திருமயம் சத்தியகிரீஸ்வரர் கோவில் மற்றும் மலைக்கோட்டை

திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் பதிவு தொடர்ச்சி

சத்தியகிரீஸ்வரர் கோவில் திருமயம்

திருமெய்யம் குன்றின் செங்குத்தான தென்முகச் சரிவில் சத்தியகிரீஸ்வரருக்கும் (சிவன்) திருமெய்யருக்கும் (பெருமாள்) குடைவரை குகைக்கோயில்கள் அடுத்தடுத்து ஒன்றுக்கொன்று அறுபதுதடி தூரத்தில் அமைந்துள்ளது பற்றிச் சென்ற பதிவில் தெரிவித்திருந்தேன்.

சத்தியமூர்த்தி-திருமெய்யர் குடைவரையிலிருந்து மேற்குப்புறமாக அமைந்துள்ள சத்தியகிரீஸ்வரர் குடைவரை சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்குடைவரை திருமயத்தில் அமைந்துள்ள இரண்டு குடைவரைகளுள் காலத்தால் முந்தியது என்று கருதப்படுகிறது. இதன் காலம் 7ஆம் நூற்றாண்டாய் இருக்கலாம் என்றும், குடுமியான்மலை மற்றும் திருக்கோகர்ணம் குடைவரைகளின் காலத்தையொட்டிக் குடையப்பட்டிருக்கலாம் என்றும் வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர்.

திருமெய்யத்தில் பதின்மூன்றாம் நூற்றாண்டுவரை ஒரு வழியாகவே சத்தியகிரீஸ்வரரையும், திருமெய்யரையும் தரிசிக்கும் படியாகத்தான் சன்னதிகள் அமைந்திருந்தன என்றும், சத்தியகிரீஸ்வரர் கோவிலுக்கும் திருமெய்யர் – சத்தியமூர்த்திக் கோவிலுக்கும் இடையே பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் ஏற்பட்ட சைவ வைணவப் பூசல் இரு கோவில் வளாகங்களுக்கு இடையில் ஒரு மதிற்சுவர் கட்டிப் பிரிக்கும் அளவிற்கு நீண்டது என்ற தகவல்களைச் சென்ற பதிவில் தெரிவித்திருந்தேன்.

74_big

சத்தியகிரீஸ்வரர் கோவில் இராஜகோபுரம் பிக்: wikimedia

சத்தியகிரீஸ்வரர் குடைவரைக் கோவிலில் முகப்பு, முகமண்டபம் மற்றும் கருவறை ஆகிய உறுப்புகள் உள்ளன. பிற்காலத்து இணைப்பாகத் தூண்களுடன் கூடிய மண்டபங்கள், பரிவார தேவதைகளுக்கான கருவறைகள் மற்றும் இராஜகோபுரம் ஆகிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. சத்தியகிரீஸ்வரர் கோவில் இராஜகோபுரம் பிற்காலத்துப் (13ஆம் நூற்றாண்டு) பாண்டியர்களின் கலைப்பாணியாகும். கோபுரத்தையொட்டி இடதுபுறம் விநாயகர் சன்னதியைக் காணலாம். முன்மண்டபத்தின் கிழக்கு நோக்கிய சன்னதியில் பானு உமாபதீஸ்வரர் (சிவலிங்கம்) அருள்பாலிக்கிறார். இதையடுத்து அர்த்தமண்டபம் மற்றும் சத்யபுஷ்கரணி எனும் கோவில் குளம் அமைந்துள்ளது. விநாயகர், துர்க்கை, கஜலக்ஷ்மி, முருகன் ஆகிய தெய்வங்களுக்கு மண்டபத்தின் மேற்குப்பக்கம் (பானு உமாபதீஸ்வரர் சன்னதிக்குப் பின்னால்) சன்னதிகள் உள்ளன. மண்டபத்தின் கிழக்குப் பகுதியில் இராஜராஜேஸ்வரி அம்மன், பைரவர் ஆகியோருக்கு சன்னதிகளும், கருவறையை ஒட்டி அர்த்தமண்டபங்களும் உள்ளன. நவக்கிரகங்களுக்கான சன்னதியும் இங்கு உள்ளது. இதுமட்டுமின்றிக் கொடிமரம் மற்றும் நந்தி, சூரிய-சந்திரர் திருமேனிகளையும் இங்குக் காணலாம். விஜயநகர மன்னர்களின் காலத்தைச் சேர்ந்த இந்தச் சன்னதிகளின் தொகுப்புக் கீழக்கோவில் என்றறியப்படுகிறது. இம்மண்டபத்தின் தரையில் பல கல்வெட்டுகளைக் காணலாம்.

