நாவி தமிழ்ச் சந்திப்பிழை திருத்தி மற்றும் வாணி தமிழ் எழுத்துப்பிழை திருத்தி, ஆன்லைன் மென்பொருள் செயலிகள்

வல்லின ஓற்றெழுத்துக்களான க், ச், த், ப் ஆகிய நான்கும் மிக வேண்டிய இடங்களில் மிகாமலும், மிக வேண்டாத இடங்களில் மிகுத்தும் எழுதுவது சந்திப்பிழை அல்லது ஒற்றுப்பிழையாகும். மீதி இரண்டு வல்லின ஓற்றெழுத்துக்களான ட், ற் ஆகிய இரண்டால் சந்திப்பிழை நேராது. எனவே இவை பற்றிக் கவலைப்பட வேண்டாம். வல்லினம் மிகும் இடங்களையும் மிகா இடங்களையும் தெரிந்து கொண்டால் சந்திப்பிழை அல்லது ஒற்றுப்பிழை நேராது..பெரிய எழுத்தாளர்களைக் கூட ஏமாறச் செய்யும் பிழை சந்திப்பிழை. பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்று சொல்லுவோரும் உள்ளனர். இப்பிழையைச் சரிவரப் பார்க்கவில்லையென்றால் பொருள் கூட மாறுபடக்கூடும். நம்மில் சிலருக்கு இலக்கணம் தெரியாது என்றாலும் சந்திப்பிழையில்லாமல் எழுதிவிடுகிறோம். எழுதும்போது க், ச், த், ப் மிகும் இடங்களில் அழுத்தி உச்சரித்துப் படித்துப் பார்த்தால் பிழையைத் தவிர்க்கலாம். இருந்தபோதிலும் இலக்கணம் தெரிந்து எழுதினால் சந்திப்பிழைகள் நேராது.

தமிழில் எழுதுவது வருங்காலத்தில் வழக்கொழிந்து போகும் என்ற நிலை வந்தால் வியப்படைய தேவையில்லை! ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தல், சரிபார்த்தல்,தொகுத்தல் போன்ற பணிகள் கணனியின் மூலம் எளிதாக நிறைவேறிவிடுகிறது. உள்ளீட்டு கருவியைப் பயன்படுத்தித் தமிழில் தட்டச்சுச் செய்து உள்ளிடும் வழக்கம் அதிகரித்து வருகிறது. ஆங்கிலத்தில் உள்ளது போலப் பிழை திருத்தும் (spell checker) வசதி தமிழில் இல்லாதது பெருங்குறையாயிருந்தது. தற்போது தமிழில் சிற்சில பிழைதிருத்தி மென்பொருள்கள் கிடைத்துவருகின்றன. சந்திப்பிழைகளைக் களைய நாவி, எழுத்துப்பிழைகளைக் களைய வாணி சொற்திருத்தி ஆகியன பெருமளவில் பிழைகளைத் திருத்தி உதவுகின்றன.

இப்பதிவு இந்த இரண்டு பிழைதிருத்திகள் பற்றி விளக்குகிறது. சந்தி இலக்கணத்தைக் கற்றுக்கொள்ள விரும்புவர்களுக்குச் சில இலக்கணக்குறிப்புகளை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்கிறது. முயற்சி செய்தால் இந்த இலக்கணம் வசப்படும்.

நாவி தமிழ்ச் சந்திப்பிழை திருத்தி

ஒற்றுப்பிழை என்னும் சந்திப்பிழை கணனியில் தட்டச்சு செய்யும்போதே திருத்துவதற்காக நாவி (Naavi) என்ற பெயர் கொண்ட மென்பொருளை (software) “நீச்சல்காரன்” என்ற புனைபெயரில் திரு. இராஜாராமன் அவர்கள் 2012 ஆம் ஆண்டு வெளியிட்டார். திரு.ராஜாராமன், வயது 29, ஒரு இயற்பியல் பட்டதாரி. சொந்த ஊர் மதுரை. சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். “நாவி தமிழ் சந்திப்பிழை திருத்தி” என்பது முழுப்பெயர். இந்த மென்பொருள் சில மரபுப் பிழைகளையும் சரி செய்ய வல்லது என்கிறார் இவர். நாவியை வலைத்தள இடைமுகத்தினூடாகப் (interface) பயன்படுத்தலாம். செயலியைப் பயன்படுத்த சொடுக்குக

