ஹலோ.. நான் தான் உங்கள் இரத்தம் (Blood) பேசுகிறேன். உங்கள் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் நான் மிகவும் இன்றியமையாதவன். “மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது.” (லேவி. 17:11) என்று பைபிள் குறித்துள்ளது. “இரத்தமும் சதையும்” என்று என்னைப்பற்றி உவமானம் சொல்வதுண்டு. “எல்லோருக்கும் சிவப்பு இரத்தம் தான் ஓடுகிறது” என்று சொல்லி சமத்துவம் பேசுகிறார்கள். எனக்கு உதிரம், குருதி, செம்புனல், செந்நீர், சுரோணிதம், சோணிதம் என்று பல பெயர்கள் உள்ளன.
ரோமானியர்களில் வீரனாக விரும்பியவர் என்னைக் (இரத்தத்தைக்) குடித்தனர் என்று கூறப்படுகிறது. இளமையை மீண்டும் பெற, மூன்று வாலிபர்களிடம் என்னை (இரத்தத்தை) எடுத்து போப் இன்னசென்ட் (V) என்பவர் குடித்தாராம். கி.பி. 1628 ஆம் ஆண்டு வில்லியம் ஹார்லி இரத்தம் எப்படி உடலில் சுழல்கிறது என்று கண்டறிந்து சொன்னார். மருத்துவமாக முதல் இரத்ததானம் ஜேம்ஸ் பிளன்டல் என்ற பொது மற்றும் மகளிர் மருத்துவரால் நடைமுறைப்படுத்தப்பட்டது. மனிதனுக்கு மனிதனே இரத்தம் கொடுக்க ஏற்ற தகுதியானவன் என்பதையும் இவர் கூறினார்.
உங்கள் எடை 70 கிலோ என்றால் உங்கள் உடலில் உள்ள என் (இரத்தத்தின்) கொள்ளளவு 6.8 லிட்டர் ஆகும். உங்கள் உடல் எடையில் என் பங்கு 6% முதல் 8% வரை உள்ளது. நான் இரத்த அணுக்கள், வெள்ளை அணுக்கள், வெள்ளைத் தட்டுகள் மற்றும் பிலாஸ்மாவினால் உருவாக்கப்பட்டுள்ளேன். எலும்பு மஜ்ஜையில் நான் தோற்றுவிக்கப்படுகிறேன். உங்கள் உடலின் வெப்பநிலையை உடல் முழுவதும் சமமாகப் பரவச்செய்து உடல் வெப்பநிலையை நானே ஒருங்கினைக்கிறேன். உங்கள் உடலில் கார, அமில தன்மையை நிலை நிறுத்துவதும் நானே. என்னுடைய சிவப்பணுக்கள் உங்கள் கல்லீரலில் அழிக்கப்படுகின்றன. என் சராசரி குளூகோஸ் அளவு – 100-120mg%. இன்சுலின் என்னும் ஹார்மோன் என்னிடத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுதுகிறது.
