புதிர்நிலைகள் (Labyrinths / Mazes)

தமிழ் நாட்டில் கிருஷ்ணகிரி வட்டம், சின்ன கொத்தூர் (குந்தாணி), பைரேகவுணியில் சுருள் வளைய வடிவ புதிர்நிலை, தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூரில் சதுரவடிவ புதிர்நிலை, கோயமுத்தூர் மாவட்டம் தெற்கு பொள்ளாச்சி வட்டம், கெடிமேட்டில் சதுரவடிவ புதிர்நிலை, சேலம் மாவட்டம், வீரபாண்டி வட்டம், வேம்படித்தளம் அருகே கோட்டைப்புத்தூரில் வட்டவடிவ ஓரொழுங்கு புதிர்நிலை, புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கீரமங்கலம் அருகே வில்வன்னி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள அம்பலத்திடல் பகுதியில் இருக்கும் சுண்ணாம்பு திட்டையில் சிதைந்த நிலையில் சதுரவடிவ புதிர்நிலை என்று பல புதிர்நிலைகள் பல அமைப்புகளைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர்களால் கண்டுபிடிக்கப்பட்ட செய்திகளை செய்தித் தாள்கள் வாயிலாக நாம் அறிவோம்.

புதிர்நிலைகள் பற்றி நம்மிடையே பரவலாக அதிக ஆர்வம் காணப்படுகிறது. இவை பற்றி மிகவும் விவாதிக்கப்படுகிறது. கேள்விகள் கேட்கப்படுகிறன. பலதரப்பட்ட சிக்கலான புதிர்நிலைகள் நமக்குச் சொல்லும் செய்திகள் அல்லது அடையாளங்கள் தான் என்னென்ன? இவைகள் எங்கிருந்து வந்தன? ஏன் இப்படி அமைக்கப்பட்டுள்ளன? இவை எப்படி பயன்படுத்தப்பட்டன? இவற்றைச் சுற்றி ஏன் நடக்க வேண்டும்? இது போன்ற கேள்களையும் பதிலையும் தமிழ் நாட்டு ஊடகங்களும் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களும் அன்றாடம் விவாதித்து வருகின்றன.  ஒரு சில ஆசிய நாகரிகங்கள் புதிர்நிலையை “சம்சார பந்தத்திலிருந்தும் கர்ம வினைகளிலிருந்தும் விடுபட உதவும் அமைப்பாக” ஜெ.சி.கூப்பர் தன்னுடைய An Illustrated Encyclopedia of Traditional Symbols என்ற நூலில் சொல்லுகிறார்.

இந்த புதிர்நிலை குறித்த இரண்டு பதங்களான labyrinth (Wiktionary meaning: சிக்கல் வழி) என்ற பதத்தையும் (term), maze (Wiktionary meaning: புதிர்பாதை, சிக்கலறை) என்ற பதத்தையும் (term), சிலர் குழப்பிக் கொள்வதுண்டு. சரி labyrinth என்றால் என்ன? மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும்படி அமைந்துள்ள இந்தச் சிக்கல் (puzzle) முட்டும் வழிகளையும் (dead ends), சிக்கலிலிருந்து வெளியேற (exit) முடியாதபடியும், வெளியிலிருந்து மையத்தை நோக்கி உள்ளே நுழைய (to find one’s way) முடியாதபடியும் சுற்றிச் சுற்றி அமைக்கப்பட்ட சிக்கலான ஓரொழுங்குப் பாதை அல்லது சிக்கல் வழி (Labyrinth) எனலாம். அப்படி என்றால் maze என்பது பற்றித் தெரிந்துகொள்ளவும் ஆர்வமாக இருப்பீர்கள்! Maze என்னும் புதிர்பாதை பல்வேறு கிளைவழிகளுடன் கூடிய மிகவும் சிக்கலான வழியாகும் (பல்லொழுங்குப் பாதை). சிக்கல் வழி (Labyrinth) என்ற பதமும் (term) புதிர்வழி (maze) என்ற பதமும் (term) பொது வழக்கில் ஒரே பொருளில் பேசப்பட்டாலும் இரண்டும் வெவ்வேறானவை. தமிழ் ஊடகங்கள் இந்த அமைப்புகளை ‘புதிர்நிலை’ என்று குறிப்பிடுகின்றன. நாமும் புதிர்நிலை என்ற சொல்லையே கையாளலாம். புதிர்நிலைகள் பல வடிவங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன: வட்டப்புதிர்வழிகள், நீள் வட்டப் புதிர்வழிகள், சதுரவடிவப் புதிர்வழிகள், செவ்வகப் புதிர்வழிகள், மற்றும் முக்கோணப் புதிர்வழிகள். இவற்றில் வட்டப்புதிர்வழிகள் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானவை ஆகும்.

