வயநாடு கேரளா

வயநாடு என்பது மலைமேடுகள், பள்ளத்தாக்குகள், அடர்ந்த குளிர்ச்சியான இலையுதிர் காடுகள், பச்சைபசேலென்ற கிராமப்புறங்கள், அழகான நீர்வீழ்ச்சிகள், டீ மற்றும் காஃபித் தோட்டங்கள், வனவிலங்குகளின் சரணாலயங்கள், ஏரிகள் நிறைந்த, மனதிற்கினிய சில்லென்ற பருவநிலை நிலவும், சுற்றுலாத்தலமாகும். தனது இயற்கை அழகை நிலைநிறுத்தி வைத்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் மலைமாவட்டமான வயநாடு, புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களான ஊட்டி மற்றும் மைசூருக்கு நடுவில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் சுற்றுலாப்பயணிகள் சொர்க்கம் எனலாம். இம்மலைப் பிரதேசம் எத்தகைய எழில்மிக்கது என்பதைக் காண விரும்பினால் ஒருமுறை வயநாட்டுக்கு நேரில் சென்று வாருங்களேன்! இதன்பிறகு ஆண்டுதோறும் அங்கே போய்வருவீர்கள் என்பது உறுதி.

வயநாட்டில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன. முதன்முறையாக வயநாட்டுக்கு வருவோர் வயநாட்டில் ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிக்குச் செல்லும் தூரம் அதிகம் என்பது தெரிந்திருக்காது. இதனால்தான் இவர்கள் பயணத்தில் நிறைய நேரம் சாலைகளிலேயே கழிந்துவிடுகிறது. சுற்றுலா மையங்களில் குறைவான நேரத்தை மட்டும் செலவிட வேண்டியுள்ளது. இவர்கள் செல்ல விரும்பும் சுற்றுலாத் தலங்களுக்கு அருகிலேயே ஹோட்டல் அல்லது ரெஸார்ட்டைத் தேர்ந்தெடுக்காமல் தொலைவில் தேர்ந்தெடுப்பதால் நிறைய நேரம் விரயமாகிறது. வயநாடு சுற்றுலாவிற்குத் திட்டமிடும்போதே வயநாட்டின் மனத்தைக் கவரும் எழில்மிகு சுற்றுலாத் தலங்கள் மற்றும் இவற்றின் அருகில் அமைந்துள்ள தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், ரிஸார்ட்டுகள் பற்றியெல்லாம் தெரிந்துகொண்டால் நேர விராயத்தைத் தவிர்க்கலாம்.

இந்தப் பதிவில் வயநாட்டின் சுற்றுலாத்தலங்கள் அமைந்துள்ள இடங்களைக் கருத்தில் கொண்டு மூன்று முக்கியப் பகுதிகளாகப் பிரித்துத் தந்துள்ளேன். முதலாவது பகுதி சுல்தான் பத்தேரி – இங்குத் திப்புச் சுல்தானால் அழிக்கப்பட்ட சமணர்களின் ஜீனாலயம், அம்புகுத்தி மலையில் கற்காலத்தின் உன்னத நினைவு சின்னமாய்க் காட்சியளித்துக் கொண்டிருக்கும் எடக்கல் குகைகள் போன்ற வரலாற்றோடு தொடர்புடைய இடங்கள் உள்ளன. இரண்டாவது பகுதி கல்பேட்டா – இங்கிருந்து மீன்முட்டி அருவி, சூச்சிப்பாரா அருவி, கந்தப்பாரா அருவி, செம்பாரா சிகரம், பூக்கோட் ஏரி, பானாசுர சாகர் அணை எல்லாம் அருகருகே அமைந்துள்ளன. மூன்றாவது பகுதி மானந்தவாடி – பழசி ராஜாவின் மண்டபம் ஒன்று இந்நகரின் மையத்தில் அமைந்துள்ளது.

