திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில்

திருமயம் என்னும் திருமெய்யம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒர் ஊராகும். இவ்வூரை நோக்கிப் பயணிக்கும்போது பல கி.மீ. தொலைவிலேயே இங்குள்ள அழகான மலைக்கோட்டையைக் காணலாம். இவ்வூரின் தென்புறமாக அமைந்துள்ள மலைச் சரிவில் இரண்டு குடைவரைக் கோவில்கள் அகழப்பட்டுள்ளன. கிழக்குப்புறம் அகழப்பட்டுள்ள குடைவரையில் திருமெய்யர் என்ற பள்ளிக்கூட பெருமாள் கிடந்த நிலையில் காட்சி தருகிறார். பிற்காலத்தில் இக்குடைவரையை முத்தரைய வம்சத்தைச் சேர்ந்த பெருந்தேவி என்ற அரசி விரிவுபடுத்தி மண்டபம் கட்டியுள்ளார். இவரின் கல்வெட்டின் காலத்தைக் கருத்தில் கொண்டு இக்குடைவரையின் காலத்தை வரலாற்று ஆய்வாளர்கள் கணித்துள்ளார்கள். இக்குடைவரைக் கோவில் பாண்டியர்கள், ஹொய்சாளர்கள், விஜயநகர அரசர்கள், நாயக்கர்கள் ஆகிய அரச வம்சத்தவர்களால் விரிவுபடுத்தப்பட்டு கருவறைகளும், மண்டபங்களும் கட்டப்பட்டன. இப்பதிவு இக்குடைவரைக் கோவில் பற்றிய சுவையான செய்திகளை இங்கு பகிர்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், திருமயம் பின் கோடு 622507 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நகரம். இவ்வூரின் அமைவிடம் 10° 14′ 49.56″ N அட்சரேகை (லாட்டிட்யூட்), 78° 45′ 1.73″ E தீர்க்கரேகை (லான்ஜிட்யூட்) ஆகும். கடல் மட்டத்திலிருந்து 98 மீட்டர் உயரத்தில் இவ்வூர் அமைந்துள்ளது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8,350 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 4,165 ஆண்கள், 4,185 பெண்கள் ஆவார்கள்.

இவ்வூர் அமைவிடம் மதுரையிலிருந்து 89 கி.மீ தொலைவு ; திருக்கோஷ்டியூரிலிருந்து 33 கி.மீ.  தொலைவு; திருப்பத்தூரிலிருந்து 15 கி.மீ. தொலைவு; காரைக்குடியிலிருந்து 22 கி.மீ. தொலைவு; பொன்னமராவதியிலிருந்து 30 கி.மீ. தொலைவு; மாவட்டத்துத் தலைநகரான புதுக்கோட்டையிலிருந்து 18 கி.மீ.தொலைவு; திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திலிருந்து 70 கி.மீ தொலைவு; சென்னையிலிருந்து 399 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. திருமயம் இரயில் நிலையம் இவ்வூரில் அமைந்துள்ளது.

இலக்கியங்களிலும் புராணங்களிலும் இவ்வூர் திருமெய்யம் என்று அழைக்கப்படுகிறது. 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான இத்தலத்தின் சத்தியமூர்த்திப் பெருமாளைப் புகழ்ந்து திருமங்கை ஆழ்வார் பாசுரங்கள் பாடியுள்ளார். ஏழு சத்தியப் பெருமைகளான சத்தியமூர்த்தி, சத்யகிரி விமானம், சத்திய ஷேத்திரம், சத்தியபுரம், சத்யகிரி, சத்தியதீர்த்தம், சத்தியவனம் ஆகிய சிறப்புகளைக்கொண்டது இவ்வூர். வடமொழியில் சத்யஷேத்ராம் என்றும் தமிழில் திருமெய்யம் அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் பெருமாள் மெய்யர் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். திருமெய்யம் என்ற சொல் மருவி திருமயம் ஆயிற்று. .

திருமயம் வரலாறு

வரலாற்றுச் சிறப்பு மிகு புதுக்கோட்டைப் பகுதியின் சங்ககாலப் பெயர் பன்றிநாடு. “ராஜராஜ வளநாட்டு பன்றியூர் அழும்பில்” என்று பிற்காலச் சோழர் கல்வெட்டு இதனை உறுதி செய்கிறது. பன்றிநாடானது கோனாடு, கானாடு என இரு பெரும் பிரிவுகளாக விளங்கியது. இது உறையூர் கூற்றம், ஒல்லையூர் கூற்றம், உறத்தூர் கூற்றம், மிழலைக் கூற்றம், கானக் கூற்றம் என ஐந்து கூற்றங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள் கோனாடு நான்கு கூற்றங்களை உள்ளடக்கிக் கொண்டிருந்தது. வெள்ளாற்றிற்கு வடக்கே இருந்த பகுதி வடகோனாடு என்றும், தெற்குப் பகுதி தென்கோனாடு என்றும் விளங்கின. சங்க காலத்தில் சோழநாட்டிற்கும் பாண்டிய நாட்டிற்கும் எல்லையாகப் புதுக்கோட்டைப் பகுதி தமிழகத்தை ஆண்ட அனைத்து வம்ச மன்னர்களுக்கும் போர்க்களமாக விளங்கியுள்ளது போர்க்களமாக விளங்கியுள்ளது.

