மங்கை ராகவன், சி. வீரராகவன், சுகவன முருகன் ‘தமிழகத்தில் லகுலீச பாசுபதம்’ என்ற தலைப்பில் எழுதி வெளியிட்டுள்ளார்கள். தமிழகத்தில் பாசுபத சைவம் எவ்வாறு பரவியது? தமிழகத்தில் பாசுபத சைவத்தின் தாக்கம் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தியது? பாசுபத சைவம் எவ்வாறு தமிழ்நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது? இது போன்ற கேள்விகளை முன்வைத்து ஆய்வுகள் மேற்கொள்வது கட்டாயம் ஆகும். இந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நூல் இது. இந்த நூல் மூன்று பிரிவுகளாக பிரித்து அமைக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவு தமிழத்தில் லகுலீசர் பற்றி விவரிக்கிறது. இரண்டாம் பிரிவு மொழிபெயர்ப்புப்பகுதிகள் ஆகும். மூன்றாம் பிரிவில் பின்னிணைப்புகள் தரப்பட்டுள்ளன. முதல் பிரிவில் பத்துக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் பகுதியில் ஆறு மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மூன்றாம் பிரிவில் ஏழு பின்னிணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.
‘ஆய்வாளர்கள் லகுலீசரை சண்டேசரையும், சண்டிகேசரை சண்டேச நாயனாருடனும் குழப்பத்துடன் அணுகுகின்றனர்.’ என்று குறிப்பிடும் ஆசிரியர்கள், தம் விளக்கங்கள் மூலம் இதுவரை நிலவி வந்த குழப்பங்களுக்கு விடைகாண முயலுகிறார்கள்..
தமிழ் நாட்டில் விழுப்புரம் மாவட்டம், மயிலம் வட்டம், வராகநதி தொண்டியாற்றின் வடகரையில் உள்ள எமதண்டீஸ்வரர் கோவிலில் விழுப்புரம் திரு. சி.வீரராகவன் அவர்களால் கண்டறியப்பட்ட, பொறிப்புப் பெற்ற, 4 – 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலகுலீசர் சிற்பம்தான் இந்த ஆய்வின் முன்னோடியாகும். இந்நூலாசிரியர்கள் தமிழகத்தில் கிடைத்த இருபதிற்கும் மேற்பட்ட லகுலீசர் பற்றிய சிற்பங்களைத் தொகுத்து வழங்கி இலகுலீச பாசுபதம் பற்றிய ஆய்வினைத் துவக்கியுள்ளார்கள்.
அரிட்டாபட்டி மற்றும் தேவர்மலை ஆகிய குடைவரைக் கோவில்கள் இலகுலீசர் சிற்பங்களைப் பெற்றுள்ளன. மாம்பழப்பட்டு, மாரங்கியூர், பெருங்கூர், சிற்றீங்கூர், (சித்தலிங்கமடம்) கப்பூர், கண்டம்பாக்கம், ஆலக்கிராமம், பூண்டி (திருவண்ணாமலை) ஓமந்தூர், வடமருதூர், ஜம்பை, சிறுவந்தாடு, கீழுர், திருவாமாத்தூர், நெடிமொழியனூர், ஆனங்கூர், இளங்காடு (வந்தவாசி), திருவொற்றியூர் (சென்னை), திருவாரூர், பேரூர் (கோவை), மேல்பக்கம் (திண்டிவனம் – விழுப்புரம்), அரிகேசநல்லூர் (நெல்லை) ஆகிய ஊர்களில் கண்டறியப்பட்ட இலகுலீசர் சிற்பங்கள் பற்றி விரிவாகப் புகைப்படங்களுடன் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் பக்கங்களில் இலகுலீசர் பற்றிய படிமவியல் (icongography) பற்றிய குழப்பங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு திருப்திகரமான விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட, பாசுபத சமயப்பிரிவைச் சேர்ந்த, மடங்களான காளாமுக மடம், கபாலிக மடம், வீரசைவ மடம், கோளகி மடம் ஆகிய மடங்கள் இருந்துள்ளமை பற்றிய வரலாற்றுச் சான்றுகள் குறித்து ஒரு அத்தியாயம் விவரிக்கிறது. தமிழகத்துக் கரோகனக் கோவில்களான கச்சி காயாரோகனம், குடந்தைக் காயாரோகனம், நாகைக் காயாரோகனத் தலங்கள் பற்றி ஒரு அத்தியாயம் விவரிக்கிறது. ஆதிசண்டேசர் லகுலீசனே என்ற கருத்து சான்றுகளுடன் விவாதிக்கப்பட்டுள்ளது.
