மேகுட்டி சமணக் கோவில் (Meguti Jain temple) இரண்டாம் புலிகேசி (கி.பி. 609–642) காலத்தில் சிறிய குன்றின்மீது கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்களில் ஒன்று. இந்தக் கோவில் இதன் ஆரம்பக் கட்டத்தைக் கடந்து முற்றுப்பெறவேயில்லை. இந்தச் சமணக் கோவில் 24 ஆம் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் புலிகேசியின் அவையில் இடம்பெற்றிருந்த மகா கவிஞரும், அறிஞரும், படைத்தலைவருமான இரவிகீர்த்தி என்பவரால் கி.பி. 634 – 635 ஆம் ஆண்டுகளில் இக்கோவில் கட்டப்பட்டது. இரவிகீர்த்திப் புகழ் வாய்ந்த ஐஹொளே கல்வெட்டை (கி.பி. 624 ஆம் ஆண்டு) மேகுட்டி கோவில் வெளிப்புறச் சுவற்றில் பொறித்ததாக அக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. இந்த மேகுட்டி சமணக் கோவில் மற்றும் ஐஹொளே கல்வெட்டுப் பற்றி இப்பதிவில் காண்போமா?
மேகுட்டி சமணக் கோவில் (Kannada: ಮೆಗುಟಿ ಜೈನಲಾ), கர்நாடகா மாநிலம், பாகல்கொடு மாவட்டம், ஹூன்குந்த் வட்டம் ஐஹோளே (Kannada ಐಹೊಳೆ, English: Aihole) பின் கோடு 587124 என்னும் ஊரில் அமைந்துள்ளது. ஐஹோளேக்கு, ஐயவோளே (Ayyavoḷe) மற்றும் ஐயபுரா (Ayyapura) என்ற பெயர்கள் இருப்பதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. மேலைச் சாளுக்கியர்களின் கட்டடக்கலைக்கு பெயர்பெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கலைக்கோவில்களின் வளாகம் மலப்பிரபா (Kannada: ಮಲಾಪ್ರಬಾ, English: Malaprabha) ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. ஐஹோளே என்ற பெயர் எப்படி வந்தது? கன்னடத்தில் “ஐய ஹோளே” (Ayya hole) என்றால் சமஸ்கிருதத்தில் அறிஞர்களின் நகரம் (city of scholars) என்று பொருளாம். சமஸ்கிருதத்தில் “ஐய புரா” என்று பெயர். இங்கு கி.பி. 6 முதல் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுமார் 125 கட்டுமானக் கோவில்களை (structured temples) 22 தொகுப்புகளில் காணலாம். ஐஹோளே நினைவுச்-சின்னங்கள் அடங்கிய வளாகம் இந்து கற்கோயில் கட்டடக்கலையின் தொட்டில் (‘cradle of Hindu rock architecture’) என்று புகழ்கிறார்கள். இந்திய கற்கோயில் கட்டடக்கலையின் தொட்டில் (cradle of Indian architecture) என்றும் பொருள் கொள்ளலாம். முப்பது கோயில்கள் இந்த வளாகத்திற்குள் இருக்கின்றன. மற்றவை வளாகத்திற்கு வெளியே சிதறிக்கிடக்கின்றன. ஐஹோளே நினைவுச்-சின்னங்களை (Aihoḷe monuments) உலகப் பண்பாட்டுச் சின்னம் (UNESCO World heritage site) என்று அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையிலுள்ளது.
பண்டைய மற்றும் இடைக்கால இந்து, பௌத்தம் மற்றும் சமண நினைவுச் சின்னங்களைக் கொண்டுள்ள ஐஹோளே பாதமியிலிருந்து 36 கி.மீ. தொலைவிலும்; ஹோஸ்பெட்டிலிருந்து 115 கி.மீ. தொலைவிலும்; பெங்களூருவைலிருந்து 510 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இதன் அமைவிடம் 16°1′08″N அட்சரேகை (லாட்டிட்யூட்) மற்றும் 75°52′55″E தீர்க்கரேகை (லாங்கிட்யூட்). கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 593 மீட்டர் (1946 அடி) ஆகும். இந்தக் கிராமம் 4 கி.மீ பரப்பளவுடையது.

PC: Wikimedia Commons

PC: Standardshots.wordpress

Poetry on stone at the Meguti temple Aihole PC: Dineshkannambadi at English Wikipedia
ஒரு சிறிய குன்றின் மீது கட்டப்பட்டுள்ள மேகுட்டி சமணக் கோவிலுக்குச் செல்ல ஆறு படிக்கட்டுகள் உள்ளன. முகமண்டபமும் விமானமும் கபோதபந்தத் தாங்குதளம், பாதம் பெற்ற நான்முக அரைத்தூண்கள், போதிகைகள், வலபி பெற்றுக் கபோதத்தில் முடிகின்றன. உயர்ந்த கபோதபந்த அதிஷ்டானத்தின் மீது தூண்களுடன் கூடிய முகமண்டபத்தையடையப் படிக்கட்டுகள் உள்ளன. அதிஷ்டானத்தின் கூடு (kudu) வளைவுகளுடனான கபோதம் பாதச்சுவரைத் இணைக்கிறது. மண்டபத்தின் கைப்பிடிச்சுவற்றின் (parapet wall) மேலுள்ள அலங்கார வளைவுகளும் (friezes) வெறுமையாகவே உள்ளன. இம்மண்டபத்தின், தட்டையாய் அமைந்து வளைவான இறவானம் (curved eaves) பெற்றுள்ள, கூரையைப் பன்னிரெண்டு நான்முகத் தூண்களும் நான்கு நான்முக அரைத்தூண்களைப் போதிகைகளுடன் தாங்குகின்றன. கருவறையின் உள்ள சுவர்களின் மேல் கட்டப்பட்டுள்ள மேல்கட்டுமானம் (superstructure) பிற்காலத்தில் கட்டப்பட்டுள்ளது. விமானத்தின் வெளிப்புறச் சுவரில் அமைந்த சாலைப் பத்திகளில் உள்ள பஞ்சர அலங்கரிப்புப் பெற்ற கோட்டங்கள் வெறுமையாக உள்ளன.
