ஆந்திரப் பிரதேசத்தின் ஊட்டி என்று சொல்லப்படும் ஹார்ஸ்லி ஹில்ஸ் ஒரு பிரபலமான மலை ரிஸார்ட்டும், கண்ணுக்கினிய மலைவாழிடமும் ஆகும். குறுகிய மலைப்பாதையின் இரு மருங்கிலும் அடர்த்தியாக ஓங்கி உயர்ந்து வளர்ந்த யூகலிப்டஸ், குல்மோஹர், அலமண்டா, ஜகராண்டா போன்ற மரங்களைக் காணலாம். தூய்மையான சூழல், மனதிற்கினிய வானிலை, கண்ணுக்கினிய காட்சிகள் எல்லாம் உங்களைப் பரவசப்படுத்துவது உறுதி. எழில்மிகுந்த விடுமுறை வாசஸ்தலமான ஹார்ஸ்லி ஹில்ஸ் உங்களுக்குப் புத்துணர்ச்சி தருவதுடன் கோடைகாலத்தின் புழுக்கமான உஷ்ணத்திலிருந்து உங்களை விடுவித்து மிகுந்த இதமளிக்கும். பச்சைப் பசேலென்று மரங்கள் மலைச் சரிவில் அடர்த்தியாய் வளர்ந்துள்ளன. ஹார்ஸ்லி ஹில்ஸ் செல்லும் மலைப்பாதையில் பயணிக்கும்போது வன விலங்குகளையும், பசுமையான தாவர இனங்களையும் காண்பது உங்களுக்கு முழு உற்சாகம் தரும். கவர்ச்சிமிக்க மலர்கள் உங்கள் காலடியில்பட்டுப் பறந்து செல்லும். இந்த மலைச் சரிவு முழுதும் சம்பங்கி மலர்களின் மனம் காற்றில் தவழும்.
ஜோர்பிங் எனப்படும் ஒளி புகும் பந்துகளின் உள்ளே இருந்தபடி மலைச் சரிவில் உருளுவது, ராப்பெல்லிங் எனப்படும் மலைக்கயிற்றிறக்கம் போன்ற சாகச விளையாட்டுக்களை வழங்கும் சில இடங்களில் ஹார்ஸ்லி ஹில்ஸும் ஒன்றாகும். மல்லம்மா கோவில், ரிஷி பள்ளத்தாக்குப் பள்ளிக்கூடம் போன்ற சிறப்பாம்சங்கள் இங்கு உண்டு. கம்பீரமான வானிலை, இந்த மலை வாழிடத்தின் குளிர் காற்று எல்லாம் சுற்றுலாப் பயணிகளின் மனதைக் கவரும். ஹார்ஸ்லி ஹில்ஸ் மியூசியம், சுற்றுச் சூழல் பூங்கா, கௌடின்யா வன விலங்கு சரணாலயம், கங்கோத்ரி ஏரி மற்றும் காலிபந்தாரே போன்றவை பயணிகளை வசீகரிக்கும் சுற்றுலாத் தலங்களாகும்.
ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம், மதனப்பள்ளி, மதனப்பள்ளி நகருக்கு அருகில் அமைந்துள்ள ஹார்ஸ்லி ஹில்ஸ் என்ற ஹார்ஸ்லி கொண்டா பின் கோடு 517352 மிகவும் பிரசித்தி பெற்ற கோடைகால மலை வாழிடமாகத் திகழ்ந்து வருகிறது. இவ்வூரின் அமைவிடம் 13.66°N அட்சரேகை 78.40°E தீர்க்கரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 1290 மீ. (4230 அடி ஆகும். ஹார்ஸ்லி ஹில்ஸ் என்பது மலைகளின் தொடராகும். இது மதனப்பள்ளி நகரிலிருந்து 29 கி.மீ. (தரைச் சாலை 20 கி.மீ.; மலைச் சாலை 09 கி.மீ.) தொலைவில் அமைந்துள்ளது.
