இந்திய தொல்லியல் அளவீட்டு துறையின் மைசூர் அலுவலகத்தில் முடங்கிக் கிடக்கும் தமிழ் கல்வெட்டுகள் பற்றி அறிஞர்களும் பொதுமக்களும் கவலை…

தமிழ் நாட்டின் வரலாற்றை முறைப்படுத்தி எழுதுவதற்கு சங்க இலக்கியங்களும், இடைக்கால இலக்கியங்களும், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளின் தொடர்ச்சியான கல்வெட்டுகளும் பெரிதும் துணை புரிகின்றன. ஆங்கிலேய ஆட்சியின் போது கல்வெட்டுகளைப் படியெடுக்கத் தொடங்கிய பின்புதான், இருண்டு கிடந்த தமிழ்நாட்டின் வரலாற்றில் புதிய வெளிச்சம் பரவியது. தமிழ் நாட்டின் இடைக்கால வரலாறு தமிழ் மக்களுக்கு மட்டுமின்றி வெளியுலகுக்கும் தெளிவாக புலப்பட்டது.

தற்பொழுது இந்திய தொல்லியல் அளவீட்டு துறை, தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, பல்கலைக்கழகங்கள் முதலான அரசு நிறுவனங்களும் பல தனியார் நிறுவனங்களும் புதிய கல்வெட்டுகளை வெளியிட்டு வருகின்றன. தனிப்பட்ட ஆய்வாளர்களும், குழுக்களும், மன்றங்களும் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொல்லியல் கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் எல்லா அடிப்படைச் சான்றுகளையும் தொகுத்து ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இதுவரை 28 தொகுப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இணையதள சேவை, முகநூல், மன்றங்கள், வலைத்தளங்கள் மூலம் விரைவாக செய்திகள் பரிமாறப்படுகின்றன. சில வலைத்தளங்கள் ASI நிறுவனத்தின் குறிப்பிட்ட தொடர் வெளியீடுகளை மின்தரவுகளாக மாற்றியமைத்துள்ளார்கள். அன்றாடம் புதிய கல்வெட்டுகள் கல்வெட்டுகள் கண்டறியப்பட்ட செய்திகள் நாளிதழ்களில் வெளியிடப் படுகின்றன.

ஆங்கிலேயர் நமக்கு அளித்த பொக்கிஷம் இக்கல்வெட்டுகளின் படிகள் (copies). தமிழ் நாட்டின் வரலாற்று நினைவுச் சின்னங்களையும் கல்வெட்டுகளையும் பராமரிக்கவும், கல்வெட்டுப் படிகளைப் பாதுகாக்கவும், படித்து புரிந்து கொள்ளவும், தற்காலத்துக்கு ஏற்றவாறு அந்தந்த இந்திய மொழிகளில் எழுதுவடிவமாக்கவும், பதிப்பிக்கவும் இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறையும், தமிழ் நாடு அரசு தொல்லியல் துறையும் அரசு நிறுவனங்களாக ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்தப் பதிவு கடந்த 1890 ஆம் ஆண்டு முதல் அரும்பாடுபட்டு படியெடுத்து சேகரித்து, படித்து, தமிழ் எழுதுவடிவமாக்கி, ஆவணப்படுத்தப்பட்ட சுமார் 65000 தமிழக் கல்வெட்டுகளின் நிலை பற்றியது. இதற்கென பிரத்யோகமாக மைசூரில் செயல்படும் தொல்லியல் துறையின் கல்வெட்டியல் கிளை அலுவலகம் இந்த தரவுகளை முறையாகப் பராமரிக்கிறதா? சுமார் 400 ஆண்டுகள் பழைமையான இத்தரவுகள் பயன்படுத்தும் நிலையில் உள்ளனவா? 1909 ஆம் ஆண்டு முதல் இவை ஏன் நூலாக பதிப்பிக்கப்படவில்லை? 1908 ஆம் ஆண்டுவரை பதிப்பிக்கப்பட்ட நூல்களும் பிற கல்வெட்டு படி பிரதிகளும் ஆய்வாளர்கள் பயன்படுத்தும் வகையில் மின்தரவாக (digital document) கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளதா? இது போன்ற கேள்விகளுக்கு அறிஞர்கள் சொல்லும் தீர்வு என்ன? இந்தப் பதிவைப் படித்து தங்கள் மேலான கருத்துக்களை என் blog இல் பதிவிட வேண்டுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்திய தொல்லியல் அளவீட்டு துறை

