில் நாதஸ்வரத்துக்கே முன்னுரிமையுண்டு. தவில், ஒத்து மற்றும் சங்கு போன்ற பக்கவாத்யங்களும் இடம்பெறும். சின்னமேளம் என்றால் நாட்டியப்பெண்கள் முன்னுரிமை பெறுகிறார்கள்; பக்கவாத்யக் குழுக்களுக்கு இரண்டாம் இடம் மட்டுமே.

இந்தியாவில் கோவில்களில் மூலவர்க்கு (கடவுளுக்கு) சேவை செய்வதற்காக இளம் பெண்களை அர்ப்பணிக்கும் தேவதாசி முறை எப்போது தொடங்கியது? தேவதாசி முறை எப்போது தொடங்கியது என்பதை வரையறுத்துக்கூற இயலவில்லை. தமிழகத்தில் தேவதாசி முறையைப் புகுத்தியவர்கள் சோழர்கள்; 7ஆம் அல்லது 8 ஆம் நூற்றாண்டு அளவில் வேரூன்றியிருக்க வேண்டும் என்பது கல்வெட்டுக்களின் அடிப்படையில் வரலாற்று ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்ட கருத்து. ’தேவதாசி என்ற சொல்லை முதன்முதலில் குறிப்பிடும் கல்வெட்டு கருநாடகத்தில் உள்ள அலனஹள்ளியில் காணப்படுகிறது. (கி.பி1113)’(தேவதாசி மரபு பி.எம்.சுந்தரம். தமிழாக்கம், இரா. சுப்பராயலு. ஒரத்தநாடு : மருதம் பதிப்பகம், 2002. பக் 16, 17). சோழர் காலத்தில் கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்ட ஒரு நிறுவனமாக இருந்தது. தேவதாசி முறை கோவில் நிர்வாகிகளின் அதிகாரத்திற்கு உட்பட்ட அடிமை முறையாக வளர்ந்தது.

“பொட்டுக்கட்டுதல்” என்ற சடங்கு 14 வயதுக்கு உட்பட்ட சிறுமியின் பெற்றோரால் அப்பெண் பூப்படையுமுன்னரே கோவில் மூலவருடன் இணைத்து திருமண நிகழ்ச்சி போலவே நடத்தப்பட்டன. பெரும்பாலும் இவை பெண்ணின் சம்மதம் இல்லாமலேயே கட்டாயத்துடன் நடந்தது. பொட்டுத்தாலியை மூலவரின் சார்பில் கோவில் அர்ச்சகர் கோவில் பணிக்கு அர்ப்பணிக்கப்பட்ட பெண்ணின் கழுத்தில் அணிவிப்பார். இச்சடங்கின் மூலம் கோவிலுக்கு சிறுமிகள் (தேவதாசிகளாக) காணிக்கை ஆக்கப்பட்டு கோவிலில் சேர்க்கப்பட்டனர். இந்த சடங்கின் மூலம் குறிப்பிட்ட பெண் கோவிலுக்கு சொந்தமாகி விடுகிறாள். இல்வாழ்க்கையில் ஈடுபட அவர்களுக்கு அனுமதி இல்லை.

இவர்கள் கோவிலிலேயே தங்கள் வாழ்நாளைக் கழித்துவிட்டனர். தேவதாசி பெண்கள் ஆற்றல்மிக்கவர்களாகவும், பொருளாதாரத்தில் சுயசார்புடையவர்களாகவும், சமூகத்தில் மதிப்பு மிக்கவர்களாகவும் இருந்துள்ளனர். இவர்கள் நிலச்சுவான்தார்களாகவும், கோவில்களுக்கு தானம் அளிப்பவர்களாகவும் விளங்கிய பல செய்திகள் அரசு ஆவணங்களில் காணப்படுகின்றன.. பெண்களை மதத்தின் பெயரால் கோவில்களுக்கு அர்ப்பணித்த வழக்கம் தெய்வக் கொடிவழி (Theogony) என்று குறிப்பிடப்படுகின்றது. சில சந்தர்ப்பங்களில் இந்த வயது முதிர்ந்த கன்னிப்பெண்கள் விரும்பினால் தங்கள் தேவதாசி தொழிலை விட்டு விலகி திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்வில் ஈடுபடலாம்.