இந்த எனும் மென்பொருள் செயலியில் வாக்கியத்தைப் போட்டு “ஆய்வு செய்” பொத்தானைத் தட்டினால். வலிமிகும் இடங்களை ஆராய்ந்து பரிந்துரைக்கும். அதுபோகக் கணிக்கமுடியாத வார்த்தைகளுக்கு ஏற்ற இலக்கண விதிகளைச் சுட்டிக்காட்டும். வலி மிகாத இடங்களில் தவறாக வலி மிகுந்தாலும் கொஞ்சம் கண்டுபிடித்துக் காட்டும். ஆய்வு செய்து காட்டும் பகுதியில் வலி மிகுமிடங்கள் பச்சை நிறத்திலும், வலி மிகாத இடங்கள் சிவப்பு நிறத்திலும், கணிக்கமுடியாத வார்த்தைகள் தடித்த வடிவத்திலும் இருக்கும். அச்சொற்களைச் சொடுக்கினால் [click] அதற்கான காரணத்தைக் காணலாம். மென் பரிந்துரை கூடுமானவரை பிழையற்று இருக்கும். சந்தேக வார்த்தைகளைக் கீழ் கண்ட விதிகளைப் படித்து நீங்களே உங்கள் விருப்பமான வார்த்தையைத் தேர்வு செய்து கொள்ளலாம். இறுதியாக “சம்மதம்” என்கிற பொத்தானில் சம்மதத்தைக் கொடுத்ததும் வாக்கியங்கள் திருத்தப்பட்டிருக்கும். பிழைகளைத் திருத்தவும், கற்றுக்கொள்ளவும் புதியவர்களுக்கு மிகவும் பயன்படும்.

வாணி தமிழ் எழுத்துப் பிழை திருத்தி

வாணி  தமிழ் எழுத்துப் பிழை திருத்தி இணையவழியில் அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்போது பீட்டா பதிப்பாக(சோதனை நிலையில்) வெளியிடப்பட்டுள்ள இந்த எழுத்துப் பிழை திருத்தி தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு விரைவில் செம்மையான வடிவம் பெற்று வெளிவரும்.

இணையவழியில் அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு வாணி என்ற தமிழ் எழுத்துப்பிழை திருத்தி உருவாகியுள்ளது. ஒரு மென்பொருள் செயலியைக் கொண்டு பிழை திருத்த வைப்பது என்பது தமிழில் மிகப்பெரிய சவால்! தமிழில் பிழைதிருத்தியை உருவாக்க 70 மில்லியன் தமிழ்ச் சொற்கள் அடங்கிய சொற்பட்டியல் தேவை. இந்த 70 மில்லியன் தமிழ்ச் சொற்களைச் சேகரித்து ஒழுங்கு படுத்த எவ்வளவு உழைப்புத் தேவைப்பட்டிருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள்? இவற்றை இயக்க அதிவேக கணனி வேண்டும். ராஜாராமனோ பிற மொழியில் உள்ள பிழைதிருத்திகளைப் போலல்லாமல் புணர்ச்சி விதிகளை மட்டும் பின்பற்றி இந்தச் செயலியைக் கட்டமைதுள்ளார். தொல்காப்பியம் மற்றும் நன்னூல் விதிகளில் தற்காலத்திற்கு ஏற்றவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு சொற்பட்டியல் தயாரித்தால் அரை லட்சம் மூலச் சொற்கள் போதும். இவ்வாறு 40,000 வேர்ச்ச்சொற்களைச் சேகரித்து வகைப்படுத்தி, கணனிக்கு விளக்கி கணனி தானாகவே அனைத்துச் சொற்களையும் உருவாக்கும் விதத்தில் வாணி என்ற இந்தத் தமிழ் எழுத்துப் பிழை திருத்தி செயலி அமைக்கப்பட்டுள்ளது.

நாவியில் பயன்படுத்தியது போல உங்கள் வாக்கியங்களை வாணியில் கொடுத்து “திருத்துக” பொத்தானை அழுத்தவும், பின்னர் பிழை திருத்தியபிறகு “சம்மதம்” பொத்தானை அழுத்தி, திருத்தங்களைப் பெற்றுக் கொள்ளலாம். தற்போது பீட்டா பதிப்பாக (சோதனை நிலையில்) வெளிவந்துள்ள இத்திருத்தி தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு விரைவில் செழுமையான வடிவமாக வெளிவரும். இந்த தமிழ் எழுத்துப் பிழை திருத்தியை பயன்படுத்த சொடுக்குக .

