ஹல்மிதி கன்னட வரிவடிவக் கல்வெட்டும் கன்னட மொழியின் செம்மொழித் தகுதியும்

இந்தியாவின் மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சகம் (Union Ministry for Culture, Government of India), தமிழ் மொழியை இதன் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத் தகுதிகளின் அடிப்படையிலும் செம்மொழி (Classical language (ಶಾಸ್ತ್ರೀಯ ಭಾಷೆ) என்று, வகைப்படுத்தித் தகுதி வழங்கியுள்ளது. யு.சி. பெர்க்லியின் மொழியறிஞர் திரு. ஜார்ஜ் எல். ஹார்ட்டின் (George L. Hart, UC Berkeley linguist) கூற்றுப்படி “செம்மொழியாக ஒரு மொழியைத் தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளைச் சாராதிருத்தலும் வேண்டும்.” இவ்வாறு 2004 ஆம் ஆண்டில் செம்மொழித் தகுதி பெற்ற முதல் இந்திய மொழி தமிழ் மொழியாகும். தமிழ் மொழியைத் தொடர்ந்து சமஸ்கிருதத்திற்கு 2005 ஆம் ஆண்டிலும், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளுக்கு 2008 ஆண்டிலும், மலையாள மொழிக்கு 2013 ஆம் ஆண்டிலும், ஒடியா மொழிக்கு 2014 ஆம் ஆண்டிலும் செம்மொழித் தகுதியினை இந்த அமைச்சகம் வழங்கியது. தமிழுக்கு அடுத்தபடியாகச் செம்மொழியாகத் தகுதி பெறுவதற்கு நான்கு திராவிட மொழிக் குடும்பங்களில் ஒன்றான கன்னட மொழி கருத்தில் கொள்ளப்பட்டது. இந்தக் கன்னட மொழி சக்ரவர்த்தி அசோகனின் தென்னிந்திய பிராமி வகையிலிருந்து தோன்றியதாக அறிஞர்கள் கருதுகிறார்கள்.

கி.பி. 450 – 500 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தோன்றிய “ஹல்மிதி கன்னட வரிவடிவமே” (Halmidi Kannda script (ಹಲ್ಮಿತಿ ಕನ್ನಡ ಲಿಪಿಯನ್ನು) தொன்மையான வரிவடிவம் என்று கன்னடர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள்.

halmidi2

ஹல்மிதி கல்வெட்டு PC: Wikipedia

ஹல்மிதி கல்வெட்டை கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், ஹாசன் வட்டம், ஹல்மிதி (கன்னடம்: ಹಲ್ಮಿಡಿ) கிராமத்தில் (அமைவிடம் 13° 14′ 41.4″ N அட்சரேகை, 75° 49′ 14.46″ E தீர்க்கரேகை ஆகும்) ஹல்மிதி கல்வெட்டை (கன்னடம்: ಹಲ್ಮಿಡಿ ಶಾಸನ) 1936 ஆம் ஆண்டில் மைசூர் மாநிலத்தின் தொல்லியல் இயக்குநராகப் பதவி வகித்த திரு.எம்.எச்.கிருஷ்ணா (கன்னடம்: ಎಂ.ಎಚ್.ಕೃಷ್ಣ) கண்டறிந்துள்ளார். கல்வெட்டாய்வாளர் திரு.கே,வி.இரமேஷ் (கன்னடம்: ಕೆ.ವಿ.ರಮೇಶ್) இது பற்றி தன் மாறுபட்ட மதிப்பீட்டை கீழ்கண்டபடி எழுதியுள்ளார்.

கொடுக்கப்பட்ட தேதியிடப்படாத அல்லது போதுமான அளவீடு இல்லாத கல்வெட்டுக்களுக்கான எழுத்து முறை கால அளவீடு (palaeographical dating) பற்றி அறிஞர்கள், புகழ் பெற்றவர்கள் கூட, பெரும்பாலும் அவர்கள் முன்கூட்டிய கருத்துக்களை ஊக்குவிக்க, வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனர். அவர்கள் மனதில் உள்ள இந்தச் சந்தேகத்தின் தோற்றத்தைப் பற்றிக் கூறுகிறேன். கடம்பா மன்னன் ககஸ்தவர்மனின் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட ஹல்மிதி (ஹசான் மாவட்டம், கர்நாடகா) கல்வெட்டு, எழுத்து முறையின் அடிப்படையில் கி.பி. 5 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்தது என்று சில அறிஞர்கள் ஏற்றுக்கொண்டார்கள். வேறு சிலர் இதே எழுத்து முறையின் அடிப்படையில் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தது என்று கருதுகிறார்கள். – கே.வி.இரமேஷ்