இந்திய தொல்லியல் அளவீட்டு துறை (Archaeological Survey of India), மத்திய பண்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு அதிகாரபூர்வமான தொல்லியல் ஆய்வு அமைப்பு. இவ்வமைப்பு நிர்வாக வசதிக்காகவும் தொல்லியல் சின்னங்களையும் ஆவணங்களையும் பாதுகாப்பதற்காக இந்திய நாட்டை 24 வட்டங்களாக பிரித்துள்ளது. தமிழ் நாடு சென்னை வட்டத்தின் (Chennai Circle) கீழ் வருகிறது. தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலத்தின் பகுதிகளை உள்ளடக்கியது இந்தியாவில் 1887 முதல் கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் கண்டறியப்பட்டு படியெடுக்கப்பட்டன.

இந்திய தொல்லியல் அளவீட்டு துறையின் (Archaeological Survey of India) கல்வெட்டியல் பிரிவு (Epigraphy Branch) கி.பி.1886 ஆம் ஆண்டு பெங்களூரில் டாகடர்.ஹுல்ஷ் (Dr.E. Hultzsch) தலைமையில் துவங்கப்பட்டது. இந்தியாவின் முதல் கல்வெட்டியலாளரும் (Epigraphist) இவரே. இந்த அலுவலகம் இந்தியாவில் பல பாகங்களில் பரவிக்கிடந்த கல்வெட்டுகளை அளவீடு செய்தது. தொடக்க காலத்தில் இக்கல்வெட்டுகளை ஆங்கிலேய அரசு மட்டுமல்லாது சிற்றரசுகளும் (சமஸ்தானங்கள் உதாரணம்: புதுக்கோட்டை, திருவிதாங்கூர், மைசூர் ஆகியன) தொகுக்கும் பணியில் ஈடுபட்டன. இதனைத் தொடர்ந்து செந்தமிழ், தமிழ்ப்பொழில் முதலான இதழ்களிலும் கல்வெட்டுகளைப் பற்றிய குறிப்பும் நிழற்படமும் வெளிவரலாயின.

இந்திய தொல்லியல் அளவீட்டு துறை அலுவலர்கள் இக்கல்வெட்டுகளை பிரத்யோக காகிதத்தில் மையொற்றி படிகளாக மாற்றி ஆய்வுக்குப் பயனுள்ள வகையில் ஆவணப்படுத்தும் பணியில் 1890 ஆம் ஆண்டு முதல் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு படி எடுக்கப்படும் பிரத்யோக காகிதங்கள் சுமார் 75 ஆண்டுகள் ஆயுள் கொண்டவை.

இந்த கல்வெட்டுகளை ஆய்வு செய்யவும், கண்டுபிடிக்கப்படும் கல்வெட்டுகளை படி எடுத்து பதிப்பிப்பதற்கும் இந்திய தொல்லியல் அளவீட்டு துறையின் கீழ் இயங்கும் தொல்லியல் ஆய்வகத்தின் மைசூர் அலுவலகத்தில் தனியாக கல்வெட்டு தலைமையகம் ஒன்று இயங்குகிறது. தொடக்கத்தில் இந்த அலுவலகம் சென்னையில் செயல்பட்டது. சென்னையின் தட்பவெட்பநிலை எடுத்த படிகளை பாழ்படுத்திவிடுமோ என்று பயந்து இந்த அலுவலகம் ஊட்டிக்கு மாற்றப்பட்டதாம். இதற்குப்பின் இந்த அலுவலகத்திற்கு இயக்குனாராகப் பொறுப்பேற்றுக்கொண்ட மைசூரை சேர்ந்த ஒரு அதிகாரி ஒருவர் தன் சொந்த வசதிக்காக மைசூருக்கு மாற்றிவிட்டதாக கூறப்படுகிறது.

