காளமேகப் புலவர் ஒரு தமிழ்ப் புலவர். கும்பகோணத்தில் பிறந்தவர். காளமேகம் என்பது இவருடைய இயற்பெயர் என்பது ஒரு சிலர் கருத்து. வேறு சிலரோ இவருடைய இயற்பெயர் வரதன் என்று நம்புகிறார்கள். இதற்குச் சான்றாக அதிமதுரகவி என்பார் இயற்றிய பாடலொன்றைக் குறிப்பிடுகிறார்கள். அந்தப்பாடல் இது:
வாசவயல் நந்தி வரதா திசையனைத்தும்
வீசுகவி காள மேகமே – பூசுரா
விண்தின்ற வௌ;வழலில் வேவுதே பாவியேன்
மண்தின்ற பாணமென்ற வாய்.
இவர் வைணவ சமயத்தைச் சார்ந்த அந்தணர் ஆவார். மதுரைக்கு வடக்கே 12 கிமீ தொலைவில் அமைந்துள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். மூலவர் காளமேகப் பெருமாள் ஆவார். திருமோகூர் தலத்தின் மடப்பள்ளியில் (சமையல் கூடத்தில்) பரிசாரகராய் (சமையல் கலைஞராகப்) பணியாற்றிய ஒருவரின் மகனே காளமேகம் என்பது ஒரு சிலரின் கருத்தாகும். திருமோகூர் காளமேகப்பெருமாளைப் பற்றி காளமேகப் புலவர் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வரதனும் தன் வாலிப வயதில் ஸ்ரீரங்கம் கோவிலில் சமையல் கலைஞராய் (பரிசாரகராய்) வேலையிலமர்ந்தார். ஸ்ரீரங்கம் கோவிலை அடுத்து காவேரி ஆற்றாங்கரையில் அமைந்துள்ள திருவானைக்காவல் என்னும் திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரி உடனாய சம்புகேசுவரர் கோவிலில் மோகனாங்கி என்ற தாசி குலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணொருத்தி சிவபெருமான் முன்பு ஆடியும் பாடியும் சிவத்தொண்டு செய்து வந்தாள்.
வரதன் மோகனாங்கியைப் கண்டதும் மையல் கொண்டார். அவளுக்கும் வரதன் மீது காதல் இருந்தது. அவள் சைவ சமயத்தைச் சேர்ந்தவள். வரதன் ஒரு வைணவன். அது ஒரு மார்கழி மாத முன்னிரவு. சம்புகேசுவரர் கோவிலில் தாசிகள் ஒன்றிணைந்து திருவெம்பாவைப் பதிகங்களை இறைவன் முன் பாடிக்கொண்டிருந்தனர். அதில் ஒரு பதிகம் இது.
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்
றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போங்கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோர் எம்பாவாய்.
(திருவெம்பாவை 7)
அடிக்கோடிட்டுக் காட்டிய வரிகளைப் பாடுவதற்கு மோகனாங்கி சற்று திணறினாள். அவள்தான் ஒரு வைணவன் பால் மையல் கொண்டுள்ளாளே. மோகனாங்கி சம்புகேசுவரர் கோவிலில் பாடும்போது மற்ற தாசிகள் பரிகாசம் செய்தார்கள். வைணவனை மோகித்துவிட்டு சிவன் கோவிலில் பாட்டுப் பாடுவது பற்றித்தான் இந்தப் பரிகாசமே. மோகனாங்கிக்கு இந்தப் பரிகாசம் கோபத்தைக் கிளறிவிட்டது. வரதன் மோகனாங்கியைச் சந்தித்தபோது அவனை வீட்டுக்கு வெளியே நிறுத்திவைத்து “நம் காதல் நிறைவேற வேண்டுமென்றால் சிவதீட்சை வாங்கி சைவனாக மாறிவிடு” என்று வற்புறுத்துகிறாள்.” வரதனும் மோகனாங்கி மேலிருந்த மோகத்தால் சம்புகேசுவரர் கோவிலில் சிவதீட்சை பெற்று சைவனாக மாறினான். சம்புகேசுவரர் கோவிலில் உள்ள மடப்பள்ளியில் சமையல் பரிசாரகனாகவும் சேர்ந்துவிடுகிறான். இருவரும் மனமொத்து வாழ்ந்து வந்தனர்.
சம்புகேசுவரர் கோவிலில் ஒரு நாள் வரதன் மடப்பள்ளியில், தன் வேலையெல்லாம் முடித்துவிட்டு, மோகனாங்கிக்காகக் காத்திருக்கிறான். மோகனாங்கியிடம் “நீ கோவிலில் உன் வேலையெல்லாம் முடித்தபின்பு வீட்டிற்குப் போகும்போது என்னை எழுப்பு. நாம் இருவரும் சேர்ந்தே வீட்டிற்குப் போகலாம்” என்று சொல்லிவிட்டு கோவில் பிரகாரத்தில் உள்ள திண்ணையில் படுத்துத் தூங்கிவிடுகின்றான். மோகனாங்கியும் இருட்டில் ஒரு ஓரமாக அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த வரதனைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் போகவே, வீட்டிற்குச் சென்றுவிடுகிறாள்.