And I attribute the origin of this doubt in their minds to the fact that scholars, even the reputed ones, have held differing views, mostly to prop up their preconceived notions, on the palaeographical dating of any given undated or insufficiently dated inscriptions. … The undated Halmidi (Hassan District, Karnataka) inscription, allegedly written during the reign of Kadamba Kakusthavarman, is taken by some scholars to belong, on palaeographical grounds, to the middle of the 5th century AD, while a few other scholars have held, on the same grounds of palaeography, that it is as late as the second half of the 6th century A.D. — K. V. Ramesh

கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், ஹாசன் வட்டதிலுள்ள ஹல்மிதி (கன்னடம்: ಹಲ್ಮಿಡಿ) ஒரு சிறிய கிராமம் ஆகும். இவ்வூர் பல்மிதி மற்றும் ஹனுமிதி என்ற பெயர்களிலும் அறியப்படுகின்றது.

கன்னட மொழியில் புகழ்பெற்றதாக அறியப்பட்ட கல்வெட்டுகளில் ஹல்மிதி கல்வெட்டு ஒரு பழமையான கல்வெட்டாகும். இதற்கு முன்னர், கர்நாடக எழுத்துகளுடன், அசோகப் பேரரசரின் கி.மு. 230 ஆம் ஆண்டின் பிரம்மகிரிக் கட்டளைக் கல்வெட்டைப் போல, பல கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனினும், இது கன்னடத்தில் வெட்டப்பட்ட முதல் முழு நீளக் கல்வெட்டு ஆகும்.

ஹல்மிதி கல்வெட்டு என்று அழைக்கப்படும் இக்கல்வெட்டு ஹல்மிதி கிராமத்தில் 2.5 அடி உயரமும் ஒரு அடி அகலமும் கொண்ட ஒரு செவ்வக வடிவ மணற்கல் பாறை மீது பதினாறு வரிகளில் வெட்டப்பட்டுள்ளது. கல்வெட்டுக்கு மேலே ஒரு விஷ்ணு சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது. பழமையான கன்னட மொழியில் உள்ள இந்தக் கல்வெட்டு தொன்மையான கன்னட மொழியின் (Proto-Kannada) தனிச்சிறப்பான சிறப்பியல்புகளுடன் அமைந்துள்ளது. அறிஞர்கள் இந்த எழுத்து முறை “பூர்வத ஹளேகன்னட” (தொன்மையான கன்னடம்) பொதுவான பண்புகளைக் கொண்டுள்ளன. இந்த எழுத்துமுறை தமிழ் பிராமி எழுத்துக்களை ஒத்திருக்கிறது அக்காலத்தில் கன்னடம் ஒரு மொழி நிர்வாக மொழியாகப் பயன்படுத்தப்பட்டது என்பதை இக்கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. ஹல்மிதி கல்வெட்டின் ஒலிபெயர்ப்பு (transliteration) ஆங்கிலத்திலும் தமிழ் மொழியிலும் கீழே தரப்பட்டுள்ளது:

 