கல்வெட்டு சான்றுகள்

சோழர் கோவில்கள் நடனத்தை ஆதரித்தன. கோவிலுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட தேவதாசிகள் கடவுள் சன்னதிகள் முன்பும் மண்டபங்களிலும் நடனம் ஆடினார். இவர்கள் தமிழ்க்கூத்து, ஆரியக்கூத்து, சாக்கைக்கூத்து போன்ற நடன வகைகளில் ஆடினர். சில கோவில்கள் தனியாக நடன அரங்கங்களை ஏற்படுத்தி பராமரித்து வந்தன. ஆட்சியாளர்களும் மக்களும் இவர்களுக்கு ஆதரவளித்தனர். பல நடனப் பெண்மணிகளின் உருவங்கள் கோவிலிலே சிலைகளாக வடிக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1215) 56 கோவில் திருநாட்களை (sacred festivals) மீண்டும் நடத்த உத்தரவிட்டார் (SII., Vol. VII. No. 11; ARE., of 1923. No. 396). கல்வெட்டுக்களின் மூலம் கோவில் திருநாட்கள் நடத்தப்பட்ட செய்தி கண்டு அவற்றை மீண்டும் நடத்த வழிவகை செய்யப்பட்டன (ARE., of 1912. No. 120.).. இந்தத் திருநாட்களில் அரசருடன் தொடர்பில் இருந்த பிரதானிகள் தேவதாசிகளுக்கு சலுகைகள் வழங்கினார்கள். திருவொற்றியூரில் தேவதாசி முறை அரச ஆதரவு பெற்றது. மூன்றாம் குலோத்துங்க சோழன் திருவொற்றியூரில் ஆனி திருநாளில் நடந்த தேவதாசியின் நடனத்தைப் பார்த்து ரசித்ததை ஒரு கல்வெட்டு பதிவு செய்துள்ளது (ARE., of 1911. No. 368.). இது போல மூன்றாம் இராஜராஜ சோழன் கி.பி. 1235 ஆம் ஆண்டு ‘உறவாக்கின தலைக்கோலி’ என்ற தேவதாசியின் நடனத்தைப் பார்த்து வியந்து 60 வேலி நிலம் கொடையாக வழங்கப்பட செய்தி இக்கல்வெட்டில் (ARE., of 1912. No. 211.) உள்ளது.

தேவதாசிகள் பணிபுரிந்த சூழல் (Working Environment of Devadasis)

தேவதாசிகள், திறமைகளின் அடிப்படையில் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளார்கள்.

1. தனியாகவோ அல்லது குழுவிலோ நடனம் ஆடுவோர் மற்றும் பாட்டுப் பாடுவோர். தேவாரம், திருப்பாவை, திருவெம்பாவை பதிகங்களை பண்ணுடன் பாடுவோர்; இசைக்கருவிகளை இசைப்போர். நடனம் பாட்டுடனோ அல்லது தனியாகவோ நடைபெறும். திருக்குவளையில் சாக்கைக் கூத்து நடைபெற்றதாக கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. வேறு சில கல்வெட்டுகள் அகக்கூத்து, சாந்திக்கூத்து மற்றும் வரிக்கூத்து ஆடிய தேவதாசிகள் பற்றிக் கூறுகின்ற்ன.

2. கலையாற்றல் இல்லாத தேவதாசிகள் கோவில்களில் திருவலகிடுதல் (துடைப்பத்தாற் பெருக்குதல்), திருமெழுகிடுதல் (சாணம் கொண்டு தரை மெழுகுதல்), படையல் அரிசியைத் தூய்மைப்படுத்துதல், பூப்பறித்தல், மாலை தொடுத்தல், மணியடித்தல் போன்ற பணிகளையும் செய்துவந்தனர். இவர்கள் திருநீற்றுத்தட்டு, புஷ்பத்தளிகை போன்றவற்றை திருவிழாக்காலங்களில் எடுத்துச்செல்வர். அம்பாள் (தாயார்) மற்றும் சுவாமிக்கு இவர்கள் “கவரி” வீசவும் செய்ததால் “கவரிப்பிணா” என்றும் அழைக்கப்பட்டனர்.