இதே சம்புகேசுவரர் கோவிலில் மற்றோரு அந்தணன் சரஸ்வதி தேவியின் மீது பக்தி செலுத்தி வந்தான். இவன் சரஸ்வதி தேவியை நோக்கி நீண்ட நாட்களாகத் தவமியற்றியும் வந்தான். இவன் தவத்தில் அகமகிழ்ந்த சரஸ்வதி தேவியே சிறு பெண்ணாக உருவெடுத்து தன் பக்தனின் பக்தியைச் சோதிக்க எண்ணி, வாய் நிறைய வெற்றிலை பாக்கைக் குதப்பியபடி கோவிலுக்குள் வலம் வருகிறாள். கோவிலில் படுத்திருந்த சிவபக்தனிடம் சென்று: “வாயைத்திற உன் வாயில் நான் துப்புகிறேன்” என்று சொல்லியிருக்கிறாள். அந்தணனோ கோபத்தின் உச்சிக்கே சென்று தன் வாயில் வெற்றிலையை வாங்க மறுத்து விடுகிறான்.
வெற்றிலையைத் தன் வாயில் குதப்பியபடிவந்த சரஸ்வதி தேவி, வரதன் அருகே சென்று அவன் வாயைத் திறக்கச் சொல்லி வெற்றிலையை உமிழ்வதாகச் சொல்கிறாள். வரதன் சரஸ்வதி தேவியை மோகனாங்கி என்று எண்ணிக் கொள்கிறான். மோகனாங்கி சொல்வதைச் செய்யவில்லை என்றால் அவளுக்குக் கோபம் வந்துவிடுமே என்று அஞ்சி வாயைத் திறக்க அவன் வாயினுள் சரஸ்வதி தேவி வெற்றிலையை உமிழ்கிறாள். அன்று முதல் சரஸ்வதி தேவியின் அனுக்கிரகத்தால் வரதன் கல்லாமலே புலமை பெற்று கவி மழை பொழியத் துவங்கினான். கவி காளமேகம் என்று பெயரும் பெற்றான்.
நாகபட்டிணத்தை அடுத்த திருமலைராயன் பட்டிணத்தை விஜயநகர அரசப் பிரதிநிதியான சாளுவத் திருமலைராயன் (கி.பி 1455 – 1468) அரசாண்டு வந்தான். இவன் விஜயநகர மன்னன் மல்லிகார்ஜுன ராயர் (கி.பி. 1455 – 1468) என்னும் மூன்றாம் தேவ ராயரின் பிரதிநிதியாவான். திருமலைராயன் பட்டிணம் என்பது ‘சுங்கத் தவிர்த்த சோழநல்லுனரான திருமலை ராசபுரமே’ என்பது பேராசிரியர் ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை அவர்களின் கருத்தாகும். திருமலைராயன் குறித்துக் கல்வெட்டுகள் தரும் சான்றுகளின் அடிப்படையில் காளமேகப் புலவர் பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்திருக்கலாம் என்பது அறிஞர்களின் கருத்தாகும்.
இந்தத் தெலுங்கு மொழி சிற்றரச னின் அரசவையில் 64 புலவர்கள், தண்டிகைப் புலவர்கள் என்ற சிறப்பினைப் பெற்றுத் திகழ்ந்தனர். தங்கள் புலமையின் செருக்கில் அரசனிடம் பரிசில் பெற எண்ணி திருமலைராயனின் அவைக்கு வரும் புலவர்களையெல்லாம் தந்திரமாக மடக்கி, அவர்களுக்கு அவமானத்தையும் தலைகுனிவையும் ஏற்படுத்தி வந்தனர். அதிமதுரக் கவிராயர் இந்தத் தண்டிகைப் புலவர்களின் தலைவராவார்.
இந்த அவையில் தமது புலமையைக் காட்டி மன்னனிடம் பரிசில் பெற எண்ணிய கவி காளமேகம் திருமலைராயனின் அவைக்குச் சென்றார். அங்கே அதிமதுரக் கவிராயர் 64 புலவர்கள் புடைசூழ பல்லக்கில் அமர்ந்து அரசவைக்கு சென்று கொண்டிருந்தார். அச்சமயம் அவையில் நின்ற கட்டியக்காரன் ஒருவன் “அதிமதுர சிங்கம் பராக்! பராக்!” என்று கூற, குழுமியிருந்த அவையும் கட்டியக்காரனுடன் சேர்ந்து முழங்கியது. கவி காளமேகமோ இவர்களுடன் சேர்ந்து அதிமதுர சிங்கத்தை வாழ்த்தாதது கண்டு வெகுண்டு அவரை வாழ்த்தும்படி வற்புறுத்தினான். கவி காளமேகமோ:
அதிமதுரம் என்றே அகிலம் அறியத்
துதி மதுரமாய் எடுத்துச் செல்லும் புதுமையென்ன
காட்டுச் சரக்கு உலகில் காரமில்லாச் சரக்கு
கூட்டுச் சரக்கு அதனைக் கூறு.
