பைரவகோண எட்டுக் குடைவரைக் கோவில்களின் .தொகுப்பாகும். இக்குடைவரைக் கோவில்கள் ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், சந்திரசேகரபுரம் மண்டல், சந்திரசேகரபுரம் (Chandra Sekhara Puram) பின் கோடு 523112 நகருக்கு அருகில் அடர்ந்த நல்லமலா காட்டில் (Nallamala forest) பைரவகோண அமைந்துள்ளது. இதன் அமைவிடம் 15°5’20″N அட்சரேகை 79°12’2″E தீர்க்கரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 231 மீட்டர் ஆகும். இவ்வூர் அம்பவரத்திலிருந்து (Ambavaram PIN 523112) 6 கி.மீ. தொலைவிலும்; சீதரமபுரத்திலிருந்து (Seetharamapuram PIN 524310) 18 கி.மீ. தொலைவிலும்; உதயகிரியிலிருந்து (Udayagiri PIN 524226) 42 கி.மீ. தொலைவிலும்; அட்மகுரிலிருந்து (Atmakur PIN 524322) 92 கி.மீ. தொலைவிலும் நெல்லூரிலிருந்து 140 கி.மீ. தொலைவிலும்; ஒங்கோலிலிருந்து 137 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
பைரவகோண குடைவரைக் கோவில்கள் கி.பி. 7 – 8 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் அகழப்பட்டிருக்கலாம் என்று சில வரலாற்று ஆய்வாளர்களும் தொல்லியல் அறிஞர்களும் கணித்துள்ளார்கள். முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (கி.பி. 600–630) இதைக் காட்டியிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. சோழர்கள் கி.பி. 7 முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை மேம்படுத்தியுள்ளார்கள். பல்லவர்கள் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் மாமல்லபுரத்தில் தங்கள் குடைவறைகளை அகழ்ந்துள்ளனர்.
பைரவகோணவில் எட்டு குடைவரைக் கோவில்கள் மாமல்லபுரம் சாயலில் அமைந்துள்ளன. இந்த எட்டுக் குடைவரைகளும் கருங்கல் குன்றின் ஒரு சரிவில் அகழப்பட்டுள்ளன. இக்குடைவரைகளில் நேர்தியாகச் செதுக்கப்பட்ட தூண்கள், கருவறை, சிற்பத்தொகுப்புகள் போன்ற கட்டிடக்கலை உறுப்புகளைக் காணலாம். பைரவகோண குடைவரைகள் மாமல்லபுரத்தின் சாயலையும் ராஷ்டிரகூடர் மற்றும் சாளுக்கியர்களின் சில சாயல்களையும் காணமுடியும்.
சிவன் இங்கு காலபைரவராகக் காட்சி தருகிறார். எனவேதான் இத்தலம் பைரவகோண என்று பெயர் பெற்றது. இங்கு சசிலிங்கம், ருத்ரலிங்கம், விஸ்வேஸ்வரலிங்கம், நகரிகேஸ்வரலிங்கம், பார்கேஸ்வரலிங்கம், இராமேஸ்வரலிங்கம், மல்லிகார்ஜுணலிங்கம், பக்ஷமாலிகாலிங்கம் ஆகிய எட்டு இலிங்கங்கள் காட்சி தருகின்றன. எட்டு இலிங்கங்களில் ஏழு இலிங்கங்கள் கிழக்கிலும் எட்டாவது இலிங்கம் வடக்கிலும் பார்த்தவாறு உள்ளன. வடக்கு நோக்கிய இந்த எட்டாவது குடைவரையில் சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோர் இணைந்திருப்பது சிறப்பு. சிவலிங்கங்கள் கருங்கல்லிலும் மற்ற தேவதைகள் தாய்ப்பாறையிலும் செதுக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள எட்டுக் குகைகளையும் இவற்றின் குடைவரை