விஜயநகரப் பேரரசால் பதினான்காம் நூற்றாண்டில் திராவிடக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட சோமேஸ்வரர் கோவில் கோலார் நகரில், ஃபோர்ட் (Fort) பகுதியில் அமைந்துள்ளது. கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், கோலார் வட்டம், கோலார் பின் கோடு 563101 நகரம் அமைந்துள்ளது. இதன் அமைவிடம் 13°38′N அட்சரேகை 95°35′E தீர்க்கரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 3200 அடி ஆகும். இவ்வூர் பெங்களூருவிலிருந்து 68 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கோவிலைப் பற்றி இந்தப் பதிவு விவரிக்கிறது.
வரலாறு
கோலார் ஒரு புராதன நகரம். கிபி. 350 முதல் 1000 ஆம் ஆண்டு வரை மேலைக் கங்கர்கள் (Kannada: ಪಶ್ಚಿಮ ಗಂಗ ಸಂಸ್ಥಾನ) கர்நாடக மாநிலத்தின் பகுதிகளை ஆட்சி செய்தனர். இவர்கள் தங்கள் தலைநகரை முதலில் கோலாரில் நிறுவினார்கள். கோலார் நகரம் அப்போது ‘குலுவாள புரம்’ என்று அழைக்கப்பட்டது.
பின்னர் இவர்கள் தலைநகரம் தலைக்கட்டுக்கு மாற்றப்பட்டது. கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் இப்பகுதியை வென்று தங்கள் ஆட்சியை நிறுவினார்கள். காவிரியின் நீர்வளத்தை முழுதும் பயன்படுத்தவேண்டிச் சோழர்கள் தென் கர்நாடகப் பகுதிகளைச் சிறிது சிறிதாகக் கைப்பற்றத் தொடங்கினர். கி.பி.977ஆம் ஆண்டில் இராஜராஜ சோழன் ஒசக்கோட்டையைக் கைப்பற்றினார். கி.பி. 1004 ஆம் ஆண்டில் கங்கர்களிடமிருந்து தென் கர்நாடகத்தை முழுமையாக வென்றனர்.
சோழர்களின் ஆட்சிக்காலம் கர்நாடகத்தில் ஏராளமான தாக்கங்களை ஏற்படுத்திச் சென்றுள்ளது. அவற்றுள் ஒன்று கோவில் கட்டிடக்கலையாகும். கோலார் மாவட்டம் முழுவதும் சோழர்கள் கட்டிய கோவில்கள், பழந்தமிழ் கல்வெட்டுகளுடன் இன்றும் உள்ளன. சோழர்கள், இந்தப் பகுதியை வென்றதன் நினைவாக முல்பாகல் அருகே சோமேஸ்வரர் கோவில் கட்டப்பட்டுள்ளது.
சோழர்களைச் சாளுக்கியர்கள் வீழ்த்தியதால் கோவில் கட்டும்பணி இடையில் நின்றுபோனது. பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட விஜயநகர வம்சத்து அரசர்கள் இக்கோவிலை விரிவுபடுத்திக் கட்டினார்கள். விஜயநகரக் கட்டிடக் கலைப்பணிக்கு எடுத்துக்காட்டாக இக்கோவிலை வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுவது வழக்கம். இக்கோவிலில் உள்ள தூண்கள் இந்த அரசர்கள் கொண்டிருந்த பன்னாட்டு வணிகத் தொடர்புகளையும் வர்த்தகத்திற்கான மதிப்புகளையும் சித்தரிக்கின்றன.
கட்டிடக்கலை
சோமேஸ்வரர் கோவில், கோலாரம்மா கோவிலிலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ளது. ஜார்ஜ் மைக்கேல் என்ற வரலாற்று அறிஞர் தன் “The New Cambridge History of India” (1995) என்ற நூலில் கோலார் சோமேஸ்வரர் கோவில் அமைப்பை பெங்களூரு சோமேஸ்வரர் கோவிலின் அமைப்போடு ஒப்பு நோக்கி இரண்டு கோவிலின் பொது அமைப்புகளும் (general layouts) ஓத்திருப்பதாகக் கூறியுள்ளார். என்றாலும் கோலார் சோமேஸ்வரர் கோவிலில் அணி அலங்காரங்கள் மிகுந்து காணப்பபடுவதாகவும் கூறியுள்ளார். திராவிடக் கட்டிடக் கலையமைப்பில் கட்டப்பட்டுள்ள இக்கோவிலின் இராஜகோபுரம் ஐந்து நிலைகள் கொண்டது. அழகான சுதைச் சிற்பங்கள் இக்கோவிலை அலங்கரிக்கின்றன. கோவிலைச் சுற்றி நான்கு புறமும் சுற்றுமதில்கள் அமைந்துள்ளன.
