எர்னெஸ்ட் ஹெமிங்வே: புகழ்பெற்ற அமெரிக்க நாவலாசிரியர்

எர்னெஸ்ட் ஹெமிங்வே என்னும் எர்னெஸ்ட் மில்லர் ஹெமிங்வே (எர்னெஸ்ட் எம். ஹெமிங்வே) (Ernest Hemingway) (கி.பி.1899 –1961) ஒரு அமெரிக்க புனைகதை எழுத்தாளர். இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். தனித்தன்மை வாய்ந்த எழுத்துநடை, மிகக் குறைவான சொற்களைப் பயன்படுத்தி எழுதுதல் போன்றவை இவருக்கு நிறைய வாசகர்களைப் பெற்றுத் தந்தன. இந்த அமெரிக்கர் எழுதிய  ஏழு நாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை. இவர் இறந்த பின்பும் இவருடைய சில படைப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இவருடைய ஆங்கில புனைகதை இலக்கியப் பங்களிப்புகள், கி.பி. 1920 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் தொடங்கி, 1950 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதி வரை எழுதப்பட்டனவாகும். ஹெமிங்வேயுடைய கதைகளின் மாபெரும் வெற்றிக்குக் என்ன காரணம்?  இந்த எழுத்தாளருடைய புனைகதைப் பாத்திரப் படைப்புகள் தனித்தன்மையுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது விமர்சகர்கள் கருத்தாகும்.

இவருடைய கதைகளில், காதல் (Love), போர் (War), இறப்பு (Death), வனாந்திரம் (Wilderness), பற்றிய இவருடைய அனுபவங்களே பிரதிபலித்தன. நவீன கலாசாரத்தின் மீது அதிருப்தியுடன் (Dissatisfaction on Modern Culture) இருந்துள்ளார். இவருடைய The Old Man and the Sea  (கிழவனும் கடலும்) என்ற புதினம் (நாவல்) 1953 ஆம் ஆண்டிற்கான புலிட்சர் (Pulitzer) பரிசையும் 1954 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசையும் (இலக்கியம்) பெற்றது. இந்த நாவல் 1958 ஆம் ஆண்டு திரைப்படமாகவும் வெளிவந்து பெரும்புகழ் பெற்றது. இவருடைய எல்லாப் படைப்புகளுமே ஆங்கிலப் புனைகதை இலக்கியப் பரப்பில் செம்மொழித் தகுதி பெற்றனவாகும்.

இவரைக் கவர்ந்த எழுத்தாளர்கள்,   அமெரிக்க அதிபரும் எழுத்தாளருமான தியோடர் ரூஸ்வெல்ட் (Theodore Roosevelt), ஃபிரெஞ்சு ஓவியரான பால் செசான் (Paul Cézanne), உருஷ்ய எழுத்தாளரான ஆண்டன் செகோவ் (Anton Chekov), ஸ்காட்லாந்து எழுத்தாளரான ராபர்ட் லூயிஸ் ஸ்டீஃபன்சன் மற்றும் அமெரிக்க எழுத்தாளரான ஜெர்ட்ரூட் ஸ்டெய்ன் ஆவர்.  சிலர் இவர் ஓரினச் சேர்க்கை ஆதரவாளர் (homophobic) என்றும் இவருடைய எழுத்துக்கள் ஆபாசமானது (sexist) என்றும் விமரிசனம் செய்துள்ளார்கள்.

ernest_hemingway_writing_at_campsite_in_kenya_-_nara_-_192655

எர்னெஸ்ட் ஹெமிங்வே (விக்கிமீடியா காமன்ஸ்)

வாழ்க்கை வரலாறு

ஹெமிங்வே 1899 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 தேதியன்று அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தின் சிசெரோ (Cicero) (தற்போது ஓக் பார்க்) என்னுமிடத்தில் பிறந்தார்.  தந்தை கிளாரன்ஸ் எட்மண்ட்ஸ் ஹெமிங்வே (கி.பி.1871-1928); தாய்  கிரேஸ் ஹால் ஹெமிங்வே (கி.பி.1872-1951). தந்தை ஒரு நாட்டு மருத்துவர் (country physician). தாய் சீர்திருத்த கிருத்தவ சமயத்தைச் (Puritan) சேர்ந்தவர்.  ஒரு இசைக்கலைஞரும் ஆவார். ஆறு அடி உயரமும், நல்ல உடற்கட்டும், வசீகரமான முகமும் கொண்டவர் இவர். உடன் பிறந்தவர்கள் நான்கு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர். இவர் இரண்டாவது மகன்.

