மைலாப்பூர் திருவிழா (Mylapore Festival) என்பது ‘மைலாப்பூர் டைம்ஸ்’ (Mylapore Times) இலவச வார இதழ் பத்திரிகை வெளியீட்டாளர்களும், சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் வருடாந்திரத் திருவிழாவாகும். இந்தத் திருவிழா 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 23 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. 2018 ஆம் ஆண்டுக்கான மைலாப்பூர் திருவிழா ஜனவரி 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற ஜனவரி 7 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறும்.
இந்தத் திருவிழா மைலாப்பூர் கபாலீசுவரர் கோவில், கோவில் தெப்பக் குளம், தேரடி, கோவிலைச் சுற்றியுள்ள நான்கு மாட வீதிப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கோலப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற நடனம் மற்றும் கிளாசிக்கல் நடன நிகழ்ச்சிகள், தாயக்கட்டம், பல்லாங்குழி போன்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், குழந்தைகளுக்கான பயிற்சிப் பட்டறைகள், நாகேஸ்வர ராவ் பூங்காவில் சிறார்களின் இசை நிகழ்ச்சிகள் என்று பல கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 200 கலைஞர்களுக்கு மேல் பங்குபெறும் முப்பதிற்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் இந்த ஆண்டுத் திருவிழாவில் இடம்பெற்று வருகின்றன. சென்னை மக்களுக்குச் சொல்லத் தேவையில்லை. குடும்பத்துடன் சென்று வருகிறார்கள். இந்தப் பதிவு வெளியூரிலும் வெளி நாட்டிலும் வசிப்பவர்களுக்காக இங்குப் பதிவு செய்கிறேன். இது பற்றி உங்கள் கருத்துக்களைப் பின்னூட்டமாக நிச்சயம் இடுவீர்கள்.
வரலாறு
தற்போதைய மைலாப்பூர் கி.பி. 16 ஆம் நூற்றாண்டு அல்லது 17 ஆம் நூற்றாண்டு அளவில் தோன்றிய நகரம் ஆகும். முந்தைய மைலாப்பூர், சாந்தோம் தேவாலயம் இருக்கும் இடத்திற்கு மிக அருகில், ஒரு வங்கக் கடற்கரை கிராமமாகப் பெயர் பெற்றிருந்தது. அங்கு ஒரு சமணப்பள்ளி இருந்ததாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சமணத் தீர்த்தங்கரரான நேமிநாதர் உருவம் இங்கு நிறுவப்பட்டிருந்ததாம். அவிரோதியாழ்வார் என்ற சமணர் நேமிநாதர் மீது திருநூற்றந்தாதி என்னும் நூலை இயற்றியுள்ளார். திருக்கலம்பகம், மயிலாப்பூர் பத்துப்பதிகம், மயிலாப்பூர் நேமிநாதசுவாமி பதிகம் போன்ற சமண நூல்களும் இது தொடர்புடையதாகும்.
புவியியலாளரும், வானியலாளரும், சோதிடருமான தாலமி என்னும் குளோடியஸ் தொலெமாயெஸ் (Claudius Ptolemaeus) தன் நூலில் இந்த ஊரை மைலார்பொன் (Mylarphon) என்று குறிப்பிட்டுள்ளார். இயற்கை வளமும் முக்கியத்துவமும் பெற்ற ஒரு இடம் என்றும் பதிவு செய்துள்ளார். இந்தக் கிராமம் பல்லவர் காலத்தில் முக்கியத் துறைமுகமாகவும் விளங்கியுள்ளது.
