சோழர்களால் ஒர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திராவிடக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட கோலரம்மா கோவில் கோலார் நகரில், ஃபோர்ட் (Fort) பகுதியில் அமைந்துள்ளது. கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், கோலார் வட்டம், கோலார் பின் கோடு 563101 நகரம் அமைந்துள்ளது. இதன் அமைவிடம் 13°38′N அட்சரேகை 95°35′E தீர்க்கரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 3200 அடி ஆகும். இவ்வூர் பெங்களூருவிலிருந்து 68 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கோவிலைப் பற்றி இந்தப் பதிவு விவரிக்கிறது.
கட்டிடக்கலை
ஆங்கில எழுத்தான L வடிவத்தில் அமைந்துள்ள இக்கோவிலில், திராவிடக் கட்டிடக்கலை பாணியில் அமைந்த விமானத்தின் கீழ் கோலரம்மா அருள்பலிக்கிறாள். ஒர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்களால் கட்டப்பட்ட கருங்கற் கோவில் இதுவாகும்.
தாங்குதளம் உபானம், ஜகதி, குமுதம், கண்டங்களில் பாதம் பெற்று பாதபந்த அதிஷ்டானமாக விளங்குகிறது. பாதபந்த அதிஷ்டான தளம் தாங்கும் விமானத்தின் வெளிப்புறச் சுவர்கள் அரைத்தூண்களால் பிரித்துச் செதுக்கிய பத்திகளால் அமைந்துள்ளது. சுவர்களில் கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. கோவிலைச் சுற்றி நான்குபுறமும் நான்முகத் தூண்கள் தாங்கும் திருச்சுற்று மளிகை மண்டபம் அமைந்துள்ளது.
இரண்டு சன்னிதிகள்
இந்தக் கோவிலில் இரண்டு சன்னிதிகள் அமைந்துள்ளன. ஒரு சன்னிதி மூல தெய்வமான கோலரம்மாவிற்கும் மற்றோரு சன்னிதி சப்தமாத்ரிகா என்னும் சப்த கன்னிகையைற்கும் அமைந்துள்ளன. இந்த இரண்டு கருவறைகளையும் ஒரு பொதுவான அந்தராளம் (common vestibule) இணைக்கிறது. சப்தகன்னியர்கள் சன்னிதி முக்கியமான நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.
கோலரம்மா சன்னிதி
கோலரம்மா கோவிலின் மூலதெய்வம் பார்வதியின் அவதாரமான கொலரம்மா ஆவார். எட்டுக்கைகளுடன் கம்பீரமாக விளங்கும் கோலரம்மாவை இக்கோவிலில் மகிஷாசுரமர்தினியின் அம்சமாக எண்ணி மக்கள் வழிபடுகிறார்கள். கோலரம்மாவை நேரிடையாக நின்று வழிபடாமல் சன்னிதிக்கு எதிரில் அமைந்துள்ள கண்ணாடியில் பார்த்து வழிபடுகிறார்கள். கோலரம்மா சன்னிதியில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இக்கோவில் கோலார் பகுதியில் அமைந்துள்ள முக்கியமான யாத்திரை மையம் ஆகும்.
கோலரம்மாவின் அருளாசியைப் பெறுவதற்கு மைசூர் மன்னர்கள் இங்கு அடிக்கடி வந்து வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். கருங்கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கோவிலின் சோழர் பாணி கட்டிடக் கலையும், அழகான சிற்பங்களும், அலங்கார வடிவமைப்புகளும் நாள்தோறும் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளை வெகுவாகக் கவர்கிறது.
சேளம்மா சன்னிதி