1. jayati śri-pariṣvāṅga-śārṅga vyānatir-acytāḥ dānav-akṣṇōr-yugānt-āgniḥ śiṣṭānān=tu sudarśanaḥ (ஜயதி ஸ்ரீ பரிஸ்வாங்க ஸாரங்க வ்யானதிர் அச்ய்தா: தானவக்ஷ்னோர் யுகாந்தாக்னி சிஸ்தானான் து ஸுதர்ஸன:)
2. namaḥ śrīmat=kadaṁbapan=tyāga-saṁpannan kalabhōranā ari ka- (நம: ஸ்ரீமத் கதம்பபன் த்யாக ஸம்பன்னன் கலபோரனா அரி கா)
3. kustha-bhaṭṭōran=āḷe naridāviḷe-nāḍuḷ mṛgēśa-nā- (குஸ்த பட்டூரன் ஆளி நரிதாவிலே நாடுள் ம்ருகேச நா)
4. gēndr-ābhiḷar=bhbhaṭahar=appor śrī mṛgēśa-nāgāhvaya- (கேந்த்ராபிலர் பட்டகர் அப்போர் ஸ்ரீ மிரிகேச நாகாஹ்வயர்)
5. r=irrvar=ā baṭari-kul-āmala-vyōma-tārādhi-nāthann=aḷapa- (இர்வர் ஆ பட்டரி குலாமல வ்யோம தாராதி நாதன் அளப்ப)
6. gaṇa-paśupatiy=ā dakṣiṇāpatha-bahu-śata-havan=ā- (கண பசுபதி ஆ தக்ஷிணாபத பஹு சத ஹவனா )
7. havuduḷ paśupradāna-śauryyōdyama-bharitōn=dāna pa- (ஹவுதுள் பசுப்ரதான சௌர்யோத்யம பரிதோன் தான ப)
8. śupatiyendu pogaḷeppoṭṭaṇa paśupati- (சுபதியெந்து பொகளிப்பொட்டனான பசுபதி)
9. nāmadhēyan=āsarakk=ella-bhaṭariyā prēmālaya- (நாமதேயன் ஆசரக்கெல்லா பட்டரிய பிரேமாலய)
10. sutange sēndraka-bāṇ=ōbhayadēśad=ā vīra-puruṣa-samakṣa- (சுதன்கே ஸேந்தரக பாணோபயதேசத் ஆ வீர புருஷ சமக்ஷ)
11. de kēkaya-pallavaraṁ kād=eṟidu pettajayan=ā vija (தே கேகய பல்லவரம் காட் எறிது பெத்தஜயன் ஆ விஜ)
12. arasange bāḷgaḻcu palmaḍiuṁ mūḷivaḷuṁ ko- (அரசன்கே பால்கள்சு பல்மடியம் முழிவளும் கொ)
13. ṭṭār baṭāri-kuladōn=āḷa-kadamban kaḷadōn mahāpātakan (ட்டர் பட்டாரி குலத்தோன் ஆள கதம்பன் களத்தோன் மஹாபாதகன்)
14. irvvaruṁ saḻbaṅgadar vijārasaruṁ palmaḍige kuṟu- (இர்வ்வரும் சள்பகந்தார் விஜாரசரும் பல்மடிகே குறு)
15. mbiḍi viṭṭār adān aḻivornge mahāpatakam svasti (ம்பிடி விட்டார் அதான் அழிவோர்கே மகாபாதகம் ஸ்வஸ்தி)
The following line is carved on the pillar’s left face:
16. bhaṭṭarg=ī gaḻde oḍḍali ā pattondi viṭṭārakara (பட்டர்க் ஈ கழதே ஒட்டலி ஆ பத்தொண்டி விட்டாரகர )

Text in Kannada

ಜಯತಿ ಶ್ರೀ ಪರಿಷ್ವರ್ಙ್ಗ ಶ್ಯಾರ್ಙ್ಗ [ವ್ಯಾ]ನತಿರ್ ಅಚ್ಯುತಃ ದಾನಕ್ಷೆರ್ ಯುಗಾನ್ತಾಗ್ನಿಃ [ಶಿಷ್ಟಾನಾನ್ತು ಸುದರ್ಶನಃ ನಮಃ ಶ್ರೀಮತ್ ಕದಂಬಪನ್ ತ್ಯಾಗ ಸಂಪನ್ನನ್ ಕಲಭೋg[ನಾ] ಅರಿ ಕಕುಸ್ಥಭಟ್ಟೋರನ್ ಆಳೆ ನರಿದಾವಿ[ಳೆ] ನಾಡುಳ್ ಮೃಗೇಶನಾಗೇನ್ದ್ರಾಭೀಳರ್ ಭ್ಭಟಹರಪ್ಪೋರ್ ಶ್ರೀ ಮೃಗೇಶ ನಾಗಾಹ್ವಯರ್ ಇರ್ವ್ವರಾ ಬಟರಿ ಕುಲಾಮಲ ವ್ಯೋಮತಾರಾಧಿನಾಥನ್ ಅಳಪ ಗಣ ಪಶುಪತಿಯಾ ದಕ್ಷಿಣಾಪಥ ಬಹುಶತಹವನಾಹವದು[ಳ್] ಪಶುಪ್ರದಾನ ಶೌರ್ಯ್ಯೋದ್ಯಮ ಭರಿತೋ[ನ್ದಾನ]ಪಶುಪತಿಯೆನ್ದು ಪೊಗೞೆಪ್ಪೊಟ್ಟಣ ಪಶುಪತಿ ನಾಮಧೇಯನ್ ಆಸರಕ್ಕೆಲ್ಲಭಟರಿಯಾ ಪ್ರೇಮಾಲಯಸುತನ್ಗೆ zಸೇನ್ದ್ರಕ ಬಣೋಭಯ ದೇಶದಾ ವೀರಪುರುಷಸಮಕ್ಷದೆ ಕೇಕಯ ಪಲ್ಲವರಂ ಕಾದೆಱದು ಪೆತ್ತಜಯನಾ ವಿಜ ಅರಸಂಗೆ ಬಾಳ್ಗೞ್ಚು ಪಲ್ಮಡಿಉಂ ಮೂೞುವಳ್ಳಿಉಂ ಕೊಟ್ಟಾರ್ ಬಟಾರಿ ಕುಲದೊನಳ ಕದಂಬನ್ ಕೞ್ದೋನ್ ಮಹಾಪಾತಕನ್ ಸ್ವಸ್ತಿ ಭಟ್ಟರ್ಗ್ಗೀಗೞ್ದೆ ಒಡ್ಡಲಿ ಆ ಪತ್ತೊನ್ದಿ ವಿಟ್ಟಾರಕರ