இதையொட்டி அமைந்துள்ள மற்றொரு மண்டபத்தை அடையப் படிக்கட்டுகள் உள்ளன. இம்மண்டபத்தில் அம்பாள் வேணுவனேஸ்வரி (பார்வதி) கிழக்குப் பார்த்த தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறார். அம்பாளின் கருவறையை ஒட்டி அமைந்துள்ள அர்த்தமண்டபத்தை இரண்டு துவாரபாலகர்கள் காவல்புரிகிறார்கள். இவை பிற்காலப் பாண்டியர் (கி.பி.13ஆம் நூற்றாண்டு) காலத்தைய கட்டமைப்புகள் ஆகும். முன்மண்டபத்தில் அமைந்த தூண்களில் விளக்கு நாச்சியார்கள் என்னும் விளக்கேந்திய பெண்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் தெற்குப் பிரகாரத்தில் வெண்கலத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த மண்டபத்தின் வடக்குப்புறத்தில் மெய்யமலையின் பாறை அமைந்துள்ளது. இந்த பாறைச் சுவற்றில்தான் அழிக்கப்பட்ட இசைக்கல்வெட்டும் அதன் மேல் அப்பண்ணா தண்டநாயகர் தலையேற்ற மெய்யம் சபையின் (தீர்ப்பாயத்தின்) தீர்ப்பும் பொறிக்கப்பட்டுள்ளன. தென்னிந்தியாவின் நீளமான கல்வெட்டுகளில் இதுவும் ஒன்று.

இந்த மண்டபத்தின் மேற்குச் சுவரையொட்டி, சற்று மேலே, சத்தியகிரீஸ்வரருக்குக் குடைவரை அமைந்துள்ளது. குடைவரையை ஒட்டி பிற்கால கட்டுமானமாகச் செவ்வக வடிவ அர்த்தமண்டபம் அமைந்துள்ளது. அர்த்தமண்டப பொதிகை மற்றும் உத்திரத்தைப் பருத்த, நான்முகக் குட்டைத் தூண்களும், தெற்கில் இரண்டும், வடக்கில் நான்குமாய் அமைந்த அரைத்தூண்களும் தாங்குகின்றன.

அர்த்தமண்டபத்தில் தாய்ப்பாறையில் செதுக்கிய நந்தி இலிங்கத்தைப் பார்த்தபடி அமர்ந்துள்ளது. கருவறைக்கு எதிரில் அர்த்தமண்டபத்தில், நிலத்திலிருந்து மேல்வரை நிற்பது போல் உள்ள முற்காலத்தைய  லிங்கோத்பவரின் மாபெரும் சிற்பம் கண்களைவிட்டு அகலாது. விநாயகர் திருமேனியும் புடைப்புச் சிற்பமாகக் காட்சி தருகிறது. இக்கருவறைக்கு அர்த்தமண்டபத்தின் பக்கவாட்டில் அமைந்த நுழைவாயில் வழியாகச் செல்லலாம்.

