தவநெறியில் திளைத்த சித்தர்கள், யோகிகள், ஞானிகள் ஆகியோர் தங்கள் உடலைக் கோவிலாகக் கருதுவது சித்தர் மரபு.
“உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம்” (திருமந்திரம் 1823)
உலக வாழ்க்கையில் இறைவனால் பணிக்கப்பட்ட கடமைகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றிய பின்னர் இவ்வுலகில் சாதிப்பதற்கு எதுவுமில்லை என்ற எண்ணம் தோன்றிய பிறகு .முக்தி அடைவதை “சமாதி நிலையை” அடைவது என்று கூறுவதும் சித்தர் மரபாகும். அஷ்டாங்க யோகத்தின் உச்சம் சமாதி நிலையை அடைவது ஆகும்.
கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்று
சிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளிப்
பொற்பினை நாடிப் புணர்மதி யோடுற்றுத்
தற்பர மாகத் தகுந்தண் சமாதியே. (திருமந்திரம் 628)
இந்தப் பாடல் எட்டுவகை யோக அங்கங்களுக்குள் ஒன்றாகிய சமாதியின் இயல்பை உணர்த்துகின்றது.
யோகிகளும் ஞானிகளும் தங்கள் மனதை இறைவனுடன் இரண்டறக் கலக்கச் செய்துவிட்டு லாம்பிகா யோகத்தின் வாயிலாக உயிரை உடலோடு சுவரச் செய்தபின் இந்த அண்டத்திலேயே நிலைத்திருக்கும்படி செய்து விடுவார்கள். இவர்களுடைய மன இயக்கம் நின்றிருக்கும். ஆனால் உயிர் உடலை விட்டுப் பிரிவதில்லை. இந்த முறையில் சமாதியடைந்த சித்தர்கள், யோகிகள், ஞானிகளை இவர்களது சீடர்கள் ஜீவசமாதி அமைக்கப்பார்கள். இவர்கள் ஜீவசமாதி அமைப்பதற்காக முறையான சில சடங்குளைச் செய்வது வழக்கம். இந்தச் சடங்குகளுக்குச் ‘சமாதிக்கிரியை’ என்று பெயர். ஜீவசமாதியை அமைப்பதற்கான இடத்தேர்வு, குழி தோண்டுதல், நிலவறையை அமைக்கும் முறைமை போன்ற சடங்குகளைப் பற்றித் திருமூலர் தன்னுடைய திருமந்திரத்தில் “சமாதிக் கிரியை” பதிகத்தில் விளக்கியுள்ளார்.
இவர்களுடைய உடலை மண்ணில் அடக்கம் செய்வித்த இடமே ஜீவசமாதி ஆகும். இவ்வாறு மண்ணில் அடக்கம் செய்விக்கப்பட்டவர்கள் மீண்டும் வெளியே வந்து வெவ்வேறு இடங்களில் நடமாடி மீண்டும் அடக்கமாகிறார்கள். இதனால் நாட்டு மக்கள் வாழ்வில் வளம் பெருகும், நல்வாழ்வு சிறக்கும், நல்லருள் சித்திக்கும். சித்தர்களின் ஞானமரபில் அமைந்துள்ள ஜீவசமாதிகள் இந்துமதக் கோவில்களுக்கு இணையான புனிதம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஜீவசமாதி என்பது என்ன?
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் பதில்:
“ஜீவன் என்றால் உயிர். சமாதி என்றால் சமன்-ஆதி. ஆதிக்குச் சமமாக மனம் நிலைபேறு அடையும் நிலையே ஜீவசமாதி. ஒருவர் தவத்தின் மூலமாகவும், தற்சோதனையின் மூலமாகவும் தன்னுடைய உயிரைத் தூய்மை செய்து முழுமைப்பேறு நிலையடைந்தும், காயகல்பத்தின் மூலமாகத் தன் வித்துவைக் கெட்டிப்படுத்தியும், உலக வாழ்க்கையில் தான் செய்ய வேண்டிய கடமையெல்லாம் செய்து நிறைவு பெற்றும், இனிமேல் நான் இவ்வுலகில் சாதிப்பதற்கு ஒன்றுமில்லை என்ற எண்ணத்தைப் பெற்றும்விட்டால், மனதை இறைநிலையோடு இணைத்துவிட்டு லம்பிகா யோகத்தின் மூலம் உயிரை உடலோடு சுவரச் செய்து விடுவார்கள்.
