குதிரமாளிகா பேலஸ் மியூசியம் (புத்தன் மாளிகா), கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், திருவனந்தபுரம் (തിരുവനന്തപുരം) நகரம், பத்மநாபசுவாமி கோவில் சாலை (പത്മനാഭസ്വാമി കോവിൽ റോഡ്, ஃபோர்ட் (ഫോർട്ട്), ஈஸ்ட் ஃபோர்ட் (ഈസ്റ്റ് ഫോർട്ട്), பழவங்காடி (പഴവങ്ങാടി), பின் கோடு 695023 அமைந்துள்ளது. அமைவிடம் 08°29′15″N அட்சரேகை 76°57′9″E தீர்க்கரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 10 மீ. (30 அடி) ஆகும்.
குதிரமாளிகா பேலஸ் மியூசியம் (புத்தன் மாளிகா), திருவனந்தபுரம், திருவாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னரும், கவிஞரும், இசை ஆர்வலருமான ஸ்ரீ சுவாதித் திருநாள் ராம வர்மாவால் (English: Swathi Thirunal Rama Varma, மலையாளம்: ശ്രrii സ്വാതി തിരുനാള് രാമ വര്മ) (பிறப்பு: ஏப்ரல் 16 1813), கட்டடப்பட்டது. இம்மன்னர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை கி.பி.1829 முதல் டிசம்பர் 25, 1846 வரை ஆண்டார். இந்த மாளிகை திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலுக்கு அருகே தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அரச கட்டிடங்களின் பரந்த வளாகத்தின் ஒரு பகுதி ஆகும்.
கட்டிடக்கலை
கேரள கட்டிடக்கலைக்கு உதாரமாகத் திகழும் இந்தக் குதிரமாளிகாவை கி.பி. 1840 ஆம் ஆண்டில் சுவாதி திருநாள் மகாராஜா காட்டினார். சரிந்த கூரைகள், கூரையின் தொங்கலான இறவானம் (overhanging eaves), தூணுடன் கூடிய தாழ்வாரம், மூடப்பட்ட முற்றங்கள், மரத்தில் நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட நேர்த்தியான கூரைகள், ஒவ்வொன்றிலும் தனித்துவமான அமைப்புப் பெற்ற அறைகள் எல்லாம் இந்த மாளிகையின் தனித்துவங்களாகும். 5000 விஸ்வ பிராமணர்களைக் கொண்டு இந்த மாளிகை நான்கே ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மாளிகைக்குக் குதிரமாளிகா என்று ஏன் பெயரிட்டார்கள் தெரியுமா? மாளிகையின் தெற்குப் பகுதியின் கூரையை, குதிரை வடிவங்களில் செதுக்கப்பட்ட 122 கொடுங்கைகள் (cornice) தாங்குகின்றன. இதனால்தான் இந்த மாளிகையைக் குதிரமாளிகா என்று அழைத்தார்கள். இந்த அரண்மனையின் அதிகாரப்பூர்வ பெயர் புத்தென் மாளிகா (புதிய மாளிகை) ஆகும்.
இந்த மாளிகையைத் தேக்கு, ரோஸ்வுட், பளிங்கு மற்றும் கருங்கல் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கட்டியுள்ளார்கள். மாளிகையின் மரத்தாலான கூரையின் செதுக்கப்பட்ட வடிவங்களை 42 உத்தரங்கள் தாங்குகின்றன. மரத்தாலான கூரையைக் கருங்கல் தூண்கள் தாங்குகின்றன. தாழ்வாரத்தின் கூரை உச்சியை அழகான மலர் வடிவச் செதுக்கல்கள் அலங்கரிக்கின்றன. இம்மாளிகையின் முதல் தளத்தில், முட்டை, சுண்ணாம்பு மற்றும் நிலக்கரியால் வழவழப்பாக்கப்பட்ட சுவர்கள் வெப்பமான சூழலைக் குளிர்ச்சியாக மாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாளிகையில் மொத்தம் 80 அறைகள் உள்ளன. இவற்றில் 16 முக்கிய அறைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், வங்காளம், தமிழ், ஒரியா மற்றும் ஆங்கில மொழிகளில் சரளமாகப் பேசும் வல்லமை பெற்றிருந்த ஸ்ரீ சுவாதித் திருநாள் ராம வர்மா ஒரு சிறந்த அரசர் மட்டுமல்ல, இவர் மிகச்சிறந்த இசை வல்லுனரும் இசைப் புரவலருமாகத் திகழ்ந்தவராவார். இவர் தன்னுடைய ஆட்சியில் இந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசை வடிவங்களை ஆதரித்த போதிலும், கர்நாடக இசையின் பரம ரசிகர் ஆவார். இந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசையில் நானூறுக்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். பத்மநாப பாஹி; தேவ தேவ; சரசிஜநாப மற்றும் ஸ்ரீ ரமணா விபோ ஆகிய இரண்டு கீர்த்தனைகள் சுவாதித் திருநாள் மகாராஜாவுக்கு மிகவும் விருப்பமான கீர்த்தனைகள் ஆகும். கி.பி. 1846 ஆம் ஆண்டு சுவாதி திருநாளின் மறைவுக்குப் பிறகு ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்த மளிகை காலியாகவே விடப்பட்டிருந்தது.
ஸ்வாதி சங்கீத உத்ஸவம் (எ) குதிரமாளிகா திருவிழா
