இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்ட தொன்மையான, புகழ் பெற்ற பல ஓவியக் கலைப்பாணிகள் இன்றும் வழக்கில் உள்ளன. வார்லி ஓவியப்பணி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையுடையது. மனிதன் குகைகளை வசிப்பிடமாகக் கொண்டிருந்த காலகட்டத்தில் தங்கள் அன்றாட நிகழ்வுகளை, சடங்குகளை அறிவிக்கும் வகையில் வரையப்பட்ட ஓவியக் கலைப்பாணியே வார்லி ஓவியக்கலைப்பாணியாகும். தொன்மையான கோண்டுப் பழங்குடி மக்கள் வளர்த்த கோண்டு ஓவியக் கலைப்பாணி உலகப் புகழ்பெற்றது. புராண காலத்திலிருந்தே புழக்கத்தில் இருப்பதாகக் கருதப்படும் மதுபானி ஓவியக் கலைப்பாணி ஓவியங்கள் பீஹார் மாநிலத்தின் மதுபானி மாவட்டத்தில் மரபு முறையில் பெண்களாலேயே வரையப்பட்டன.
பேனாவைக் கொண்டு துணியில் அலங்கரிக்கும் ‘கலம்காரி’ (English: Kalamkari), (தெலுங்கு: కలంకారి) ஒரு தொன்மையான கலைப்பாணியாகும். பாரசீக மொழியில் “கலம்” என்றால் பேனா என்றும் “காரி” என்றால் கலைவடிவம் என்றும் பொருள்படும். கலம்காரி என்ற சொல் இயற்கையாகக் கிடைக்கும் தாவரச் சாயத்தைப் பயன்படுத்தி அழகிய வடிவங்களைக் (patterns) கையால் வரைந்தோ (free-hand painting) அல்லது அச்சுப் பதித்தோ (block-printing) தயாரிக்கப்படும் பருத்தித் துணிகளைப் பற்றி விவரிக்கிறது. தற்போது கலம்காரித் துணி வகை என்பது இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலிருந்து தயாராகும் துணிவகைகளையும் உள்ளடக்கியதாகும். குறிப்பாகக் கலம்காரி என்ற சொல் தென்னிந்திய மாவட்டங்களில் தயாராகும் துணிகளை மட்டும் சுட்டிக்காட்டுகிறது. இந்தப்பதிவு கலம்காரி பாணி ஓவியங்கள் பற்றியும், பருத்தித்துணியில் கையால் வரைந்தோ அல்லது அச்சுப் பதித்தோ தயாரிக்கப்படும் தொழில்நுட்பம் பற்றியும் விவரிக்கிறது.
வரலாறு
கலம்காரி மரபு சுமார் 3000 ஆண்டுத் தொன்மை வாய்ந்தது. இந்தக் கைவினைக் கலைப்பாணியின் மிகவும் தொன்மை வாய்ந்த துணி மாதிரிகள் (earliest fabric samples of this craft) கி.மு. 3000 ஆண்டில் மொஹஞ்ஜோ-தாரோவில் (Mohenjo-daro) நடைபெற்ற அகழ்வாய்வில் (archaeological excavations) கண்டறியப்பட்டுள்ளன. மாஞ்சிட்டிச் சாயம் (Madder Dyed, Bot. Term: Rubia tinctorum, Family: Rubiaceae) ஏற்றி இந்திய வடிவங்கள் வரையப்பட்ட வேறு சில துணி மாதிரிகளைக் கெய்ரோவின் அருகில் அல் ஃபுஸ்டாட் (Al Fustat) என்னுமிடத்தில் எகிப்திய கல்லறைகளில் நடத்திய அகழ்வாய்வில் (archaeological excavations) கண்டறிந்துள்ளனர். இந்த அகழ்வாய்வுக் கண்டறிதல்கள், இந்தக் கைவினைக்கலை எவ்வளவு தொன்மையானது என்பதற்குச் சான்று பகர்கின்றன. மேலும் இக்கைவினைக்கலை பண்டைக்காலத்தில் மிகுதியாக வளர்ச்சிபெற்று ஏற்றுமதிப் பொருளாகவும் மேன்மையுற்றது. பண்டைக் காலத்திலேயே சூரிய ஒளி மற்றும் இரசாயனப் பொருட்களால் பாதிக்கப்படாத வகையில் நிறம் மாறாத இயற்கையில் கிடைக்கும் வண்ணங்களைத் துணிகளில் பதிக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய காரணத்தால் இந்தியத் துணிகள் வெளிநாடுகளில் புகழ் பெற்றிருந்தன. தன் இருப்பிடத்திற்கு அருகிலேயே தாராளமாகவும், வகை வகையாகவும் கிடைத்த கனிமப்பொருட்கள் (minerals) மற்றும் தாவரங்களிலிருந்து (vegetable) பெற்ற இயற்கை வண்ணங்களைக் கொண்டு இக்கலைஞர்கள் பல்வேறு வண்ணக் கலவைகளை உருவாக்கினார்கள்.