ஹெமிங்வேயின் பள்ளிக்கல்வி ஓக் பார்க் அண்ட் ரிவெர் பாரெஸ்ட் பள்ளியில் (Oak Park and River Forest High School)  இடம்பெற்றது. கல்வி, விளையாட்டு, இசை என்று பல துறைகளில் தனது அறிவையும் திறன்களையும் ஹெமிங்வே மேம்படுத்திக்கொண்டார். வரலாறு, இலக்கியம், வேட்டையாடுதல், மீன்பிடித்தல் ஆகிய திறன்களை வளர்த்துக்கொள்ள உதவியவர் இவருடைய தந்தையே. பள்ளியில் நடத்தப்பட்ட “செய்தித்தாள்” வகுப்பு  ஹெமிங்வேயின் எழுத்துத் திறனை மேம்படுத்தியது.

தந்தையின் விருப்பம் ஹெமிங்வே மருத்துவம் படிப்பது. ஹெமிங்வேயோ “கல்லூரி” என்பதை நினைத்துப் பார்க்கக் கூட விரும்பவில்லை. மாறாக “கன்சாஸ் சிட்டி ஸ்டார்” என்ற பத்திரிக்கையில் நிருபராகச் இணைந்தார். பத்திரிகை அலுவலகத்தில் சேர்ந்த முதல் நாளிலேயே  இவருடைய பத்திரிகை ஆசிரியர் கொடுத்த ஒரு ஸ்டைல் ஷீட் இவருடைய எழுத்துப் பணிக்கு அடித்தளமாக அமைந்தது. இதில் சொல்லப்பட்ட செய்திகள் என்ன என்று பார்ப்போமா?:

“சிறு வாக்கியங்களையே பயன்படுத்துக. சிறிய பத்தி (Paragraph) ஒன்றை முதலில் எழுதித் தொடங்குக. சக்திவாய்ந்த ஆங்கிலத்தையே (vigorous English) பயன்படுத்துக. நேர்மறையாக இருக்க வேண்டும். எதிர்மறை வேண்டாம்.” பின்னாளில் ஹெமிங்வே “சிறந்த விதிகள் என்று எண்ணி இவற்றை என்னுடைய எழுத்துப் பணிகளில் பயன்படுத்திக் கொண்டார். இவற்றை இவர் தன் வாழ்நாளில் மறக்கவில்லை.

பள்ளிப் படிப்பிற்குப் பின்பு இராணுவத்தில் பணியாற்ற விரும்பியுள்ளார். ஒரு குறைபாடுள்ள கண் காரணமாக இராணுவ சேவைக்கு  இவர் பலமுறை நிராகரிக்கப்பட்டார். பின்னாளில் அமெரிக்க செஞ்சிலுவைக்காக (American Red Cross), முதலாம் உலகப் போரின் ( 28 ஜூலை, 1914 – 11 நவம்பர், 1918) போது, இத்தாலி நாட்டு  இராணுவத்தில் ஒரு ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனராகப் பணியாற்றினார். அப்போது இவர் வயது பத்தொன்பதுகூட இல்லை. இத்தாலி நாட்டில் ஜூலை 8, 1918 அன்று அந்நாட்டு இராணுவ வீரர்களுக்கு உணவு எடுத்துச் சென்றபோது போஸ்டால்டா டி பிய்வில் (Fossalta di Piave) என்ற ஆஸ்திரிய-இத்தாலிய போர் முன்னணியில் (Austro-Italian front) நடந்த குண்டு வீச்சில் இவர் படுகாயமடைந்தார். காயம்பட்ட இவர் இத்தாலியின் மிலான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இங்கு பணியாற்றிய ஆக்னஸ் வான் குரோவ்ஸ்கி என்ற நர்ஸின் மீது மையல் கொண்டார். நர்ஸ் இவர் காதலை ஏற்றுகவில்லை. இவை மறக்க முடியாத அனுபவங்கள் என்று பின்னாளில் நினைவுகூர்ந்துள்ளார்..