இக்கோவிலில் தேளின் அம்சங்களைக் கொண்டு அருள்புரியும் மற்றோரு தெய்வம் சேளம்மா ஆவார். சேளம்மா அருட்கடாச்சம் இருந்தால் தேள் கடியிலிருந்தும் விடுபடலாம் என்ற நம்பிக்கை இந்த ஊரில் உள்ள பொதுமக்களிடம் நிலவுகிறது. இந்தக் கோவிலில் உள்ள ஒரு குறிப்பிட்ட குழியில் ஒரு நாணயத்தைப் போடுவது பக்தர்களால் கடைபிடிக்கப்படும் ஒரு வியப்பான வழக்கம் ஆகும். எனினும் இக்கோவிலில் ஒரு உண்டியலை வைத்து பக்தர்களின் காணிக்கைகளை பெற்றுக்கொள்கிறார்கள்.
பலகைச் சிற்பம்
கோலரம்மா கோவிலில் நாலரை அடி உயரத்தில் அமைந்துள்ள கருங்கல் பலகையில் போர்க்கட்சிகள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. போர்க்கட்சிகளில் குதிரைகள், யானைகள், தேர்கள், மற்றும் படைவீரர்களின் உருவங்கள் நேர்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன. முதலாம் இராஜேந்திர சோழர் இந்தப் போர்க்காட்சிகளில் காணப்படுகிறார்.
கல்வெட்டுகள்
இக்கோவிலில் அமைந்துள்ள கருங்கற்சுவர்களில் 30 க்கும் மேலான கன்னடம் மற்றும் தமிழ் மொழிகளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் பெஞ்சமின் லூயிஸ் ரைஸ் (Benjamin Lewis Rice) என்ற கல்வெட்டு அறிஞரால் தொகுக்கப்பட்டு , கோலார் மாவட்ட கல்வெட்டுகள், எபிகிராபிகா கர்நாடகா, மைசூர் அரசாங்க மைய அச்சகம் என்னும் கல்வெட்டுத் தொகுதியில் பக்கங்கள் 30-40 இல் வெளியிடப்பட்டுள்ளது.
இக்கோவிலுக்கு வருவதற்கு மார்ச் முதல் ஏப்ரல் வரை சிறந்த பருவமாகும். இந்த சமயத்தில் இக்கோவிலில் கரக திருவிழா நடைபெறுகிறது.
கோலரம்மா கோவிலுக்குச் செல்ல
கோலார் நகரம் சாலை மார்க்கமாக கர்நாடக மாநிலத்தின் எல்லா நகரங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது.
அருகிலுள்ள இரயில் நிலையம் சென்னை பெங்களூரு மார்க்கத்தில் அமைந்துள்ள பங்காருப்பேட்டை (Bangarpet) இரயில் நிலையம் ஆகும். பங்காருப்பேட்டையிலிருந்து கோலார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள விமான நிலையம் பெங்களூரு விமானநிலையம் ஆகும்.
குறிப்புநூற்பட்டி
- கோலாரம்மா கோயில், கோலார் https://tamil.nativeplanet.com/kolar/attractions/kolaramma-temple/
- Benjamin Lewis Rice. Epigraphia Carnatica: Inscriptions in the Kolar District. Mysore Government Central Press. pp. 30–40.
- Rice, Benjamin Lewis (1994). Epigraphia Carnatica: Volume X: Inscriptions in the Kolar District. Mangalore, British India: Department of Archeology, Mysore State. Retrieved 4 August 2015.
- Kolaramma Wikipedia https://en.wikipedia.org/wiki/Kolaramma
- Kolaramma Temple – Of History and Beliefs. Raggi Mudde February 22, 2017 https://www.karnataka.com/kolar/kolaramma-temple/

கோலரம்மா கோவில் முகப்பு PC: விக்கிமீடியா காமன்ஸ்

கோலரம்மா கோவில் பக்கவாட்டுத் தோற்றம் PC: விக்கிமீடியா காமன்ஸ்

கோலரம்மா கோவில் கல்வெட்டுகள் PC: விக்கிமீடியா காமன்ஸ்

முதலாம் இராஜேந்திர சோழர் போர்புரியும் காட்சி PC: விக்கிமீடியா காமன்ஸ்
அருமை
LikeLike
தங்கள் வருகைக்கும் நிறைவான கருத்திற்கும் நன்றி
LikeLike
கர்நாடகாவின் சில பகுதிகளுக்கு மட்டும் சென்றதுண்டு. புதியதாக ஒரு கோவில் பற்றி அறிந்து கொள்ளத் தந்தமைக்கு நன்றி.
LikeLike
தங்கள் வருகைக்கும் நிறைவான கருத்திற்கும் நன்றி
LikeLike