lingodhbava

லிங்கோத்பவர்

அர்த்தமண்டப நுழைவாயிலில் ஆஜானுபாகுவான தோற்றத்துடன் இரண்டு துவாரபாலகர்கள் காவல் புரிகிறார்கள். இவர்கள் சிவனுடைய ஆயுதங்களைத் தாங்கிய சிவ-துவாரபாலகர்கள். முத்தரையர்கள் சிற்பப்பாணியில் செதுக்கப்பட்டுள்ள இரண்டு துவாரபாலகர்களும் குன்னாண்டார் கோவில் துவாரபாலகர்களை நினைவுபடுத்துகிறார்கள்.

thirumayam-11

திரிசூலதேவர்

வலதுபுற துவாரபாலகர் திரிசூலதேவர் ஆவார். இவர் மேடையில் வலது காலை ஊன்றியும் இடது காலை ஸ்வஸ்திக வடிவில் தூக்கியுள்ளார். தலையில் ஜடாபாரம், இடையில் கச்சை மற்றும் இடுப்புப் பட்டை அணிந்துள்ளார். இடுப்புப் பட்டை நடுவில் ஒரு கிளிப்புடன் இணைக்கப்பட்டு இடுப்பு ஆடையின் திரண்ட முடிச்சு இடதுபுறம் தொடைவழியே தொங்குகிறது. கனத்த இடுப்பு ஆபரணங்கள், உபவீதமாக யஞ்யோபவிதம், உதரபந்தம், சரப்பளி, கைவளை, தோள்வளை, பத்ரகுண்டலம், வலது கை விரலில் மோதிரம் எல்லாம் அணிந்துள்ளார். இவருக்குப் பின்னால் தோள்களுக்கு மேல் சூலம் காட்டப்பட்டுள்ளது. இடதுபுறம் ஊன்றிய பாம்பு சுற்றிய தடியை இவரது வலது கை பற்றியுள்ளது. இடதுகை கஜமுத்திரை காட்டியபடி இடப்புறம் நீண்டுள்ளது. கம்பீரமாக முறுக்கிய மீசை, கனத்த புருவங்களுடன் தோன்றும் இவர் புன்னகையும் காட்டுகிறார்.

thirumayam-15

மழுவடியார்

இடதுபுற துவாரபாலகர் மழுவடியார் ஆவார். இவர் இடப்புற கோட்டத்தின் மேடையில் இரண்டு கால்களையும் தரையில் ஊன்றியுள்ளார். தலையின் நடுவில் மழுவுடன் அமைந்த ஜடாபாரம், வலது செவியில் பத்ரகுண்டலம், இடதுசெவியில் பூட்டுக்குண்டலம், கழுத்தில் கல்பதித்த சரப்பளி, உபவீதமாக மணியுடன் கூடிய யஞ்யோபவிதம், உதரபந்தம்,கைவளை, தோள்வளை, வலது கை விரலில் மோதிரம் எல்லாம் அணிந்துள்ளார். இடையில் ஆடை கற்றையாய் சுருக்கிஇடுப்புப் பட்டையுடன் இணைக்கப்பட்ட முடிச்சு இடதுபுறம் தொடைவழியே தொங்குகிறது. இடது கை இடைக்கட்டின்மேலும், வலது கை இறைவனைத் துதித்தவாறும் உள்ளன.

இந்த துவாரபாலகர்களில் ஒருவர் அரசன் அல்லது குறுநில மன்னனாக இருக்கலாம் என்று கே.ஆர்.ஸ்ரீநிவாசன் கருதுகிறார். இவர் கூற்று ஊர்ஜிதமற்ற அனுமானம் என்று தெரிகிறது.

சதுரமாக அமைந்த சத்தியகிரீஸ்வரர் குடைவரைக் கோயிலின் கிழக்கு நோக்கிய கருவறையின் நடுவில் காட்சி தரும் சத்தியகிரீஸ்வரரின் இலிங்கத் திருமேனி தாய்ப்பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. இலிங்கத்தின் சிறிய கோமுகத்தை சீறும் சிங்கம் தாங்குகிறது.

