இந்தியாவின் மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சகம் (Union Ministry for Culture, Government of India), தெலுங்கு மொழியை இதன் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத் தகுதிகளின் அடிப்படையிலும் செம்மொழி (Classical language శాస్త్రీయ భాష) என்று வகைப்படுத்த வல்லுநர் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு அளித்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டு, 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தெலுங்கு மொழியைச் செம்மொழி (Classical language శాస్త్రీయ భాష) என்று, வகைப்படுத்தித் தகுதி வழங்கியுள்ளது.நடுவண் பண்பாட்டு அமைச்சகம் தெலுங்கிற்கான செம்மொழி வல்லுநர் குழு ஒன்றை அமைத்து அதன் பரிந்துரையின்படி 2008 நவம்பரில் இல் தெலுங்கைச் செம்மொழியாக அறிவித்தது.
செம்மொழித் தகுதிபெற 1500 முதல் 2000 ஆண்டுகள் வரை பழைமை வாய்ந்த இலக்கியங்கள் மற்றும் பதிவுபெற்ற வரலாற்றினை ஒரு மொழி பெற்றிருக்கவேண்டும் என்பது அத்யாவசியத் தகுதியாகும். இந்த அடிப்படையில் .தொல்லியல் அளவீட்டுத் துறையினர் (Archaeological Survey of India ASI), சென்னை வட்டம் (Chennai Circle) நடத்திய கள ஆய்வில் மிகவும் தொன்மையான தெலுங்குக் கல்வெட்டு ஒன்றைக் கண்டறிந்தனர். ஆந்திரப் பிரதேச மாநிலம், இராயலசீமா புவியியல் பகுதி, ஒய்.எஸ்.ஆர். மாவட்டம், எர்ரகுண்டலா மண்டல், கலமல்லா (కాలమళ్ళ) கிராமம் பின் கோடு 516310, சென்னகேசவப் பெருமாள் கோவிலில் (இதன் அமைவிடம் 14° 42′ 58.0176” N அட்சரேகை 78° 28′ 26.472” E தீர்க்கரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 171 மீட்டர் ஆகும்) கண்டறியப்பட்ட கல்வெட்டு ரேணாட்டு சோழன் எரிகல் முத்துராசு தனஞ்செயன் வர்மா (Renati Chola King Erikal Muturaju Dhanunjaya Varma) பற்றியதாகும். இக்கல்வெட்டின் எழுத்தமைதியை ஆய்ந்தபின் இதன் காலம் கி.பி. 575 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாயிருக்கலாம் என்ற முடிவிற்கு வந்தனர். செம்மொழி (Classical language) என்று, வகைப்படுத்தித் தகுதி வழங்க இக்கல்வெட்டை மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சகத்திற்கு (Union Ministry for Culture, Government of India), சான்று ஆவணமாகச் சமர்ப்பித்துள்ளனர்.

கலமல்லா கல்வெட்டு PC: Telugusociety.blogspot.in
தெலுங்குச் சோழர்கள் தொண்டைமண்டலத்துக்கும் வேங்கை நாட்டுக்கும் இடைப்பட்ட ஆந்திராவின் ராயல்சீமை பகுதிகளில் கிபி 13-ம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்து வந்துள்ளனர். இவர்கள் கிழக்குச் சாளுக்கியர்கள், பல்லவர்கள், பிற்காலச் சோழர்கள் ஆகியோருக்கும் கீழும் இருந்து வந்துள்ளனர். இந்தத் தெலுங்குச் சோழர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் வேலநாட்டுச் சோழர்கள், ரேணாட்டுச் சோழர்கள், பொத்தாப்பிச் சோழர்கள், கோணிதேணாச் சோழர்கள், நன்னூர்ச் சோழர்கள், நெல்லூர்ச் சோழர்கள் ஆகியோர் ஆவர்.