என்று பாடினார். அதிமதுரம் என்பது ஒரு காட்டுச் சரக்கு (நாட்டு மருந்துச் சரக்கு). இதனை எதற்காகப் போற்றி முழங்கவேண்டும்? என்பது இதன் பொருள். இந்த ஏளனமான பாடல் பற்றி கட்டியக்காரன் கவிராயரிடம் சொல்லிவிட்டான் கவிராயரோ மன்னினிடம் இது பற்றி எடுத்துரைத்து, கவி காளமேகத்தை கட்டியிழுத்து அரசவைக்குக் கொண்டுவருமாறு மன்னன் உத்தரவிட வேண்டினார். அவ்வாறே காளமேகம் அரசவைக்கு அழைத்து வரப்பட்டார். காளமேகம் தண்டிகைப் புலவர்களை நோக்கி நீங்களெல்லாம் யார்? என்றார். “நாங்களெல்லாம் கவிராஜர்கள்” என்று அவர்கள் கர்வமாகக் கூறினார். காளமேகம் அவர்களை குரங்கிற்கு ஒப்பிட்டுப் பாடிய பாடல் இது:
வாலெங்கே நீண்ட வயிறெங்கே முன்னிரண்டு
காலெங்கே உட்குழிந்த கண்ணெங்கே சாலப்
புவிராயர் போற்றும் புலவீர்காள் நீவிர்
கவிராயர் என்றிருந்தக்கால்.
கவி என்றால் குரங்கு என்பது மற்றொரு பொருள். கவிராஜர் என்றால் நீங்கள் குரங்குகளோ? குரங்குகள் என்றால் உங்களுடைய வால்கள் எங்கே? நீண்ட வயிறெங்கே? முன்னங்கால்கள் எங்கே? உட்குழிந்திருக்கும் கண்கள் எங்கே? நீங்கள் குரங்குகளுக்குத் தலைவர்கள் எனில் இவையெல்லாம் உங்களிடம் இருக்கவேண்டுமே! என்று ஏளனமாக வசை பாடிய பாடல் இதுவாகும்.
தண்டிகைப் புலவர்கள் இந்தப் பாடலினைக் கேட்டு வெகுண்டெழுந்தனர். “திருமலைராயன் சபைப் புலவர்களை ஏளனம் செய்யும் நீர் யார்?” என்று கேட்கவே,. காளமேகப்புலவர் சற்றும் தாமதியாமல் தன் பாட்டிலேயே சொன்ன பதில் இது:
தூதஞ்சு நாளிகையில் ஆறுநாளிகைதனில்
சொற்சந்த மாலை சொல்லத்
துகளிலா வந்தாதி யேழுநாளிகை தனில்
தொகைபட விரித்து ரைக்கப்
பாதஞ்செய் மடல்கோவை பத்துநா ளிகைதனில்
பரணியொரு நாண்முழுவ தும்
பாரகா வியமெலா மோரிரு தினத்திலே
பகரக்கொ டிக்கட்டி னேன்
சீதஞ்செ யுந்திங்கண் மரபினான் நீடுபுகழ்
செய்யதிரு மலைரா யன்முன்
சீறுமா றென்றுமிகு தாறுமா றுகள்செய்
திருட்டுக் கவிப் புலவரைக்
காதங்கு அறுத்துச் சவுக்கிட்டு அடித்துக்
கதுப்பிற் புடைத்து வெற்றிக்
கல்லணையி னொடுகொடிய கடிவாள மிட்டேறு
கவிகாள மேகம் நானே.
காளமேகம் இந்தப் பாடலில் தான் யாரென்பதையும், தனது புலமை என்னவென்பதையும் சற்றுக் திமிருடன் எடுத்துரைத்த பாடல் இதுவாகும். அவையில் மன்னன் திருமலைராயனைப் புகழ்ந்து விதந்துரைக்கின்றார். தண்டிகைப் புலவர்களை “தாறுமாறுகள் செய்யும் திருட்டுப்புலவர்கள்” என்று இகழ்ந்து பாடுகிறார். இவர்களைச் சவுக்கால் அடித்து, செவிகளை அறுத்து, கன்னங்களைச் சிதைத்து, கல்லோடு பிணைத்துக் கடிவாளத்தோடு இணைத்து அவர்கள் மீது ஏறிச் சவாரிசெய்யப்போகின்ற கவிஞராகிய காளமேகம் நானே என்று சற்று கர்வத்துடன் பாடிய பாடல் இதுவாகும்.
திருமலைராயனோ காளமேகம் தன்னைப் புகழ்ந்து பாடியதை பொருட்படுத்தாமல் தண்டிகைப் புலவர்களை ஏளனம் செய்து பாடி அவமதித்த காளமேகத்தின் செருக்கை அடக்க எண்ணினான். காளமேகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தவேண்டும் என்பது அவன் திட்டம். கவி காளமேகத்திற்கும் அதிமதுரக் கவிராயருக்கும் இடையே போட்டியொன்றை ஏற்பாடு செய்தான். அறுபத்து நான்கு தண்டிகைப் புலவர்களின் உதவிபெற்று அதிமதுரக் கவிராயர் இந்தப் போட்டியில் திண்ணமாக வெற்றிபெறுவார் என்று மன்னன் திடமாக நம்பினான். இந்த போட்டிபற்றிய உரையாடல் இங்கே:
அதிமதுரக் கவிராயர் காளமேகத்திடம்:
“எம்போல் நீ விரைந்து கவி பாடும் வல்லமை பெற்றானோ? அரிகண்டம் பாடி எம்மை வெல்ல முடியுமோ?” என்று அகந்தையுடன் வினவினார்.
