ஹம்பி தென்னிந்திய வரலாற்றில் ஆர்வம் கொண்டோர் மிகவும் விரும்பும் வரலாற்றுச் சின்னம். இஃது அழிவின் விளிம்பில் இருக்கும் கலைப்பொக்கிஷம் ஆகும். ஒரு புறம் துங்கபத்திரை ஆறும் மற்ற மூன்று புறமும் கற்குவியலாய்க் காணப்படும் குன்றுகளும் சூழ்ந்து காணப்படும் கிராமமாகும். இஃது ஒருகாலத்தில் வலிமைமிக்க விஜயநகரப் பேரரசு (கி.பி 1336–1646) என்னும் இந்துப் பேரரசின் தலைநகராக இருந்துள்ளது அறிந்து வியப்பாயுள்ளது.
ஹம்பியின் துங்கபத்திரை ஆற்றின் கரையில் ஹேமகுடா மலை அடிவாரத்தில் விருபாட்சர் கோவில் அமைந்துள்ளது. கோவில் அருகிலேயே துங்கபத்ரா ஆறு செழிப்பாக ஓடுகிறது. ஹம்பியைச் சுற்றியுள்ள இடிபாடுகளின் நடுவே இக்கோவில் இன்னும் அழகாக உள்ளது. சுமார் 50 மீ. உயரத்தில் அமைந்துள்ள இக்கோவில் இராஜகோபுரத்தின் நிழல் ஒரு துழையின் வழியே இங்குள்ள ஒரு சுவற்றின் மேல் தலை கீழாகத் தெரிவது விந்தையிலும் விந்தையாகும். ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களங்களில் (UNESCO World Heritage Site) ஒன்றாக உள்ளது.
ஹம்பி (கன்னடம்: ಹಂಪಿ) பின் கோடு 583239 இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டம், ஹோஸ்பெட் வட்டம், குல்பர்கா பிரிவில் அமைந்துள்ள கிராமம் ஆகும். இதன் அமைவிடம் 15°20′04″N அட்சரேகை 76°27′44″E தீர்க்கரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 472 மீ. (1548 அடி 6அங்குலம்) ஆகும். ஹம்பியின் பரப்பளவு 4,187.24 ஹெக்டேர் ((10,346.89 ஏக்கர்) ஆகும். 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஹம்பியின் மக்கள் தொகை 2777 (ஆண்கள் 1361, பெண்கள் 1416); மொத்த வீடுகள் 632 ஆகும்.
அழிவின் விளிம்பில் நிற்கும் இவ்வூரில் 41.8 சதுர கி.மீ. (4187.24 ஹெக்டேர்) பரப்பளவில் சுமார் 1000 க்கும் மேலான வரலாற்றுச் சின்னங்கள் நிறைந்துள்ளன. இவற்றுள் 56 வரலாற்றுச் சின்னங்கள் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையினர் வசம் உள்ளது. 654 வரலாற்றுச் சின்னங்கள் தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத் துறையினாரால் பராமரிக்கப்படுகிறது. மீதமுள்ள 300 க்கும் மேற்பட்ட வரலாற்றுச் சின்னங்கள் யாராலும் பேணப்படவில்லை. இவற்றுள் நாம் காணவிருக்கும் விருபாட்சர் கோவில் தற்போதுதான் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையினர் வசம் வந்துள்ளது.
இக்கோவில் விருபாட்சருக்கும் (சிவனுக்கும்) பம்பாதேவி அம்மனுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. விருபாட்சருக்கு பம்பாபதி என்ற பெயர் உள்ளபடியால் இக்கோவில் பம்பாபதி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. பம்பா என்ற பெயர் மருவி ஹம்பி என்று அழைக்கப்படுவதாக ஒரு நம்பிக்கை உள்ளது. விருபக்ஷர் விஜயநகரப் பேரரசர்களின் குலதெய்வமும் காவல் தெய்வமும் ஆவர். எனவே இக்கோவில் விஜயநகர அரச வம்சத்தவர்களால் புனிதம் மிக்க கோவிலாகக் கருதப்பட்டது. இன்றுவரை இக்கோவில் வழிபாட்டில் உள்ள இக்கோவில் டிசம்பர் – ஜனவரி மாதங்களில் பெருந்திரளான மக்களை ஈர்க்கிறது. வருடாந்திரத் தேர்த்திருவிழா ஃபிப்ரவரி மாதத்தில் நடைபெறுகிறது.