சேகரித்த கல்வெட்டுகளைப் படித்து புரிந்து கொள்ளவும், தற்காலத்துக்கு ஏற்றவாறு அந்தந்த இந்திய மொழிகளில் எழுதுவடிவமாகவும், பதிப்பிக்கவும் வழிவகைகள் செய்யப்பட்டன. பல நூல்கள் கல்வெட்டியல் துறை தொடர் வெளியீடுகளாகவே (Publication Series) பிரசுரிக்கப்பட்டன:

 1. இந்திய கல்வெட்டியல் ஆண்டு அறிக்கை (Annual Report on Indian Epigraphy): 1887 முதல் 1995-1996 ஆம் ஆண்டு வரையிலான கண்டறியப்பட்ட கல்வெட்டுகள் பற்றிய அறிக்கை. மிகச் சுருக்கமான செய்திகள் ஆங்கிலத்தில் உள்ளது
 2. எபிகிராபியா இண்டிகா (Epigraphia Indica): 1882 – 1977 ஆண்டுகளுக்கிடையே பதிப்பிக்கப்பட்ட ஆவணம். 1892 முதல் 1920 வரை இது காலாண்டு இதழாக வெளி வந்தது. எட்டு பாகங்கள் (parts) ஒரு தொகுதியாக்கபட்டன (volumes). இதுவரை 42 தொகுதிகள் வெளிவந்துள்ளன.
 3. கார்பஸ் இன்ஸ்கிருப்ஸ்னம் இண்டிகேரம் (Corpus Inscriptionum Indicarum): பல வம்சங்களைப்பற்றிய கல்வெட்டுகள் இந்த பதிப்புத் தொடரில் வெளியிடப்பட்டன.
 4. தென்னிந்திய கல்வெட்டுகள் (South Indian Inscriptions (S.I.I.): தென்னிந்திய கல்வெட்டுகளின் ஆவணங்களுக்காக ஒரு தனி தொடர் பதிப்பு 1890 ஆம் ஆண்டு முதல் வெளிவந்துகொண்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை (Department of Archaeology Government of Tamil Nadu) 1961 இல் ஆரம்பிக்கப்பட்டது. கல்வெட்டுகளை நகலெடுத்தல், கல் கல்வெட்டுகளில் உள்ளவற்றை அச்சிடுதல், மற்றும் புத்தக வடிவில் அவற்றை வெளியிடுதல் என்பது இந்நிறுவனத்தின் பணிகளுள் ஒன்று.

1966 ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் அளவீட்டு துறை மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி தமிழ் நாட்டின் கல்வெட்டுகள் முத்லிடத்தைப் பிடித்துள்ளன. கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் மொழிவாரியாகவும், அகரவரிசைப்படியும், எண்ணிக்கையின்படியும் வகைப்படுத்தியதில் தமிழ் நாடு இந்திய மாநிலங்களுள் முதலிடத்தில் உள்ளது. இந்திய மாநிலங்களிலேயே தமிழ் நாட்டில்தான் அதிக அளவில் கல்வெட்டுகள் உள்ளன என்று இந்தக் கணக்கெடுப்பின் மூலம் நாம் எளிதாக புரிந்துகொள்ளலாம்.