முகப்பிலிருந்து உள்ளே சென்றால் ஒரு சுவற்றால் தடுக்கப்பட்ட உள்மண்டபத்தைக் காணலாம். வெளிமண்டபத்திலிருந்து சற்று உயரத்தில் அமைந்துள்ள உள்மண்டபத்திற்குச் செல்லப் படிகள் உள்ளன. உள்மண்டபத்தைக் கடந்து சென்றால் நான்கு தூண்கள் தாங்கும் கருவறை, சுவர்களுடன் அமைந்துள்ளது. கருவறையின் பின்புறச் சுவற்றில் ஒரு அருகக் கடவுளின் உருவம் உள்ளது. கருவறையைச் சுற்றிப் பிரகாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறு சன்னிதியில் காட்சி தந்த சமணப் பெண் கடவுளான யட்சி, தற்போது ஐஹொளே அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக்கப்பட்டுள்ளாள். இந்த யட்சி 24 ஆவது தீர்த்தங்கரான வர்த்தமானருடன் தொடர்புடைய சித்தயிகா என்று ஊகிக்கப்படுகிறாள். வேறுசில அறிஞர்கள் இந்த யட்சியை ஜூவாலமாலனி என்று கருதுகிறார்கள். மேலும் இந்த ஜூவாலமாலனி யட்சியின் மிகப்பழையான உருவம் என்றும் கருதுகிறார்கள்.
மேகுட்டி சமணக் கோவிலின் ஐஹொளே கல்வெட்டு:
சாளுக்கிய காலவரிசையின் முந்தைய ஆவணம் என்று மேகுட்டி சமணக் கல்வெட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கல்வெட்டு ஒரு பலகைக்கல்லின் மீது பொறிக்கப்பட்டு மேகுட்டி சமணக் கோவிலின் விசாலமான கிழக்குப் பக்கச் சுவற்றில் பதிக்கப்பட்டுள்ளது. பாதாமி சாளுக்கியர்களின் கல்வெட்டுகள் பொதுவாகச் சமஸ்கிருதத்திலும் கன்னட வரிவடிவங்களிலும் / மொழிகளிலும் காணப்படுகின்றன, இவற்றில் சில வட நாகரி வரிவடிவங்களிலும் காணப்படுகின்றன. ஐஹொளே கல்வெட்டைப் பொறித்தவர் கவிஞரும், அறிஞரும், படைத்தளபதியுமான இரவிகீர்த்தியாவார்.
இந்தக்கல்வெட்டு சக ஆண்டு 556 அதாவது கி.பி.634 ஆம் ஆண்டுச் சமஸ்கிருத மொழியில், பழைய கன்னட வடிவ எழுத்தில், பொறிக்கப்பட்டுள்ளது. சக ஆண்டிற்கும் கிரிகோரியன் ஆண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு 78 ஆண்டுகள் ஆகும். கர்நாடக கல்வெட்டுகளில் ஆண்டுகள் குறிப்பாகச் சக – ஆண்டு என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இந்தச் சக நாட்காட்டி முறை (calendar system) கி.மு. 78 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. கிறித்தவ ஆண்டிலிருந்து (நாட்காட்டி முறையிலிருந்து) சக ஆண்டுக்கு (நாட்காட்டி முறைக்கு) மாற்றுவதற்கு எண் 78 ஐ சேர்க்க வேண்டும். எ.கா., சக ஆண்டு 556 + 78 = கிறிஸ்தவ சகாப்தத்தில் கி.பி. 664 ஆகும்.
கவிஞர் இரவிகீர்த்தி மாபெரும் சாளுக்கியப் பேரரசர் இரண்டாம் புலிகேசி (கி.பி. 610-642) ஆகிய இருவரும் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள். இந்தக் கல்வெட்டின் தொடக்க வரிகள் அருகக் கடவுளை (ஜீனா) இவ்வாறு புகழ்கின்றன.