வேதகாலத்து மக்கள் பல வண்ணங்களில் பல வடிவங்களைக்கொண்டு (colors and patterns) அணிந்திருந்த உடைகளைப்பற்றி வேத காலத்து இந்து நூற்கள் (Hindu Texts) விவரிக்கின்றன. இக்காலக் கலைஞர்கள் நூற்றுக்கணக்கான தாவர இனங்களைப் (species) பற்றி அறிந்திருந்தது மட்டுமல்லாமல் பயன்படுத்தவும் செய்தார்கள். வராஹிமிஹிரர் கி.பி. ஆறாம் Varahimihira, (505-587 A.D) நூற்றாண்டில் எழுதிய பிருஹஸம்ஹிதா (Brihat-Samhita) என்னும் நூலில் சாயத்தைப் பற்றியும் துணியில் நிறங்களைப் பொருத்தும் (fixing) தொழில் நுட்பத்தைப் பற்றியும் விவரித்துள்ளார். மஞ்ஜிஷ்டா வண்ணத்தைத் துணியில் பொறுத்துவதற்குப் படிகாரம் (English: Alum, Sanskrit: Tabari) ஆற்றும் இராசாயன எதிர்வினைகளைப்பற்றி (chemical reaction) ரங்க-பந்தனா (Raga Bandhana) என்ற தலைப்பில் விவரித்துள்ளார். (ரங்க – வண்ணம் ; பந்தனா – பொருத்துதல்).
ஸ்ரீ காளஹஸ்த்தி – மசூலிப்பட்டிணம் கலம்காரி பாணிகள்
ஆந்திரப் பிரதேசத்தில் கோல்கொண்டா சுல்தானகம் மற்றும் ஐதராபாத் மன்னர்களின் ஆதரவில் வளர்ந்த கலம்காரிக் கலைப்பாணி ஓவியங்கள் மிகக் குறைந்த இயற்கை வண்ணங்களையும் மிக அதிக நுட்பங்களையும் உள்ளடக்கியவையாகும்.

கலம்காரி ஓவியம் வரைதல் PC: romog
இந்தக் கலைப்பாணி தற்போது கிருஷ்ணா மாவட்டம், பெத்தனா மண்டல், மசூலிப்பட்டினம் வருவாய்ப் பிரிவு ‘பெத்தனா’ (Pedana) பின் கோடு 521366 (அமைவிடம் 16° 16′ 0.12″ N, அட்சரேகை 81° 10′ 0.12″ E தீர்க்கரேகை ஆகும்) என்னும் நகரத்தை மையமாகக்கொண்டு வளர்ந்து வருகிறது. மசூலிப்பட்டினத்திலிருந்து இவ்வூர் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பெத்தனா தனிப்பட்ட காலம்காரி மாறுபாட்டின் (unique variant of Kalamkari) தாயகம் ஆகும். இந்தக் கலம்காரி குறிப்பிட்ட கலைப்பாணியையும் செயல்முறையையும் (process) கொண்டுள்ளது. இங்கு அச்சுப் பதித்துத் தயாரிக்கப்படும் கலம்காரி துணிவகைகளில் கூடப் பேனாவைப் பயன்படுத்தி நுட்பமான கோடுகளையும் சில வண்ணங்களையும் சேர்க்கிறார்கள். வண்ணம் தயாரிக்கப் பயன்படும் பொருட்கள், பல்வேறு நிலைகளில் தோய்க்கப்படும் சாயம் மற்றும் வடிவமைப்புகள் எல்லாம் பெத்தனா கலம்காரிக் கலைப்பள்ளிக்கே (Pedana school of Kalamkari) உரித்தானது. இந்நகரம் நேர்த்தியான ஜவுளிகளிலும், ஜவுளிப் பொருட்களிலும், படுக்கை மற்றும் டேபிள் விரிப்புகளிலும், ஆடை, தரைவிரிப்பு, லினோலியம் மற்றும் பல பொருட்களிலும் முத்திரை (hallmark) பதித்துள்ளது. இந்திய அரசின் புவிசார் குறியீட்டுப் பதிவகத்தில் (Geographical Indications Registry (GIR) பெத்தனாவில் உள்ள தாவரச் சாயத்தால் கையச்சுப் பதிப்போர் நல சங்க (Vegetable Dye Hand Block Kalamkari Printers’ Welfare Association) உறுப்பினர்கள் சார்பில் புவிசார் குறியீட்டிற்கு விண்ணப்பித்திருந்தனர். ‘கலம்காரி கலைப்பாணிக்கு’ப் புவிசார் குறியீடு 2013 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் கிடைத்துள்ளது (GIR user number AU/396/GI/19/12). மசூலிப்பட்டினம் கலம்காரி துணிகளின் உற்பத்தி பெத்தனா மற்றும் கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டினம் – போலாவரம் பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமங்களை உள்ளடக்கிய புவியியல் பகுதிகளுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளது.