2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 7,80,619 ஆகும். பரப்பளவு 2131 சதுர கி.மீ (823 சதுர மைல்) ஆகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கல்பெட்டா (Malayalam: കൽപ്പറ്റ) (அமைவிடம் 11°36′18″N அட்சரேகை 76°04′59″E தீர்க்கரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து இவ்வூரின் உயரம் 780 மீட்டர் (2,560 அடி) என்ற நகரம் ஆகும். இது ஒரு நகராட்சியும் ஆகும். சுல்தான் பத்தேரி (Malayalam: സുൽത്താൻ പതിരി) (அமைவிடம்11°40′N அட்சரேகை 76°17′E தீர்க்கரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 907 மீட்டர் (2,976 அடி), மானந்தவாடி (Malayalam: മാനന്തവാടി) (அமைவிடம்11°48′N அட்சரேகை 76°0′E தீர்க்கரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 760 மீட்டர் (2,490 அடி) ஆகியவை பெரிய நகரங்களாகும். கோழிக்கோடு – மைசூர் தேசிய நெடுஞ்சாலை 212 (என்.எச்.212) வயநாடு மாவட்டத்தின் வழியாகச் செல்கிறது. பந்திப்பூர் தேசியப் பூங்கா வழியே தொடரும் இந்த நெடுஞ்சாலை வழியே இரவில் செல்வதற்கு 2009 ஆம் ஆண்டு முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இப்பகுதி மாயாசேத்திரம் என்று வழங்கப்பட்டதாகப் பழைய குறிப்புக்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம். மாயாசேத்திரம் என்பது மாயநாடாகித் தற்போது வயநாடு என்று மருவியுள்ளது என்பது ஒரு சிலரின் கருத்து. வயல்கள் நிறைந்த நாடு என்ற பொருளிலேயே வயநாடு என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்று உள்ளூர் மக்கள் நம்புகிறார்கள். பெயருக்கேற்பக் கேரளாவின் வயல்கள் நிறைந்த மாவட்டம் என்பது உண்மை. இம்மலைமாவட்டத்தின் மலைப்பாங்கான பகுதிகளில் பலபழங்குடியினர் வாழ்ந்துவருகின்றனர்.

சுல்தான் பத்தேரி

சுல்தான் பத்தேரி ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரம். கணபதிவடம் என்பது இந்நகரின் பழைய பெயராகும். மைசூரின் புலி என அழைக்கப்பட்ட திப்பு சுல்தான் இந்த நகரத்தை நோக்கிப் படையெடுத்து வந்தார். இங்குள்ள ஜீனாலயத்தில் தன் பீரங்கிப் படையை நிறுத்தியிருந்தார். இந்தக் காரணத்திற்காகவே இந்நகரம் சுல்தான் பத்தேரி (பீரங்கிப் படை) என்னும் பெயரில் பரவலாக அழைக்கப்பட்டு வருகிறது. திப்பு சுல்தான் இங்குக் கோட்டை ஒன்றைக் கட்டியதாகச் சொல்லப்பட்டாலும் கோட்டை இருந்ததற்கான சிதைவுகளை இப்பகுதியில் காணமுடியவில்லை. இங்குள்ள தோட்டங்களில் மிளகு, கிராம்பு, ஏலக்காய் ஆகிய நறுமணப் பொருட்கள் அதிக அளவில் பயிரிடப்படுவதால் எப்போதும் நறுமணம் கமழும் பகுதியாகத் திகழ்ந்து வருகிறது. கேரளா-கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள இந்நகரின் நாலாபுறமும் அழகிய மலைகள் சூழ்ந்துள்ளன. கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலங்களின் பெங்களூர், மைசூர், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய நகரங்களோடு இந்நகரம் தேசிய நெடுஞ்சாலை மார்க்கமாக இணைக்கப்பட்டுள்ளது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தினந்தோறும் இந்நகருக்கு வருகை புரிகிறார்கள். கலாச்சார மையமாகவும் சுற்றுலா மையமாகவும் விளங்கும் இந்நகரில் சுற்றுலாத் துறை சுறு சுறுப்புப்பாகச் செயல்படுகின்றது.

wayanad_072715045008

வயநாடு கல்பேட்டாவின் தென்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டம் PC: India Today

கிடங்கநாடு சமணர்களின் ஜீனாலயம்

temple_0

சுல்தான் பத்தேரி சமணர்களின் ஜீனாலயம் PC: Deccan Chronicle

கிடங்கநாடு சமணர்களின் ஜீனாலயம் கேரளாவில் உள்ள முக்கியமான சமணர்களின் ஜீனாலயங்களில் ஒன்று. பத்தேரி சமணர்களின் ஜீனாலயம் என்றும் இதனைக் குறிப்பிடுவார்கள். 13 ஆம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இக்கோவில் கட்டடக்கலையில் விஜயநகரப் பேரரசின் கட்டடக்கலை அம்சங்களைக் காணலாம். இக்கோவிலுக்குப் பலதரப்பட்ட வரலாற்றுப் பின்னணிகள் உள்ளன. முதலில் இது ஒரு கோவிலாக விளங்கியது. அடுத்து இது ஒரு வர்த்தக மையமாகச் செயல்பட்டுள்ளது. இறுதியில் திப்பு சுல்தானின் படையினரால் ஒரு ஆயுதக்கிடங்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வூர் சுல்தான் பத்தேரி என்ற பெயரில் அழைக்கப்படுவதற்கு இதுவே காரணமாகும். கல்பேட்டாவிலிருந்து 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அருகில் உள்ள நகரம் மானந்தவாடி.

எடக்கல் குகைகள் (Malayalam: ഇടക്കൽ ഗുഹകൾ)

edakkal_caves20131031104210_335_1

எடக்கல் பாறைச் செதுக்கல்கள் (Petroglyphs) PC: Kerala Tourism

அம்புகுத்தி மலை (Malayalam: അമ്പുകുത്തി മല) வயநாட்டில் சுல்தான் பத்தேரிப் நகரிலிருந்து 12 கி.மீ. தொலைவில், அம்பலவாயில் என்னும் இடத்தின் அருகே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மலையாகும். இம்மலையில் எடக்கல் (இடையில் உள்ள கல்) குகைகள் (Malayalam: ഇടക്കൽ ഗുഹകൾ) அமைந்துள்ளன.

