கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோவில்: உலகப் புகழ்பெற்ற நாயக்கர்கால சிற்பங்கள்

கலையழகு மிளிரும்  16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர்கால சிற்பங்களுக்கும், சிற்பக்கலைக்கும் புகழ் பெற்ற கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோவில் திருநெல்வேலி – திருச்செந்தூர் சாலையில் திருநெல்வேலியிலிருந்து 17 கி.மீ. தொலைவிலும்; பாளையங்கோட்டையிலிருந்து 8 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், நொச்சிகுளம் பஞ்சாயத்து, கிருஷ்ணாபுரம் கிராமம் பின் கோடு 627 759 (அமைவிடம் 8° 36′ 43″ N அட்சரேகை (லாட்டிட்யூடு), மற்றும் 77° 58′ 19″ E தீர்க்கரேகை (லாங்கிட்யூடு). 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இவ்வூரின் மக்கள்தொகை 1820 ஆகும். மொத்தம் 905.24 ஹெக்டேர் பரப்பளவுள்ள இவ்வூரில் 484 வீடுகள் உள்ளன.

பதினாறாம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசின் மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கர் இந்த கோவிலைக் கட்டி சிற்பங்களை நிறுவியுள்ளார். 110 அடி உயரத்தில் ஐந்து நிலை வானளாவிய இராஜகோபுரமும், கருங்கல்லிலான திருச்சுற்று மதில்களும் சூழப்பெற்று விசாலமாக 1.8 ஏக்கர் (0.73 ஹெக்டேர்) பரப்பில் நாயக்கர் கட்டிடக்கலைப்பணியில் அழகுற அமைந்த 16 ஆம் நூற்றாண்டுக் கோவில் இது. இக்கோவிலில் மூன்று பிரகாரங்கள் இருந்துள்ளன. ஆற்காட்டு நவாப் உத்தரவின்படி சந்தா சாஹிப் மூன்றாம் பிரகாரத்தை தரைமட்டமாக்கிவிட்டான். இதுமட்டுமல்ல இடித்த கற்களைக்கொண்டு பாளையங்கோட்டையில் கோட்டை ஒன்றையும் கட்டினானாம். இராஜகோபுரம் தாண்டியவுடன் துவஜஸ்தம்பத்தையும் பெருமாளை நோக்கி அமர்ந்துள்ள கருடனையும் காணலாம்.

1200px-krishnapuram1

Wikimedia Commons

கருவறையில் மூலவர் வெங்கடாசலபதி உருவம் கருங்கல்லால் நன்கு அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்கு கரங்களுடன் நின்றகோலத்தில் ஸ்ரீதேவி பூதேவி புடைசூழ சேவை சாதிக்கும் பெருமாளின் மேலிரண்டு கைகள் சங்கு மற்றும் சக்கரம் பற்றியுள்ளன; கீழிரண்டு கைகள் அபய மற்றும் கடிஹஸ்த முத்திரைகள் காட்டுகின்றன. உற்சவர் பெயர் ஸ்ரீனிவாசன், மூலவரைப் போலவே நான்கு கரங்களுடன் நின்றகோலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சேவை புடைசூழ காட்சியளிக்கிறார் கருவறையைத் தொடர்ந்து அர்த்தமண்டபம் அமைந்துள்ளது. அர்தமண்டப நுழைவாயில் ஆஜானுபவ தோற்றம்கொண்ட துவாரபாலகர்கள் காவலில் உள்ளது. அலர்மேல்மங்கைத் தாயாரின் தனி சன்னதி பிரகாரத்தில் உள்ளது.

இக்கோவிலில் பந்தல் மண்டபம், வாஹனமண்டபம், ரெங்கமண்டபம், நாங்குநேரி ஜீயர் மண்டபம் என்ற பெயர்களில் சில மண்டபங்கள் உள்ளன. பந்தல் மண்டபத்து தூண்களில் புஷ்பப் பொய்கை, பலகை மற்றும் வரிக்கோலம் போன்ற வேலைப்பாடுகள் நிறைந்துள்ளன. விழாக்களின்போது ஊஞ்சல்மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளை ஊஞ்சலில் அமர்த்துகிறார்கள். வசந்தமண்டபம் கலை அழகுற அமைக்கப்பட்டுள்ளது. ஜீயர் மண்டபத்தில் அழகான தூண்களில் .கேரளா கோவில்களைப்போல பாவைவிளக்கு புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. விழாக்காலத்தில் ஜீயர்கள் இங்கு அமர்வதுண்டாம். சொர்க்கவாசல் யாகசாலை மண்டபத்திற்கு மேற்குப்புறத்தில் உள்ளது. மணிமண்டபத்தில் பல யாளி-யானை தூண்கள் அணிவகுத்துள்ளன.