பெத்தனா கலம்காரி மரத்தில் செய்த அச்சு PC: IndiaMart,com

பெத்தனா கலம்காரி PC: Deccan Herald
ஸ்ரீ காளஹஸ்தி கலம்காரி மற்றோரு மாறுபட்ட கலைப்பாணியாகும். இந்தக் கலைப்பாணி பருத்தித்துணியில் பேனாவைக் கொண்டு கையால் வரைந்து வண்ணம் தீட்டும் முறையைக் கடைபிடிக்கிறது. ஆந்திரப் பிரதேசத்தில், சித்தூர் மாவட்டம், ஸ்ரீ காளஹஸ்தி மண்டல், ஸ்ரீ காளஹஸ்தி பின் கோடு 517536 (அமைவிடம் 13° 45′ 7.2612” N அட்சரேகை 79° 42′ 13.4136” E தீர்க்கரேகை ஆகும்) நகரில் தனித்துவமுடைய இக்கலை தோன்றி வளர்ந்து வருகிறது. இதற்குப் பயன்படும் பேனாக்களை மூங்கிலில் துணி மற்றும் கம்பளி நூலைச் சுற்றித் தயாரிக்கிறார்கள். மலர்கள் மற்றும் தாவரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட இயற்கையான சாயங்களைப் பயன்படுத்திச் சாயமிடும் செயல்முறை வழக்கத்தில் உள்ளது. மொத்தச் செயல்முறைகளும் 17 படிகளாக நடைபெறுகிறது: அச்சு தயாரித்தல் (block making), துணியைப் பதப்படுத்துதல், அச்சிடுதல், சலவை செய்தல் போன்றவையாகும். ஸ்ரீ காளஹஸ்தி கலைப்பாணியில் இந்துமதக் கதைகளிலும், புராணக் கதைகளிலும் இடம்பெறும் நிகழ்வுகள் துணிகளின் மேலும், புடவைகளின் (குறிப்பாகக் கரை மற்றும் முந்தானையின்) மேலும் அச்சிடப்படுகின்றன.

ஸ்ரீ காளஹஸ்தி கலம்காரி PC: TKLVCH – WordPress
சிக்கல்நாயக்கன்பேட்டை கலம்காரிக் கலை
தமிழ் நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் வட்டம், சிக்கல்நாயக்கன்பேட்டை பின் கோடு 612504 (அமைவிடம் 11° 6′ 28.8828” N அட்சரேகை 79° 28′ 8.3352” E தீர்க்கரேகை ஆகும்) கிராமத்தில் இக்கலை வழக்கில் உள்ளது. சிக்கல்நாயக்கன்பேட்டைக் கலம்காரிக் கலைப்பணியைத் தமிழகத்துக்குக் கொண்டுவந்தவர்கள் விஜயநகரப் பேரரசின் பிரதிநிதிகளாகத் தஞ்சைக்கு வந்த நாயக்கர்களே. இக்கலைப்பாணி தஞ்சை நாயக்க மன்னர் ஆட்சி காலத்திலிருந்து 350 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் தொடர்ந்து வருகிறதாம்.