1966 ஆம் ஆன்டிலேயே தமிழில் 20000 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. மற்ற மொழிக் கல்வெட்டுகள்: கன்னடம் 10,600; சம்ஸ்கிருதம் 7,500; தெலுங்கு 4500. (ஆதாரம்: Journal of the Epigraphical Society of India Volume 19 : 1993).

epi-pic8

கல்வெட்டியல் கிளை அலுவலகம் ஊட்டி PC: Dept. of Archaeology, Govt. Of Tamil Nadu.

epi-pic7

கல்வெட்டியல் கிளை அலுவலகம் ஊட்டி PC: Dept. of Archaeology, Govt. Of Tamil Nadu.

இந்தியாவில் இதுவரை 90,000 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக டி.சி. சர்கார் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். 1887 முதல், சுமார் நானூறு ஆண்டுகளாக, கண்டறியப்பட்ட ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட கல்வெட்டுக்களின் படிகள் இந்த இந்திய தொல்லியல் அளவீட்டு துறையின் மைசூர் அலுவலகத்தில் உள்ளன. இங்கு உள்ள ஒரு லட்சம் கல்வெட்டில் 65 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழில் உள்ளன. இக்கல்வெட்டுகள் இந்திய வரலாற்றை, குறிப்பாக தமிழகத்தின் தொன்மை வரலாற்றை எடுத்துரைக்கும் முதன்மை சான்றாகும். இவற்றுள் 1908ம் ஆண்டு வரை கண்டறியப்பட்ட படிகள் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. 1909ம் ஆண்டுக்கு பின் கண்டறியப்பட்ட கல்வெட்டுப்படிகள் இன்னும் முழுமையாக பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்படவில்லை. டாக்டர் எ. சுப்பராயலு அவர்கள் தம் ஆய்வில் தமிழ்க் கல்வெட்டுகளை காலநிரல்படி பகுப்பாய்வு செய்து ஒரு அட்டவணையினை வெளியிட்டுள்ளார்.

 • கி.மு. 300 – கி.பி. 500-க்கு இடைப்பட்டவை – 400
 • கி.பி. 501 – கி.பி. 850-க்கு இடைப்பட்டவை – 900
 • கி.பி. 851 – கி.பி. 1300-க்கு இடைப்பட்டவை – 19,000
 • கி.பி. 1300 – கி.பி. 1600-க்கு இடைப்பட்டவை – 6,000
 • கி.பி. 1600 – கி.பி. 1900-க்கு இடைப்பட்டவை – 2,000
 • வெளிநாட்டில் கிடைத்த கல்வெட்டுகள் – 300

இவற்றை ஆய்வுக்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மின்தரவாக்கம் (Digitize) செய்து கொள்வதற்கான முயற்சியை தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் மேற்கொண்டது. 2010 ஆம் ஆண்டு மைசூரில் உள்ள அனைத்து மொழிகளின் கல்வெட்டுகளையும் மின்தரவாக்கம் (டிஜிடைஸ்) செய்து ஆய்வுக்கு பயன்படுத்திக் கொள்ள இந்திய தொல்லியல் அளவீட்டு துறையுடன் (ஏ.எஸ்.ஐ.,) தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தஞ்சை தமிழ் பல்கலை துணை வேந்தர் ராசேந்திரன், மைசூர் கல்வெட்டுப் பிரிவின் இயக்குனர் (பொறுப்பு) ரவிசங்கர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

தமிழ் கல்வெட்டுக்கள் மட்டுமின்றி இந்நிறுவனத்தில் உள்ள அனைத்து மொழிக் கல்வெட்டுக்களையும் மின்தரவாக்கம் செய்யப்பட உள்ளன. தமிழக அரசு இப்பணிக்காக தமிழ் பல்கலைக்கு 24 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியாவில் மைசூரில் மட்டுமே உள்ள கல்வெட்டுப்படிகள் இனி தஞ்சை தமிழ் பல்கலையிலும் இடம் பெறவும், அவற்றை ஆய்வாளர் கணினி தொழில் நுட்ப வசதியுடன் பயன்படுத்திக் கொள்ளவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வசதி செய்யும்.

