கூர்க் என்று அழைக்கப்படும் குடகு (கொடகு) மாவட்டம் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது. குடகு என்ற மலைப்பிரதேசத்தில் பனி படர்ந்த மலைமுகடுகள், பச்சைப்பசேலென்ற பள்ளத்தாக்குகள், பசுமையான காடுகள், மனம் கமழும் பரந்த தேயிலை மற்றும் காஃபித் தோட்டங்கள், ஆரஞ்சுப் பழத்தோட்டங்கள், அழகான நீர்வீழ்ச்சிகள், சலசலவென ஓடும் ஓடைகள் நிறைந்த, மனதிற்கினிய சில்லென்ற பருவநிலை நிலவும் இந்தச் சுற்றுலாத்தலம் “இந்தியாவின் ஸ்காட்லாந்து” என்றும் அழைக்கப்படுகிறது. கர்நாடக மாநிலம் ஹாசன், தட்சிண கன்னடா மற்றும் மைசூர் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், கேரள மாநிலம் வயநாடு மற்றும் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர்களும் குடகு மலைப்பிரதேசத்திற்கு ஒரு சில நாட்களுக்குச் சுற்றுலா செல்லப் பொருத்தமான மலை வாசஸ்தலம் ஆகும். குடகு மலையின் மேற்கு மற்றும் கிழக்குப் பக்கச் சரிவுகளில் அமைந்த ஆரவாரமில்லாத, மிதமான வேகத்தில் நகரும் சிறிய நகரங்களையும், இயற்கை அழகு கொஞ்சும் அமைதியான கிராமப்புறங்களையும் காணலாம். இம்மலை மாவட்டம் இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று பொருத்தமாகப் பெயரிடப்பட்டுள்ளது. இம்மலைப் பிரதேசத்தின் வித்தியாசமான தட்பவெப்பநிலையையும்,வியக்கத் தக்க எழிலையும், பசுமையான வனப்பையும் காண விரும்பினால் ஒருமுறை குடகுக்கு நேரில் சென்று வாருங்களேன்! ஒருமுறை சென்றால் ஆண்டுதோறும் அங்கே சென்று வருவீர்கள் என்பது உறுதி. குடகு (Kannada: ಕುಟಕು) அல்லது கூர்க் (Kannada: ಕೊರ್ಗ್) என்னும் மலநாட் மலைப்பிரதேச மாவட்டம் கர்நாடக மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும். இதன் பரப்பளவு 4,100 சதுர கி.மீ. ஆகும். இம்மாவட்டத்தின் தலைநகர் கொடகு மாவட்டம், மடிகேரி வட்டம், மடிகேரி (English: Madikeri; Kannada: ಮಡಿಕೇರಿ) பின் கோடு 571201 ஆகும். அமைவிடம் 12° 25′ 37.8804” N (12.427189) அட்சரேகை,75° 44′ 51.5148” E (75.747643) தீர்க்கரேகை ஆகும்.
கடல் மட்டத்திலிருந்து 900 மீ. (900 மீ. (2952 அடி) முதல் 1,170 மீ. (3,840 அடி) வரையான உயரத்தில் இஃது அமைந்துள்ளது. ஜனவரி மாதம் சராசரியாகக் குறைந்தபட்ச தினசரி வெப்பநிலை 11 ° C ஆகும். கோடையில் அதிகபட்ச வெப்பநிலை 24 ° C முதல் 27 ° C வரை இருக்கும். தென்மேற்கு பருவமழை தொடங்கியவுடன், ஜூன் மாதம் வெப்பநிலை குறைந்து காலநிலை ஜில் என்று மாறிக் குளிரடிக்கிறது. குறைந்த வெப்பநிலை 4.5 ° C என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நகரம் கிழக்கே மைசூர் நகரையும், மேற்கே மங்களூர் நகரையும் கொண்டுள்ளது.
குடகு: பெயர்க்காரணம்
குடகு என்ற பெயர் வழங்கும் காரணம் பற்றிப் பல கருத்துக்கள் உள்ளன. கொடவா என்னும் பழங்குடியினரின் வாழ்விடமாக விளங்கிய இப்பகுதி பழங்குடியினரின் மொழியில் “குரோத தேசா” என்ற சொல் மூலம் குடகு என்று பெயர் பெற்றிருக்கலாம் என்பது ஒரு சிலரின் கருத்தாகும். கொட்+அவ்வா= கொடவா இதன் விளக்கம் கொட் என்றால் கொடு என்றும் அவ்வா என்றால் அம்மா என்றும் பொருள். கொடவா என்ற சொல் காவிரி அன்னையை அழைக்கப் பயன்பட்டது என்பது மற்ற சிலரின் கருத்தாகும். ஆங்கிலேயர்கள் குடகு என்பதற்குப் பதில் “கூர்க்” என்றழைத்தனர்.