காலத்தை வென்று நிற்கும் சிக்கல்நாயக்கன்பேட்டை கலம்காரி ஓவியம்! PC: Vikatan
இங்குள்ள கலைஞர்கள் “இராமாயண மகாபாரதக் கதைகள், கர்ணமோட்சம், அரவாண் களபலி, குழந்தை கோகுலகிருஷ்ணன், கிருஷ்ண லீலா, காளிங்க நர்த்தனர், மாரியம்மன், காளியம்மன் மற்றும் நாட்டுப்புற தெய்வங்கள், விதவிதமான பூ வேலைபாடுகள்” பற்றி நேர்த்தியான கலம்காரி ஓவியங்களாக வடித்தெடுக்கிறார்கள். திருவிழாவில் தேர்களை அலங்கரிக்கும் தொம்பைகள், வாசமாலை, விதான ஓவியங்கள் பட்டம், கொடி, கும்பம் ஆகிய அலங்காரங்கள் கலம்காரிக் கலைப்பாணியில் உருவாக்கப்படுகின்றன. ஆந்திராவின் இரண்டு கலைப்பாணிகளிலும் பல நவீனங்கள் புகுத்தப்பட்டுவிட்டன. ஓவியங்களை வடிவமைத்து, அச்சுக்களைத் தயாரித்து, இயந்திரங்களின் துணையோடு துணிகளின் மேல் அச்சிடத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் தஞ்சாவூர் – கும்பகோணம் கலம்காரிக் கலைப்பாணி இன்றும் உயிர்ப்போடு உள்ளது.இங்குள்ள கைவினைக் கலைஞர்கள் பயன்படுத்துவது முற்காலத்தில் பயன்படுத்திய அதே இயற்கை வண்ணங்கள். அதே கைவினைத் திறன்!
கலம்காரி செயல்முறை, தொழில் நுட்பம் மற்றும் உத்திகள்
துணி தயாரித்தல்
விசைத்தறியில் நெய்யப்பட்ட பருத்தித் (காடா) துணியைக் காலம்காரி தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள். இத்துணியைச் சோப்புப் போடாமல் அடித்துத் துவைத்து அசுத்தங்களையும் கஞ்சிப் பசையையும் நீக்குகிறார்கள். பின் காயவைக்கிறார்கள்.
மூன்று மீட்டர் துணிக்கு நூறு கிராம் கடுக்காய்ப் பசையையும் இரண்டு லிட்டர் எருமைப் பாலையும் கலந்து உருவாக்கிய கலவையில் முக்கி எடுத்து உதறிக் காய வைக்கிறார்கள். இந்தச் செயல்முறை சாயத்தில் உள்ள உலோக நிறமூன்றியைத் துணி உறிஞ்சிக்கொண்டு நிரந்திர வண்ணத்தை உருவாக்க உதவுகிறது. பாலில் உள்ள கொழுப்புச் சத்துச் சாயம் துணியில் வண்ணம் அடிக்கும் போது பரவாமல் தடுக்கிறது. இவ்வாறு பதப்படுத்தப்பட்ட துணியை உலர்ந்த இடத்தில் ஒரு மாதம் வரை சேகரித்து வைக்கலாம். ஈரப்பதம் மற்றும் வெய்யில் படாமல் பாதுகாத்தல் நலம்.
கலம் (பேனா) தயாரித்தல்
துணியின் மேல் வரையப் பயன்படுத்தும் பேனா “கலம்” எனப்படும். மெல்லிய ஒரு மூங்கில் குழாயின் மேல் துணியைச் சுற்றி இதன்மேல் கம்பளிக் கயிற்றால் கட்டிவிடுகிறார்கள். மூங்கிலின் ஒரு முனை மெல்லிய கூரிய முனையாக்கப்படுகிறது. இந்தப் பேனாவைச் சாயத்தில் முக்கி எடுக்கையில் கம்பளிப் பந்துச் சாயத்தை உறிஞ்சிக் கொள்கிறது. கலம்காரிக் கலைஞர் இந்தச் சாயம் நிறைந்த பேனாவைப் பிடித்துக் கொண்டு மெதுவாகக் கம்பளிப் பந்தை அழுத்தியபடி துணியின் மேல் தேவையான இடங்களைச் சாயத்தால் நிரப்புகிறார். சற்று தடித்த முனையுள்ள பேனாவைத் தடிமனான கோடுகளை வரையவும் பரந்த இடங்களை நிரப்பவும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பயன்படுத்தப்பட்ட பேனாவை நீரில் முக்கிச் சாயம் முழுதும் நீங்கும் வரை கழுவி உலரவைக்க வேண்டும்.