முன்னமே செய்திருந்த ஏற்பாட்டின்படி சீடர்கள் உடலைப் புதைத்துவிடுவார்கள். மனஇயக்கம், உடல் இயக்கம் நின்றுவிட்டாலும் இந்த உடலைவிட்டு ஜீவன் பிரியாதிருப்பதால் உடல் கெடாமல் இருக்கும். இதுவே ஜீவசமாதி ….. சித்தர்கள் அடக்கமான கோயில்களுக்குக் குடமுழுக்குத் தேவையில்லை. ”
(ஜீவசமாதி” என்பது என்ன? குருவின் பதில்கள். அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி http://guindysky.blogspot.in/2014/02/blog-post_9520.html)
இந்தச் சித்தர், யோகியர், ஞானியர் போன்றோருக்கு எவ்வாறு சமாதி கட்டியெழுப்ப வேண்டும்? எவ்வாறு வழிபட வேண்டும்? என்பது பற்றி -திருமூலர் தான் இயற்றிய பத்தாவது சைவத் திருமுறை நூலான திருமந்திரம், ஏழாம் தந்திரம், 19 சமாதிக் கிரியையில் விளக்கியுள்ளார்.

திருமூலர் PC: விக்கிமீடியா காமன்ஸ்
ஜீவசமாதி என்றால் சித்தி பெற்ற ஞானியரின் உடலைக் குழி தோண்டி அதில் இருத்திப் புதைப்பது சித்தர் மரபாகும். இதை விடுத்து இந்த உடலை எரியூட்டினால் நாட்டில் பஞ்சம் ஏற்படும். பற்பல கேடுகள் ஏற்படும். மக்கள் தங்களுக்குள் போரிட்டு ஒருவரை ஒருவர் தாக்கி அழித்துக் கொள்வார்கள். இதை விளக்கும் திருமூலரின் பாடல்கள் இவை:
அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்
அந்தவுடல் தான் குகைசெய் திருத்திடில்
சுந்தர மன்னரும் தொல்புவி யுள்ளோரும்
அந்தமி லின்ப அருள்பெறு வாரே.
-திருமூலர் திருமந்திரம்.. ஏழாம் தந்திரம். 19 சமாதிக் கிரியை 1913
புண்ணிய மாமவர் தம்மைப் புதைப்பது
நண்ணி யனல் கோக்கில் நாட்டில் அழிவாகும்
மண்ணில் அழியி லலங்கார பங்கமா
மண்ணுலகெல்லாம் மயங்கும் அனல் மண்டியே
-திருமூலர் திருமந்திரம்.. ஏழாம் தந்திரம். 19 சமாதிக் கிரியை 1912
சமாதியடைவது என்பது முடிவு பெறும் ஒரு நிலையே அல்ல. இறைவனால் நியமிக்கப்பட்ட காரியங்களை ஒருகாலத்திற்குள் நடத்தி காட்டிய பிறகு முக்தி அடைவதே ஆகும். ஆனால், அந்த ஞானியின் ஆற்றலும், அருளும் என்றுமே இந்த அண்டத்தில் நிலைத்திருக்கச் செய்துவிட்டு, இறைவனோடு இரண்டறக்கலக்கின்றனர். சமாதிநிலையில் இருப்பதும் யோகநெறியின் உச்சநிலை என உரைக்கப்படுகிறது.
இவர்களின் உடல், மன இயக்கம் மட்டுமே நின்று போயிருக்குமே தவிர உயிர் உடலை விட்டுப் பிரிவதில்லை என்கிறார் திருமூலர். இறைவனோடு இறைவனாகக் கலந்துவிட்ட, இத்தகைய மேன்மக்களை இவர்களது சீடர்கள் உதவியோடு ஜீவசமாதிக்கான ஒரு குறிப்பிட்ட முறையான சடங்குளைப் பின்பற்றி அவர்களின் உடலைச் சமாதி செய்யவேண்டும். இவ்வகையான முறைக்குச் ‘சமாதிக்கிரியை’ என்று பெயர். எந்த இடங்களில் ஜீவசமாதி அமைக்கவேண்டும் என்ற குறிப்புகளையும், எவ்வாறு குழிதோண்டுவது என்றும், நிலவறை அமைக்கும் வழிமுறையினையும், உடலை எப்படி இருத்துவது போன்ற அத்தனை சடங்குகளைப் பற்றியும் தனது திருமந்திரம் என்னும் நூலில் திருமூலர் காரண காரியத்துடன் பாடல்கள் வழி விளக்குகிறார்.