பயன்படுத்தும் முறை: பயனர் கையேடு இங்கு தரப்பட்டுள்ளது. இந்த செயலியை நேரடியாக உங்கள் பிளாக்கர் (Blogger) தளத்தில் இணைக்க இங்கு code தரப்பட்டுள்ளது

vaani

திரு.இராஜாராமன் வடிவமைத்த பிற மென்பொருள் செயலிகள் இவை:

  • மென்கோலம் என்பது ஒரு வரைகலைக் கருவி. நாம் கொடுக்கும் தமிழ் வார்த்தைகளைப் பிற குறியீடுகள் மூலம் வரைந்து கொடுத்துவிடும்.சமூகவலைத்தளங்களில் .வித்தியாசமாக வரைய விரும்புவார்கள் இம்முறையில் எழுதி அலங்காரம் செய்யலாம்.
  • கோலசுரபி  என்னும் கோலம் வரையும் செயலி ஒன்றும் பெண்களுக்குப் பிடித்த வகையில் உருவாக்கப்பட்டுள்ளது

பிழையின்றித் தமிழ் எழுதுவோம்

இந்த மென்பொருட்களைப் பயன்படுத்துவது சுலபம். இரண்டு சொற்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதுமிடத்தில் முதலில் உள்ள சொல் நிலைமொழி. (existing word) அதை அடுத்து வருகிற இரண்டாம் சொல் வருமொழி (following word). தமிழில் க்,ச்,ட்,த்,ப்,ற் ஆகிய ஆறும் வல்லின மெய்எழுத்துக்கள். இரண்டு சொற்களுக்கு இடையே க்,ச்,ட்,த்,ப்,ற் ஆகிய ஆறு வல்லின மெய்யெழுத்துகள் மிகுதியாகி ஒலிப்பது. இவற்றில் ட, ற என்ற வல்லின எழுத்துக்களோடு பொதுவாக வார்த்தைகள் துவங்குவதில்லை என்பதால் ட்,ற் ஆகிய இரண்டு ஓற்றெழுத்துக்களும் பட்டியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ளும். மீதியுள்ள க்,ச்,த்,ப் ஆகிய நான்கு ஓற்றெழுத்துக்கள் மட்டுமே ஒற்று மிகுந்தோ மிகாமலோ வருவதற்குக் காரணமாகும். இந்த ஒற்றெழுத்தை எழுத வேண்டிய இடங்களில் எழுதாமல் விட்டாலோ, எழுதக்கூடாத இடத்தில் எழுதினாலோ, அஃது ஒற்றுப்பிழை (அ) சந்திப்பிழை எனப்படும்.  ‘ஒற்றுப்பிழைகளைப் பொறுத்தவரையில் நாம் இயல்பாக வாய்விட்டுப் பேசிப் பார்த்தாலே எங்கு வல்வொற்று (க். ச், த், ப்) மிகும் என்பதை அறியக்கூடும்’ என்றாலும் நம் ஓரளவு புரிந்து கொள்ளும் வகையில் வல்லினம் மிகும் இடங்கள் மற்றும் வல்லினம் மிகா இடங்கள் பற்றி இப்பதிவில் சில எடுத்துக்காட்டுகளுடன் பார்க்கலாமா?

வல்லினம் மிகும் இடங்கள்

1.அந்த, இந்த, எந்த, அப்படி, இப்படி, எப்படி – ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகும்

அந்தத் தட்டு
இந்தக் கிடங்கு
எந்தத் தெரு
அப்படிச் சொன்னாள்
இப்படிக் கூறினார்கள்
எப்படிப் பார்த்தான்

2.ஆய், போய் எனும் வினையெச்சங்களின் பின்னல் வல்லினம் மிகும்

தருவதாய்ச் சொன்னாள், (ஆய்), போய்ச் சேர்ந்தார்கள் (போய்)

3.அங்கு, இங்கு என்னும் சுட்டுத் திரிபுப் பெயர்களின் பின்னல் வல்லினம் மிகும்

அங்கு + கண்டேன் = அங்குக் கண்டேன், இங்கு + பார்த்தேன் = இங்குப் பார்த்தேன்.

4.சால, தவ என்ற உரிச் சொற்களின் பின்னால் வல்லினம் மிகும்

சாலச் சிறந்தது, தவப் பெரிது

5.இரண்டாம் வேற்றுமை உருபு (ஐ) நான்காம் வேற்றுமை உருபு (கு) விரிவடையும் இடங்களில் வல்லினம் மிகும்.