என்னுடைய கூறுகள் (My Components)
நான் திரவ வடிவத்தில் உள்ளேன். என்னில் காணப்படும் இரத்தப் பிளாஸ்மாவே திரவ வடிவில் உள்ளது. இந்த பிளாஸ்மாவில் இரத்த திசுக்கள் (blood cells) மிதக்கின்றன. இவை மூன்று வகைப்படும்:
- சிவப்பு இரத்த அணுக்கள் (RBC)
- வெள்ளை இரத்த அணுக்கள் (WBC)
- இரத்த தட்டுகள் (Blood Platelets)
1.சிவப்பு இரத்த அணுக்கள் (Red Blood Corpuscles):
இதற்கு எரித்ரோசைட்டுகள் (Erythrocytes) என்ற பெயர் உள்ளது. இவை உங்கள் எலும்பு மஜ்ஜையிலிருந்து (Bone Marrow) உருவாகின்றன. சிவந்த நிறமுடைய அணுக்கள் இரு பக்கமும் குவித்த தட்டையான வட்ட வடிவம் கொண்டவை. இவை சிவப்பாக இருப்பதற்கு ஹீமோகுளோபின் (Haemoglobin) என்ற நிறமியே காரணமாகும். ஒரு கன மி.மீ அளவில் காணப்படும் சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை: ஆண்கள் (இயல்பான நிலை) 5.2 மில்லியன் (அணுக்களின் வாழ்நாள் – 120 நாட்கள்); பெண்கள் (இயல்பான நிலை) 4.5 மில்லியன் (அணுக்களின் வாழ்நாள் – 110 நாட்கள்). சிவப்பு இரத்த அணுக்கள் குறைவதால் ஏற்படும் நோய் – இரத்த சோகையாகும் (அனிமியா). இவை அதிகரித்தால் ஏற்படும் நோய்க்கு பாலிசைதீமியா என்று பெயர்.

1903 Shape of Red Blood Cells Wikimedia Commons
2.இரத்த வெள்ளை அணுக்கள் (White Blood Cells):
இரத்த வெள்ளை அணுக்கள் என்னில் உள்ள ஒரு கூறு (component) ஆகும். உங்கள் உடலின் போர்வீரர்கள் என்று இவற்றை அழைப்பார்கள். வெள்ளை அணுக்களின் எண்ணிக்கைதான் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை தீர்மானிக்கிறது. இதற்கு லியூகோசைட்டுகள் (Leukocytes) என்ற பெயரும் உள்ளது. இவை எலும்பு மஜ்ஜை (Bone Marrow) மற்றும் நிணநீர் சுரப்பியிலிருந்து (Lymphatic Glands) உருவாகின்றன.
துகளுள்ள வெள்ளை அணுக்கள் (Granulocytes) மற்றும் துகளற்ற வெள்ளை அணுக்கள் (Agranulocytes) என்று இரண்டு வகை லியூகோசைட்டுகள் (வெள்ளை அணுக்கள்) உள்ளன.
துகளுள்ள வெள்ளை அணுக்கள் (Granulocytes) மூன்று வகைப்படும்: 1.நியூட்ரோஃபில்கள் (Neutrophils); 2.இயோசினாஃபில்கள் (Eosinophils (acidophilus) மற்றும் 3.பேசோஃபில்கள் (Basophils).
துகளற்ற வெள்ளை அணுக்கள் (Agranulocytes) இரண்டு வகைப்படும்: 1.லிம்போசைட்டுகள் (Lymphocytes) என்னும் நிணநீர்க்கலங்கள் மற்றும் 2.மோனோசைட்டுகள் (Monocytes).
உங்கள் உடலில் ஒரு மைக்ரோ லிட்டார் அளவில் உள்ள என்னில் (இரத்தத்தில்) இரத்த வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை – 8000 – 10,000 வரை இருக்கும். இரத்த வெள்ளை அணுக்களின் விகிதாச்சார எண்ணிக்கை இவை: நியூட்ரோஃபில்கள் – (45 – 75%); இயோசினாஃபில்கள் – (7 % குறைவாக); பேசோஃபில்கள் – (3.0% குறைவாக) ; லிம்போசைட்டுகள் – (20 – 40%); மோனோசைட்டுகள் – (1 – 10%) ஆகும். வெள்ளை நிறமுடைய அணுக்கள் வடிவமற்றது. இரத்த வெள்ளை அணுக்களின் ஆயுட்காலம் 2 அல்லது 3 வாரம் ஆகும்.