அம்புகுட்டி மலை குறித்துப் பல கதைகள் வழங்கப்படுகின்றது. ஸ்ரீ ராமனின் குமாரர்களான லவா குசா இரட்டையர்கள் எய்த அம்பில் இந்த மலை உருவானதாக ஒரு கதை சொல்கிறது. மற்றோரு கதை இராமன் சூர்பனகையைக் கொன்றதும் இம்மலையில்தான் என்று சொல்கிறது.

எடக்கல் குகைகளைக் காணாமல் உங்கள் வயநாடு சுற்றுலா முற்றுப்பெறாது. அமைவிடம் 11°37′28.81″N அட்சரேகை 76°14′8.88″E தீர்க்கரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து 1,200 மீ (3,900 அடி) உயரத்தில் உள்ளது. இக்குகைகளை அடைய மலையேறிச் செல்லவேண்டும். சிரமப்பட்டு மலையேறிவிட்டால் உங்கள் முயற்சிக்கு மதிப்பு உள்ளது.

இந்த இரண்டு குகைகளும் வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் வாழ்ந்த மனித இருப்பின் சுவடுகளாக அறியப்படுகின்றன. குகையின் கீழ்ப்பாகத்தில் பாறைச் செதுக்கல்களும் (Petroglyphs), மேற்பகுதியில் தமிழ் பிராமி எழுத்துக்களும் உள்ளன. இந்தக் குகைகளின் சுவர்களில் நீங்கள் பல்வேறு விலங்குகள் மற்றும் மனிதர்களின் உருவங்கள், பழங்கால ஆயுதங்களின் வடிவங்கள், குறியீடுகள் போன்றவை பாறைச் செதுக்கல்களாகப் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இந்தப் பாறைச் செதுக்கல்களின் காலம் நியோலிதிக் மனிதன் வாழ்ந்த காலம் (கி.மு. 6000 ஆண்டு) என்று கருதுகிறார்கள். இந்தக் குகையில் வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய மனிதன் இங்கு இருந்ததற்கான அடையாளமாகவும் கருதுகிறார்கள். எடக்கல் பாறைச் செதுக்கல்கள் அபூர்வமானது மட்டுமின்றித் தென்னிந்தியாவில் காணப்படும் ஒரே உதாரணம் எனலாம்.

ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் முந்தைய மலபார் மாநிலத்தின் (erstwhile Malabar state) காவல் துறையில் போலீஸ் சூப்பிரடென்ட் பதவியில் இருந்த ஃபிரெட் ஃபேசட் (Fred Fawcett) என்பவர் 1890 ஆம் ஆண்டு இந்த குகைகளைக் கண்டறிந்து உலகிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதே அதிகாரி 1894 ஆம் ஆண்டில் இக்குகையில், கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த, நான்கு தமிழ் பிராமி கல்வெட்டுகளைக் கண்டறிந்துளார். தமிழ் பிராமி கல்வெட்டுகள் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்றால் நம்புவது சற்று கடினம். ஒரு பிராமி கல்வெட்டில் காணப்படும் “சேர” (“கடுமி புதசேர”) என்ற சொல் காணப்படுகிறது. இத்தொடரில் சேர என்ற சொல்லை அடுத்து மரம் ஒன்று ப்ரைட் கீறலாக கீறப்பட்டுள்ளது.

1995 ஆம் ஆண்டிலும், 1996 ஆம் ஆண்டிலும் ஐராவதம் மகாதேவன், அப்பகுதிக்குச் செல்லும் உல்லாசப் பயணிகளின் கிறுக்கல்களால் பழுதுபட்டுப் போயிருந்த அக் கல்வெட்டைப் பார்வையிட்டதுடன் அதை வாசித்து வெளிப்படுத்தினார். “சேர”என்ற சொல்லுக்கான மிகமுற்காலத்திய கல்வெட்டு ஆதாரம் என்பதால் இக்கல்வெட்டு முக்கியத்துவம் பெறுகிறது.

‘ஓ பழமி’ என்று எழுதியிருந்ததை மலையாள கல்வெட்டறிஞர்கள் ‘இ பழம’ என்று மலையாளத்தில் எழுதியிருப்பதாக எவ்வளவோ திரிக்க முயன்றனர். ஐராவதம் மகாதேவனும் இந்தக் கருத்தை ஒப்புக்கொண்டார். .நல்லவேளையாக நடன காசிநாதன் அது தமிழே என்றும் அது தமிழ் தெய்வம் பழையோள் என்றும் நிறுவினார்.