ஹார்ஸ்லி ஹில்ஸ் பெங்களூர், சென்னை, திருப்பதி, வேலூர், பாண்டிச்சேரி போன்ற நகரங்களிலிருந்து சுலபமாக அடையும் தொலைவில் இருப்பதால் இந்நகரங்களிலிருந்து எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் இந்தக் கோடை வாசஸ்தலத்திற்குக் கூட்டம் கூட்டமாக வந்து குவிகின்றனர். எனுகு மல்லம்மா என்ற பெயரில் இந்த மலை வாழிடம் முற்காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது. வந்தது. ஒரு காலத்தில் இவ்வூர் மல்லம்மா என்றொரு பெயர்கொண்ட பெண், ஒரு யானையால் வளர்க்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்தச் சின்னம் சிறு பெண்ணின் பெயரால் இந்தக் மலைவாழிடம் அந்நாளில் எனுகு மல்லம்மா என்ற பெயரால் வழங்கப்பட்டது. இப்பெண் இக்காலத்தில் நோயுற்ற பழங்குடி மக்களைப் பேணிப் பாதுகாத்ததாளாம். மல்லம்மா ஒரு நாள் திடீரென மாயமானாள். இதன் காரணமாக இதே மலையில் மல்லம்மாவிற்குக் கோவில் கட்ட இவ்வூர் மக்கள் எண்ணியதாகவும் பல நம்பிக்கைகள் இங்கு நிலவுகின்றன. சில நாட்களுக்குப் பிறகு W.D.ஹார்ஸ்லி என்ற ஆங்கிலேய அதிகாரி இந்த மலையில் கராச்சி அறை (Karachi Suite) மற்றும் பால் மாளிகை (Ball palace) போன்ற கோடைக் கால ரிஸார்ட்டுகளைக் கட்டியதால் அவர் நினைவாகவே ஹார்ஸ்லி ஹில்ஸ் என்ற பெயரில் இந்த மலை வழங்கப்பட்டது.
மதனப்பள்ளி சித்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய நகரமாகும், முற்காலத்தில் மரியாதை ராமண்ணா பட்டணம் என்ற பெயரில் பரவலாக அறியப்பட்டது. கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இவ்வூர் மதனப்பள்ளி என்று பெயர் பெற்றது. இந்தச் சுவை மிக்க கதை மட்டுமல்லாமல் மதனப்பள்ளி இந்தியாவில் பெருவாரியாக வருவாய் ஈட்டித்தரும் பகுதியாகவும் அறியப்படுகிறது. மதனப்பள்ளியில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்கள் நல்ல தரத்துடன் இருப்பதால் இந்தியா முழுதும் இவற்றிற்கான தேவை அதிகரித்துள்ளது. ஆந்திராவின் சுட்டெரிக்கும் வெய்யிலைத் தணிக்கும் மலைவாழிடமான ஹார்ஸ்லி ஹில்ஸ் திகழ்வதால் மதனப்பள்ளிக்குச் சற்று கூடுதல் செல்வாக்குள்ளது. அன்னி பெசன்ட் அம்மையாரின் நினைவாகக் கட்டப்பட்ட பெசன்ட் தியாஸாஃபிகல் சொசைட்டி கல்லூரியும், மற்றும் தத்துவவாதி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் பிறப்பிடமாகவும், இவர் நிறுவிய ரிஷி வேலி பள்ளிக்காகவும் இந்த நகரம் புகழ்பெற்றது. இந்திய மகாகவி ரபீந்தரநாத் தாகூர் இந்திய தேசிய கீதத்தை மதனப்பள்ளி நகரில் இருந்தபோது எழுதியதாகவும், இக்கவிதைக்கு இந்நகரிலேயே இசை அமைத்ததாகவும் நம்பப்படுகிறது.
உங்களுக்கு சின்ன டிப்ஸ்: ஹார்ஸ்லி ஹில்ஸில் ஏ.டி.எம் மற்றும் பெட்ரோல் ஸ்டேஷன் எல்லாம் கிடையாது. தேவையான பெட்ரோல் / டீசல் மதனப்பள்ளியிலேயே நிரப்பிக்கொள்ளலாம். நொறுக்குத் தீனி வாங்கிக் கொள்ளலாம்.