கட்டிடக்கலை அமைப்பின்படி இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக்கொள்ளலாம். வடக்கில் அமைந்துள்ள குடைவரையிலிருந்து தொடங்கலாம். இங்கிருந்து தொடங்கும் குடைவரைகள் ஒற்றைக் கருவறையை மட்டும் பெற்றுள்ளன. இந்தக் குடைவரைகளில் எந்த மண்டபத்தையும் காண முடியவில்லை. இங்குள்ள நுழைவாயில்கள் எளிமையாகவும், வாயிலின் இருபுறமும் நின்ற நிலையில் பக்கத்திற்கு ஓன்றாக இரண்டு துவாரபாலகர்கள் காவல்புரிந்த வண்ணம் காணப்படுகிறார்கள். ஒவ்வொரு கருவறையிலும் ஒரு சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது. இலிங்க பீடம் தாய்ப்பாறையில் செதுக்கப்பட்டுள்ளது சிறப்பு. இது போல நந்தியும் தாய்ப்பாறையில் செதுக்கப்பட்டு இலிங்கத்தின் முன் உட்கார்ந்தவாறு அமைக்கப்பட்டுள்ளதும் மற்றோரு சிறப்பு. இவை பாண்டியர்களின் கலைப்பாணியாகும். நடுவில் உள்ள குடைவரையின் பின்சுவரில் திரிமூர்த்தியின் உருவம் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இது எலிபாண்டா குடைவரையை உள்ள மகேசரின் உருவத்தை நினைவுபடுத்துகிறது. ஒரே குடைவரையில் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய திருமேனிகள் அமைந்திருப்பது மிகவும் சிறப்பு. நடுவில் அமைந்துள்ள குடைவரையில் திரிமுகத் துர்க்கையின் திருமேனியைக் காணலாம். ஏணியின் மூலம் ஏறிச்சென்று தேவி அன்னபூரணிக்கு அர்ப்பணிக்கப்பட்ட குடைவரையைக் காணலாம். வடக்குத் திசையில் கடைசியாக அகழப்பட்டுள்ள குடைவரையில் இரண்டு அற்புதமான புடைப்புத் திருமேனிகளைக் காணலாம். ஒன்று எட்டுத்தலையுடன் காட்சிதரும் ஹரிஹரர் மறறொன்று மெல்லிய தேகங்கொண்டு பத்துக் கைகளுடன் அருவியைப் பார்த்தவாறு நடனமாடும் சிவன். இந்தத் திரிமூர்த்திக் குடைவரை மண்டகப்பட்டு மற்றும் மாமல்லபுரம் திரிமூர்த்திக் குடைவரைகளை நினைவூட்டுகின்றன.
இங்குள்ள குடைவரையைக் காணும்போது நீங்கள் முதலாம் மகேந்திரவர்ம பல்லவனின் கட்டிடக்கலையை நினைவு கூறுவது உறுதி. நன்கு அலங்கரிக்கப்பட்ட உட்கார்ந்த நிலையிலான சிங்கத்தை அடிப்பகுதியாகவும், குமிழ்வடிவிலான கேபிடல் (capital) மற்றும் பெரிய அபாகசை (abacus) மேற்பகுதியாகவும் கொண்ட பல்லவ கலைப்பாணித் தூண்களை இங்குள்ள குடைவரையில் காணலாம். தூணின் மேலமைந்த வளைந்த பொதிகையில் (corbel) நடுப்பட்டை காணப்படவில்லை. வழக்கமான கபோதம் (cornice) குடுக்களுடன் (kudus) கரமுரடாகச் செதுக்கப்பட்டுள்ளது. கபோதத்திற்குக் கீழே பூதவரி வடிவம் நேர்தியாகச் செதுக்கப்பட்டுள்ளது. இக்குடைவரையின் கருவறை வாயிலில் அழகாக அலங்கரிக்கப்பட்ட இரு கைகளுடன் கூடிய துவாரபாலகர்கள் சிற்பங்கள் பக்கத்திற்கொன்றாக கருவறையை நோக்கியபடி திரிபங்க நிலையில் தடியில் சாய்ந்தவாறு நிறுத்தப்பட்டுள்ளனர். முகத்தில் கோரைப்பற்களையோ அல்லது தலையில் கொம்பையோ காணமுடியவில்லை. இவ்விரு சிற்பங்களும் பகட்டான ஆடை மற்றும் அணிகலன்களுடன் காணப்படுகிறார்கள்.