தேவதாசிகளிடம் படிநிலை (Hierarchy) இருந்துள்ளது. ‘குடி’ என்ற சொல் தரம் பிரித்தறிய பயன்பட்டிருக்கிறது. ‘முதல் குடி’, இரண்டாம் குடி’ மூன்றாம் குடி என்று பல உண்டு. மூத்த தேவதாசிகள் மற்றும் இவர்களுக்குக் கீழ்மட்டத்திலிருந்த தேவதாசி பெயர்கள் எல்லாம் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இவர்களுக்கான ஊதியங்கள் குழுத் தலைவர்களிடம் வழங்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு தங்குமிடம் மற்றும் நிலம் எல்லாம் பணிமூப்பு அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளன.

பிணக்கு (Dispute)

சில 14 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள், வெவ்வேறு படிநிலைகளில் (different hierarchy) இருந்த தேவதாசிகளிடையே ஏற்பட்ட மனவேற்றுமையைப் (misunderstanding) பதிவு செய்துள்ளன.

மூன்று பிரிவுகள் (Group Designations):- பிரிவு ஒன்று: பதியிலார்; பிரிவு இரண்டு தேவரடியார் (கடவுளின் சேவகர்கள்); பிரிவு மூன்று: இஷபதளியார்: நடனமாடும் வகையினர் மற்றும் பணிப்பெண்கள். சிவன் கோயிலில் பணி செய்துவந்த தேவதாசிகள் ரிஷபத்தளியலார் என்றும், வைணவக் கோயில்களில் இருந்தவர்கள் ஸ்ரீவைஷ்ணவ மாணிக்கம் என்றும் அழைக்கப்பட்டனர்.

வேலை ஒதுக்கீடு மற்றும் வேலை செய்வதில் உள்ள பிரச்சனைகள் மூன்று பிரிவுகளைச் சேர்ந்த தேவதாசிகளிடையே பிணக்கை ஏற்படுத்தின. இந்தப் பிணக்கே (dispute) இவர்கள் மனக்குறைகளாக (grievances) ஆனது.

வரலாறு

திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோவிலில் பணிபுரிந்த மூன்று வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தேவதாசிகளிடையே ஏற்பட்ட மனவேற்றுமை பற்றி மூன்று கல்வெட்டுகள் – கி.பி. 1338 (ARE 212 1913), கி.பி. 1368 (ARE 195 1913) மற்றும் கி.பி. 1371 A.D. (ARE 196 1913) – பதிவு செய்துள்ளன. இந்த கோஷ்டி மோதல்கள் 30 ஆண்டுகள் வரை நீடித்ததது. குறைதீர்க்கும் அமைப்புகள் (grievance redressal mechanisms) கி.பி.1338, கி.பி.1368 மற்றும் கி.பி.1371 ஆம் ஆண்டுகளில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்கள். இறுதியில் விஜயநகர மன்னர் இரண்டாம் ஹரிஹரர் காலத்தில் இப்பிரச்னைக்கு தீர்வு (ARE No. 195 196 மற்றும் 212 of 1913) ஏற்பட்டது.

கி.பி.1338 (ARE 212 1913) கல்வெட்டு: தேவதாசிகள் கோவில் நிர்வாகத்திற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர்.

கி.பி. 1368 (ARE 195 1913) கல்வெட்டு: இக் கல்வெட்டு திருவொற்றியூர் அரசரின் பொக்கிஷதாரராக, விடப்பர் என்பவரின் நியமனம் பற்றி பதிவு செய்கிறது. இந்த அலுவலர் மூன்று பிரிவுகளைச் சேர்ந்த தேவதாசிகளின் குறைகளைத் தீர்க்க முயன்றார். எனினும் இவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்தம் கோவிலின் தினசரி அலுவல்களான பூஜைகள், சாமி ஊர்வலங்கள் மற்றும் பல வேலைகளைப் பாதித்தது. இப்பிரச்சனைக்குத் தீர்வுகாண வியக்கரண மண்டபத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் சிறுதரம், ஸ்ரீ மஹேஸ்வரர்கள், கைக்கோளர்கள், வீரசோழ அணுக்கர், விடப்பர் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவு கல்வெட்டில் பதிவாகவில்லை.