மதனப்பள்ளியிலிருந்து ஹார்ஸ்லி ஹில்ஸுக்குச் செல்ல டாக்சியில் அமர்த்திக்கொண்டோம். மலைச்சாலையில் மதிய நேரத்தில் வளைந்து நெளிந்து செல்லும் கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து சென்றது சுகமான அனுபவம், மலை ஏற ஏற வெப்பநிலைக் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. வழியெங்கும் மழை மேகம் தழுவும் மலைமுகட்டில் விட்டுவிட்டுத் தூரல், மழை எல்லாம் அடிக்கடி வந்து போயின. ஒரு மணி நேரப் பயணத்திற்குப்பின் 3.00 மணிக்கு மலை உச்சியை அடைந்தோம். வெப்பம் சுமார் 15 – 20 டிகிரி செல்ஸியஸாக இருந்திருக்கலாம்.
இங்கு தங்குவதற்காக 20 நாட்களுக்கு முன்பே ஏ.பி. டூரிசம் வெப் சைட்டில் பதிவு செய்ய வேண்டும். ரூ.1400/- முதல் ரூ.7000/- வரை பல கட்டங்களில் அறைகள் உள்ளன. காலை சிற்றுண்டி இலவசம். சில தனியார் விடுதிகளும் இதே கட்டண விகிதத்தில் உள்ளன. இது தவிர அரசு வனத்துறையின் விருந்தினர் விடுதியிலும் அறைகள் உள்ளனவா என்று சோதியுங்கள். பெரிய அறையில், இரண்டு கட்டில்கள் மற்றும் ஒரு சிறிய கட்டில் உண்டு. கட்டணம் ரூ. 1500/- நாங்கள் ஆந்திர பிரதேச சுற்றுலா துறையின் ஹரிதா ரெஸ்டாரெண்ட் அண்ட் பார் ரிஸார்ட்டில் தங்கினோம். இங்கு ஒரு சிறு நீச்சல் குளம் உள்ளது.
சிறிது நேர ஓய்வுக்குப் பின் சூடான காஃபி. ஸ்வெட்டர் மஃப்ளருடன் ரிஸார்ட்டைச் சுற்றி வாக்கிங் சென்றோம். இங்கு எல்லா நேரமும் வாக்கிங் செல்ல உகந்தது. ஹார்ஸ்லி ஹில்ஸில் சாலைகள் நன்கு பராமரிக்கப்படுகின்றன. கூட்டமில்லை. சின்னஞ் சிறு கடைகள், சிறிய ஹோட்டல்கள் எல்லாம் சாலையோரம் இருந்தன, இங்குத் தரம் சுமார், வெரைட்டி கிடையாது. . சில்லென்று முகத்தில் அறைந்த காற்றில் யூகலிப்டஸ் மணம் கமழ்ந்தது. இங்கு இரண்டு வியூப் பாய்ண்ட்கள் உள்ளன. ஹார்ஸ்லி ஹில்ஸ் டாப் பாய்ண்ட் ஹரிதா ஹோட்டல் அருகே உள்ளது. மற்றொன்று வெஸ்டர்ன் வியூ பாய்ண்ட் ஹார்ஸ்லி ஹில்ஸ் ஜூவுக்கு அருகில் உள்ளது

வியூப் பாய்ண்ட் PC: APTDC

ஹார்ஸ்லி ஹில்ஸ் டாப் பாய்ண்ட் (Harsley Hills Top View Point PC: APTDC
ஹார்ஸ்லி ஹில்ஸ் பஸ் ஸ்டேஷனிலிருந்து அரைக் கி.மீ. தள்ளி மல்லம்மா கோவில் அமைந்துள்ள பழைய கோவில். மல்லம்மா கோவில் ஹார்ஸ்லி ஹில்ஸில் அமைந்துள்ள இங்குள்ள பழங்குடியினருக்குக் கண்கண்ட தெய்வம். திறந்திருக்கும் நேரம் காலை 5.00 முதல் 7.00 மாலை வரை.