கி.பி. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு வட்டெழுத்துக் கல்வெட்டுகளையும் இங்கு கண்டறிந்துள்ளனர். மற்றோரு கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமஸ்கிருதக் கல்வெட்டும் இங்கு கண்டறியப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு ஐந்தாவது பிராமி கல்வெட்டு ஒன்றைக் கள்ளிக்கோட்டையைச் சேர்ந்த கல்வெட்டறிஞர் ஒருவர் கண்டறிந்துள்ளார்.

எடக்கல் குகைகளுக்குச் செல்ல மாலை 3.50க்கு மேல் அனுமதி இல்லை. ஃபோட்டேவுக்குத் தனி டிக்கட். நுழைவுக் கட்டணம் உண்டு.

கல்பேட்டா

கல்பேட்டா, பின்புலமாகக் கம்பீரமான மலைகளின் அடியில், பச்சைப்பசேல் என்ற சூழலில், சுகமான தென்றல் தவழும் அழகிகான அமைதி நிறைந்த நகரம். வயநாட்டில் கடல் மட்டத்திலிருந்து 780 மீ. உயரத்தில் அமைந்துள்ள இந்நகரம் இயற்கையை ரசிப்பவர்களுக்கும், தேன்நிலவு செல்வோருக்கும் ஏற்ற இடம். காஃபித் தோட்டத்தில் ஒரு இனிய மனம் உங்களை மயக்கும். இதமான கிராமிய அழகினை இங்குள்ள சந்துகளில் காணலாம். இங்கு அமைந்துள்ள ஏராளமான கோவில்கள் இங்கு வரும் பக்தர்களுக்கு ஆன்மிக விருந்தாக அமைவது திண்ணம். கொஞ்சும் எழிலாலும் மனதிற்கினிய தட்பவெப்பத்தாலும் ஆசீர்வதிக்கப்பட்டு மந்தகதியில் இயங்கும் இந்நகரத்தை அவசியம் உங்கள் பயணத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

வானிலை: 20 டிகிரி செல்ஸியஸ். சிறந்த பருவம்: அக்டோபர் முதல் பிப்ரவரி வரை. கேரளாவின் 40 சுற்றுலாத் தலங்களில் இது 34 ஆவது இடத்தில் உள்ளது.

செம்பரா சிகரம் (Chembara Peak)

wayanad-1100x735

செம்பரா சிகரம்

misty-hills

இதயவடிவ ஏரி செம்பரா சிகரம்

இம்மாவட்டத்தில் உள்ள சிகரங்களிலேயே பெரிய சிகரம் செம்பரா சிகரம்தான். இச்சிகரம் கடல் மட்டத்திலிருந்து 2,100 மீட்டர் உயரத்தில் உள்ளது. செம்பரா உச்சிப்பகுதியில், இதய வடிவ ஏரி ஒன்று உள்ளது. மலையேற்ற சாகசப் பிரியர்களுக்கு விருப்பமான இடம். மாவட்டச் சுற்றுலா மேம்பாட்டுக் கவுன்சில், பயணிகளின் மலையேற்றுத்துக்குத் தேவையான குடில்கள், காலணிகள் மற்றும் டிரெக்கிங் உபகரணங்களை வழங்குகிறது. அதிகாலையில் சில்லென்றிருக்கும் சூழலில் செம்பரா சிகரத்தின் அருகில் உள்ள ஏரி வரை மலையேற்றம் செய்வது மனதிற்கினிய அனுபவம். குழுவாகவோ தனியாகவோ மலையேற்றம் செய்யலாம். கல்பேட்டாவிலிருந்து 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அருகில் உள்ள நகரம் மெப்பாடி.

லக்கிடி வியூ பாய்ண்ட் (Lakkidi View Point)

இது ஒரு சாலையோர வியூப் பாய்ண்டாகும். இயற்கை வனப்புடன்கூடிய அழகான பள்ளத்தாக்கைத் தெளிவான வானிலை நிலவும் சமயத்தில் இங்கிருந்து காணலாம். நகரத்திலிருந்து சிறிது நேரம் காரில் சென்றால் இவ்விடத்தை அடையலாம். சிறிது நேரம் உங்கள் காரைப் பார்க் செய்யலாம். பிறகு யூ டர்ன் எடுத்துத் திரும்புவது சற்று சவாலான அனுபவம். நிறையக் குரங்குகள் உள்ளன. கவனம் தேவை.