குடைவரையின் காலம்

இக்குகைக் கோவிலில் காணப்படும் 13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டே காலத்தால் பழைமையானது என்றாலும் பரிவாதிநிதா என்னும் இசைக்கல்வெட்டு இக்குடைவரையின் காலத்தைச் சற்று பின்னோக்கி காட்டுகிறது (திருமெய்யம் கல்வெட்டு: பரிவாதிநி எஸ். இராமச்சந்திரன். சொல்வனம்). எனவே இக்குடைவரை கி.பி. ஏழாம் நூற்றாண்டின் நான்காவது காலாண்டிலிருந்து கி.பி. எட்டாம் நூற்றாண்டின் இரண்டாம் காலாண்டிற்குள் அகழப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். எனவே இக்குடைவரை தமிழ்நாட்டின் மிகப்பழைய குடைவரைகளில் ஒன்று எனலாம்.

கல்வெட்டுகள்

சத்தியமூர்த்தி-திருமெய்யர் குடைவரையை ஒப்பிடும்போது சத்தியகிரீஸ்வரர் குடைவரைக் கோவிலில் நிறையக் கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன.

inscription

குடைவரை PC: Varalaru.com

எண் 5 புதுக்கோட்டை மாநில (சமஸ்தான) கல்வெட்டுகள். குடைவரையின் வடக்குச் சுவற்றிலிருந்து சம்ஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழிகளில், பல்லவ கிரந்தம் மற்றும் தமிழ் லிபி வடிவங்களைக் கொண்டு பொறிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டு படியெடுக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு மலைக்கோவிலில் காணப்படும் கல்வெட்டின் பிரதியாகும். பரிவாதிநிதா என்னும் ஏழு தந்திகளையுடைய யாழைப் புகழ்ந்தும், இதை மீட்டுவது பற்றி அறிவுறுத்தியும் இக்கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது. (திருமெய்யம் கல்வெட்டு: பரிவாதிநி எஸ். இராமச்சந்திரன். சொல்வனம்)

எண் 386 கல்வெட்டு ஆண்டு அறிக்கை (Annual Report on Epigraphy) / 7-A தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 12. குடைவரையின் வடகிழக்குச் சுவரிலிருந்து சமஸ்கிருத மொழியில், பல்லவ கிரந்த லிபி வடிவங்களைக் கொண்டு பொறிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டின் காலம் கி.பி.7ஆம் நூற்றாண்டு ஆகும். காந்தாரம், பஞ்சமம், தைவதம் ஆகிய இசைக் குறிப்புகளைப் படிக்க முடிகிறது. இசைக் குறிப்பின் பிரிவுகள் மற்றும் உட்பிரிவுகள் எல்லாம் குறிப்பிட்ட வரிசையில் அமைக்கப்பட்டுள்ளதையும் காணலாம். எதிர்பாராதவிதமாக இசைக் குறிப்பின் சில உட்பிரிவுகள் அழிந்துபோய் இந்த அமைப்பைப் பின்பற்றுவது மிகவும் கடினமாயுள்ளது. இந்தப் பதிவு குடுமியான்மலைக் கல்வெட்டின் எழுத்தமைதியை ஒத்திருக்கின்றன. எனவே இக்கல்வெட்டு முதலாம் மகேந்திரவர்மப் பல்லவனின் காலத்தைச் சேர்ந்ததாயிருக்கலாம்.

எண் 391 கல்வெட்டு ஆண்டு அறிக்கை (Annual Report on Epigraphy) 1906. குடைவரையின் உள்ளே இடதுபுறம் பொறிக்கப்பட்டுள்ள கி.பி. 1004 ஆம் ஆண்டுத் தமிழ்க் கல்வெட்டு இது. முதலாம் இராஜராஜனின் 19 ஆம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட முற்றுப்பெறாத கல்வெட்டாகும்.