தெளிந்த ஞானம் கொண்ட தவயோகிகளின் உடலை ஜீவசமாதி அமைத்திட வேண்டியதின் அவசியத்தை வேறு எவரும் சொல்லாத வகையில் அழுத்தமாகக் கூறியுள்ளார்.
ஜீவசமாதியின் அவசியம்:
அதாவது ஜீவசமாதி அடைந்த யோகியின் உடலை குழி தோண்டி அதில் இருத்தி புதைக்கவேண்டும். அதுவே புண்ணியமும் ஆகும். இதற்கு மாறாகத் தீயிட்டுக் கொளுத்தினால் நாட்டில் பஞ்சம் ஏற்படும். பல கேடுகள் விளையும். மக்களுக்கும் பகைமை உண்டாகி ஒருவரையொருவர் அழித்துக் கொள்வர்.
அந்தமில் ஞானிதன் ஆகம் தீயினில்
வெந்திடின் நாடெலாம் வெப்புத் தீயினில்
நொந்தது நாய்நரி நுகரின் நுண்செரு
வந்துநாய் நரிக்குண வாகும்வை யகமே.
-திருமூலர் திருமந்திரம்.. ஏழாம் தந்திரம். 19 சமாதிக் கிரியை 1910
யோகியர் ஞானியரது உடலை எரியூட்டுதலும், எரியூட்டாமல் நிலத்தின் மேலேயே அழிந்து போகும்படி விடுதலும் குற்றமாகும் என்கிறார் திருமூலர். ஆகவே யோகியர் ஞானியரது உடலை சித்தர்களின் “சமாதிக்கிரியை” என்ற சடங்கை மேற்கொண்டு புதைத்தலே சாலச் சிறந்தது என்பது திருமூலர் வலியுறுத்தும் கருத்து.
எண்ணிலா ஞானி உடலெரி தாவிடின்
அண்ணல் தன் கோவில் அழலிட்ட தாங்கொக்கும்
மண்ணில் மழைவீழா வையகம் பஞ்சமாம்
எண்ணரும் மன்னர் இழப்பா ரரசே.
-திருமூலர் திருமந்திரம்.. ஏழாம் தந்திரம். 19 சமாதிக் கிரியை 1911
யோகியர் ஞானியரது உடலை எரியூட்டுதலும், எரியூட்டாமல் வாளா விடுதலும் அந்த நாட்டில் மழையின்றிப் பெரும் பஞ்சத்தை ஏற்படுத்தும். அரசன் பதவி இழக்க நேரிடும். இப்பாடலில் ஞானியின் உடல் இறைவன் கோயிலுக்கு ஒப்பாதல் சொல்லப்பட்டது.
யோகியர் ஞானியர் சமாதிகளை அமைப்பதற்கு உரிய இடங்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது? இது பற்றியும் திருமூலர் பாடலில் குறிப்புகள் உள்ளன.
தன்மனை சாலை குளங்கரை ஆற்றிடை
நன்மலர்ச் சோலை நகரினற் பூமி
உன்னரும் கானம் உயர்ந்த மலைச்சாரல்
இந்நிலந் தான்குகைக்கு எய்து மிடங்களே.
-திருமூலர் திருமந்திரம்.. ஏழாம் தந்திரம். 19 சமாதிக் கிரியை 1915
உடலை விட்டு நீங்கிய யோகியர் ஞானியரை அவர்களின் ஆஸ்ரமம், தங்கியிருந்த இடம் (மனை), சாலையின் (பெருவழிச் சாலை) பக்கங்கள், குளக்கரை, ஆற்றுப்படுகையில் அமைந்த மணம் வீசும் மலர்ச் சோலை, நகரில் உள்ள நல்ல இடம், அடர்த்தியான காடுகள், மலைச் சாரல் போன்ற இடங்களைத் தேர்ந்தெடுப்பது நலம் பயக்கும் என்பது திருமூலர் வாக்கு.
நிலவறையும் சடங்குகளும்:
யோகியர் ஞானியரின் உடலை வைக்கும் இடத்திற்கு நிலவறை என்பது பெயராகும். திருமூலர் எந்த வடிவில் நிலவறைக் கோவிலை அமைக்க வேண்டும் என்பதையும் திருமூலரே கூறுகிறார்.