“அருகக் கடவுளின் கோட்பாடு வெற்றிபெறும். தவறாத பண்புடைய மூவுலகங்களுக்கான இறைவனின் கோட்பாடு மகிமை வாய்ந்ததும் மிக ஆழமான ஸ்யாத்வாதத்தை உடையதுமாகும்.” “May the doctrine of Jina be victorious, the doctrine of the lord of the three worlds the unfailing characteristic of which is the glorious and most profound syadvaada”
மாபெரும் பேரரசர் இரண்டாம் புலிகேசி “சத்யாஸ்ரேய” (சத்தியத்தின் உறைவிடம்) என்றும் இக்கல்வெட்டில் அழைக்கப்படுகிறார். இந்தக் கல்வெட்டு ஜெயசிம்மா, முதலாம் கீர்த்திவர்மன், முதலாம் புலிகேசி மற்றும் இரண்டாம் புலிகேசி ஆகிய பேரரசர்களின் வீரம் மற்றும் கடம்பர்கள், பல்லவர்கள், நளர்கள், லாடர்கள், மாளவர்கள் மற்றும் குர்ஜரர்கள் பால் பெற்ற வெற்றிகளைப் பற்றியும் விவரிக்கிறது. இரண்டாம் புலிகேசி நர்மதை நதிக்கரையில் ஹர்ஷவர்தனரை வென்றது முக்கியமாகக் குறிப்பிடுகிறது. இறுதியாகக் கவிஞர் இரவிகீர்த்தி, தன்னைக் காளிதாசர் மற்றும் பாராவி ஆகியோரின் கவித்திறன் மற்றும் புகழுடன் ஒப்பிட்டுக்கொள்கிறார். இந்தக் கல்வெட்டுப் பல்லவர்கள் பாதாமியை 13 ஆண்டுகள் முற்றுகையிட்டு வென்ற காலத்திற்கும் முந்தியது போல் தெரிகிறது.
பொதுவான குறிப்புகள்:-
மிகவும் மதிப்புமிக்க இக்கல்வெட்டு மேகுட்டி மலையில் அமைந்துள்ள சமணக் கோவிலில் ஒரு பலகைக் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. பத்தொன்பது வரிகளுடன் அமைந்த இந்தக் கல்வெட்டு டாக்டர் ஃபிளீட் (Dr. Fleet) என்பவரால் இந்தியன் ஆண்டிகுவாரி (Indian Antiquary) தொகுதி 67 மற்றும் 237 இல் இரண்டுமுறை தொகுக்கப்பட்டுள்ளது. இதன் திருத்தப்பட்ட பாதிப்பு டாக்டர் கீல்ஹோர்ன் (Dr. Kielhorn) என்பவரால் எபிகிராஃபியா இண்டிகா (Epigraphica Indica) தொகுதி 6 இல் வெளியிடப்பட்டுள்ளது.
Aihole Inscription of Pulikeshin II (634-635 CE)
(செய்யுள்.1) வெற்றி பெற்ற புனித ஜினெந்திரா – மூப்பு, இறப்பு மற்றும் பிறப்பிலிருந்து விலக்களிக்கப்பட்டவர். கடல் போன்ற இவரின் ஞானத்தில் உலகம் ஒரு தீவு போல உள்ளது. (Verse.) Victorious is the holy Jinendra–he who is exempt from old age, death and birth–in the sea of whose knowledge the whole world is comprised like an island.
செய்யுள்.2 அடுத்து, நீண்டகாலமாக வெற்றிகண்ட அளவிடமுடியாத பரந்த கடல் போன்ற சாளுக்கிய குடும்பம், மனிதர்களில் மாணிக்கம் போன்றவர்கள் பிறந்த இடமாக அமைந்து பூமிக்கு மகுடம் போன்று விளங்குகிறது. (V. 2.) And next, long victorious is the immeasurable, wide ocean of the Chalukya family, which is the birth-place of jewels of men that are ornaments of the diadem of the earth.
செய்யுள்.3 வீரர்களுக்கும் அறிஞர்களுக்கும் வெகுமதிகளையும் மரியாதைகளையும் அளிப்பதில் வல்லவரான “சத்யாஸ்ரேய” (சத்தியத்தின் உறைவிடம்) நீண்ட காலமாக வெற்றிபெற்று வருகிறார். வீரர்களும் அறிஞர்களும் ஒன்று சேர்ந்து எண்ணிக்கையின் அடிப்படையில் அமைந்த ஆட்சி அல்ல என்று குறிப்பிடுகிறார்கள்.(V. 3.) And victorious for very long is Satyashraya, who in bestowing gifts and honours on the brave and on the learned, both together on either, observes not the rule of correspondency of number.
செய்யுள்.4 அந்த இனத்தின் பல உறுப்பினர்கள் வெற்றியைச் சந்தித்த போது, பூமியின் விரும்பத்தகுந்தவர் என்ற பெயரில் அளிக்கப்பட்ட பட்டம் மிகவும் பொருத்தமானது (V. 4.) When many members of that race, bent on conquest, applied to whom the title of Favourite of the Earth had at last become appropriate, had passed away,-
செய்யுள்.5 சாளுக்கிய வம்சத்தின் மன்னன் ஜெயசீம வல்லபாவின் போர்க்களத்தில் வீசப்பட்ட நூற்றுக்கணக்கான ஆயுதங்களால் குதிரைகள், யானைகள் மற்றும் காலாட்படை எல்லாம் கலங்கி வீழ, ஒளிமிகுந்த வாட்களின் வீச்சில் பயந்த தலையில்லா முண்டங்களும் வீழ, சந்தேகத்திற்கிடமில்லாமல் தன்னுடைய வீரத்தால் மட்டுமே வெற்றியைத் தனதாக்கிக்கொண்டார். (V. 5.) There was, of the Chalukya lineage, the king named Jayasimha-vallabha, who in battle–where horses, footsoldiers and elephants, bewildered, fell down under the strokes of many hundreds of weapons, and where thousands of frightful headless trunks and of flashes of rays of swords were leaping to and fro–by his bravery made Fortune his own, even though she is suspected of fickleness.
