சுந்தரவரதராஜ பெருமாள் கோவில் அஷ்டாங்க விமானம், உத்தரமேரூர்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் வட்டம், உத்தரமேரூர் பின் கோடு 603406 வரலாற்று சிறப்புமிக்க நகரம். இவ்வூர் உத்தரமேரூர் நகர பஞ்சாயத்தில் அங்கம் வகிக்கிறது. இந்த ஊர் முதன் முதலில் பிராமணர் குடியேற்ற கிராமமாக இருந்துள்ளது. பல்லவ அரசன் இரண்டாம் நந்திவர்மன் (720–796 CE) இவ்வூரை கி.பி. 750 ஆண்டில் ஒரு பிரம்மதேய கிராமமாக உருவாக்கி ஸ்ரீவைஷ்ணவ வேத பிராமணர்களுக்கு நிலக்கொடையாக அளித்துள்ளார். இவ்வூரின் வரலாறு பல்லவர்களுக்கு முந்தையதாகக் கூட இருக்க வாய்ப்புள்ளது: பத்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று இவ்வூரை உத்தரமேரூர் சதுர்வேதி மங்கலம் என்று குறிக்கிறது. இவ்வூர் பற்பல வம்ச அரசர்களின் ஆடசிக் காலத்தில் பற்பல பெயர்களில் அழைக்கப்பட்டன: ராஜேந்திரசோழ சதுர்வேதிமங்கலம், விஜயகந்தகோபால சதுர்வேதிமங்கலம், வடமேருமங்கை என்று பல பெயர்கள். இவ்வூரின் அமைவிடம் 12°36′53″N அட்சரேகை : (லாட்டிட்யூட்) 79°45′18″E தீர்க்கரேகை : (லான்ஜிட்யூட்) ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 62 மீட்டர் (203 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25,194 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 12,569 ஆண்கள்,12,625 பெண்கள் ஆவார்கள்.

வாஸ்து முறையில் அமைந்துள்ளதாக கருதப்படும் இவ்வூரில் இரண்டு வைணவக் கோவில்கள் உள்ளன. ஒன்று வைகுந்தப்பெருமாள் கோவில் மற்றோன்று சுந்தரவரதப் பெருமாள் கோவில். சுந்தரவரதப் பெருமாள் கோவில் வாஸ்து சாஸ்திரத்தில் பெயர் பெற்ற பரமேசுவரத் தச்சனைக் கொண்டு நந்திவர்ம பல்லவன் இதை கட்டுவித்தான் என்றும் ‘மயன் மதம்‘ என்ற நூலின் அடிப்படையில் இது கட்டப்பட்டிருக்கிறது என்பது செய்தி. பல்லவர்களால் கட்டுவிக்கப்பட்டு சோழர்கள், பாண்டியர்கள், சம்புவராயர்கள், விஜயநகர மன்னர்கள் மற்றும் நாயக்கர்களால் இக்கோவில் விரிவு படுத்தப்பட்டுள்ளது.

ஐந்து நிலைகளுடன் கம்பிரமாய் இராஜகோபுரம் விண்ணை முட்டுகிறது. கோவிலைச் சுற்றி உயர்ந்த திருமதில்கள் அமைந்துள்ளன. கொடி மரமு ம், கருட சன்னதியும் தாண்டி கிழக்கு நோக்கிய வாயிலின் மூலம் ஸ்ரீ சுந்தரவரதப் பெருமாள் கருவறையை அடையலாம்.

ஷடாங்க (ஆறு அங்க) விமானம்

விமானம் என்பது பொதுவாக அதிஷ்டானம் (அடித்தளம்), பித்தி (சுவர்), பிரஸ்தரம் (கூரை), கிரீவம் (கழுத்து), சிகரம் மற்றும் ஸ்தூபி என்ற ஆறு அங்கங்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது, எனவே அது ஷடாங்க (ஆறு அங்க) விமானம் என்று அழைக்கிறார்கள். பொதுவாக கருவறைக்கு மேல் அமைந்துள்ள கிரீவம், சிகரம் மற்றும் ஸ்தூபி ஆகிய அங்கங்கள் கொண்ட அமைப்பையே விமானம் என்று தவறாகப் புரிந்து கொள்கிறோம்.