மீன்முட்டி அருவி (Meenmutty Falls)

meenmutil-water

PC: Begonia Residency

அடர்ந்த காட்டின் நடுவே கொட்டும் மீன்முட்டி அருவியைக் கண்டால் நீங்கள் திகைப்படையக்கூடும். 300 அடி உயரத்திலிருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் இந்த அருவி, கேரளாவின் இரண்டாவது பெரிய அருவி. பொங்கிப் பிரவாகிக்கும் அருவி நீர் மலை மேலிருந்து மூன்று படிகளைக் கடந்து விழுகிறது.  இந்தத் தண்ணீர்ப் பகுதியில் மீன்கள் நீந்த முடியாத அமைப்பு உள்ளதால், மீன்முட்டி அருவி என்று பெயர் பெற்றது. இயற்கையை ரசித்தபடி சுமார் 2.5 கி.மீ. தொலைவிற்குப் பாறைகளின்மீது ஏறிச் செல்வது சுகமான அனுபவம். பாணாசுரசாகர் அணைக்கட்டு இந்த அருவியின் அருகே அமைந்துள்ளது. கல்பேட்டாவிலிருந்து 29 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த அருவிக்குச் செல்ல நல்ல சாலை வசதி உள்ளது. அருகில் உள்ள நகரம் வடுவஞ்சல்.

பாணாசுர சாகர் அணை

650x433xbanasura-dam-wayanad-kerala

Banasura Dam PC: Banasura Hill Resort

இந்தியாவின் மிகப்பெரிய அணைகளுள் ஒன்றான பனாசுரா சாகர் அணை, வயநாடு மாவட்டத்தின் தென்பகுதியில் காரலாடு ஏரிக்கு அருகில் அமைந்துள்ளது. நீர்த்தேக்கங்களால் சூழப்பட்ட தீவுக்காட்சி, நம்மை வியப்பில் ஆழ்த்தும். இங்கு விரைவுப் படகு சவாரி வசதி உள்ளதால், அந்தத் தீவு பகுதிகளுக்குச் சென்றுவர முடியும். பாணாசுர சாகர் அணை வயநாட்டில் பெரிய மண் அணை. கல்பேட்டாவிலிருந்து 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அருகில் உள்ள நகரம் படிஜனத்தாரா.

சூச்சிப்பாரா அருவி (Soochipara Waterfall) என்ற சென்டினல் ராக் அருவி (Sentinel Rock Waterfall)

எழில் நிறைந்த சூச்சிப்பாரா அருவிக்குக் காவலாளிப் பாறை Sentinel Rock Waterfall என்ற பெயருமுள்ளது. தேயிலைத் தோட்டங்களையும், காடுகளையும் நடைப்பயணமாகக் கடந்து சென்ற பின்பு நன்கு அமைக்கப்பட்ட படி வழியே மலையேறிச் செல்லலாம். இறங்கும்போது கொஞ்சம் சிரமம் தோன்றலாம். எப்போது இங்கு செல்கிறீர்கள் என்பது முக்கியம். நவம்பர் முதல் வாரத்தில் மிகுதியான நீர்வரத்து இருந்தது. அடர்ந்தக் காட்டின் நடுவே அழகான நீர்வீழ்ச்சி. நீங்கள் நீரில் புகுந்து விளையாடலாம். மரங்களின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள குடில்களில் இருந்து சூச்சிப்பாறைப் பகுதியின் எழிலை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ரசிக்கலாம். சரியான சீசனில் சென்றால் மறக்கமுடியாத நினைவுகளை இங்கிருந்து கொண்டு செல்லலாம். கல்பேட்டாவிலிருந்து 23 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அருகில் உள்ள நகரம் மெப்பாடி.

கந்தன்பாரா அருவி (Kanthanpara Falls)

உள்ளதைக் கொள்ளைகொள்ளும் கந்தன்பாரா அருவி சுமார் 30 மீ. உயரத்திலிருந்து விழுவதைக் காணலாம். கல்பெட்டாவிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது. நல்ல சாலை வசதி உள்ளது. அருகில் உள்ள நகரம் மேப்பாடி.

சேத்தாலயம் அருவி

வயநாட்டிலுள்ள இன்னுமொரு அழகிய அருவியான சேத்தாலயம் சுற்றுலாப் பயணிகளைக் கவருவதாக உள்ளது. இது வயநாட்டின் வட பகுதியிலுள்ள சுல்தான் பாத்தேரியின் அருகில் அமைந்துள்ளது. மீன்முட்டி அருவியோடு ஒப்பிடும்போது இது சிறிய அருவியே ஆகும். அருவியும் அதைச் சுற்றியுள்ள இடங்களும் மலை ஏறுபவர்களுக்கும் பறவைகளைப் பார்க்க விரும்புகிறவர்களுக்கும் ஏற்ற இடமாக இருக்கும்.

வடுவஞ்சல் (கல்பேட்டா காட்சி)

கல்பேட்டாவிலிருந்து 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வாடுவஞ்சல், ஃபாண்டம் பாறை (Phantom Rock) மற்றும் சீனிகேரி மலை (Cheenigeri Mala) போன்ற பல கவர்ச்சி நிறைந்த இடங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அம்பலவாயில் நகரத்தை அடுத்து அமைந்துள்ள சீனிகேரி மலையில் மண்டையோட்டின் உருவ அமைப்பில் ஒரு பாறை நிற்கிறது. நீலிமலை வியூப் பாய்ண்ட் மற்றும் சேத்தாலயம் அருவி எல்லாம் இந்த இடத்திற்கு அருகில் அமைந்துள்ள மற்ற சுற்றுலாத் தலங்களாகும். இப்பகுதி அமைதிக்கும் நிசப்தத்திற்கும் பெயர்பெற்றது. ஃபாண்டம் பாறை கல்பேட்டாவிலிருந்து 26 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அருகில் உள்ள நகரம் மேப்பாடி . நீலிமலை வியூப் பாய்ண்ட் கல்பேட்டாவிலிருந்து 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அருகில் உள்ள நகரம் வடுவஞ்சல்.