பிற ஆசிரியர்களின் கட்வாங்கம், காசுகளில் லகுலீசர் ஆகிய இரண்டு கட்டுரைகளையும் இணைத்துள்ளது சிறப்பானது ஆகும். மட்டுமல்லாமல் ஆறு கட்டுரைகள் தமிழில் மொழிபெயர்த்து இணைக்கப்பட்டுள்ளன. இலகுலீசர் பற்றிய அறிவை விஸ்தரித்துக்கொள்ள இவை நிச்சயம் உதவும். பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் மத்தவிலாசம் நாடகக் காட்சிகளும் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளன. பெரியபுராணத்திலிருந்து சண்டேசுர நாயனார் புராணம், மதுரா தூண் கல்வெட்டு, தருமபுரி எரிக்கல்வெட்டு, வே.மகாதேவனின் “சிவபாதசேகரன் ராஜராஜசோழனின் தஞ்சைக் கல்வெட்டில் திருப்பதிகம் படியோர்,” கட்டுரை, “சிவனின் திருவடிவங்கள்,” டி .கணேசனின் “சிவாகமங்கள்; சுவடிகளும் பாதிப்பும்,” கட்டுரை, மற்றும் ஏராளமான இலகுலீசர் புகைப்படங்களின் பின்னிணைப்பு இவை எல்லாம் இந்த நூல் குறித்து விவாதிக்கும் கருத்துக்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல விவாதங்களை முன் வைக்கின்றன.
சங்ககாலத் தமிழகத்தில் பாசுபதம் பரவியிருந்தது. பாசுபத சூத்திரத்திற்கு இக்காலத்தில் வாழ்ந்த கௌண்டினியர் ‘பஞ்சார்த்த பாடியம்’ என்று உரையெழுதியுள்ளார். காரணம், காரியம், கலை, விதி, யோகம், துக்காந்தம் (விடுதலை) என்ற ஆறும் பாசுபதர்களின் சாதனங்கள் என்று பாசுபதக் கோட்பாடுகள் குறிப்பிடுகின்றன.
பாசுபதம் ஆகம அடிப்படையில் வழிபாடுகள் கொண்ட சைவப்பிரிவு ஆகும். தாந்த்ரீக அடிப்படையில் எழுந்த காளமுகம் மற்றும் கபாலிகம் போன்ற சைவ சமயப் பிரிவுகள் களப்பிரர் காலத்தில் முக்கிய பங்கு வகித்ததாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இராஜராஐன் சோழன் காலம் தொடங்கி பாசுபதம் சோழ வம்சத்தவர்களின் செல்வாக்கைப் பெற்று வளர்ந்தது. சோழர்கள் காலத்தில் எழுப்பப்பட்ட சைவக் கோவில்களில் பாசுபதம் மற்றும் கபாலிக சைவ அடிப்படைத் தத்துவங்களின் அடிப்படையிலேயே கோவிலில் பண்டிதர்கள், மகேசுரர்கள் போன்றவர்கள் பணிபுரிந்தனர்.
திருநாவுக்கரசர், தேவாரம், நான்காம் திருமுறை 20 வது திருப்பதிகம், திருவாரூர் திருமுறை பதிகங்கள் 09 பாடல் எண் 03 இல், “ஆதி சைவர்கள், சிவகணத்தார், விரிந்த சடையை உடைய, விரத ஒழுக்கம் பூண்ட மாவிரதிகள், அந்தணர், சைவர், பாசுபதர், கபாலிகள் ஆகியோர் தெருக்களில் பலராகக் காணப்படும் திருவாரூர்த் தலைவனே” என்று பாசுபதர் பற்றிக் குறிப்பிடுகிறார்.
