துர்கா கோவில், ஐஹோளே , கர்நாடகா

ஐஹோளே, பண்டைய மற்றும் இடைக்கால இந்து, பௌத்தம் மற்றும் சமண நினைவுச் சின்னங்களை கொண்டுள்ள ஒரு வரலாற்று தலம். இங்குள்ள நினைவுச் சின்னங்கள் கி.பி. நாலாம் நூற்ற்றாண்டு முதல் பன்னிரெண்டாம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தவை. கைதேர்ந்த சிற்பிகள் ஐஹோளேயில் ஒன்றிணைந்து தங்கள் கட்டடக்கலைத் திறனை பரிசோதிக்கும் வண்ணம் பல கோவில்களை கட்டினார்கள். இந்த நகரம் அழகாக வடிவமைக்கப்பட்ட பல வழிபாட்டு தலங்களைப் பெற்றுள்ளதனால் பெருமையடைகின்றது. துர்கா கோவில் வளாகத்தில் குறிப்பிடத்தகுந்த சில நினைவுச் சின்னங்களாக துர்கா கோவில், லட் கான் கோவில், மேகுட்டி கோவில், கௌடர்குடி கோவில், சக்ரகுடி கோவில், படிகெர்குடி கோவில் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். துர்கா கோவில், ஐஹோளே சிவன் மற்றும் விஷ்ணுவிற்காக அர்ப்பணிக்கப்பட்ட தினசரி வழிபாட்டுக் கோவிலாகும். ‘துர்க்’ என்றால் வடமொழியில் கோட்டை என்று பொருள். இராணுவ முகாமாகப் (military outpost) பயன்பட்டதால் இக்கோவில் துர்க் கோவில் என்று அழைக்கப்பட்டதாம். இங்கு துர்க்கை தொகுதி புடைப்புச் சிற்பமாக முதல் பிரகாரத்தில் செதுக்கப்பட்டிருந்தாலும் துர்க்கை கோவில் என்ற பொருளில் இக்கோவில் அழைக்கப்படவில்லை. நாகரா மற்றும் திராவிட கலை நுணுக்கங்களுடன் அமைந்த கட்டடக் கலையமைப்பும், முன்மண்டப தூண்களிலும், கோஷ்டங்களிலும் அமைந்த கண்ணைக் கவரும் சிற்பங்களும் இக்கோவிலுக்கு அணி சேர்க்கின்றன. இக்கோவில் வளாகம் இந்திய தொல்லியல் அளவீட்டு துறையினரால் நேர்த்தியாகப் பராமரிக்கப்படுகின்றது. இவற்றைக் காண பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்தவண்ணம் உள்ளனர்.

aihplan

ஐஹோளே, கர்நாடகா. PC Art and Archaeology

துர்கா கோவில், கர்நாடகா, பகால்கோடு மாவட்டம், ஹூன்குந்த் வட்டம் ஐஹோளே (Aihole) (Kannada ಐಹೊಳೆ) பின் கோடு 587124 என்னும் ஊரில் அமைந்துள்ளது. ஐஹோளேக்கு, ஐயவோளே (Ayyavoḷe) மற்றும் ஐயபுரா (Ayyapura) என்ற பெயர்கள் இருப்பதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கலைக்கோவில்களின் வளாகம் மலப்பிரபா (Malaprabha) ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. ஐஹோளே என்ற பெயர் எப்படி வந்தது? கன்னடத்தில் “ஐய ஹோளே” (Ayya hole) என்றால் சமஸ்கிருதத்தில் அறிஞர்களின் நகரம் (city of scholars) என்று பொருளாம். சமஸ்கிருதத்தில் “ஐய புரா” என்று பெயர். விஷ்ணுவின் 6 வது அவதாரமான பரசுராமர் ஜமதக்கினி முனிவருக்கும் ரேணுகா தேவிக்கும் பிறந்த ஏழாவது மகன். விஷ்ணுவிடம் பரசு என்னும் கோடரியை தவமிருந்து பெற்றார். இவர் எல்லா க்ஷத்திரியர்களை அழித்தது மட்டுமல்ல, கார்த்தவீரியன் என்ற பேராசை பிடித்த மன்னனையும் கொன்று தன் தந்தையின் மரணத்துக்குப் பழிதீர்த்துக்கொண்டார். இதன் பிறகு மலப்பிரபா நதிக்குச் சென்று இரத்தம் சொட்டும் தன் கோடரியைக் கழுவினாராம். இரத்தம் ஆற்று நீரை சிவக்கச் செய்தது. இதைப் பார்த்த ஒரு பெண் ‘ஐயோ ஹோளே’ (கன்னடத்தில் ஒ இரத்தம்! வேண்டாம்! என்று பொருள்) என்றாள். ஐஹோளே பெயர் இப்படி ஏற்பட்டது.