Wikimedia Commons
வெள்ளை இரத்த அணுக்கள் குறைவதால் ஏற்படும் நோய் லியூகோபினியா (Leukopenia or Leukocytopenia). இவை அதிகரித்தால் ஏற்படும் நோய்க்கு லூகீமியா (Leukemia) என்று பெயர். உங்கள் உடலில் சுமார் 4500 லிருந்து 11,000 வரை வெள்ளை அணுக்கள் இருக்கவேண்டும் என்று மருத்துவர்களால் வரையறுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த எண்ணிக்கை உங்கள் வயதிற்கு ஏற்ப மாறுபடலாம். இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை மிகுதியாக இருப்பதும் உங்கள் உடலுக்கு நல்லது அல்ல. உங்கள் எலும்பு மஜ்ஜையில் கட்டிகள், அதிக மனப்புழுக்கம், ஒவ்வாமை நோய்கள், ஆஸ்துமா, மூட்டுவலி போன்ற உடல் நலக் குறைபாடுகள் கூட இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக்காட்டும். கீமோ தெரபி (Chemotherapy) புற்று நோய்ச் சிகிச்சைகள், எச்.ஐ.வி (H.I.V), கல்லீரல், மண்ணீரல் வீக்க நோய்கள், கடும் தொற்றுவியாதிகள் போன்றவை கூட இரத்த வெள்ளை அணுக்களின் அளவைக் குறைக்கக் கூடும்.
3.இரத்தத் தட்டுகள் :
இரத்தத் தட்டுகளில் கரு (நியூக்ளியஸ்) இல்லை. இவை மெகாகாரியோசைட்டிலிருந்து (megakaryocytes) பெறப்பட்ட சைட்டோபிளாஸத்தின் துண்டுகள் ஆகும். இரத்தத் தட்டுகளுக்குத் திராம்போசைட்டுகள் (பிளேட்லெட்டுகள்) thrombocytes (thromb- + -cyte, “blood clot cell”) என்று வேறு பெயர்கள் உள்ளன. நான் உறைவதற்கு (hemostasis) இரத்த தட்டுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. நான் உறைவதற்கு மொத்தம் 13 காரணிகள் பொறுப்பாகும். இவற்றுள் ஃபிப்ரினோஜன் (Fibrinogen) என்ற வேதிப்பொருள்தான் என்னை உறைய வைக்கப் பெரும் பொறுப்பு வகிக்கிறது. என்னுடைய பிளாஸ்மாவில் ஃபிப்ரினோஜன் இல்லாவிட்டால் நான் உறைய மாட்டேன். ஒரு லிட்டர் பிளாஸ்மாவில் 2.5 – 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்ரினோஜன் கலந்துள்ளது. இரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை 2,50,000 – 5,00,000; வாழ்நாள் 5 – 9 நாட்கள் ஆகும். டெங்கு ஜுரம் என்ற நோய் இரத்தத் தட்டுகள் காரணமானது என்று கண்டறிந்துள்ளார்கள்.

Platelets Wikimedia Commons
இரத்தத்தின் வகைகள்
ஆஸ்திரியாவைச் சேர்ந்த கார்ல் லாண்ட்ஸ்டீனர் (Karl Landsteiner) என்ற உயிரியல் வல்லுநரும் மருத்துவரும் ஆன இவர் என்னுடைய (இரத்தத்தின்) வகைகள் எத்தனை என்பதைக் கண்டறிந்தார். உங்கள் உடலில் காணப்படும் என்னுடைய (இரத்த) வகைகளைப் பிரித்து முதன் முதலில் அறிவித்தவர் இவரே.