கி.பி. 1371 A.D. (ARE 196 1913) கல்வெட்டு: தேவதாசிகள் பிரச்சனை மீண்டும் வெடித்தது. விஜயநகர மன்னர் கம்பண்ண உடையார் உடனடியாக இப்பிரச்சனைக்குத் தீர்வு காண விரும்பினார். வியக்கரண மண்டபத்தில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. துணை இருந்த நம்பி கொங்கராயர் நடுவராக (arbitrator) செயல்பட்டார். நாட்டார் உள்ளிட்ட மற்றும் பலர் பங்கேற்றனர். மூன்று பிரிவுகளின் பிரதிநிதிகளாக முட்டுக்காரர், சொக்கத்தளியார் மற்றும் வீரஅணுக்கர் ஆகிய மூவர் வாதிட்டனர். கல்வெட்டு மொத்த நடவடிக்கைகளையும் (proceedings) பதிவு செய்துள்ளது. ஆனால் தீர்வு பற்றிய செய்திகள் பெருமளவு விடுபட்டுள்ளன.

தேவதாசிகளின் பிணக்குகளுக்கான தீர்வு

ஒவ்வொரு பிரிவில் இடம்பெறும் தேவதாசிகளின் கோரிக்கைகளுக்கும் இந்த தீர்வு முக்கியத்துவம் அளித்துள்ளது. ஒவ்வொரு பிரிவினரும் அனுபவித்த சலுகைகள் (concessions enjoyed) மற்றும் கோவில் சடங்குகளில் (rituals) இவர்களுக்குத் தரப்பட்ட பிரத்யோக உரிமைகளின் (privileges) அடிப்படையிலேயே சமரசம் (conciliation) எட்டப்பட்டது.

இஷாபத்தளியார் மூலவர் திருமுன்பு சேவை செய்யும்படியும் ; தேவரடியார் அம்பாள் திருமுன்பு சேவை செய்யும்படியும் பணிக்கப்பட்டனர்.

hqdefault1

இத்தீர்ப்பு .ஒவ்வொரு பிரிவினருக்கும் வெவ்வேறு சலுகைகள் மற்றும் பிரத்யோக உரிமைகளை உற்சவர் புறப்பாட்டு ஊர்வலங்களில் தரப்பட்டன. உற்சவர் புறப்பாட்டு ஊர்வலங்கள் கோவில் பிரகாரங்களைச் சுற்றியோ அல்லது தெப்பக்குளத்தைச் சுற்றியோ அல்லது மண்டபத்தைச் சுற்றியோ அல்லது தோப்பு நோக்கியோ நடைபெறும்பொழுது இவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் இறுதி செய்யப்பட்டன.

நடுவர் வழிகாட்டுதல் படி குறிப்பிட்ட சன்னதியில் ஆட வேண்டிய குறிப்பிட்ட நடன வகைகள், இசை மற்றும் பண்: 1.சந்திக்குனிப்பம்; 2.இடவு; 3.மலைப்பு; 4.அகமார்க்கம்; 5.சிந்துக்கு மற்றும் வரிக்கூத்து ஆகியவை இக்கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெருத்த முயற்சிக்கிடையில் இத்தீர்வுகள் எட்டப்பட்டாலும், சில பிணக்குகள் தீர்வு காணப்படாமலேயே இருந்தன. இரண்டாம் ஹரிஹரர் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் இந்தப் பிணக்குகளுக்கு தீர்வு காண உதவின.