உலக அளவில் புகழ் பெற்ற புதிர்நிலைகள்

எகிப்தில் உள்ள இரட்டைத்தள கல் கட்டிடம் ஒன்று மிகவும் பழமையான புதிர்நிலை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிரேக்க பயணியும் எழுத்தாளருமான ஹெரோடோட்டஸ் (Herodotus) மோரிஸ் நதிக்கரையில் Lake Moeris) க்ரோக்கொடைலோபோலிஸ் நகரத்தில் (city of the crocodiles (Crocodilopolis) அமைந்துள்ள இந்த எகிப்து கட்டிடத்தை கி.மு. 5 ஆம் நூற்றாண்டிலேயே பார்த்துள்ளார். மதில் சூழ்ந்த இக்கட்டிடத்தில், 12 அரசவைகளும் (courts) 3000 அறைகளும் இருந்தனவாம். கி.பி. 1 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிளினி (Plini) தன்னுடைய ‘இயற்கை வரலாறு’ (Natural History) என்னும் நூலில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

கிரேட்டன் புதிர்நிலை (The Cretan Labyrinth) எக்காலத்திலும் சிறந்த புதிர்நிலையாக மதிப்பிடப்படுகின்றது. கிரேட்ட தீவின் அரசன் ஏஜியஸ் (King Aegeus of Crete), மினோவ அரசன் மினோசுக்கு (King Minos of the Minoan) கப்பம் கட்டும்படி நிற்பந்திக்கப்பட்டான். இந்தக் கப்பம் என்பதில் ஏழு இளம் வாலிபர்களும் மற்றும் ஏழு இளம்பெண்களும் அடங்குவர். மினோசின் நோசசு நகரின் (city of Knossos) அரண்மனையின் பாதாளத்தில் (underground far below palace) ஒரு பல்லொழுங்குப் பாதை (maze) கொண்ட கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. இக்கட்டிடத்தில் அரைப்பகுதி மனித வடிவமும், அரைப்பகுதி காளை வடிவமும் கொண்ட ‘மினோட்டர்’ என்ற தொன்மப் பிராணியை எவரும் அணுகா வண்ணம் அடைத்து வைத்தனர். இந்த கட்டிடத்தில் பதினான்கு இளம் ஆண் மற்றும் பெண்களையும் உள்ளே அனுப்பினார்கள். புதிர்நிலை வழியில் அங்கும் இங்கும் ஒடி சுற்றி அலைந்து இறுதியில் அந்த மிருகத்துக்கு இரையாகி விடுவார்கள் என்று நினைத்து இவர்களை உள்ளே புக வைத்தார்கள். ஆனாலும், இளம் வீரனான தேசியசு அந்த சிக்கல் வழிக்குள் நுழைந்து அப்பிராணியைக் கொன்றான். அந்தக் கட்டிடத்திலிருந்து தான் மட்டும் தப்பி வெளியேறக்கூடிய வழி அவனுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது.

லார்ஸ் போர்செனா என்ற எட்ருஸ்கன் படைத்தளபதியின் (Etruscan general Lars Porsena) கல்லறையின் நிலத்தடியில் பல்லொழுங்குப் பாதை (maze) கொண்ட அமைப்பு இருந்ததாக பிளினி (Pliny) கூறியுள்ளார்.