dr-s-chandni-bi-2

பேராசிரியர் எஸ்.சாந்தினி பீ PC: Vallamai 

சமீபத்தில் மைசூர் அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டுவரும் 50 சதவீத கல்வெட்டுப் படிகள் பதிப்பிக்கப்படாமலேயே அழிந்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த தகவலை அடுத்து தமிழக ஊடகம் ஒன்று உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் எஸ்.சாந்தினி பீ (Dr.Chandni Bi, Assistant Professor, Aligarh Muslim University, U.P.) அவர்களிடம் கருத்துக் கேட்டது. அவர் பகிர்ந்துகொண்ட தகவல் இது:

கடந்த 2008- மார்ச்சில் மைசூர் தொல்லியல் அலுவலகம் புதிய கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட போது, அங்கு படி எடுக்கப்பட்டு பாதுகாப்பாக பல நூறு தமிழ் கல்வெட்டுகள் வீணாகப் போய் விட்டன. அவற்றை மீண்டும் படி எடுக்க வேண்டும் எனில் அதன் மூலஆதாரங்கள் பதிக்கப்பட்ட கல்வெட்டுகளை கோயில், குளம் எனத் தேடித் திரட்ட வேண்டும். இது மிகச் சிரமமான ஒன்று.

கல்வெட்டுக்களில் படி எடுக்கப்பட்டு மைசூர் அலுவலகத்தில் சுருட்டி வைக்கப்பட்டுள்ள பலவும், நூறு வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட படிகள் ஆகும். படி எடுக்கப்படும் தாள்கள் சுமார் 75 ஆண்டுகள் ஆயுள் கொண்டவை. இப்போது அவையும் வீணாகப் போகும் நிலை உருவாகி உள்ளது. கல்வெட்டுகளைப் படிக்க முறையான கல்வெட்டிய லாளர்களின் பற்றாக்குறை அதிகமாகி விட்டது. இதை முன்கூட்டியே அறிந்தும் மைசூர் அலுவலகம் குறிப்பிட்ட காலத்தில் அந்த குறைகளை நிவர்த்தி செய்யத் தவறி விட்டது.
இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளில் பெரும் பாலானவை தமிழ் மொழியில் எழுதப்பட்டவை. மற்றவை சமஸ்கிருதம், பாரசீகம், அரபி, உருது, தெலுங்கு, கன்னடம், வங்காளம் மற்றும் மலையாள மொழிகளில் எழுதப்பட்டவை. இந்த மொழி கல்வெட்டுகள் பதிப்பிக்கும் கல்வெட்டாளர்கள் பதவிகள் நிரப்பப்படாமல் அதன் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதில், தமிழ் கல்வெட்டுகள் அதிகம் என்பதால் மற்ற மொழி கல்வெட்டுகளை விட, தமிழ் கல்வெட்டு படிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றும் கூட தமிழகத்தில் கல்வெட்டுகள் அவ்வப்போது கிடைத்து வருவதால், தமிழ் கல்வெட்டுகளின் எண்ணிக்கை கூடி வருகிறது. இதனால், தமிழக வரலாறு மைசூரிலேயே முடங்கும் சூழல் நிலவுகிறது. (இவருடைய கல்வி மற்றும் தொழில் பற்றிய தொகுப்பினை இங்கு காண்க)

27-nov-3

பத்மஸ்ரீ டாக்டர் நொபொரு கராஷிமா (24 ஏப்ரல் 1933 – 26 நவம்பர் 2015)