இந்நூலுக்கு மிகச்சசிறப்பான அணிந்துரை எழுதியுள்ள வித்யாவாசஸ்பதி தொல்லியல் அறிஞர் டாக்டர். இரா. நாகசாமி அவர்கள் ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம், ஏர்பேடு மண்டல், குடிமல்லம் (Telugu: గుడిమల్లం) கிராமத்தில் உள்ள பரசுராமேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள மூலவரான சிவலிங்கம் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் இந்த இலிங்கத்தில் அபஸ்மாரன் மீது நிற்கும் சிவனை பசுபதியின் உருவாகக் கொள்ளலாம் என்றும் கருதுகிறார். தம் அணிந்துரையில் இந்நூலைப்பற்றி இவ்வாறு மதிப்புரை எழுதியுள்ளார்:
…. லகுலீசர் பாசுபத மதம், எந்த அளவுக்கு தொடர்ந்து விளங்கிவந்துள்ளதை முதன் முதலாக அன்பர்கள் வீரராகவன் தம்பதியினரும், சுகவன முருகனும் இந்நூலில் சான்றுகளோடு காண்பிக்கின்றனர்.
இந்நூல் தமிழக சைவ வரலாற்றுக்கு மிக மிக இன்றியமையாத நூலாகும். தமது ஆர்வத்தால் ஊர் ஊராகச் சென்று லகுலீசர் சிலைகளை படம் பிடித்து இந்நூலைத் தயாரித்துள்ளார்கள். கண்டறிந்த சிலைகள் மட்டுமல்ல பிறர் கண்டறிந்தவைகளையும் இணைத்து அவரவர் பெயர்களையும் ஆங்காங்கே குறித்துள்ளனர். அவரவர் கண்டுபிடிப்புகளின் விளக்கத்தையும் ஒப்புகின்ற இடமும் சற்று மாறுபாடு உண்டாகில் அவற்றையும் குறித்து நல்ல நெறியில் இந்நூலை இயற்றியுள்ளார்கள். இந்நூலை இயற்ற இவர்கள் பயன்படுத்திய படங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
இது தொடர்பாக பிறர் எழுதியுள்ள நூல்களையும் ஆய்ந்து அவற்றின் சுருக்கங்களையும் இணைத்துள்ளது நல்ல வரலாற்று நெறியாகும்.
இவர்கள் சாதாரணமானவர்கள், ஆனால் பேராசிரியர்கள் கூட வியக்கும் வகையில் எழுதியுள்ளத்தைப் பாராட்டுகிறேன். இந்த ஆய்வினால் இதுகாறும் இருண்டிருந்த தமிழ் சமயம் மட்டுமல்ல, கலை வரலாறு கூட ஒளிபெற்றுள்ளது.
கி.பி. 6 ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழக வரலாற்றை ஆசிரியர்கள் தொடங்குவது வழக்கம். ஆனால் இவரது சில சிலைகளை 4 – 5 ஆம் நூற்றாண்டுக்கும் கூட காலத்தால் முற்பட்டவையாகத் தென்படுகின்றன. இதில் உள்ள பல லகுலீசர் சிலைகளின் கால வனப்பை கண்டு நான் வியப்பை அடைந்துள்ளேன். இதை வைத்தே பல ஆராய்ச்சி நூல்கள் வரவேண்டும். எதுவாயினும் இவ்வாராய்ச்சிக்கு இது முதல் நூலாகும் என்பதில் ஐயமில்லை. இந்நூலாசிரியர்களின் தொண்டைப் பாராட்டுகிறேன், பெருமைகொள்கிறேன்.

