ஹம்பி என்னும் சிதைந்த நகரத்தில் காணப்படும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் மிகவும் கவர்சிகரமான சிற்பங்களில் ஒன்றாகும். ஹம்பியில் உள்ள ஒரே கல்லால் செய்யப்பட்ட மிகப்பெரிய தனிச் சிலை என்பது இதன் சிறப்பம்சம் ஆகும். ஹேமகூடா மலையின் தெற்குப் பக்கத்தில் இந்தச் சிலை அமைந்துள்ளது. இந்தச் சிலையைச் சுற்றி நான்கு புறமும் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கோவில் வளாகம் கிருஷ்ணர் கோவிலிலிருந்து சுமார் 200 மீ தொலைவில் அமைந்துள்ளது. இதை அடுத்துப் படவலிங்கா கோவில் அமைந்துள்ளது.
இஃது ஒரு பிரம்மாண்டமான கற்சிலை என்றாலும் மிகவும் கவனத்துடன் செதுக்கப்பட்டுள்ளது. இது ஹம்பியில் காணப்படும் மிக முக்கியமான நினைவுச்சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தச் சிலை சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு சென்று பார்வையிடுகிறார்கள்.
வரலாறு
ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சிலை மற்றும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் வளாகம், கி.பி. 1528 ஆம் ஆண்டு, விஜயநகரப் பேரரசின் மிகப்பெரிய ஆட்சியாளர்களில் ஒருவரான, ஸ்ரீ கிருஷ்ணதேவராயரின் (கி.பி. 1509 – 1529) ஆட்சியின் போது கட்டப்பட்டது. ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சிலை ஹம்பி நகரத்திற்கு ஸ்ரீ கிருஷ்ணதேவராயரால் கடைசியாக அளிக்கப்பட்ட நினைவுச் சின்னகளில் ஒன்று என்று இங்குள்ள ஒரு கல்வெட்டு பதிவு செய்துள்ளது. (Annual Report of South Indian Epigraphy, 1889, no. 34)
விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான நரசிம்மர், மற்றும் லட்சுமி தேவி ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இக்கோயில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் என்று அழைக்கப்படுகிறது.
ஆதியில் இங்கு அமைக்கப்பட்டிருந்த இச்சிற்பத்தில் நரசிம்மர் நான்கு கரங்களுடன் இருந்துள்ளது. தன் துணைவி லட்சுமியைத் தன் மடியில் அமரவைத்தபடி காட்சிதந்துள்ளார். கி.பி. 1565 ஆம் ஆண்டு நடைபெற்ற மொகலாயர்களின் தாக்குதலின்போது இந்த பிரம்மாண்டமான நரசிம்மர் சிலை உடைந்து போனது. லட்சுமியின் கைகளில் ஒன்று முறிந்துவிட்டது. எனவே லட்சுமியின் உருவம் நரசிம்மர் உருவிலிருந்து பிரிக்கப்பட்டது. உடைந்த கரத்துடன் காட்சிதரும் இந்த லட்சுமி சிலையை கமலாபுரத்தில் அமைந்துள்ள தொல்லியல் அருங்காட்சியகத்தில் இன்றும் காணலாம்.
லட்சுமி நரசிம்மர் சிலை, ஹம்பி
ஹம்பி நகரில் நான்கு கரங்களுடன் அமைக்கப்பட்டுள்ள நரசிம்மர் சிலையில் உடைந்த நிலையில் இரு கரங்களை மட்டும் காணமுடிகிறது. இந்தச் சிலை அற்புதமான சிற்பக்கலை அம்சங்களைக் கொண்டு திறம்பட அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் 6.7 மீ உயரம் கொண்ட இந்தப் பிரம்மாண்டமான அரிய வகைச் சிலை அதிக கலை நுணுக்கங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. விஜயநகர பாணி சிற்பக் கலைக்கு நேர்த்தியான எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது.
