தற்போது உலகம் முழுவதிலும் சுமார் 40 லட்சம் வலைப்பதிவுகள் (blogs) இருக்கலாம் என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. அழகு தமிழில் சுமார் 7000 வலைப்பதிவுகள் வாசிக்கக் கிடைப்பதாகத் தமிழ்மணம் சொல்கிறது. நாளிதழ்கள், வார இதழ்கள், தமிழ் மின்னூல்கள், தமிழ் நாவல்கள் எல்லாம் இன்று தமிழ் வலைப்பதிவுகளாக நமக்குக் கிடைக்கின்றன. இந்தத் தமிழ் வலைப்பதிவுகள் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களைத் தங்கள் தாய்ச் சமூகத்துடன் பிணைத்துக்கொள்ளும் ஒரு பாலமாக அமைகிறன.
இன்று இணையத்தில் தமிழ் வலைப்பதிவுகளைத் தொடங்கித் தமிழில் எழுதுவோரின் எண்ணிக்கை, நாளுக்குநாள் கணிசமாக வளர்ந்து வருகிறது. இன்று வலைப்பதிவுகளில் தமிழில் எழுதுவோர் பிழையில்லாமல் எழுதமுடியாமல் தடுமாறி வருகிறார்கள்.
தமிழ் வலைப்பதிவர்கள் தமிழில் வேகமாகத் தட்டச்சுச் செய்யும்போது பிழைகள் ஏற்படுவது இயல்பு. தமிழில் சரியாக எழுதத் தெரிந்திருந்தாலும் தட்டச்சுச் செய்யும்போது பிழைகள் ஏற்பட்டுவிடுகின்றன. வேறு சில வலைப்பதிவர்கள் தமிழில் உள்ளிடும்போது இலக்கணப் பிழைகள் நேர்வதுண்டு. ல கர – ள கர – ழ கர வேறுபாடு; இடையின ர கரம் – வல்லின ற கரம் வேறுபாடு; மற்றும் ன கரம் (‘றன்னகரம்’) – ண கரம் (‘டண்ணகரம்’) – ந கரம் (‘தந்நகரம்’) வேறுபாட்டுடன் கூடிய மயங்கொலிச் சொற்களைப் பயன்படுத்தும் போது தோன்றும் குழப்பங்கள் மிகுதி. தமிழில் மிகுதியாகக் காணப்படுவது சந்திப்பிழைகள் என்னும் ஒற்றுப் பிழைகளாகும். வலி மிகும் இடங்களில் மிகாமலும், தேவையற்ற இடங்களில் மிகுந்தும் எழுதப்படுவதைச் சந்திப்பிழை என்று அழைக்கிறோம். தமிழில் சில சொற்களுக்குப் பின்னர் வரும் சொற்களில் ககரம், சகரம், தகரம், பகரம் ஆகிய வல்லெழுத்துக்கள் எழுத்துக்களில் தொடங்கும் சொற்கள் இருந்தால் அவ்விரண்டு சொற்களுக்கும் இடையே வல்லின மெய் எழுத்து மிகும். இவ்வாறு வல்லினம் மிகும் இடங்களில் க், ச், த், ப் என்ற வல்லெழுத்துக்கள் தோன்றும் (வல்லெழுத்து மிகும்).
தமிழ் இலக்கணத்தை எளிமையாகக் கற்றுத் தரும் நூல்கள் தமிழில் குறைவாகவே காணப்படுகின்றன. இலவசக் கொத்தனாரின் ஜாலியா தமிழ் இலக்கணம்; அ.கி.பரந்தாமனாரின் நல்ல தமிழ் எழுத வேண்டுமா? ஆகிய இரண்டு நூல்களும் தமிழ் இலக்கணத்தை எளிமையாகவும் இலகுவாகவும் கற்றுத்தரும் நூல்களாகும். கவிஞர் மகுடேஸ்வரனின் வலைப்பதிவுகள் மற்றும் யூட்யூப் காணொளிகள் தமிழ் இலக்கண விதிகளை எளிதாகக் கற்றுக்கொள்ள உதவும். இவ்வரிசையில் என்.சொக்கனின் நல்ல தமிழில் எழுதுவோம என்ற நூலும் சேர்ந்துள்ளது.