ரேணாடு என்பது சாளுக்கிய நாட்டிற்கும் பல்லவ நாட்டிற்கும் இடையே அமைந்திருந்த சிறு நாடாகும். தற்போதைய ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு உட்பட்ட ‘கடப்பா’, ‘கர்நூல்’ ஆகிய மாவட்டங்களைக் கொண்டிருந்தது. நரசிம்மவர்மன் காலத்தில் இந்தச் சிறிய நாட்டை ஆண்டவர்கள் ரேணாட்டுச் சோழர்கள் என்றழைக்கப்பட்டனர். யுவான் சுவாங்கின் பயணக் குறிப்பின் அடிப்படையில் சிலர் தெலுங்குச் சோழர்களைக் கி.பி 7 ஆம் நூற்றாண்டு முதல்13 ஆம் நூற்றாண்டுவரை ஆண்டவர்கள் என்று கருதுவது உண்டு. ரேணாட்டுச் சோழர்கள் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு: பார்வை 1 பார்வை 2

ஸ்ரீ சென்னகேசவ சுவாமி கோவில், கலமல்லா எர்ரகுடிபாடு கிராமம் PC: Indian Temples List
கலமல்லா கிராமத்தில் ஸ்ரீ சென்னகேசவ சுவாமி கோவில் வளாகத்தில் ஒரு ஓரத்தில் கிடத்தப்பட்டிருந்த உடைந்த தூண் ஒன்றின் இரண்டு பக்கங்களிலும் 17 வரிகளில் வெட்டப்பட்ட கலமல்லா தெலுங்கு மொழிக் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. இதில் நான்கு வரிகள் (12 – 15) சிதைந்து உள்ளன. சென்னையைச் சேர்ந்த கல்வெட்டாய்வாளர்கள் கி.பி. 1904 ஆம் ஆண்டில் இக்கல்வெட்டு பற்றி ஆய்வு மேற்கொண்டனர். இக்கல்வெட்டு தெலுங்கு மொழியின் முதல் கல்வெட்டு என்று கண்டறிந்தனர். இது பற்றிக் கடப்பாவைச் சேர்ந்த எழுத்தாளரும், சாகித்ய அகாதமியின் யுவ புரஸ்கர் விருது பெற்றவருமான டாக்டர் கங்காதர் சென்னை, எழும்பூர் அருங்காட்சியகத்தின் ஆணையருக்கு எழுதிய கடிதத்திற்கு வந்த பதில் அதிர்ச்சி தருவதாயுள்ளது. திரு. எஸ்.செல்வராசு, துணை இயக்குனர், அருங்காட்சியகம், எழும்பூர், சென்னை அளித்த பதிலில் கலமல்லா கல்வெட்டுச் சென்னை அருங்காட்சியகத்தில் இல்லை என்று தெரிவித்துள்ளார். திரு.கே.நீலகண்ட சாஸ்திரி மற்றும் எம்.வேங்கடராமையா ஆகிய இரண்டு ஆய்வாளர்களும் கலமல்லா கல்வெட்டை 1947-48 ஆம் ஆண்டுகளில் ஆய்வு செய்து ஒரு ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுள்ளனர் என்பது மட்டுமே இந்த அருங்காட்சியகத்தில் கலமல்லா கல்வெட்டு பற்றிக் கிடைக்கும் செய்தியாகும்.
களமல்ல கல்வெட்டுப் பாடமும் விளக்கமும்.
கல்வெட்டு பாடம்:
……../ కల్ముతురా / జు ధనంజ / య ఱు రేనా / ణ్డు ఏళన్ / చిఱుంబూరి / రేవణకాలు / (పం) పు చెనూరు కాజు / ఆఱికాశా ఊరి / ణ్డవారు ఊరి / న వారు ఊరిస…/ హాపాతకస / కు
….. / kalmutura / ju dananja / ya ru raina / ndu elen / chirumburi / raivanakalu (pam) / pu chenuru kaju / arikasa ori / ndavaru ori / na vaaru orisa…. / hapatakasa / ku
… / கல்முத்துரா / ஜு தனஞ்ஜ / ய ரு ரைனா / ண்டு ஏலன் / சிறும்பூரி /ரைவணகாலு (பம்) / பு செனூரு காஜு / அரிகாசா ஊரி / ண்டவாரு ஊரி / னவாரு ஊரிச …. / ஹபாத கச / கு
1. ……………….