கி.பி. 1250 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று முற்காலத்தில் விளங்கிய கடற்கரைக் கிராமமான மைலாப்பூரில் ஒரு சிவன் கோவில் இருந்ததற்குச் சான்று பகர்கின்றது. அக்கோவிலைப் போர்ச்சுகீசியர்கள் அழித்துவிட்டார்களாம். தற்போதைய கபாலீசுவரர் கோவில் கி.பி. 16 ஆம் நூற்றாண்டு அல்லது 17 ஆம் நூற்றாண்டு அளவில் கட்டப்பட்டிருக்கலாம்.
மயிலாப்பூர் திருவிழா
வரலாறு பற்றித் தெரிந்து கொண்டோம். சரி இப்போது மயிலாப்பூர் திருவிழாவிற்குச் செல்வோமா?
தெப்பக் குளத்தின் தென்கரை தெற்கு மாட வீதி வழியாகக் காய்கறிக் கடைகளைப் பார்த்தவாறு நடந்து வந்தால், வெள்ளீஸ்வரர் கோவில் வரும். கோவிலைத் தாண்டி நடந்து சென்று குளத்தின் கிழக்குக் கரையையொட்டி, இடதுபக்கம் திரும்பினால் ஒரு சிறிய சந்து வரும் (பொன்னம்பல வாத்தியார் தெரு). பூம்புகார் கைவினைப்பொருட்கள் அபிவிருத்தி நிறுவனம் தமிழ் நாடு கைவினைக் கலைஞர்களின் வேலைப்பாடுகள் நிறைந்த உலோகப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை இந்தக் கிழக்கு குளக்கரை சந்தில் நடைபெறுகிறது.
தமிழ் நாடு அரசின் ஆதரவு பெற்ற சுய உதவிக்குழு உறுப்பினர்களால் (Members of the Self Help Groups) நடத்தப்படும் திறந்த வெளிக் கடைகள் கபாலி கோவில் தெற்கு மதிலை ஒட்டி, குமரகுரு தெருவில் உள்ளன. ஜூட் பைகள், பிரம்புக்கூடைகள், சிறு சிறு அழகுப் பொருட்கள் மற்றும் பல பொருட்களை விற்கிறார்கள். பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சிவசாமி பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு எதிரே சுந்தரேஸ்வரர் தெருவில் உடுப்பி மற்றும் செட்டிநாட்டுச் சிற்றுண்டிகள் சுடச்சுடத் தயாராகி உடனுக்குடன் விற்பனையாகின்றன. ஜிலேபி, குலோப்ஜாமூன், சாட் ஐட்டங்கள், ரொட்டி, சப்ஜி, பஞ்சுமிட்டாய், கரும்பு ஜூஸ், காஃபி, டீ, என்று வழிநெடுக பல ஸ்டால்கள் உண்டு. இங்குக் குடும்பம் குடும்பமாக நின்று சாப்பிடுகிறார்கள். ஓய்வெடுக்கிறார்கள். குழந்தைகள் மகிழ்ச்சியுடன் வளைய வருகிறார்கள்.
தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகள்
தாயக்கட்டம்
இஃது ஒரு பாரம்பரிய விளையாட்டு. இரண்டு முதல் நான்கு நபர்கள் வரை விளையாடலாம். ஒருவர்க்கு ஆறு ஆட்டக் காய்கள் வைத்துக் கொள்ளலாம். தாயக்கட்டை அல்லது சோழிகளைப்போட்டு எந்த எண் வருகிறதோ அத்தனை கட்டங்கள் நகர்த்தி வைக்க வேண்டும். நடுவில் இருக்கும் சதுரக் கட்டத்திலிருந்து ஆட்டத்தைத் தொடரவேண்டும். நாம் நகர்த்த முற்படும் வழியில் மற்றொரு ஆட்டகாரரின் காய்கள் இருந்தால் வெட்ட வாய்ப்பு வரும். குறுக்கே கோடு போட்ட கட்டங்கள் இருந்தால் வெட்ட முடியாது ஏனெனில் இது பாதுகாப்பான கட்டம் ஆகும். ஒரு காயை வெட்டினால் காய்கள் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கு வரும். திரும்பத் தாயம் விழுந்தால் தான் ஆட்டத்தில் அந்தக் காயை சேர்த்துக்கொள்ள முடியும். இந்த ஆட்டத்திற்கான போட்டிப் பந்தயம் சிவசாமி பெண்கள் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ஜனவரி 06 ஆம் தேதி நடைபெறுகிறது.