கூத்து பற்றி மேலதிக தகவல்

தமிழில் நடனத்திற்கு பல பெயர்கள் உண்டு: கூத்து, நடம், ஆடல்.என்று பல பெயர்கள். நடனமாடும் பெண் இருவகைக் கூத்துக்களையும் பலவகைக் கூத்துக்களையும் அறிந்திருந்திருந்தார்கள் என்று சிலப்பதிகாரத்தின் வாயிலாக அறிய முடிகிறது. ஒரு நடன ஆசிரியனுக்கு அகக்கூத்து (நிருத்யம் = முகபாவனைகள்) மற்றும் புறக்கூத்து (நிருத்தம் = அங்க அசைவுகள்) என்ற இருவகைக் கூத்துக்கள் பற்றித் தெரிந்திருக்க வேண்டும் என்றும் இளங்கோ அடிகள் வலியுறுத்துகிறார். அடியார்க்கு நல்லார் என்ற சிலப்பதிகார உரையாசிரியர் (கி.பி.13ஆம் நூற்றாண்டு) அக்காலத்தில் நிலவிய கூத்து வகைகளை ஆறு இணைகளாகப் (இரண்டிரண்டாக) பிரித்து உரைத்துள்ளார்.

1.1.வசைக்கூத்து 1.2. புகழ்க்கூத்து; 2.1.வேத்தியல், 2.2.பொதுவியல்; 3.1.வரிக்கூத்து, 3.2.வரி சாந்திக்கூத்து; 4,1.ஆரியக்கூத்து, 4.2.தமிழ்க்கூத்து; 5.சாந்திக்கூத்து, 5.2.விநோதக்கூத்து; 6.1. இயல்புக்கூத்து, 6.2.தேசிக்கூத்து.

1. 1.வசைக்கூத்து என்ற விநோதக்கூத்து என்பது வசைபாடி (satire) ஆடும் கூத்து என்ற பொருளில் வரும். களிப்பு மற்றும் சிரிப்பு பற்றியது. 1.2. புகழ்க்கூத்து அரசனை அல்லது தலைவனை புகழ்ந்து பாடி ஆடும் கூத்து. 2.1.வேத்தியல் வேந்தன் முன்னால் ஆடிய கூத்து, 2.2.பொதுவியல் பொதுமக்கள் முன்னாள் நிகழ்த்தியது. 3.1.வரிக்கூத்து, தலைவனுடைய சாந்த குணங்களைப் பாடி ஆடும் கூத்து; 3.2 .வரி சாந்திக்கூத்து, தலைவனுடைய சாந்த குணங்களை மாற்றிப் பாடி ஆடிய கூத்து. 4.1. ஆரியக்கூத்து, ஆரியர்கள் என்ற வடநாட்டினர்களால் ஆடப்பட்ட கூத்து; 4.2.தமிழ்க்கூத்து, தமிழ்க்கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கூத்து. 5.1. சாந்திக்கூத்து, 5.1.1.சொக்கம், 5.1.2.மெய் (அகமார்க்கம்), 5.1.3.அவிநயம், 5.1.4.நாடகம் என்ற நால்வகை கூத்துகளை கொண்டது. 5.2. வினோதக்கூத்து, 5.2.1.குரவை, 5.2.2.கலிநடம், 5.2.3.குடக்கூத்து, 5.2.4. கரணம், 5.2.5.நோக்கு, 5.2.6. தோற்பாவை என்ற ஆறுவகைக் கூத்துகளை கொண்டது. 6.1. இயல்புக்கூத்து, இயல்பான ஆடலை ஆடிக்காட்டும் கூத்து; 6.2.தேசிக்கூத்து, தன தேசத்திற்கு உரிய ஆடல்களை நிகழ்த்திக்காட்டும் கூத்து.

குறிப்புநூற்பட்டி

  1. கூத்துக் கலை அன்றும் இன்றும். ப.இரமேஷ். ஏப்ரல் 03, 2011. திண்ணை
  2. வரலாற்றில் பரதநாட்டியம். இரா.நாகசாமி. Tamilartsacademy.com
  3. Donors, Devotees, and Daughters of God: Temple Women in Medieval Tamil Nadu Leslie C. Orre
  4. The first strike of professionals in India? Pradeep Chakravarthy. Madras Musings vol XX, No 12, அக்டோபர் 1-15, 2010.

 

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in கோவில், நடனம் நாடகம் and tagged , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.