அஷ்டாங்க விமானம்

சரி.. அஷ்டாங்க விமானம் என்றால் என்ன? இந்த ஆறு அங்கங்களுடன் இரண்டு கருவறைகள் இரண்டு அங்கங்களாகச் சேர்த்து அமைக்கப்படுகின்றன. அதாவது பிரஸ்தரத்திற்கும் கிரிவதிற்குமிடையில் ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு சன்னதிகள் அமைக்கப்படும் அமைப்பை அஷ்டாங்க விமானம் என்று தேவாலய வாஸ்து சாஸ்திரங்கள் சொல்கின்றன. பெருமாள் இந்த அஷ்டாங்க விமான சன்னதிகளில் நின்றான் (நின்ற கோலம்), இருந்தான் (அமர்ந்த கோலம்), கிடந்தான் (சயன கோலம்) என்று மூன்று கோலங்களில் சேவை சாதிக்கிறார். காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பரமேஸ்வர விண்ணகரம் முதன் முதலில் பல்லவர்களால் கட்டுவிக்கப்பட்ட அஷ்டாங்க விமானம் ஆகும். இராமஸ்வாமி கோவில், சேரன்மாதேவி (நெல்லை மாவட்டம்), கூடல் அழகப் பெருமாள் கோவில், மதுரை, மற்றும் சவுமியநாராயணப் பெருமாள் கோவில், திருக்கோஷ்டியூர் (சிவகங்கை மாவட்டம்) ஆகிய தலங்களில் பெருமாள் நின்ற, இருந்த, கிடந்த கோலங்களில் சேவை சாதிக்கிறார்.

சுந்தரவரதராஜ பெருமாள் கோவில்

uthira2bmerur2btower2bpix2bfm2bwest

PC: Tamilnadu Tourism

ஸ்ரீஆனந்தவள்ளி சமேத சுந்தரவரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அஷ்டாங்க விமானத்தில் ஒன்பது கருவறைகள் உள்ளன. இந்தக் கோவிலில் ஒன்றின் மேல் ஒன்றாக செங்குத்து வரிசையில் ஒருங்கிணைக்கப்பட்ட மூன்று முதன்மைக் கருவறைகள் உள்ளன. இந்த மூன்று முதன்மைக் கருவறைகளும் கிழக்கே நோக்கி அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோவிலின் மூன்று நிலைகளில் உள்ள மூலமூர்த்திகள் அத்தி மரத்தால் உருவானவை என்பது குறிப்பிடதக்கது. சுந்தரவரதராஜ பெருமாள் கோவிலில் ஒரு தனித்தன்மை உள்ளது. தரைத் தளம் மற்றும் முதல் தளத்தில் அமைந்துள்ள இரண்டு முதன்மைக் கருவறைகளைச் சுற்றி மூன்று பிரதான திசைகளிலும்  (cardinal directions) திசைக்கொன்றாக மூன்று கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தரைதளத்திலிருந்து முதல் தளம் வரை ஏறுவதற்கும், இறங்குவதற்கும் என தனித்தனியே இரண்டு குறுகிய படிக்கட்டுகள் விமானத்தின் உள்ளேயே அமைக்கப்பட்டுள்ளன. இதுபோல முதல்தளத்திலிருந்து இரண்டாம் தளம் வரை ஏறுவதற்கும் இறங்குவதற்கும் தனித்தனியே இரண்டு குறுகிய படிக்கட்டுகள் விமானத்தின் உள்ளேயே அமைக்கப்பட்டுள்ளன. சுற்றிவர பிரகாரம் மற்றும் சுதை வேலைப்பாடுகளுடன் கூடிய ஆரச்சுவர் எல்லாம் முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் உள்ளன.