நற்குகை நால்வட்டம் பஞ்சாங்க பாதமாய்
நிற்கின்ற பாதம் நவபாதம் நேர்விழப்
பொற்பமர் ஓசமும் மூன்றுக்கு மூன்றணி
நிற்பவர் தாம்செய்யும் நேர்மைய தாமே.
-திருமூலர் திருமந்திரம்.. ஏழாம் தந்திரம். 19 சமாதிக் கிரியை 1916
நில அறைக்கு மேல் அமைய வேண்டிய கோவில் (கருவறை) ஐந்து அடிக்கு ஐந்து அடிச் சதுர வடிவில் அமைக்கப்பட வேண்டும். இதன் உயரம் ஒன்பதடியாகும். மும்மூன்று அடி உயரத்தில் ஒவ்வொரு நிலையாய் மூன்று நிலைகள் தோன்றும்படி அமைத்தல் முறையாகும்.
பஞ்சலோ கங்கள் நவமணி பாரித்து
விஞ்சப் படுத்ததன் மேல்ஆ சனமிட்டு
முஞ்சி படுத்துவெண் ணீறிட் டதன்மேலே
பொன்செய்நற் சுண்ணம் பொதியலு மாமே
-திருமூலர் திருமந்திரம்.. ஏழாம் தந்திரம். 19 சமாதிக் கிரியை 1917
நிலவறையின் அடிப் புறம்
நில அறையின் அடியில் ஐம்பொன் மற்றும் ஒன்பது மணி ஆகியவற்றை நிரம்ப இட்டு மூடிட வேண்டும். அதன்மேல் முக்கோணப் பீடத்தை அமைத்து, அதன்மேல் தருப்பைப் புல்லைப் பரப்ப வேண்டும். திருவெண்ணீற்றைத் திருமேனிக்கு அடியிலும், சுற்றிலும், மேலேயும் நிரம்ப இட வேண்டும். அதன்மேல் பொன்னிறப் பரப்பும் நறுமணப் பொடியை மிகுதியாகத் தூவுதலும் சிறப்புடையதாகும்.
நவமிகு சாணாலே நல்லாழஞ் செய்து
குவைமிகு சூழவைஞ் சாணாகக் கோட்டித்து
அவ மிகு குகைமுக் கோணமுச் சாணாக்கிப்
பவமறு நற்குகை பத்மா சனமே.
-திருமூலர் திருமந்திரம்.. ஏழாம் தந்திரம். 19 சமாதிக் கிரியை 1914
நிலவறை அமைக்க ஒன்பது சாண் ஆழம் ஐந்து சாண் அகலத்திற்கு ஒரு குழியைத் தோண்ட வேண்டும். இவ்வாறாகத் தோண்டி எடுத்த மண்ணை இந்தக் குழியைச் சுற்றிலும் ஐந்து சாண் தள்ளி இடைவெளிவிட்டு வளைத்துக் கொட்ட வேண்டும். நிலவறையின் அடியில் திருமேனி தவநிலையில் அமர்கின்ற ஆசனம் பக்கத்திற்கு மூன்றாக முக்கோண வடிவமாக அமைக்க வேண்டும். இதில் அந்த யோகி அல்லது ஞானியின் உடலைப் பத்மாசனத்தில் இருத்த வேண்டும். இந்த இடம் நிலவறை (குகை) எனப்படும்.
ஓதிடும் வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாயம்
மீதினில் இட்டுஆ சனத்தினின் மேல் வைத்துப்
போதறு கண்ணமும் நீறும் பொலிவித்து
மீதில் இருத்தி விரித்திடு வீரே
-திருமூலர் திருமந்திரம்.. ஏழாம் தந்திரம். 19 சமாதிக் கிரியை 1919
தூப தீபம் காட்டுதல் முதலியவற்றைச் செய்ய வேண்டும். பின்பு திருநீற்றைத் திருமேனியின்மீது குப்பாயம் (சட்டை) போல மிகுதியாகப் பூசிட வேண்டும். நில அறையில் அமைத்துள்ள பீடத்தின் மீது மலர்கள், நறுமணப்பொடி, திருநீறு இவைகளை இட்டு, மேலே திருமேனியை எடுத்து இருத்திச் சுற்றிலும் ஆடையைச் சுற்றி வைக்க வேண்டும்.