முத்தரையர்கள் கி.பி. 8-9ம் நூற்றாண்டுகளில் திருமயம் உள்ளடக்கிய பகுதிகளை அரசாண்டிருக்கலாம் எனத் தொிகிறது. இப்பகுதி தொடர்ந்து விஜயாலய சோழர்களின் ஆளுகைக்கு உட்பட்டது. 12-13 ஆம் நூற்றாண்டுகளில் ஹொய்சாளர்கள் இப்பகுதியை சோழர்களின் பிரதிநிதியாகவும், பின்னர்ப் பாண்டியர்களின் பிரதியாகவும் அரசாண்டனர். சத்யகிரீஸ்வரர் கோவிலில் உள்ள இரண்டு கல்வெட்டுகள் அப்பண்ணா என்ற ஹொய்சள படைத்தலைவன் (தண்டநாயகன் என்ற பெயர் ஹொய்சாள படைத்தலைவருக்கு உள்ளது) பற்றிக் குறிப்பிடுகின்றன. ராமேஸ்வரத்தில் நடந்த படையெடுப்பின் பின் வெற்றியுடன் திரும்பிய இந்த அப்பண்ணா திருமயத்தில் நடந்த ஒரு தீர்ப்பாயத்தில் சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் இடையே நிலவிய நீண்டநாள் சர்ச்சையைத் தீர்த்துவைத்தது பற்றிய செய்தி இக்கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் முழுவதுமாகப் பாதுகாக்கப்படும் கல்வெட்டைப்போல தொன்மையான சிறப்புமிக்க பரிவாதிநிதா என்னும் இசைக் கருவியின் நுணுக்கங்களைத் தெரியப்படுத்தும் திருமெய்யத்துக் கல்வெட்டுக்களைச் சிதைத்து அவற்றின் மேலேயே ஹொய்சள நாட்டுத் தளபதி அப்பன்னா சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் இடையில் சமரசம் செய்து வைத்ததைத் தெரிவிக்கும் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.

13 ஆம் நூற்றாண்டில் திருமயம் பாண்டியர்கள் வசம் சென்றது. இங்கு இரண்டாம் மாரவர்மன் சுந்தரப் பாண்டியன் ( Mara-varman Sundara Pandya II), மூன்றாம் ஜடாவர்மன் வீர பாண்டியன் (Jatavarman Veera Pandya III), ஜடாவர்மன் பராக்கிரம பாண்டியன் (Jatavarman Parakrama Pandya) மற்றும் வீரபாண்டியன் (Veera Pandya) ஆகியோர் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. முதலாம் விருப்பாக்ஷன் (Virupaksha I) மற்றும் கிருஷ்ண தேவராயர் (Krishnadeva-raya) ஆகிய விஜயநகர மன்னர்களின் கி.பி. 15-16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளும் இங்குள்ளன. கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் சூரைக்குடியைச் சேர்ந்த குறுநில தலைவர்கள் (the chiefs of Chooraikkudi) இப்பகுதியை நிர்வகித்துள்ளனர்.

மதுரை நாயக்கர்கள் காலத்தில் சேதுபதிகள், மதுரை ஆட்சியின் படைத்தலைவர்களாக இருந்தனர். நாயக்கர்களின் வலிமை குன்றிய பிறகு கிழவன் சேதுபதி என்று பலராலும் அறியப்பட்ட விஜயரகுநாத சேதுபதி இராமநாதபுரத்தில் ஆட்சி செய்தார். கி.பி. 16-17 ஆம் நூற்றாண்டுகளில் இந்நகரம் இராமநாதபுரம் சேதுபதிகளின் வடக்குப் பிரதேசங்களின் புறக்காவல் நிலையமாக (northern outpost of the territories) மாறியது. இந்தப் பிரதேசங்களைப் பல்லவராயர்கள் (Pallava-rayar-s) நிர்வகித்தனர். எதிரிகளிடமிருந்து தன் நாட்டைப் பாதுகாக்க திருமயம் கோட்டை கட்டப்பட்டது. வலிமைமிக்கப் பீரங்கிகள் இக்கோட்டையின் பாதுகாப்புக்குப் பயன்படுத்தப்பட்டன.

