ரவண பாடி குடைவரைக் கோவில் புலிகேசி (544-566 A.D.) ஆட்சியில், அதாவது சாளுக்கியர்களின் தொடக்க காலங்களில், கட்டப்பட்ட குடைவரைக் கோவில்களில் ஒன்று. சாளுக்கிய கலைப்பாணி எவ்வாறெல்லாம் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது என்பதை இக்குடைவரையைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இங்கு காணும் சிற்பங்கள் மற்றும் நுணுக்கமான அலங்கார வேலைப்பாடுகள் எல்லாம் சாளுக்கியர் கலைப்பாணியைப் பறைசாற்றுகின்றன. பரந்த முற்றம் (Front court) இக்குடைவரைக் கோவிலின் சிறப்பு. இக்குடைவரையில் உள்ள விசாலமான செவ்வக வடிவ முக மண்டபம் போல் பாதாமி குடைவரைகளில் கூட பார்க்க இயலாது. இங்குள்ள மற்றோரு சுவையான அம்சம் என்னவென்று தெரியுமா? கருவறையில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் அமைப்பு. எவ்வளவு கவனத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது தெரியுமா? இக்குடைவரைக் கோவில் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போமா?
ரவண பாடி குடைவரைக் கோயில், கர்நாடகா, பகால்கோடு மாவட்டம், ஹூன்குந்த் வட்டம் ஐஹோளே (Aihole) (Kannada ಐಹೊಳೆ) பின் கோடு 587124 என்னும் ஊரில் அமைந்துள்ளது. ஐஹோளேக்கு, ஐயவோளே (Ayyavoḷe) மற்றும் ஐயபுரா (Ayyapura) என்ற பெயர்கள் இருப்பதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கலைக்கோவில்களின் வளாகம் மலப்பிரபா (Malaprabha) ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. ஐஹோளே என்ற பெயர் எப்படி வந்தது? கன்னடத்தில் “ஐய ஹோளே” (Ayya hole) என்றால் சமஸ்கிருதத்தில் அறிஞர்களின் நகரம் (city of scholars) என்று பொருளாம். சமஸ்கிருதத்தில் “ஐய புரா” என்று பெயர். ஐஹோளே பாதமியிலிருந்து 36 கி.மீ. தொலைவிலும்; ஹோஸ்பெட்டிலிருந்து 115 கி.மீ. தொலைவிலும்; பெங்களூருவைலிருந்து 510 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இதன் அமைவிடம் 16°1′08″N அட்சரேகை (லாட்டிட்யூட்) மற்றும் 75°52′55″E தீர்க்கரேகை (லாங்கிட்யூட்). கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 593 மீட்டர் (1946 அடி) ஆகும். இந்த கிராமம் 4 கி.மீ பரப்பளவுடையது.
அழகான இந்த கிராமம் கி.பி 5 முதல் 8 ஆம் நூற்றாண்டு வரை மேலைச் சாளுக்கிய வம்சத்தின் தலைநகராக இருந்தது என்றால் நம்பத்தான் வேண்டும்! ஐஹோளே மேலைச் சாளுக்கியர்களின் கட்டடக்கலைக்கு பெயர்பெற்றது. இங்கு கி.பி. 6 முதல் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுமார் 125 கட்டுமானக் கோவில்களை (structured temples) 22 தொகுப்புகளில் காணலாம். ஐஹோளே நினைவுச்-சின்னங்கள் அடங்கிய வளாகம் இந்து கற்கோயில் கட்டடக்கலையின் தொட்டில் (‘cradle of Hindu rock architecture’) என்று புகழ்கிறார்கள். இந்திய கற்கோயில் கட்டடக்கலையின் தொட்டில் (cradle of Indian architecture) என்றும் பொருள் கொள்ளலாம். ஐஹோளே நினைவுச்-சின்னங்களை (Aihoḷe monuments) உலகப் பண்பாட்டுச் சின்னம் (UNESCO World heritage site) என்று அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையிலுள்ளது.
சிவனுக்காக அமைக்கப்பட்ட ரவணபாடி குடைவரைக் கோவில் ஹச்சிமல்லி கோவிலிலிருந்து (Hucchimalli temple) தென்கிழக்கில் அமைந்துள்ளது. இதன் காலம் கி.பி. 6ஆம் நூற்றாண்டு என்று கணக்கிடப்பட்டுள்ளது. தாழ்வில் உள்ள ஒரு தொங்குபாறை (deep ledge) வெட்டப்பட்டு குடைவரைக் கோவில் தென்மேற்கு திசையைப் பார்த்தவாறு அமைக்கப்பட்டுள்ளது. இக்குகைக் கோவிலில் இரண்டு தனித்து நிற்கும் (free standing shrines) கோவில்கள் குகைக்கு இருபக்கமும் வெட்டப்பட்டுள்ளன. மற்றோரு தனித்து நிற்கும் கோவில் தொங்கும் பாறைக்குக் குடைவரைக் கோவில் வளாகத்தின் நுழைவாயிலையொட்டி புல்தரையுடன் கூடிய ஒரு பரந்த முற்றதைக் காணலாம். இம்முற்றத்தில் அமைப்பட்டுள்ள உடைந்த ஒற்றைக்கல் தூண் விஜய ஸ்தம்பம் என்று கருத வாய்ப்புள்ளது. நாகர விமானத்தின் உச்சியில் காணப்படும் நெல்லிக்காய் வடிவிலான அமலாக்கா (amalaka) சிற்பம் ஒன்று தனியாக தரையில் கிடக்கிறது. குடைவரைக் கோவிலைப் பார்த்தவாறு ஒரு சிறிய நந்தி சிலை புல்தரையில் அமர்ந்துள்ளது.