செய்யுள்.6 அவரது மகன் ரணரகா என்று பெயர் பெற்றவர். தெய்வீக கண்ணியம் நிறைந்தவர். உலகின் ஒரு எஜமானர். அவர் உறங்கினாலும் கூட இவரின் மனித சக்தியை மிஞ்சிய இயல்பையும் அவரது மாண்புமிக்க வடிவத்தையும் மக்கள் அறிந்திருந்தனர். (V. 6.) His son was be who was named Ranaraga, of divine dignity, the one master of the world, whose superhuman nature, (even) when he was asleep, people knew from the pre-eminence of his form.
செய்யுள்.7 அவரது மகன் பொலிகேஷின் (புலிகேசி), சந்திரனின் அழகுக்கு ஒப்பாக இருந்ததாலும், அதிர்ஷ்டம் நிறைந்தவராக இருந்ததாலும், வாதாபியின் மணமகனாக விளங்கினார். (V. 7.) His son was Polekeshin, who, though endowed with the moon’s Beauty, and though the favorite of Fortune, became the bridegroom of Vatapipuri.
செய்யுள்.8 இப்போது கூட பூமியின் மீதுள்ள மன்னர்களாலும் வாழ்க்கையின் மூன்று குறிக்கோள்களைப் பின்தொடர முடியவில்லை; புனித நீரால் முழுக்காட்டப்பட்ட குதிரையைப் பலியிட்டு வேள்வி இயற்றியபோது பூமி ஒளிமயமாகக் காட்சியளித்தது. (V. 8.) Whose path in the pursuit of the three objects of life the kings on earth even now are unable to follow; and bathed by whom with the water of the purificatory rite, when he performed the horse-sacrifice, the earth beamed with brightness.
செய்யுள்.9 அவரது மகன் கீர்த்திவர்மன். நளர்கள், மவுரியர்கள் மற்றும் கடம்பர்கள் ஆகியோருக்கு அந்திமத்தைக் கொடுத்தவன்.. அவரது மனது, மற்றவர்களுடைய மனைவியரிடமிருந்து மனதளவில் விலகிப் போயிருந்தாலும், அவருடைய எதிரியின் அதிர்ஷ்டத்தால் ஈர்க்கப்பட்டது. (V. 9.) His son was Kirtivarman, the night of doom to the Nalas, Mauryas and Kadambas, whose mind, although his thoughts kept aloof from others’ wives, was attracted by the Fortune of his adversary.
செய்யுள்.10 யானையைப்போல பலம் பொருந்தியவனாக, பல கடம்ப மரங்களை பெருமளவில் முறித்துத் தன்னுடைய வீரத்தால் போரில் வெற்றி பெற்றவன் (V. 10.) Who, having secured the fortune of victory by his valour in war, being a scent-elephant of a king, of great strength, at once completely broke down the multitude of the broad kadamba trees–the Kadambas.
செய்யுள்.11 விருப்பத்தின் பேரில் கடவுளின் கடவுளுடைய ஆளுமையைக் கோரியபோது, அவருடைய இளைய சகோதரர் மாங்கேசா அரசராக ஆனார். புழுதி பறக்கும் குதிரைப்படையுடன் கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரையோரமாக முகாமிட்டு நாட்டின் எல்லையை விஸ்தரித்தார் (V. 11.) When his desire was bent on the dominion of the lord of the gods, his younger brother Mangesha became king, who by the sheets of dust of his army of horse, encamped on the shores of the eastern and western seas, stretched an awning over the quarters.
செய்யுள்.12 போர் முனையில் அதிர்ஷ்டம் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட, பகைவர்களாகிய காலசூரிகளின் யானை அணிவகுப்பினை சிதறடித்த, நூற்றுக்கணக்கான வீரர்களின் வாட்கள் ஒளிர்ந்தன. (V. 12.) Who in that house which was the battle-field took in marriage the damsel, the Fortune of the Katachchuris, having scattered the gathering gloom, (viz.) the array of elephants (of the adversary), with hundreds of bright-rayed lamps, (viz.) the swords (of his followers).
செய்யுள்.13 மறுபடியும், ரேவடித் தீவை வென்று ஆள விரும்பியபோது, பல ஒளிபொருந்திய பதாகைகளைக் கொண்ட அவரது மாபெரும் சேனை மதிற்சுவர்களின் மேலேறியது, கடல் நீரில் பிரதிபலித்தது, அவரது வார்த்தைக்குக் (கட்டளைக்குக்) கட்டுப்பட்டு விரைந்து அங்கு வந்த.வருணர்களின் படைகளைப் போலத் தோன்றியது. (V. 13) And again, when he was desirous of taking the island of Revati, his great army with many bright banners, which had ascended the ramparts, as it was reflected in the water of the sea appeared like Varuna’s forces, quickly come there at once at his word (of command).