நீலிமலை வியூ பாய்ண்ட்

கல்பேட்டாவிற்கு அருகில் அமைந்துள்ளது நீலிமலை. நீலிமலை வெவ்வேறு மலையேறும் வழிகளைக் கொண்டுள்ளதால் மலையேறுபவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் ஒரு இடமாகும். நீலிமலை உச்சியிலிருந்து மீன்முட்டி அருவிகள் மற்றும் அருகிலுள்ள பள்ளத்தாக்குகளைக் காண்பது சிலிர்ப்பூட்டும் காட்சிகளாகும்.

பூக்கோட் ஏரி

lakes-in-wayanad

பூக்கோட் ஏரி PC: Woodlands

பூக்கோட் ஏரி பசுமையான சூழலில் காடுகளின் நடுவில் இயற்கையாய் அமைந்த நன்னீர் ஏரியாகும். அருகில் உள்ள பலதரப்பட்ட மீன்களுடன் அமைந்த மீன்காட்சியகத்தைப் பார்ப்பது சுகமான அனுபவம். சுற்றுலாப் பயணிகளின் வசதியை முன்னிட்டு இந்த ஏரியில் படகுசவாரி அனுமதிக்கப்பட்டுள்ளது. சிறுவர் பூங்கா, கைவினைப் பொருட்களுக்கான ஷாப்பிங் சென்டர்கள் எல்லாம் இங்கு உண்டு.

குருவா தீவு என்ற குருவா துவீப்

kuruva20dweep

குருவா ஆற்றுத் தீவுத்திட்டு (Kuruva Island) PC: Kuruva Island Restaurants

கபினி ஆற்றில் மையத்தில் 950 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள குருவா ஆற்றுத் தீவுத்திட்டு (Kuruva Island), தீவுகளின் கூட்டமாகும் (cluster of islands). இப்பகுதி பசுமையான மரங்கள் நிறைந்த அடர்சோலையாகும். பல அரியவகைப் பறவைகளின் வசிப்பிடமான இப்பகுதியில், இயற்கையின் செழிப்பைக் காணலாம். மூங்கில் மிதவைப் படகுகள் மூலமே, இந்தத் தீவுத்திட்டுக்குப் பயணிகள் செல்ல முடியும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக் காரணமாக ஆண்டின் சில பருவங்களில் மட்டுமே, சுற்றுலாப் பயணிகள் இந்தத் தீவுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

மானந்தவாடி

மானந்தவாடி (மான் எய்த வாடி) வயநாடு மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமப் பஞ்சாயத்து நகரம் ஆகும். கல்பேட்டாவிலிருந்து வடகிழக்கில் 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. நல்ல சாலை வசதி உள்ளது. கபினி நதியின் துணை ஆறான மானந்தவாடிப் புழையின் கரையில் இவ்வூர் அமைந்துள்ளது. ஹோஸன்காடி என்ற பெயர் இவ்வூருக்கு வழங்கப்பட்டதாக வரடூரில் அமைந்துள்ள அனந்தநாதசாமி கோயிலின் செப்பேடு பதிவு செய்கிறது.

வானிலை: 20 டிகிரி செல்ஸியஸ். சிறந்த பருவம்: அக்டோபர் முதல் பிப்ரவரி வரை. கேரளாவின் 40 இடங்களில் இதுவும் ஒன்று. சுற்றுலாத் தலங்களில் 34 ஆவது இடத்தில் உள்ளது.

பழசி இராஜா கல்லறை மற்றும் நினைவு மண்டபம்

இப்பகுதி வயநாட்டின் சிங்கம் என்று பேர்பெற்ற பழசி இராஜா எனும் குறுநில தலைவனின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. இது ஆங்கிலேயர்களின் முக்கிய இராணுவக் கேந்திரமாகும். பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்கிலேயருடன் போரிட்டு உயிர்துறந்த சுதந்திரப் போராட்ட வீரர் இவர். இவருடைய கல்லறை மற்றும் நினைவு மண்டபம் இந்நகரின் மையத்தில் அமைந்துள்ளது.  இவ்விடத்திற்கு அருகில் புல்பள்ளி என்ற குகை உள்ளது. ஆங்கிலேயரிமிருந்து தப்பித்து இக்குகையில் ஒளிந்திருந்த பழசி இராஜாவை ஆங்கிலேயர்கள் இங்குதான் பிடித்தார்கள். கல்பேட்டாவிலிருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