வரலாறு
பண்டைய தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு (குட மலைக்கு) மேற்கிலுள்ளது கடன்மலைநாடு என்றும், கிழக்கிலுள்ளது கொங்குநாடு என்றும் பெயர் பெற்றிருந்தன. கடன்மலைநாட்டின் வடபகுதி, குட்டம், குடம், துளுவம் கொங்கணம் என்று பல பகுதிகளைக் உள்ளடக்கியிருந்தது. கொங்குநாடு, குடகொங்கு (மேல் மண்டலம்), குணகொங்கு (கீழ்மண்டலம்) என இருபாகமாகப் பிரிந்து, அவற்றுள் குடகொங்கு, மீண்டும் குடகு, கருநாடு, கங்கநாடு, கட்டியநாடு ஆகிய பல நாடுகளாகப் பிரிந்து கிடந்தன.
குடகு நாட்டு மலை சங்ககாலத்தில் ‘பொன்படு நெடுங்கோட்டு இமயம்” (புறநானுறு 39 : 14,15.) என்றும் ‘பொன்படு நெடுவரை’ என்றும் (புறநானுறு 166 : 27) ‘பொன்படு மால் வரை’ (புறநானுறு : 201 : 18) என்றும் போற்றப்பட்டது. பொன் போலத் தோன்றும் மலை என்பது பொருள். இந்தக் குடகு நாட்டில் தலைக்காவேரி என்னும் இடத்தில் காவிரி ஆறு உண்டாகிறது. “குடமலைப் பிறந்த தண்பெருங் காவிரி” என்று மலைபடுகடாம் (அடி 527)
குடகு என்னும் குடமலை நாட்டை ஆண்ட கோசர் கொங்கிளங் கோசர் எனப்பட்டனர்: “கொங்கிளங் கோசர் தங்கள்நாட் டகத்து”. (சிலப். உரைபெறுகட்டுரை). பின்பு குடமலை நாட்டைத் தலைக் (தழைக்) காட்டுக் கங்கர்கள் கி.பி. 7 – 8 ஆம் நூற்றாண்டு முதல் ஆளத் தொடங்கினர். கங்கர்கள் தொடக்க காலத்தில் கொங்கணத்தை ஆண்டனர். பின்னர்க் கோலார் மற்றும் தலைக்காடு வரை தம் ஆட்சியை விரிவு படுத்தினர். கங்கர்களை ஸ்கந்தபுரக் கங்கர், தலைக்காட்டுக் கங்கர், சாம்ராஜ்யம் ஆண்ட கங்கர் என்று வகைப்படுத்துவர். கங்கபாடியை ஆட்சி செய்த கங்கர்களின் தலைநகரங்களில் ஒன்று தழைக்காடு. ஆதித்த சோழன் தலைக்காட்டு நகரைக் கங்கர்களிடமிருந்து கைப்பற்றினான். முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில், அவன் மைந்தன் முதலாம் இராஜேந்திரன் படையெடுப்பில், காவிரியின் வடகரையில் அமைந்துள்ள தழைக்காட்டை வென்று அதை ராஜராஜபுரமாக மாற்றினான். சோழர்களுக்குப் பின்பு கடம்பர்கள், சாளுக்கியர்கள் மற்றும் சங்களவர்கள் ஆகியோர் ஆட்சி புரிந்தனர். ஹொய்சாளர்கள் கி.பி. 1174 ஆம் ஆண்டுத் தங்கள் ஆட்சியை நிறுவினார்கள். கி.பி. 14 ஆம் நூற்றாண்டு முதல் விஜயநகர மன்னர்கள் குடகை வென்று தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்கள். இவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளூர் ஜமீன்களான நாயக்கர்கள் மேலாண்மை செய்தார்கள். நாயக்க ஜமீன்தார்களுக்குப் பிறகு கி.பி. 16ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரை ஹலேரி வம்சத்தின் லிங்காயத் அரசர்களால் நிர்வாகிக்கப்பட்டது. கி.பி. 1834 ஆம் ஆண்டளவில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியார் குடகு நாட்டைத் தம் ஆட்சியில் கொண்டு வந்தனர். 1947 வரை இவர்களின் நிர்வாகத்தில் அங்கமாக விளங்கியது மட்டுமின்றிச் சிறப்பாகவும் மேம்படுத்தப்பட்டது. சுதந்திர இந்தியாவின் மலை மாவட்டமாகத் திகழும் குடகில் மடிகேரி, சோமவாரபேட்டே மற்றும் வீர ராஜ பேட்டே என்ற மூன்று வட்டங்கள் உள்ளன.
மடிகேரி: பெயர்க்காரணம்
கங்க மன்னன் துர்விநீதன் “முத்தரையர்” என்றால் என்ன பொருள் என்று தன் செப்பேட்டில் கூறியிருக்கிறான். கங்க மன்னன் துர்விநீதன் “முத்தரையர்” என்பதன் பொருளைத் தன் செப்பேட்டில் கூறித் தன்னைக் கொங்கணி விருத்தராஜன் (Sanskrit: कोन्कानि विरुथरजन) (Kannada: ಕೊಂಗನಿ ಮುಥಾರಸರು; கன்னடத்தில் “கொங்கணி முத்தரசரு”) என்று கூறிக்கொள்கிறான். கி.பி. 7ஆம் நூற்றாண்டில் ஆண்ட கங்கமன்னன் முதலாம் சிவமாறனும் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் ஆண்ட கங்கன் புருஷனும் தங்கள் செப்பேடுகளில் “விருத்த ராஜா” (Sanskrit: विरुथराजा) என்றும் முத்தரசர் (Kannda: ಮುದ್ಡು ರಾಜಾ) என்றும் அழைத்துக்கொண்டனர். மடிகேரியின் முந்தைய பெயர் முட்டு ராஜ கேரி (Kannada: ಮುದ್ಡು ರಾಜಾ ಕೆರಿ; English: Muddu Raja Keri) என்ற முத்தரச கேரி ஆகும். முட்டு ராஜ கேரி என்றால் முட்டு ராஜாவின் நகரம் என்று பொருள். 1633 முதல் 1687 வரை குடகினை ஆட்சி செய்த முட்டுராஜா என்ற ஹலேரி அரசனின் பெயரால் அமைந்துள்ளது.