2. కల్ముతురా கல்முத்துரா
3. జు ధనంజ ஜ தனன்ஜ
4. య ఱు రేనా ய ரு ரைனா
5. ణ్డు ఏళన్ ண்டு ஏலன்
6. చిఱుంబూరి சிறும்பூரி
7. రేవణకాలు (పం) ரைவணகாலு(பம்)
8. పు చెనూరు కాజు பு செனூரு காஜு
9. ఆఱికాశా ఊరి அரிகாசா ஊரி
10. ణ్డవారు ఊరి ண்டவாரு ஊரி
11. న వారు ఊరిస… னவாரு ஊரிச
12.
13.
14.
15.
16. హాపాతకస ஹபாதகச
17. కు. கு
தனஞ்சயன்:- குற்றம் இல் கிருட்டிணன், பற்குனன், தனஞ்சயன், காண்டீவன், வெற்றி சேர் சவ்வியசாசி வீபற்சு, விசயன், பார்த்தன், சொற்ற கேசவர்க்குத் தோழன், சுவேத வாகனன், கிரீடி, அற்றமில் அர்ச்சுனற்கே அமைந்த பேர் பன்னொன்றாமே! (சூடாமணி நிகண்டு)
கல்வெட்டுப் பொருள்: (மொழிபெயர்ப்பு)
எரிகல் முத்துராஜு தனஞ்சயரின் ரைணாட்டை எதிர்த்துச் சண்டையிட சிறும்பூர் ரைவண்ணன் காலாட்படையை அனுப்பியதும் செனூரு காஜு (ஆரிகாசா) ஏளனமாகக் கொக்கரித்துச் சத்தமிட்டு சண்டைக்குப் புறப்பட்டான். அச்சமயம் (ஊரிண்டவாரு) ஊர்ப்புறம் வாழ்ந்த (இண்டர் – இடையர், கீழ்க்குலத்தோர்) கீழ்க்குலத்தவர்களும் (ஊரினவாரு) ஊரிலுள்ளவர்களும் ஊரின் (ஒரு இடத்தில் ஒன்றாகத் திரண்டனர்) – – – – (பாதகசகு) நடையைப் பின்வாங்கினர்
கலமல்லா கல்வெட்டைப் பொறித்தவர் எவர்?
பொதுவாகக் கல்வெட்டுகளில் மங்கல வாசகத்தைத் தொடர்ந்து மன்னரின் பெயர் இடம்பெறுவது வழக்கம். மன்னரின் பெயரைக் குறிப்பிடுவது இன்றியமையாத வரலாற்றுத் தகவலாகும். காலத்தால் பழமையான சாசனங்களில் கொடையாளர் பெயர் விருதுப்பெயருடனோ அல்லது விருதுப்பெயர் இல்லாமலோ குறிப்பிடப்பட்டிருக்கும். இதன் பின்பு மன்னர்களின் புகழ்பாடும் பிரசஸ்தி இடம்பெறும். இதில் அவர்கள் உதித்த குலமும் கோத்திரத்தின் சிறப்பும் வெளிப்படும். ரேணாட்டு அரசன் தனஞ்சயனின் பிரசஸ்தி எனப்படும் மெய்கீர்த்தியோ அல்லது பிற ரேணாட்டு அரசகுலத்து முன்னோர் பற்றிய செய்திகளோ இக்கல்வெட்டில் காணப்படவில்லை. எனவே இது ரேணாட்டு அரசன் பொறித்த கல்வெட்டு அல்ல என்று கருதலாம். இந்தக் கல்வெட்டில் தனிநபர்களின் பெயர்களைத் தவிர வேறு சமஸ்கிருதச் சொற்கள் ஏதும் காணப்படவில்லை. எனவே இக்கல்வெட்டை வேத பிராமணர்கள் வெட்டியிருக்க வாய்ப்பில்லை. மக்களிடம் அதிகம் புழங்கும் பேச்சுவழக்குத் தெலுங்கு மொழி இக்கல்வெட்டில் கையாளப்படுகிறது. அன்னியர் படையெடுப்பின் காரணமாகப் பெரும் இக்கட்டிலிருந்த கலமல்லா ஊர் மக்கள், படையெடுத்து வந்தோர் தம் நடையைப் பின்வாங்கிக் கொண்டதைக் கண்டு துன்பம் நீங்கிய காரணத்தால் கோவிலில் இக்கல்வெட்டை வெட்டியிருக்கலாம்.