கி.பி 1686 ஆம் ஆண்டில் கிழவன் சேதுபதி தன்னுடைய மைத்துனர் இரகுநாத ராயத் தொண்டைமானுக்குப் புதுக்கோட்டை சமஸ்தானத்தைப் பரிசாக வழங்கினார். திருமயம் இந்தச் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாயிற்று. கி.பி.1723 ஆம் ஆண்டுத் தண்டத்தேவனும் புதுக்கோட்டை சமஸ்தானத்தை இரகுநாத ராயத் தொண்டைமானுக்கு விட்டுக்கொடுத்த செயலை ஊர்ஜிதப்படுத்தினார். இராமநாதபுரத்தின் வடக்குப் பிரதேசங்களின் தலைமைப் பதவிக்கு உரிமை கொண்டாடிய பவானி சங்கர் என்பவருக்கு எதிரான போரில் இரகுநாத ராயத் தொண்டைமான் ஆற்றிய உதவியைப் பாராட்டும் விதமாகத் தண்டத்தேவன் ஆதரவுடன் புதுக்கோட்டை சமஸ்தானம் பரிசளிக்கப்பட்டது. அன்று முதல் 1948 வரை சுமார் 300 ஆண்டுகள் தனியரசாக விளங்கியது புதுக்கோட்டை சமஸ்தானம் ஒன்றே!

கி.பி. 1733 ஆம் ஆண்டுத் தஞ்சாவூரின் தளபதி ஆனந்த ராவ் மொத்த புதுக்கோட்டை சமஸ்தானத்தையும் தாக்கியபோது புதுக்கோட்டை மன்னர் விஜய ரகுநாத ராயத் தொண்டைமான் பதுங்கிய இடம் திருமயம். இங்குத் தொண்டைமான் சுமார் ஓர் ஆண்டு வரை முற்றுகையிடப்பட்டார். தஞ்சாவூர் அரசர் கிழக்கிந்தியக் கம்பெனியிடம் திருமயத்தை உரிமை கோரினார். என்றாலும் இவர் தன் கோரிக்கையைத் தீவிரமாக வலியுறுத்தவில்லை.

கி.பி. 1799 ஆம் ஆண்டு நடந்த பாஞ்சாலாங்குறிச்சி (பாளையக்காரர்) போரில் தோற்ற வீரபாண்டிய கட்டபொம்மனும் அவர் தம்பி ஊமைத்துரையும் தொண்டைமான் சமஸ்தானத்தில் திருக்காளாம்பூரில் உள்ள காட்டில் புகலிடம் அடைந்தனர். இந்த இரு சகோதரர்களையும் தொண்டைமான் பிடித்துக் கைது செய்து திருமயத்தில் சிலகாலம் சிறை வைத்திருந்தார் என்று ஊர்ஜிதப்படுத்தப்படாத கர்ணபரம்பரைக் கதை ஒன்று உள்ளது.

பாளையக்காரர்களுக்கும் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் இடையே நடந்த இரண்டாம் பாளையக்காரர்கள் போரில் (Poligar War II) லெஃப்னெண்ட் கர்னல் அக்னியூ (Lieutenant Colonel Agnew) தலைமையில் கம்பெனி படைகள் அணிவகுத்தன. திருமயம் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆயுதக்கிடங்காகப் பயன்பட்டது.

திருமயம் நினைவுச் சின்னங்கள் (Tirumayam Monuments)

வரலாற்றுச் சிறப்புமிக்கத் திருமயத்தில் மூன்று நினவுச் சின்னங்கள் அமைந்துள்ளன. ஒரே பறையை அகழ்ந்து அமைக்கப்பட்ட இரண்டு குடைவரைக் கோவில்கள் சத்திய கிரீஸ்வரருக்கும் (சிவன்) , திருமெய்யப் பெருமாளுக்கும் அமைக்கப்பட்டுள்ளன. சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துகாட்டாக ஒரே மலையைக் குடைந்து கட்டப்பட்ட இரண்டு குடைவரைக்கோயில்கள் இவை.

சத்தியமூர்த்திப் பெருமாள் கோவில், திருமயம்

வைணவர்களால் மிகவும் போற்றி வணங்கப்படும் 108 திவ்யதேசங்களுள் 97வது திவ்யதேசக் கோவிலாகும். பாண்டியநாட்டில் அமைந்துள்ள 18 திவ்யதேசங்களுள் இதுவும் ஒன்று. வைணவர்கள் ஸ்ரீரங்கத்துக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்து வணங்கும் திருமயம் ஆதி அரங்கம் என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீரங்கத்தைவிடப் பழைமையானது இக்கோவில்.