திருநெல்லிக் கோவில் (Tirunelli Temple)

புராதான விஷ்ணு கோவில் 3000 அடி உயரத்தில் பிரம்மகிரியின் பக்கத்தில் அமைந்துள்ளது. பிரம்மன் இந்த கடவுளை நிறுவியுயுள்ளதாக நம்பிக்கை. பாபநாசினி என்ற புனித நீரோடை இங்கிருந்து பிரவாகித்து மரங்கள், மூலிகைச் செடிகள், மலர்கள் மற்றும் பாறைகளை எல்லாம் தாண்டி சலசலவென்று ஓடுகிறது. இந்த நீரோடையில் மூழ்கி எழுந்தால் பாபம் தொலையலாம் என்பது நம்பிக்கை. கல்பேட்டாவிலிருந்து 64 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அருகில் உள்ள நகரம் மானந்தவாடி.

பேகர் வனவிலங்கு சரணாலயம்

பேகர் தேசிய பூங்கா வயநாட்டில் அதிக சுற்றுலாப் பயணியர் வந்துசெல்லும் வன சரணாலயம் ஆகும். இங்கு அதிக அளவில் பலதரப்பட்ட விலங்கினங்கள் உள்ளன. வனவிலங்கு சரணாலயத்தைச் சுற்றிப் பசுமையான மரங்கள் அடர்த்தியாகச் சூழ்ந்துள்ளன. பல தாவரங்களுக்கு மருத்துவ குணங்கள் உண்டு. இங்கு மான், யானை, பன்றி, புலி, சிறுத்தை மற்றும் பறவையினங்கள் எல்லாம் உள்ளன. டிசம்பர் முதல் மார்ச் வரை சுற்றிப்பார்க்க உகந்த பருவநிலை இங்கு நிலவும். வன சரணாலயம் மானந்தவாடி என்ற இடத்தில் இருந்து, சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது. மானந்தவாடியில் இருந்து, சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள நாகர்ஹோல் வனவிலங்கு சரணாலயப் பகுதியிலும், பலவகை விலங்குகளின் நடமாட்டத்தைக் காண முடியும்.

வள்ளியூர்க்காவு கோவில்

வள்ளியூர்க்காவு கோவிலில் நடைபெறுவது தாய் தெய்வ வழிபாடாகும்; வனதுர்க்கை, ஜலத்துர்க்கை, பத்திரகாளி என்ற மூன்று பிரதான வடிவங்களில் வழிபாடு நடைபெறுகிறது. இம்மலை மாவட்டத்தின் பழங்குடியினர் வழிபாடு செலுத்தும் முக்கிய இடங்களில் இதுவும் ஒன்றாகும். மார்ச்-ஏப்ரல் மாதங்களில் 15 நாட்கள் இம்மாவட்டத்தின் பெரிய திருவிழாவாக இக்கோவிலில் கொண்டாடப்படுகிறது. கல்பேட்டாவிலிருந்து 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அருகில் உள்ள நகரம் மானந்தவாடி.

கலைக்கண்காட்சி கூடம்

இங்கு கலை விழாக்கள் நடைபெறுவது வழக்கம். மைசூர் ரோட்டில் அமைந்துள்ள கேரள லலிதகலா அகாடெமியின் கலைக்கூடம் இங்கு கலைக் கண்காட்சிகளை தொகுத்தளிக்கிறது. இக்கண்காட்சியில் பலதரப்பட்ட கலைஞர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

பக்ஷிப்பத்தாலம்

பக்ஷிப்பத்தாலம் கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பிரம்மகிரிக் குன்றுகளில் உள்ள அடர்ந்த காடுகளின் நடுவே அமைந்துள்ளது. இந்தப் பகுதிப் பாறைகளும் மிகப்பெரிய குன்றுகளும் நிறைந்தவையாக இருக்கும். இங்குள்ள மிகவும் ஆழமான குகைகள் பல்வேறு காட்டுப் பறவைகள், விலங்குகள் மற்றும் வெவ்வேறு வகையான தாவரங்கள் ஆகியவற்றின் வாழிடமாக உள்ளன. பக்ஷிப்பத்தாலம், மனந்தாவடியில் அமைந்துள்ளது. இப்பகுதிக்குச் செல்வதற்கு திருநெல்லியிலிருந்து 7 கி.மீ மேலே ஏறிச் செல்ல வேண்டியுள்ளது. பக்ஷிப்பத்தாலத்தைப் பார்க்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் வடக்கு வயநாட்டிலுள்ள DFO விடம் அனுமதி பெற வேண்டும்.