செய்யுள்.14 அவரது மூத்த சகோதரனின் மகனான நஹுஷா போன்ற ஒரு கண்ணியமிக்கவரும், பொலிகேஷின் (புலிகேசி) என்னும் பெயருடையவரின் மீது அதிர்ஷ்டம் கோபங்கொண்டதன் விளைவாக, அவருடைய சித்தப்பா அவர் மேல் பொறாமை கொண்டது கண்டு வெளிதேசத்தில் மறைந்து வாழ முடிவெடுத்தார். (V. 14.) When his elder brother’s son, named Polekeshin, of a dignity like Nahusha’s, was coveted by Fortune, and finding his uncle to be jealous of him thereat, had formed the resolution to wander abroad as an exile,-
செய்யுள்.15 தனது சொந்த மகனுக்காக இராஜ்ஜியத்தைக் கைப்பற்றும் முயற்சியில், அனைத்துப் பக்கங்களிலும் மங்களேசன் பெற்ற மகத்தான வலிமை, நல்ல சக்திகளின் ஆலோசனையைப் பயன்படுத்துவதன் மூலம் அவரால் சேகரிக்கப்பட்ட ஆற்றல் எல்லாம் வெகுவாகக் குறைந்துபோயிற்று. (V. 15.) That Mangalesha, whose great strength became on all sides reduced by the application of the powers of good counsel and energy gathered by Him, abandoned, together with the effort to secure the kingdom for his own son, both that no mean kingdom of his and his life.
செய்யுள்.16 எதிரிகளால் ஆட்சி கவிழ்க்கப்பட்டு இருள் சூழ்ந்திருந்த நிலையில் அவரது தவிர்க்க முடியாத பிரகாசம் படையெடுத்ததால், பளபளப்பான கதிர்கள் மூலம் உலகம் முழுவதும் மீண்டும் ஒளி படர்ந்தது. வானம் கறுப்பு நிறமாவதை நிறுத்திய பொழுது தேனீக்களின் ஒரு திரள் போன்ற மங்கலான மேகங்கள் மின்னல்களின் மின்வெட்டொளிகளால் பதாகைகள் போன்று நடனமாட அவற்றின் விளிம்புகள் வீசும் காற்றால் நசுக்கப்பட்டன. (V. 16.) Then, on the subversion of that rule encompassed by the darkness of enemies, the whole world grew light again, invaded as it were by the lustrous rays of His irresistible splendour. Or when was it that the sky ceased to be black like a swarm of bees with thundering clouds, in which flashes of lightning were dancing like banners, and the edges of which were crushed in the rushing wind?
செய்யுள்.17 அப்பெயிகா என்று பெயர் பெற்றவரும் கோவிந்தாவும் இந்த வாய்ப்பைக் கண்டு, பாய்மரதிக்கு வடக்கே உள்ள நாட்டைக் கைப்பற்ற வேண்டி யானைப் படையினரை அணுகிய பொழுது, அவரது படை ஒன்றின் மூலம் பயத்தின் சுவையினை அறிந்து கொண்டார்கள். அவர் ஆற்றிய சேவைக்கான வெகுமதியை உடனே பெற்றுக்கொண்டார். (V. 17.) When, having found the opportunity, he who was named Appayika, and Govinda approached with their troops of elephants to conquer the country north of the Bhaimarathi, the one in battle through His armies came to know the taste of fear, while the other at once received the reward of the services rendered by him.
செய்யுள்.18 அவர் வனவாசியை முற்றுகையிட்ட பொழுது, வராடாவின் உயர் அலைகளில் விளையாடுவதற்கு ஒரு வளையத்தில் ஹாம்சப் பறவைகள் வரிசையில் அணிவகுத்து நிற்கிறது. அந்தக் கோட்டை நிலத்தின் மேற்பரப்பு முழுவதும் கடல் போன்ற அவரின் மாபெரும் படை சூழ்ந்திருக்க, பார்ப்பவருக்குத் தண்ணீரில் ஒரு கோட்டையாக உடனே மாற்றப்பட்டது போல் தோன்றுகிறது. (V. 18.) When He was besieging Vanavasi, which for a girdle has the rows of hamsa birds that sport on the high waves of the Varada as their play-place, and which by its wealth rivalled the city of the gods, that fortress on land, having the surface of the earth all around covered with the great sea of his army, to the looker-on seemed at once converted into a fortress in the water.
செய்யுள்.19 முந்தைய நாட்களில் கங்கர்கள் மற்றும் அலுப்பா அரசர்கள் ஏழு பாவங்களைத் துறந்து மகிழ்ச்சி அடைந்திருந்தாலும், அவர்களுடைய நெருங்கிய கூட்டத்தினருடன் மது அருந்துவதால் எப்போதும் போதையில் இருந்தார்கள். (V. 19.) Although in former days they had acquired happiness by renouncing the seven sins, the Ganga and Alupa lords, being subdued by His dignity, were always intoxicated by drinking the nectar of close attendance upon him.
செய்யுள்.20 கொங்கணத்தில், அவர் வழி நடத்திய கடல் அலை போன்ற மூர்க்கமான படைகளின் முன்பு, குளத்தில் உயரும் சிற்றலை போன்ற மௌரியர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். (V. 20.) In the Konkanas the impetuous waves of the forces directed by Him speedily swept away the rising wavelets of pools-the Mauryas.
செய்யுள்.21 புரத்தை (Pura) அழித்தவர் போன்று பிரகாசமான அவர் பூரியை (Puri) முற்றுகையிட்டபோது, மேலைக்கடலின் அதிர்ஷ்டம், வேட்டையாடும் யானையின் அணி வரிசையைப் போல தோன்றிய நூற்றுக்கணக்கான கப்பல்கள், தாமைரையைப் போன்ற பெருத்த கரிய மேக அடுக்குகள் கடலைப் போன்றும் கடல் வனத்தைப் போன்றும் தோன்றின. (V. 21.) When, radiant like the destroyer of Pura, He besieged Puri, the Fortune of the western sea, with hundreds of ships in appearance like arrays of rutting elephants, the sky, dark-blue as a young lotus and covered with tiers of massive clouds, resembled the sea, and the sea was like the sky.