திருமெய்யம் குன்றின் செங்குத்தான தென்முகச்சரிவில் சத்யகிரீஸ்வரருக்கும் (சிவன்) திருமெய்யருக்கும் (பெருமாள்) குடைவரை குகைகோயில்கள் அடுத்தடுத்து ஒன்றுக்கொன்று அறுபதுதடி தூரத்தில் அமைந்துளது. இரண்டு குடைவரைகளுள் ஒன்று திருமெய்யர் (பெருமாள்) குடைவரைக் கோவிலாகும். திருமெய்யத்தில் பதின்மூன்றாம் நூற்றாண்டுவரை ஒரு வழியாகவே சத்யகிரீஸ்வரரையும், திருமெய்யரையும் தரிசிக்கும் படியாகத்தான் சன்னதிகள் அமைந்திருந்தன. சத்யகிரீஸ்வரர் கோவிலுக்கும் திருமெய்யர் – சத்தியமூர்த்திக் கோவிலுக்கும் இடையே பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் ஏற்பட்ட சைவ வைணவப் பூசல் இரு கோவில் வளாகங்களுக்கு இடையில் ஒரு மதிற்சுவர் கட்டிப் பிரிக்கும் அளவிற்கு நீண்டது.

t_500_411

ஐந்து நிலை இராஜகோபுரம்

தெற்கு நோக்கிய ஐந்து நிலை இராஜகோபுரம் பாண்டியர்களின் கி.பி. 13-14 ஆம் நூற்றாண்டையொட்டிய கலைப்பணியாக இருக்கலாம். இராஜகோபுரவாயிலுக்கும் இரண்டாம் வாயிலுக்கும் இடையில் நீளமான மண்டபம் அமைந்துள்ளது. இது நாயக்கர் காலத்த்தில் (16 ஆம் நூற்றாண்டில்) கட்டப்பட்டிருக்கலாம். இம்மண்டபத்தின் மேற்குப்புறத்தில் சக்கரத்தாழ்வார், ஆண்டாள், கிருஷ்ணர் ஆகியோருக்குக் கிழக்கு நோக்கிய சன்னதிகள் உள்ளன. மண்டபத் தூண்களில் மதுரைவீரன் பொம்மியைக் கடத்திச் செல்லும் சிற்பத் தொகுப்பு, குறவன், குறத்தி, நாயக்க வீரன், நடனமாடும் மங்கையர் ஆகிய சிற்பத் தொகுதிகள் காணப்படுகின்றன.

chettinadu-may-2013-13

மண்டப தூண் சிற்பத் தொகுப்புகள் PC: Expandinding Horizons

உய்யவந்த நாச்சியார் சன்னதி

இரண்டாம் வாயில் வழியாகப் பிரகாரத்துக்குள் நுழைந்ததும் மேற்கில் உய்ய வந்த தாயார் சன்னதியைக் காணலாம். கிழக்கு நோக்கியுள்ள இச்சன்னதி முகமண்டபம், முன்று தளத்துடன் கூடிய விமானத்துடன் கூடியது. கருவறையில் உய்யவந்த நாச்சியார் என்ற உஜ்ஜிவனித் தாயார் பட்டாடை உடுத்தி அர்த்தபத்மாசனத்தில் காட்சி தருகிறார்.

சுந்தரபாண்டியன் குறடு

பிரகாரத்தின் தென்கிழக்கில் நீளமான மேடையில் ஆழ்வார்களும் மதுரகவி மற்றும் இராமானுஜர் போன்ற ஆச்சார்யார்களும் கட்சி தருகிறார்கள். எதிரில் உள்ள தூண்களில் தசாவதார சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அடுத்து மடைப்பள்ளி உள்ளது. இரண்டாம் வாயிலில் நுழைந்தவுடன் எதிரில் பலிபீடத்தையும் கொடிமரத்தையும் காணலாம். இவற்றின் பின்புறம் காணும் பெரிய மண்டபத்திற்குச் சுந்தரபாண்டியன் குறடு என்று பெயர்.

சுந்தரபாண்டியன் குறட்டினை அணைத்துள்ள பிரகாரத்தின் மேற்குப் பகுதியில், இக்கோவில் வளாகத்தைச் சத்தியகிரீஸ்வரர் கோவிலிலிருந்து பிரிக்கும் மதில்சுவரைக் காணலாம். இந்த மேற்குப் பிரகாரத்தின் முடிவில் பள்ளி கொண்ட பெருமாளின் குடைவரைக் கோவில் அமைந்துள்ளது. பிரகாரத்தையொட்டி ஒரு மூன்றிலைத்தாண்டியதும் ஒரு சிறு மண்டபம் உள்ளது. இந்தச் சிறுமண்டபத்தியொட்டி பள்ளிகொண்ட பெருமாளின் சன்னதி அமைந்துள்ளது.