இத்தாலி நாட்டு இராணுவம், இவருடைய வீரதீரச் செயல்களுக்காகவும் சிறப்பான சேவைக்காகவும் “இத்தாலி நாட்டு இராணுவ வீரதீரச் செயல்களுக்கான வெள்ளிப்பதக்கம் (Italian Silver Medal of Bravery),” வழங்கிப் பெருமைப் படுத்தியது. 1919 ஆம் ஆண்டு அமெரிக்கா திரும்பினார். இவருடைய தந்தை கிளாரன்ஸ் எட்மண்ட்ஸ் ஹெமிங்வே 1928 ஆம் ஆண்டு, இவருடைய தந்தையின், சிவில் வார் பிஸ்டலைப் பயன்படுத்தித் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தந்தையின் தற்கொலைக்கு பிறகு ஹெமிங்வே தன்  கையாலேயே தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வது போன்ற முன்னுணர்வுகள் (premonitions) தோன்றத் தொடங்கினவாம். சற்றேறக்குறைய 33 ஆண்டுகள் கழித்து இந்த முன்னுணர்வு மெய்யானது. ஆம் 1961 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதியன்று அமெரிக்க நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஐடஹோ  மாநிலத்தின் கெட்சும் நகரிலுள்ள தன் வீட்டில் ஒரு ஷாட் கன்னின் (Shot Gun) உதவியுடன் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். மனச்சோர்வு (depression), மிதமிஞ்சிய குடிப்பழக்கம் (alcoholism) மற்றும் பல உடல் உபாதைகள் இவரைத்  தற்கொலை முடிவிற்குத் தூண்டியுள்ளன.

நான்கு மனைவிகள்

இவருக்கு நான்கு மனைவிகள் உண்டு: தன்னுடைய 22 ஆம் வயதில் எலிசபெத் ஹாட்லி ரிச்சர்ட்சன் என்பவரை 1921 ஆம் ஆண்டு மணந்து 1927 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. பாலின் மேரி ஃபைஃபரை (Pauline Marie Pfeiffer) மணந்த ஆண்டு 1927 மணமுறிவு செய்த ஆண்டு 1940. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. மார்த்தா கெல்ஹார்னை (Martha Gellhorn) மணம்புரிந்த ஆண்டு 1940 மணமுறிவு ஏற்பட்ட ஆண்டு 1945. இறுதியாக மேரி வெல்ஷை (Mary Welsh) 1946 ஆம் ஆண்டு மணந்தார். தன் வாழ்நாள் முழுதும் இவருடனேயே வாழ்ந்தார். சுமார் 40 (1921 – 1961) வருடங்களில் நான்கு பெண்களை மணந்துள்ளார். முதல் மூவர் திருமணத்திற்கு முன்பு காதலியாகவே (mistress) இவருடன் வாழத் தொடங்கியுள்ளார்கள். நவோமி உட் (Naomi Wood) என்ற நாவலாசிரியர் இவர்களுடைய வாழ்க்கையைப் “ஹெமிங்வேயின் திருமதிகள் (Mrs Hemingway)” என்ற தலைப்பில் புனகதையாக்கியுளார். (காண்க: தி கார்டியன் விமர்சனம்)

படைப்புகள் 

இவருடைய முதல் நூலான “மூன்று கதைகளும் பத்துப் பாடல்களும்” (Three Stories and Ten Poems) என்னும் சிறுகதைத் தொகுப்பு 1923 ஆம் ஆண்டு வெளிவந்தது. 1925 ஆம் ஆண்டு  அவரது மற்றொரு முக்கிய நூலான, In Our Time என்ற சிறுகதைத் தொகுப்பு  நியூயார்க் நகரில் வெளியிடப்பட்டது; இந்நூல் ஏற்கனவே 1924 ஆம் ஆண்டில் பாரிசில் வெளியிடப்பட்டிருந்தது.