செய்யுள்.22 லாடர்கள், மாளவர்கள் மற்றும் குர்ஜரர்கள் அவரது காந்தியின் (splendour) முன் அடிபணிந்தது, எவ்வாறு குறுநிலத் தலைவர்கள் வலிய சக்தியின் முன் அடிபணியவேண்டும் என்பதை ஆசிரியர்களாக இருந்து கற்பிக்கிறார்கள். (V. 22.) Subdued by His splendour, the Latas, Malavas and Gurjaras became as it were teachers of how feudatories, subdued by force, ought to behave.
செய்யுள்.23 அளவிடமுடியாத பலம் பொருந்திய ஹர்ஷாவின் (Harshavardhana) தாமரைப் பாதங்கள் குறுநிலமன்னர்களின் கிரீட நகைகளின் ஒளியால் பிரகாசித்தன. அவருடைய செறுக்குடைய யானைகளின் அணிவகுப்பின் முன்பு போரில் தோற்று அருவருக்கத்தக்க நிலையில் ஹர்ஷவர்தனர் இருந்தார். அவரின் முன்பு ஹர்ஷரின் முகத்தில் மகிழ்ச்சி மறைந்து அச்சம் தோன்றியது. (V. 23.) Harsha, whose lotus-feet were arrayed with the rays of the jewels of the diadems of hosts of feudatories prosperous with unmeasured might, through Him had his mirth (harsha) melted away by fear, having become loathsome with his rows of lordly elephants fallen in battle.
செய்யுள்.24 அவரது பரந்த படைகளுடன் பூமியை ஆண்டபோது அண்டை நாடான விந்தியா, ரேவா நதியின் ஒளி மங்கிய மணல் திடல்கள் அவருடைய தனிப்பட்ட காந்தியால் (personal splendour) ஓளிர்ந்தன. அவரது யானைகள் தவிர்க்கப்பட வேண்டியவை. ஏனென்றால் அவைகளின் பருத்த உடல்கள் பெரிய மலைகளைப்போல் தோற்றமளித்தன. (V. 24.) While He was ruling the earth with his broad armies, the neighbourhood of the Vindhya., by no means destitute of the lustre of the many sandbanks of the Reva, shone even more brightly by his great personal splendour, having to be avoided by his elephants because, as it seemed, they by their bulk rivalled the mountains.
செய்யுள்.25 விதிப்படி மூன்று சக்திககளைக் கூட்டிச் சேர்த்ததன் மூலமும், அவரது உன்னதமான பிறப்பின் மூலமும், மற்ற சிறந்த குணங்கள் மூலமும், மூன்று மஹாராஷ்டிரர்களையும் அவர்களது ஒன்பது மற்றும் தொண்ணூறு ஆயிரம் கிராமங்களின் இறையாண்மையைப் பெற்றதன் மூலமும் அவர் இந்திரனுக்குச் சமமாக கருதப்படுகிறார். (V. 25.) Almost equal to Indra, He by means of all the three powers, gathered by him according to rule, and by his noble birth and other excellent qualities, acquired the sovereignty over the three Maharashtrakas with their nine and ninety thousand villages.
செய்யுள்.26 வாழ்க்கையின் மூன்று முக்கியக் குறிக்கோள்களைப் பின்தொடர்வதில் அவர்களது குடும்பத்தார் காட்டும் மகத்துவங்கள் மூலமும், கலிங்கர்களையும் கோசலர்களையும் அவரின் படைகள் அச்சுறுத்தியதன் மூலம் பூமியின் மற்ற ஆட்சியாளர்களின் பெருமையை உடைத்தார். (V. 26.) Through the excellencies of their householders prominent in the pursuit of the three objects of life, and having broken the pride of other rulers of the earth, the Kalingas with the Kosalas by His army were made to evince signs of fear.
செய்யுள்.27 அவரின் கடும் முயற்சிக்குப் பின்னர் பிஷ்டபுரா அணுகுவதற்கு கடினமாக இல்லாத ஒரு கோட்டையாக மாறியது. (V. 27.) Hard pressed (pishta) by Him, Pishtapura became a fortress not difficult of access; wonderful (to relate), the ways of the Kali age to Him were quite inaccessible!
செய்யுள்.28 அவர் ஏற்படுத்திய அழிபாடுகளால் குணாலின் தண்ணீர் – பல ஆயுதங்களுடன் கொல்லப்பட்ட மனிதர்களின் இரத்தத்தின் நிறத்தைப் பெற்றது. அதில் உள்ள நிலம் யானைகளின் அணி வரிசையால் நிலம் நிறைந்துவிட்டது கரிய மேகம் சூழ்ந்த வானத்தில் சிவந்த அந்திப்பொழுது உதித்தது. (V. 28.) Ravaged by Him, the water of Kunala–coloured with the blood of men killed with many weapons, and the land within it overspread with arrays of accoutred elephants–was like the cloud-covered sky in which the red evening-twilight has risen.