கூர்க் (குடகு) சுற்றுலா
கூர்க் இந்தியாவில் மிகப்பெரிய காஃபி உற்பத்தி செய்யும் மாவட்டமாகும். அராபிக் மற்றும் ரோபஸ்டா எனும் காஃபி வகைகள் இங்குப் பெருமளவில் பயிரிடப்படுகின்றன. காஃபியைத் தவிரத் தேன், ஏலக்காய், மிளகு மற்றும் ஆரஞ்சு போன்றவையும் கூர்க் பகுதியின் விளைபொருட்களாக உள்ளன. கூர்க் பகுதியில் காணத்தக்க சிறந்த இடங்களில் அழகிய காஃபித் தோட்டங்களும் அடங்கும். இந்தியாவில் அதிக மழைப்பொழிவு கொண்ட இடங்களில் இதுவும் ஒன்றாகும். காஃபி பயிர் செய்வதற்கேற்ற பருவநிலை இங்கு காணப்படுவதே இதற்குக் காரணம். எனவே ஏராளமான பசுமையான காஃபித் தோட்டங்கள் உள்ளன. கொடாவா (Kodava), துளு (Tulu), கவுடா (Gowda) மற்றும் மாப்லா (Moplah) போன்ற பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இந்த மாவட்டத்தில் வாழ்கிறார்கள். இந்தச் சமுதாய மக்கள் மற்ற இந்திய சமூக மக்களிடமிருந்து தங்கள் பழக்கவழக்கங்கள், மரபுகள், நம்பிக்கைகள், குடும்பக் கட்டமைப்பு, உணவு மற்றும் பாரம்பரிய உடைகளால் வேறுபடுகிறார்கள்.
இங்கு மக்கள் கோடவா மொழி பேசுகிறார்கள். கொடவா மொழியின் மீத, துளு, மலையாளம், தமிழ் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளின் தாக்கம் அதிகமாக உள்ளது. கூர்க் பகுதியின் பொருளாதாரம் விவசாயம், காஃபித் தோட்டங்கள், வனவியல் மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றைச் சார்ந்துள்ளது. அதிகபட்ச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்த மலைவாசஸ்தலம் நன்கு பராமரிக்கப்படுகிறது.
ராஜா சீட், அபே நீர்வீழ்ச்சி, மடிகேரிக் கோட்டை போன்ற சுற்றுலா ஸ்தலங்கள் உள்ளன. தலைக்காவிரி பாகமண்டலா, திபெத்திய தங்கக் கோயில், ஓம்காரேஸ்வரா கோயில் மற்றும் போன்ற போன்ற புனித யாத்திரைத் தலங்களும் உள்ளன. காவேரி நிசர்கதாமா, துபாரே யானை முகாம் (காப்பகம்) போன்ற இயற்கை எழில்கொஞ்சும் இடங்கள் போன்று கூர்க்கில் பார்க்க வேண்டிய இடங்களாகும். இந்த மலைப்பகுதி தாவரங்களாலும் விலங்குகளாகவும் நிறைந்திருப்பதால், இங்குத் தலைக்காவேரி, புஷ்பகிரி மற்றும் பிரம்மகிரி ஆகிய மூன்று வனவிலங்குச் சரணாலயங்கள் உள்ளன. இங்கு அமைந்துள்ள தேசிய பூங்காவான, நாகர்ஹோல் தேசிய பூங்காவில். ஆசிய யானை, புலிகள், சிறுத்தை மற்றும் காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் உள்ளன. இது தவிர, சுற்றுலாப் பயணிகள் மகிழ்விக்கும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில சுற்றுலாப் பயணிகள் துபாரே யானை முகாமில் யானைகளின் மேல் சவாரி செய்கின்றனர். சிலர் மலை ஏற்றம், கோல்ப், தூண்டில் மீன் பிடித்தல், பரிசல் சவாரி போன்ற விளையாட்டுகளில் பங்கு பெறுகின்றனர். கொடகு பகுதியின் தெற்கு பகுதியில் பிரம்மகிரி மலையிலுள்ள ‘மேல் பரபோலே’ ஆற்றுப் பகுதி பலவிதமான நீர் விளையாட்டுகளுக்குப் பிரசித்தி பெற்றது (white water rafting in Upper Barapole River). காவிரியின் உப்பங்கழி பிரதேசமான வளனூர் எனும் இடம் தூண்டிலில் மீன் பிடித்து மகிழ விரும்புவர்களுக்குப் பொருத்தமான இடமாகும்.