1909 ஆம் ஆண்டு இர்வின் பாப்பருடன் இணைந்து போலியோ வைரசையும் கண்டறிந்தார். எனவே இவருடைய பிறந்தநாளே என்னைக் கொடையாக வழங்குவோர் தினமாகக் (இரத்த தானமளிப்போர் தினம்) தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆய்விற்காக கார்ல் லாண்ட்ஸ்டீனருக்கு 1930 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

கார்ல் லாண்ட்ஸ்டீனர் விக்கிமீடியா காமன்ஸ்
இரத்த நிபுணர்கள் (இரத்த வங்கி வல்லுநர்கள்) என்னை மூன்று பெருவாரியான வகைகளாக, அதாவது ABO தொகுப்புகளாக (Grouping), தரநிலைப் படுத்துவார்கள். சிவப்பு இரத்த அணுக்களின் மேல்பரப்பில் காணப்படும் ஒருவகைப் புரதப் பூச்சின் அடிப்படையில் இவை வகைப்படுத்தப்படுகின்றன. இவை:
1) “A” ஏ புரதம் காணப்பட்டால் இதன் அடிப்படையில்:
- a) A1 (A1 புரதம் இருத்தல்)
b) A1 B (A1B புரதம் இருத்தல்)
c) A2 (A2 புரதம் இருத்தல்)
d) A2 B (A2B புரதம் இருத்தல்)
2) “B” பி புரதம் இருத்தல்
3) AB ஏபி (AB ஏபி புரதம் இருத்தல்) மற்றும்
4) O ஒ (புரதம் இல்லாதிருத்தல்)
மேலும் Rh காரணி (Rh factor) எனும் மற்றொரு புரதத்தின் இருப்பு (presence) அல்லது மறைவு (absence), A1 மற்றும் A2 இரத்தக் குழுக்களின் வகைப்படுத்தலை தீர்மானிக்கிறது. Rh காரணி இருந்தால் இரத்தவகைப் பாசிடிவ் என்றும் Rh காரணி இல்லாதிருந்தால் நெகடிவ் என்றும் வகைப்படுத்தப்படுகிறது. இவ்வாறு கீழ்க்கண்ட வகைகளில் ஒன்றை நீங்கள் பெற்றுள்ளீர்கள்.
1) A1 நெகடிவ்
2) A1 பாசிடிவ்
3) A1B நெகடிவ்
4) A1B பாசிடிவ்
5) A2 நெகடிவ்
6) A2 பாசிடிவ்
7) A2B நெகடிவ்
8) A2B பாசிடிவ்
9) B நெகடிவ்
10) B பாசிடிவ்
11) O நெகடிவ்
12) O பாசிடிவ்
என்னுடைய ‘O’ பிரிவு வகை உங்களில் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ‘O’ குரூப் உள்ளவர்களுக்கு ‘யுனிவர்சல் டோனர்’ என்று பெயர்.

இரத்தக் குழுக்களின் விவரங்கள்
உங்கள் உடலில் என்னுடைய சுழற்சி
வில்லியம் ஹார்வி (William Harvey) (ஏப்ரல் 1, 1578 – ஜூன் 3 1657) என்ற ஆங்கிலேய மருத்துவ ஆய்வாளர். உங்கள் உடலில் என்னுடைய (இரத்த) ஓட்டம் பற்றிய புதிய தகவலை 1628 ஆம் ஆண்டுத் தம் ஆய்வின் மூலம் முதன் முதலாக வெளியிட்டார். ‘இதயம் இரத்தம் -இவற்றின் இயக்கம்’ என்னும் ஓர் ஆராய்ச்சி நூலை எழுதி வெளியிட்டார். இதயம் என்பது ஒரு பம்பு போல வேலை செய்து என்னை (இரத்தத்தை) தமனிகள் மூலம் உடலெங்கும் உந்தித் தள்ளி அனுப்புகிறது. இவ்வாறு பாய்ச்சப்பட்ட நான் (இரத்தம்) தமனிகளிலிருந்து சிரைக்கு மாறி மீண்டும் இதயத்துக்குக் கொண்டுவரப்படுகிறேன். இரத்தக் குழாய்களில் உள்ள நான் (இரத்தம்) பின்னோக்கிச் செல்லாமல் இருக்க வால்வுகள் உதவுகின்றன. அதாவது என்னுடைய ஓட்டம் எப்போதும் இதயத்தை நோக்கியே இயங்குகிறது என்று சான்றுகளுடன் ஹார்வி விவரித்தார்.