ஹெமிங்வே தன்னுடைய வாழ்நாளில் ஏழு நாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுப்புகள் இரண்டு புனைவல்லாத (Nonfiction) நூல்கள் ஆகியவற்றை எழுதி வெளியிட்டுள்ளார். ஜூலை 2, 1961 ஆம் தேதியன்று இவர் மறைந்த பின்பு இவருடைய மூன்று நாவல்களும், நான்கு சிறுகதைத் தொகுப்புகளும். மூன்று புனைவல்லாத (Nonfiction) நூல்களும்  வெளியிடப்பட்டுள்ளன.

இவருடைய மூன்று நாவல்களான Islands in the Stream (1970), The Garden of Eden (1986), True at First Light (1999) ஆகியவற்றை இவருடைய நான்காம் மனைவி மேரி வெல்ஷும் மகன் பாட்ரிக் ஹெமிங்வேயும் தொகுத்து வெளியிட்டுள்ளனர்.

ஹெமிங்வேயின் சிறுகதைத் தொகுப்புகள் (Hemingway’s Short Story Collections)

 1. Three Stories and Ten Poems (1923)
 2. In Our Time (1925)
 3. Men Without Women (1927)
 4. The Snows of Kilimanjaro (1932) (இந்தச் சிறுகதை இங்கே)
 5. Winner Take Nothing (1933)
 6. The Fifth Column and the First Forty-Nine Stories (1938)
 7. The Essential Hemingway (1947)
 8. The Hemingway Reader (1953)
 9. The Nick Adams Stories (1972)

நாவல்கள் (Novels/Novella)

 1. The Torrents of Spring (1925)
 2. The Sun Also Rises (1926)
 3. A Farewell to Arms (1929)
 4. To Have and Have Not(1937)
 5. For Whom the Bell Tolls (1940)
 6. Across the River and Into the Trees (1950)
 7. The Old Man and the Sea (1952)
 8. Adventures of a Young Man (1962)
 9. Islands in the Stream (1970)
 10. The Garden of Eden (1986)

 புனைவல்லாதவை (Nonfiction)

 1. Death in the Afternoon (1932)
 2. Green Hills of Africa (1935)

பின்னாளில் இவர் பெற்ற போர் அனுபவங்களை மையமாக வைத்து “ஆயுதங்களுக்குப் பிரியாவிடை“ (“Farewell to Arms”) என்ற நாவலை 1929 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டார்.

The Old Man and the Sea  கிழவனும் கடலும் என்ற நாவலை 1951 ஆம் ஆண்டு கியூபாவில் இருந்தபோது ஹெமிங்வே எழுதி, 1952 ஆம் ஆண்டு சார்லஸ் ஸ்க்ரிப்னர்ஸ் சன்ஸ் என்ற அமெரிக்கப் பதிப்பகம் மூலம் வெளியிட்டார்.

“சாண்டியாகு என்ற முதிய கடலோடியின் தூண்டிலில் 84 நாட்களாக எந்த மீனும் சிக்கவில்லை. இந்தச் சூழலில், தனியாக மீன் பிடிக்கச் செல்லும் சாண்டியாகுவின் தூண்டிலில் சிக்கும் மார்லின் என்ற பெரிய வகை மீனுக்கும் அவருக்கும் இடையில் நடக்கும் வாழ்க்கைப் போராட்டம்தான் கதை. கச்சிதமான வார்த்தைகள், தேர்ந்த நடை மூலம் வாசகர் மனதில் கடலின் பரப்பை விஸ்தாரமாக விரிக்கும் படைப்பு இந்த நாவல். மொத்தமே 27,000 வார்த்தைகள்தான்.” (கிழவனும் கடலும் – நூல் விமர்சனம் https://groups.google.com/forum/#!topic/panbudan/3FtMev0docw) இந்த நாவல் 1953 ஆம் ஆண்டிற்கான புலிட்சர் (Pulitzer) பரிசையும் 1954 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசையும் (இலக்கியம்) பெற்றது.

For Whom the Bell Tolls (“யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது”) 1940 ஆம் ஆண்டில் ஹெமிங்வே எழுதி வெளியிட்ட மிகப் புகழ்பெற்ற நாவல்  ஆகும். ஹெமிங்வேயின் படைப்புகளிலேயே மிகச் சிறந்தது என்று  அவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய “ஷெப்ரே மெர்ஸ்” குறிப்பிடுகிறார்.

எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் The Snows of Kilimanjaro (http://xroads.virginia.edu/~drbr/heming.html) 1932 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட சிறுகதையாகும்.

“ஆப்பிரிக்காவுக்கு தமது மனைவியுடன் வேட்டையாட (Safari) வந்த இடத்தில் வலது காலில் முள்குத்தி புரையோடிப்போய்ப் படுக்கையில் கிடக்கும் எழுத்தாளன் தமது கடந்தகால நினைவுகளில் மூழ்குகிறான். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமென்று நம்மவர்கள் சொல்வார்கள். ….. இங்கே கூடாரத்தில் கால் கட்டுடன் இருக்கும் எழுத்தாளன் முன்னே அவனுடைய பழைய உன்னதமான நினைவுகளைக் கிளறும் வகையில் பனிமூடிய கிளிமாஞ்சாரோ, நெருங்கும் அவனது மரணத்தை ஞாபகப்படுத்த வெளியே வட்டமிடும் கழுகுகள். தன்னைத்தானே சபித்துக்கொள்கிறான். கங்குல்போல அவனுள் உறையும் பழைய நினைவுகள், பின்னோக்கி அழைக்கின்றன.  எழுத்தில் கனியிருப்ப காயைமுன்னிருத்தியதற்காக வருந்துகிறான். ‘அரசியல், பெண்கள், மது, பணம், கனவுகள்’ என்ற சுழலில் திக்கித் தவிக்கும் எழுத்தாளர்களின் ஒருவராக இக்கதையில் ஹெமிங்வே தம்மை அடையாளப்படுத்திக் கொள்வார். இச்சிறுகதை 1952ல் கிரிகிரிபெக்கும் ஏவா கார்டனரும் நடித்து திரைப்படமாக வந்திருக்கிறது. இப்போது இணைய தளங்களில் பார்க்க கிடைக்கிறது. கதையை சிதைக்காமல் படமாக்கிருக்கிறார்கள்.” (மொழிவது சுகம் நவம்பர் 21:நாகரத்தினம் கிருஷ்ணா https://nagarathinamkrishna.com/2011/11/20/les-neiges-du-kilimanjaro-the-snow-of-kilimanjaro/) இந்தக் கதையை இங்கு  படிக்கலாம்.

ஹெமிங்வேயின் ‘பாலத்தில் ஒரு கிழவன்‘ சொல்வனம் எர்னஸ்ட் ஹெமிங்வே- தமிழில் :எம். நரேந்திரன். இதழ் 152 | 01-07-2016 (https://solvanam.com/?p=45274)

ஆறு வரிகளில் கதை எழுதமுடியுமா என்று சவால் விட்டு அவர் இவ்வாறு எழுதியுள்ளார்:

விற்பனைக்கு – குழந்தைக் காலணிகள், எப்போதும் அணியாதது. ‘For sale: baby shoes, never used.’ 

இவரைத் தொடர்ந்து ஜான் உப்டிகே (John Updike), நார்மன் மைலெர் (Norman Mailer) போன்ற சில ஆங்கிலப் புனைவு எழுத்தாளர்கள்  ஆறு வார்த்தைகளில் கதை சொல்ல முயற்சி செய்துள்ளார்கள். (மேலதிகத் தகவல் இங்கு)

“என்னை மன்னித்துவிடு!” “எதற்காக?” “கருத்தில் கொள்ளாதே” – ஜான் உப்டிகே “Forgive me!” “What for?” “Never mind.” – John Updike

“சாத்தான் – ஜெனோவா – பதினைந்து சுற்றுகள் – ஒரு குலுக்கல்” -நார்மன் மைலெர். Satan—Jehovah—fifteen rounds. A draw. –Norman Mailer