ராஜா சீட்

Raja’s Seat PC: Mahmure.com
மடிகேரி பஸ் நிலையத்திலிருந்து 1.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ராஜா சீட் புகழ்பெற்ற காட்சிக் கோணம் (வியூ பாய்ண்ட்) ஆகும். இவ்விடம் மடிகேரி கோட்டைக்குத் தெற்கில் நீரூற்றுகள் நிறைந்த ஒரு அழகிய பூங்கா அமைந்துள்ளது. இது மிக முக்கியச் சுற்றுலாத் தலம். மடிகேரியின் பிரபல சூரிய அஸ்தமனதைக் காணும் இடமாகும்.

ராஜா சீட் Wikimedia Commons
ராஜா சீட் என்றால் குடகு அரசர்களின் ஓய்வெடுக்கும் இடம் என்று பொருள். இப்பூங்காவின் நடுவில் சுண்ணாம்பு மற்றும் செங்கல்லால் கட்டப்பட்ட ஒரு அழகிய விதானம் நான்கு தூண்களையும், கூரை மற்றும் அலங்கார வளைவுகளைப் பெற்றுள்ளது. இது அரசர்களின் விருப்பதிற்குகந்த மனமகிழ் மையம் ஆகும். இங்கு அரசர்கள் தங்கள் இராணிகளுடன் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்து மகிழ்வார்களாம். இன்று இங்கிருந்து மக்களும் பார்க்கிறார்கள்.
உயரமான மலைகளையும், நெல் வயல்களால் நிரம்பிய பசுமையான பள்ளத்தாக்குகளையும் கொண்ட திகைப்பூட்டும்படியான காட்சிகளை இங்கிருந்து வெகுவாக ரசிக்கலாம். இந்தப் பள்ளத்தாக்கிலிருந்து ஒரு நாடாவைப் போல வளைந்து நெளிந்து மங்களூருக்குச் செல்லும் சாலையைப் பார்ப்பது இனிய அனுபவம் ஆகும். இங்கு செல்ல ஒவ்வொரு நபருக்கும் நுழைவுக் கட்டணம் ரூ .5. ஆகும். தினமும் மாலை 6:45 முதல் 7 மணி வரை ஒரு சிறிய ஒளி ஒலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. குட்டி இரயில் சவாரியை உங்கள் குழந்தைகள் விரும்புவர்.
ஓம்காரேஸ்வரா கோவில்

ஓம்காரேஸ்வரா கோவில் PC: Aiel Flickr
மடிகேரி பஸ் நிலையத்திலிருந்து 1.0 கி.மீ. தொலைவில், சிவனுக்காக 1820 ஆம் ஆண்டு ராஜா இலிங்கராஜேந்திராவால் கட்டப்பட்ட, ஓம்காரேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. .இது மடிகேரியின் பாரம்பரிய சுற்றுலாத் தலமாகும். கோவில் கருவறையில் நீங்கள் காணும் இலிங்கம் காசியிலிருந்து கொண்டுவரப்பட்டதாம். இங்கும் ஒரு புராணக்கதை உள்ளது. அரசன் பக்திமானான ஒரு அந்தணரைக் கொன்றுவிட்டான். இதன் பிறகு இவனுக்குத் துர்க்கனவுகள் வந்து துன்புறுத்தியது. தன் அரசவையில் சில அறிஞர்களைக் கலந்து ஆலோசித்தபோது, ஒரு சிவன் கோவில் கட்டினால் மனஅமைதி திரும்பும் என்று கூறினார். இவர்கள் ஆலோசனைப்படி கோவில் கட்டி, காசியிலிருந்து சிவலிங்கம் கொண்டுவரப்பட்டு இங்குப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இக்கோவில் கோதிக் மற்றும் இஸ்லாமிய பாணி கட்டிடக்கலை அமைப்புகளுடன், நடுவில் ஒரு பெரிய குவிமாடமும் (dome) நாலாபுறமும் நான்கு உயர்ந்த ஸ்தூபிகளையும் (minarets) பெற்றுள்ளது. சுவர்கள் அழகிய ஓவியங்களாலும், சாளரங்கள் பஞ்சலோக வேலைப்பாடுகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கோவிலின் வரலாறு செப்புத்தகடுகளில் பொறிக்கப்பட்டு வாசற்கதவு நிலைமேல் பதிக்கப்பட்டுள்ளது.
கோவிலின் எதிரில், நீர்வரத்து வழியுடன் கூடிய, ஒரு பெரிய குளம் உள்ளது. இக்கோவிலில் சிவராத்திரி, ஆடம்பரத்துடனும் உற்சாகத்துடனும், கொண்டாடப்படும் ஒரு பெரிய திருவிழாவாகும்.