ஐஹோளே பாதமியிலிருந்து 36 கி.மீ. தொலைவிலும்; ஹோஸ்பெட்டிலிருந்து 115 கி.மீ. தொலைவிலும்; பெங்களூருவைலிருந்து 510 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இதன் அமைவிடம் 16°1′08″N அட்சரேகை (லாட்டிட்யூட்) மற்றும் 75°52′55″E தீர்க்கரேகை (லாங்கிட்யூட்). கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 593 மீட்டர் (1946 அடி) ஆகும். இந்த கிராமம் 4 கி.மீ பரப்பளவுடையது.

அழகான இந்த கிராமம் கி.பி 5 முதல் 8 ஆம் நூற்றாண்டு வரை மேலைச் சாளுக்கிய வம்சத்தின் தலைநகராக இருந்தது என்றால் நம்பத்தான் வேண்டும்!  ஐஹோளே மேலைச்சலுக்கியர்கள் அமைத்த முதல் தலைநகரம். பின்பு தங்கள் தலைநகரை பாதாமிக்கு மாற்றிக் கொண்டார்கள். ஐஹோளே மேலைச் சாளுக்கியர்களின் கட்டடக்கலைக்கு பெயர்பெற்றது. இங்கு கி.பி. 6 முதல் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுமார் 125 கட்டுமானக் கோவில்களை (structured temples) 22 தொகுப்புகளில் காணலாம். ஐஹோளே நினைவுச்-சின்னங்கள் அடங்கிய வளாகம் இந்து கற்கோயில் கட்டடக்கலையின் தொட்டில் (‘cradle of Hindu rock architecture’) என்று புகழ்கிறார்கள். இந்திய கற்கோயில் கட்டடக்கலையின் தொட்டில் (cradle of Indian architecture) என்றும் பொருள் கொள்ளலாம். முப்பது கோயில்கள் இந்த வளாகத்திற்குள் இருக்கின்றன. மற்றவை வளாகத்திற்கு வெளியே சிதறிக்கிடக்கின்றன. ஐஹோளே நினைவுச்-சின்னங்களை (Aihoḷe monuments) உலகப் பண்பாட்டுச் சின்னம் (UNESCO World heritage site) என்று அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையிலுள்ளது.

800px-durga_temple

துர்கா கோவில், ஐஹோளே , கர்நாடகா. PC: Nagaraj

துர்கா கோவில் தென்னிந்திய திராவிட கட்டடக்கலைக்கு நல்ல உதாரணம். கிழக்குப் பார்த்து கட்டப்பட்ட இக்கோவில் கஜப்ருஷ்ட (தூங்கானை) வடிவில் (apsidal) அமைந்துள்ளது. இக்கோவிலின் பின்பக்கத்தின் வெளிச் சுவரும், உட்சுவரும் அரைவட்ட வடிவில் அமைந்து தூங்கும் யானையின் பிருஷ்டம் போல காணப்படுகின்றன. சாளுக்கிய கஜப்ருஷ்ட கலைபாணியில் அமைக்கப்பட்ட முதல் கோவில் இக்கோவிலாகலாம். பௌத்த சைத்திய மண்டபத்தை ஒத்து அமைந்துள்ள கட்டடப்பாணி இது.