பள்ளி கொண்ட பெருமாள் சன்னதி

tirumaiyam_anantasayanam

பள்ளிகொண்ட பெருமாள், திருமெய்யம், PC: அசோக் கிருஷ்ணஸ்வாமி

இங்குப் பள்ளி கொண்ட பெருமாள் என்ற யோகசயன மூர்த்தி அனந்தசயனநிலையில் காட்சி தருகிறார். ஆதிசேஷன் என்ற பாம்பணையில் மேற்கில்தலைவைத்துக் கிழக்கில் காலை நீட்டியபடி தெற்கு நோக்கி அரிதுயில் கொள்ளும் பெருமாளின் உருவம் சுமார் 30 அடி அல்லது 9 மீட்டர் நீளத்தில் குகை முழுதும் வியாபித்துள்ளது.

குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசை யிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவு ளெந்தை அரவணைத் துயிலு மாகண்டு
உடலெனக் குருகு மாலோ எஞ்செய்கே னுலகத் தீரே.
– தொண்டரடிப்பொடி ஆழ்வார்

தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மா பெருமாளின் நாபிக்கமலத்திலிருந்து தோன்றுகிறார். மார்பினில் லட்சுமியும் காலருகே பூதேவியும் வீற்றிருக்கிறார்கள். பிரம்மாவின் அருகில் சப்தரிஷிகளும் தேவர்களும் காட்சிதருகிறார்கள். ஆதிசேஷன் பின்னால் கருடன் நிற்கிறார். இவர்கள் அருகே தர்மராஜன், சித்திரகுப்தன், சந்திரன், சூரியன், ராகு ஆகியோர் காணப்படுகின்றனர்.மது கைடபர்கள் பெருமாளை தாக்குவதற்காக இவரின் காலருகே நிற்கிறார்கள். பெருமாளின் ஐந்து ஆயுதங்களில் நான்கு ஆயுதங்களான சுதர்ஷன சக்கரமும், பாஞ்சஜன்யம் என்னும் சங்கையும், நந்தகம் என்னும் வாளினையும், கௌமோதகி என்னும் கதையையும் காட்டப்பட்டுள்ளது. படமெடுத்தாடும் ஆதிசேஷன் தன் ஐந்து தலைகளிலிருந்து மது கைடபர்களை நோக்கி நெருப்பை உமிழ்கிறார். மது கைடபர்களை நோக்கி தீ ஜுவாலைகள் பரவுகின்றன. இவை தவிர, கானப்பறை, பேரிகை, சல்லிகை, தக்கை, தண்ணுமை தடாகமும், தடாரி, உடுக்கை, கிடக்கை, கரடிக்கை முதலான பண்டைக்காலக் கருவிகளும் மலையில் வடிக்கப்பட்டுள்ளன. பிற வைணவ தலங்களில் காணப்படும் அனந்தசயனகோலங்களைவிடத் திருமயம் அனந்தசயனக்கோலம் மிகவும் அழகானது என்பது என் கருத்து.

சத்தியமூர்த்தி சன்னதி

சுந்தரபாண்டியன் குறட்டுட்டைத் தாண்டி அமைந்துள்ள ஒரு இடைநாழிகையைத் தாண்டினால் சத்தியமூர்த்தியின் சன்னதியை அடையலாம். இந்தச் சன்னதி ஒருதள விமானம், முகமண்டபம், பிரகாரம் என்று அமைந்துள்ளது. அதன் நுழைவாயிலைப் பக்கத்திற்கொருவராக இரண்டு துவாரபாலகர்கள் காக்கின்றனர். இக்கோவிலில் நின்றகோலத்தில் காட்சிதரும் மற்றோரு மூலவர் இவர். வலது முன் கை அபய முத்திரையும், இடது முன் கை கடியவலம்பிதமும் காட்ட, பின் கைகள் சங்கு சக்கரம் ஏந்தி. கிரீடம், மகரகுண்டலம், அணிகலன்கள் பூண்டு அலங்காரபுருஷராய் சத்தியமூர்த்திப் பெருமாள் காட்சி தருகிறார். இடப்புறம் கருடன் நின்றநிலையில் காட்சி தருகிறார். அவரையடுத்து இலட்சுமி அமர்ந்கோலத்தில் காட்சி தருகிறார். பெருமாளின் வலப்புறம் புரூரவச் சக்கரவர்த்தி நின்ற கோலத்தில் காணப்படுகிறார்.

g_t6_411

சத்தியமூர்த்தி பெருமாள்

விஜயநகர மன்னர்கள் ஆட்சியில், தற்போது காணப்படும் அமைப்பில், மூலவரின் குடைவரைக்கு முன்பு உள்ள சிறிய மண்டபம், மற்றோரு மூலவர் சத்தியமூர்த்திப் பெருமாளுக்கான கருவறை, விஷ்வக்ஷேனர்,இராமர், தாயார் ஆகியோருக்கான கருவறைகள், மண்டபங்கள், கோபுரங்கள் எல்லாம் கட்டப்பட்டன. கோவில் வளாகத்தில் இன்னும் பல சன்னதிகள் உள்ளன.