ரவணபாடி குடைவரைக் கோவில் பரந்த பார்வை PC Panoramio
முகப்புத் தளத்திற்கும், நிலமட்டத்திற்கும் இடையிலான பாறைப்பகுதி தளமாக உருவாக்கப்பட்டுள்ளது. குன்றின் கீழ்ப்பகுதியில் நிலமட்டத்திலிருந்து 4 மீ. உயரத்தில் தென்மேற்கு திசையை நோக்கிய நிலையில் அகழப்பட்டுள்ள குடைவரையை அடையப் 6 படிகள் உதவுகின்றன.
குடைவரையின் நுழைவாயிலையொட்டி வலது மற்றும் இடது புறங்களில் அகலமான, ஆழமான கோட்டங்களில் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் குபேரனின் வாயிற் காவலர்களான சங்கநிதியையும் பதுமநிதியையும் குறிக்கும்.
குடைவரைக் கோவில் முக மண்டபம், இரு பக்கச் சுவர்களையொட்டி இரு புறமும் பக்கத்திற்கொன்றாக இரண்டு முன்றில்கள் (vestibules), கருவறை ஆகிய அங்கங்களைக் கொண்டு விளங்குகிறது.
குடைவரையை ஒட்டி அமைந்த முகப்பின் மேல் அமைந்த இரண்டு நான்முகத் தூண்கள் உத்தரம் தாங்குகின்றன. மேலே கூரையின் வெளிநீட்டலாக விளிம்பு தட்டப்பெற்று வடிவமைக்கப்படாத கபோதம் இடம்பெறுகின்றது.
முக மண்டபம்
முகப்பையடுத்து விசாலமாக ஒரு செவ்வக முக மண்டபம் அமைந்துள்ளளது. முக மண்டபத்தின் மேற்கூரை மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. மூன்று வரிசையுடன் தாமரை மலரின் புடைப்பைச் சின்னம் மிக அழகாககூரையின் நடுவில் செதுக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் கண்ணைக்கவரும் சித்திர வேலைப்பாடுகள் உண்டு. ஓவியங்களின் எச்சங்களை இன்றும் காண முடிகிறது.
கருவறை
இந்த செவ்வக மண்டபத்தின் வடகிழக்குச் சுவரில் கருவறையொன்று அகழப்பட்டுள்ளது. கருவறையின் முகப்பில் இரண்டு நான்முகத்தூண்கள் உத்தரம் தாங்குகின்றன. கருவறை முகப்பின் நடு அங்கணத்தையொட்டி நடுவில் பிடிச்சுவர்களுடன் கூடிய மூன்று படிகள் வெட்டப்பட்டுள்ளன. கருவறைச் சுவரின் கீழ்ப்பகுதியில் உறுப்பு வேறுபாடுகளற்ற தாங்குதளத்தை அடுத்து முன் சுவரெழும்புகின்றது. சிவனின் அர்த்தநாரி சிற்பத்தொகுதி பக்கச் சுவரில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதி ஆன் பாதி பெண் வடிவிலான சிவன் கையில் திரிசூலமேந்தியுள்ளார். எதிர்ச்சுவரில் புடைப்புச் சிற்பமாய் பிருங்கி முனிவரின் சிற்பத்தொகுப்பு (panel) காட்டப்பட்டுள்ளது. எலும்பும் தோலுமாய் காணப்படும் பிருங்கி முனிவர் சிவபெருமானை நோக்கி தவமியற்றுகிறார்.