புதிய கற்காலத்தில் குறிப்பிட்ட சில நாடுகளில் புதிர் நிலை வழிபாடு செய்யப்பட்டு வந்துள்ளன. ரோமானிய பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு தேவாலயங்களில் புதிர்நிலைகள் (labyrinths), கிருத்துவ மதத்தை ஐரோப்பாவில் பரப்பும் வகையில், தோன்றின. முப்பரிமானம் கொண்ட புதிர்நிலைகளாக அல்லாமல் சுவற்றில் வரையப்பட்ட ஓவியமாகவோ அல்லது தரைமீது கீறல்களாகவோ வரையப்பட்டன. அனுமானிக்கத் தகுந்த புதிராக காட்டப்பட்ட வேண்டும் என்பது இதன் நோக்கமாகும். கிறித்தவனின் வாழ்வில் ஏற்படும் இடர்கள் மற்றும் சிக்கல்களை இவை குறித்துக் காட்டுவதாக சில அறிஞர்கள் கருதுகிறார்கள். வேறு சிலர் பாவத்தின் தன்மையை குறித்துக் காட்டும் ஆடையாளமாகக் கருதுகின்றனர்.

அல்ஜீரியாவின் ஆர்லியன்ஸ்வில்லே என்ற நகரில் உள்ள ரிபரட்டஸ் பசிலிக்காவில் உள்ள புதிர்நிலையே (labyrinth) மிகப்பழையது என்று தெரிகிறது. இது ஒரு நடைபாதையில் எட்டு அடி விட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் இத்தாலியிலும் ஃபிரான்சிலும் தேவாலயத்தின் ஒரு அங்கமாக புதிர்நிலைகள் அமைந்தன. ஃபிரான்சின் அமீன்ஸ் கதீட்ரலின் அமைந்த புதிர்நிலை ஒன்று 42 அடி விட்டமுள்ளது. சில புதிர்நிலைகள் கி.பி. 1825 களில் அழிக்கப்பட்டுவிட்டாலும் பல புதிர்நிலைகள் ஐரோப்பாவில் இன்றும் நேர்த்தியாகப் பாதுகாக்கப்படுகின்றன.

இந்தியாவில் புதிர்நிலைகள்

மகாபாரதம் ஒரு இந்திய இதிகாசம். குருச்சேத்திரப் போரை பிரதானமாகக் கொண்ட இந்த இதிகாசம், பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையிலான பெரும் போரை மையப்படுத்தி சொல்லப்பட்ட கதை. மகாபாரதத்தில் வகுக்கப்பட்ட போர் வியூகங்கள் பல: அர்த்த சக்ர வியூகம் என்ற அரைவட்ட வியூகம்; கிரௌஞ்ச வியூகம் என்ற பறவை வியூகம்; மண்டலவியூகம்; சகடவியூகம் என்ற வண்டிச்சக்கர வியூகம்; சக்கரவியூகம்; மற்றும் வஜ்ரவியூகம் என்னும் மின்னல் வடிவம் என்பன எல்லாம் குழப்பம் தரும் புதிர்நிலை அமைப்புகளே. இவற்றுள் சக்ர வியூகம் புகழ் பெற்றது. ஏனென்றால் அபிமன்யு இந்த வியூகத்தில் சிக்கிக்கொண்டு உயிரிழந்த கதையை நாமறிவோம். வரலாற்று நோக்கில் குருச்சேத்திரப் போர் நடந்த காலகட்டத்தை உறுதியிட்டு கூற இயலவில்லை. கடலில் மூழ்கிய துவாரகை நகரை தொல்லியல் அறிஞர்கள் ஆய்வு செய்தார்கள். துவரகை நகரம் கி.மு.1500 இல் கடலில் மூழ்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

chakran

சக்கர வியூகம் PC: ptvinodchoubey

தெற்கு கோவா மாநிலத்தில் சங்குயெம் வட்டம் (Sanguem subdivision) குஷாவதி நதிக்கரையில் பன்சைமோல் (Pansaimol) கிராமத்தில் (அமைவிடம் 15° 7′ 18.84″ N, 74° 7′ 50.16″ E) உஸ்கலிமோல் பகுதியில் அமைந்துள்ள ஏழு நிலைப்பாதைகளைக் கொண்ட பெருங்கற்கால வட்டப்புதிர்நிலை பாறையில் கீறப்பட்டுள்ளது Usgalimal Petroglyphs (Konkani: ऊसगाळीमळावयली फातरशिल्पां). இத்தளம் 1993 ஆம் ஆண்டு சில தொல்லியல் களப்பணியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பாறை ஓவியங்கள் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது.