ஆழ்வார்கள் மங்களாசாசனம்

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட (பாடப்பட்ட) பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் திருமயம் என்ற திருமெய்யம் 97 வது திவ்ய தேசம். பாண்டிய நாட்டில் அமைந்துள்ள 18 திவ்ய தேசங்களுள் திருமெய்யமும் ஒன்று. திருமங்கை ஆழ்வார் தனியாகச் சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள் மொத்தம் 46 ஆகும். அவற்றுள் இந்தத் திருமெய்யமும் ஒன்று.

மையார் கடலும் மணிவரையும் மாமுகிலும்,
கொய்யார் குவளையும் காயாவும் போன்றிருண்ட
மெய்யானை, மெய்ய மலையானைச் சங்கேந்தும்
கையானை, கைதொழா கையல்ல கண்டாமே.

(நாலாயிர திவ்ய பிரபந்தம் பெரியதிருமொழி 2016-பாசுரம்)

திருமங்கை ஆழ்வார் தன் பாசுரத்தில் இங்குள்ள பெருமாளை ‘மெய்யமலையான்’ என்று குறிப்பிடுகிறார். கல்வெட்டுகளில் பெருமாள் பள்ளிகொண்டருளின ஆழ்வார் என்றும் அழகியமெய்யர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர். திருமங்கை ஆழ்வார் பெருமாளை மெய்யமலையான் என்று குறித்ததன் வடமொழி மொழிபெயர்ப்பாகவே சத்தியமூர்த்தி என்ற பெயர் விஜயநகர அரசாட்சிக் காலத்தில் வழங்கப்பட்டிருக்கலாம்.

குடைவரையின் காலம்

விடேல் விடுகு என்றும் விழுப்பேர் அதியரைசன் என்றும் அறியப்பட்ட முத்தரைய அரசர் சாத்தன் மாறனின் தாயான பெரும்பிடுகுப் பெருந்தேவி என்ற முத்தரைய அரசியால் திருமெய்யர் குடைவரை முகப்பையொட்டி தூண்கள் அமைக்கப்பட்டுக் கோவிலாக மாற்றப்பட்டதாகக் கே.ஆர்.ஸ்ரீநிவாசன் கருதுகிறார். பெரும்பிடுகுப் பெருந்தேவியின் கல்வெட்டு ஒன்று இக்கோவிலில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பற்றிப் பதிவு செய்துள்ளபடியால், இக்கோவிலின் தொன்மை இக்கல்வெட்டு காலத்துக்கும் முந்தியது என்பது எனலாம். இந்தக் குறிப்பிட்ட கல்வெட்டு எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்று டி.வி.மகாலிங்கமும், ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்று வி.லதாவும் கருதுகிறார்கள். ஒரு குடைவரைக் கோவிலுக்குச் சீரமைப்புத் தேவைப்படுகிறது என்றால் அக்கோவில் குறைந்தது நூறாண்டுகளாவது பழமையானதாக இருந்திருக்க வேண்டும் என்று வி.லதா கருதுகிறார். எனவே இக்குடைவரை ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அகழப்பட்டிருக்கலாம். இக்குடைவரையின் காலம் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனின் (கி.பி. 580-629) காலத்திற்கு முற்பட்டதாயிருக்கலாம். மத்தியபிரதேசத்தில் உதயகிரி குகையில் அமைந்துள்ள குப்தர்கள் காலத்து விஷ்ணுவிற்கும் திருமெய்யம் மெய்யருக்கும் உள்ள ஒற்றுமையை வி.லதா ஊகிக்கிறார்.