இது சுஜாதா எழுதிய கதை: “ஒரு ஊர்ல ஒரு நரியாம் அதோட சரியாம்

எழுத்து பற்றி ஹெமிங்வேயின் மேற்கோள்கள்

“சிறுகதைகள் மிதக்கும் பனிப்பாறைகளைப் போல அமையவேண்டும் என்றார். மிதக்கும் பனிப்பாறைகளில் எட்டில் ஒரு பாகமே வெளியில் தெரிகிறது. மீதிப்பகுதி முழுவதும் தண்ணீருக்குள் மூழ்கி வெளியில் தெரிகின்ற பகுதிக்கு அடிப்படையாகிறது. அதுபோலக் கதைகளைப் படைக்கும் கொள்கை மிதக்கும் பனிப்பாறைக் கொள்கை (Iceberg Theory) என அழைக்கப்படுகிறது.” பனிப்பாறைக் கொள்கைக்கு மிகச்சிறந்த இலக்கணமாக அவரது Hills like White Elephants மற்றும் A Clean, well-lighted Place என்ற சிறுகதைகள் திகழ்கின்றன.

சிறந்த 21 மேற்கோள்கள் 

1.  முதலில் வாழ்க்கையைப் பற்றி எழுதுவதற்கு நீங்கள் வாழ வேண்டும். “In order to write about life first you must live it.”

2. ஒரு நல்ல எழுத்தாளரிடம் இருக்கவேண்டிய மிக முக்கியமான குணம் என்னவென்றால் அவருள் பொதிந்துள்ள மாசினைக் கண்டறியும் திறனாகும் “The most essential gift for a good writer is a built-in, shockproof, shit detector.”

3. எப்படி எழுத வேண்டும் என்று நீங்கள் கற்றுக்கொள்வது பற்றி அவர்கள் அக்கறைப்படத் தேவையில்லை. நீங்கள் எழுதப் பிறந்தவர் என்று அவர்கள் நினைத்துக் கொள்ளட்டுமே! “It’s none of their business that you have to learn how to write. Let them think you were born that way.”

4. நான் கூரை மீது நின்று பாரிஸ் நகரத்தைப் பார்த்தவாறு சிந்திக்கிறேன், “கவலைப்படாதே. இதற்கு முன்பு எப்போதும் எழுதிக் கொண்டிருந்தீர்கள். இப்போதும் நீங்கள் எழுதுகிறீர்கள். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு உண்மையான வாக்கியத்தை எழுத வேண்டும். உங்களுக்குத் தெரிந்த உண்மையான வாக்கியத்தை எழுதுங்கள். “I would stand and look out over the roofs of Paris and think, “Do not worry. You have always written before and you will write now. All you have to do is write one true sentence. Write the truest sentence that you know.”

5. எப்படி எழுதுவது என்பதற்கு விதிமுறைகள் இல்லை. சில நேரங்களில் இது எளிதாகவும், கச்சிதமாகவும் வருகிறது; சில நேரங்களில் பாறையில் துளையிட்டு வெடிமருந்து கொண்டு வெடிக்கச் செய்வது போன்று கடினமாகிவிடுகிறது.. “There is no rule on how to write. Sometimes it comes easily and perfectly; sometimes it’s like drilling rock and then blasting it out with charges.”

6. எழுதுவது கடினமல்ல. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு தட்டச்சுப்பொறியின் முன் உட்கார்ந்து இரத்தம் சிந்துவது (முயற்சிப்பது) தான்!  “There is nothing to writing. All you do is sit down at a typewriter and bleed.”

7. ஒரு தலைசிறந்த பக்கம் எழுதுவதற்காக தொன்னூற்றி ஒரு பக்கம் குப்பையையே எழுதுகிறேன். இந்தத் தொன்னூற்றி ஒரு பக்கக் குப்பையைக் குப்பைத் தொட்டியிலேயே  போட முயல்கிறேன். “I write one page of masterpiece to ninety-one pages of shit. I try to put the shit in the wastebasket.”

8. ஒரு எழுத்தாளர் உற்று நோக்குவதை நிறுத்திவிட்டால், அவர் காலி. அவர் தன் அனுபவத்தத்தில் சிறு சிறு விவரங்களைக் கூட விடாமல் எவ்வாறு நெருங்கிப் பார்த்து தெரிவிக்கிறார் பாருங்கள். “If a writer stops observing he is finished. Experience is communicated by small details intimately observed.”