அபே நீர்வீழ்ச்சி

அபே நீர்வீழ்ச்சி PC: Mariss Travels
மடிகேரி பஸ் நிலையத்திலிருந்து 8.0 கி.மீ. தொலைவில் அபே (Abbey) என்னும் அபி (Abbi) அருமையான நீர்வீழ்ச்சி (falls) குடகின் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் நடுவில் அமைந்துள்ளது. கூர்க் சுற்றுலாவின் ஒரு அங்கமாக அறியப்படும் இந்த நீர்வீழ்ச்சி, அதிகச் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கிறது. இந்த அருவியை ஆங்கிலேயர்கள், மடிகேரியின் பிரிட்டிஷ் கேப்டன் சாப்ளின் மகள் ஜெஸ்ஸியின் நினைவாக, ஜெஸ்ஸி அருவி என்றும் அழைத்தனர். இந்த அருவி தனியர்களின் காஃபி மற்றும் நறுமணப் பொருள் தோட்டங்களின் நடுவே அமைந்துள்ளது.
பல சிற்றருவிகளும் மிதமிஞ்சிய மழைப்பொழிவும் சேர்ந்து அபே அருவி உருவாகிக் கொட்டுகிறது. இது கூர்க் பகுதியின் சிறந்த நீர்வீழ்ச்சியாகும். இந்த நீர்வீழ்ச்சி 70 மீட்டர் உயரத்திலிருந்து பாறைகளின் சரிவில் அருவியாய் வழிந்து, ஒரு தடாகத்தில் நிரம்பிப் பெருக்கெடுத்து வழிநெடுகப் பாய்ந்து, காவிரியுடன் கலக்கிறது.
இந்தப் பள்ளத்தாக்கின் நெடுகாக ஒரு தொங்கு பாலம்அமைக்கப்பட்டு, இந்த இடத்திலிருந்து சுற்றுலாப்பயணியர் அருவியின் மொத்த அழகையும் கண்டு ரசிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த அருவியின் பேரொலியை முதன்மைச் சாலைகளிருந்தே கேட்கலாம். தொங்கு பாலத்தின் அருகில் உள்ள காளிமாதா கோவிலுக்குச் செல்லத் தவறாதீர்கள். இருபுறமும் மரங்கள் அடர்ந்த வழியில் அருவிக்குச் செல்வது நல்ல அனுபவமாகும்.
செப்டம்பர் முதல் ஜனவரி வரையிலான மாதங்கள் இங்குச் செல்லச் சிறந்த பருவகாலம் ஆகும். இப்பருவகாலத்தில்தான் அருவி முழுவேகத்துடன் பீறிட்டுக் கொட்டுவதைக் காணலாம். அருவியின் வாயில்வரை கார்கள் செல்கின்றன. அங்கிருந்து காஃபித் தோட்டங்கள் வழியாகப் பத்து நிமிடம் நடந்து செல்ல வேண்டும்.
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
நுழைவு கட்டணம்: நபருக்கு ரூ. 15
காவேரி நிசர்காதமா

காவேரி நிசர்காதமா PC: Purple Palm Resort
காவேரி நிசர்காதமா (English: Cauvery Nisargadhama; Kannada : ಕವೆರಿ ನಿಸರ್ಗಧಾಮಾ) என்பது காவேரி நதியில் அமைந்துள்ள தீவாகும். காவேரி நிசர்காதமா மடிகேரி பஸ் நிலையத்திலிருந்து 29.0 கி.மீ. தொலைவிலும்; துபாரே யானை முகாமிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும்; பைலாகுப்பேயிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும்; குஷால் நகரிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இது கூர்க்கில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். அடர்ந்த மூங்கில் தோப்புகள், சந்தனம் மற்றும் தேக்கு மரங்கள் நிறைந்து பரந்து விரிந்த 64 ஏக்கர் நிலப்பில் இந்தத் தீவு அமைந்துள்ளது. 1988 ஆம் ஆண்டு வனத் துறையால் இந்தத் தீவு சுற்றுலாத் தலமாக உருவாக்கப்பட்டது.
இந்தத் தீவை அடைய ஒரு தொங்கும் கயிற்றுப் பாலம் உதவுகிறது. இந்தத் தீவில் மான் பூங்கா (deer park), முயல் பூங்கா (rabbit park ), மயில் பூங்கா (peacock park), அர்ச்சிட் மலர்ப் பூங்கா (Orchidarium) ஆகிய பூங்காக்கள் அமைந்துள்ளன. இங்கு கிளிகள், மரங்கொத்திகள் மற்றும் பட்டாம்பூச்சி வகைகள் ஆகியவற்றையும் காணலாம். யானை மற்றும் படகுச் சவாரிகள் இங்கு உள்ளன. பயணிகள் குறிப்பிட்ட பாதுகாப்பான இடங்களில் நீரில் இறங்க அனுமதிக்கப்படுகின்றனர். இங்கு மரத்தின் மேல் அமைக்கப்பட்ட காட்டேஜ்களும், வனத்துறையினர் நடத்தும் விருந்தினர் விடுதியும் உள்ளன. இங்கு ஒரு சிறு உணவகமும் உள்ளது.
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
நுழைவு கட்டணம்: நபருக்கு ரூ. 10. குழந்தைகளுக்கு ரூ. 05. யானை சவாரி நபருக்கு ரூ. 25. படகு சவாரி ரூ. 100. ஆகும்.