பையைக் கொடு (ஐ)
புத்தகத்தைப் படி (ஐ)
மதுரைக்குப் போனார்கள் (கு)
சென்னைக்குச் சென்றாள் (கு)

3.ஓரெழுத்து ஒருமொழியின் பின்னால் வல்லினம் மிகும்:

தை + திங்கள் = தைத் திங்கள்
தீ + பற்றியது = தீப் பற்றியது

4.வன்தொடர் குற்றியலுகரம் ‘க்கு’, ‘ச்சு’, ‘ட்டு’, ‘த்து’, ‘ப்பு’, ‘ற்று’ என்று முடியும் சொற்களின் பின்னால் வல்லினம் மிகும்

வாக்குக் கொடு, நச்சுப் புகை, தட்டுப்பாடு, பருப்புக் கூட்டு, மாற்றுச் சேலை.

5.மென்றொடர்க் குற்றியலுகரம் ‘ங்கு’, ‘ஞ்சு’, ‘ண்டு’, ‘ந்து’, ‘ம்பு’, ‘ன்று’ என்று முடியும் சொற்களின் பின்னால் பெயர்ச்சொல் வந்தால் வல்லினம் மிகும்

குரங்குச் சாவடி, பஞ்சுப் பொதி, கூண்டுக் கிளி, இந்துக் கோவில், இரும்புத் திரை, கன்றுக் குட்டி.
வினைமுற்று வந்தால் வல்லினம் மிகாது.

5. முற்றியலுகரச் சொற்களின் பின்னால் வல்லினம் மிகும்

திருக்குறள், பொதுக்கருத்து

6.இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தாம் உருபும் உடன் தொக்க தொகைகளின் பின்னல் வல்லினம் மிகும்

தண்ணீர்ப்பானை, மரப்பலகை, சட்டைத்துணி

7.ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின்னால் வல்லினம் மிகும்

வளையாச் செங்கோல், ஓடாப்புலி

8.உயிரீற்றுச் சொற்களின் பின்னல் வல்லினம் மிகும்

பனித்துளி, மழைக்காலம்

வல்லினம் மிகா இடங்கள்

1.வினைத் தொகையில் வல்லினம் மிகாது

விளை + பயிர் = விளைபயிர், விரி+சுடர் = விரிசுடர், பாய்+புலி = பாய்புலி

2.உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது

தாய் + தந்தை = தாய்தந்தை, காய்+கனி = காய்கனி, செடி + கொடி = செடிகொடி

3.இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது

நீர் + குடித்தான் = நீர் குடித்தான்

4.இரட்டைக் கிளவியிலும் அடுக்குத் தொடரிலும் வல்லினம் மிகாது

கல+கல= கல கல, சல+சல= சல சல, தீ + தீ = தீ தீ, பாம்பு+பாம்பு = பாம்பு பாம்பு

5.எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது

குரங்கு + கடித்தது = குரங்கு கடித்தது.

6.மென்றொடர்க் குற்றியலுகரம் ‘ங்கு’, ‘ஞ்சு’, ‘ண்டு’, ‘ந்து’, ‘ம்பு’, ‘ன்று’ என முடியும் சொற்களின் பின்னால் வினைமுற்று வந்தால் வல்லினம் மிகாது

நுங்கு எடுத்தான், பஞ்சு எடுத்தார்கள், நண்டு பிடித்தான், பந்து சுழன்றது, கரும்பு தின்றான், குரங்கு பார்த்தது.

7.விளித்தொடரில் வல்லினம் மிகாது

அண்ணா பேசு, மன்னா கூறு,

8.அத்தனை, இத்தனை, எத்தனை என்ற சொற்களுக்குப் பின்னால் வல்லினம் மிகாது.

அத்தனை பேர், இத்தனை வெள்ளம், எத்தனை ஆண்கள்

குறிப்புநூற்பட்டி

  1. ஒற்றுப்பிழைகள் – 1 http://www.pudhuchery.com/pages/gram2.html
  2. ஒற்றுப்பிழைகள் – 2 http://www.pudhuchery.com/pages/gram3.html
  3. வலி மிகுதல் – இலக்கணத் தொடரின் மொத்தத் தொகுப்பு
  4. வலி மிகும் இடங்கள், வலி மிகா இடங்கள்
  5. புதிய சந்திப்பிழை திருத்தி எதிர்நீச்சல்.
  6. புதிய தமிழ் எழுத்துப் பிழை திருத்தி 

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in தமிழ் and tagged , , , , , , . Bookmark the permalink.

1 Response to நாவி தமிழ்ச் சந்திப்பிழை திருத்தி மற்றும் வாணி தமிழ் எழுத்துப்பிழை திருத்தி, ஆன்லைன் மென்பொருள் செயலிகள்

  1. பிங்குபாக்: நல்ல தமிழில் எழுதுவோம். என்.சொக்கன். நூலறிமுகம் | அகரம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.