தமிழகத்தில் லகுலீச பாசுபதம் – நூல் PC: Mahathma Selvapandian
உள்ளடக்கம்
I, தமிழக லகுலீசர்
1. லகுலீசர் தோற்றம்; 2. தமிழக லகுலீசர் சிற்பங்கள்; 3. லகுலீசர் குடைவரைகள்; 4. தமிழக லகுலீசர் சிற்பங்கள்; 5. தமிழகத்து பாசுபத மடங்கள்; 6. தமிழகத்துக் கரோகணக் கோயில்கள்; 7. ஆதி சண்டேசன் லகுலீசனே; 8. அரிய சிவவடிவங்கள்; 9. கட்வாங்கம்; 10. காசுகளில் லகுலீசர்
II மொழிபெயர்ப்புப் பகுதிகள்
1. லகுலீச பாசுபத மரபின் எழுச்சி; 2. லகுலீசரின் தென்னிந்தியப் பயணம்; 3. யோக நிலைகளில் மந்திரங்களின் பயன்பாடு; 4. சைவ சமயப் பிரிவுகள் – ஓர் ஒப்பீடு; 5. ஜம்புகேசுவரத்தில் ஒரு பாசுபத கிருஹஸ்த மடம்; 6. மத்த விலாசம்
III பின்னிணைப்புகள்
1. சண்டேசுர நாயனார் புராணம்; 2. மதுரா தூண் கல்வெட்டு; 3. தருமபுரி எரிக் கல்வெட்டு; 4. சிவபாதசேகரன் ராஜராஜசோழனின் தஞ்சை கல்வெட்டில் திருப்பதியம் பாடுவோர்; 5. சிவனின் திருவடிவங்கள்; 6. சிவாகமங்கள்: சுவடிகளும் பாதிப்பும்; 7.லகுலீசர் சிறப்புப்படத் தொகுப்பு
நூல் தலைப்பு ::தமிழகத்தில் லகுலீச பாசுபதம்
நூலாசிரியர் : மங்கை ராகவன், சி. வீரராகவன், சுகவ\ன முருகன்
பக்கங்கள் : 244
அளவு: 8′ x 10′.5″ (203 x 265 mm)
எழுத்துருஅளவு : பத்து
புத்தகக் கட்டு: பேப்பர்பேக்
விலை : ரூ.600/-
வெளியீடு : புது எழுத்து,
2/203, அண்ணா நகர்,
காவேரிப்பட்டிணம் 635112,
கிருஷ்ணகிரி மாவட்டம்
தொடர்பெண் : =91-90421 58667, 9842647101
மின்னஞ்சல்: muruguarch@gmail.com

தமிழகத்தில் லகுலீச பாசுபதம் – நூல் வெளியீடு ஓசூர். தேதி: செப்டம்பர் 16, 2017 PC: Mahathma Selvapandian Facebook
பாசுபதம் பற்றி ஒரு சிறு அறிமுகம்
சைவ சமயத்துக்குரிய அடிப்படையான தத்துவமாக எழுந்த சைவ சித்தாந்தத்தை விளக்க கி.பி. 12ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் தோன்றிய பதினான்கு நூல்களுக்கு மெய்கண்ட சாத்திரங்கள் என்று பெயர். இந்த நூல் அக்காலத்தில் வழக்கில் இருந்த 25 சமயங்களைக் குறிப்பிடுகின்றது. இவ்வாறு மெய்கண்ட சாத்திரங்கள் குறிப்பிடும் 25 சமயங்களில், சைவ சமயம் சார்ந்த சித்தாந்ததைத் தவிர்த்து, மிஞ்சிய இருபத்திநான்கு பிரிவுகளில் பன்னிரெண்டு பிரிவுகளும் அடங்கும்.
இந்த பன்னிரெண்டு பிரிவுகளை மெய்கண்ட சாத்திரங்கள் அகச்சமயங்கள் மற்றும் அகப்புறச் சமயங்கள் என்று வகைப்படுத்துகின்றன. இவை குறிப்பிடும் ஆறு அகச்சமயங்கள் பாடாணவாதம், பேதவாதம், சிவசமவாதம், சிவசங்கிராந்தம், ஈசுவர அவிகாரம் மற்றும் சிவாத்துவிதம் ஆகும். ஆறு அகப்புறச் சமயங்கள் பாசுபதம், மாவிரதம், காபாலிகம், வாமம், வைரவம் மற்றும் ஐக்கியவாத சைவம் ஆகும். தற்போது பல மாறுதல்களுக்கு உட்பட்டு எஞ்சியுள்ள சைவத்தை ஆறு பிரிவுகளில் வகைப்படுத்துகின்றனர். இவை சித்தாந்த சைவம், வீர சைவம், காஷ்மீர சைவம், சித்த சைவம், சிரௌத்த சைவம் மற்றும் பாசுபதம் ஆகியவை ஆகும்.