“அரிகண்டம் பாடும் முறைமை யாது? அதை முதலில் கூறு. அதன் பின் யாம் இசைவோம்” என்றார் காளமேகம்.
காளமேகம் தன் கழுத்தில் கூறிய கத்தியினை அணிந்து கொண்டு போட்டிக்குத் தயாராக வேண்டும். கவிராயர் கேட்கும் குறிப்பை ஒட்டி உடனுக்குடன் கவி பாடவேண்டும். பாடும் கவியில் சொற்பிழை, பொருட்பிழை, இலக்கணப்பிழை ஏற்படக்கூடாது. அவ்வாறு பாடும் பாடல் பிழைபட்டால் காளமேகத்தின் கழுத்து வெட்டப்படும். கவி பிழையின்றிக் கவிபாடி வென்றால் தக்க பாராட்டும், பரிசும் கிடைக்கும். சம்மதமா? என்று வினவினார் கவிராயர்.
காளமேகமோ “அரிகண்டம் ஒரு பெரிதா என்ன? யாம் எமகண்டமே பாடி உம்மை வெல்வோம்!” என்று பதிலிறுத்தார். எமகண்டம் என்பது இன்னும் சற்று கொடுமைகள் நிரம்பிய தண்டனையாகும். இதற்காக 16 x 16 அடியில் வெட்டப்பட்ட குழியில் நான்கு புறமும் இரும்புக் கம்பங்கள் நடவேண்டும். நட்ட கம்பங்களை நான்கு குறுக்குச் சட்டத்தால் இணைக்க வேண்டும். இரண்டு குறுக்குச் சட்டங்களை நடுவில் இணைத்து அதில் ஒரு உரி தொங்கவிடப்படும். உரியின் கீழே தீமூட்டி ஒரு கொப்பரையில் எண்ணெயைக் கொதிக்க விடுவர். போட்டியாளர் இந்த உரியில் அமர்ந்து கொள்வார். இவர் கழுத்தைச் நான்கு மற்றும் இடுப்பைச் சுற்றி நான்கு என்று எட்டுக் கத்திகள் இணைக்கப்படும். இந்த எட்டுக் கத்திகளும் நான்கு யானையின் கழுத்துகளிலே சங்கிலிகளால் இணைக்கப்படும். கவிராயர் தரும் குறிப்பிற்கேற்ப போட்டியாளர் அரை நொடிக்குள் கவி பாடவேண்டும். பிழை நேரின் யானைகள் சங்கிலிகளை இழுக்கும். தலையும் இடுப்பும் வெட்டுண்ட போட்டியாளர் எண்ணெய்க் கொப்பரைக்குள் விழுந்து மடிவார். காளமேகத்தின் இந்தப் பதிலைக் கேட்டு கவிராயர் அதிர்ந்தார்.
“எமகண்டம் பாட வல்லவரோ நீர்? போட்டிக்குச் சம்மதமா?” என்று கேட்ட கவிராயரை போட்டியில் வெல்லத் தயாரானார் காளமேகம். உரியில் அமர்ந்தபடியே தண்டிகைப் புலவர்கள் மற்றும் கவிராயரின் குறிப்புகளுக்கேற்ப உடனுக்குடன் கவிமழை பொழிந்து போட்டியில் வென்றார். இந்தத் திருமலைராயனைக் குறித்துத் காளமேகம் தனது பாடல்கள் பலவற்றில் குறிப்பிட்டுள்ளார் காளமேகம். ஓரிடத்தில் “….. நிலைசெய் கல்யாணிச்சாளுவத் திருமலைராயன்” என்று குறிப்பிடுகிறார்.
காளமேகப் புலவரை ஒரு ஆசுகவி என்று தமிழ் இலக்கியம் வியந்து கூறும். ஆசுகவி என்றால் எடுத்த மாத்திரத்திலே கவி பாடும் வல்லமை பெற்ற புலவர்களைக் குறிப்பிடுவதாகும். காளமேகம் வசைப்படல்களைப் பாடுவதில் சிறந்தவர் ஆவார். பல சுவைமிக்க பாடல்களையும் பாடியுள்ளார். இவற்றுள் சிலேடைப் பாடல்களும், நகைச்சுவைப் பாடல்களும் அடங்கும். காளமேகப் புலவர் பலசமயங்களில் இயற்றிப் பாடிய தனிப்பாடல்கள் மொத்தம் 158 பாடல்கள் ஆகும். இந்த நூல் தனிப்பாடல் திரட்டு என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. திருவானைக்கா உலா, சரஸ்வதி மாலை, பரப்பிரம்ம விளக்கம், சித்திர மடல் ஆகிய சமயம் சார்ந்த நூல்களையும் இவர் இயற்றியுள்ளார்.