4436737381_5ee7cc1cb7

பன்சைமோல், உஸ்கலிமோல்

ஆந்திர பிரதேச மாநிலம், குண்டூர் மாவட்டம், தாடிப்பள்ளி வட்டம், விஜயவாடா நகரம் அருகில் கிருஷ்ணா ஆற்றங்கரையில் உள்ள உண்டவல்லியில் (Telugu ఉండవల్లి – వికీపీడియా) – பின் கோடு 522501 (அமைவிடம் 16° 29′ 48.73″ N, 80° 34′ 54.41″ E) – கி.பி. 4 – 5 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த குடைவரைகள் உள்ளன. இங்குள்ள ஒரு குகையின் தரையில் கி.பி. 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு புதிர்நிலை கீறப்பட்டுள்ளது.

c4mgdf4weaajuhk

உண்டவல்லி குகை,புதிர்நிலை, விஜயவாடா PC: Anuradha Goyal Twitter

கர்நாடக மாநிலம் ஹஸன் மாவட்டம், பேலூர் வட்டம்,  ஹளேபேடு (Kannada ಹಳೇಬೀಡು ) பின் கோடு 573121 (அமைவிடம் 13° 12′ 47.5″ N, 75° 59′ 42″ E) நகரில் கி.பி.1121 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஹோய்சலேஸ்வரா சிவன் கோவில் உள்ளது. இங்கு சக்ர வியூஹ அமைப்பில் ஒரு புதிர்நிலை காணப்படுகிறது. சுருள் (spiral)  வடிவில் விந்தையான பாணியில் அமைந்துள்ள  புதிர்நிலை மகாபாரதத்தின் பத்ம (சக்ர) வியூகத்தை நினைவு படுத்துகின்றது.

india

ஹளேபேடு ஹோய்சலேஸ்வரா  கோவில் சுருள்  வடிவில் புதிர்நிலை. PC TripBase Blog

தமிழ் நாட்டில் கண்டறியப்பட்ட புதிர்நிலைகள்

கிருஷ்ணகிரி வட்டம், சின்ன கொத்தூர், பைரே கௌனி புதிர்நிலை

கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டம், தேவர் குந்தாணியான சின்ன கொத்தூர் என்ற கொத்தூர் கிராமம் (போசள அரசன் வீர ராமதானின் தலைநகரமாக இருந்ததாக தகவல்?), பைரே கௌனியில் தான் முதன்முதலில் புதிர்நிலை கண்டறியப்பட்டது. இந்த இடம் அன்று ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டத்தோடு இணைக்கப்பட்டிருந்தது. இது சுருள் வடிவில் அமைக்கப்பட்ட ஓரொழுங்குப் பாதையாகும். இப்பகுதியில் இயல்பாகக் கிடைக்கும் கற்குண்டுகள் இங்கு தரையில் வரிசையாகப் பதிக்கப்பட்டு இப்புதிர்நிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

பைரே கௌனி புதிர்வட்டப்பாதையின் விட்டம் 28 அடி (8.5 மீட்டர்) அளவும் பாதை அளவு 1 அடி 261⁄64 இஞ்சுகள் அல்லது 38 செ.மீ. அகலமும் ஆகும். இந்தப் புதிர்நிலையின் காலம் இன்னும் துல்லியமாகக் கணிக்கப்படவில்லை. என்றாலும் இது கி.பி. 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயிருக்கலாம். (Caerdroia – Indian Labyriths).