எண் 390 கல்வெட்டு ஆண்டு அறிக்கை (Annual Report on Epigraphy) 1906. குடைவரையின் உள்ளே இடதுபுறம் பொறிக்கப்பட்டுள்ள கி.பி. 1033 ஆம் ஆண்டுத் தமிழ்க் கல்வெட்டு இது. முதலாம் இராஜேந்திரனின் 21 ஆம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது.

எண் 387 கல்வெட்டு ஆண்டு அறிக்கை (Annual Report on Epigraphy) / எண் 340 புதுக்கோட்டை மாநில (சமஸ்தான) கல்வெட்டுகள். குடைவரை மண்டபத்தின் தென்புறம் 47 வரிகளுடன் பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டு 1245 ஆம் ஆண்டு மே மாதம் 07 ஆம் தேதி, இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் ஏழாம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது. இந்த நீண்ட ஆவணம், நாடுகள், நகரங்கள், கிராமங்கள் மற்றும் கான நாடு சமய மந்திரி என்ற விருதராஜ-பயங்கர-வளநாடு, நாட்டின் காவலை மேற்கொள்ளும் அரையகள், மற்றும் மெய்யம் நாட்டின் ஸ்ரீருத்ரமகேஸ்வரர், நல்லடியறியும்-பெருமாள் ஐராவனமுதலியார், தவலைக்கோயில்-வாசர்-பிச்சமுதலியார் மற்றும் பாண்டி-நாட்டின் ஸ்ரீவைஷ்ணவர்கள், திருமெய்யத்தின் ஸ்ரீவைஷ்ணவர்கள் மற்றும் ஸ்ரீமகேஸ்வரர்கள், திருமலை நாட்டின் திருக்கொடுங்குன்றம் கோயிலின் ஸ்ரீருத்ர ஸ்ரீ மகேஸ்வரர்கள் மற்றும் திருமெய்யத்தின் வைஷ்ணவ அனுசந்தானம் ஆகியோர் கலந்துகொண்ட பெரும் சபையார் கூட்டத்தில் நிறைவேறிய தீர்மானங்களைப் பட்டியலிடுகிறது. இந்தப் பெரும் சபையாரின் கூட்டத்தைத் தலைமையேற்று நடத்தியவர் அப்பண்ண தண்ட நாயகர் ஆவார். அப்பண்ண தண்ட நாயகர், ஹொய்சள வீர சோமேஸ்வராவின் ரவிதேவர் தண்ட நாயக்கரின் மைத்துனராவார். இந்தத் தீர்வின் முதல் தீர்மானம், பல காலமாக நிலவி வந்த பூசலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, இந்தக் கிராமத்தின் கடமையை (வரியை) பிரித்துக்கொள்ளுவது பற்றிக் கூறுகிறது. ஐந்தில் இரண்டு பங்கு கடமை சிவன் கோவிலுக்கும், மீதி பெருமாள் கோவிலுக்கும் பிரிக்கப்பட்டது. மற்ற தீர்மானங்கள் தேவதான நிலத்தைப் பரஸ்பரமாகப் பரிமாறிக் கொள்ளுவது பற்றியும், இரு கோவில்களும் பொதுவாக ஒரே திருக்கோவில் மதிற்சுவர்களைப் பகிர்ந்து கொள்ளவும், திரிசூலக்கல் மற்றும் திருவலிக்கல் நட்டு எல்லைகளை நிர்ணயித்துக் கொள்ளவும், திருக்குளங்களையும், கிணறுகளையும் முறையாகப் பகிர்ந்து கொள்ளவும், கோவில் நிலங்களை முறையாகப் பிரித்துக் கொள்ளவும், இரு கோவில்களுக்கான புழங்கும் இடங்களை முறைப்படுத்திக் கொள்ளவும், தனிமனிதர்களின் உரிமைகள் மற்றும் இரு கோவில்களிலும் கல்வெட்டுகளை அழித்து மீண்டும் பொறித்துக் கொள்ளவுமான உரிமைகளைப் பற்றியும் பதிவு செய்கின்றன.  இந்தக் கல்வெட்டில் பல அலுவலர்கள் சான்றளித்துள்ளனர்.