இந்த நூல் தமிழ் இலக்கணத்தை முழுமையாகப் படிக்க ஆர்வம் இல்லாத ஆனால் அன்றாடம் இணையத்தில் தமிழில் எழுதும் ஆர்வம் உள்ளவர்களுக்குப் பயனுள்ள நூலாகும். இந்த நூல் இலக்கணப் பிழையின்றி நல்ல தமிழில் எழுதுவது பற்றி எளிமையாகவும் இனிமையாகவும் கற்றுத்தரும் நூலாகும். மிகக் குறுகியகாலப் பயற்சி நூல் எனலாம். உடனடியாகப் பிழை திருத்த இந்நூலைப் பயன்படுத்தலாம்.
பள்ளிநாட்களில் தேர்வையும் மதிப்பெண்களையும் முன்னிறுத்தியே நம்மில் சிலர் இலக்கணம் கற்றுக்கொண்டோம். தொல்காப்பியம் மற்றும் நன்னூல் சூத்திரங்கள் நம்மை வேண்டிய அளவு பயமுறுத்தின. என். சொக்கனின் ‘நல்ல தமிழில் எழுதுவோம்’ என்ற நூலில் இடம்பெறும் விளக்கங்கள் மிக எளிமையானவை ஆகும். மரபு இலக்கண நூல்கள் இவற்றைப் போன்ற விளக்கங்களுடன் தமிழ் இலக்கணத்தை எளிமையாகவும் இனிமையாகவும் கற்றுத்தர முடியுமா? என்பது சந்தேகமே.
தமிழ் இலக்கணம் பயிற்றுவிக்க நாம் அன்றாட நடைமுறை வாழ்வில் பயன்படுத்தும் எடுத்துக்காட்டுகள் இந்த நூல் முழுதும் கையாளப்பட்டுள்ளன. அளபெடையை எளிமையாக விளக்க ஆசிரியர் சினிமா வசனங்களைக் கையாள்வது புதுமை. இலக்கியங்களிலிருந்தும் எடுத்துக்காட்டுகள் உள்ளது சிறப்பு.
‘நல்ல தமிழில் எழுதுவோம்’ என்ற இந்த நூலின் முற்பகுதியில், அதாவது 134 பக்கங்கள் வரை, தமிழ் இலக்கணம் மிகவும் எளிமைப்படுத்தி விளக்கப்பட்டுள்ளது சிறப்பு. இதைத் தொடர்ந்து திரு. என். சொக்கன் அவர்கள் வலைப்பதிவில் பதிவிட்ட இலக்கணப் பாடங்கள் தொகுக்கப்பட்டு அடுத்த 120 பக்கங்களில் தரப்பட்டுள்ளது. இந்த இலக்கணப் பாடங்கள் தமிழில் புழங்கும் சொற்கள் பற்றிய விரிவான அலசல் ஆகும். இவை வாசகர்களுக்கு மிகவும் பயன்படும்.
என்.சொக்கனின் நல்ல தமிழில் எழுதுவோம் என்ற இந்த நூல் ஒவ்வொருவரும் வாசிக்கவேண்டிய நூல் எனலாம். இந்த நூலில் எளிமையாகக் கையாளப்பட்டுள்ள தமிழ் இலக்கண விளக்கங்களை ஊன்றிப் படித்து நினைவில் இருத்திக் கொண்டாலே பிழையற்ற தமிழ் கைகூடும்.
நூல் பெயர் ; நல்ல தமிழில் எழுதுவோம்
நூலாசிரியர் : என்.சொக்கன்
பக்கங்கள் : 256
விலை : ரூ.200/- கிண்டில் பாதிப்பு ரூ. 150/-
வெளியீடு : கிழக்குப் பதிப்பகம்,
177.103, முதல் தளம், அம்பாள்ஸ் பில்டிங், லாயிட்ஸ் ரோடு,
சென்னை – 600 014.
தொடர்பெண் : 91-44-4200-9603