வயநாடு செல்ல

வயநாடு மைசூர், பெங்களூரு மற்றும் கள்ளிக்கோட்டை போன்ற நகரங்களுடன் தேசிய நெடுஞ்சாலைகளால் நன்கு இணைக்கப்பட்டுள்ளன. டாக்சி அமர்த்திக்கொண்டால் இருபுறமும் வனச்சரணாலயங்களுடன் கூடிய அழகான சாலை வழியே செல்லலாம். சில நேரங்களில் மான்கள் மற்றும் குரங்குகளையும் காணலாம். பெங்களூருவிலிருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது. கோழிக்கோடு, கண்ணூர், ஊட்டி மற்றும் மைசூர் ஆகிய நெடுஞ்சாலைகளிலிருந்து வயநாடு பகுதிக்குச் செல்ல உட்சாலைகள் உள்ளன. வயநாட்டின் உட்சாலைகளில் பயணிக்க டாக்சி அமர்த்திக்கொள்வது நல்லது. சுற்றுலாத் தளங்களிடையே உள்ள தூரம் மிக அதிகம். வயநாடைச் சுற்றிலும் 100 கி.மீ பரப்பளவில் நல்ல உணவகங்கள் இல்லை. எனவே தேவைக்கேற்ப உணவு மற்றும் தண்ணீர் எல்லாம் கட்டாயம் எடுத்துச்செல்ல வேண்டும். பயணிகள் தங்கள் வாகனங்களிலும் தேவைக்கேற்ப எரிபொருளை கட்டாயம் நிரப்பிக்கொள்ள்ளவும்.

அருகிலுள்ள இரயில்நிலையம் கோழிக்கோடு ரயில்நிலையம். இங்கிருந்து டாக்சி அமர்த்திக்கொள்ளலாம்.
அருகிலுள்ள விமான நிலையம் மைசூர் அல்லது கள்ளிக்கோட்டை.

வயநாடு செல்ல அக்டோபர் மாதம் தொடங்கி ஃபிப்ரவரி வரை இதமான வெப்பநிலை நிலவும் பருவகாலமே சிறந்தது. உங்கள் பயணத்தை சரியான முறையில் முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலம் சாலைகளில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்க்கலாம். செம்பரா மலையேற்றத்திற்கு காட்டிலாக்காவிலிருந்து வழிகாட்டியை அமர்த்திக்கொள்ளலாம். செம்பரா அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதி. கையுறை, காலுறை, கேன்வாஸ் ஷூ, தொப்பி, மேலுறை (jacket) மற்றும் மழைக்கோட்டு தேவைப்படலாம். மலையேற்றத்திற்கு கட்டணம்: இந்தியர்கள் ரூ.500/- ; அயல்நாட்டினர். ரூ.1000/-

ஹோட்டல்கள், ரிசார்ட்ஸ், தங்கும்விடுதிகள் எல்லாம் பெரும்பாலும் வாடகைவண்டி நிறுவனங்களுடன் இணைந்துள்ளன. எனவே இவர்கள் உங்களுக்கு போக்குவரத்தில் உதவலாம். இவர்களுடன் முன்கூட்டியே இணைந்து சரிவர திட்டமிடுங்கள். உள்ளூர் சுற்றுலாவிற்கு அதிகாலை கிளம்பி மாலை திரும்பலாம். கொசு மற்றும் பூச்சிகளை சமாளிக்க கொசுவிரட்டும் கிரீம் தேவைப்படலாம்.

தொடர்புக்கு:
பொதுச் செயலாளர், வயநாடு சுற்றுலா அமைப்பு, வாசுதேவ எடோம், புழுத்தானா அஞ்சல், வயநாடு, கேரளா. பின்கோடு : 673575. தொலைபேசி : +91-4936-255308. பேக்ஸ் : +91-4936-227341 மின்ன்ஞ்சல் : mail@wayanad.org

குறிப்புநூற்பட்டி

  1. அழகு வழியும் வயநாடு தினமலர் மே 01, 2017 http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=37258&cat=1360
  2. எடக்கல் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள்
  3. வயநாடு கேரளா டூரிசம் https://www.keralatourism.org/tamil/destination/destination.php?id=2132066044
  4. வன நாடு! http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=897&id1=70&issue=20131030
  5. Archaeologists rock solid behind Edakkal Cave The Hindu October 28, 2007
  6. Edakkal cave findings related to Indus Valley Indian Express October 22, 2009
  7. Exploring and Staying in Wayanad Thrilling Travel. July 07, 2015 http://thrillingtravel.in/2015/07/stay-tourist-attractions-in-wayanad.html
  8. Throwing new light on Edakkal Caves”. Chennai, India: The Hindu. April 06, 2006
  9. Wayanad District Important Tourist Places http://wayanad.nic.in/places.htm
  10. Wayanad Kerala Forest and Wildlife Department http://www.forest.kerala.gov.in/index.php/wayanad
  11. Wayanad Kerala Tourism https://www.keralatourism.org/destination/wayanad-district/373 http://thrillingtravel.in/2015/07/stay-tourist-attractions-in-wayanad.html
  12. Welcome To Wayanad, Kerala, India http://www.wayanad.com/

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in சுற்றுலா and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.