காளமேகத்தின் புலமையையும், தமிழ் மொழியின் செழுமையையும் அனுபவிக்க வேண்டுமென்றால் இந்தத் தனிப்பாடல் திரட்டு என்ற இந்த நூலைப் புரட்டிப் பார்த்தல் நல்லது.
பாம்புக்கும் வாழைப்பழத்துக்கும் சிலேடை
நஞ்சிருக்குந் தோலுரிக்கு நாதர்முடி மேலிருக்கும்
வெஞ்சினத்திற் பற்பட்டான் மீளாது – விஞ்சுமலர்த்
தேம்பாயுஞ் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்பாகும் வாழைப் பழம்.
பாம்பினிடத்தில் நஞ்சு (விஷம்) இருக்கும். இது தன்னுடைய தோலை உரிக்கும். சிவபெருமானாகிய நாதர் முடியின் மேல் இருக்கும். கொடிய விஷம் கொண்ட இந்தப் பாம்பு சினம் கொண்டு தன் பல்லால் கடித்தால் மனிதன் உயிர் பிழைப்பது கடினம். கனிந்த வாழைப்பழம் நைந்து (நஞ்சு) போயிருக்கும். இந்தப் பழத்தின் தோலை உரிக்கலாம். சிவபெருமானுக்குப் படைக்கப்படும் பொருட்களில் மேலான (முதலான) பொருளாகத் திகழும். கடும்பசியோடு இருக்கும் ஒரு மனிதனின் பல்லில் இந்த வாழைப்பழம் பட்டால் இந்தப் பழம் மீண்டுவராது.
வைக்கோலுக்கும் யானைக்கும் சிலேடை
வாரிக் களத்தடிக்கும் வந்துபின்பு கோட்டைபுகும்
போரிற் சிறந்து பொலிவாகும் – சீருற்ற
செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில்
வைக்கோலும் மால்யானை யாம்.
வைக்கோல் அறுத்த நெற்கதிர் களத்திற்குக் கொண்டு வரப்பட்டு நெல்மணியையும் வைக்கோலையும் பிரிப்பதற்காக அடிக்கப்படும். நெல் மணிகளை அடித்துப் பிரித்த பின்பு வைக்கோலை புகுத்தி ஒரு போர்க் கோட்டை போல அமைப்பார்கள் (வைக்கோல் போர்). யானை போர்க்களத்தில் புகுந்து பகைவர்களை வாரி அடிக்கும். போர்க்களத்தில் பகைவர்களை வாரி அடித்த பின்பு யானை தன் கட்டுத்தறியாகிய கோட்டைக்குள் புகுந்துகொள்ளும். போர்க்களத்தில் யானை பொலிவுற்று சிறந்து விளங்கும்.
பாம்புக்கும் எள்ளுக்கும் சிலேடை
ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும்
மூடித் திறக்கின் முகங்காட்டும் – ஓடிமண்டை
பற்றின் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம்
உற்றிடுபாம் பெள்ளெனவே யோது .
படமெடுத்து ஆடிய பின்பு பாம்பு பாம்பாட்டியின் குடத்திற்குள்ளே அடைந்து கொள்ளும். படமெடுத்து ஆடும் பாம்பு “உஸ், உஸ்” என்று இரைச்சல் ஒலியெழுப்பும். பம்பாட்டும் பிடாரனின் பெட்டியின் மூடியைத் திறந்தால் படமெடுத்த தன் முகத்தைக் காட்டும். இந்தப் பாம்பு ஓடிப்போய் மண்டையோட்டில் சுருண்டு கொண்டு பரபரவென்று ஒலி எழுப்பியபடி அசைவதுண்டு. இந்தப் பாம்புக்குப் பிளவுபட்ட நாக்கு உள்ளது. எள்ளிலிருந்து எண்ணையெடுப்பதற்காக செக்கிலிட்டு ஆட்டுவதுண்டு. எள்ளை செக்கிலிட்டு ஆட்டிய பின்னர் நல்லெண்ணெய்யாக மாறிக் (எண்ணெய்க்) குடத்திற்குச் சென்றடையும். எள்ளை செக்கிலிட்டு ஆட்டும்போது செக்கு இரைச்சல் ஒலியெழுப்பும். (எண்ணெய்க்) குடத்தைத் திறந்தால் நம்முடைய முகத்தை எண்ணெய்யின் மீது பிம்பமாகக் காட்டும். நம்முடைய (தலை) மண்டை உச்சியில் பரபரவென்று (எண்ணெய்) தேய்க்கப்படும். செக்கில் ஆட்டி எண்ணெய் எடுத்த பின்பு எள் பிண்ணாக்காகும்.
நாய்க்கும் தேங்காய்க்கும் சிலேடை
ஓடுமிருக்கும் அதனுள்வாய் வெளுத்தி ருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது – சேடியே
தீங்கான தில்லாத் திருமலைரா யன்வரையில்
தேங்காயும் நாயுமெனச் செப்பு .