வில்லியம் ஹார்வி விக்கிமீடியா
இதயம்: உடலில் என்னைப் பாய்ச்சி சுழற்றும் பம்ப்.
உங்கள் இதயம் உங்கள் உடலில் உள்ள முக்கியமான உறுப்பாகும். உங்கள் உடலில் என்னுடைய (இரத்த) ஓட்டம் சிறப்பாக நடைபெற உங்கள் இதயமும் இரத்த நாளங்களும் (veins) தமனிகளும் (artery) உதவுகின்றன. உங்கள் இதயத்தில் வலப்புறம் இரண்டு இடப்புறம் இரண்டு என நான்கு அறைகள் உள்ளன. இடப்பக்க அறைகளில் நான் (இரத்தம்) சுத்தமான நிலையில் உள்ளேன். வலப்புற அறையில் நான் (இரத்தம்) அசுத்தமான நிலையில் உள்ளேன். சுத்தமான நானும் (இரத்தமும்) அசுத்தமான நானும் (இரத்தமும்) ஒன்றோடு ஒன்று கலந்து விடாமல் காப்பது உங்கள் இதயமாகும். இவ்வாறு கலந்தால் அது ஆபத்தானது, மரணத்திற்கே வழிவகுக்கும்.

The human heart viewed from the front and from behind Wikimedia Commons
நுரையீரல்: என்னிடமுள்ள வாயுக்களை சுத்திகரிக்கும் உறுப்பு
உங்கள் உடலில் நான் ஆற்றும் முக்கியப்பணி என்னவென்று தெரியுமா? உங்கள் வலப்புற அறைகளிலிருந்து உங்கள் நுரையீரல்களுக்கு நான் எடுத்துச் செல்லப்பட்டு அங்குச் சுத்திகரிக்கப்படுகிறேன். நுரையீரலில் சுத்திகரிக்கப்படும்போது கரியமில வாயுவை எடுத்து வந்து உங்கள் மூக்கின் வழியாக வெளியேற்ற உதவுகிறேன். உங்கள் நுரையீரலில் சுத்திகரிக்கப்பட்ட நான் உங்கள் உடலில் உள்ள அனைத்துத் திசுக்களுக்கும் பிராண வாயுவை எடுத்துச் செல்வதற்குத் தயாராக உள்ள இடதுபுற அறைகளுக்குக் கொண்டுவரப்படுகிறேன். இந்த அறைகளிலிருந்து உங்கள் உடலின் பல பாகங்களுக்கு இரத்தக்குழாய்கள் மூலம் நான் பாய்ச்சப்படுகிறேன். சாதாரண நிலையில் உங்கள் இரத்த நாளங்களில் அழுத்தம் 120/80மி.மீ. Hg பாதரசம் ஆகும்.

நுரையீரல் இரத்த சுழற்சி அமைப்பு விக்கிமீடியா காமன்ஸ்
உங்கள் மூளையின் செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லுவது நான் தான். தொடர்ந்து மூன்று நிமிடங்களுக்கு ஆக்சிஜன் செல்லாவிட்டால் உங்கள் மூளையின் செல்கள் உயிழந்துவிடும். உடலின் இயக்கத்துக்கு ஆணையிடும் மூளையில் கோளாறு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.