பல்லாங்குழி
பல்லாங்குழி என்பது, பொதுவாகப் பெண்கள் விளையாடும் ஒரு விளையாட்டு. பல்லாங்குழி என்பது மரம் அல்லது உலோகத்தால் செய்யப்பட்ட ஒரு விளையாட்டுப் பலகை. அதில் ஒவ்வொரு வரிசையிலும் ஏழு குழிகள் இருக்கும். இரண்டு வரிசைகளிலும் சேர்த்துப் பதினான்கு குழிகள் உள்ளபடியால் இந்த விளையாட்டு பதினான்கு குழி விளையாட்டு ஏற்று அழைக்கப்பட்டு நாளடைவில் பன்னாங்குழி என்று மருவிற்று. பல்லாங்குழி விளையாட புளியங்கொட்டை அல்லது சோளி (சோவி)களை ஆடுபொருளாகப் பயன்படுத்துகிறார்கள். இதனை இருவர் விளையாடலாம். இந்த ஆட்டத்திற்கான போட்டிப் பந்தயம் சிவசாமி பெண்கள் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ஜனவரி 06 ஆம் தேதி நடைபெறுகிறது.
புகைப்படக் கண்காட்சிகள்
70 மற்றும் 80 ஆம் ஆண்டுகளில் மைலாப்பூர் என்னும் இந்தப் புகைப்படக் கண்காட்சி பாரதிய வித்யாபவன் அருகில் உள்ள நடைபாதையில் அமைக்கப்பட்டு உள்ளது. தேதி ஜனவரி 4 – 7, 2018
1900 ஆண்டுகளில் மைலாப்பூர் கோவில் வளாகம் என்னும் புகைப்படக் கண்காட்சி லேடி சிவசாமி பெண்கள் பள்ளிக்கு வெளிப்புறத்திலும், கிழக்கு மாட வீதி நடைபாதை ஓரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. தேதி ஜனவரி 4 – 7, 2018
நாங்கள் பயன்படுத்திய பொருட்கள்: கண்காட்சி
பித்தளை விளக்குகள், செம்புப் பாத்திரங்கள், ஈயச்சொம்பு, ரேடியோ, கிராமஃபோன், டெலிஃபோன், நீர் சேமிக்கும் கலன்கள், பேனா ஸ்டான்ட், கடிகாரம் போன்ற பொருட்கள். இதைப் பார்க்க வேண்டுமென்றால் சன்னதித் தெருவிற்குச் செல்ல வேண்டும். சன்னதித் தெரு, ராசி ஸ்டோர் எதிரில் அமைந்துள்ளது. தேதி ஜனவரி 4 – 7, 2018.
நாகேஸ்வர ராவ் பூங்கா: பாரம்பரிய கர்னாடிக் இன்னிசைக் கச்சேரி
மைலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் அமைந்துள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் ஜனவரி 4 -7 தேதிகளில் காலை நேரத்தில் 7.00 மணிக்கு பாரம்பரிய கர்நாடக இன்னிசைக் கச்சேரி நடைபெறுகிறது. இந்தக் கச்சேரிகளில் மைக் இடம்பெறாது. கர்நாடக சங்கீதம் கற்றுத்தரும் பிரபல பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கு பெறுகின்றனர்.
மயிலை சன்னிதித் தெருவில் மேடை நிகழ்ச்சிகள்
சன்னிதித் தெருவில் (மயிலை கபாலீஸ்வரர் கோவில் கிழக்குக் கோபுரத்திற்கு எதிரில்) அமைந்துள்ள மேடையில் நிகழ்ச்சிகள் நாதசுரக் கச்சேரிகள், கர்நாடக இசைக் கச்சேரிகள், பரதநாட்டியம், கேரளாவின் நாட்டுப்புற நடனம், நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறுகின்றன.
கோலப் போட்டி