மல்லம்மா கோவிலில் தரிசனத்தை முடித்துக் கொண்டு விடுதிக்குத் திரும்பினோம். சற்று நேரம் டி.வி. பார்த்தல், மொபைல் மற்றும் கேமரா பேட்டரி ரிச்சார்ஜிங் எல்லாம் முடிந்து இரவு உணவு உண்டதும் உறங்கினோம்.

காலி பண்டா (Windy Rock) PC: Bijoy Venugopal
மறுநாள் காலை 06.30 மணிக்கு எழுந்து ஃபிரஷ் ஆனபின் ஒரு லாங் வாக்கிங் சென்றோம். பஸ் ஸ்டேஷனிலிருந்து சுமார் 300 -350 மீ. தொலைவில் காலி பண்டா (Windy Rock) என்னும் பாறைச் சரிவு உள்ளது. இங்கு நாள் முழுதும் பலமான காற்று வீசுகிறது. திறந்த வெளியில் இதமான குளிர் காற்று வருடிச் செல்கிறது. முக்கால் மணி நேரம் செலவிட்டோம். விடுதிக்குத் திரும்பிக் குளித்த பின்பு காலைச் சிற்றுண்டி அருந்திவிட்டு மினி ஜூவுக்குப் போனோம்.
ஹார்ஸ்லி ஹில்ஸ் பஸ் ஸ்டேஷனிலிருந்து ஒரு கி.மீ. தள்ளி வன விலங்கு பங்களா அருகே ஹார்ஸ்லி ஹில்ஸ் ஜூ உள்ளது. இங்குப் போய்ப் பார்ப்பது சம்பிரதாயமான ஒன்று. நாங்களும் சென்றோம். ஒரு மணி நேரம் செலவிட்டோம். சிறிய அளவில் அமைந்த வன விலங்குப் பூங்கா. மயில், முயல், புறா, குரங்கு, முதலை எல்லாம் உண்டு. பூங்காவில் அடர்ந்த மரங்கள் உள்ளன. குழந்தைகள் நேரம் செலவிட விரும்பும் இடம் இது. வேலை நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.
பஸ் ஸ்டேஷனிலிருந்து சுமார் ஒரு மீ. தொலைவில் 150 வருடம் கடந்த யூகலிப்டஸ் மரம் கல்யாணி என்னும் பெயரில் ஹார்ஸ்லி பங்களாவுக்கு அருகில் கம்பீரமாய் நிற்கிறது. இது அவசியம் காண வேண்டிய முக்கியமான இடம். பெயரிட்டு அழைக்கப்படும் மரம் இது மட்டும்தான் என்று தெரிகிறது. கி.பி.1859 ஆம் ஆண்டு அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஹார்ஸ்லி இந்த மரத்தை நாட்டாராம். சுமார் 40 மீ. உயரம், 4.7மீ. சுற்றளவுள்ள இந்த மரம் 150 வருடம் தாண்டிச் செழிப்பாய் நிற்கிறது.

150 வருடம் கடந்த யூகலிப்டஸ் மரம் கல்யாணி PC: Shande Explore Life Unlimited
காரம் நிறைந்த ஆந்திரா ஸ்டைல் மதிய உணவுக்குப்பின் சிறிது ஒய்வு எடுத்துக்கொண்டோம். ஓய்வுக்குப்பின் கங்கோத்ரி ஏரியைக் காணச்சென்றோம். பஸ் ஸ்டேஷனிலிருந்து சுமார் 2.5 மீ. தொலைவில் மதனப்பள்ளி சாலையில் உள்ள கங்கோத்ரி ஏரி உள்ளது. இது சிறிய ஏரி. ஏரியைச் சுற்றி உயந்து வளர்ந்த யூகலிப்டஸ் மரங்கள் அணிவகுத்துள்ளன. ஏரியைச் சுற்றிச் சற்று நடை பயின்றோம். மலை நேரம் ஆக ஆக வெளிச்சம் குறைந்து கொண்டே போனது. மாலை சென்னை திரும்புவதற்கு திட்டமிட்டிருந்ததால் விடுதிக்குத் திரும்பினோம்.