இந்தக் கோவில் ஒரு குடைவரைக் கோவிலாக மட்டும் இருந்திருக்கிறது. 100-120 ஆண்டுகளுக்குப் பின்பு மண்டபங்கள் இணைக்கப்பட்டிருக்கிறது. இக்கோவிலில் உள்ள எட்டாம் நூற்றாண்டுவரையிலான கல்வெட்டுகள் கோவிலுக்கு அளிக்கப்பட்டத் தானங்களைப் பற்றிப் பதிவு செய்துள்ளன. இதை அடுத்து இங்கு 12 ஆம் நூற்றாண்டிலிருந்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. நானூறு ஆண்டுகளுக்கான இக்கோவிலின் வரலாறு நமக்குக் கிடைக்கவில்லை.12 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னல் பொறிக்கப்பட்ட சில கல்வெட்டுகள் இக்கோவில் புஷ்காரணியைப் (திருக்குளம்) பற்றிய வரலாற்றினைப் பதிவு செய்துள்ளன. எனவே புஷ்கரணி இந்த 400 ஆண்டுகளுக்கிடையே தோன்றியிருக்கலாம். எண்கோணக் குளம் கல்வெட்டில் சத்தியபுஷ்கரணி எனக் குறிக்கப்பட்டுள்ளது.

thirumeyam

எண்கோண புஷ்கரணி PC Anudhinam

கல்வெட்டுகள்

சத்தியமூர்த்திக் கோவில் வளாகத்திலிருந்து முப்பது கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பதினான்கு கல்வெட்டுகள் புதுக்கோட்டை மாநிலக் கல்வெட்டுகள் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. அதில் இடம்பெறாத ஒரு கல்வெட்டு தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 22ன் இரண்டாம் பிரிவில் பதிவாகியுள்ளது. நான்கு கல்வெட்டுகள் திருமதி நா. வள்ளியால் பதிப்பிக்கப்பட்டுள்ளன.

எண் 402 கல்வெட்டு ஆண்டு அறிக்கை (Annual Report on Epigraphy)/ எண் 13 புதுக்கோட்டை மாநில (சமஸ்தான) கல்வெட்டுகள். மூலவர் சன்னதியின் மேற்கு பிரகாரத்தில் படியமைப்பின் பிடிச்சுவர் போல வடிவமைக்கப்பட்ட பலகைப்பாறையில் பதினோரு வரிகளில் அமைந்த தமிழ்க் கல்வெட்டே இவ்வளாகத்திலுள்ள கல்வெட்டுகளுள் காலத்தால் முற்பட்டது.

இந்தக் கல்வெட்டு விடேல் விடுகு என்றும் விழுப்பேர் அதியரைசன் என்றும் அறியப்பட்ட முத்தரைய அரசர் சாத்தன் மாறனின் தாயான பெரும்பிடுகுப் பெருந்தேவி புனரமைத்ததாகக் பதிவு செய்துள்ளது. இந்த முத்தரைய அரசி எதைப் புனரமைத்தார் என்று தெளிவு படுத்தவில்லை. எனினும் இவ்வரசி தான் புனரைமைத்ததற்கு உண்ணாழிகைப்புறமாக (central shrine) அவர் ஊரொன்றைத் தந்ததாகத் தகவல் தருகிறார். எனவே அரசி புனரைமைத்தது கோயிலொன்று என்று உறுதிசெய்யலாம். தாம் புனரமைத்த கோயிலுக்கு உண்ணாழிகைப் புறமாக அண்டக்குடி என்னும் ஊரைக் காராண்மை மீயாட்சி உள்ளடங்க அரசி அளித்துள்ளார். இக்கல்வெட்டின் அடிப்படையில் பள்ளி கொண்ட ஆழ்வாரின் குடைவரையைப் புனரைமைத்தவர் பெருந்தேவியே என்று சில வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர்.

எண் 406 கல்வெட்டு ஆண்டு அறிக்கை (Annual Report on Epigraphy): சத்தியமூர்த்தி கோவில் மேற்குச் சுவரில் குலசேகரதேவ பாண்டியனின் 22 ஆம் ஆட்சியாண்டுத் தமிழ்க் கல்வெட்டு ஒன்று நிலக்கொடையைப் பதிவு செய்கிறது.

எண் 405 கல்வெட்டு ஆண்டு அறிக்கை (Annual Report on Epigraphy): சத்தியமூர்த்தி கோவில் மேற்குச் சுவரில் குலசேகரதேவ பாண்டியனின் 26 ஆம் ஆட்சியாண்டுத் தமிழ்க் கல்வெட்டு ஒன்று நிலக்கொடையைப் பதிவு செய்கிறது. கந்திதேவ விண்ணகர் எம்பெருமான் என்ற கோவிலின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடைவரை நுழைவாயிலுக்கு இடப்புறத்திலுள்ள பாறையின் மேற்பகுதியில் முதலாம் இராஜராஜனின் ஆட்சியாண்டு அறியமுடியாத கல்வெட்டு ஒன்று உள்ளது. இக்கல்வெட்டு பள்ளி கொண்ட பெருமாளைக் ‘கிடந்தபிரான்’ என்று குறிப்பிடுகிறது. தினந்தோறும் எண்ணாழி அரிசி கொண்டு “கிடந்த பிரானுக்கு” இரண்டு வேளைத் திருஅமுது அளிக்க எதுவாகப் பெருந்தேவன்குடிக் குளத்திலிருந்து பாசன வசதி பெற்ற நிலம் ஒன்று விலைக்குப் பெறப்பட்டு மெய்யம் சபையாரிடம் ஒப்படைக்கப்பட்டது. நிலகொடை அளித்தவர் பெயரை அறிய முடியவில்லை.