பைரவகோண குடைவரை PC: Highway – The Onlyway

பைரவகோண குடைவரை PC: GoTirupati

பைரவகோண குடைவரை PC: Panoramio
பைரவகோண அருவி
அழகிய மலைகளின் நடுவில் 200 மீட்டர் உயரத்திலிருந்து லிங்கள பைரவகோண அருவி விழுகின்றது. இந்த அருவி லிங்கல பெண்டா என்னுமிடத்தில் துவங்கி ஐந்து கி.மீ. பயணித்து லட்சுமி, பார்வதி, சரஸ்வதி ஏரியை அடைகிறது. அங்கிருந்து மீண்டும் பாய்ந்து திரிவேணி சங்கமத்தை அடைந்து பின்னர்ச் சித்ரகூட ஏரியை அடைந்து இங்குள்ள தேவதை முன் விழுகின்றது. இங்குக் கார்த்திகை மாதம் வரும் பவுர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தப் பவுர்ணமி நன்னாளில் சந்திரனின் ஒளி துர்க்கையின் திருமேனி மேல் விழுவது மிகவும் சிறப்பு. கார்த்திகை பவுர்ணமி அன்றும் மகா சிவராத்திரி அன்றும் இக்குடைவரைக் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிகிறார்கள். அருவியில் நீராடிய பின்பு இங்குப் பைரவரை வணங்கி அருள்பெறுகிறார்கள்.
பைரவகோண செல்ல...
கடப்பாவிலிருந்து – கிட்டலூரு – கோமரோலு – பொருமமில்லா – சீதரமபுரம் – அம்பவரம் – வழியாக பைரவகோண செல்லாம்.
சென்னையிலிருந்து – நெல்லூர் – அட்மகுர் – உதயகிரி – சீதரமபுரம் – அம்பவரம் – வழியாக பைரவகோண செல்லாம்.
பெங்களூரு (Bengaluru), ஓங்கோல் (Ongole), கனிகிரி (Kanigiri), நெல்லூர் (Nellore) மற்றும் படவேல் (Badvel) ஆகிய ஊர்களிலிருந்து பஸ்கள் இங்கு சென்று வருகின்றன. உதயகிரியிலிருந்து சீதரமபுரத்திற்கு APSRTC பஸ்கள் செல்கின்றன. சீதரமபுரத்திலிருந்து ஷேர் ஆட்டோக்கள் கிடைக்கும்.
அருகிலுள்ள இரயில் நிலையம் மர்க்கபுர் ரோடு 50 கி.மீ.; ஓங்கோல் 136 கி.மீ.; நெல்லூர் 140 கி.மீ.;
அருகிலுள்ள விமானநிலையம் திருப்பதி 223 கி.மீ.; சென்னை 300 கி.மீ.
குறிப்புநூற்பட்டி
- Bhairava Konda Temple (http://careerinformation4u.blogspot.in/2013/06/bhairava-kona-temple.html)
- Bhairava Konda cave temples, Ambavaram, Kottapalli, Ongole Andhra Pradesh November 5, 2014 (http://www.templedarshan.in/bhairavakona-cave-temples-ambavaram-kottapalli-ongole-andhra-pradesh/)
- Many people throng Bhairavakona. The Hindu November 13, 2008
- Bhairavakona Wikipedia
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்
LikeLiked by 1 person
நன்றி… இனிய பொங்கல் வாழ்த்துகள் !
LikeLike