halmidi_oldkannada_inscription_mounted

ஹல்மிதி கல்வெட்டு: ஃபைபர்கிளாஸ் பிரதி – நினைவுச்சின்னம் PC: Wikipedia

ஹல்மிதி பலகைக்கல் கல்வெட்டு, ஹல்மிதி கிராமத்தில் ஒரு மண் கோட்டையின் முன்பு கண்டெடுக்கப்பட்டதாகத் தொன்மையான கல்வெட்டினை ஆய்வு செய்த ஸ்ரீவத்ஸ எஸ். வாடி (Srivatsa S. Vati) என்பவர் கூறியுள்ளார். ஹல்மிதியின் மக்கள் இப்பலகைக்கல் கல்வெட்டின் முக்கியத்துவத்தை உணராத காரணத்தால், இக்கல்லை நீண்டநாட்களாகப் புறக்கணித்தனர். சிறிது காலத்திற்குப் பிறகு, உள்ளூர்க் கிராமவாசிகள் சிலர் இந்தக் கற்பலகையில் பொறிக்கப்பட்ட பழைய எழுத்துக்களை அடையாளம் கண்டனர். இதன் காரணமாக இக்கற்பலகையை இந்தக் கிராமத்தில் உள்ள வீரபத்ரா கோவிலுக்குக் கொண்டு சென்றனர்.

பொதுவாகக் கல்வெட்டுகளில் மங்கல வாசகத்தைத் தொடர்ந்து மன்னரின் பெயர் இடம்பெறுவது வழக்கம். மன்னரின் பெயரைக் குறிப்பிடுவது இன்றியமையாத வரலாற்றுத் தகவலாகும். காலத்தால் பழமையான சாசனங்களில் கொடையாளர் பெயர் விருதுப்பெயருடனோ அல்லது விருதுப்பெயர் இல்லாமலோ குறிப்பிடப்பட்டிருக்கும். இதன் பின்பு மன்னர்களின் புகழ்பாடும் பிரசஸ்தி இடம்பெறும். இதில் அவர்கள் உதித்த குலமும் கோத்திரத்தின் சிறப்பும் வெளிப்படும். ஹல்மிதிக் கல்வெட்டில் பிரசஸ்தி என்று அழைக்கப்படும் பகுதியைக் காணமுடியவில்லை. எனவே பல்மதியம் (ஹல்மிதி) கிராமத்தைத் தானம் வழங்கிய அரசரின் பெயர், யாருக்குத் தானம் வழங்கினார், எங்கிருந்து தானம் வழங்குகினார் அல்லது தான சாசனத்தை வெளியிட்டார் போன்ற செய்திகள் கிடைக்கவில்லை. இக்கல்வெட்டு நிறையச் சமஸ்கிருதத் சொற்களைப் பெற்றுள்ளது. இக்கல்வெட்டைப் பொறித்தவர் வேத பிராமணர்களாக இருக்கலாம். மேலும் இக்கல்வெட்டு முதலில் வீரபத்திரர் கோவிலில் பொறிக்கப்பட்டிருக்கலாம்.