செய்யுள்.29 பரம்பரை பட்டாளங்களும் மீதமுள்ளவர்களும் அடங்கிய அவரது ஆறு மடங்கான படைகள், தூய சௌரிகளையும் (chowries), நூற்றுக்கணக்கான பதாகைகளையும், குடைகளையும் உயர்த்தினார்கள். வீர உணர்வும் ஆற்றலும் மிக்க எதிரிகளின் படைகளைச் சுழற்றினார்கள். தன்னுடைய வல்லரசின் எழுச்சியை எதிர்த்த பல்லவ அரசர்களின் மகத்துவத்தை அவருடைய படைகளின் புழுதியால் காஞ்சிபுரத்தின் மதிற்சுவர்களின் பின்னால் மறையச் செய்தார் (V. 29.) With his sixfold forces, the hereditary troops and the rest, who raised spotless chowries, hundreds of flags, umbrellas, and darkness, and who churned the enemy elated with the sentiments of heroism and energy, He caused the splendour of the lord of the Pallavas, who had opposed the rise of his power, to be obscured by the dust of his army, and to vanish behind the walls of Kanchipura.
செய்யுள்.30 உடனடியாக அவர் சோழர்களைக் கைப்பற்ற முயன்றபோது, வியத்தகு கண்களில் பாயும் மீன்கள் உள்ள காவேரியின் நீரோட்டத்தை, மதநீர் சுரந்து ஒழுகும் யானைகள் நீர்ப்பாலம் அமைத்துத் தடுத்ததன் மூலம், கடலுடன் கொண்ட தொடர்பை விலக்கினார். (V. 30.) When straightway He strove to conquer the Cholas, the Kaveri, who has the darting carps for her tremulous eyes, had her current obstructed by the causeway formed by his elephants whose rutting-juice was dripping down, and avoided the contact with the ocean.
செய்யுள்.31 வெண்பனி போன்ற பல்லவப் படைகளுக்கு காய்கதிர்ச் செல்வனாக விளங்கியதால் அங்கு சோழர்களுக்கும், கேரளர்களுக்கும், பாண்டியர்களுக்கும் வளமையை ஏற்படுத்தினார். (V. 31.) There He caused great prosperity to the Cholas, Keralas and Pandyas, he being the hot-rayed son to the hoar-frost–the army of the Pallavas.
செய்யுள்.32 சத்தியாசரேயராகிய அவர் வலிய ஆற்றல்களையும், ஆதிக்கத்தையும், நல்ல ஆலோசகர்களையும் பெற்றிருந்ததனால் எல்லாத் துறைகளிலும் வெற்றிபெற்றார். முழு அதிகாரத்துடன் திகழ்ந்த அரசர்களை அகற்றினார்; கடவுளர்களுக்கும் பிராமணர்களுக்கும் வணக்கம் செலுத்தினார்; வாதாபி நகரத்திற்குள் நுழைந்து ஆட்சி புரிவது, ஒரு நகரத்தில் அதன் நிலத்தில் கருநீல கடல்நீர் அகழியில் பெருக்கெடுப்பது போலுள்ளது. (V. 32.) While He, Satyashraya, endowed with the powers of energy, mastery and good counsel,–having conquered all the quarters, having dismissed the kings full of honours, having done homage to gods and Brahmans, having entered the city of Vatapi–is ruling, like one city, this earth which has the dark-blue waters of the surging sea for its moat;
செய்யுள்.33 (இப்போது) முப்பது முப்பத்தாயிரம் மற்றும் ஐந்து ஆண்டுகள் தவிர, ஏழு நூறு ஆண்டுகள் சேர்ந்து, பாரத போர் நடந்த பின் கடந்து விட்டது;(V. 33.) (Now) when thirty (and) three thousand and five years besides, joined with seven hundred years, have passed since the Bharata war;
செய்யுள்.34 கலியுகத்தின் சக அரசர்களின் ஐம்பது (மற்றும்) ஆறு மற்றும் ஐந்நூறு ஆண்டுகளும் கூட சென்றிருக்கையில்; (V. 34.) And when fifty (and) six and five hundred years of the Saka kings also have gone by in the Kali age;
(ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கணிதவியலாளர் ஆர்யபட்டா, மகாபாரதப் போரின் தேதி சுமார் கி.மு. 3100 என்று மகாபாரதத்தில் பதிவு செய்யப்பட்ட கோள்களின் நிலைகளிலிருந்து கணித்தார். பேராசிரியர் சி.வி. வைத்தியா மற்றும் பேராசிரியர் ஆப்தே ஆகியோர், கி.மு. 3101 என்று கணித்துள்ளார்கள். ஸ்ரீ. கோட்டா வெங்கடாசலம் கி.மு 3139 என்று கணக்கிடுகிறார். வானவியல் குறிப்புகள் மற்றும் இதர ஆதாரங்களைப் பயன்படுத்தி, டாக்டர் வர்தக் மஹாபாரதப் போர் தொடங்கியது கி.மு. 5561 ஆம் ஆண்டு அக்டோபர் 16 தேதி என்று நிறுவுகிறார். சில அறிஞர்கள் கோவில்களிலும் பிற இடங்களிலும் காணப்பட்ட கல்வெட்டுகளைச் சார்ந்து மகாபாரதப் போரின் தேதியை உறுதிப்படுத்துகிறார்கள். வேறு மாற்று இல்லை என்பதால், இந்த முறை ஏற்றுக்கொள்ளத்தக்கது. அனைத்து அறியப்பட்ட கல்வெட்டுகளும் கி.பி. 400 ஆம் ஆண்டிற்குப்பின் என்று கணிக்கப்பட்டுள்ளபடியால் கல்வெட்டைச் சார்ந்திருப்பது பற்றிய கேள்வி எழுகிறது.