கலமல்லா கல்வெட்டின் காலம் பற்றிய குறிப்பு:
South Indian Inscriptions Vol. X Early Cholas of Renadu No. 607. (A. R. No. 380 of 1904.
On two faces of a broken pillar lying in the court-yard of the temple of Chennakesavasvami at Kalamalla, Kamalapuram Taluk, same District. Undated.
Damaged and unintelligible. Mentions Dhananjaya and Rena[ndu].)
தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 10 இல் முற்கால ரேணாட்டுச் சோழர் (South Indian Inscriptions Vol. X Early Cholas of Renadu) காணப்படும் கலமல்லா கல்வெட்டின் காலம் அல்லது எழுத்தமைதி பற்றியோ அல்லது இதன் பழமை பற்றியோ எந்தவிதமான குறிப்பும் காணப்படவில்லை.
டாக்டர்.வேம்பள்ளி கங்காதர் தெலுங்கு மொழியில் எழுதி தேவினேனி சீதாரவம்மா அறக்கட்டளையால் (Devineni Seetharavamma Foundation) வெளியிடப்பட்ட “தொலி தெலுகு சாசனம்” (முதல் தெலுங்குக் கல்வெட்டு – First Telugu inscription) என்னும் நூல் டிசம்பர் 2013 ஆம் ஆண்டு களமல்லா கிராம மக்களால் ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோவிலில் வெளியிடப்பட்டது. இந்நூல் ரேணாட்டுச் சோழர் வரலாறு, தெலுங்கு மொழியை வளர்க்க ரேணாட்டுச் சோழர்கள் ஆற்றிய அரும்பணிகளைப் பற்றி விவரிக்கிறது.
குறிப்புநூற்பட்டி
- செம்மொழி தெலுங்கின் கலமல்லா கல்வெட்டு சேஷாத்ரி ஶ்ரீதர் 28 October 2015
- Sri Lakshmi Chenna Kesava Swamy Temple At Yerragudipadu, Kadapa. Indian Temples List. Blogspot. http://indiantempleslist.blogspot.in/2014/11/sri-lakshmi-chenna-kesava-swamy-temple-yerragudipadu-kamalapuram-kadapa.html
- First Telugu inscription missing The Hindu April 07, 2013 http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/first-telugu-inscription-missing/article4590145.ece
- It’s official: First Telugu inscription disappears. S Nagaraja Rao. The New Indian Express 07th April 2013 http://www.newindianexpress.com/states/andhra_pradesh/article1534370.ece
http://www.thehindu.com/news/national/classical-status-for-telugu-kannada-sc-declines-to-intervene/article75642.ece - Villagers release book on Telugu inscription The Hindu December 29, 2013 http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/villagers-release-book-on-telugu-inscription/article5514589.ece
சிறந்த ஆய்வுப் பதிவு
தொடருங்கள்
LikeLike
நன்றி
LikeLike
சுவாரஸ்யமான தகவல்கள். தெலுங்கிலும் வேறு சோழர்கள் உண்டா?
LikeLike
ஆமாம் ஐயா. சோழர்களது ஆட்சி தமிழகத்தில் வலுவிழந்தபின் சோழர்களில் ஒரு பிரிவினர் ஆந்திர மாநிலத்துக் கர்நூல், கடப்பை ஆகிய பகுதிகளில் ஆட்சி புரிந்து வந்தனர். இவர்கள் தெலுங்குச் சோழர்கள் என அழைக்கப் பெற்றனர்..இவர்கள் கரிகாற்சோழன் வழிவந்த தெலுங்குச் சோழர்கள் எனக் கூறிக்கொண்டதையும் ஆந்திர நாட்டுக் கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.
LikeLike
அருமையான தகவல்கள்….வாழ த்துகள்
LikeLike