ரவண பாடி குடைவரைக் கோவில் மகிஷாசுரமர்த்தினி சிற்பத் தொகுப்பு PC: Wikimedia Commons
கருவறை செவ்வகமாக அமைந்துள்ளது. கருவறையின் சுவரில் ஆள் உயர மகிஷாசுரமர்த்தினி சிற்பத்தொகுப்பும் வராஹமூர்த்தி பூமாதேவி இணையின் சிற்பத்தொகுப்பும் செதுக்கப்பட்டுள்ளன. இத்தளத்தின் .நடுவில் சதுர வடிவிலான ஆவுடையும், மெலிந்த பாணமும் கொண்ட சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் அமைக்கப்பட்டுள்ள முழுக்காட்டு நீர் வடிகால் அமைப்பு மிகநேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரவண பாடி குடைவரைக் கோவில் வராகமூர்த்தி சிற்பத் தொகுப்பு
கருவறை வாயிலின் இடது புறம் நின்ற நிலையில் பராக்கிரமத்துடன் கூடிய துவாரபாலகர் ஒருவர் அமைந்த பாம்புடன் திரிசூலம் தாங்கியபடி காணப்படுகிறார். இவரின் இடது கால் பக்கவாட்டில் சற்று திரும்பியுள்ளது. இடது கையில் காற்றில் அசையும் துணியைப் பிடித்தபடி உள்ளார். வலது கையை இடுப்பில் வைத்துள்ளார்.

கருவறை PC CPR Environmental Education
கருவறை வாயிலின் வலது புறம் நின்ற நிலையில் இரண்டு ஆண் புடைப்புச் சிற்பங்களுடன் கூடிய சிற்பத்தொகுப்பு உள்ளது. இந்தப் சிற்பத்தொகுப்பில் வலது பக்கம் காணப்படும் புடைப்புச் சிற்பம் சிவபெருமான் ஆவார். சடையில் கபாலம், கழுத்தில் பாம்பு, வலது கையில் பாம்பு சுற்றிய நீண்ட தடி ஏந்தியவராகக் காட்சியளிக்கிறார். இடது புறம் ஹரிஹரர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. நான்கு கைகளுடன் கூடிய ஹரிஹரர் உருவம் பாதி விஷ்ணு பாதி சிவன் என்று அமைந்துள்ளது. இவரின் மேல் வலது கை சங்கையும் மேல் இடது கை நாகத்தையும் பிடித்தபடி உள்ளன. தலையின் வலப்புறம் சிகை அலங்காரத்திற்கு மேல் சிவனின் அடையாளமாக பிறைச்சந்திரன் காட்டப்பட்டுள்ளது.

ரவண பாடி குடைவரைக் கோவில் உட்பகுதி தோற்றம் PC: GOPS.com
முன்றில் (vestibule)
குடைவரைக் கோவிலின் வலது பக்க முன்றில் (vestibule) முகப்பில் இரண்டு தூண்கள் உத்திரம் தாங்குகின்றன. தூண்கள் குழிவான வரிகளைக் (fluted) கொண்டதாகவும், பல்வேறு தூண் உறுப்புக்களுடன் கூடியதாகவும் உள்ளது. இம்மண்டபத்தையடைய பக்கச் சுவர்களுடன் கூடிய மூன்று படிகள் செதுக்கப்பட்டுள்ளன. இம்மண்டபத்தில் செதுக்கப்பட்ட சிற்பத்தொகுப்பில் புடைப்புச் சிற்பமாய் பத்துக் கரங்களில் ஆயுதமேந்தியபடி நடனமாடும் சிவன் காட்டப்பட்டுள்ளார். வலது முன்கை மார்பை அணைத்தபடி இருக்க இடது முன்கை பக்கவாட்டில் விரிந்துள்ளது. நீண்டு விரிந்த உடல் (torso), உயரமான தலையலங்காரம் (headgear) மற்றும் இடையில் மடிப்புடன் அமைந்த ஆடை (pleated garment) அணிந்து சிவன் ஆடும் நடனத்தை பார்வதி, கணபதி, தேவலோகப் பெண்கள் மற்றும் சப்த மாதர்கள் கண்டுகளிக்கிறார்கள். இங்கு சிவன் காட்டும் ஆடல் அந்தகாசுரனை அழித்தபின்பு வெற்றிக்களிப்புடன் ஆடும் நடனம் என்று ஹன்டிங்டன் கருதுகிறார். யானைத்தோலுக்குப் பதிலாக இங்கு பாம்பை மட்டும் அணிந்துள்ளார்.

ரவண பாடி குடைவரைக் கோவில் வலது பக்க முன்றில் (vestibule) பத்துக் கரங்களில் ஆயுதமேந்தியபடி நடனமாடும் சிவன் PC: Wikimedia Commons
இடது பக்கம் காணப்படும் முன்றில் (vestibule) வெறுமையாகவுள்ளது. இம்மண்டப முகப்பில் சதுரம் கட்டு சதுரம் என்ற அமைப்பில் வெட்டப்பட்ட இரண்டு தூண்கள் உத்திரம் தாங்குகின்றன.
குறிப்புநூற்பட்டி
- Aihole. Wikipedia
- Aihole Cave or Ravana Phadi Cave
- Ravana Phadi, Aihole, Karnataka. India Netzone
- The sculpting experience at Rāvaṇa-paḍi