எண் 341 புதுக்கோட்டை மாநில (சமஸ்தான) கல்வெட்டுகள். திருக்குளத்தின் வடக்குப்புறம் அமைந்துள்ள பாறையில் 52 வரிகளில் 1245 ஆம் ஆண்டு மே மாதம் பொறிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டு மேற்படி அப்பண்ண தண்ட நாயகரின் தீர்ப்பின் பிரதியாகும்.

எண் 392 கல்வெட்டு ஆண்டு அறிக்கை (Annual Report on Epigraphy) 1906. குடைவரையின் மேற்குப்புறம் பொறிக்கப்பட்ட இரண்டாம் சுந்தரபாண்டியன் தமிழ்க் கல்வெட்டு எண் 387 கல்வெட்டு ஆண்டு அறிக்கையுடன் (Annual Report on Epigraphy) 1906 இணைந்தது.

எண் 389 கல்வெட்டு ஆண்டு அறிக்கை (Annual Report on Epigraphy) மற்றும் எண் 467 புதுக்கோட்டை மாநில (சமஸ்தான) கல்வெட்டுகள். குடைவரையின் வலப்புற நுழைவாயிலில் பொறிக்கப்பட்ட இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் எட்டாம் ஆட்சியாண்டு தமிழ்க் கல்வெட்டுத் திருமெய்யம் சபை என்ற கான நாடு பிரம்மதேயத்தின் நிர்வாகத்தின் கீழுள்ள கோவிலுக்கு நெல் வழங்குவதற்காகத் தேவதானமாக அளிக்கப்பட்ட நிலக்கொடை பற்றிப் பதிவு செய்கிறது. முதலாம் இராஜராஜதேவனின் சமந்தர்களில் ஒருவரிடமிருந்து இந்தக் கணக்கில் 10 பழங்காசுகள் வரவு வைக்கப்பட்டுள்ளது.

எண் 388 கல்வெட்டு ஆண்டு அறிக்கை (Annual Report on Epigraphy) மற்றும் எண் 472 புதுக்கோட்டை மாநில (சமஸ்தான) கல்வெட்டுகள். குடைவரையின் தென்புற சுவரில் நுழைவாயிலில் 44 வரிகளுடன் பொறிக்கப்பட்ட இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் பதினோராம் ஆட்சியாண்டு தமிழ்க் கல்வெட்டு விருதராஜபயங்கர வளநாடு என்னும் கான நாட்டின் பிரம்மதேய தேவதானத்தின் திருமெய்யம் சபையார் கோவிலில் முரசடிக்கும் பணியில் இருந்த உவச்சனுக்கு அளிக்கப்பட நிலக்கொடை பற்றிப் பதிவு செய்கிறது. மேற்கண்ட நிலத்தை இந்தச் சேவைக்காக பிரித்து அளிப்பதற்கான தீர்மானத்திற்கு திருவேங்கட நாட்டு நம்பி நடுவராகப் பணியாற்றியுள்ளார். சைவர்களுக்கு வைணவர்களுக்கு இடையிலான பூசலைத் தீர்த்தபின்பு இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருவிழாக்கள்

சித்திரைத் திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். ஆடிப்பூரம் பத்து நாட்கள் நடைபெறும். தைப்பூசம் ஒரு நாள் உற்சவம். பவுர்ணமி கிரிவலம் சிறப்பு.