கடம்ப அரசன் காகுஸ்த வர்மன் (Kakusthavarman) (ஆட்சி கி.பி. 425 – 450) மற்றும் மன்னன் பசுபதிக்கும் இடையே நிலவிய உறவை இக்கல்வெட்டின் மூலம் புரிந்துகொள்ள இயலவில்லை. பசுபதி கடம்ப அரசன் காகுஸ்த வர்மனின் அதிகாரத்தின் கீழ் ஆட்சி செய்த குறுநில மன்னனாயிருக்கலாம். எனவே பசுபதி பல்மதியம் கிராமத்தை மனமுவந்து தனது அன்பிற்குரிய வில்வித்தை பயிற்றுவித்த ஆசிரியர்களான முருகேச நாகேந்திர அபிலார் மற்றும் அவரது தந்தை முருகேச நாகஹேவியர் ஆகியோருக்கு நன்கொடையாக வழங்கினார். இவர்கள் நரிதாவு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இக்கொடை அரசன் பசுபதிக்கு வில்வித்தை பயற்றுவித்ததற்கான நன்றிக்கடனாக வழங்கப்பட்டது.

இந்த வில்வித்தை திறன் கேகாயப் பல்லவர்களைப் போரில் வென்று அவர்களை அடிபணியச் செய்ததன் மூலம் அவர்களின் கிராமத்தைக் கைப்பற்ற மன்னன் பசுபதிக்கு உதவியது. வெற்றிபெற்ற மன்னன் பசுபதி கடம்ப அரசன் காகஸ்தவர்மனைத் தன் வெற்றியின் மூலம் மகிழ்வித்தார்.

ஹல்மிதி கிராமத்தில் கைப்பற்றிய மூல ஹல்மிதி கற்பலகைக் கல்வெட்டைக் கர்நாடக மாநில அரசின், மைசூர் தொல்லியல் மற்றும் அருங்காட்சியக இயக்குநர் அலுவலகத்தில் காணலாம். ஹல்மிதி கற்பலகைக் கல்வெட்டின் கண்ணாடியிழைப் பிரதி (fibreglass replica of the Halmidi Inscription) ஹல்மிதி கிராமத்தில் ஒரு பீடத்தின்மேல் அமைக்கப்பட்டுள்ளது. தற்காலக் கன்னட ,மொழியில் ஒலிபெயர்க்கப்பட்ட இக்கல்வெட்டின் உள்ளடக்கம் ஒரு கடப்பா கற்பலகையில் பொறிக்கப்பட்டு மேற்கண்ட பீடத்தில் பதிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் இதனைப் படித்துப் பொருள் விளங்கிக் கொள்ளலாம்.

எம்.ஜி.மஞ்சுநாத் ஒரு கல்வெட்டாய்வாளர். இவர் சமண மதத்தின் “குணபஷுஷித்த நிஷாதி சாசனா” (சரணபெலகொலாவின் சந்திரகிரி மலை மீது உள்ள 271 கல்வெட்டுகளில் ஒன்று) என்னும் நிஷாதி (சல்லெஹானா சமாதி அல்லது மறைந்த மரியாதைக்குரியவர்களுக்கு எழுப்பப்பட்ட நிஷாதி கல் நினைவுச் சின்னங்கள்) கல்வெட்டுகளில் நிபுணத்துவம் பெற்றவர். கன்னட மொழியின் மிகப்பழைய கல்வெட்டு கி.பி. 400 ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்று இந்த எம்.ஜி.மஞ்சுநாத் கருதுகிறார்.

ஹொய்சளர்களின் கோவிலான பேலூர் மற்றும் ஹளேபீடுவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ஹல்மிதி வருவதற்கு தவறி விடுகிறார்கள்.

குறிப்புநூற்பட்டி

  1. Halmidi (Wikipedia)
  2. Halmidi, a forgotten slice of history Sathish G. T. The Hindu October 8, 2014
  3. Halmidi inscription proves antiquity of Kannada: Moily The Hindu Oct 24, 2004
  4. Halmidi village finally on the road to recognition  by Muralidhara Khajane The Hindu Nov 03, 2003
  5. Kannada language. Encyclopedia Braitannica. http://www.britannica.com/topic/Kannada-language 
  6. Mysore scholar deciphers Chandragiri inscription, The Hindu September 20, 2008
  7. செம்மொழி கன்னடத்தின் ஹல்மிடி கல்வெட்டு.  அகலன். மின்தமிழ்.

Sri Madan Gowda on Halmidi Inscriptions. (Youtube)

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in தொல்லியல், மொழி and tagged , , , , , . Bookmark the permalink.

1 Response to ஹல்மிதி கன்னட வரிவடிவக் கல்வெட்டும் கன்னட மொழியின் செம்மொழித் தகுதியும்

  1. பிங்குபாக்: தலகுண்டா பிரணவேஸ்வரா கோவில்: கடம்பர் வம்ச வரலாற்றையும், பூர்வ ஹளே கன்னட மொழியின் தொன்மையையும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.