எல்லா அறிஞர்களும் ஐஹொளே சமணக் கோவிலில் சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியால் பொறிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டையே நம்பியுள்ளனர். இந்தக் கோவில் மஹாபாரதப் போருக்குப்பின் 30 + 3000 + 700 + 5 = 3735 ஆண்டுகளுக்குப் பின்னாலும், கலியுக சகாப்தத்தின் சக சகாப்தம் 50+6+500=556 (கி.பி. 634 ஆம் ஆண்டு) ஆண்டுகளுக்குப் பின்னாலும் கட்டப்பட்டதாய் இக்கல்வெட்டுப் பதிவு செய்துள்ளது.
இன்று சக வருஷம் 1939. எனவே 1939 – 556 = 1383 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் கட்டப்பட்டது. எனவே, (2017 – 1383 = 634) இந்தக் குறிப்பு குறிப்பிடுவது கி.பி. 634 ஆண்டாகும். இந்த நேரத்தில் 3735 ஆண்டுகள் மஹாபாரதப் போரிலிருந்து கடந்து விட்டன. எனவே மஹாபாரதப் போர் கி.மு 3101 க்குள் வருகிறது. இதுவே கலியுகத்தின் துவக்க தேதியும் ஆகும். Ref: The Scientific Dating of the Mahabharat War By Dr.P.V.Vartak https://hindunet.org/hindu_history/ancient/mahabharat/mahab_vartak.htm)
செய்யுள்.35 ஜினேந்திரரின் கற்றளியானது, மூன்று கடல்சூழ்ந்து வரம்பாகவமைந்த நிலத்தை ஆண்ட, சத்யாஸ்ரேயரின் மிக உயர்ந்த ஆதரவைப் பெற்ற அறிஞர் இரவிகீர்த்தியால் எல்லா வகையான மகத்துவங்களுடனும் கட்டப்பட்டிருக்கிறது (V. 35.) This stone mansion of Jinendra, a mansion of every kind of greatness, has been caused to be built by the wise Ravikirti, who has obtained the highest favour of that Satyashraya whose rule is bounded by the three oceans.
செய்யுள்.36 இவற்றுள் இந்தப் புகழ்ச்சியுரை (eulogy) மற்றும் மூவுலகிலும் போற்றப்படும் ஜினக் (அருகக்) கடவுளின் உறைவிடம் என்பனவற்றின் ஆசிரியரும் நிறுவுனரும் அறிஞர் இரவிகீர்த்தி ஆவார். (V. 36.) Of this eulogy and of this dwelling of the Jina revered in the three worlds, the wise Ravikirti himself is the author and also the founder.
செய்யுள்.37 தன்னுடைய நுண்ணறிவைப் பயன்படுத்திக் கற்பனை செய்த கலை வடிவமான ஜினரின் (அருகரின்) உறைவிடத்தை உறுதியான கற்றளியாகக் கட்டியதன் மூலமும் அவருடைய கவித்திறன் மூலமும் காளிதாசர் மற்றும் பாரவிக்கு இணையான புகழைப்பெற்ற இரவிகீர்த்தி வெற்றி பெறட்டும். (V. 37.) May that Ravikirti be victorious, who full of discernment has used the abode of the Jina, firmly built of stone, for a new treatment of his theme, and who thus by his poetic skill has attained to the fame of Kalidasa and of Bharavi!
பார்வை: எபிகாபியா இண்டிகா, தொகுதி. ஆறு. கல்கத்தா: அச்சிடும் கண்காணிப்பு அலுவலகம், 1901, 7-12. From: Epigraphia Indica, Vol. VI. Calcutta: Office of the Superintendent of Government Printing, 1901, 7-12.
கல்வெட்டின் வரலாற்று மதிப்பு
முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கல்வெட்டு சாளுக்கிய குடும்பத்தின் ஒரு புகழ்ச்சி வரலாறு ஆகும்.
குறிப்புநூற்பட்டி
- சாலிவாகனசகாப்தம் விக்கிபீடியா
- Aihole Inscription of Pulikeshin II (634-635 CE) http://projectsouthasia.dstate.edu/docs/HISTORY/primarydoc/Epigraphy/AiholeInscription.htm
- Aihole Stone Inscription of Pulakesin II 634-635 A.D. https://standardshots.wordpress.com/2016/11/24/aihole-stone-inscription-of-pulakesin-ii/
- Mahabharata War Proof Aihole Inscriptions https://ramanan50.wordpress.com/2014/01/14/mahabharata-war-proof-aihole-inscriptions/
- Meguti Jain temple of Aihole http://www.jainglory.com/research/meguti
- The beginning of kaliyug. (3102 BC) https://www.encyclopediaofauthentichinduism.org/articles/51_the_bhartiya_chronology.htm
- The Scientific Dating of the Mahabharat War By Dr.P.V.Vartak https://hindunet.org/hindu_history/ancient/mahabharat/mahab_vartak.html
Thank you, very informative article.
LikeLike
பிங்குபாக்: புள்ளலூர்: காஞ்சிபுரம் அருகே ஒரு குக்கிராமத்தில் நடைபெற்ற மூன்று வரலாற்றுச் சிறப்புமிக்க போ