நாய் ஓடும் அல்லது ஓடாமல் இருக்கும். இந்த நாயின் உள் வாய் வெளுத்து (வெள்ளையாய்) இருக்கும். நம்மைக் கண்டதும் வாலைக் குலைத்து ஆட்டியபடி நம்மிடம் வருவதற்கு வெட்கப்படாது. தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் தேங்காயில் ஓடும் இருக்கும். இந்தத் தேங்காயின் உட்பகுதி வெள்ளை நிறத்திலிருக்கும். தென்னை மரம் நாம் நாடி விரும்பியபடி தென்னங்குலை தள்ளும். இந்தத் தென்னை மரம் வளைந்து கொடுக்காது.
மீனுக்கும் பேனுக்கும் சிலேடை
மன்னீரிலே பிறக்கும மற்றலையி லேமேயும்
பின்னீச்சிற் குத்தும் பெருமையால் – சொன்னேன்கேள்
தேனுந்து சோலைத் திருமலைரா யன்வரையில்
மீனும்பே னுஞ்சரி யாமே.
மீன் நீரில் பிறக்கும் (குஞ்சு பொரிக்கும்). இந்த மீன் தண்ணீரின் அலையில் நீந்தியபடி அலைந்து மேயும்; திரும்பும்; நீச்சலில் குத்தும். பேன் (Lice) ஈரிலிருந்து பிறக்கும். நம்முடைய தலையில் ஊர்ந்து மேயும். தலை பின்னி எடுக்கையில் ஈச்சு என்றழைக்கப்படும் ஈர்க்குச்சியால் குத்தப்படும். இந்த குணங்கள் இவை இரண்டிற்கும் பெருமை.
துப்பாக்கிக்கும் ஓலைச்சுருளுக்கும் சிலேடை
ஆணி வரையுறலா லானகுறிப் பேதரலால்
தோணக் கருமருந்தைத் தோய்ந்திடலால் – நீணிலத்தில்
செப்பார்க் குதவாத் திருமலைரா யன்வரையில்
துப்பாக்கி யோலைச் சுருள்
துப்பாக்கி ஒரு ஆயுதம். இந்தக்கருவியின் இடைப்பகுதியில் ஆணி இருப்பதைக் காணலாம். துப்பாக்கியைப் பயன்படுத்தி குறிப்பிட்ட இலக்கைத் தாக்கலாம். தோட்டாவில் கருமருந்து (வெடிமருந்து) வைக்கப்பட்டிருக்கும். ஓலைச்சுருள்: ஓலைச்சுருளில் எழுத்தாணியால் எழுதுவதுண்டு. எழுதிய ஆசிரியரின் கருத்து பற்றிய குறிப்பைத் தரும். எழுத்தாணியால் ஓலைச்சுருளின் மேல் எழுதியபின்பு எழுத்துத் தெரிவதற்காக கருமருந்து பூசப்படும்.
வானவில்லுக்கும் விஷ்ணுவுக்கும் வெற்றிலைக்கும் சிலேடை
நீரிலுளவா னிறம் பச்சையாற் றிருவால்
பாரிற் பகைதீர்க்கும் பான்மையால் – சாருமனுப்
பல்வினையை மாற்றுதலாற் பாரீர் பெருவான
வில்விண்டு நேர்வெற் றிலை
வானவில் (Rainbow): வானவில் நீரினால் (மழை நீர் கொண்ட மேகங்களால்) உண்டாகும். இதன் நிறம் பச்சையாக தோன்றும். ‘திருவில்’ என்று புகழப்படும். பாருலகில் பகைமையை ஒழித்து ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் வாழச் செய்யும். அதனைச் சார்ந்த மனு என்னும் அரசனின் வல்வினையைப் போக்கிற்று.
விஷ்ணு: பாற்கடல் நீரில் இருக்கிறான் (அருந்துயில் கொள்கிறான்). பச்சைநிறம் உடையவன். (மகா) பாரதப் போரில் (கௌரவர் – பாண்டவர்) பகைமையைத் தீர்த்து வைத்தான். மனு என்னும் அரசனின் வல்வினையை மாற்றினான்.
வெற்றிலை: வெற்றிலை நீரில் முளைத்து (கொடியாக) வளரும். இலை பச்சைநிறம் கொண்டது. “திரு” என்னும் மங்கலச் சின்னமாக ஏற்றுக்கொள்ளப்படும். பகை நீங்கி மீண்டும் உறவாடுவதன் அறிகுறியாக வெற்றிலை (மற்றும் பாக்கு) வைக்கப்படும். வினை தீர்க்கும் மருந்தாக விளங்கும்.
சங்கரற்கும் முருகனுக்கும் சிலேடை
“சங்கரற்கு மாறு தலை, ஷன்முகற்கு மாறுதலை i
ஐங்கரற்கு மாறுதலை யானதோ சங்கை i
பிடித்தோற்கு மாறு தலை, பித்தா நின் பாதம் ”
படித்தோற்கு மாறுதலை பார்.
சிவனுக்கும் ஆறு தலை யில் (கங்கை). முருகனுக்கு ஆறு தலைகள் (ஆறு முகங்கள் ) ஐங்கரனான விநாயகனுக்கு மாறுபட்ட தலை . சங்கையுதம் தரித்த விஷ்ணுவுக்கும் ஆறு ( பாற்கடல்) தான் தலை வைத்து படுக்கும் படுக்கை. இப்படிப் பட்ட சிவனை வழிபடுவோர்க்கு ஆறுதலை தருகிறான். இப்படி பக்தர்களுக்கு மாறுதலை வாழ்க்கை யில் தந்து காப்பாற்றுகிறான்.