இக்கோவில் கருவறை, அந்தராளம், அர்த்தமண்டபம். முகமண்டபம், மகாமண்டபம், போன்ற கலை அம்சங்களுடன் விளங்குகிறது. இராஜகோபுரத்தைத் தாண்டி பிரகாரத்திற்குள் நுழைந்ததும் பல தூண்களுடன் அமைந்த பெரிய திறந்தநிலை மகாமண்டபத்தைக் காணலாம். உயரமான தங்குதளத்தின்மீது இக்கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளது. அழகிய வேலைப்பாடமைந்த தூண்கள் மகாமண்டபத்தின் கூரையைத் தாங்குகின்றன. யாளியின் மேலமர்ந்து காணப்படும் சிற்பங்கள் மகாமண்டபத்தின் நான்கு முகப்புத் தூண்களை அலங்கரிக்கின்றன. இந்த மண்டபத்திற்கு முன்பு பித்தளைக் கவசம் அணிந்த உயரமான கொடிமரமும், பலிபீடமும், கல்லில் செதுக்கிய தீபஸ்தம்பமும் அமைக்கப்பட்டுள்ளன. மகாமண்டபத்திற்கும் கருவறைக்கும் இடையே மூடிய நிலையில் முகமண்டபமும் அதையடுத்து அந்தராளமும் (vestibule) அமைந்துள்ளது. அந்தராளத்தையொட்டி மூலவரின் கருவறை அமைந்துள்ளது. கருவறை நுழைவாயில் நிலை அழகிய விஜயநகர பாணி சிற்ப வேலைப்பாடுகளால் மிளிர்கிறது. வாயிலை இரண்டு ஆஜானுபாகுவான துவாரபாலகர்கள் காவல் புரிகின்றனர். கருவறைக்கு முன்பு கருங்கல்லால் செதுக்கப்பட்ட நந்தி சிலை காணப்படுகிறது.
கருவறையின் மேல் உயரமான இருதள திராவிட விமானம் அமைந்துள்ளது. அதிஷ்டானம் முதல் பிரஸ்தாரம் வரை கருங்கல்லிலும், விமானத்தின் மேல்கட்டுமானம் (superstructure) சுதையாலும் கட்டப்பட்டுள்ளன. கோவில் கருவறை மற்றும் மண்டபங்களின் தாங்கு தளத்தில் வேலைப்பாடமைந்த உறுப்புகளும், யானை, பூதம் மற்றும் யாளி உருவங்கள் அமைந்த வரிசையும் அலங்கரிக்கின்றன. வெளிப்புற விமானச் சுவர்களில் அழகுறச் செதுக்கிய அரைத்தூண்களால் அமைக்கப்பட்ட பத்திகளை அழகிய கும்பபஞ்சரங்கள் அலங்கரிக்கின்றன. விமானத்தின் இரு தளத்திற்கு மேல் கண்டம் (கிரீவம்), சிகரம் மற்றும் ஸ்தூபி உறுப்புகள் திராவிட பாணியில் அமைந்துள்ளன. இக்கோவிலின் மூலவர் சிவபெருமான் ஆவார். மூலவருக்கு சோமேஸ்வரர் என்று பெயர். இக்கோவிலின் அம்பாள் தனித்த கருவறையில் அருள்பலிக்கிறாள்.
கோவிலின் தென்மேற்கு மூலையில் நேர்த்தியான சிற்ப வேலைப்பாடமைந்த கல்யாணமண்டபம் அமைந்துள்ளது. கல்யாணமண்டபத்தின் தூண்களைப் புடைப்புச் சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. கல்யாணமண்டபத்தின் மேற்புறம் (ceiling) சீனத்துக் கலைப்பாணியில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இக்கோவிலில் விஜயநகர பாணியில் அழகிய படிக்கட்டுகளுடன் அமைந்துள்ள குளத்திற்கு கல்யாணி (Kalyani) என்று பெயர்.
கல்வெட்டுகள்
விஜயநகர அரசர்களின் கி.பி. 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் யாகசாலை (Yagasala) சுவர்களிலும், பண்டகசாலை (store room) சுவர்களிலும் காணப்படுகின்றன. இக்கோவில் இந்திய தொல்பொருள் அளவீட்டுத் துறையினரால் (Archaeological Survey of India) பராமரிக்கப்பட்டு வருகிறது.
குறிப்புநூற்பட்டி
- எப்படி செல்ல வேண்டும் கொத்த கொட்ட கோலாருக்கு தினகரன் செப்டம்பர் 30, 2014
- பெங்களூரில் சோழர் கோவில்கள்
- சோமேஸ்வரர் கோவில் ,கோலார் ,கர்நாடகா https://www.facebook.com/tamilparanthagan/media_set?set=a.1957861837830645.1073741855.100008205424481&type=3
- List of Chola temples in Bangalore Wikipedia
- Michell, George (1995) [1995]. The New Cambridge History of India
- Someshwara Temple, Kolar, Wikipedia
- Someshwara Temple. Raggi Mudde. July 25, 2011

Rajagopuram PC: Wikimedia Commons

கோயிலின் முன்பக்கத் தோற்றம்

திறந்தவெளி மண்டபத்தின் காட்சி PC: Wikimedia Commons

திறந்தவெளி மண்டபத்தின் காட்சி PC: Wikimedia Commons

சோமேஸ்வரர் கோவிலின் பின்பக்கக் காட்சி PC: Wikimedia Commons

சோமேஸ்வரர் கோவிலின் அலங்கார கல்யாண மண்டபம் PC: Wikimedia Commons

மண்டபத்தின் யாழிச் சிற்பத் தூண்கள் PC: Wikimedia Commons

கல்யாண மண்டபத் தூண்கள் PC: Wikimedia Commons
பிங்குபாக்: தமிழ் வலைப்பதிவகம்: தமிழ் வலைத்தளப் பதிவாளர்களுக்குப் பயனுள்ள வாட்ஸ் அப் திரட்டி | அகரம்