ஸ்ரீ சுந்தரவரதராஜப் பெருமாள் கருவறை

கீழ்த்தளத்திலுள்ள முதன்மைக் கருவறையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் ஸ்ரீ சுந்தரவரதராஜப் பெருமாள் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். நான்கு கரங்களுடன், நின்ற கோலத்தில் காடசி தரும் பெருமாள், மேல் வலது கையில் சக்கரம் மற்றும் மேல் இடது கையில் சங்கு ஏந்தியும், கீழ் கைகள் அபய ஹஸ்த முத்திரையும் கடிஹஸ்த முத்திரை காட்டியபடியும், காட்சி தருகிறார். மூலவருக்கு வெள்ளைமுர்த்தி எம்பெருமான், வெள்ளைமுர்த்தி ஆழ்வார், ஸ்ரீ இராசேந்திர விண்ணகர ஆழ்வார் மாற்றும் சொக்கப்பெருமாள் என்ற பெயர்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த பெருமாளின் தரிசனம் பாண்டவர்களில் ஒருவனான பீமனுக்குக் கிடைத்ததாம்.

தரைத்தளக் கருவறைகள்

சுந்தரவரதரின் முதன்மைக் கருவறையைச் சுற்றி தென்திசையில் அச்யுத வரதர் கருவறையும், மேற்கு திசையில் அநிருத்த வரதர் கருவறையும், வடக்கு திசையில் கல்யாண வரதர் கருவறையும் அமைந்துள்ளன. இந்த மூன்று கருவறைகளில் மூலமூர்த்திகள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்கள். விமானத்தைச் சுற்றி மூன்று புறங்களிலும் திருச்சுற்று மாளிகை அழகிய தூண்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் தென்மேற்கு மூலையில் ஸ்ரீஆனந்தவள்ளி தாயரின் (லோகமாதா என்ற பெயருமுண்டு) தனி கருவறையும், வடமேற்கு மூலையில் ஸ்ரீ ஆண்டாள் தனி கருவறையும் அமைந்துள்ளன.

முதல் தளக் கருவறைகள்

sundaravarada_perumal_temple10

PC: Tamilnadu Tourism.Blog

முதல் தளத்திலுள்ள முதன்மைக் கருவறையில் உபயநாச்சியார்கள் சமேதராய் ஸ்ரீ வைகுண்ட வரதராஜப் பெருமாள் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். இக்கருவறையில் மரத்தால் அமைக்கப்பட்ட மண்டபத்தில் இருந்த (அமர்ந்த) கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். இந்த பெருமாளின் தரிசனம் பாண்டவர்களில் ஒருவனான தர்மனுக்குக் கிடைத்ததாம்.

sundaravarada_perumal_temple13

ஸ்ரீ வைகுண்ட வரதராஜப் பெருமாள்

முதல் தளத்தில் வைகுண்ட வரதரின் முதன்மைக் கருவறையைச் சுற்றி தென்திசையில் கிருஷ்ணர் கருவறையும், மேற்கு திசையில் யோக நரசிம்மர் கருவறையும், வடக்கு திசையில் பூதேவி சமேத பூவராக பெருமாள் கருவறையும் அமைந்துள்ளன. இந்த மூன்று கருவறைகளில் மூலமூர்த்திகள் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்கள். நன்கு கரங்களுடன் வரத, அபய முத்திரை காட்டும் கிருஷ்ணர், கூப்பிய கரங்களுடன் தன்னை வணங்கும் அர்ஜுனருடன் காட்சி தருகிறார்.

இரண்டாம் தளக் கருவறை

sundaravarada_perumal_temple9

PC Wikimedia Commopns

இரண்டாம் தளத்திலுள்ள முதன்மைக் கருவறையில் ஸ்ரீ அனந்த பத்மநாப பெருமாள், ஆதிசேஷன் என்ற பாம்பணையின் மேல் கிடந்த நிலையில் கிழக்கில் திருமுகம் காட்டி சேவை சாதிக்கிறார். பூதேவி சர்ப்ப மஞ்சத்தில் அமர்ந்துள்ளார். மார்க்கண்டேயருக்கு பெருமாள் காட்சி தருகிறார். இத்தளத்தில் ஒரே ஒரு கருவறை மட்டும் உள்ளது.

பிரம்ம தீர்த்தம்

இக்கோயிலின் முற்றுப் பெறாத ராஜ கோபுரத்தை தாண்டி உள்ளே நுழைந்தால் பிரம்மதீர்த்தம் என்ற திருக்குளத்தைக் காணலாம்.