மனித உடம்புக்கும் கடைச் சரக்குக்கும் சிலேடை
வெங்காயம் சுக்கானால்வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கைமங்காத,
சீரகத்தை தந்தீரேல்வேண்டேன் பெருங்காயம்
வேரகத்துச் செட்டியாரே
வெங்காயம் வெங்கு+ காயம். வெங்கு என்றால் சீர்படுத்துதல், வீரியப்படுத்துதல், காயம் என்றால் உடல் என்று பொருள். வெங்காயம் என்பதற்கு காய்கறி வகைகளுள் ஒன்று.=அசம் = நீருள்ளி. என்றும் பொருள். சுக்கு என்பது உலர்ந்த இஞ்சி. வெந்தயம் என்பது ஒரு வகை தாவர விதை. இது சமையலில் பயன்படும் ஒரு வகை நறுமணப்பொருள். உண்பவர் உடலுக்குக் குளிர்ச்சி தரும். வெந்தயம் என்றால் வெந்து அழியும் தேகம் என்றும் பொருள். சீரகம் என்பது மற்றொரு நறுமணப்பொருள். ஒரு வித விதை. இதை சமையலில் பயன்படுத்துகின்றனர். சீரகம் என்றால் சீரான உள்ளம் (சீர் + அகம்). பெருங்காயம் ஒரு விதமான பிசின். நறுமணப்பொருள். சமையலில் பயன்படுவது. மனித உடல் மற்றும் சமையலில் பயன்படுத்தப்படும் வாசனைக் கடைச்சரக்கு ஆகிய இரண்டையும் குறிப்பிட்டு பாடப்பட்ட ஒரு சிலேடைப் பாடல்.
காளமேகம் திருவேரகத்துப் பதியில் அருள்பாலிக்கும் முருகனை வேண்டிப் பாடிய சிலேடைப் பாடல் இது. திருவேரகத்துப் பெருமாளாகிய முருகனே! எனக்கு இந்த பெரும் உடம்பு (பெருங்காயம்) வேண்டாம். சீரான மனத்தை (சீர்+அகம்-= சீரான மனம்) மட்டும் தந்தால் போதும். இந்த உடல் (வெங்காயம் = வெங்கு +காயம்) சக்தியிழந்து சுருங்கிப் (சுக்கானால்) போகும்போது பயனற்று வெந்து அழியும் தேகத்தால் (வெந்த அயத்தால்) என்ன பயன்? எனவே நான் ஏன் இந்தச் சரக்கை (நாட்டு மருந்து சரக்கை) நான் எதற்கு இந்த சரக்கை (நாட்டு மருந்தை) சுமக்கவேண்டும்? என்று திருவேரகத்துப் பெருமாளை வினவுகிறார்.
குறிப்புகளுக்கேற்றவாறு ஈற்றடியாக வரும்படி அமைந்த பாடல்
பிறர் தரும் குறிப்புகளுக்கேற்றவாறு, காளமேகம் வெண்பாக்களை நொடியில் பாடி வியப்பில் ஆழ்த்துவதில் வல்லவர்.. இவ்வாறு ஒருவர் கொடுத்த குறிப்பு, “குடத்திலே கங்கை அடங்கும்” என்பது ஈற்றடியாக வரும்படி ஒரு பாடல் இயற்றுமாறு கேட்கிறார். குடமோ வடிவில் மிகவும் சிறியதுதான். கங்கை நதியோ பொங்கிப் பெருக்கெடுத்து இந்தப் புவியை விழுங்க வல்லது சரி! ஒரு குடத்தில் எவ்வாறு கங்கை அடங்கும்? காளமேகப் புலவருக்கு ஒரு நொடிப் பொழுது மட்டுமே தேவைப்படுகிறது. ஒரு நொடியில் அவர் பாடிய பாடல் இது:.
விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்
மண்ணுக் கடங்காமல் வந்தாலும் – பெண்ணை
இடத்திலே வைத்த இறைவர் சடாம
குடத்திலே கங்கை அடங்கும்.
காளமேகம் எப்படி ஈற்றடியை கச்சிதமாக அமைத்துள்ளார் என்று பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
வித்தாரப் பாடல்
காளமேகப் புலவர் வித்தாரமாக (வித்தாரம் – பரந்துபட்ட அறிவுடன்) பாடிய ககர வருக்கப் பாடல் ஒன்று உள்ளது.
காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூக் காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா. (70)
“ககர வருக்கமே முற்றிலும் அமைந்து வருமாறு ஒரு செய்யுளைச் செய்க” என்று கேட்டவர் வியக்கும் வண்ணம் பாடிய பாடல் இது.