திருமயம் மலைக்கோட்டை

கி.பி. 16-17 ஆம் நூற்றாண்டுகளில் திருமயம் இராமநாதபுரம் சேதுபதிகளின் வடக்குப் பிரதேசங்களின் புறக்காவல் நிலையமாக (northern outpost of the territories) மாறியது. இந்தப் பிரதேசங்களைப் பல்லவராயர்கள் (Pallava-rayar-s) நிர்வகித்தனர். திருமயம் மலைக்கோட்டை (Thirumayam Fort) கிழவன் சேதுபதி என்று பலராலும் அறியப்பட்ட விஜயரகுநாத சேதுபதி (கி.பி.1663-1708) என்பவரால் கட்டப்பட்டது. இந்தக் கோட்டை திருமயம் பகுதியில் விஜயநகர வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு கட்டப்பட்டிருக்கலாம்.

p1070978

திருமயம் மலைக்கோட்டை PC:Wikimedia

எதிரிகளிடமிருந்து தன் நாட்டைப் பாதுகாக்க அளவில் சிறியதாய் வட்ட வடிவில் வடிவமைக்கப்பட்டு, ஏழு சுற்று மதில்களால் உருவாக்கப்பட்ட இக்கோட்டையில் இன்று மூன்று சுற்று மதில்களை மட்டும் காண முடிகிறது. வெளிச்சுற்று மதில்கள் சிதைந்த நிலையில் உள்ளன. உள்சுற்று மதில்கள் இன்றும் கட்டுக்கோப்பாக உள்ளன. உட்கோட்டை கருங்கல் மதிற்சுவர்களின் மேலே செங்கல் மற்றும் சுண்ணாம்பால் ஆன கைபிடிச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இங்கு ஆயுதங்களை வைப்பதற்கும், படைவீரர்கள் மறைந்து கொண்டு தாக்குவதற்கும் போதிய வசதிகள் உள்ளன.  உட்கோட்டைக்குச் செல்லும் பாதி வழியில் வலது பக்கத்தில் பாறையில் குடையப்பட்ட அறை (குகை) காணப்படுகிறது.

இக்கோட்டையைச் .சுற்றி ஆழமான அகழிகள் இருந்துள்ளன. அகழிகள் இருந்ததற்கான அடையாளங்களை இன்றும் காணலாம். பல இடங்களில் அகழிகள் தூர்ந்து போய்விட்டன. குறைவான அளவில் கோட்டைக் காவல் அரண்கள் (bastions) கொண்ட இம்மலைக்கோட்டையின் உச்சியில் காவல் அரணாக 20 அடி நீளம் கொண்ட ஓர் உயர்ந்த மேடை அமைக்கப்பட்டு ஆங்கிலேயர்காலப் பீரங்கி ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

27701276

பீரங்கி மேடை

திருமயம் மலைக்கோட்டைக்குள் நுழைய மூன்று நுழைவாயில்கள் உள்ளன. இவை முறையே தெற்கு, தென் கிழக்கு மற்றும் வடக்குத் திசைகளில் அமைந்துள்ளன. கோட்டையின் தெற்கு நுழைவாயில் அருகே இரண்டு பீரங்கிகள் உள்ளன. இந்த மூன்று நுழைவாயில்களில் வடக்கு வாயிலைப் பைரவரும், தென்கிழக்கு வாயிலைக் கறுப்பரும், தெற்கு வாயிலை அனுமான், சக்தி கணபதி ஆகிய காவல் தெய்வங்கள் காவல் காத்து வந்துள்ளன. இன்றும் இக்கோயில்களில் வழிபாடுகள் நடந்து வருவது சிறப்பு.

கோட்டை வளாகத்தின் சிறிய குடைவரைக் கோவில்

ஊரின் மேற்குப் பகுதியில் ஒற்றை அறையுடன் குகை வடிவில் அகழப்பட்ட குடைவரைக் கோவில் ஒன்று சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. குடைவரைக் கோவிலிலுள்ள தரையின் நடுவில் தாய்ப்பாறையில் ஒரு சிவா இலிங்கம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த இலிங்கத்தின் ஆவுடை சதுரவடிவமாக அமைந்துள்ளது சிறப்பு. குகையின் நுழைவாயிலில் பக்கத்திற்கொன்றாக இரண்டு அரைத்தூண்களும் மேலே விட்டமும் அமைந்துள்ளன. குகைக்குச் செல்ல இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையினர் இரும்பில் ஏணிப்படிக்கட்டுகள் அமைத்துள்ளனர்.

thirumayam-fort

சிவன் குடைவரை

உட்கோட்டைக்கு ஊரின் மேற்குப் பகுதியிலிருந்து இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையால் பாதுகாக்கப்படுகின்ற நுழைவாயில்கள் உள்ளன.