பிற்காலத்தில் வடஇந்திய நாகரா (சதுர) வடிவ மேற்கட்டுமானம் (superstructure) தரைத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள கஜபிருஷ்ட கருவரைமேல் மேல் இயல்புக்கு மாறாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்தக் கோவில் உயரமான, கஜப்பிரஷ்ட வடிவ உபபீடத்தின் மேல் பல்வேறு துணை உறுப்புக்களின் அடுக்கமைவில் (high moulded upapitha (sub-base) அமைக்கப்பட்டுள்ளது. புற வரிசையின் விளிம்பில் அமைந்த தூண்களின் அணைப்பில் பாதபந்த அதிஷ்டானத்தின் மீது சுவர்களும் முக மண்டபமும் அமைந்துள்ளன. பாதபந்த அதிஷ்டானம் பல துணை உறுப்புகளுடன் அடுக்கமைவில் அமைந்துள்ளது. சாய்வான கூரையுடன் அமைந்த திருச்சுற்று மாளிகையில் குறுகலான சுற்றுப்பிரகாரம் உள்ளது. முன்மண்டபத்தின் விளிம்பில் உள்ள தூண்களில் மற்றும் திருச்சுற்றுமாளிகையின் விளிம்பில் உள்ள தூண்களில் எல்லாம் ஆள் அளவு உயர சிலைகள் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன.

கருவறை மற்றும் மகாமண்டபம் ஆகிய இரண்டும் கஜப்ருஷ்ட வடிவ அதிஷ்டானத்தின் மேல் பல்வேறு துணை உறுப்புகளுடன் அமைந்துள்ளது. இந்த தங்குதளத்தின் மீது நேரியல் வரிசையில் நான்கு தூண்கள் இரண்டாகப் பிரிந்து மைய மண்டபத்துடனும் பக்கவாட்டு மண்டபங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.

கருவறைக்கு முன்னால் நடுக்கூடத்தின் (central nave) சற்று உயரத்திய தட்டையான கூரை சாய்விறக்கிற்கு மேலுள்ள பலகணி வரிசையுடைய மதிற்பகுதிக்கு (clerestory) மேல் அமைக்கப்பட்டுள்ளது. .மகாமண்டபத்தின் தூண்களுக்கு இடைப்பட்ட உட்பிரகாரம் உட்சுவர் மற்றும் வெளிச்சுவர்களுக்கு இடையே அமைந்துள்ளது

அதிஷ்டானம் மற்றும் வெளிச்சுவரை அரைத்தூண்கள் பத்திகளாகப் பிரிக்கின்றன. இந்தப் பத்திகள் கோஷ்டங்கள், கூடா, சாலை, பஞ்சாரா, உட்கமா என்று பிரிக்கப்பட்டுள்ளன. ஆறு கோஷ்டங்களில் சிற்பத்தொகுப்புகள் ஆறு அழகு செய்கின்றன.

durga_temple_garba_griha2c_aihole2c_karnataka

முகமண்டபம், துர்கா கோவில், ஐஹோளே. PC Wikimedia Commons

கிழக்குப் பார்த்து அமைக்கப்பட்ட நுழைவாயிலை, முன்புறம் பக்கவாட்டில் அமைந்த படிக்கட்டுகளின் வாயிலாக அடையலாம். அகலம் குறைந்த முகமண்டபம் கஜப்ருஷ்ட தங்குதளத்தின் நீட்டிப்பாக அமைந்துள்ளது. முகமண்டபத்தை நான்கு தூண்கள் இரண்டு வரிசையில் அமைந்து உத்திரம் தாங்குகின்றன.

அழகுற செதுக்கப்பட்ட தூண்கள் உத்திரம் தாங்குகின்றன. தூண்களில் பல நேர்த்தியான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கண்ணைக் கவரும் மிதுன சிற்பம் இவற்றுள் குறிப்பிடத்தக்கது. காதற்சிற்பங்கள் மங்கள அடையாளங்களாகக் கருதப்படுகின்றன.