இந்த ஆறு சைவசமயப் பிரிவுகளுள் பாசுபதம் மிகவும் பழமைவாய்ந்தது. பாசுபதத்தின் முழுமுதற்கடவுள் பசுபதி ஆவார். காபாலிகம், மாவிரதம், காளாமுகம் போன்ற உட்பிரிவுகளும் இவற்றின் தொடர்ச்சியான நாகா மற்றும் அகோரிகளையும் பாசுபத வகைப்பாட்டில் இணைத்துக் காண்கிறார்கள்.
சிந்து சமவெளி மக்கள் பாசுபத சைவத்தின் சில கூறுகளைப் பின்பற்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பாசுபத சைவத்தினைத் தோற்றுவித்த பசுபதி (சிவபெருமான்) பல பழங்கால முனிவர்களுக்கு பாசுபத தத்துவங்களை உபதேசித்ததாகக் கருதப்படுகிறது. பாசுபதம் என்ற சொல்லுக்கு மந்தையாளர் (herdsman) கையில் வைத்திருக்கும் கோல் (staff) என்று பொருள். அடையாளபூர்வமாக இந்தக் கோல் சிவனின் கையில் உள்ள திரிசூலத்தைக் குறிப்பதுடன் இந்தத் திரிசூலத்தால் சிவன் ஆன்மாக்களின் அறியாமை மற்றும் மாசினை அழித்தார்.
பாசுபதம் ஆன்மாக்களுக்கு ஆணவ மலம் இல்லையென்றும் இந்த ஆன்மா மாயை கன்மம். என்ற இரண்டால் பந்தமுற்று இன்ப துன்பங்களே நுகரும் என்பது இதன் தத்துவம். மாயை மற்றும் கன்மம் நீங்கி இறை அறிவு பெறுவதற்கு முறையான தீட்சைபெற வேண்டும். தீட்சை பெற்ற ஒருவனிடம் பசுபதி தன் குணங்களை அவன்பால் பற்றுவித்துத் தன் அதிகாரத்திலிருந்து ஒய்வுபெறுவான். இது பாசுபதர் கொள்கை.
இலகுலீசர் (Gujarati: લકુલિસા) என்னும் நகுலீசர் (Gujarati: નાકુલીસા) பாசுபத சைவத்தைத் தோற்றுவித்தவர் என்றும் மறுமலர்ச்சிக்குள்ளாக்கியவர் என்றும் நம்பும் இருபிரிவினர் உள்ளனர். இவர் குஜராத் மாநிலத்தில், வடோதரா (Gujarati: વડોદરા) மாவட்டம், டாபோய் (Gujarati: દાભોઇ) தாலுகாவில் அமைந்துள்ள காயாரோஹன் (குஜராத்தி:કાયાવરોહણ ) கி.பி. 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதுகிறார்கள். இவருடைய சீடர்கள் கௌசிகர், கார்க்கி – கௌதமன் ஆகியோர் ஆவர். பாசுபதம் பற்றிய தத்துவங்களை சூத்திரங்களாக பாசுபத சூத்திரம் என்ற பெயரில் இயற்றியுள்ளார்.
பசுபதத்தின் உட்பிரிவுகளான காளாமுகத்திற்கு ஆகமங்கள் இருந்தனவாம். இவை காலப் போக்கில் அழிந்துபோயினவாம். சில சைவசித்தாந்த ஆகமங்கள் சிலவற்றுள், குறிப்பாக தீப்தாகமத்தில், பாசுபதம் லகுலீசம் முதலான சைவப் பிரிவுகளின் ஆகமங்கள் அவற்றின் பெயர்களுடன் குறிப்பிடப்படுகின்றன.