நொபொரு கராஷிமா தென்னிந்திய வரலாறு, தென்னாசிய வரலாறு ஆகியவற்றில் ஆசியாவின் மிகச்சிறந்த அறிஞராக திகழ்ந்தார். டோக்கியோ பல்கலைக்கழகத்தின் கௌரவப் பேராசிரியராக பணியாற்றினார். தென்னிந்திய இடைக்கால வரலாறு குறித்த ஆய்வுகளில் பெரும்புகழ் பெற்றவர். இவர் . இந்திய ஜப்பானியச் சமூக அறிவியல் ஆய்வுப் பாரம்பரியத்தில் தனது அனுபவவாத ஆய்வுகளின் மூலம் முக்கிய பங்காற்றியுள்ளார். சோழர் காலக் கல்வெட்டுக்களை அடிப்படையாகக்கொண்டு தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதியின் அள்ளூர், ஈசான மங்கலம் கிராமங்களில் நிலக்கட்டுப்பாடு பற்றி இவர் எழுதியுள்ள கட்டுரை தென்னிந்தியாவின் இடைக்காலப் பொருளாதார வரலாறு குறித்த முதன்மையான ஆய்வாகும். இந்திய – ஜப்பானிய கலாச்சார உறவுகள் மேம்பட இவர் ஆற்றிய சீரிய பணியினைப் பாராட்டி கௌரவிக்க எண்ணிய இந்திய அரசு இவ்வரலாற்று அறிஞருக்கு 2013ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது. இவர் 2015 நவம்பர் 26ஆம் தேதி அன்று காலமான செய்தி உலகத் தமிழர்களுக்கு மிகுந்த துயரத்தை அளிப்பதாகும்.

நொபொரு கராஷிமா அவர்கள் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் ‘Unless knowledge of epigraphy develops, no ancient or medieval history of this country can be studied‘ Interview Parvathi Menon The Hindu December 02, 2010 தனது அண்மைக்கால ஆய்வான இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் வரலாற்று ஆய்வின் நிலை குறித்தும் கல்வெட்டுத் துறையின் நிச்சயமற்ற எதிர்காலம் மீதான தனது ஆழ்ந்த கவலை குறித்தும் பேசினார். (நன்றி: கீற்று செப்டம்பர் 16, 2011)

அரசு ஆய்வு நிறுவனங்கள் பற்றி?

அரசு நிறுவனங்கள் மேலும் பாதிக்கப்படும் என்று எண்ணுகிறேன், ஏன் என்று தெரியவில்லை? இந்நிறுவனங்களுக்குத் தேவைக்கேற்ற அளவிற்குக் கவனமளிக்கப்படுவதல்லை. இந்தியத் தொல்லியல் துறையின் பொது இயக்குநர் தொல்பொருள் ஆராய்ச்சியாளராகப் பயன்படுத்தப்படுகின்றார். ஆனால் இடைப்பட்ட காலங்களில் தொல்லியல் தொடர்பான எந்தப் பிரக்ஞையும் இல்லாத மாவட்ட கலெக்டர்கள் இயக்குநர்களாக இருந்தனர். இதுபோலவே மாநிலத் தொல்லியல் துறைகளிலும் நடந்தது. கல்வெட்டு குறித்த அறிவு இல்லாத கலெக்டர்களால் கல்வெட்டுத்துறை பாதிப்படைகின்றது. பல காலம் முதல் இன்று வரை புதிய கல்வெட்டாய்வாளர்கள் நியமிக்கப்படவில்லை. நான் முதன்முறை, 1962இல் ஊட்டி சென்றபோது கல்வெட்டு அலுவலகமும் அந்தச் சூழ்நிலையும் செயல்திறமுடையதாகவும் ஆற்றல்வாய்ந்ததாகவும் இருந்தன. டாக்டர் கே.வி. ரமேஷ், டாக்டர் பி.ஆர். கோபால், டாக்டர் எஸ். ஹெச். ரிதி முதலான இளைய கல்வெட்டு உதவியாளர்கள், பின்தொடரத்தக்க மிக நல்ல வேலைகளைச் செய்தனர். அந்தச் சூழ்நிலையை நாம் இழந்துவிட்டோம். அதுபோலவே நெடுங்காலமாகக் கல்வெட்டாய்வாளர்களுக்கும் எந்த ஊக்கமும் அளிக்கப்படவில்லை. கல்வெட்டறிவு இல்லாமல் எந்தப் பழங்கால, இடைக்கால இந்திய வரலாற்றினையும் ஆய்வு செய்ய முடியாது. இந்நாட்களில் பெரும்பாலான இந்திய, அயலக ஆராய்ச்சியாளர்கள் ஆண்டறிக்கைகளில் உள்ள கல்வெட்டுச் சுருக்கங்களையே சார்ந்துள்ளனர். இதனால் இவர்கள் மூலத்திற்குள் செல்வதில்லை.