9. நீங்கள் இரண்டு பேருக்காக எழுதுவதாக நான் நம்புகிறேன். உங்களுக்காக எழுதினால் முற்றிலும் சரியாக எழுத முயற்சி செய்யுங்கள்; இல்லையெனில் நல்லது, நீங்கள் விரும்புகிறவருக்கு எழுதுங்கள். அவரால் படிக்க முடியுமா? எழுத முடியுமா? அல்லது இரண்டுமே முடியாதா?; அவர் உயிரோடு இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா? என்பதெல்லாம் பொருட்டல்ல. “I believe that basically you write for two people; yourself to try and make it absolutely perfect; or if not that then wonderful. then you write for who you love whether they can read or write or not and whether they are alive or dead.”

10. நான் என்ன பார்க்கிறேன், நான் என்ன உணர்கிறேன் என்பதை மிகச் சிறந்த மற்றும் எளிய வழியில் ஒரு காகிதத்தில் எழுத்தில் வடிப்பதே என் நோக்கம். “My aim is to put down on paper what I see and what I feel in the best and simplest way.”

11. எழுத்து உங்கள் இன்றியமையாத துணையாகவும் மகிழ்ச்சியாகவும் மாறிவிட்டதென்றால் உங்கள் மரணம் மட்டுமே நீங்கள் எழுதுவதை நிறுத்த வல்லது. “Once writing has become your major vice and greatest pleasure only death can stop it.”

12. ஒரு நாவலை எழுதும் போது எழுத்தாளர் உயிருள்ள மக்களை உருவாக்க வேண்டும்; மக்கள் கதாபாத்திரங்கள் அல்ல. ஒரு கதாபாத்திரம் என்பது ஒரு கேலிச்சித்திரமே! “When writing a novel a writer should create living people; people not characters. A character is a caricature.”

13. ஒரு மனிதர் உண்மையிலேயே வேடிக்கையான ஒரு புத்தகத்தை எழுதுவதற்கு அதிகமான வலியினைப் பெறுகிறார் “A man’s got to take a lot of punishment to write a really funny book.”

14. உங்கள் தனிப்பட்ட துயரத்தை மறந்து விடுங்கள். நாம் அனைவரும் தொடக்கத்தில் இருந்து சொல்லவொன்னா துன்பத்தை அனுபவித்துள்ளோம். நீங்கள் தீவிரமாக எழுதவேண்டும் என்றால் அதற்குமுன் நீங்கள் குறிப்பாக நரகத்தைப் போன்ற காயம்பட வேண்டும். நீங்கள் காயம் அடைந்தால், அதை அனுபவி. அதை ஏமாற்றாதே. “Forget your personal tragedy. We are all bitched from the start and you especially have to be hurt like hell before you can write seriously. But when you get the damned hurt, use it-don’t cheat with it.”

15. “ஒரு எழுத்தாளருக்கு மிகவும் திடமான அறிவுரை இது, நான் நினைப்பது இது:
நீங்கள் உங்கள் உணவை உண்பதற்கு முன், ஆழமாக மூச்சுவிடக் கற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்யுங்கள், நீங்கள் தூங்கும்போது உண்மையாகத் தூங்கவேண்டும்.உங்கள் முழு வலிமையுடன் முற்றிலும் முழுமையாக வாழ்வதற்கு முடிந்த அளவுக்கு முயற்சி செய்யுங்கள். சிரிக்கும்போது நரகதைப்போல சிரியுங்கள். கோபப்படும்போது நல்லதற்கு கோபப்படுங்கள். நீங்கள் விரைவில் இறந்துபோவீர்கள்.” “The most solid advice for a writer is this, I think: Try to learn to breathe deeply, really to taste food when you eat, and when you sleep really to sleep. Try as much as possible to be wholly alive with all your might, and when you laugh, laugh like hell. And when you get angry, get good and angry. Try to be alive. You will be dead soon enough.”

16. நீங்கள் எளிமையாக எழுதுவது நல்லது, எளிதானது மிகவும் நல்லதுதான். ஆனால் எளிதானது என்று எதையும் நினைத்துத் தொடங்க கூடாது. அது எவ்வளவு சிக்கலானது என்பதை அறிந்துகொண்டு அதை மிகவும் எளிமைப்படுத்தி எழுதுங்கள் “it is all very well for you to write simply and the simpler the better. But do not start to think so damned simply. Know how complicated it is and then state it simply.”