ஜீன் லூயிஸ் போர்ஜியஸ் (Jean Louis Bourgeois) என்கிற புதிர்நிலை ஆய்வாளர் (இவருடைய ஆய்வு முடிவுகள் ஹெர்மன் கேர்னின் இந்திய புதிர்நிலை ஆய்வுகள் (Hermann Kern on labyrinths in India) என்ற நூலில் இடம்பெற்றுள்ளது) போர்ஜியஸ் இப்புதிர்நிலையின் காலத்தை கி.மு. 1000 (3000 ஆண்டுகளுக்கு முந்தையது) என்று கணித்துள்ளார். இதன் அமைவிடம் பெருங்கற்கால கல்திட்டைகளுக்கு (amidst dolmens) இடையில் என்பது இவருடைய முடிவிற்கு காரணமாயிருக்கலாம். எனினும் ஹெர்மன் கேர்ன் தன்னுடைய நூலில் Through the Labyrinths, (2000), p.290 இந்தக் கணிப்பை கேள்விக்குறியாக்குகிறார். இந்த விவாதங்கள் மற்றும் ஆய்வுகள் இங்கு தொடர்கின்றன

கம்பைநல்லூர் புதிர்நிலை

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர்  பேரூராட்சி, கம்பைநல்லூர் கிராமம் பின் கோடு  635202 (அமைவிடம் 12° 12′ 51″ N, 78° 20′ 18″ E) – (தர்மபுரியிலிருந்து 34.2 கி.மீ. தொலைவு; கிருஷ்ணகிரியிலிருந்து 45 கி.மீ. தொலைவு; சேலத்திலிருந்து 94.2 கி.மீ. தொலைவு. அருகிலுள்ள இரயில் நிலையம் 12 கி.மீ. தொலைவு). பைரே கௌனி , சின்ன கொத்தூர் வட்டப் புதிர்நிலை 1993 ஆம் ஆண்டு கண்டறிந்த பின்பு 2014 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் சதுர புதிர்நிலை கண்டறியப்பட்டுள்ளது. கம்பைநல்லூர் புதிர்நிலையைக் கண்டறிந்தவர்கள்: திரு. சுகவன முருகன், தொல்லியல் ஆய்வாளர், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம் மற்றும் திரு. சதானந்தம் கிருஷ்ணகுமார், தொல்லியல் ஆய்வாளர், பெண்ணையாறு தொல்லியல் சங்கம்.

cmneffhwgaakohu

கம்பைநல்லூர் புதிர்நிலை PC:  தஞ்சை ஆ.மாதவன் Twiiter

இது உலகில் கண்டுபிடிக்கப்பட்ட புதிர்நிலைகளிலேயே பெரியதாகும் என்று ஆய்வாளர் திரு.. சுகவன முருகன் கருதுகிறார். ஏறத்தாழ 80-க்கு 80 அடி பரப்பில் உள்ளது. இன்றும் மக்கள் வழிபாட்டில் உள்ளது. ‘இது பழமையான வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக இருக்கக்கூடும். இந்த புதிர்நிலை குறித்து இப்பகுதி மக்கள் கூறும்போது, ‘அரசனால் சிறைபடுத்தப்பட்ட கணவனை உயிருடன் மீட்ட மனைவியின் கதை’ என்கிறார்கள். கம்பைநல்லூர் புதிர்நிலையின் ஏழுபட்டை தளப்பாதையின் விதிகளை அனுசரித்து நடந்து வெற்றி காண்பவர் தங்கள் மனத்தில் எண்ணியதை அடைவர் என்பது மக்களின் நம்பிக்கை. விதியை அனுசரிக்காமல் கற்களைத் தாண்டிச் செல்பவர்கள் எண்ணியது நிறைவேறாது என்பதும் மக்களின் நம்பிக்கை.’