இந்தக் கோவில் இரண்டாம் தேவராயரின் படைத்தலைவராக விளங்கிய லக்கண தண்டேஷாவின் உதவியுடன் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் விருபாட்சர் பற்றிப் பதிவு செய்துள்ளன. அக்காலத்தில் இக்கோவில் அடக்கமான (modest) அளவில் இருந்துள்ளது. விஜயநகர (நான்கு) வம்சத்துப் பேரரசர்களின் ஆதரவால், கி.பி. ஏழாம் நூற்றாண்டு தொடங்கி, வளர்ந்து வந்த இக்கோவில், இன்றைக்கு ஒரு பெரிய கோவில் வளாகமாக வளர்ந்துள்ளது. சங்கம வம்சத்தைச் சேர்ந்த இரண்டாம் தேவராயர் (கி.பி. 1422-46) மற்றும் துளுவ வம்சத்தைச் ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் (1509-1528 கி.பி.) ஆகியோரின் பங்களிப்பு, இக்கோவில் மென்மேலும் வளர்ச்சிபெற உதவியது. கி.பி. 1565 ஆம் ஆண்டு நிகழ்ந்த இஸ்லாமியர் படையெடுப்புகளால் விருப்பாட்சர் கோவில் பாதிப்படையவில்லை. பத்தொன்பதாம் நூற்றண்டில் விரிவான பராமரிப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. கூடுதலாக கோபுரங்கள் கட்டப்பட்டன. கூரை ஓவியங்கள் பழுதுபார்க்கப்பட்டன.
விஜயநகரப் பேரரசின் தலைநகராக விளங்கிய கண்கவர் நினைவுச் சின்னங்கள், ஹம்பி நினைவுச் சின்னங்களின் தொகுதி (Group of Monuments at Hampi) என்ற பெயரில் 2012 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் (UNESCO World Heritage Site) என பட்டியலிடப்பட்டுள்ளது.
இக்கோவில் வளாகத்தில் ஒரு கருவறை, அந்தராளம் (Vestibule), வடக்கிலும் தெற்கிலும் தூண்களுடன் கூடிய முகமண்டபம், ஒரு விசாலமான சபாமண்டபம் (இம்மண்டபம் அரங்கமண்டபம் என்ற பெயரிலும் அறியப்படுகிறது), கோவிலைச் சுற்றித் தூண்களுடன் கூடிய திருச்சுற்று மண்டபம் மற்றும் பல துணை சன்னதிகள் இடம் பெற்றுள்ளன. கருவறையில் விருப்பாக்ஷருக்கு எதிரே நந்தியம்பெருமானின் மூன்று சிலைகள் அமைந்துள்ளன. அக் காலத்தில் மூன்று தலை ஓர் உடலுடன் நந்தியம்பெருமான் அதீத சக்தியுடன் திகழ்ந்தாராம். மாலிக்காபூர் படையெடுப்பின் போது நந்தியின் முகத்தையெல்லாம் சிதைத்து விட்டபடியால் மூன்று தனித் தனி நந்திகளைப் புதிதாக அமைத்துள்ளார்களாம்.
பிராகரத்தைச் சுற்றி பிராகரத்தைச் சுற்றி பாடலேஸ்வரர் முக்தி நரசிம்மர் மஹிஷாசுர மர்த்தினி முதலிய சன்னதிகள் பாதி சிதைந்த நிலையில் உள்ளன. இது மட்டுமின்றி சப்தமாத்ரிகா, சூரியநாராயணா, தரகேச்வரா, சரஸ்வதி, வித்யாரண்யா, பார்வதி, புவனேச்வரி ஆகிய துணை தெய்வங்களுக்குச் சன்னதிகள் உள்ளன. இவற்றுள் பார்வதி மற்றும் புவனேச்வரி சன்னதிகள் கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை ஆகும். வித்யாரண்யர் சிலை கி.பி. 20 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. சபா மண்டபம் என்ற அரங்க மண்டபம் கிருஷ்ணராய தேவராயரால் கி.பி. 1510 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதற்குச் சான்றாக பல விஜயநகர கட்டிடக்கலைக் கூறுகளை கொண்டு அமைந்துள்ளது. சங்கீத மண்டபம் சன்னதிக்கு எதிரே உள்ள 56 தூண்கள் ஒவ்வொன்றும் தட்டினால் வெவ்வேறு இசைக் கருவிகளின் ஒலி வரும்படி கட்டப்பட்டுள்ளது. தூண்கள், கோவில் மடைப்பள்ளி, விளக்குத் தூண்கள், கோபுரங்கள் போன்ற எல்லா அம்சங்களும் பின்னாளில் சேர்க்கப்பட்டுள்ளன.