மயிலாப்பூர் திருவிழாவின் மிக முக்கிய நிகழ்ச்சி கோலப் போட்டியாகும். இந்தப் போட்டி ஜனவரி 06 மற்றும் 07 தேதிகளில் நடைபெறுகிறது. வடக்கு மாட வீதியில் மதியம் 3.00 மணிக்கு மேல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுத் தார் சாலையை நீர் தெளித்துச் சுத்தம் செய்கிறார்கள். சாலை பல பத்திகளாகப் பகுக்கப்படுகின்றன. சாலையின் இரு மருங்கிலும் பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 03.15 மணியளவில் பெண்கள் போட்டியில் பங்கு பெறுவதற்காகத் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். கோலப் போட்டியில் பதிவு செய்த பெண்கள் (சில ஆண்களும் கூட) புள்ளிக் கோலங்களைத் தமக்கு ஒதுக்கப்பட்ட பத்திகளில் வரைகிறார்கள். கோலம் வரையக் குறிப்பிட்ட நேரம் தரப்படும். எல்லாம் குறிப்பிட்ட நேரத்தில், நேர்த்தியாக நடந்து முடிந்ததும், நடுவர்கள் ஒவ்வொரு கோலத்தையும் பார்வையிட்டு, வெற்றி பெற்ற போட்டியாளர்களை அறிவிக்கிறார்கள்.
பாரம்பரிய நடை உலா (Heritage Walk)
ஜனவரி 07 ஆம் தேதி காலை 07.00 மணியளவில் தெற்கு மாட வீதியில் துவங்கும் இந்த பாரம்பரிய நடை உலா (Heritage walk) பல அருட்தொண்டர்களின் (Saints) நினைவிடங்களுக்குச் சென்று வரும்.
ஜனவரி 07 ஆம் தேதி காலை 07.00 மணியளவில் சன்னிதித் தெருவில் துவங்கும் மற்றோரு நடை உலா பாரம்பரிய கட்டிடக்கலைக்குப் பெயர்போன சில கட்டிடங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வழிவகை செய்கிறது.
ஜனவரி 06 ஆம் தேதி காலை 06.30 மணியளவில் மாதவப் பெருமாள் கோவில் கோபுரத்திற்கு அருகில் துவங்கும் சுற்றுலா மாதவப்பெருமாள் கோவில், காரணீசுவரர் கோவில், விருபாக்ஷீஸ்வரர் கோவில் போன்ற கோவில்களின் கட்டிடக்கலை, சிற்பம் மற்றும் கல்வெட்டுகள் பற்றித் தெரிந்து கொள்ள வழிவகை செய்கிறது.
உணவு நடை 1: ஜனவரி 5 ஆம் தேதி மந்தைவெளி கோமதி சங்கர் உணவகத்தில் உணவு ஆர்வலர்கள் ஸ்ரீதர் வெங்கடராமன் தலைமையில் ஒன்று கூடிப் பிடித்த உணவை உண்டு மகிழ்ந்தனர்.
உணவு நடை 2: ஜனவரி 6 ஆம் தேதி இந்தியன் வங்கி, வடக்கு மாட வீதி அருகே, உணவு ஆர்வலர்கள் ஸ்ரீதர் வெங்கடராமன் தலைமையில் ஒன்று கூடி, மைலாப்பூரில் உள்ள புகழ்பெற்ற உணவு விடுதிகளுக்கு சென்று சுவைக்க உள்ளனர்.

Nadhaswaram Concert PC: Mylapore Times

Music Concert by Young Children PC: Mylapore Times

Folk Dance PC: Mylapore Festival Facebook

Mylapore Festival 2018: Dance PC: Mylapore Times

Fancy Article Stalls: Ladies jewelry PC: Mylapore Times

Gypsy Ladies selling Plastic beaded necklaces PC: Mylapore Times

Tamil Nadu Heritage Indoor Game Competition PC: Mylapore Times

Kolam Competition PC: Mylapore Times
ஸ்வாரஸ்யம். மைலையில் நடக்கும் திருவிழா பற்றி இங்கே பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி.
LikeLike
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
LikeLike
நற்தகவல்களும், அழகிய புகைப்படங்களும், காணொளிகளும் கண்டு களித்தேன் நன்றி நண்பரே – கில்லர்ஜி
LikeLike
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
LikeLike