கெடிமேடு புதிர்நிலை

கோயமுத்தூர் மாவட்டம் தெற்கு பொள்ளாச்சி வட்டம், கெடிமேடு கிராமம், கோமங்கலம் அஞ்சல் நிலையம் – பின் கோடு 642107 (அமைவிடம்: பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை நெடுஞ்சாலையில் (NH 209) அமைந்துள்ளது 10° 37′ 21.8964” N லாட்டிட்யூட் 77° 7′ 53.8248” E லான்ஜிட்யூட்). ‘கெடி’ என்ற தமிழ் அசைக்கு (syllable) கோட்டை என்று பொருள். இவ்வூரின் பெயர் கெடிமேடு என்ற கோட்டைமேடு என்ற பொருளில் அமைந்திருக்கலாம். இவ்வூர் பொள்ளாச்சியிருந்து 14 கி.மீ தொலைவிலும்; கோயமுத்தூரிலிருந்து 54 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இன்றைய NH 209 பெருவழிச் சாலை, பண்டைய வணிகப்பெருவழியான வீரநாராயணப் பெருவழி என்று அறியப்படுகிறது.  இவ்வழி பாலக்காட்டு கணவாய் துவங்கி அழகன்குளம் வரை சென்றது.

இந்த கிராமம் 2015 ஆம் ஆண்டு தலைப்புச் செய்தியானது! இங்கு வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த துரான்.சு.வேலுச்சாமி, க.பொன்னுச்சாமி, சு.சதாசிவம் மற்றும் பொறியாளர் சு.ரவிக்குமார் குழுவினர் நடத்திய கள ஆய்வில் சுமார் 2000 ஆண்டுகள் பழைமையான பெருங்கற்கால சதுரப் புதிர்நிலை ஒன்றை கண்டறிந்துள்ளனர்.

இந்த புதிர் நிலை 60% சிதைந்துள்ளது. இவ்விடம் வணிகப்பெருவழியில் அமைந்துள்ள பழைய கிராமம். கெடிமேட்டில் காணப்படும் கல்பதுக்கை அருகில் நெடுங்கல் சுடு மண்ணால் செய்யப்பட்ட சேர முத்திரை, தாங்கிகள், தமிழ் பிராமி எழுத்துக்கள், குறியீடுகள் மற்றும் பல வண்ணக்கள் மணிகள் எல்லாம் கிடைத்துள்ளன. இவ்வூரை அடுத்த வடபூதிநத்தத்தில் மண் கலயத்தில் 1500 ரோமானிய வெள்ளி நாணயங்களும், சி.கலயமுத்தூரில் சில ரோமானிய நாணயங்களும் கண்டெடுக்கப்பட்டன. இதன் மூலம் இவ்விடத்தின் பழைமையை அறிந்துகொள்ளலாம். எனவே இப்புதிர்நிலை சுமார் 2000 ஆண்டுகள் பழைமையானது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்பது ஆய்வாளர்களின் வாதம்.

வேம்படித்தாளம் புதிர்நிலை

சேலம் மாவட்டம், வீரபாண்டி வட்டம், வேம்படித்தளம் கிராம பஞ்சாயத்து, கோட்டைப்புத்தூர் கிராமம், பின்கோடு 637504 (அமைவிடம் 11° 0′ 41.0976” N லாட்டிட்யூடு 77° 4′ 20.933” E லான்ஜிட்யூடு) சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது. இவ்வூர் வீரபாண்டியிலிருந்து 5 கி.மீ. தொலைவு; சேலத்திலிருந்து 23 கி.மீ தொலைவு; நாமக்கல்லிலிருந்து 54 கி.மீ. தொலைவு; பெங்களூரிலிந்து 164 கி.மீ. தொலைவு; அருகிலுள்ள இரயில் நிலையம் மகுடஞ்சாவடி 2 கி.மீ. தொலைவு; திருச்சிராப்பள்ளி விமானநிலையம் 117 கி.மீ. தொலைவு. வேம்படித்தளம் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களின் எல்லையில் தேசிய நெடுஞ்சாலை 47 (NH 47) இல் அமைந்துள்ளது.