கோவிலின் வடக்குப் பிரகாரத்தில் உள்ள வீரப்ப நாயக்கர் மண்டபத்தின் நுழைவாயிலில் இரண்டு யானைகள் நம்மை வரவேற்கின்றன. இக்கோவிலில் மொத்தம் 42 அழகு மிளிரும் சிலைகளைக் காணலாம். இவை உலகப்புகழ் பெற்றவை. மண்டபத்தின் தூண்களில் ஆளுயர உருவம் கொண்ட எழில் கொஞ்சும் சிற்பங்கள் இந்துப் புராணங்களில் காணும் சம்பவங்களின் அடிப்படையில் செதுக்கப்பட்டுள்ளன. ஆடை அணிகலன்கள் தத்ரூபமாக காணப்படுகின்றன. கை மற்றும் கால்களில் ஓடும் நரம்புகள் கூட தெளிவாகத் தெரிகின்றன.

ஆறு தூண்கள் மிக நேர்த்தியான வடிமைப்பு கொண்ட சிற்பங்களை உள்ளடக்கியுள்ள. தட்டினால் இனிய ஓசை எழுப்பும் இசைத் தூண்கள் இக்கோவிலின் மற்றொரு சிறப்பு. ஒரு சிற்பம் பற்றியுள்ள வளைவான வில்லின் ஒரு முனையில் ஒரு குண்டூசியைப் போட்டால் மற்றோரு முனை வழியாக தரையில் விழுவது சிற்பிகளின் திறமைக்கு வலுவான சான்றாகும். இன்று இந்த சிற்பம் சற்று சிதைந்தும் வில்லின் ஒரு பகுதி பழுதுபட்டும் காணப்படுகிறது.

மன்மதன் மற்றும் ரதி சிற்பங்கள் நேரெதிர் தூண்களில்.

ரதி-மன்மதன் சிற்பங்கள் நேரெதிரில் உள்ள தூண்களில் காமரசம் ததும்ப வடிக்கப்பட்டுள்ளன. ரதியின் இடது கை மணிக்கட்டில் நரம்பு வரியோடுவதைக் காணலாம். வெற்றிலை பாக்கை மெல்லும் வாயைப் பார்த்து திகைக்கிறோம். ரதி இது உயிர்பெற்று நம் முன்பு நிற்கும் ரதி அல்ல, ரதியின் சிலை மட்டுமே என்ற உணர்வு பெறுவது சிரமம். ரதியின் எதிரில் 5 1/2 அடி உயரத்தில் மன்மதன் கையில் வில்லேந்தி உயிர்பெற்று நிற்கிறார். இந்த ரதி-மன்மதன் சிற்பங்கள் சாகாவரம் பெற்றவை.

பீமன், வியக்ரபாலகன் (சிவனடியார்) மற்றும் தர்மராஜா

பராக்கிரமம் வாய்ந்த புராண நாயகர்களின் சிற்பங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன என்பதை நம்ப முடியவில்லை! அதிசயம் ஆனால் உண்மை. இந்த அதிசய சிற்பத் தொகுப்பில் பீமனும் வியாக்ரபாலனும் சண்டைபோடுவதாகவும், இந்த சண்டைக்கு தர்மராஜா நடுநிலை வகிப்பதாகவும், நடுவர் வியாக்ரபலகன் வென்றதாக தீர்ப்பளிப்பதாகவும் காட்டப்பட்டுள்ளது. இந்த புராணக் கதைக்கேற்ப, தர்மராஜா அமைதியான முகபாவத்துடனும், பீமனின் திமிர் பிடித்த முகபாவத்துடனும் சிற்பங்களில் காட்டப்பட்டுள்ளனர்.

வீரபத்ரர்

பெரிய மீசையுடன் கம்பீரமாக நிற்கும் வீரபத்ரர் தன் அடியவரை கருணை கொஞ்சும் விழிகளுடன் நோக்குகிறார். இந்தச் சிற்பத்திலும் கை நரம்புகள் தத்ரூபமாகக் காட்டப்பட்டுள்ளன.

ரம்பா

அப்சரஸ்கள் தேவலோகத்தில் பார்வதிதேவியின் தோழிகளாவர். பாற்கடலைக் கடையும் போது அப்சரஸ்கள் தோன்றியதாகவும் இவர்கள் மொத்தம் 60,000 பேர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இவர்களில் ரம்பா, ஊர்வசி, மேனகை, திலோத்தமை போன்றவர்களைத்தான் காவியங்களும், இலக்கியங்களும் பேசுகின்றன. தேவலோக அப்சரஸ்களின் தலைவி ரம்பா. தேவலோக அழகியான ரம்பாவை எப்படி காட்டினால் சிறப்பு என்று யோசித்து சிற்பிகள் ஒரு ரம்பையை மண்டபத்தின் நுழைவாயிலில் வலதுபுறம் அமைந்த தூணில் இரத்தமும் சதையுமாய் நிறுத்தியுள்ளார்கள். நீண்ட கூரிய நாசி, பெரிய காதணிகள், உடற்கூறியல்படி கட்டமைப்பான உடல் – இந்த மண்டபத்தில் உள்ளது போலவே ரம்பா இருந்திருப்பார் என்று நம்பலாம்.