குதிரமாளிகாவின் வளாகத்தில் கட்டப்பட்ட கச்சேரி நடக்கும் பகுதியில் ஒலியைப் பிரதிபலிப்பதற்கு 50 களிமண் பனைகளைக் கூரையில் தலைகீழாகக் கட்டி தொங்கவிடப்பட்டன. சுவாதித் திருநாள் மகாராஜாவின் காலத்திற்குப் பிறகு, இளவரசர் இராம வர்மா சுவாதி சங்கீதோத்சவம் என்ற பெயரில் சுவாதித் திருநாள் கீர்த்தனைகளை முன்னிலைப்படுத்தி ஒரு கர்நாடக சங்கீத விழாவை ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை இந்தக் குதிரமாளிகாவில் நடத்தினார்.
அருங்காட்சியகம்
இந்த 80 அறைகளில் 20 அறைகள் 1995 ஆம் ஆண்டு முதல் பார்வையாளர்களுக்காகத் திறக்கப்பட்டன. குதிரமாளிகாவின் ஒரு பகுதியானது, திருவாங்கூர் அரச பரம்பரைக் குடும்பத்திற்குச் சொந்தமான சொத்துக்களில் சிலவற்றை இந்த மாளிகையில் காட்சிப்படுத்தி, அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தைச் சுற்றிப்பார்க்க வருவோருக்கு உதவ வழிகாட்டுதல் பயண (guided tour) வசதி செய்யப்பட்டுள்ளது.
குதிரமாளிகா அருங்காட்சிகத்தின் தரைத்தளத்தில் 14 ஆளுயர கதகளி ஆடை அலங்கார பொம்மைகள் (Kathakali mannequins), பெல்ஜியன் மற்றும் இத்தாலியன் கண்ணாடிகள், கிரிஸ்டல் சரவிளக்குகள் (crystal chandeliers), ஓவியங்கள், ஒரு பெரிய பெல்ஜியன் ஈட்டி (harpoon), ஆயுதங்கள், இசைக்கருவிகள், பாரம்பரிய மரச்சாமான்கள், பாரம்பரிய உடைகள், கிரேக்க சிலைகள், தட்டினால் எட்டு வித ஒலிகளை எழுப்பும் இசை-மரம் (musical tree) மற்றும் பல கலைப்பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
கதகளி அலங்காரப் பொம்மைகளின் வலதுபுறத்தில் தந்தத்திலான தொட்டில்கள் பல்வேறு அளவுகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாளிகையில் இரண்டு அரச அரியணைகள் உள்ளன. ஒரு அரியணை 24 யானைத் தந்தங்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்கு “தந்தஸிம்ஹாசனா” என்று பெயர். மற்றொன்று பொஹீமியன் கிறிஸ்டல்களால் (Bohemian crystal) செய்யப்பட்டது. அரியணையின் சாய்ந்து உட்காருவதற்கான பின் பகுதியில் திருவாங்கூர் அரசின் சங்குச் சின்னம் அலங்கரிக்கிறது. மாளிகையில் வெள்ளைப் பளிங்கால் செய்யப்பட்ட ஏராளமான சிலைகளும், சிற்பங்களும் நிறைந்துள்ளன.
அருங்காட்சியகத்தின் முதல் மாடியில், பார்வையாளர்கள் அறையாகவும், நூலகமாகவும், சுவாதி திருநாள் மன்னர் தியானித்து அவருடைய புகழ்பெற்ற இசை ஸ்வரங்களை இயற்றிய அறையாகவும் பயன்பட்ட அறைகளைக் காணலாம். சுவாதி திருநாள் பயன்படுத்திய அறையிலிருந்து பத்மநாபசுவாமி கோவில் கோபுரத்தைக் காணலாம். இங்குள்ள சிறிய மரப்படிக்கட்டில் மயில், யானை மற்றும் பறக்கும் நாகம் ஆகியவற்றின் மரச்சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இங்குள்ள ஒரு அறையில் உள்ள ஒரு தோற்ற மயக்கம் தரும் சித்திரத்திருநாள் பலராம வர்மாவின் உருவப்படம் (illusion portrait) ஸ்வெட்டோஸ்லாவ் ரோரிச் (Svetoslav Roerich) ஆல் தீட்டப்பட்டுள்ளது. படத்தில் உள்ள மன்னரின் முகம் மற்றும் காலணி அணிந்த கால்கள் எல்லாம், அறையின் எந்த மூலையில் இருந்து பார்த்தாலும் பார்வையாளர்களைப் பார்ப்பதுபோலவே தெரியுமாம்.
அருங்காட்சியகத்தின் வேலை நேரம்: 08:30 – 13:00 மணி & 15:00 – 17:30 மணி. திங்கள்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும்
தொடர்பு விபரங்கள்:
போன்: +91 471 2473952
குதிரமாளிகா பேலஸ் மியூசியம் செல்ல…
அருகிலுள்ள இரயில் நிலையம்: திருவனந்தபுரம் சென்ட்ரல், சுமார் 1 கி.மீ
அருகிலுள்ள விமான நிலையம்: திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம், சுமார் 6 கி.மீ.

Entrance to the Museum PC: Go Road Trip

PC: Kerala Tourism

PC: Flickr

122 numbers of Horse shaped Cornices adorn the south side of the palace.

Wooden Carvings. PC: Flickr
அற்புதமான வரலாற்று விடயங்களை தகவல்களும், புகைப்படங்களும், காணொளிகளுமாக காணத் தந்தமைக்கு நன்றி – கில்லர்ஜி
LikeLike
நன்றி. திரு.தேவகோட்டை கில்லர்ஜி .
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி. அடிக்கடி தங்கள் வரவை எதிர்நோக்கியுள்ளேன்.
நன்றி
அன்புடன்
இரா.முத்துசாமி
LikeLike