உருவங்களை வரைதல்
புளியமரத்தின் (tamarind tree) குச்சிகளை எரித்து உண்டாக்கிய கரிக்கட்டையைப் (charcoal) பயன்படுத்தி வரிவடிவங்கள் (ஸ்கெச்சுகள்) வரையப்படுகின்றன. இந்த வரிவடிவங்களின் (ஸ்கெச்சுகளின்) மேல் பேனாவைப் பயன்படுத்திக் கோடுகள் வரையப்படுகின்றன. சாயத்தில் உள்ள இரும்புக் கரைசல் கடுக்காய்ப் பூச்சின்மீது பட்டவுடன் கோட்டின் நிறம் கறுப்பாகிவிடுகிறது. எனவே ஒரு துளிச் சாயம்கூடக் கசியாமலும் (spill) அழுக்குப் படியாதபடியும் (smudge) மிகுந்த கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும். ஏதேனும் தவறு நேர்ந்தால் இவற்றை அழிக்க இயலாது. இந்த அவுட்லைனை ஒரு நிமிடம் உலரவிட வேண்டும். பிறகு அதிகப்படியான சாயத்தைத் துணியின் உதவியால் கவனமாக ஒற்றியெடுக்க வேண்டும்.
ஸ்ரீ காளஹஸ்தி கலம்காரி ஓவியங்களில் உள்ள முக்கிய அம்சங்கள்
ஸ்ரீ காளஹஸ்தி கலம்காரி ஓவியங்களின் கருப்பொருள் (theme) தெய்வங்களையும் மற்றும் இராமாயணம், மகாபாரதம், பாகவதபுராணம் போன்ற இதிகாசங்களில் வரும் காட்சிகளையும் சுற்றி அமைந்துள்ளன. வட்டமான முகம் மற்றும் நீண்ட பெரிய கண்கள், நீண்ட விரல்கள், ஒல்லியான உடல் ஆகியவை ஆண் மற்றும் பெண் தெய்வங்களின் பொதுவான அடையாளங்களாகச் சித்தரிக்கப்படுகின்றன. கவர்ச்சியான ஆடை மற்றும் பகட்டான அணிகலன்களைப் பயன்படுத்தி மிக்க அழகுடன் விவரமாகச் சித்தரிக்கிறார்கள். சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை மற்றும் கருப்பு ஆகிய அடிப்படை வண்ணங்கள் தூக்கலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஓவியங்களின் ஓரங்களில் (borders) பெரும்பாலும் புள்ளிக்கோடுகள் (beaded lines) வரையப்படுகின்றன. தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் – அதாவது மலர்கள், கொடிகள், இலைகள், பறவைகள், மயில்கள், யானைகள் போன்ற உருவங்கள் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சாயம் தயாரித்தல்
அழகிய மென்மையான வண்ணங்கள் இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களிலிருந்து பெறப்பட்டால் வண்ண ஓவியம் எடுப்பாகத் தெரியும். பொதுவாகப் பயன்படுத்தும் வண்ணங்கள் சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை மற்றும் கருப்பு ஆகும். ஒவ்வொரு கலைஞனும் அவனுக்குத் தேவையான சாயத்தை, மலர்கள், பழங்கள், வேர்கள், விதைகள், இயற்கையில் கிடைக்கும் மற்றும் பல பொருட்களைக் கொண்டு தயாரித்துக் கொள்கிறான். இந்த மூலப்பொருட்கள் எளிதாகக் கிடைத்தாலும் சாயம் தயாரிக்கக் கணிசமான நேரமும் உழைப்பும் தேவை.
கருப்புச் சாயம் அல்லது காசிம்காரம் (kasimkaram)
இச்சாயம் அவுட்லைன் (outline) வரையப் பயன்படுகிறது. துணியின் மேல் படிந்து கருப்பு வண்ணம் தருகிறது. அரைக் கிலோ வெல்லம் (jaggery), நூறு கிராம் கருப்பட்டி (palm sugar), துருப்பிடித்த இரும்புத்தூள் (rusted iron powder) மற்றும் ஐந்து லிட்டர் நீரில் 15 நாள் ஊறவைத்துத் தயாரிக்கப்படுகிறது.
சிவப்புச் சாயம்
நூறு கிராம் படிகாரம் (தெலுங்கில்: ஸ்படிகம்) பொடி செய்யப்பட்டு ஒரு டம்ளர் நீரில் கலந்தால் சிவப்பு வண்ணச் சாயம் கிடைக்கும். இதனுடன் சிறிது கருப்புச் சாயம் (காசிம்காரம்) கலந்தால் அரக்கு வண்ணம் என்னும் மெரூன் (maroon) சாயம் கிடைக்கும்.