சேலம் மாவட்ட வரலாற்றுத் தேடல் குழுவை சேர்ந்த, தொல்லியல் ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன, சுகவனமுருகன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன், கலைச்செல்வன் ஆசிரியர், காளியப்பன் சீனிவாசன் ஆகியோர் அடங்கிய குழு சேலம் மாவட்டம் வேம்படிதாவளம் அருகே கோட்டைப்புதூர் என்ற ஊரில் வட்டவடிவ ஓரொழுங்கு புதிர்நிலை ஒன்றை ஆகஸ்டு 2016 ஆம் ஆண்டு கண்டறிந்தனர். உலகின் மிகப்பெரிய புதிர்நிலைகளில் ஒன்றாக வேம்படித்தாளம் புதிர்நிலை கருதப்படுகிறது. இந்த பெரிய வட்ட வடிவ புதிர்நிலை 49 அடி (15 மீ.) ஆரம் (radius), 459 அடி (140 மீ.) சுற்றளவு (circumference) என்ற அளவில், 700 சதுர அடி (213 ச.மீ) பரப்பில் அமைந்துள்ளது. இந்த வட்டவடிவப் புதிர்நிலை, கம்பையநல்லூர் புதிர்நிலையை விட, 64 ச.மீ., பெரியதாகும். இரண்டாவது புதிர்நிலை ஒன்று மக்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இங்கு மட்டும்தான் இதுபோன்ற இரண்டு புதிர்நிலைகளை ஒன்றாகப் பார்க்கவியலும்.

unnamed2b252812529

வேம்படித்தாளம் புதிர்நிலை. PC: ஆறகழூர் பொன்.வெங்கடேசன்

இன்று இப்புதிர்நிலைகளில் வழிபாடு இல்லை. சில காலத்திற்கு முன்வரை வழிபாட்டில் இருந்த இப்புதிர் நிலைகளில் மக்கள் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வழிபட்டனர். மகப்பேறு, வாழ்வில் வெற்றி, கால்நடைகளின் நீடித்த ஆயுள் போன்ற காரணங்களுக்காக இவ்வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. கோட்டைப்புதூரில் கண்டறிந்த புதிர்நிலையானது, ஒரிசா மாநிலம், ராணிபூர் ஜஹாரியாவில் மலை மேலுள்ள சவுன்சாத் யோகினி கோவிலுக்கருகில் இருக்கும் புதிர்நிலையை போலவே உள்ளது என்கிறார் ஒரு ஆய்வாளர்.

தொல்லியல் கழகம், தஞ்சாவூர் வெளியிட்டுள்ள ஆவணம் இதழ் 28, 2017, செய்தி திரட்டு – புதிய கண்டுபிடிப்புகள் என்ற பகுதியில் 66.10 ஆம் எண், பக்கம் 276-277 இல், இந்த புதிர்நிலை பற்றி செய்தி வெளியிட்டுள்ளது.

கீரமங்கலம் அம்பலத்திடல் புதிர்நிலை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கீரமங்கலம் பேரூராட்சி, கீரமங்கலம், பின்கோடு 6146124 (அமைவிடம் 10°18′9″N லாட்டிட்யூடு 79°5′11″E லான்ஜிட்யூடு) அருகே வில்வன்னி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள அம்பலத்திடல் பகுதியில் இருக்கும் சுண்ணாம்பு திட்டையில் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக தொல்லியல் ஆய்வாளர்கள் மணிகண்டன், கரு. ராசேந்திரன், கஸ்தூரிரங்கன், புதுகை செல்வா, சந்திரசேகர், பாரதிராஜா, ஆகியோர் இரண்டாம் கட்ட கள ஆய்வை மேற்கொண்டபோது சுமார் 3000 ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படும் புதிர்நிலைகளைக் கண்டறிந்தனர்.

pudhir2b2

கீரமங்கலம் அம்பலத்திடல் புதிர்நிலை PC தென்னக தொல்லியல் ஆய்வுக் கழகம் Blogspot

புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதல் புதிர்நிலை இவை என்று கருதப்படுகிறது. இந்த புதிர்நிலை சுண்ணாம்பு திட்டையின் மேல் இருபுறங்களிலும் முழுவதும் சிதைந்தநிலையில் 20 அடி x 20 அடி நீள அகலத்துடன் சதுர வடிவில் , மேடு பள்ளத்துடன் கூடிய புதிர் பாதைகளோடு நேர்க்கோடுகளாக அமைந்துள்ளன.