இதயத்திலிருந்து என் சுழற்சி: செயல் திறன்

The systemic circulation and capillary networks shown and also as separate from the pulmonary circulation Wikimedia Commons
உங்கள் இதயம் ஒவ்வொரு முறை விரிந்து சுருங்கும்போதும் சுமார் 11 பிண்ட் (PINT) (ஒரு பிண்ட் = 473.176473 மில்லிலிட்டர்) 5.20 லிட்டர் அளவில் என்னை இரத்தக் குழாய்களின் மூலமாக உடலின் பல பாகங்களுக்குப் பாய்ச்சுகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு லட்சம் முறை விரிந்து சுருங்குவதால் உங்கள் உடலில் என்னுடைய (இரத்த) ஓட்டம் சீராக நடைக்கிறது. உங்கள் இதயமானது ஓர் ஆண்டில் பாய்ச்சும் என் (இரத்தத்தின்) அளவானது 6.5 லட்சம் காலன்கள். இந்த அளவு திரவத்தைக் கொண்டு 900 கலன் கொள்ளளவு கொண்ட 72 லாரிகளை நிரப்பலாம் (ஒரு காலன் 3.78541178 லிட்டர்).
இந்த அடிப்படையில் 70 ஆண்டுகள் நீங்கள் உயிர் வாழ்வதாகக் கணக்குப் போட்டால் வாழ்நாளில் உங்கள் இதயமானது 25 ஆயிரம் கோடி முறை சுருங்கி விரிகிறது. ஒரு நாளில் உங்கள் இதயம் 1800 காலன் (7200 லிட்டர்) அளவுக்கு என்னை (இரத்தம்) உங்கள் உடலின் பல பாகங்களுக்கும் பாய்ச்சுகிறது. இந்த அளவில் கணக்கிட்டால் உங்கள் இதயமானது உங்கள் வாழ்நாளில் சுமார் 4.6 கோடி காலன் அளவில் என்னை (இரத்தத்தை) உங்கள் உடலின் பல பாகங்களுக்குப் பாய்ச்சுகிறது. உங்கள் இதயத்தின் ஆற்றலானது (Power) ஒரு குதிரையின் ஆற்றலில் (Horse Power) 240 இல் ஒரு பங்கு.
ஒரு மனிதனின் வாழ்நாளில் இதயமானது வெளிப்படுத்தும் ஆற்றலை ஒன்றாகத் திரட்டினால் அந்த ஆற்றலால் ஒரு டன் எடையுள்ள பொருளைத் தரையில் இருந்து சுமார் 150 மைல் உயரத்துக்குத் தூக்க முடியும்.
உங்கள் இரத்தக் குழாய்களுக்குள் மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் ஓடிச்சென்று வருகிறேன். இது ஒரு மோட்டர்சைக்கிளின் வேகத்தைவிட அதிகம். ஒவ்வொரு இரத்த சுழற்சியின் போதும் உங்கள் உடலில் நான் ஒரு லட்சத்து பத்தொன்பதாயிரம் ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்கிறேன்.
நான் உங்கள் திசுக்களுக்கு ஆற்றல் தருகிறேன்
உங்கள் உடலிலுள்ள திசுக்களுக்குத் தேவையான கொழுப்புச் சத்து (Fat), மாவுச் சத்து (Starch), புரதம் (Protein), தாது பொருட்கள் (Mineral Substances) ஆகியன அடங்கிய ஆற்றல் என் மூலமாகவே பெறப்படுகின்றன.
நீங்கள் உண்ணும் உணவில் புரதச்சத்து உள்ளது. புரதமானது உங்களுடைய உடல் வளர்ச்சிக்கும் உங்கள் உடலை அவ்வப்போது புதுப்பிக்கவும் தேவைப்படுகிறது.