durga_temple_ceiling2c_aihole2c_karnataka

கூரையில் தமரைக்குளப் பதக்கம். PC Wikimedia Commons

கூரையில் அட்டகாசமான பதக்கம் (medallion) ஒன்று தாமரைக்குளதை சித்தரிக்கிறது. நடுவில் மையப்புள்ளியை நோக்கிக் குவியும் மீன்களின் உருவங்கள்; சுற்றிலும் தாமரை மலர்களின் அணிவகுப்பு. சமச்சீரான வடிவமைப்பில் (symmetric design) கூம்பிய மற்றும் மலர்ந்த தாமரை மலர்கள் அடுக்கப்பட்டுள்ளன. இது போன்ற ஒரு பதக்கத்தை பாதாமி இரண்டாம் குகையில் காணலாம். கூரையில் மற்றோரு அழகான பதக்கம் (medallion) ஒன்று ஒரு நாக மன்னனையும் அவனது சுருண்ட உடம்பைச் சுற்றிலும் இணைந்துள்ள இவரின் பணிப்பெண்களையும் சித்தரிக்கிறது. நாக மன்னன் தன வலது கையில் ஒரு மாலையை ஏந்தியுள்ளான். இடது கையில் பூஜைப் பொருட்களடங்கிய ஒரு தட்டை ஏந்தியுள்ளான். பணிப்பெண்களும் இவ்வாறே தட்டுக்களை ஏந்தியுள்ளார்கள். இந்தத் தட்டுக்களில் பழங்கள் வைக்கப்பட்டுள்ளன.

img_4915

முதல் பிரகாரம், துர்கா கோவில், ஐஹோளே. PC: Wikimedia Commons

1151-inside-structure-durga-temple-aihole-karnataka-india

முதல் பிரகாரம், துர்கா கோவில், ஐஹோளே. PC: Findmessages.com

1612290d1487913221t-exploring-malaprabha-valley-badami-aihole-pattadakal-more-ad2

ஒன்றாம் சிற்பத் தொகுதியில் எட்டுக்கைகளுடன் நின்ற கோலத்தில் காட்சி தரும் சிவன் அருகில் அழகிய நந்தி வாகனமும் இணைந்து காட்சி தருகின்றது.

68467727

எட்டுக்கை சிவன் நந்தியுடன் PC: Panoramio

இரண்டாம் சிற்பத் தொகுதியில் நரசிம்மர், மனிதனும் சிங்கமும் இணைந்த விஷ்ணுவின் அவதாரம், திரிபங்க நிலையில் வலது கையில் தடியைப் பற்றியபடி (தடி உடைந்துள்ளது) காட்சி தருகிறார்.

durga_temple_aihole-_narasimha

Wikimedia Commons

மூன்றாம் சிற்பத் தொகுதியில் விஷ்ணு கருடன் மேலமர்ந்து காடசி தருகிறார், விஷ்ணு உருவம் மிகவும் குள்ளமாக அமைந்துள்ளது. கருடனின் சிறகுகள் வலது புறம் காணப்படுகின்றது.

durga_temple_aihole-_vishnu

Wikimedia Commons

நான்காம் சிற்பத் தொகுதியில் விஷ்ணுவின் கூர்ம அவதாரம். பூதேவியை தன் முழங்கையில் அமர்த்தியுள்ளார். தன்னுடைய காலில் நாகத்தை அழுத்தியபடி காட்சி தருகிறார்.

ஐந்தாம் சிற்பத் தொகுதியில் துர்க்கை எருமைத் தலையுடனான மகிஷாசுரன் என்னும் அசுரனைத் தாக்கியபடி காட்சி தருகிறாள். இவளுடைய சிம்மம் முகத்தைச் சுருக்கி உக்கிரமமாகக் காணப்படுகிறது. தேவியின் இடது கால் மற்றும் பல கைகள் உடைந்துள்ளன.

6b5466e67c38c72409806367177629f2

PC: Pineterest

ஆறாம் சிற்பத் தொகுதியில் வலது பக்கம் சிவகணங்களைக் காணலாம். இடது பக்கம் விஷ்ணு கையில் சங்கம் பற்றியுள்ளார். இதனைக் கருத்தில் கொண்டு இத்தொகுதியில் காட்சி தருபவர் ஹரிஹரர் ஆவார்.

நுழைவுக் கட்டணம்

துர்கா வளாகத்திற்குள் பார்வையிட:- இந்தியர்கள் மற்றும் சார்க் (SAARC) உறுப்பு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயனியர்களுக்கு ரூபாய் 15/- மட்டும். மற்றவர்களுக்கு ரூபாய் 200/-மட்டும்.

குறிப்புநூற்பட்டி

  1. Aihole. Wikipedia
  2. Durga Temple
  3. Durga Temple Aihole
  4. The Erstwhile Capital of Chalukya Dynasty

 

 

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in தொல்லியல் and tagged , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.