துபாரே யானைகள் முகாம்

துபாரே யானைகள் முகாம் PC: YouTube
துபாரே யானைகள் முகாம் (Dubare Elephant Camp) மடிகேரி பஸ் நிலையத்திலிருந்து 29.0 கி.மீ. தொலைவிலும்; பைலாகுப்பேயிலிருந்து 26.0 கி.மீ. தொலைவிலும்; குஷால் நகரிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
துபாரே கர்நாடக வனத்துறையினரின் யானைகள் தங்கும் முக்கியமான தளம் ஆகும். துபாரே யானைகள் முகாம் என்பது வனத்துறையினர் மற்றும் வனம், தங்கும் விடுதிகள் மற்றும் ஓய்வு விடுதிகளால் ஏற்று நடத்தப்படும் ஒரு திட்டம் ஆகும். மைசூர் தசராவில் வலம் வரும் யானைகள் இங்கு பயிற்றுவிக்கப்படுகின்றன. இங்கு யானைகளின் பயிற்றுநர்கள் யானைகள் பற்றிய வரலாறு, சூழலியல், உயிரியல் பற்றியெல்லாம் விவரிக்கிறார்கள். சுற்றுலாப் பயணியர் இங்கு யானைகளின் பல நடவ்டிக்கைகளைக் காணலாம். யானைகளுக்குக் கேழ்வரகு, வெல்லம், கரும்பு. வாழைப்பழம் மற்றும் தேங்காய் போன்ற உணவினைக் கொடுக்கலாம். ஆற்றில் யானைகளைத் தேய்த்துக் குளிப்பாட்டுவதையும், நெற்றிக்கும் தந்தங்களுக்கும் எண்ணெய் பூசுவதையும் காணலாம். காவேரி நிசர்காதமா இதன் அருகில் அமைந்துள்ளது.
பைலகுப்பே நம்ட்ரோலிங்’ திபெத்திய புத்த துறவிகளின் மடாலயம் (Namdroling Tibetan Buddhist Monastery, Bylakuppe )

பைலகுப்பே நம்ட்ரோலிங்’ திபெத்திய புத்த துறவிகளின் மடாலயம் PC: Ghat Roads
மைசூர் மாவட்டம், பிரியபட்ணா வட்டம், பைலகுப்பே (Kannada: ಬೈಲಕುಪ್ಪೆ), பின் கோடு 571104, கிராமத்தில் திபெத்திய அகதிகள் குடியேற்ற பகுதி அமைந்துள்ளது. இது பெங்களூரு – கூர்க் வழித்தடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. சீனா திபெத்தை ஆக்கிரமித்த காலத்தில் திபெத்திலிருந்து வெளியேறிய இந்த அகதிகள் தற்சமயம் இந்தக் குடியிருப்புகளில் வாழ்கின்றனர். திபெத்திய அகதிகள் குடியேறி வாழும் லுக்சும் சாம்துப்லிங் ((Lugsum Samdupling) மற்றும் டிக்யி லார்ஸோ ((Dickyi Larsoe) என்ற இரண்டு பெரிய குடியிருப்புகள் இங்குக் காணப்படுகின்றன. 1961 ஆம் ஆண்டில் லுக்சும் சாம்துப்லிங்கும், 1966 ஆம் ஆண்டில் டிக்கி லார்ஸோவும் ஏற்படுத்தப்பட்டன.
பைலகுப்பேயில் விவசாய நிலங்கள், திபெத்திய மடலாயங்கள், சுற்றுலா பயணிகளுக்கான திபெத்திய உணவகங்கள் மற்றும் கைவினைப் பொருட்களுக்கான கடைகள் என்று எல்லாம் உள்ளன. இங்கிருக்கும் முக்கிய சுற்றுலாத்தலமான தங்கக்கோயில் அல்லது ‘நம்ட்ரோலிங்’ என்று அழைக்கப்படும் திபெத்திய புத்த துறவிகளின் மடாலயமாகும் (Buddhist Monastery). தென்னிந்தியாவில் முழுக்க முழுக்க திபெத்திய கட்டிடக்கலைப் பாணி மற்றும் பரம்பரியதுடன் இந்த புத்த துறவிகளின் மடாலயம் அமைந்துள்ளது. இந்த ‘நம்ட்ரோலிங்’ மடாலயம் டுருபவங் பத்ம நோர்பு ரின்போச்சே என்பவரால் 1963 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

பத்மசாம்பவா, புத்தா, அமிதாயுஸ் PC: Mysore Tourism
மடாலயத்தில் தங்க வண்ணத்தில் மின்னும் பத்மசாம்பவா, புத்தா, அமிதாயுஸ் போன்ற உருவச் சிலைகள் நுண்ணிய சிற்பத் திறனுடன் வடிவமைக்கப்பட்டுப் பார்வையாளர்களைக் கவர்கின்றன. நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் அமைந்த பூஜை முரசு, பூஜை சக்கரம் மற்றும் கதவுகள் எல்லாம் வியக்கவைக்கின்றன. கோவில் சுவற்றில் திபெத்திய தங்க ஓவியப் பாணியில் வரையப்பட்ட புத்தரின் வாழ்க்கைக்குறிப்புகளையும் மற்றும் வஜ்ராயணப் பௌத்த மரபு சார்ந்த கடவுள் ஓவியங்களையும் காணலாம்.