17. எந்த முதல் வரைவுமே குப்பைதான் “The first draft of anything is shit.”

18. “எல்லா நல்ல புத்தகங்களும் ஒரே மாதிரியானவை, அதில் அவை சரியாக நடந்தது என்றால் அவை உண்மையானவை. ஒன்றைப் படித்து முடித்தவுடன், உங்களுக்கு நடந்தது எல்லாம் பின்னர் உங்களுக்கே சொந்தமானது என்று நீங்கள் உணர்வீர்கள். நல்லது, கெட்டது, பரவசம், வருத்தம் மற்றும் துக்கம், மக்கள் மற்றும் இடங்கள் மற்றும் வானிலை எப்படி இருந்தது. நீங்கள் இவற்றை எப்படிப் பெற்றீர்களோ அதை அப்படியே மக்களுக்கு கொடுக்க முடியும் என்றால், நீங்கள் ஒரு எழுத்தாளர்தான். ” “All good books are alike in that they are truer than if they had really happened and after you are finished reading one you will feel that all that happened to you and afterwards it all belongs to you: the good and the bad, the ecstasy, the remorse and sorrow, the people and the places and how the weather was. If you can get so that you can give that to people, then you are a writer.”

19. நான் எப்போதுமே பனிப்பாறை கொள்கையின்படி எழுத முயற்சி செய்கிறேன். நம் கண்ணுக்குத் தெரியும் ஒவ்வொரு பகுதிக்கும் தொடர்புடைய ஏழு – எட்டு பகுதிகளாவது நீருக்கடியில் உள்ளது.“I always try to write on the principle of the iceberg. There is seven-eighths of it underwater for every part that shows.”

20. உங்களுடைய பிரியமான புத்தகத்தில் வானிலை பற்றி எழுதுங்கள். வானிலை மிக முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள் “Remember to get the weather in your damn book–weather is very important.”

20. உங்கள் புத்தகத்தில் வானிலை பற்றி எழுத மறக்க வேண்டாம். வானிலை மிகவும் இன்றியமையாதது. “Remember to get the weather in your damn book–weather is very important.”

21″ஒருத்தனுக்கு அவன் எதைப் பற்றி எழுதுகிறானோ அதில் ஓரளவுக்குப் போதுமான விஷய ஞானம் இருந்தால், தனக்கும் தன் வாசகனுக்கும் தெரிந்த விஷயங்களை அவன் சொல்லாமல் விட்டு விடலாம். எழுதுகிறவன் மட்டும் தேவைப்பட்ட அளவுக்கு உண்மையாக எழுதினால் அவன் சொல்லாமல் விட்டிருந்தாலும், சொல்லப்பட்டது போலவே அவற்றை வாசகன் வலுவாக உணர்வான். கடலின் மேலிருக்கும் பனிக்கட்டி கம்பீரமாக நகரக் காரணம் அதில் எட்டில் ஒரு பங்கு மட்டுமே தண்ணீருக்கு மேல் இருக்கிறது என்ற உண்மைதான்.

Source: Ernest Hemingway’s 20 Quotes on Writing

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in அமெரிக்கா, ஆங்கில இலக்கியம், இலக்கியம், புனைகதை and tagged , , , , , , . Bookmark the permalink.

7 Responses to எர்னெஸ்ட் ஹெமிங்வே: புகழ்பெற்ற அமெரிக்க நாவலாசிரியர்

 1. குமார் சொல்கிறார்:

  அருமையான தகவலுக்கு நன்றி.

  Like

 2. ஒரு எழுத்தாளன் அறிந்து கொள்ள வேண்டிய நல்ல அறிவுரைகள் நிறைய இருக்கிறது இப்பதிவில்.

  ஒரு மாபெரும் வரலாறு அறிய வைத்தமைக்கு நன்றி நண்பரே…

  Like

 3. கரந்தை ஜெயக்குமார் சொல்கிறார்:

  மிகப் பெரும் எழுத்தாளர் பற்றிய அருமையானப் பதிவு ஐயா
  நன்றி

  Like

 4. பிங்குபாக்: எர்னெஸ்ட் ஹெமிங்வே: புகழ்பெற்ற அமெரிக்க நாவலாசிரியர் – TamilBlogs

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.