சுந்தரவரதராஜப்பெருமாள் கோவில் திருவிழாக்கள்

சுந்தரவரதராஜப்பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் சித்திரை மாதம் கொண்டாடப்படுகின்றது. கருடசேவை இவ்விழாவின் சிறப்பு. இராமநவமி கொண்டாட்டங்களும் விமரிசையாக நடைபெறுகிறது. ஆடி மாதத்தில் பவித்ரோத்சவம் சிறப்புடன் கொண்டாடப்படுகின்றது.

கல்வெட்டுகள்

சுந்தரவரதராஜ பெருமாள் கருவறையின் வெளிப்புற சுவர்களில் பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்று இந்தக் கோவில், இந்த ஊரில் அமைந்த ஆகமவிதிகளை அனுசரித்துக் கட்டப்பட்டுள்ளதாக பதிவு செய்கிறது. வாஸ்து சாஸ்திரத்தில் பெயர் பெற்ற, காஞ்சிபுரத்தில் பாடகம் என்ற இடத்தைச் சேர்ந்த,  பரமேசுவரத் தச்சன் (temple architect), நந்திவர்ம பல்லவன் துணை கொண்டு இக்கோவிலைக் கட்டியதாகவும் ‘மயன் மதம்‘ என்ற தேவாலய வாஸ்து அடிப்படையில் இது கட்டப்பட்டிருக்கிறது என்பது கல்வெட்டுசெய்தி. வைணவத்தில் வைகாநசம், பஞ்சராத்ரம் என்று இரண்டு விதமான ஆகம முறைகள் உண்டு. சுந்தரவரதராஜ பெருமாள் கோவில் வைகாநச ஆகமப்படி கட்டப்பட்டதாகும். இந்த ஆகமப் விதிப்படியே உத்திரமேரூரில் வழிபாடு நடந்து வருகிறது. வைகாநச ஆகமத்தில் ‘ சகஸ்ராதிக விப்ரக்ராமி ‘ எனும் பிரமாண வாசகம் ஒன்று இருக்கிறது.

அஷ்டலக்ஷ்மி கோவில் பெசன்ட் நகர்

காஞ்சிப் பெரியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் கனவில் மகாலக்ஷ்மி தோன்றி தமக்கு பெசன்ட் நகரின் கடற்கரையில் கோவில் காட்டுமாறு கட்டளையிட அதை ஏற்று முக்கூர் ஸ்ரீநிவாஸ வரதாச்சாரியார் ஸ்வாமிகளின் பெருமுயற்சியால் 1976-ல் இக்கோவில் உத்தரமேரூர் சுந்தரவரதர் கோவிலின் அஷ்டாங்க விமானத்தின் அடிப்படையில் ஓம்கார வடிவ அஷ்டாங்க விமானமாக கட்டப்பட்டது. அஷ்ட லட்சுமிகள் எட்டு கருவறைகளில் காட்சி தருகிறார்கள்.

உத்திரமேரூர் செல்ல…

இவ்வூர் அமைவிடம் காஞ்சிபுரத்திலிருந்து 26 கி.மீ தொலைவு ; செங்கல்பட்டிலிருந்து 26 கி.மீ தொலைவு; மதுராந்தகத்திலிருந்து 20 கி.மீ தொலைவு;  விழுப்புரத்திலிருந்து 98 கி.மீ தொலைவு; பாண்டிச்சேரியிலிருந்து 104  கி.மீ. தொலைவு; திருவண்ணாமலையிலிருந்து 107 கி.மீ. தொலைவு; சென்னையிலிருந்து 83 கி.மீ. தொலைவு. அருகிலுள்ள இரயில் நிலையம் செங்கல்பட்டு 26 கி.மீ தொலைவு; காஞ்சிபுரம் 26 கி.மீ தொலைவு. அருகிலுள்ள விமான நிலையம் சென்னை மீனம்பாக்கம் 78 கி.மீ தொலைவு; திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திலிருந்து 262 கி.மீ. தொலைவு.

குறிப்புநூற்பட்டி

  1. தமிழ்நாட்டுக் கோயில் விமானம் (விக்கிபீடியா)
  2. Sundaravarada Perumal temple (Wikipedia)

 

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in கோவில், தொல்லியல் and tagged , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.