தமிழ்நாட்டில் புதிர்நிலைகள் பற்றிய விழிப்புணர்வு

பல புதிர்நிலைகள் குறித்த கண்டுபிடிப்புகளும், இவை பற்றிய விரிவான செய்திகளும், தமிழ்நாட்டில் இத் துறை மீது மக்களுக்கு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றன. இத்தலைப்பு பல கருதரங்கங்களில் விவாதப் பொருளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பல முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. என்றாலும் இந்த புதிர்நிலைகளின் காலம் பற்றிய விரிவான ஆராய்ச்சிகள் விரைவாக மேற்கொள்ளப்படவேண்டும் என்பது ஆர்வலர்களின் அவா.

குறிப்புநூற்பட்டி

 1. 2,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த “புதிர்நிலை” சத்தியம். அக்டோபர் 9, 2014
 2. அறிவை கூர்மையாக்கும் விளையாட்டு : பழமையான வட்ட புதிர்நிலை கண்டுபிடிப்பு தினமலர். செப்டம்பர் 06, 2016.
 3. கற்காலப் புதிர்நிலைகள் (Mazes/Labyrinths). சுகவன முருகன். தாரகை.
 4. கீரமங்கலம் அருகே 3000 ஆண்டு பழமையான புதிர் நிலை கண்டுபிடிப்பு. தினகரன் செப்டம்பர் 2017.
 5. சிக்கல் வழி (wikipedia)
 6. தர்மபுரி அருகே உலக அளவில் பெரிய புதிர்நிலை: பாதுகாக்க வரலாற்று ஆர்வலர்கள் வேண்டுகோள். தினமலர். செப்டம்பர் 30, 2017
 7. புதிர் நிலை
 8. புதுக்கோட்டை அருகே அம்பலத்திடல் பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புதிர் நிலை கண்டுபிடிப்பு. தென்னக தொல்லியல் ஆய்வுக் கழகம். Blogspot. செப்டம்பர் 26, 2017
 9. பெருங்கற்கால புதிர்நிலை கண்டுபிடிப்பு 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என தொல்லியல் ஆய்வாளர் தகவல். தினத்தந்தி அக்டோபர் 7, 2014.
 10. பொற்கால புதிர் நிலை கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி ஆய்வாளர்கள் பெருமிதம். தினமலர். அக்டோபர் 8, 2014
 11. வேம்படிதாளத்தில் புதிர் நிலை கண்டுபிடிப்பு: சேலம் வரலாற்று ஆய்வாளர்கள் பெருமிதம். தினமணி ஆகஸ்டு 20, 2016.
 12. 2000 Year Old Labyrinth Uncovered in India Shows Same Pattern as a Greek Maze from 1200 BC. August 7, 2015. Miller
 13. Amazing Mazes http://www.unmuseum.org/maze.htm
 14. Historical rock art included in unauthorized religious structures list  Times of India, March 15, 2010.
 15. Labyrinth (Wiktionary)
 16. Labyrinth’s found in Tamil Nadu (South India) Facebook
 17. Salem research team discovers 1,200-year-old twin maze. MT Saju. Times of India. August 29,2016
 18. Second largest maze of ancient stones found. M T Saju. Times of India. ஆகஸ்டு 4, 2015.
 19. Stone Labyrinth at Baire Gauni near ChinnaKottur (Kundani)-Tamil Nadu. Blogspot மார்ச் 27, 2016.
 20. The Labyrinth: A Brief Introduction to its History, Meaning and Use
 21. Usgalimal rock engravings (Wikipedia)
 22. What is a Labyrinth? Labyrinth Guild of New England

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in தொல்லியல் and tagged , , , . Bookmark the permalink.

2 Responses to புதிர்நிலைகள் (Labyrinths / Mazes)

 1. பொன்.வெங்கடேசன் சொல்கிறார்:

  பகிர்வுக்கு நன்றி

  Liked by 1 person

 2. பிங்குபாக்: புதிர்நிலைகள் – இளம்பரிதி | எழுத்தாளர் ஜெயமோகன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.