கருநீலச்சாயம்
இண்டிகோச் (indigo) செடியிலிருந்து கருநீல வண்ணச் சாயம் கிடைக்கிறது.
மஞ்சள் சாயம்
ஒரு லிட்டர் கொதிக்கவைத்த நீரில் நூறு கிராம் மாதுளம் பழத் தோல் மற்றும் மாதுளம் பூவைப் பொடியாக்கிக் கலந்தால் மஞ்சள் வண்ணச் சாயம் கிடைக்கும்.
பச்சைச் சாயம்
மஞ்சள் சாயக் கரைசலுடன் சிறிது காசிம்காரம் கலந்தால் பச்சை மெஹந்தி வண்ணச் சாயம் கிடைக்கும். மஞ்சள் சாயக் கரைசலுடன் இண்டிகோ சாயத்தைக் கலந்தால் பிரகாசமான பச்சை நிறம் கிடைக்கும்.
சரியான நிறபேதம் (shade) மற்றும் வண்ணச் சாயல் (tone) கிடைக்க ஒரு கலைஞன் முறையாக உழைத்துக் கற்றுக் கொள்ளவேண்டும். இது பயிற்சியிலும் அனுபவத்திலும் கைகூடும்.
வண்ணம் தீட்டுதல் மற்றும் சாயமிடும் செயல்முறைக்குப் பின்னர்க் கலம்காரி ஓவியம் ஆற்றில் ஓடும் நீரில் அலசப்பட்டு வெய்யிலில் காய்வதற்குத் தொங்கவிடப்படுகிறது. இயற்கை வண்ணங்களை நன்கு பொருத்துவதற்கு (fix well) ஓடும் நீரும், வெய்யிலும் துணைபுரிகின்றன. இதன் காரணமாகவே எல்லாக் கலம்காரிப் பட்டறைகளை நதியின் ஓரமாகவே அமைக்கின்றனர்.
நவீன கலம்காரி வடிவங்கள்
தற்காலத்தில் கலம்காரி பாணியில் தர அடையாளங்களைக் கொண்ட சேலைகள், பிளவுஸ், ஸ்கர்ட், குர்த்தா, சுடிதார் உள்ளிட்ட பல்வேறு வகை ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. ‘கலம்காரி சேலைகள் எல்லாப் பண்டிகைகளின் போது விற்பனையில் உயர்ந்த இடத்தை வகிக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் கலம்காரி இன்றைய ஃபேஷன் ட்ரெண்ட் ஆகும்.

கலம்காரி புடவை மற்றும் சோளி PC: Saree.com

கலம்காரி புடவை மற்றும் சோளி PC: Pinterest
குறிப்புநூற்பட்டி
- கலம்காரி கலை விக்கிப்பீடியா
- கலம்காரி பெண் தெய்வங்கள் தி இந்து ஆகஸ்டு 25, 2016
- பேசும் பொற்சித்திரங்கள். எஸ். விஜய ஷாலினி. தி இந்து (தமிழ்), ஜுன் 4, 2016.
- கலம்காரி ஓவியம் (Kalamkari Art)
- Fighting to protect the purity of Pedana Kalamkari. T. Appala Naidu The Hindu June 21, 2015.
- Kalamkari Fabrics. Indian Mirror
- Pedana Kalamkari art form gets GI tag. T. Appala Naidu. The Hindu August 18, 2013.
- Srikalahasti: hand-painted Kalamkari. Lakshmi Prabala. April 19, 2017.
- Srikalahasti Kalamkari Wikipedia
YouTube
கலம்காரி கலையை எங்கு கற்றுக்கொள்ளலாம்…பாரம்பரிய முறையில்…
LikeLike
மசூலிபட்டணம் பகுதி இக்கலையில் வர்த்தக் ரீதியில் வெற்றி பெற்றுள்ளது. காளஹஸ்தி பகுதியில் இக்கலை இன்னும் சிறிய தொழிலாகவே இருந்து வருகிறது. இக்கலையிலேயே பல பிரிவுகள் உள்ளன. தனிப்பட்ட சில கலைஞர்கள் பயிற்சி அளிக்கிறார்கள். youtube வீடியோ காண்க. சில Fashion school களும் உதவக்கூடும். நன்றி
LikeLike