கல்வெட்டுத்துறையை ஊக்கப்படுத்த என்ன செய்யலாம் என்று எண்ணுகிறீர்கள்?

வெளியிலுள்ள கல்வெட்டாய்வாளர்களுடன் ஒரு ஒப்பந்த முறையினைத் தொடங்க வேண்டும். நல்ல வேளையாகத் தற்பொழுது இது நடந்துள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழகம் இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் மைசூர் அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களை மின்மயமாக்க முன்வந்துள்ளது. இந்தச் செயலினைச் செய்யக் காரணமான இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனம் மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தினைப் பாராட்டுகிறேன். இரண்டு புதிய கல்வெட்டாய்வாளர்கள் மைசூர் அலுவலகத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை படிப்படியாக முன்னேற்றமடையும் என்று நம்புகிறேன்.

அவ்வாறு நிகழவில்லை என்றால்?

அவ்வாறு நிகழவில்லை என்றால் தொன்மையான வரலாறு இந்த நாட்டில் அழிந்துபோகும். இதனை நான் மேலோட்டமாகக் குறிப்பிடவில்லை, இப்படி நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாகக் கூறுகிறேன். நாம் மிகவும் வருந்தத்தக்க/ இக்கட்டான நிலையில் உள்ளோம். இது நடந்தால் வரலாறு, கருத்துகள் மற்றும் கோட்பாடுகளின் மீது மட்டுமே கட்டப்படும். வரலாற்று மூலங்களை அடிப்படையாகக் கொண்ட உறுதியான செய்கைகள் மீது அல்ல.

குறிப்பு நூற்பட்டி

 1. அனைத்து மொழி கல்வெட்டு மின்தரவாக்கம் : ஏ.எஸ்.ஐ.,யுடன் தமிழ் பல்கலை புரிந்துணர்வு ஒப்பந்தம் தினமலர் 09 செப்டம்பர் 2010
 2. இருட்டில் கிடக்கும் தமிழக வரலாற்றுச் சான்றுகள்!  மே.து.ராசுகுமார் 
 3. கல்வெட்டு அறிவு இல்லாமல் இந்தியாவின் தொன்மை, இடைக்கால வரலாற்றினை ஆய்வு செய்ய முடியாது. நொபாரு கராஷிமா கீற்று செப்டம்பர் 16, 2011.
 4. காவிரியும் போச்சு… கல்வெட்டும் போச்சு ஜுனியர் விகடன் 06.06.2006
 5. தமிழ் கல்வெட்டுகளை அழிக்கும் கர்நாடகா… கண்டு கொள்ளாத தமிழகம்! ஆர்.ஷபிமுன்னா விகடன் அக்டோபர் 25, 2017.
 6. தொல்லியல் துறையில் பதிப்பிக்கப்படாமல் அழியும் தமிழ் கல்வெட்டுப் படிகள்: மைசூருவில் முடங்கும் தமிழ் வரலாறு ஆர்.ஷபிமுன்னா தி இந்து 07 Jan 2015

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in தொல்லியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

1 Response to இந்திய தொல்லியல் அளவீட்டு துறையின் மைசூர் அலுவலகத்தில் முடங்கிக் கிடக்கும் தமிழ் கல்வெட்டுகள் பற்றி அறிஞர்களும் பொதுமக்களும் கவலை…

 1. பொன்.வெங்கடேசன் சொல்கிறார்:

  சிறப்பான பகிர்வு ஐயா

  Liked by 1 person

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.