உங்கள் உடல் இவ்வாறு புரதத்தை உட்கிரகித்கும் போது, உங்கள் திசுக்கள் நான் வழங்கிய புரதத்தை பயன்படுத்தியது போக எஞ்சிய கழிவுகள், நைட்ரஜன் அடங்கிய யூரியாவாக மாறித் திரும்பவும் என்னிடத்திலேயே கலந்துவிடுகிறது. யூரியா போன்ற கழிவுப் பொருட்கள் உங்கள் உடலில் சேரச்சேர விஷத்தன்மை அதிகமாகிறது. கிரியட்டினின் மற்றும் யூரியா எனும் இரண்டு உப்புக்களும் என்னிடம் சேர்ந்த கழிவுப் பொருட்களிலேயே மிக முக்கியமானவை. உங்கள் உடலில் இருக்கும் கிரியட்டினின் மற்றும் யூரியா அளவை என்னைப் பரிசோதிப்பதன் மூலம் எளிதாக அளந்து விடலாம். என்னில் இவை இருக்கும் அளவே உங்கள் சிறுநீரகங்களின் வேலைத் திறனைக் காட்டும். உங்களுடைய இரண்டு சிறுநீரகங்களும் பழுதானால், என்னுள் இருக்கும் மேற்கண்ட இரண்டு உப்புக்களின் அளவும் மிக அதிகமாகி விடுகிறது
உங்களுடைய ஒவ்வொரு சிறுநீரகத்திலும், என்னை (ரத்தத்தை) சுத்தம் செய்யும் அமைப்பான நெஃப்ரான்கள் (Nephron) தலா 10 லட்சம் உள்ளன. இந்த நெஃப்ரான்களில்தான், ரத்தக் குழாய் போன்ற வடிகட்டி உள்ளது. உங்கள் சிறுநீரகத்தினுள் நான் (இரத்தம்) நுழைந்தவுடன் நெஃப்ரான்கள் இரண்டு கட்ட செயல்பாட்டின் மூலம் ரத்தத்தில் உள்ள தாது உப்புக்கள் உள்ளிட் டவற்றைப் பிரிக்கின்றன. இவ்வாறு பிரிக்கப்பட்ட கழிவுகள் மீண்டும் மற்றொரு குழாய் வழியே பயணிக்கின்றன. இங்கே, உங்கள் உடலுக்குத் தேவையான தாதுஉப்புகள் மீண்டும் கிரகிக்கப்பட்டு, சிறுநீர் மட்டும் வெளியேற்றப்படுகிறது.
24 மணி நேரத்தில் சுழற்சி முறையில் ஒரு நாளைக்குத் தோராயமாக 190 – 200 லிட்டர் அளவில் நான் (இரத்தம்) சுத்திகரிக்கப்படுகிறேன். இந்தச் செயல்முறையில், கிட்டத்தட்ட 1.8 லிட்டர் சிறுநீரை என்னிடமிருந்து பிரித்தெடுத்து உங்கள் சிறுநீரகம் வெளியேற்ற உதவுவதும் நானே. இப்படிப் பிரிக்கப்படும் சிறுநீரானது சிறுநீர்ப்பையில் சேகரிக்கப்படுகிறது. மீதம் உள்ளவை மீண்டும் உடலுக்குள் செலுத்தப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது.
இரத்த தானம்
இரத்த தானம் அல்லது குறுதிக் கொடை என்றால் என்ன? தேவைப்படும் ஒரு நோயாளிக்கு ஏற்றுவதற்காக இன்னொருவர் தன் உடலிலிருந்து என்னைக் (இரத்தத்தைக்) கொடையாக வழங்கிய பின்பு இரத்த வங்கிகளில் சேமித்து வைக்கிறார்கள். நல்ல உடல் நலத்துடன் வாழும் ஒவ்வொரு மனிதனின் உடலிலும் 4.5 முதல் 6 லிட்டர் அளவில் நான் நிறைந்து உள்ளேன். இரத்த தானம் செய்வோர் உடலில் இருந்து ஒரு நேரத்தில் 400 முதல் 500 மில்லி லிட்டர் வரை என்னை (இரத்தத்தை) எடுக்கிறார்கள். அவ்வாறு கொடையாளி கொடுத்த என்னுடைய (இரத்தத்தின்) அளவு அவர் உடலில் இரண்டே வாரங்களில் தானாகவே மீண்டும் உற்பத்தியாகிறது.