விரித்தபின் நாற்சாரும் மேவுதல் செய்து
பொரித்த கறிபோ னகம் இள நீரும்
குருத்தலம் வைத்துஓர் குழைமுகம் பார்வை
தரித்தபின் மேல்வட்டம் சாத்திடு வீரே.
-திருமூலர் திருமந்திரம்.. ஏழாம் தந்திரம். 19 சமாதிக் கிரியை 1920
நிலவறையில் யோகி அல்லது ஞானியின் திருமேனியைச் சுற்றி ஆடையால் மூடிட வேண்டும். இதன் பின்னால் நிலவறையின் மேல் நான்கு பக்கங்களிலும் பல்வகைப் படையற் பொருட்களைக் குருத்து வாழை இலையின் மீது இட்டு நிவேதிக்க வேண்டும். இதன் பின்பு திருமேனியைப் பரிவட்டத்தால் மூடிவிட வேண்டும்.
மீது சொரிந்திடும் வெண்ணீறும் கண்ணமும்
போது பலகொண்டு தர்ப்பைப்புல் வில்வமும்
பாத உதகத்தான் மஞ்சனம் செய்துபார்
மீதுமூன் றுக்குமூன்று அணிநிலம் செய்யுமே.
-திருமூலர் திருமந்திரம்.. ஏழாம் தந்திரம். 19 சமாதிக் கிரியை 1921
திருமேனியைப் பரிவட்டத்தால் மூடிய பின்னால் திருவெண்ணீறு, மணப்பொடி, பல்வகை மலர்கள், தருப்பைப்புல், வில்வ இலை முதலியவற்றை நிரம்பச் சொரியு வேண்டும். பின்னால் அருக்கியம் முதலியவற்றைக் கொடுக்கலாம். பின்பு கோவில் எடுப்பதற்கான தொடக்கத்தைச் செய்துவிட வேண்டும்.
ஆதன மீதில் அரசு சிவலிங்கம்
போதும் இரண்டினில் ஒன்றைத் தாபித்து
மேதரு சந்நிதி மேவுத் தரம்பூர்வம்
காதலில் சோடசம் காண்உப சாரமே
-திருமூலர் திருமந்திரம்.. ஏழாம் தந்திரம். 19 சமாதிக் கிரியை 1922
நிலவறையின் மீது கோவில் எடுத்தப் பின்னால் கருவறையில் ஒரு பீடத்தின் மேல் அரச மரமோ இலிங்கமோ நிறுவ வேண்டும். (பெரும்பாலும் சிலலிங்கமே நிறுவப்படுகிறது). இதன் பின்பு தினந்தோறும் பதினாறு வகையான (சோடச) உபசாரங்களுடன் வழிபாடு செய்ய வேண்டும். `கருவறையை (கோவிலை) வடக்கு நோக்கியோ, கிழக்கு நோக்கியோ அமைக்க வேண்டும். கருவறை வாயில் வடக்கு நோக்கியோ, கிழக்கு நோக்கியோ அமைக்கும் முன்பு ஞானியின் திருமேனியும் அத்திசை நோக்கியே இருதப்பட வேண்டும் என்பதும் விதியாகும். இவ்வாறு இருத்தப்பட்ட திசையிலேயே வாயில் அமைய வேண்டும். `இன்னதை` நிறுவலாம்` என்பது போன்ற குருவின் ஆணை பற்றியும், திருவருட் குறிப்பு நோக்கியும் அறியப்படும். கருவறையில் வில்வமரம், பாத பீடிகை போன்றவற்றை அமைத்தாலும் சித்தர் மரபாகும்.
இவ்வாறு ஜீவசமாதிக் கோவில் அமைப்பது பற்றி திருமூலர் விரிவாக விளக்கியுள்ளார்.
குறிப்புநூற்பட்டி
- பத்தாம் திருமுறை திருமூலர் – திருமந்திரம் பொழிப்புரை குறிப்புரை சி.அருணைவடிவேல் முதலியார். ஏழாம் தந்திரம். 19 சமாதிக் கிரியை. http://thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=10&Song_idField=10719
- ஜீவசமாதி” என்பது என்ன? குருவின் பதில்கள். அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி http://guindysky.blogspot.in/2014/02/blog-post_9520.html
நன்றி ஐயா
LikeLiked by 1 person
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
LikeLike
பிங்குபாக்: ஜீவசமாதி: திருமூலரின் திருமந்திரம் காட்டும் இலக்கணங்கள் – TamilBlogs