நியிங்மாபா எனப்படும் நியிங்மா பள்ளி, திபெத்திய பௌத்தத்தின் பள்ளிகளில் பழமையானது. இந்த மடாலயம் சங்க சமுதாயத்தைச் (Sangha Community) சேர்ந்த ஐயாயிரம் லாமாக்களின் (புத்த துறவிகள் (monks) மற்றும் கன்னியாஸ்திரிகள் (nuns) உறைவிடமாகும். இங்குள்ள இளநிலை உயர்நிலைப்பள்ளியான (Junior Higher school) மதக் கல்லூரி (religious college) மற்றும் மருத்துவமனைக்கு (medical centre) யேஷே வொட்சால் ஷெரப் ரல்ட்ரி லிங் என்று பெயர். இது நியிங்மாபா திபெத்திய பௌத்தத்தின் மிகப்பெரிய கற்பித்தல் மையமாக உள்ளது. ஸேரா மேய் மற்றும் ஸேரா ஜே போன்ற சிறிய மடாலயங்கள் ஆகியவையும் இங்கு திபெத்திய மரபை பேணுவதற்காக அமைந்துள்ளன. இதுபோல இமய மலையின் குலு மணாலியில் (Kulu Manali) அமைந்துள்ள இமாலய நியிங்மாபா புத்த கோவில் புகழ்பெற்ற புத்த மடாலயங்களில் ஒன்றாகும்.
தலைக்காவேரி, பாகமண்டலா

தலைக்காவேரி PC: Nisargam
தலைக்காவேரி கொடகு மாவட்டம், மடிகேரி வட்டம், பாகமண்டலா (English: Bhagamandala; Kannada: ಭಾಗಮಂಡಲ ) பின் கோடு 571247 கிராமத்தின் அருகில், பிரம்மகிரி மலைத்தொடரின் சரிவில், அமைந்துள்ளது. இதன் அமைவிடம் 12.4196500°N அட்சரேகை 75.5218300°E தீர்க்கரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 1276 மீ. (4186 அடி) ஆகும். பாகமண்டலாவிலிருந்து 9 கி.மீ தொலைவிலும்; மடிகேரிக்கு மேற்கில் 44 கி.மீ. தொலைவிலும்; பெங்களூருவிலிருந்து 272 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இது கர்நாடகாவின் புகழ் பெற்ற சுற்றுலா மற்றும் புனித யாத்திரைத் தலமாகும்.
தலைக்காவேரியில் காவேரி குண்டலா என்னும் பிரம்மா குண்டலா என்னும் ஒரு சதுரவடிவத் தொட்டியே (தீர்த்தவாரி) காவேரி நதியின் பிறப்பிடமாகும். இந்தக் குளத்திற்கான நீரை கொண்டு வரும் சிறு பொய்கையாகக் காவேரி பிறக்கின்றது. பின்னர் அது தரைக்கடியில் கீழிறங்கி வெகு தூரத்திற்கப்பால் காவேரி எனும் ஆறாக வெளிப்படுகிறது. இது போலப் பாகமண்டலாவில் நாகதீர்த்தமாகவும் உருவெடுத்து திரிவேணி சங்கமத்தில் கனகே, சுஜ்யோதி என்ற இரண்டு ஆறுகளுடன் கலக்கிறது.
தலைக்காவேரியில் காவேரி அம்மனுக்கு ஒரு கோவில் உள்ளது. இதன் எதிரில் உள்ள குளத்தில் குளித்துக் காவேரி அம்மனை வழிபடுவது இங்கு கடைப்பிடிக்கப்படும் வழக்கம். இக்கோவில் மாநில அரசால் 2007 ஆம் ஆண்டுப் புனரமைக்கப்பட்டுள்ளது. விநாயகருக்கும் அகத்தியருக்கும் இங்கு கோவில்கள் உள்ளன. இங்கு உள்ள அகத்தீஸ்வரர் (சிவன்) கோவிலில் உள்ள இலிங்கம் மிகவும் தொன்மையானது. காவேரி ஆற்றில் காவேரி அன்னை எழுந்தருளும் ஐப்பசி (துலா) மாதத்தில் இங்கு தலைமுழுகுவது புண்ணியம் என்பது ஐதீகம்.
காஃபித் தோட்ட சுற்றுலா மாற்றும் தங்குதல்
கூர்கில் காஃபி தோட்ட சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்வதன் மூலம் காஃபி சாகுபடி பற்றிய ஆழமான அறிவைப் பெறலாம். காஃபிக்கொட்டை முதல் பேக் செய்யப்பட்டு உங்கள் கோப்பையில் மணங்கமழுவதற்குத் தயார் நிலையில் உள்ள காஃபிப் பொடி வரை உள்ள எல்லா நிலைகளையும் காணலாம். பசுமை நிறைந்த காஃபித் தோட்டங்களில் தங்கும் வாய்ப்புக் கிடைத்தால் காற்றில் தவழும் காஃபியின் நறுமணத்தை எப்போதும் நுகரலாம். டாடா காஃபி பிளான்டேஷன், ஆஃப் பீட் எஸ்டேட், கரடா போன்ற தோட்டங்களில் இந்த வசதி செய்து தருகிறார்கள்.