இரத்த தானம் அளிப்பதால் உங்கள் உடலில் நான் (இரத்தம்) புதிதாக உற்பத்தியாகிறேன். அது அவருடைய உடலுக்கு நன்மையாகவே அமையும். இரத்த தானத்தின் போது கொடையாளி இழக்கும் சிவப்பணுக்கள் எண்ணிக்கை 56 நாட்களிலேயே சீராகிவிடும்.
இரத்த தானம் செய்ய தேவையான தகுதிகள்:
1. 18 முதல் 55 வயது வரை.
2. 50 கிலோவுக்கு குறையாத உடல் எடை.
3. இரத்த தானம் செய்வதற்கு முன் நான்கு மணி நேரத்திற்குள் நல்ல சாப்பாடு சாப்பிட்டு இருப்பது.
4. இரத்த தானம் செய்யும் நாளுக்கு முதல் நாள் இரவு நல்ல தூக்கம்.
ஆஸ்துமா, இதய நோய், எயிட்ஸ், காச நோய், கேன்சர், மஞ்சள் காமாலை, மலேரியா, நீரழிவு ஆகிய நோய்களால் பாதிப்புற்றவர்கள், சிறுநீரகங்களின் பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு , உயர் இரத்த அழுத்தம், போன்ற நோய்களுடன் அவதிப்படுவோர் இரத்த தானம் அளிக்க இயலாது. கருவுற்று இருப்போர் அல்லது அண்மையில் கருக்கலைப்புச் செய்துகொண்டவர்கள், தொடர்ந்து மருந்து உட்கொள்வோர், அறுவை சிகிச்சைக்காகக் காத்திருப்போர், பெண்கள் தங்களது மாதவிலக்கு சமயங்களிலும் இரத்ததானம் செய்ய இயலாது.
இரத்த தானம் பற்றிய மேலதிகத் தகவல்:
1. குறைந்தது 15 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் ஆகலாம்.
2. குறைந்தது மூன்று மாத கால இடைவெளிவிட்டு இரத்த தானம் செய்யலாம்.
3. இரத்த தானம் செய்த பின்பு திரவ உணவை எடுத்துக் கொள்ளலாம். எல்லாப் பணிகளையும் செய்யலாம்.
4. இரத்த தானம் செய்யக் கூடிய இரத்தம் சாலை விபத்திற்கு உள்ளானோர், இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்வோர், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வோர், எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சை மேற்கொள்வோர், கடுமையான தீக்காயத்தால் பாதிக்கப்பட்டோர், பிரசவிக்கும் தாய்மார்கள் மற்றும் பலர்.
இரத்த தானம் அளிக்கும் பொழுது பயன்படுத்தப்படும் ஊசிகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் தொற்று நீக்கப்பட்டு உள்ளனவா என்பதை மட்டும் உறுதி செய்து கொள்ளுதல் அவசியம்.
குறிப்புநூற்பட்டி
- இதய இயக்கமும்; இரத்த ஓட்டமும் – விளக்கமாக அறிந்து கொள்வோம்
http://www.panippulam.com/index.phpoption=com_content&view=article&id=3651%3A2011-10-24-17-29-38&catid=96%3A2011-04-01-03-31-49&Itemid=476&showall=1 - இதயத்தில் நடக்கும் அதிசயம் http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=3162
- BP – இரத்த அழுத்தம் என்றால் என்ன? http://abuwasmeeonline.blogspot.com/2012/06/bp.html
- இரத்தம் பற்றிய சில தகவல்கள் https://tamilbooksfree.blogspot.in/2017/02/blog-post_56.html
பிங்குபாக்: ஹலோ.. நான் உங்கள் இரத்தம் பேசுகிறேன்! – TamilBlogs
பிரமிப்பான தகவல்கள் நண்பரே
LikeLike
தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி ஐயா
LikeLike
படிக்கப் படிக்க வியப்பாகத்தான் இருக்கிறது ஐயா
நன்றி
LikeLike
தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி ஐயா..
LikeLike