வேலைநேரம் / நுழைவுக்கட்டணம்

வரலாற்றுச் சின்னமாக இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையால் பாதுகாக்கப்படும் இக்கோட்டை திறந்திருக்கும் நேரம்: காலை 08.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.

நுழைவுக் கட்டணம்: இந்தியர்கள்: 5/- ரூபாய்; வெளிநாட்டவர் 100/- ரூபாய். புகைப்படம் எடுக்க:  25/- ரூபாய்; வீடியோ எடுக்க 100/- ரூபாய்.

குறிப்புநூற்பட்டி

 1. திருமெய்யம் சுஜாதா தேசிகன் ஏப்ரல் 10, 2005
 2. திருமெய்யம் கல்வெட்டு: பரிவாதிநி எஸ். இராமச்சந்திரன். சொல்வனம்
 3. தொண்டைமான் மன்னர்களின் அரசியல் கோட்டையாக திகழ்ந்த திருமயம் மலைக்கோட்டை பொலிவு பெறுமா? தினகரன் டிசம்பர் 26, 2015 http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=186646
 4. வரலாற்றுச் சிறப்புமிக்க திருமயம் சத்தியம் மார்ச் 6, 2014 http://sathiyamweekly.com/?p=656
 5. Latha, V (2005). Cave Temples of Pandya Country: Art and Ritual. New Delhi. Sharada Publishing House. ISBN 8188934224
 6. Mahalingam, T V (1991). A Topographical List of Inscriptions in the Tamilnadu and Kerala States Vol VI. New Delhi. S Chand & Company Ltd.
 7. Rock-cut Siva temple, (Satyagirisvara temple) ASI http://asi.nic.in/asi_monu_tktd_tn_rockcutsiva.asp
 8. Rock-cut Vishnu temple (Satyamurthi Perumal temple) ASI http://asi.nic.in/asi_monu_tktd_tn_rockcutvishnu.asp
 9. Srinivasan, K R (1996). Temples of South India. New Delhi. National Book Trust of India. ISBN 8123718675
 10. Thirumayam. by Murugapandian Ramaiah. Pudukkottai.org June 14, 2002
 11. Thirumayam – The Land of Truth. Saurabh. Indian History and Architecture, April 11, 2011.
 12. Tirumayam Fort, Pudukkottai ASI http://asi.nic.in/asi_monu_tktd_tn_thirumayam.asp
 13. Thirumeyyam- 2. S.Sumitha. வரலாறு.காம் இதழ் 55, ஜனவரி 24 – ஃபிப்ரவரி 15, 2009
 14. Thirumeyyam- 3. S.Sumitha. வரலாறு.காம். இதழ் 56 , ஃபிப்ரவரி 24 – மார்ச் 15, 2009
 15. Thirumeyyam- 4. S.Sumitha. வரலாறு.காம். இதழ் 57, மார்ச் 24 – ஏப்ரல் 15, 2009
 16. Thirumeyyam- 4. S.Sumitha. வரலாறு.காம். இதழ் 58, ஏப்ரல் 26 – மே 20, 2009

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in கோவில், தொல்லியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

1 Response to திருமயம் சத்தியகிரீஸ்வரர் கோவில் மற்றும் மலைக்கோட்டை

 1. பிங்குபாக்: புதுக்கோட்டை மாவட்ட வரலாறு, தொல்லியல் நினைவுச் சின்னங்கள் மற்றும் சுற்றுலா | அகரம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.