கூர்கில் உற்பத்தியாகும் விளைபொருட்களுக்கான ஷாப்பிங்:

Shopping in Coorg PC: Happy Trips
நம்பத்தகுந்த நறுமணப்பொருட்களான சீரகம், ஏலக்காய் மற்றும் பிரிஞ்சி இலை (bay leaf) போன்ற பொருட்கள் முதல் உலர்பழங்களான முந்திரி, உலர் திராட்சை போன்றவற்றை உள்ளூர் சந்தைகளில் வாங்கலாம். தரமான காஃபிக்கொட்டை, காஃபிப் பொடி, தேயிலை எல்லாம் இங்கு கிடைக்கிறது. இங்கு தயராகும் சாக்லேட் மிகவும் சுவையுள்ளது. பைலாகுப்பேயில் திபெத்திய கைவினைப் பொருட்களை வாங்கலாம்.
கூர்கில் உள்ள 218 ஹோட்டல்கள் மற்றும் ரிஸார்ட்டுகளில் உங்கள் தங்குமிடத்தைத் தேர்ந்தெடுக்கலாம். எல்லோரும் ஆன்லைன் புக்கிங் வசதியை அளிக்கிறார்கள். ஹோட்டல்கள்: ஏ.சி மற்றும் நான் ஏ.சி ரூம்கள், 1,200 ரூபாயில் இருந்து கிடைக்கின்றன. இங்கு இரண்டு விதமான தங்கும் வசதி உண்டு. ஹோட்டல்களில் ஏ.சி மற்றும் நான் ஏ.சி ரூம்கள், 1,200 ரூபாயில் இருந்து கிடைக்கின்றன. காட்டேஜ்களில் தங்குதல்: கட்டணம் ஆட்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு வசூலிக்கிறார்கள். தங்கும் அறை மற்றும் காலைச் சிற்றுண்டியும் இரவு உணவும் உள்ளடங்கியது (வீட்டுச் சமையல்). ஒரு நபருக்கு ஓர் இரவுக்கு 1,000 முதல் 1,200 ரூபாய். ஹோம் ஸ்டே (வீடுகளில் தங்குவது) நல்ல அனுபவம் என்கிறார்கள். காஃபித் தோட்டங்களில் தங்குவது பற்றியும் செய்திகள் உள்ளன.

Coorg Food PC: Trip Advisor
அரிசி ரொட்டி, கடம்புட்டு, நூல்புட்டு, நெய்ச்சோறு, பன்றி இறைச்சி, மூங்கிலில் வறுத்த இறைச்சி போன்ற கொடவா சைவ, அசைவ உணவு வகைகள் இங்கு விரும்பி உண்ணப்படுகின்றன. பல இடங்களில் கொடவா டாபா உணவு விடுதிகளைக் காணலாம்.
மடிகேரி செல்ல…
சாலை வழி: மடிக்கேரிக்குச் சென்னையில் இருந்து செல்வதென்றாலும் கோயம்புதூரிலிருந்து செல்வதென்றாலும் மைசூரு வழியாகத்தான் செல்லவேண்டும். சென்னை – மைசூரு சாலை வழியாக 479 கி.மீ.; ரயில் மூலம் 500 கி.மீ. கோயம்புதூர் (புளியம்பட்டி வழியாக) மைசூரு சாலை வழியாக 195 கி.மீ. மங்களூர், மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களிலிருந்து தினசரி கே.எஸ்.ஆர்.டி. டீலக்ஸ் பஸ்கள் உள்ளன. மைசூரில் இருந்து மடிக்கேரி – 135 கி.மீ. அருகில் உள்ள ரயில் நிலையம்: மைசூரு ரயில் நிலையத்திலிருந்து மடிகேரி 135 கி.மீ. தொலைவில் உள்ளது.
அருகில் உள்ள விமான நிலையம்: மங்களூர் விமான நிலையம் சுமார் 137 கி.மீ. தொலைவில் உள்ளது.
குறிப்புநூற்பட்டி
- கூர்க்– மடிந்து கிடக்கும் மலைகளும், காபி தோட்டங்களும் https://tamil.nativeplanet.com/coorg/
- கூர்க் ஈர்க்கும் இடங்கள் https://tamil.nativeplanet.com/coorg/attractions/
Chennai to Coorg and Wayanad http://www.team-bhp.com/forum/travelogues/109967-chennai-coorg-wayanad.html - Conversation with monk in Bylakuppe https://lakshmisharath.com/conversations-with-monks-in-bylakuppe-3/
- Coorg Bhagamanadala and Talacauvery https://lakshmisharath.com/coorg-bhagamandala-and-talacauvery-3/
- Madikeri the Capital of Haleri Dynasty https://lakshmisharath.com/madikeri-the-capital-of-haleri-dynasty-3/
- Madikeri, Coorg… Weekend getaway http://thetravellerweare.blogspot.in/2012/05/madikeri-coorg-weekend-getaway.html