நரசிம்மர் சிலையில் மார்பு நேர்த்தியுடன் செதுக்கப்பட்டுள்ளது. பிடரி மயிர் நான்கு வரையறுத்துக் காட்டப்பட்டுள்ளது. தலையில் அழகான கிரீடமகுடம் அணிந்துள்ளார். நெற்றியில் திருமண் காணப்படுகிறது. கழுத்தில் சரப்பளி, ஸ்வர்ணவைகாக்ஷம், அணிந்துள்ளார். இடுப்பில் உதரபந்தமும், கையின் மேற்பகுதியில் தோள்வளை அணிந்துள்ளார். இடுப்பிலிருந்து கெண்டைக்கால் வரை ஆடை காட்டப்பட்டுள்ளது. காலில் தண்டை அணிந்துள்ளார். காலைக் குறுக்காக மடக்கிய நிலையில், யோகப்பட்டம் அணி செய்ய சுகாசனத்தில், வீற்றிருக்கிறார். இவர் வீற்றிருப்பதோ பாம்புகளின் அரசனான, ஆதிசேஷனின் சுருண்ட உடலின் மீதாகும். ஆதிசேஷன் தனது ஏழு தலைகளையும் படமெடுத்த நிலையில், நரசிம்மரின் தலைக்கு மேல் ஒரு விதானம் போல அமைத்துள்ளார். ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சிற்பத்தின் பின்னணியில் ஒரு மகரதோரண வளைவு செதுக்கப்பட்டுள்ளது. இரு பக்கங்களிலும் அமைக்கப்பட்டுள்ள அரைத்தூண்களிலிருந்து தோன்றும் இந்த இரண்டு மகர தோரணங்கள் இணையுமிடத்தில் (ஆதிசேஷனின் தலைக்கு மேலே) ஒரு அழகிய கீர்த்திமுகம் காட்டப்பட்டுள்ளது.
இந்தச் சிலையின் தனித்துவம் என்று நரசிம்மரின் பிதுங்கிய கண்களைக் குறிப்பிடலாம். பெரிய அளவில் வட்டவடிவில் பிதுங்கிய கண்கள் இந்தச் சிலைக்கு வித்தியாசமான தோற்றத்தைத் தருகின்றன. முன்பு சொன்னது போல, லட்சுமி சிலை நரசிம்மரின் மடியிலிருந்து பிரித்து அகற்றப்பட்டுவிட்டது.
இது போன்ற மிகப்பெரிய சிற்பம் ஒரு தனி கருங்கல்லைப் பயன்படுத்தி எவ்வளவு நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளது என்று நினைத்தாலே மிகவும் வியப்பாக உள்ளது. விஜயநகர பேரரசின் சிற்பக் கலைஞர்களின் நிபுணத்துவத்திற்கு இந்தச் சிலையை மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
சுற்றுலாத் தகவல்
ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் திறந்திருக்கும் நேரம்: வாரத்தின் எல்லா நாட்களிலும் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை திறந்திருக்கும்.
நுழைவுக் கட்டணம்: இல்லை
புகைப்படம் எடுக்க அனுமதி: உண்டு
கண்டு களிக்க தேவைப்படும் நேரம்: ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம்.
இங்கு செல்ல சிறந்த பருவம்: அக்டோபர் மாதம் முதல் ஃபிப்ரவரி மாதம் வரை.
குறிப்புநூற்பட்டி
- Hampi Archaeological Survey of India. 1998. P.47.
விரிவான, அழகிய விளக்கவுரை அருமை நண்பரே…
வாழ்த்துகள்.
LikeLike
மிக்க நன்றி.
LikeLike
படமும் பகிர்வும் அருமை ஐயா
நன்றி
LikeLike
மிக்க நன்றி ஐயா.
LikeLike
அருமை
LikeLike
மிக்க நன்றி
LikeLike
அருமையான தகவல்
இறை தரிசனம் கிடைத்த நிறைவு
LikeLike
மிக்க நன்றி
LikeLike
பிங்குபாக்: ஹம்பி ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் – TamilBlogs
தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.
LikeLike