இங்குள்ள கோபுரங்களில் கிழக்கு முகமாக அமைந்துள்ள இராஜகோபுரம் 50 மீ. உயரமும் ஒன்பது நிலைகளும் கொண்டது. இதன் அடித்தளம் கருங்கல்லாலும் மேற்தளங்கள் செங்கல், சுண்ணாம்பு மற்றும் சுதையாலும் அமைக்கப்பட்டுள்ளன. கிழக்கு முகமாக அமைந்த உட்கோபுரம் மூன்று நிலைகளையுடையது. வடக்கு முகமாக அமைந்துள்ள கோபுரம் ஐந்து நிலைகளையுடையது.
சன்னதிக்கு கிருஷ்ணதேவராயர் தன் இரு ராணிகளுடனும் மந்திரிகளுடனும் தரிசிக்க வரும் தனி வழி ஒன்று உள்ளது. மக்களுக்காக இடது புறம் ஒரு வாசல் உள்ளது. விருபாட்சர் கோவிலில் மற்றொரு வியப்பான செய்தி உள்ளது. பிராகாரத்தில் ஒரு குகை போன்ற வழியில் சென்றால் கோயில் கோபுரம் ஓர் துளையின் வழியாக பெரும் வெளிச்சத்தில் எதிர்புறம் நிழலாக சுவரில் தலைகீழாகத் தெரிகிறது. அந்த துளையை மூடினாலோ எதுவும் தெரியவில்லை.
அரங்க மண்டபத்தில் வரையப்பட்டுள்ள கூரை ஓவியங்கள் அற்புதமானவையாகும். புகழ் பெற்ற ஓவியங்களான துறவி வித்யாரண்யரின் ஊர்வலம், தீபாலங்காரம், விஷ்ணுவின் தசாவாதாரம், கிரிஜா கல்யாணம், மத்சய இயந்திரத்தைக் குறிவைக்கும் வில்லாளி அர்ஜுனன், திரிபுராரியாக சிவன் போன்றவை கண்ணையும் கருத்தையும் கவர்வனவாகும்.
கோவில் திறந்திருக்கும் நேரம்: 9:00 AM – 1:00 PM 5:00 PM – 9:00 PM
ஹோஸ்பெட்டிலிருந்து 11 கி.மீ தொலைவிலும்; மாவட்டத் தலைநகர் பெல்லாரியிலிருந்து 62 கி.மீ. தொலைவிலும்; பட்டடக்கல்லு 108 கி.மீ. தொலைவிலும்; ஐஹோளே 109 கி.மீ. தொலைவிலும்; பாதாமி 118 கி.மீ. தொலைவிலும்; மாநிலத் தலைநகர் பெங்களூருவிலிருந்து 339 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. சாலை வழியாக ஹோஸ்பெட், பெல்லாரி மற்றும் பெங்களூருவிலிருந்து ஹம்பியை அடையலாம். வோல்வோ பஸ்களும் டாக்சிகளும் கிடைக்கும். அருகிலுள்ள இரயில் நிலையம் ஹோஸ்பெட் இரயில் நிலையம் 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பெங்களூரு, கோவா மற்றும் ஹைதராபாத்திலிருந்து ஹோச்பெட்டிற்கு இரயில்கள் உள்ளன. அருகிலுள்ள விமான நிலையம் பெல்லாரி விமான நிலையம் 350 கி.மீ. தொலைவில் உள்ளது.
ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் ஹம்பியிலும் (கமலாபூர்) ஹோஸ்பெட்டிலும், ஆனேகுந்தி, விருபாபூர் கட்டயிலும் உள்ளது. ஹம்பியில் சைக்கிள்களும் மொபெட்களும் வாடகைக்குக் கிடைக்கும். ஹம்பியில் ஏ.டி.எம். கிடையாது.
குறிப்புநூற்பட்டி
- விருபக்ஷர் கோயில். நேட்டிவ் பிளானெட் https://tamil.nativeplanet.com/hampi/attractions/virupaksha-temple/#overview
- Virupaksha Temple And Bazaar, Hampi http://www.asihampiminicircle.in/virupaksha-temple-and-bazaar-hampi/
- Virupaksha Temple at Hampi Templenet http://www.templenet.com/Karnataka/virup.html

Main Gateway PC: Wikimedia Commons

PC: Wikimedia Commons

Ranga Mandapam Hampi. PC: Hampi.in
அரிய வரலாற்று செய்திகளை உங்களது தளத்தில் அறிந்திட முடிகிறது நன்றி நண்பரே…
LikeLike
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
LikeLike
காணக் கிடைக்காதச் செய்திகள்
நன்றி ஐயா
LikeLike
தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி. தொடர்ந்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்து ஊக்கமளியுங்கள்.
LikeLike