இளவரசன் கர்ணன்

g_t5_796

இளவரசனுக்குரிய மீசையுடனுடன், கையில் பெரிய (பிற்காலத்தில் சிலையில் வில் ஒடிந்துவிட்டது…) வில்லைப் பற்றியபடி மகாபாரதத்தின் கதாநாயகன் கர்ணன் கனகம்பீரமாக நிற்கிறார். அங்க தேசத்து அரசனாக துரியோதனனால் முடிசூட்டப்பட்ட வில்வீரனை இங்கு காணலாம்.

அர்ஜுனனின் தவம்

கர்ணன் இருந்தால் அர்ஜுனன் இருக்க வேண்டுமல்லவா! கர்ணனுக்குப் பக்கத்திலேயே நீண்ண்ண்..ட தாடியுடன் ஆழ்ந்த தவக்கோலத்தில் அர்ஜுனனைக் காணலாம். கையில் நீளமாக வளர்ந்த நகங்கள் அர்ஜுனனின் நீண்டநாள் தவ வாழ்க்கையை எடுத்துக் கூறுகின்றன. உயிர்த்து எழுந்து நிற்கும் சிற்பம்.

யானையும் காளையும் (ரிஷப குஞ்சரம்) சிற்பம்

ஒரே கல்லில் யானையும் காளையும் கலந்த (ரிஷப குஞ்சரம்) சிற்பம் . இரண்டும் நேருக்கு நேர் முட்டிக் கொள்வது போன்று இருக்கும். யானையின் உடலை மறைத்து விட்டு பார்த்தால் காளை போலவும், காளையின் உடலை மறைத்து விட்டு பார்த்தால் யானை போலவும் தோன்றும்.

அரசியை தோளில் சுமக்கும் அரசன்

krishnapuram-temple

PC: Arun Ranganathan

உணர்ச்சி ததும்பும் உயிரோவியம். ஒரு அரசன் தன் அரசியை தோளில் சுமந்தபடியே எதிரிகளுடன் சண்டை போடுகிறார். அரசியின் உடல் எடையை சுமப்பதால் அரசனின் கைகளில் தசைகள் முறுக்கேறியுள்ளன, விலா எலும்புகள் விரிவடைந்துள்ளது. உடற்கூற்றியல்படி உயிர்பெற்ற சிற்பங்கள். அரசனின் மூச்சுக்காற்று பட்டு அரசியின் முக்காடு தலையை விட்டு சற்று விலகுகிறது. அரசியை காப்பாற்றுவது ஒன்றே அரசனின் ஒற்றைக் குறிக்கோள்.

கடத்தப்பட்ட தன் அரசியை காப்பாற்றும் அரசன் சிற்பத்தொகுப்பு

கிருஷ்ணாபுரத்தின் மற்றோரு தலைசிறந்த கலைப்படைப்பு இந்த சிற்பம். இந்தத் தொகுப்பில் அரசன் தன் குதிரையில் அமர்ந்து கடத்தப்பட்ட தன் அரசியை மீட்க ஆக்ரோஷத்துடன் துரத்துகிறான். போர்க்களத்தில் ஒரு முன்னங்காலை தரையில் ஊன்றியும், மறுகாலை தூக்கியபடியும் கோபம் ததும்ப விரையும் குதிரையை இங்கு மட்டுமே காணமுடியும். அரசியை கடத்தியவனை தன் பார்வையிலிருந்து நழுவவிட்ட போதிலும் விரைந்து சென்று அவனை நோக்கி வெறியுடன் முன்னேறும் அரசனின் உணர்வுகள் காண்போர் கண்களுக்கு விருந்து.

20191840513_812d4e7b09_b

கொஞ்சும் அழகுடைய ஒரு பெண்ணின் தோளில் கொஞ்சும் மொழி பேசும் பச்சைக்கிளி அமர்ந்துள்ளது. ஒரு பிச்சைக்காரன் தோளில் மலங்க மலங்க விழித்தபடி ஒரு குரங்கு அமர்ந்துள்ளது. இவை சிற்பக்கலையின் உன்னதம்.

இரண்டு காதலர்கள் மற்றோரு தூணில் ஒய்யாரமாய் நின்று காதல் புரிகிறார்கள்.

அடுத்த தூணில் வீரன் ஒருவனும் நாடோடி மங்கை ஒருத்தியும் நடனமாடும் மற்றோரு அழகியை வியந்து பார்த்தபடி உள்ளார்கள்.

வேறொரு தூணில் தன்னை வெறியுடன் கற்பழிக்க முயலும் ஒரு சாமியாரிடம் தன்னைக் காத்துக்கொள்ள அவனுடைய தாடியைப் பிடித்து வலுவாக இழுத்து தள்ளும் கற்பரசி ஒருத்தியின் போராட்டம் வெகு அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

465961895_ec754e713a_b

வைணவக் கோவில்கள் தற்பொழுது சைவ கோவில் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 1975 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை இக்கோவில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டு முதல் இக்கோவில் திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் இக்கோவிலைப் நேர்தியாகப் பராமரித்து வருகிறது. புதுவண்ணப் பூச்சுடன் இக்கோவில் இன்று மிளிர்கிறது.

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in கோவில், Uncategorized and tagged , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.