இக்கோவில் வளாகத்தில் கண்டறியப்பட்ட வீரவிருப்பண்ண உடையாரின் கி. பி. 1399ஆம் ஆண்டுக் கல்வெட்டு 28 சூரைக்குடித் திருமேனி அழகியாரான நாயினார் விசையாலயதேவர், இவ்வளாகத்தில் பெருமாளைப் புதிதாக எழுந்தருளச் செய்தமை பற்றிக் குறிப்பிடுகிறது.

திருவிழா

 • வைகாசி 10 நாள் திருவிழா மற்றும் பவுர்ணமி தேர்: சத்தியமூர்த்தி பெருமாளுக்கு ஆடி மாதம் காப்பு கட்டி 10 நாள் திருவிழா நடைபெறும். ஆடி கடைசி அன்று சத்தியமூர்த்தி பெருமாள் தேரில் உலா வருவார்.
 • ஆடிப்பூரம் 10 நாள் திருவிழா.
 • திருமெய்யருக்கு வருடந்தோறும் சித்திரை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை திருப்பாவாடை என்ற அன்னக்கூடை உத்ஸவம் நடைபெறும்.

கோவிலுக்குச் செல்ல

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

குறிப்புநூற்பட்டி

 1. திருமெய்யம் சுஜாதா தேசிகன் ஏப்ரல் 10, 2005
 2. தொண்டைமான் மன்னர்களின் அரசியல் கோட்டையாக திகழ்ந்த திருமயம் மலைக்கோட்டை பொலிவு பெறுமா? தினகரன் டிசம்பர் 26, 2015 http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=186646
 3. மெய்யத்தே பள்ளிகொண்டவரும் நின்றருளியவரும் – 1 இரா.கலைக்கோவன், மு.நளினி வரலாறு.காம் இதழ் 72 .ஜூன் 16 – ஜூலை 15, 2010
 4.  மெய்யத்தே பள்ளிகொண்டவரும் நின்றருளியவரும் – 2 இரா.கலைக்கோவன், மு.நளினி வரலாறு.காம் இதழ் 73 .ஜூலை 16 – ஆகஸ்டு 15, 2010
 5. மெய்யத்தே பள்ளிகொண்டவரும் நின்றருளியவரும் – 3 இரா.கலைக்கோவன், மு.நளினி. வரலாறு.காம் இதழ் 74 .ஆகஸ்ட் 16 – செப்டம்பர் 15, 2010
 6. வரலாற்றுச் சிறப்புமிக்க திருமயம் சத்தியம் மார்ச் 6, 2014 http://sathiyamweekly.com/?p=656
 7. Latha, V (2005). Cave Temples of Pandya Country: Art and Ritual. New Delhi. Sharada Publishing House. ISBN 8188934224
 8. Mahalingam, T V (1991). A Topographical List of Inscriptions in the Tamilnadu and Kerala States Vol VI. New Delhi. S Chand & Company Ltd.
 9. Rock-cut Siva temple, (Satyagirisvara temple) ASI http://asi.nic.in/asi_monu_tktd_tn_rockcutsiva.asp
 10. Rock-cut Vishnu temple (Satyamurthi Perumal temple) ASI http://asi.nic.in/asi_monu_tktd_tn_rockcutvishnu.asp
 11. Srinivasan, K R (1996). Temples of South India. New Delhi. National Book Trust of India. ISBN 8123718675
 12. Thirumayam. by Murugapandian Ramaiah. Pudukkottai.org June 14, 2002
 13. Thirumayam – The Land of Truth. Saurabh. Indian History and Architecture, April 11, 2011.
 14. Tirumayam Fort, Pudukkottai ASI http://asi.nic.in/asi_monu_tktd_tn_thirumayam.asp

 

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in கோவில் and tagged , , , , , , . Bookmark the permalink.

2 Responses to திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில்

 1. பிங்குபாக்: திருமயம் சத்தியகிரீஸ்வரர் கோவில் மற்றும் மலைக்கோட்டை | அகரம்

 2. பிங்குபாக்: புதுக்கோட்டை மாவட்ட வரலாறு, தொல்லியல் நினைவுச் சின்னங்கள் மற்றும் சுற்றுலா | அகரம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.