பொருள்: “காக்கைக்கு ஆகா கூகை – இரவில் காக்கையால் கூகையை (ஒரு வகை ஆந்தையை) வெல்ல இயலாது. கூகைக்கு ஆகா காக்கை -பகலில் கூகையால் காக்கையை வெல்ல முடியாது. கோக்கு கூ காக்கைக்கு (கோ = மன்னன்; கோக்கு = மன்னனுக்கு; கூ = புவி; காக்கைக்கு = காப்பதற்கு) – (அதனால்) மன்னனுக்கு அவன் நாட்டைப் பகைவரிடமிருந்து காப்பாற்றுவதற்கு; கொக்கொக்க = கொக்கு ஒக்க – கொக்கைப் போலத் தகுதியான சமயம் வரும் வரை காத்திருக்க வேண்டும், கைக்கைக்கு – பகையை எதிர்த்து, காக்கைக்கு காப்பாற்றுவதற்கு, கைக்கைக்கா கா = கைக்கு ஐக்கு ஆகா (காலமற்ற காலமாயின்) சாமர்த்தியமுள்ள தலைவனுக்கும் இயலாதாகிப் போய்விடும்”
இது போல “தகர” வருக்கமே முற்றவும் அமைந்து வருமாறு அமைந்த பாடல் இது.
தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?
பொருள்: தத்தித் தாது ஊதுதி – தாவிச் சென்று (தாது=பூவின் மகரந்தம்) பூவின் மகரந்தத்தை ஊதுகிறாய்;
தாது ஊதித் தத்துதி – மகரந்தத்தை ஊதி உண்ட பின் வேறேங்கோ செல்கிறாய்
துத்தித் துதைதி – துத்தி என்று ரீங்கரித்தபடியே அடுத்த பூவிற்குச் செல்கிறாய்
துதைது அத்தா ஊதி – அப்பூவையும் நெருங்கி மகரந்தத்தை உண்ணுகிறாய்
தித்தித்த தித்தித்த தாதெது – இரண்டிலும் தித்திப்பாக இருந்த மகரந்தம் எது?
தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது – தித்திப்பான பூ எது? அழகான பூவின் இதழ் எது?
இந்தப் பாடலில் “தாது” என்னும் சொல் “மகரந்தம்”, “பூ”, “பூவின் இதழ்” ஆகிய மூன்றையும் குறிப்பிடுகிறது.
விளக்கம்: வண்டைப் பார்த்துப் பாடும் விதமாக அமைந்தது இந்தப் பாடல். தத்தித் தாவி பூவில் (மலரில்) இருக்கும் தாதுவாகிய மகரந்தத் தூளை திண்ணும் வண்டே! (நீ) ஒரு பூவினுள் (மலரினுள்) உள்ள தாதுவை உண்ட பின்பு மீண்டும் மற்றொரு பூவிற்குச் சென்று தாதெடுத்து (மகரந்தத்தை எடுத்து) உண்கிறாய். வண்டே உனக்கு எந்தப் பூவில் உள்ள தேன் (எத்தாது) தித்தித்தது (இனித்தது)? இதுவே பாடல் விளக்கம்.
காளமேகம் திருவாரூரில் சில நாட்கள் தங்கி வாழ்ந்துவந்தார். தன்னுடைய இறுதிக் காலத்தைக் கழிப்பதற்காக திருவனைக்காவிற்கே வந்து சில காலம் தங்கியிருந்து அங்கேயே சிவனடி சேர்ந்தார்.
மானமே நண்ணா மணமென் மனமென்னும்
மானமான் மன்னா நனிநாணு – மீனமா
மானா மினன்மின்னி முன்முன்னே நண்ணினும்
மானா மணிமேனி மான்
மானம் மான் மன்னா – பெரிய யானைகளையுடைய வேந்தனே!, ஆனா மினல் மின்னி – நீங்காது மின்னானது விளங்கி, முன் முன்னே நண்ணினும் – முன்னே முன்னே தோன்றினும்,மானா மணி மேனி – ஒவ்வாத அழகிய உருவத்தையுடைய, மான் – மானை யொப்பாள், மானமே நண்ணா மனம் – மானம் யாதும் மேவாத உள்ளம், என் மனம் என்னும் – எனது உள்ளம் என்னும்; நனி நாணும் – மிகவும் நாணும் குறைபடா நிற்கும்; ஈனமாம் – (ஆதலால், நீ இதுவரை வரைந்து கொள்ளா திருத்தல் நினது பெருமைக்குக்) குறைபாடாகும் எ – று.
குறிப்புநூற்பட்டி
காளமேகப் புலவர் கவிச்சிறப்பு https://nytanaya.wordpress.com/2016/02/27/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1/
திருமலைராயனும் காளமேகப்புலவரும் தேமொழி சிறகு. பிப்ரவரி 17, 2018
நாளை கணினி வழியே படிப்பேன்.
LikeLike
நிறைய அறியாத அரிய விடயங்கள் அறிந்தேன்.
ஆசுகவியின் விளக்கமும் தெரிந்து கொண்டேன் நன்றி நண்பரே
LikeLike
தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.
LikeLike
ஆசுகவி பற்றி அறியாச் செய்திகள் ஐயா
நன்றி
LikeLike
தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.
LikeLike
அருமை
LikeLike
தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.
LikeLike
காளமேகம் பற்றிய முழுமையானப் பதிவு. படித்துப் படித்து மகிழ்ந்தேன்.
LikeLike
மிக்க மகிழ்ச்சி. தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.
LikeLike