கங்கோத்ரி ஏரி PC: Trawell
ஐந்து மணியளவில் விடுதிக்கு வந்து அறையைக் காலி செய்தபின் டாக்சியில் மதனப்பள்ளிக்கு திரும்பினோம். மாலை 7.00 மணிக்கு மதனப்பள்ளியிலிருந்து பஸ் பிடித்துச் சென்னை திரும்பினோம்.

Rapelling PC: Thrillophilia

Rope Activities PC: Triadvosr
ஹார்ஸ்லி ஹில்ஸ் செல்ல…
முதலில் மதனப்பள்ளி செல்ல வேண்டும். சென்னையிலிருந்து மதனப்பள்ளி 237 கி.மீ. தொலைவு. வேலூர், சித்தூர், பலமனேர், புங்கனூர் வழியாகச் செல்லலாம். பெங்களூரிலிருந்து மதனப்பள்ளி 125 கி.மீ. தொலைவு. ஹஸ்கோடே, கோலார், ஸ்ரீவாஸ்புரா, கவனிப்பள்ளி, ரவலப்பாடு வழியாகச் செல்லலாம். ஹைதராபாத்திலிருந்து மதனப்பள்ளி 467 கி.மீ. தொலைவு. கர்னூல், நந்தியால், மைடுகுர், கடப்பா, ராய்சோட்டி வழியாகச் செல்லலாம்.
இவ்வூர் கோலரிலிருந்து 71 கி.மீ. தொலைவிலும்; சிக்கபல்லாப்பூரிலிருந்து 86 கி.மீ. தொலைவிலும்; சித்தூரிலிருந்து 99 கி.மீ. தொலைவிலும்; அனந்தபூரிலிருந்து 162 கி.மீ. தொலைவிலும்; நெல்லூரிலிருந்து 213 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
அருகிலுள்ள இரயில் நிலையம் தும்மனகுட்டா இரயில் நிலையம் 7.4 கி.மீ; பங்காரப்பேட்டை இரயில் நிலையம் 87 கி.மீ.; பாகாலா ஜங்க்ஷன் இரயில் நிலையம் 89 கி.மீ.
அருகிலுள்ள விமான நிலையம் பெங்களூரு 101 கி.மீ. தொலைவு; திருப்பதி விமான நிலையம் 138 கி.மீ. தொலைவு; சென்னை விமான நிலையம் 229 கி.மீ.
மதனப்பள்ளியிலிருந்து ஹார்ஸ்லி ஹில்ஸ் 29 கி.மீ. தொலைவு. சம தரைவழியே 20 கி.மீ. மலைச்சாலை வழியே 9 கி.மீ பயணம் செய்ய வேண்டும். ஹார்ஸ்லி ஹில்ஸ் செல்ல பஸ் அல்லது டாக்ஸி வசதி உள்ளது.
ஆந்திரப் பிரதேச அரசு சுற்றுலாத் துறை (ஏ.பி.டி.டி.சி.) நடத்தும் ரிஸார்டுகள் இங்குக் கிடைக்கும். ஹார்ஸ்லி ஹில்ஸ் ரிஸார்ட்ஸ் என்ற தனியார் விடுதியும் உள்ளது. இங்கு ரூ.700 முதல் ரூ.7,000 வரைகூட அறைகள் உள்ளன. விடுமுறை நாட்களில் வாடகையை ஏற்றிவிடுவார்கள். எனவே இந்த இரண்டு ரிஸார்ட்டிற்கும் முன்பதிவு மிக மிக அவசியம். ஏ.பி.டி.டி.சி. ரிஸார்ட்டில் தங்குவதற்கு அவர்களுடைய வலைதளத்தில் முன்பதிவு செய்யலாம். உணவும் நன்றாக இருக்கிறது.
குறிப்புநூற்பட்டி
- மதனப்பள்ளி – சிறப்புகள் ஏராளம் சுமக்கின்ற பூமி! நேட்டிவ் பிளானெட்.
- ஹார்ஸ்லி குன்று, மதனப்பள்ளி. நேட்டிவ் பிளானெட்.
- Horseley Hills Onefivenine
- Horseley Hills Wikipedia
http://thrillingtravel.in/2015/10/driving-to-horsley-hills.html